கோடைகாலப் பெருமழை தினங்களின் நினைவுகள்...





(கோணங்கி, வெயில், நான் மற்றும் சில காலியான மது போத்தல்களின் அறை...)

     பெருந் தவிப்பின் ஈரம் சுமந்தவனாய் எப்பொழுதும் நிராதரவாக சுற்றிக் கொண்டிருந்தவனின் அகமனம் எழுத்தின் மீதும், எழுத்தைச் சார்ந்த வாழ்வின் மீதும் நம்பிக்கையின்மையினை மட்டுமே கொண்டிருந்தது நெடுநாள் வரையிலும். சந்திக்கிற எல்லோரிடமும் எழுத்தை குறித்து மட்டுமே பேச வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்த எனது மூடத்தினத்திற்கு எப்பொழுதும் ஏமாற்றங்களை தாரளமாக தருவதற்கு நண்பர்கள் யோசிப்பதில்லை. மாறாக மிக அரிதாக சந்திக்க நேர்ந்த சில நண்பர்கள் எது சார்ந்தும் வாழப்பழகாத ஒரு மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்தினார்கள், அப்படியாக, நம்பிக்கைகளெதுவுமற்ற உயிர் வாழ்தலுக்கான ஒரு சராசரி இயக்கமாக மட்டுமே எழுத்தை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தவன் கோணங்கியை சந்திக்க நேர்ந்தது ஆறு வருடங்களுக்கு முன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில். மதினிமார் கதையும், கோப்பம்மாளும், தச்சனின் மகளும், பொம்மைகள் உடைபடும் நகரமும், மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டமும் கதைகளாய் கண்டபடி மனம் முழுக்க உலவி அந்த மனிதனோடு பேசிவிடுவதற்கான தவிப்புகளோடு பதை பதைத்துக் கிடந்தது. அதிர்ஸ்டவசமாகவோ, துரதிர்ஸ்டவசமாகவோ அன்று எந்தவிதமான உரையாடல்களையும் நாங்கள் மேற்கொண்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்து வெளியிலிருந்த ஒரு டீக்கடையில் அவர் சிகரெட் குடித்துக் கொண்டிருந்த்தைப் பார்த்து புதிதாக புகைக்கப் பழகும் ஒரு இளைஞனின் நடவடிக்கைகளாய்த் தெரிவதாக உணர்ந்து நண்பர்கள் சிரித்துக் கொண்டோம். அதற்கு முன்பு நீண்ட வருட வாசிப்பு எனக்கிருந்தும் மிகத் தெளிவாய் யோசிக்கையில் நான் விலை குடுத்து வாங்கின முதல் புத்தகம் எதுவுமில்லை. அடுத்த நாள் மாலையில் மதுரை பாரதி புக் ஹவுஸில் கொஞ்சம் பெரிய சைஸில் இருந்த உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தையை  விலை குடுத்து வாங்கினேன். தாட்சன்யமற்று நீண்ட உலோக மொழிக்கு மிக நிதானமாக நேரம் ஒதுக்கி நான் வாசித்தது முன்னுரையை மட்டும்தான். ஒரு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதனை திரும்பி கையிலெடுக்கையில் ‘கிணற்றடி ஸ்த்ரீகள் ‘ கதையை வாசிக்கத் துவங்கினேன். முன்பாக, மதினிமார் கதையில் வரும் அமராவதி மதினியையும், குள்ளக்கத்திரிக்க மதினியையும் நான் கடக்கும் கரிசல் காட்டு ஊர்கள் தோறும் தேடிக் களைத்து, ஒருநாள் கோப்பம்மாளை வாசித்து பொறுக்க மாட்டாமல் சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். எப்பொழுதோ நான் பயன்படுத்தி தொலைத்து விட்ட ஒரு பள்ளிக்கூடத்து சீருடை சட்டை நினைவுக்கு வர, நானுமொரு கோப்பம்மாளைத் தவறவிட்டுவிட்டதாய் மனம் வெம்பிக் கிடந்தது. கருப்பு ரயிலில் பஞ்சம் பிழைக்க தஞ்சாவூர் போகும் அந்தக் குடும்பத்தோடு வழியில் நிற்கும் நானும் ஏதாவதொரு இடத்தில் ஏறிச்செல்ல விரும்பி முடியாமல் மாயாண்டிக் கொத்தனிடம்தான் போய் வேலைக்குச் சேர்ந்திருந்தேன், கல் சுமக்க.
     தன் கழுதை ஒன்று ஊரிலிந்து போய், நாட்களுக்குப் பின் அதனை நகரத்து வீதியில் பார்க்கும் கோணங்கியின் சிறுவன் ஒருவனைப் போல் ஒவ்வொரு முறையும் வீடு மாறிவருகையில் தொலைத்து விட்டவையெல்லாம் சதாவும் ஒரு நகரத்துக் கதையாய் நிற்கச் செய்திருக்கும்.
     கிணற்றடி ஸ்த்ரீகளும், தறிவீடும் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை பாதியில் போட்டுவிட்டு பதட்டத்துடன் அவசரமாக கோணங்கியின் வேறு புத்தகங்களைத் தேடி ஓடச் செய்தது. ஊரில் யாரிடமும் அவர் புத்தகம் கிடைக்கவில்லை. அப்பொழுது புத்தகம் வாசிக்க கொடுக்க இருந்தது என்னை அதிகம் தெரிந்து வைத்திருந்த எங்கள் ஊர் நூலகம்தான். பல நாட்கள் எனது வீடாக இருந்தது இந்த நூலகம்தான். அப்படி ஒரு நாள் சு.ராவின் ‘குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள்நாவலை வாசித்து பாதியிலேயே கடுப்பாகி தூக்கிப் போட போனபோதுதான் அந்த வரிசையின் ஓரத்தில் புதிது மங்காமல் ஒரு புத்தகம் இருந்ததைக் கவனித்தேன். பாழி – கோணங்கி....பார்த்த நொடியிலேயே முடிவு பண்ணிவிட்டேன். அதை திருடி விடுவதென. வேறு வழியில்லை, என்னால் சொந்தமாக வாங்க இப்போதைக்கு பணம் இல்லை, இதைத் திருப்பித் தரவும் மனம் வராது.
     அந்தப் புத்தகம் திருடி வந்த தினம் அவ்வளவு சந்தோசமக இருந்தது. சதாவும் அதனைத் தூக்கித் திரிந்து பதிணாறு நாட்களில் வாசித்து முடித்தேன். அதன் ஒரு பக்கத்திற்கு கூட அர்த்தம் புரியாத பொழுதும் அப்போதைக்கு அதனை வாசித்து முடித்தது எனக்கே ஆச்சர்யம்தான். தேவதாசிகளின் கேச அகவல் ஏடும், வில்லேஜ் ஆஃப் தீவ்ஸ் ம் ஒளிந்து கிடக்கும் ஒரு உலகின் பெயரற்ற யாத்ரீகர்கள் சிலரை எனக்கு மிக நெருக்கமாய் கொண்டு வந்து போனது. அதன் அடுத்த வாசிப்பும், அடுத்தடுத்த வாசிப்புமாய் பதினாறு முறை வாசித்து முடித்த பொழுது அந்நூலின் வரிகள் ஒவ்வொன்றாக ஊர்ந்து உடல் முழுக்க திரிவதாய் உணரமுடிந்தேன்.
     இப்படியானதொரு குறுக்கு வெட்டு மனநிலை எல்லா நூல்களையும் வாசிக்கையில் வந்து விடுவதில்லை. பாழியை வாசித்த பொழுது வந்ததற்கான காரணங்களையும் உண்மையில் என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்பொழுது தானியாளின் பச்சை ஏட்டிலிருந்து ஊர்க் காற்றின் ஈரம் குடித்த நடுவயது மங்கைகள் சிலர் கொஞ்சம் தான்யங்களோடு வெளிவந்து பெருநகரங்களின் தொலைந்து போன வயல்வெளிகளெல்லாம் தங்களின் கதைமொழியில் கிறுக்கிச் செல்வதும் நூற்றாண்டுகளைக் கடந்துபோன யாத்ரீகனொருவன் ஆகக்கடைசியாய் தான் கண்ட்டைந்துவிட்ட மிகப்பெரிய சாகசக் கதையினை சொல்லத் துவங்கிவிட்டது போலவும் இருந்தது. கோணங்கியின் கதை ஒவ்வொன்றும் எழுதுவதைப் போலவே வாசிப்பதும் சாகசம்தான். மனம் முழுக்க அன்பின் பெருங்குவியலை உணர முடிந்தது இந்நாவலை வாசித்த பொழுதுகளில்தான்.
                           2
                நான் பார்த்துக்கொண்டிருந்ததொரு வேலையை விட்டுவிட்டு அடுத்து என்ன வேலைக்குப்போவதென்கிற எந்தவிதமான பதட்டங்களுமில்லாமல் நான் கிளம்பிப்போனது கோவில்பட்டிக்கு. முதல்முறையாய் கோனங்கியின் வீட்டிற்குச் செல்லும் பரவசம். அலைபேசியில் சிலமுறை அவருடன் பேசியிருந்தேன். புளியமரங்களின் நிழலடர்ந்த நெடுஞ்சாலையில் காத்திருந்தவரைத் தொலைவிலிருந்துப் பார்த்ததுமே கரையைக் கண்டுவிட்ட மாலுமியின் சந்தோசத்தில் வெகுதொலைவிலிருந்தே கையசைத்தேன். இப்பொழுது யோசிக்கையில் எங்களின் சந்திப்பிலும்,  விடைபெறுதலும் இதுமாதிரியான தூரத்திலிருந்து கையசைக்கும் நிகழ்வுகளால் இப்பொழுதும் கடந்தபடியேதானிருக்கிறது.. உடலிலிருந்த களைப்பு, வெறுமை அவ்வளவையும் ரோமனோவ் ஓட்காவில் கரைத்தவனாய் பாழியைப் படித்திருந்த பரவசத்தோடு உளறத் துவங்கினேன். உண்மையில் அந்த உளறல் அவரின் எழுத்தின் மீதான பெருங்காதலும், தீவிரமாக தேடிப்போய் ஒட்டிக்கொண்டதின் காரணமாய் நிகழ்ந்ததுதான். இதுகூட உளறமுடியாமல் போன இவ்வளவு குடித்துதான் என்ன? அல்லது அவரின் கதைகளைப் வாசித்த பரவசமென்பது வேறு எப்படி வெளிப்பட முடியும்.
     பிற்பாடு எங்களின் சந்திப்பு வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் ஒரு பாசஞ்சர் ரயிலைப்போல் குறுக்கும் நெடுக்குமாக தடங்களின் நிச்சயங்களெதுவுமின்றி நீண்டுகொண்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் விசில் ஊதி வழியனுப்புபவர்களுக்கு சமயத்தில் ஒரே மாதிரியான ஒருவம் இருப்பதாகத் தோன்றும். அப்படி நாங்கள் ஒவ்வொரு இடத்திலும் சந்திக்கிற நண்பர்கள் அடுத்த நொடியிலேயே எங்களுடன் மிக நெருக்கமாய் ஒட்டிக் கொள்கிறவர்களாயிருப்பார்கள். வெயிலேறிய ஒரு மதியத்தில் வடலூரில் இறங்கியிருந்தோம். சத்தியதரும சாலையில் எங்களுக்காகவென மிஞ்சியிருந்த சாதம் வாங்கி ஒரு பழைய வீட்டின் திண்ணையில் அமர்ந்த பொழுது சுற்றிலும் நிறைய பறவைகளின் சலசலப்பினைக் கேட்க முடிந்தது. வெயிலும் பசியும் பறவைகளும் காய்ந்து போன அந்த இலையையும் அந்த உணவையும் பேரற்புதமிக்க ஒன்றாய் உணரச்செய்தது. அந்த திண்னையிலேயே நாற்பத்தியெட்டு கோடி வார்த்தைகளின் மரணம் கதையை வாசிக்கத் துவங்கினேன். அந்தக் கதையின் சொற்கள் மெல்லக் கால் முளைத்து அந்த ஊரெங்கும் சுற்றத் துவங்கிவிட்டன.
     கோணங்கியின் எழுபது கதைகளடங்கி சலூன் நாற்காலியில் சுழன்றபடி எங்களுடன் வெவ்வேறு ஊர்களுக்கு சலிப்பின்றி உடன் வந்துகொண்டிருக்க சந்திக்க நேர்கிற நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் கதை சொல்லிச் சென்றது. காரைக்காலின் வெக்கை மிகுந்த அறை எங்களை எந்த நேரத்திலும் அனுமதிக்குமொரு புகலிடமான தினம் ஒரு புரட்டாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமை. சென்னையில் இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துக் கொண்டிருந்தவனை சில நாட்களுக்குமுன் அறிமுகமான குரல் ஒன்று தொலைபேசியில் அழைத்தது. அந்தக் குரலுக்குப் பின்பாக சில நொடிகளில் கோணங்கியின் குரலும் கேட்க அடுத்த சில நிமிடங்களில் நான் காரைக்காலுக்குப் பயணமாகிக்கொண்டிருந்தேன். பிறகு அப்படியான திடீர் பயணங்கள் அடிக்கொருமுறை நிகழ்ந்தன. ஆஸ்திரேலிய பியரும், ஸ்விட்சலார்ந்து ஒயினும் கலந்து குடிக்கப் பழகினேன். வெயில் குடிப்பதற்கு முன்பு எங்கிருந்தாவது தேடிப்பிடித்து எடுக்கும் பூண்டு ஊறுகாய் பல நூறு ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டதைப்போல் அபூர்வமானதாயிருக்கும். அவ்வப்பொழுது நெப்போலியன்,ஸ்பைஸ் வோட்கா, ரோமனாவ், பக்கார்டி என மாறி மாறி படையல்கள் அன்றரைய சூழ்நிலைகளை உள்வாங்கி வெளிப்படும். மதுவும் மதுவுக்குப் பின்னான நடனமுமாய் எங்களின் உடல்களிலிருந்து முதலில் ஓராயிரம் குருவிகளும், பின்பு சில லட்சம் விட்டில் பூச்சிகளும் தொடர்ந்து பின்னிரவு தாண்டும்போது ஒரு பெரும் வனமே அந்த அறையைச் சூழ்ந்துவிடும். நாங்கள் மூன்றுபேரும் சந்திக்க நேர்கிற தினங்களில் அதிகாலை மூன்று மணிக்கு மேலாக குருவியின் குரல் கேட்பது ஒவ்வொருமுறையும் எங்களை ஆச்சர்யப்படுத்தியபடியே இருந்த ஒன்று. நாங்கள் இல்லாத தினங்களில் அந்தக் குருவி சப்தமிடுவதில்லை என வெயில் சொல்வது எங்களை இன்னும் அதிகமாய் பிரம்மிக்க வைக்கும். அந்தக் குருவிக்கு ஒரு பெயர் சூட்டவேண்டுமென நாங்கள் கொண்டிருந்த விருப்பத்தினை நிவர்த்திச் செய்கிறபடி ஏதுவானதொரு பெயரை இன்னும் நாங்கள் கண்டடைந்திருக்கவில்லை. அல்லது எங்களின் இருப்பற்ற அவ்வறையில் இப்பொழுது அந்தக் குருவியின் குரல் யாரோ வேறு சிலரின் மனப்பதிவில் இருக்கலாம்.
     நன்னிலம் தாண்டி ஒரு கோவிலுக்குப் போனோம். நான், கோணங்கி, எங்களுடன் ஒரு நண்பர். அந்த ஊரின் பிராதன சாலைக்கும் ஊருக்குள் கோயிலுக்கும் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். நடந்து போகும்போதே நான் முக்கால்வாசி சோர்ந்துவிட்டேன். அந்தக் கோயில் போய்ச்சேர்ந்த பொழுது நண்பகல். எதிரிலிருந்த குளத்தங்கரையில் மரத்தடி நிழலில் படுத்துத் தூங்கிவிட்டேன். அவ்வளவு களைப்பு. மீண்டும் நான் உறங்கி எழுந்தபொழுது கோணங்கியும் அந்த இன்னொரு நண்பரும் இல்லாமல் போக, பதட்டத்துடன் எனது கை அலைபேசிக்குப் போனது. மதிய உணவோடு திரும்பிக் கொண்டிருப்பதாக எதிர்முனையில் கோணங்கி சொல்ல, அந்த திருப்தியில் மீண்டும் உறக்கமே வந்தது.  ஆறு கிலோமீட்டர் கால்நடை பயணம் என் மதிய உணவை சாத்தியப்படுத்தியது என்றானபொழுது, இப்படியானதொரு நேசம் எதன் காரணமாயிருக்குமென என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவிற்கும் பெரும்பாலான நேரங்கள் எங்களுக்குள் சண்டை நடந்தபடியிருப்பதும் ஆளுக்கொரு பக்கமாய் வேறு வேறு ஊர்களுக்குப் பிரிந்து போவதுமாய் நடக்கும். அதையும் மீறி அடுத்த முறை எங்காவது போக வேண்டுமெனில் கோணங்கி அழைக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். எந்த வேலையில் எந்த இட்த்தில் இருந்தாலும் பாதியிலேயே அவர் கூப்பிட்டதும் நானும் ஓடிவிடுவேன். இப்படி எப்பொழுதும் எங்களுக்குள்ளான அந்த ஓடிப்பிடிக்கும் விளையாட்டு நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
     என்மீது எவ்வளவு நம்பிக்கைகளும் அபிமான்ங்களும் இருந்த்தோ அவ்வளவிற்கு நான் கட்டற்று பேசுவதில் எரிச்சலுமிருந்தது அவருக்கு. ஆனாலும் ஒவ்வொரு கதை எழுதி முடித்த்தும் அதனை முதலில் கோணங்கி வாசித்துச் சொல்லவேண்டுமென்றுதான் மனம் பரபரக்கும். மார்க்வெஸ் இதழ் வெளியிடப்பட்ட இடமென்பதற்காகவே கமுதி வழிவிட்ட ஐய்யனார் கோவிலுக்கு வெயிலும் நானும் கோணங்கியோடு ஓடினோம். வெயிலப்பிய அந்த பொட்டல் நிலத்தில் ப்ளாக் நெப்போலியனும் விசேச வீட்டு கறிச் சாப்பாடும் உடலுக்குள் ஏற இலை மாற்றி இலை அள்ளித் தின்றுகொண்டிருந்தேன். பிறகு எப்பொழுது கவிழ்ந்தேன் என்பது சேமிக்கப்படாத நினைவு. விழிக்கையில் இரவு எட்டு மணியைத் தாண்டியிருந்த்தோடு என் தலை மொட்டைத் தலையாகியிருந்தது. உற்சாகத்தில் வழிவிட்டானுக்கு நானே அடம் பிடித்து முடி கொடுத்திருந்தேன். எந்தச் சாமிக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் படையல் வைக்கலாம், உண்மையில் படையல் வைக்க பிரார்த்தனைகள் இருக்க வேண்டுமென்பதும் அவசியமில்லை. என் படையல் யாரோவொருவரின் பிரார்த்தனைக்கானது. இரவில் மீண்டும் மதுவருந்திவிட்டு அந்த பொட்டல் வெளியில் படுத்துக்கொண்ட பொழுது அமாவாசை இரவின் நட்சத்திரங்களனைத்தும் நூற்றாண்டுகளாய் சொல்லத் துடிக்கும் கதைகளை தூவிக்கொண்டிருந்தன காற்றில். நாங்கள் எங்களின் தாய்மார்களீன் நேசம் குறித்தும் எழுத்தின் மூலமாய் தீர்த்துக் கொள்ள வேண்டிய வன்ம்ம் குறித்தும், முன்பு எப்பொழுதோ நேசங்கொண்டிருந்த பெண்களைக் குறித்தோம் பேசிக்கொண்டோம். அந்த இரவு நாங்கள் உறங்கியிருக்கவில்லை. ஆடிக் களைத்துப் போனோம்...]
      நாங்கள் ஆடிக்களைத்த இன்னொரு தினம் விசேசமானது. இப்பொழுதும் மழை பெய்யும் இரவுகளில் சில நொடிகள் தவறாமல் கோணங்கியையும் வெயிலையும் நினைத்துக் கொள்ளச் செய்த நடனம். எங்கிருந்தாவது வண்டி பிடித்து தஞ்சைக்கும் அங்கிருந்து நாகைக்கு ரயிலிலும் பிறகு அதே ரயிலில் நாகூருக்கும் ஓடி காரைக்கால் வந்து சேரும்போது தவறாமல் தஞ்சை ரயில் நிலையமும் நாகையிலிருந்து நாகூர் வரும் ரயில் பயண நேரமும் எங்களுக்குள் ஒரு பெருங்கதையை துவக்குவதற்கான சாத்தியங்களை துவக்கிவிடும். மழைக்காலம். இரவும் பகலுமாய் மழையில் ஊர் நனைந்து குளிர்ந்து போயிருந்தது. மூன்றாவது மாடியிலிருக்கும் வெயிலின் அறையில் பக்கார்டியின் காட்டமான நீர்மை எங்களின் உடலுக்குள் இறங்கியது. எங்கள் உரையாடலுக்கு சுதி சேர்த்த மழியோடு சேர்ந்து ஆடவேண்டுமென்கிற கோமாளித்தனமான முடிவை வழக்கத்திற்கு மாறாக எனக்குப் பதிலாக வெயில் முன்வைத்தான். நாங்கள் தாமதிக்கவில்லை. மதுவோடு மொட்டை மாடிக்குச் சென்றோம். நரம்பதிர ஆளுக்கொரு திசையில் ஆடி பின்பு வட்டமாகவும் கோணல் மானலான வரிசையிலும் தொடர்ந்த ஆட்டம் மழை நின்று தூறிய பொழுதும் நிற்கவில்லை. முதுகில்  கோடாங்கிகளின் உடுக்கையொலிகள் அதிர்ந்தன. தலையிலிருக்கும் மதுவின் அடர்த்தி உடல் நரம்புகளெங்கும் இலகுவாகப் பரயிருந்தது. பழங்குடி நடனமொன்று ஆடுவதாக மழைச் சத்த்தோடு சேர்ந்து ஒரு பாடலும் நடனமுமாய் இருந்தவர்களை சிறிதும் அயர்ச்சி எய்தியிருக்கவில்லை. தூறல், மழை மீண்டும் குறைந்த தூறலென ஒரு மழையின் அத்தனை பரிமாணங்களையும் பார்த்த தினமது.
     பயணங்கள்,சண்டைகள், மது எல்லாவற்றிற்கும் பின்னால் அவருடனான உறவைப் பிணைத்திருப்பது பரஸ்பரம் கொண்டிருக்கும் அன்பும் கதைகளின் மீதிருக்கும் பெருங்காதலும்தான். வெவ்வேறு பணிகள் , இடர்கள் என இப்பொழுது ஆளுக்கொரு திசையில் சுற்றிக்கொண்டிருந்தாலும் நோய்மையும், சோர்வும் கொண்டிருக்கையில் தேடிப்போகும் முதல் இடம் கோவில்பட்டி வீடாகத்தானிருக்கிறது. வீட்டிலிருக்கும் வேம்பின் நிழலும் கோணங்கியுடனான கதை பேசும் நேரங்களும் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கான ஊடகமாகவே தோன்றுகிறது. தன் கதைகளைப் போலவே புதிர்கள் நிரம்பியிருப்பதாகத் தோன்றும் கோணாங்கியுடனான ஒருவரின் நட்பு உண்மையில் தமது குழந்தைத் தனத்தையே உணரச்செய்யும். நண்பர்கள் யார் வீட்டிற்குச் சென்றாலும் அடுத்த சில நிமிடங்களில் மிக நெருக்கமாகி விடுவது அவருக்கு மட்டுமே சாத்தியம். எல்லோரிடமும் பேசுவதற்கென எவ்வளவோ இருக்கிறது அவருக்கு, கதைகளாய் பாடல்களாய் சம்பவங்களாய். பொதுவெளியில் அவர் மீது நம்ப்ப்படுகிற பிரம்மிப்புகளுக்கு அப்பால் அந்த எளிய மனிதனைப் புரிந்து கொள்ள அல்லது நெருங்கிச் செல்ல கதைகளை நேசிக்கும் எவராலும் இயலும். முடிவற்று பயணிக்கும் தொடர்வண்டியைப்போல் உதிரும் அவரின் கதைகள் உங்களையும் என்னையும் சேர்த்தே பாத்திரமாக்குகின்றன. நம்மோடு வைக்கின்ற உரையாடல்களையும் வைக்க நினைத்து முடியாமல் போகிற உரையாடல்களையும் தன் கதைகளுக்குள்ளாக வைத்துவிடுகிறவர்தான் கோணங்கி. எப்பொழுதும்போல் இப்பொழுதும் சில கதைகள் எழுதி முடித்துவிட்டு அவர் வாசித்துச் சொல்லவேண்டுமெனக் காத்திருக்கிறேன். ஒவ்வொரு தொகுப்பும் வெளிவருகிற தினம் அதில் ஒரேயொரு கதையாவது மதினிமார் கதை மாதிரி நல்ல கதை என ஒருவர் சொல்லிவிட்டாலும் போதும் எழுதிமுடித்த்தற்கான எல்லா திருப்திகளோடும் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன்.
       

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு