நாவலில் ஒரு பகுதி .....6 .  சாம்பல் இரவின் தேவதைகள்….
               
ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை.”
சம்பத் தனது வாழ்வின் மூலமாய் எந்த செய்தியையும் உலகிற்கு சொல்ல விரும்பவில்லை. அவனிடம் பணம் சேரத்துவங்கிய தினத்தில் அவனுக்கான செய்தி உலகத்திடமிருந்து எல்லா வகையிலும் வந்து கொண்டிருந்தது. அம்மா தேடி வந்தாள். அவளிடம் தற்காலிகமாய் பாசமிருந்தது. ஆர்மீனியன் சர்ச் இளைஞர்களைப் பற்றி அந்தப் பகுதியிலிருக்கும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் அச்சத்துடன் முன்பு பார்த்தது போய் அவர்களைச் சுற்றி ஒரு அதிகார வட்டம் உருவாகிக் கொண்டிருப்பதை கவனித்தபடியிருந்தனர். அந்த வருடத்தின் மழைக்காலம் முடியும் போது பாஸ்கர் அந்தப் பகுதியில் பெயர் சொல்லும்படி ஒரு ஆளாகிவிட்டான். அவனுக்கு போட்டியாய் இருந்தது சுந்தர் மட்டும்தான். இருவரில் யாருக்கு ஆட்கள் அதிகம் என்பதிலிருந்து எல்லாவற்றிலும் போட்டி வந்தது. ஆனாலும் அவர்களில் யாரும் இன்னொருவனை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. சுந்தருக்கு பாக்ஸிங் இல்லாமல் பந்தய புறா வளர்ப்பதும் பிடிக்கும். அவனை எந்தப் பந்தயத்திலும் யாராலும் ஜெயித்திருக்க முடியவில்லை. புறாக்களை எல்லாவற்றையும்விட அதிகமாய் நேசித்தான். தன்னிடமிருக்கும் ஆட்களில் பாதிப்பேரை புறாக்களை பராமரிக்கவே வைத்திருந்தான். இப்பொழுது தேவாலயத்துடனான அவன் உறவு குறைந்து போனது. ஆர்மீனியன் சர்ச்சை அவனும் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கவே விரும்பினான். ஆனாலும் அவ்வப்பொழுது வேலைகள் வந்தபடியேதான் இருந்தன. தேவாலயத்திற்கு வருகிறதில் கிறிஸ்தவர்களை விடவும் மற்றவர்கள்தான் அதிமாயிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் சந்தித்து பரஸ்பரம் பேசிக்கொள்ளும் இடமாய் அதனை மாற்றிவிட்டிருந்தனர். தேவன் எல்லோரையும் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தார்.
     வெட்டு மணி மட்டும்தான் இப்பொழுது சம்பத்திற்கு நெருக்கமாய் இருக்கிறான். அவர்கள் இரண்டு பேருக்குமே வீடிருந்தது. ஆனால் அவர்கள் அதற்கு வெளியிலிருக்கவே விரும்பினர்.     ஆர்மீனியன் சர்ச்சின் புதிய பாதிரி நடந்து முடிந்த எல்லாவற்றையும் மறைக்கவே விரும்பினார். வயது அப்படியொன்றும் அவருக்கு ஆகியிருக்கவில்லை. வாழ்வதற்கான விருப்பமாயிருக்கலாம். கன்னியாஸ்திரிகள் எப்பொழுதும் பதட்டத்துடனேயே இருப்பதைப் பார்க்க முடிந்தது. புதிய பாதிரி வந்த இரண்டாவது நாள் உடையார் வந்து அவரை சந்தித்து விட்டுச் சென்றார். பரஸ்பரம் அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருக்கக்கூடும். அதன் பிறகு வியாபார சந்திப்புகள் எதுவும் தேவாலயத்திற்கு வந்திருக்கவுமில்லை. இப்பொழுது வந்து போவது ஒரு சிலர் மட்டும்தான். உடையார் இந்த இடம் தனக்கு ஒத்துவராதென நினைத்திருக்கக்கூடும்.
     பாதிரி எல்லா டீல்களையும் வெளியிலிருந்து பார்ப்பவராக இருந்தாலும் அவருடைய பங்குதொகை மட்டும் சரியாக வந்து சேர வேண்டுமென்பதில் தெளிவாயிருந்தார். எந்தவொரு தொழிலையும் செய்யாமலேயே அதிலிருந்து வருமானம் ஈட்டுவதற்கென ஒரு தனித்திறமை வேண்டும்தான். பாதிரி அடிப்படையில் தத்துவமும், கணிதமும் பயின்றவர். அது எதற்கு பயன்பட்டதோ இல்லயோ? வியாபாரம் பேச பயன்பட்டது. இவாஞ்சலின் சொல்லுவாள் ”யாருக்கும் பாவமன்னிப்புத் தர தகுதி இந்த ஃபாதருக்கு இல்ல… இவர்தான் எல்லார் கிட்டயும் பாவமன்னிப்பு கேட்கனும்…” அவருக்கு எல்லாமே இருந்தது ஆனாலும் கன்னிமையின் மீது அவருக்கிருந்த அதீத விருப்பம் மற்ற எல்லாவற்றையும் மழுங்கடிக்கச் செய்தது. அவருக்கு தூய கன்னிமையுடைய சிறுமிகளும் பெண்களும் தேவையாயிருந்தனர். சில சமயங்களில் அவருடன் நட்பிலிருந்து தொழிலதிபர்கள் சிறுமிகளை அனுப்பி வைத்தனர். டான்பாஸ்கோவில்  இப்படியானதொரு பாதிரி இருப்பது அந்த தேவாலயத்திலிருந்த சிலருக்கும் ஜீசஸுக்கும் உடன் சம்பத்துக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.
     பாதிரி சொல்லுவார் “இள உடல்ல இருக்க சூடு மட்டுந்தான் நிஜம்… அத முழுமையா எவன் ஒருத்தன் அனுபவிக்கிறானோ அவன் மட்டும்தான் சொர்க்கத்தப் பாக்கறான்…” அவருடல் இளம் உடல்களைத் தின்று மென்மையிலும் மென்மையுமாயிருந்தது. சம்பத்துக்கு அவரைப் பார்க்க ஆச்சர்யமாயிருக்கும், இவ்வளவு பணத்தையும் என்ன செய்யப்போகிறார்?.. ஒரு மனிதன் தன் ரகசியங்களை அளவுக்கு அதிகமாக பாதுகாக்க நினைக்கும் பொழுது அவன் தனக்கான முடிவுகளை எளிதில் தேடிக்கொள்கிறான். பாதிரி தனது ரகசியங்களால் தனது முடிவைத் தேடிக்கொண்டிருந்தார். எவ்வளவோ நல்ல விசயங்களையும், கெட்ட விசயங்களையும் பார்த்து சலிக்காத ஆர்மீனியன் சர்ச் எப்போதும் போலவே இருந்தது.

     இவாஞ்சலினைப் பார்க்க எவ்வளவு முயன்றும் சம்பத்தால் முடியாமல் போனது. அவள் அங்குதான் இருக்கிறாளா என்பது கூட சந்தேகம். குறைந்தபட்சம் தன்னிடம் மட்டுமாவது அவள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். விடுதியைச் சுற்றி புதிதாக முள்வேலி அடிக்கப்பட்டிருந்தது. அவன் இரவுகளில் அவ்விடுதியைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். மணிக்கு இவன் இப்படித் திரிவதற்கு காரணம் புரியாமலில்லை. ஆனால் நடக்கவே நடக்காதெனத் தெரிந்த ஒன்றிற்காக இவன் ஏன் இப்படித் திரிகிறான்?... இவனைக் கவனித்துக் கொண்டிருந்த கன்னியாஸ்திகரிகளில் சிலருக்கு இவனிடம் விசயத்தை சொல்ல வேண்டுமென இருக்கும். ஆனாலும் தங்களின் பாதுகாப்பு கருதி அதனைத் தவிர்த்துக் கொண்டிருந்தனர். இவாஞ்சலின் மீது பெரிய நேசமெதும் அவனுக்கு இல்லை.  ஆனாலும் அவள் மீது எல்லோரையும் விட கொஞ்சம் அதிகமாக இவனுக்குப் ப்ரியமிருந்தது.
     ஒரு நாள் இரவு உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடப்பதற்காக வெளியில் வந்த சோஃபியா வைலட் இவன் முள்வேலிக்கு அந்தப் பக்கமாக டோப்பு இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். சுற்றிலும் வேறு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் சம்பத்தைக் கூப்பிட்டாள். இவள் எதற்காகத் தன்னைக் கூப்பிடப்போகிறாளென அவன் இவள் கூப்பிடுவதில் அக்கறை காட்டவில்லை. அவள் அவசரமாக வேலியை நெருங்கிச் சென்றாள். ”இவாஞ்சலின் உங்கிட்ட ஒரே ஒரு விசயம் மட்டும் சொல்லச் சொன்னா?” சம்பத் திரும்பி அவளைப் பார்த்தான். இப்பொழுதுதான் பருவத்தின் முதல் சில மயிர்கள் அவனுக்கு மீசையாய் அரும்பத் துவங்கியிருந்தது. அவன் கண்களிலிருக்கும் ஆர்வம் பார்த்து முகம் திருப்பியவள் “அவளப் பத்தி நினைக்காத… அவ மறுபடியும் வீட்டுக்கேப் போயிட்டா... இங்க பாதிரியார் வந்த ரெண்டாவது நாளே அவள அனுப்பி வெச்சிட்டாரு… உங்கிட்ட முன்னயே சொல்ல நினச்சேன், முடியல…” அவள் சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்து போனாள். யார் இந்த இவாஞ்சலின்?  எதற்காக அவளுக்காக தான் வருத்தப்படுகிறோம்?.... சம்பத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் சின்னதொரு வெறுமை அவன் மனதிற்குள்ளிருந்தது. அந்த இரவு முழுக்க பச்சைத் தங்கத்தை தொடர்ந்து இழுத்தவன் மீண்டும் நினைவு கொண்டெழ இரண்டு பகலும் இரண்டு இரவும் ஆனது. கண் விழித்துப் பார்க்கையில் உலகம் சூன்யத்தின் நிறம் கொண்டதாயிருந்தது.
     ஆச்சர்யமாய் சுந்தரும், பாஸ்கரும் அவனைப் பார்க்க வந்திருந்தனர். இரண்டு பேருக்குமே எதோ காரியம் ஆக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இறங்கி வந்து அவர்கள் பார்க்கப் போவதில்லையென நினைத்தான்.  சுந்தர் ரொம்பவும் அக்கறையாய் இவனைப் பார்த்துக் கொண்டான். இப்போதைக்கு மணியைத் தவிர யாரையும் நம்பப்போவதில்லையென்பதில் மட்டும் சம்பத் உறுதியாயிருந்தான். ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததுமே சுந்தர் அவனை தன் வீட்டிற்கு கூட்டிப்போக முனைந்தான். பாஸ்கரும் விடுவதாயில்லை. சம்பத் ”எதுவும் வேண்டாம் நான் என் வூட்டுக்கே போறேன்…” என்றதும் இருவருக்குமே ஏமாற்றம். மணி மட்டும் அவனுடன் வீட்டிற்குச் சென்றான். அம்மா முன்னை மாதிரி இல்லை, நிறைய மாறியிருந்தாள். அவனாலயே அதனை நம்ப முடிந்திருக்கவில்லை.  நீண்ட நாட்களுக்குப் பிற்கு வீட்டில் இப்படி அமைதியாய் படுத்திருப்பது அவனுக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. மணி ஆதரவாக அவனைப் பார்த்துக் கொண்டான். உடலில் இன்னும் கஞ்சாவின் தீவிரம் இருந்தது. உடலே பச்சையாகிப்போனது போல் உணர்ந்தான். நரம்புகள் துடிப்பற்றுக் கிடந்தன. தன்னைத் தானே சபித்துக் கொண்டான். இவாஞ்சலினுக்காக அவன் அன்று போதை ஏற்றியிருக்கவில்லை, உடலற்ற வெறுமை. அவனால் பாஸ்கரைப் போல் இருக்க முடியாது. அவன் இப்பொழுதும் கூட ஏதாவது பிச்சைக்காரிகளைத்தான் தேடுகிறவனாய் இருக்கிறான். அவன் நெருங்கி வருகிற பொழுது அவனிடம் பிச்சைக்காரர்களின் தன்மையை மட்டுமே சம்பத்தால் உணர முடிந்தது. சம்பத்திற்கு இரண்டே தேர்வுகள்தான் இப்பொழுது முன்னிருந்தன. ஒன்று சுந்தருடன் சேர்ந்து உடையாருக்கு வேலை பார்ப்பது, அல்லது பாஸ்கருடன் சேர்வது. சுந்தரிடம் நிறைய பணமிருந்தது, ஆனாலும் கழுகு ஒன்று பிணத்தைப் பாதுகாப்பதைப் போல்தான் அவனுடனிருப்பது. எந்த நேரத்திலும் அந்த கழுகு கொத்தித் தின்னுவிடும். பாஸ்கரிடம் அவ்வளவு பணமில்லாவிட்டாலும் பாதுகாப்பு உண்டு. எனினும் இருவரையும் முடிந்தவரை தவிர்ப்பதே அவனது விருப்பமாயிருந்தது.
     சுந்தர் கேட்டதுமே சொல்லிவிட்டான். “இல்ல சுந்தரு.. அம்மா கொஞ்சம் பயப்படுது… பேசாம சோத்துக்கட எதுனா வெச்சிப் பொழச்சிக்கலாம்னு் நெனக்கிறேன்…” அமைதியாக சொல்லிவிட்டான். பாஸ்கர் வந்து கேட்ட பொழுது “இப்போ மணியக் கூட்டிட்டுப் போ பாஸ்கரு… நான் கொஞ்ச நாள்ல சேந்துக்கறேன்…” பாஸ்கர் சந்தோசமாக சிரித்தான். சுந்தரிடம் சேரவில்லை என்பது தெரிந்ததுமே அவனுக்கு எப்படியும் நம்மிடம் வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. கொஞ்ச நாள்தானே…இப்போதைக்கு மணி உடனிருப்பதும் நல்லதும்தான். மணி சில விசயங்களில் கை தேர்ந்தவன். கொஞ்சம் மதுவும் நல்ல சோறும் தந்தால் போதும் சொன்ன வேலைகளை செய்வான். எந்த விசயத்திலும் அருவருப்பு பார்ர்கிறவனில்லை அவன். சில மாதங்களுக்கு முன்பு உடையாருக்காக அவன் ஒரு வேலை செய்தான். அவசரமாக உடையாரின் சொந்தக்காரன் ஒருவனுக்கு சிறுநீரகம் தேவைப்பட்டது. அவனுக்கு ஓ நெகட்டிவ் ரத்தம். மிக அபூர்வமாகவே கிடைக்கும்… உடையாருக்கு எப்படியும் அவனைக் காப்பாற்ற வேண்டும். தெரிந்தவன் தெரியாதவன் எல்லோரிடமும் சொல்லி விசாரித்ததில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் ஒரு பொம்பளைக்கு ஓ நெகடிவ் ரத்தமென்றும், விபத்தொன்றில் அடிபட்டு சில தினங்களுக்கு முன் அவளுக்கு ரத்தம் கேட்டு ரத்த வங்கிகளுக்கு தகவல் வந்ததைக் கொண்டு கண்டுபிடித்தனர். சென்னையென்றால் இது ஒரு விசயமில்லை, நெல்லூர் உடையாருக்கு கொஞ்சம் ஆகாது. எப்படிப் பிடிப்பதெனத் தெரியவில்லை. சுந்தரின் மூலமாய் மணியைப் பிடித்தார். அவனைப் பார்த்ததுமே ’இவன் வேலைக்காக மாட்டான்’ என்றுதான் நினைத்தார். எடுத்த எடுப்பில் ‘எவ்ளோ தருவண்ணா?...” மணி விரல்களில் கணக்குப் போட்டு எவ்வளவு வாங்கலாமென ஒரு யோசனையில் இருந்தான். உடையார் எதுவும் பேசாமல் ஒரு பத்தாயிரத்தை எடுத்துக் கையில் குடுத்தார். ‘இது அட்வான்ஸ் தாண்டா… கிட்னியோட வா… மிச்சத்த வாங்கிக்க…’ அவன் பணத்தைக் கையில் வாங்கிக் கொண்டு தனக்கு ஒரு வண்டி வேண்டுமென்று வாங்கிக் கொண்டான்.
     அவன் மேல் சுந்தரைத் தவிர்த்து அங்கிருந்த ஒருவருக்கும் நம்பிக்கையில்லை, எல்லோருமே அது வெட்டி வேலை என்றுதான் நினைத்திருந்தனர். அடுத்த ஆறு மணி நேரங்களில் அவன் சிறுநீரகத்தோடு திரும்ப எல்லோருக்குமே அதிர்ச்சி… அவ்வளவு எளிதான விசயமில்லை. உடையார் அவ்வளவு பதட்டத்திலும் ‘எப்டிடா வேலைய முடிச்ச?’ ஆர்வமாய் கேட்டார். “இது ஒரு மேட்டராண்ணே… இங்க இருந்த கெளம்ப சொல்லவே பார்ட்டி யாரு? ப்ராப்ளம் எதுனா இருக்குதான்னு? விசாரிச்சேன்… பெருசா ஒன்னும் இல்ல. லோக்கல் பார்ட்டி ஒருத்தனுக்கு ரெண்டாயிரம் தர்றேன்னு சொன்னேன், அவன் ஒத்துக்கிட்டு எந்த டைம் ஆஸ்பிட்டல் ஃப்ரியா இருக்கும்னு சொன்னான். நாம போறதுக்கும் சரியா இருந்துச்சு… கிட்னிய மட்டும் அறுத்து எடுக்க நம்ம என்ன டாக்டரா?.... அதான் முதல்ல ஒரு டாக்டரப் பிடிச்சேன்… முதல்ல காசு தர்றேன்னு சொன்னேன்… முடியாதுன்னு அமக்களம் பன்னினான். அப்பறம் கத்திய உருவி சூத்துல ஒரு போடு போடவும் சைலண்டா ஒத்துக்கிட்டான். அவன் ஒருத்தன் தான் டுட்டீ டாக்டர்… அவன வெச்சே பார்ட்டியத் தூக்கி வண்டில போட்டு வந்தோம்… பார்டர் க்ராஸ் பன்றதுக்கு முன்னாலயே அந்தப் பொம்பளய கொன்னு போட்டுட்டேன்… வேற எதும் பிரச்சன வரக்கூடாதுன்னுதான் டாக்டர மட்டும் கூட்டிட்டே வந்துட்டேன்… இப்போதான் பக்கத்துல வந்து அவன் கையாலயே அறுத்து எடுத்து ஐஸ் பெட்டில போட்டான்…” மணி யாரோ செய்ததைப் போல் சொல்லி நின்றான். இவன் எவ்வளவு வில்லங்கமான ஆளென நினைத்துக் கொண்ட உடையார் அந்த டாக்டரை வரச்சொன்னான். ரத்தம் அப்பிய கையும் மூஞ்சியில் மரணபயமுமாய் அவனைப் பார்க்க பாவமாயிருந்தது. உடையார் அவனுக்குக் கொஞ்சம் பணம் குடுத்து அனுப்பி வைத்தார். மணி மிச்ச பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். அப்போதிலிருந்தே உடையாருக்கு மணியை எப்படியும் தன் பக்கம் இழுத்த்துக் கொள்ள வேண்டுமென இருந்தது. அவனிடம் ஒரு சாதுர்யமிருப்பதைப் புரிந்து கொண்டார். மணி கோடி ரூபாய் குடுத்தாலும் சம்பத் சொல்வதை மட்டும்தான் கேட்பதாயிருந்தான். சுந்தர் அவர்களிரண்டு பேரும் சூத்தடித்துக் கொள்கிறார்களென தன் சகாக்களிடம் சொன்னான். 
     மணி பாஸ்கரிடம் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே சம்பத்தும் பாஸ்கருடன் சேர்ந்தான். வீட்டில் அம்மா முன்னைவிடவும் சந்தோசமாயிருந்தாள். மணி இப்பொழுது முழுக்கவும் சம்பத்தின் வீட்டில்தான் இருந்தான். சம்பத்தின் அம்மாவுக்கு உடனிருந்து எல்லா வேலைகளையும் செய்வது மணிதான். மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும் சம்பத்தின் அம்மாவிடம் ஏதோவொருவிதமான ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும். மணி அவள் பின்னாலேயே திரிந்தான். வேலை நேரங்களை குறைத்துக் கொள்ள வேண்டி வெளியூருக்கு சரக்கு எடுத்து செல்வதை மறுத்து வந்தான். சம்பத் மட்டும்தான் அரக்கோணத்திற்கும், காஞ்சிபுரத்திற்கும், திண்டிவனத்திற்கும் சரக்கு எடுத்துக் கொண்டு செல்கிறான். மணியின் நடவடிக்கையில் சம்பத்திற்கு சின்னதாய் சந்தேகமிருந்தது. ஒரு நாள் கும்மிடிப்பூண்டி போவதாக சொல்லிவிட்டு சமபத் போய்விட்டான். எப்படியும் வர காலையாகிவிடுமென சொல்லிவிட்டுச் சென்றவன் பாதி ராத்திரியிலேயே வீட்டிற்குத் திரும்பி விட்டான். வீடிருந்த தெரு முழுக்க இருளில் கிடந்தது. உறங்க்கிக் கொண்டிருந்த நாய்கள் ஒன்றிரண்டு எழுந்து ஆளைப் பார்த்துவிட்டு அமைதியாய் படுத்துக் கொண்டன. நடந்து வந்தவன் இருளில் தடம் தெரியாமல் சாக்கடையில் கால் வைத்தான். சின்ன சாக்கடைதான். இந்த மாதிரி இந்தத் தெருவில் மட்டும் ஆறேழு சாக்கடைகளிருக்கின்றன. எத்தனையைத்தான் கவனமாய்க் கடப்பது. வீட்டில் ஜீரோ வாட்ஸ் எரிந்து கொண்டிருந்தது. பழைய வீடு. காரை உதிர்ந்து அடி வாங்கிய வீடு. கதவைத் தட்டப் போனான். பிறகு யோசித்தவனாய் மெதுவாக மேலேறி ஒன்றிரண்டாக ஓடுகளைப் பிரித்தான். வாகாக உட்காருக்கிற வரை பிரித்தவன் குனிந்து வீட்டைக் கவனித்தான். காலியாயிருந்த கட்டிலைப் பார்த்து விட்டு இன்னொரு முறை வீடு முழுக்க  கண்களால் துழாவினான். வாசல் கதவை ஒட்டி மணி படுத்திருக்க, அவன் மேலேறி சம்பத்தின் அம்மா இயங்கிக் கொண்டிருந்தாள். பார்த்த வேகத்தில் பிரித்து வைத்த ஓட்டை எடுத்து எரிந்தான். மிகச்சரியாக சம்பத்தின் அம்மாவின் பின்மண்டையைப் பிளந்தது. அய்யய்யோ திருடன் திருடன்… என அவள் கத்திக்கொண்ட எழ… மணி சுதாரித்து வந்திருப்பது யாரெனப் புரிந்து கொண்டு படாரென கதவைத் திறந்து கொண்டு ஓடினான். அவன் லுங்கி மட்டும் கையிலிருக்க, நிர்வாணமாக அந்த பின்னிரவில் தெருவில் ஓடினான். நாய்கள் இப்பொழுது மூர்க்கமாக குரைத்தன… “திருடனா… இந்த வர்றண்டி தேவ்டியா முண்ட….” கத்தியபடியே ஆவேசமாக இறங்கினான். அவள் அவசரமாகத் துணியை எடுத்து உடலில் சுற்றினாள். “வாடா தேவ்டியா பையா.. ஆத்தா எவங்கூட படுக்கறான்னு ஓட்டப் பிரிச்சுப் பாக்கறியே தூம, நீயெல்லாம் ஆம்பளயாடா?...’ அவளும் பதிலுக்கு ஆவேசாமாய்த் தயாரானாள்.
     சுற்றியிருந்த வீட்டுக்காரர்களெல்லாம் எழுந்து இவர்களின் சண்டையை நிறுத்த எவ்வளவோ போராடினர். கொஞ்சம் துணியை மட்டும் சுற்றிக்கொண்டு சம்பத்தின் அம்மா சண்டை போடும்போது சற்றேறக்குறைய நிர்வாணமாகவே இருந்தது அவளின் இயக்கம். சண்டையை வளர்க்கவே அங்கிருந்த ஆண்கள் ரகசியமாய் விரும்பினர். நல்ல அடி வாங்கி ஆத்திரமும், பாதியிலேயே போனதே என்கிற வெறியுமாய் சம்பத்தின் அம்மா ஆத்திரத்தின் உச்சத்திலிருந்தாள். வீட்டிற்கு வெளியே பழைய செங்கல்களைக் குவித்திருந்தனர். ஓடிப்போய் செங்கல்லை கையில் எடுத்தவள் டம்மென்று அவன் தலையில் அடித்தாள். தலையில் ரத்தம் கொட்ட வெறியோடு என்ன செய்வதென யோசித்தவன் படாரென அவள் துணியை உருவிக் கொண்டு அங்கிருந்து ஓடத் துவங்கினான். முழு நிர்வாணமாக நிற்பதை உணர்ந்ததும் ‘டே தேவ்டியா பையா… ஆத்தாவ நடு ரோட்ல அம்மணமா நிப்பாட்டிட்டு போறியேடா… பொட்ட… தூம… வாடா… வந்து பாரு… உங்காத்தா சாமான…. லவ்டே கபால்…. அவள் கத்த சுற்றி நின்றதில் பாதிப்பேர் ஓடிவிட்டனர். ஒரு சிலர் மட்டும் சண்டையை விலக்கி விடுகிற சாக்கில் இன்னும் அங்கயே நின்றிருந்தனர். அவளுக்கு வெட்கமெல்லாம் போய்விட்டது. இவ்வளவு ஆனதற்குப் பிறகு இனி என்னயிருக்கிறது என்றாகிவிட்டாள். சம்பத் சில நிமிடங்களிலேயே அந்த இருளில் தொலைந்து போய்விட்டான், அவன் அம்மாவின் குரல் எட்டாத தொலைவில்….Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.