மச்சம் தொகுப்பிற்கு அடியேனின் எளிய முன்னுரை.கதைகள் என்பது சமகாலத்தின் நினைவுகளாய் இருக்கின்றன…

வருடத்திற்கு பத்துக் கதைகள் எழுத முடிவதை ஒரு வகையான பிணியாகவே இப்பொழுது நினைக்கிறேன். இது என்னுடைய நான்காவது சிறுகதை தொகுப்பு. வாழ்வின் சந்தோசங்கள் வலிகள் எல்லாவற்றிலும் அதிகம் சிக்கிக் கொள்ளாமல் என்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு முறையும் நான் வந்து தஞ்சம் அடைவது கதைகளிடம்தான். ஒவ்வொரு கதை எழுதும் போதும் முதல் கதை எழுதுகி|ற பரவசமும் ஆர்வமும் இப்பொழுதும் இருக்கிறது, கதைகள் குறித்து தமிழ் புனைவுலகம் பேசுகிறவற்றை எல்லாம் கேட்டு மட்டுமீறிய சோர்வுகள் மிஞ்சினாலும் இங்கு எழுதப்படுகிற புனைவுகள் என்னைத் திருப்தி செய்யாததின் வெறுமையே எனது கதைகள்.
இந்தக் காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்வு  எதிர்பாராத எல்லா குழப்பங்களோடும் சிக்கல்களோடும் நீண்டாலும் புத்தகங்களும் நண்பர்களும் மட்டுமே எனது இருப்பை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். எழுதாத கதைகள் ஒருவகையில் கடந்த காலத்தின் நினைவுகளென்றே எப்பொழுதும் தோன்றுகிறது. சில வேளைகளில் இந்தக் கதைகளை திரும்ப வாசிக்க எத்தனிக்கையில் நான் எழுத நினைத்தவைதானா என்னும் சந்தேகம் வருகிறது. நள்ளிரவில் உடல் சோர்வும் களைப்பும் அழுந்த வட கிழக்கு இளைஞர்களும் யுவதிகளும் பேருந்துகளில் பாதித் தூக்கத்தில் போவதைப் பார்க்கையில் இன்னும் இவர்களின் கதையை சொல்லவில்லை என்கிற குற்றவுணர்ச்சி இருக்கவே செய்கிறது. உப்பு நாய்கள் என்னும் பெயரில் எழுத நினைத்த நாவல் உண்மையில் இவர்களின் வாழ்வைத்தான்… தவிர்க்கவே முடியாமல் அது வேறு வேறு இடங்களுக்கு நகர்ந்து  விட்டது. உங்கள் கதைகளில் சொல்லப்படுவது போல் வாழ்க்கை அவ்வளவு குரூரமானதா? என்னும் கேள்வியை எதிர்கொள்கையில் எளியதொரு புன்னகையை மட்டுந்தான் பதிலாகத் தரமுடிகிறது. ஆசிர்வதிக்கப்பட்ட அந்த நண்பர்களுக்காக பிரார்த்திக்க என்ன இருக்கிறது. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் அல்ல, ஆனால் என்னைப் போலவே ஒதுங்க நிழல் தேடி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்காக எப்போதும் பிரார்த்திக்க விரும்புகிறேன்…( ஒருவித சுயநலத்துடன்.)
தங்களது அன்பாலும் அக்கறையாலும் எனது இருப்பை உறுதி செய்யும் நண்பர்களுக்கு எப்போதும் எனது அன்பு. பாலா, ச.விசயலட்சுமி, சுதிர் செந்தில் இவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எனது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்திருக்கும் ஆதூரமான உறவுகள். பொறுப்போடு கதைகளை வாசித்து அணிந்துரை தந்திருக்கும் தூரன் குணாவுக்கு எனது அன்பு… அடுத்த கதை எழுதுவதற்கான ஆர்வத்தோடு இந்த நிமிடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பூரண சந்தோசம் கொள்கிறேன்...
                                           ப்ரியங்களுடன்
                                           லக்‌ஷ்மி சரவணக்குமார்
                                           டிசம்பரின் ஒரு அழகிய  
ஞாயிற்றுக்கிழமை  2012.
9176891732

Comments

Post a Comment

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.