முத்துப்பிள்ளை கிணறு…

         கோடை ஒரு வற்றா ஆறென அந்த வருடத்தின் பிற்பகுதி முழுக்க கரிசல் நிலம் முழுக்க விரிந்து கிடந்தது. வெயிலடித்துச் செத்துப்ப்போன ஆடுகள் தோலுரிக்கப்பட்டு இறைச்சிகளாய் உப்புக்கண்டம் போடப்பட்டு தெருவில் எலக்ட்ரிக் போஸ்ட் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் வெயிலின் வாசனை. பாய்கடை ஆட்டுக்கால் சூப் இப்பொழுதெல்லாம் சுவையற்று நீர்த்துப் போயிருக்கிறது. தனித்துவமான காரணங்களெதுவுமில்ல, முன்பு ஆடுகள் உயிரோடு அறுக்கப்பட்டன, இப்பொழுது இறந்து பல மணிநேரங்களுக்குப் பிறகு அறுக்கப்படுகின்றன. அப்படியும்கூட ஊர்களில் பாதி வீடுகளுக்குமேல் சோளமும், கம்பும் தீர்ந்து போய் சனம் கீக்காட்டுக்கு நாத்து நடப்போக நேரம் பாத்துக் கொண்டிருந்தது. அடுத்த மழைக்காலம் வந்து வெதச்சு அறுக்க நாளிருக்கு நிறைய. பிள்ளைகள் எப்படி பசி தாங்கும்? சோளம் கசக்கி வாய் நெறய மெல்லும் சின்னப்பிள்ளைகள் இப்பொழுது வெறும் வாயை மென்றுகொண்டிருக்கின்றன. சம்சாரி வீடுகளில் குதிர்கள் தீர்ந்து மஞ்சள் பைகளிலும், துணிப்பைகளிலும்  சேகரித்து கொஞ்ச நஞ்ச தான்யங்களில் பொழுதோடிக்கொண்டிருந்தது.


        மாயாண்டிப் பெருசு செத்தாலும் செத்தது ஆதக்காளுக்கு வைத்திருக்கும் ஒரு பிள்ளையைப் பார்க்கவும் செரமமாகிப் போனது. பனங்கிழங்கும், சோளமாவும் எத்தனை நாளைக்கு பசியாற்றும். பிள்ளை சொங்குவத்திப்போய்க் கிடந்தது. ஆன கஞ்சியில்லாமல் கை காலெல்லாம் தோலுரிந்து தேவாங்கைப் போலிருந்தாள்  மகள். அம்மா இடுப்பிலும் தோளிலுமாய்த் தூக்கியபடியே திரிந்தாள். ஊரிலிருந்த பாதிச்சனம் ஊர்மாறி போய்விட்டது பஞ்சம் பிழைக்க. மிச்சமிருந்த சனத்துக்கு இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிக்கத் தெம்பிருந்தது. ஆதக்காளுக்கு கருசக்காட்டு வைராக்கியம், அத்தனை சீக்கிரத்தில் தீர்ந்து போகாது. ஏதாவது வேலை செய்து பிள்ளையை பாத்துக்க நினைத்தாள். இந்த பொட்டலில் கருவேல மரத்தைத் தவிர என்ன இருக்கிறது? அதைத்தான் வெட்டினாள். புகைமூட்டம் போட்டாள். அடுப்புக்கரி போட்டு பி்ழைக்கும்படியாகத்தான் இருந்தது தினமும்.

        சாத்தூரிலிருந்தும், விருதுநகரிலிருந்தும் கரியெடுக்க வண்டி வந்தது. மொத்த கருவேலங்காட்டையும் கரிமூட்டம் போடும் ஆவேசமிருந்தது ஊரிலிருந்த சனத்துக்கு. கிடைக்கிற எல்லாத்தையும் தோண்டி தோண்டி வெட்டி எடுத்தனர். ஊர் முழுக்க புகைமூட்டம் பகலையும் இருட்டாக்கியது. ஆதக்காளுக்கு புகை நெஞ்சுக்குள் ஒரு வளையமாய் தீராது சுற்றிக்கொண்டிருந்தது. அவள் இருமியும் துப்பியும் எப்படியும் அதை தீர்த்துவிட நினைத்தாள். ஆதக்காளோடு சேர்த்து பிள்ளையும் முள்ளுவெட்ட வந்தது. வெட்டிப் போட்டு முள்ளுமரங்கள் அம்பாரமாய் குவிந்து கிடக்க, அவளை மாதிரியான சின்னப்பிள்ளைகள் கையில் பன ஓலையை சேகரித்து காக்கா முள் குத்தி காத்தாடி விட்டு விளையாடினர். அவர்களின் காத்தாடிதான் ஊரில் எல்லா வீதிகளிலும் ஓடியது. வெக்கையாய் இருக்கிற நேரத்திலெல்லாம் வேகமாய் ஓடி காத்தாடி சுற்றவிடுவார்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பெரியவர்களும் காத்தாடி விடுவதுண்டு. வெயில் குறைந்த மாலை நேரங்களில் காத்தாடியும் ஓய்ந்து அவர்கள் களைத்து விழும்போது கொஞ்சம்பேர் மட்டும் வெட்டிய முள்ளையெல்லாம் இழுத்து மூட்டம் போட சேகரித்துக் கொண்டிருப்பார்கள்.

        ஆதக்காளுக்குப் பிள்ளையை நாலெழுத்து படிக்க வைத்துவிட ஆசையான ஆசை. இந்த ஊரிலிருந்தால் காலமு முழுக்க கஞ்சிக்கு போராடியே கருமாயம் தீந்துபோகுமென நினைத்தவள் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சாத்தூருக்கோ சிவகாசிக்கோ போய்விடலாமென நினைத்தாள். வேலைக்கா பஞ்சம். சிவகாசிக்குப் போய் பசி என்று இருந்துவிட்டவர்கள் யாருமில்லை. எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். ஒரு தடவைக்கு நாலுதடவை எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்டாள் . எல்லோரும் ஒரே மாதிரியாகவே சொன்னார்கள். ”எது செஞ்சாலும் யோசிச்சு செய்த்தா?... பிள்ள படிக்கனும்னு நினக்கிறது வாஸ்தவந்தேன். ஆனா புது ஊரு புது மனுசங்க எல்லாம் நமக்கு ஒத்துவருமான்னு தெரியனும்ல” அவளும் யோசித்துப் பார்த்தாள். என்னவானாலும் ஆகட்டும் பிள்ளையைப் படிக்கப் போட்டுவிட வேண்டுமென ஒரே முடிவை ஒரு நல்ல நாளில் சிவகாசிக்கு மிச்சமிருந்த கொஞ்சம் மூட்டை முடிச்சுகளை அள்ளிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

        வாட்டர் டேங்க் ஸ்டாப்பிற்கும் சாச்சியார்புரத்திற்கும் நடுவில் ஊரை ரெண்டாக பிரிக்கும் ரயில்வே லைன் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து சாச்சியாபுரம் போற பாதையில் ஒரு சின்ன சந்துக்குள் பழைய குடிசை ஒன்றுதான் வாடகைக்குக் கிடைத்தது. அதுக்கே ஐநூறூ ரூபாய் கேட்பார்களென்று இவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஊரிலென்றால் நல்லது கெட்டதுக்கு சொந்தம் சுருத்து என கொஞ்சம் பேர் எப்போதுமிருப்பார்கள். இங்கே ஒரு அவசரத்துக்கு யாரிடமும் போய் நிற்கமுடியும். பொதுவாக சிவகாசி வருகிற ஊர் ஆட்கள் பாதிப்பேர் பட்டாசுக் கம்பெனிக்கும், தீப்பட்டியாபிசிற்கும் வேலைக்குப் போவார்கள். ஆதக்கா சஃபயருக்குப் போனாள். சிவகாசியிலேயே பெரிய பிரிண்டிங் கம்பெனி அதுதான். உள்ளே போனால் சின்ன ஊருக்குள் போனது மாதிரி இருக்கும். ஆனாலும் முதலாளி மார் இன்னும் பழைய மோட்டார் சைக்கிளில்தான் வருவார்கள். இவளுக்கு வாரச்சம்பளம். எட்டுமணிநேர வேலை போக நாலுமணி நேர ஓட்டியும் பார்த்தாள். எப்படிப் பார்த்தாளும் நாளுக்கு நூற்றி இருபது ரூபாய். வாரத்துக்கு எட்நூத்தி நாப்பது ரூபாய். போதும்தான். இனி கொஞ்சம் பிரச்சனையில்லை என நிம்மதி வந்தது அவளுக்கு.

        பிரிண்டிங் செக்சன் பக்கம் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வேலை இருக்கும் இவள் இருந்தது பைண்டிங், பேக்கிங் செக்சனில். இவளோடு சேர்ந்து ஒரு எழுபது எண்பது பொம்பளைகள் வேலை பார்த்தனர். எல்லாம் சுற்றியிருக்கும் கருசக்காட்டுக் கிராமங்களிலிருந்து பிழைக்க வந்த சீவன்கள். ஊருக்கு நல்லது கெட்டதுக்குக் கூட போவதில்லையென அவர்கள் சொல்வதை எல்லாம் பாக்க கஷ்டமாக இருக்கும் தானும் அப்படி இருந்துவிடக்கூடாதென நினைப்பாள். ஊர் என்னவானாலும் முக்கியம். ஊரும், சாவடி தெருவும் அவளுக்கு நினைப்பிலிருந்து அழிக்க முடியாதது. கீழத்தெரு முழுக்க இவள் குழந்தையாக இருந்த பொழுதிலிருந்து விளையாடி உருண்டு வளர்ந்து, பின் இவள் மகளும் அதே தெருவில்தான் வளர்ந்தாள். அந்த தெருவின் புழுதியும் வெக்கையும் இன்னும் அவளுக்குள் இருக்கின்றன.


        அவளுக்கு பேக்கிங்வேலை பிடித்திருந்தது, ஆனால் அத்தனை பெரிய கனத்தை தூக்குவது மட்டும்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. வேற வேற உர்களுக்கு பார்சல் எடுப்பார்கள். பண்டல் பண்டலாக போஸ்டர்களை கட்டி எடுக்க வேண்டும். முதுகு வளைந்து நெளிந்து ஒருவழியாகிவிடும். பொட்டக்காடு முழுக்க அலைந்து முள்ளு வெட்டியவளுக்கு இதுவொன்றும் அப்படி சிரமமான வேலையாக இல்லை. எல்லாம் சினிமா போஸ்டர்கள். தமிழ் படம், இந்திப்படம், இங்கிலீஸ்படம் எல்லாம் அங்கு அச்சானது. எல்லா ஊர்களிலிருந்தும் ஆட்கள் வந்து போவார்கள். போஸ்டர்களில்தான் ஆதக்கா எல்லாப் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்காத படங்களே இல்லை. தான் பார்க்கிற படங்களைப் பற்றியெல்லாம் தன் மகளிடம் போய் கதை சொல்லுவாள். இந்த ஊருக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பிள்ளை கொஞ்சம் தெளுச்சியாய் இருந்தது. தண்ணிக்குத்தான் சிரமமே தவிர, சுற்றிலுமிருந்த ஆட்கள்கூட இப்பொழுது நன்றாக பழகியிருந்தனர். குடிக்கிற தண்ணிக்கு ஒரு பானைக்கு மூன்று ரூபாய் குடுத்தாள். இந்த ஊரில் தண்ணி வைத்து செய்கிற ஏவாரம்தான் எல்லாத்தையும்விட சிறப்பாக இருந்தது. ஊர் முழுக்க வேலை வேலையென ஒரு சுடுகாடு போலவே இருக்கும். எல்லோருக்குமே வேலை மட்டும்தான், வேலை விட்டால் வீடு வந்து படுக்க நேரம் சரியாயிருக்கும். உடலும் அசந்து போகும்.


        ஆதக்காளை எல்லோருக்கும் பிடித்துப் போனது, நல்ல உழைப்பாளி என முதலாளியே நேரில் இவளைக் கூப்பிட்டு சொன்னதும் அவளுக்க்கு அவ்வளவு பெருமை. பார்க்கிற எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் சொன்னதினாலேயே இன்னும் கடுமையாக உழைக்க வேண்டுமென ஆசை வந்தது. நிறைய ஓட்டி பாத்தாள். பிள்ளை இப்பொழுது பள்ளிக்கூடம் போகிறாள். நேரடியாக ஒன்னாம் வகுப்பு. வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டிருந்தாள். அவள் எழுத்துக்கூட்டி அ ஆ வனா படிப்பதைப் பார்க்கிற பொழுது மனசு குளிர்ந்தது ஆத்தாளுக்கு. இந்தப்பிள்லை நன்றாகப் படித்து வந்தாளென்றால் நாம் பட்டக் கருமாயமெல்லாம் சரியாப்போகுமென நினைத்துக் கொள்ளுவாள். பள்ளிக்கூடம் போகிற பிள்ளை சாய்ந்தரம் வந்தாளென்றால் பக்கத்து வீடுகளில்தான் விளையாடிக் கொண்டிருப்பாள். யாரும் உன் பிள்ளை என் பிள்ளையென பிரித்துப் பார்ப்பதில்லை. படிப்பிலும் விளையாட்டிலும் அந்தப் பிள்ளை படு சுட்டி. ‘ஏ முத்துமாரி’ இரவு ஆதக்கா கூப்பிடுகிற நேரத்துக்கு பாதித் தூக்கத்தில் கிடப்பாள் முத்து. அவளைத் தோளில் தூக்கிக்கொண்டு போகக்கூட ஆதக்காவுக்குத் தெம்பிருக்காது. விட்டால் நடந்தபடியே தூங்குவாள். படுத்து மீண்டும் அடுத்தநாள் காலை எழுந்து வேலைக்குப் போகத்தான் சரியாயிருக்கும்.


        புதிதாய் நிறைய பேர் வேலைக்கு வந்து சேர்ந்தபடியேயிருக்கிறார்கள் கம்பெனியில். எல்லோருக்கும் வேலை கொடுக்க வேண்டியே கம்பெனி பெரிதாகிக் கொண்டிருந்தது. வருடத்திற்கு இரண்டு போனஸ், நல்ல சம்பளம், அதில்லாமல் ஒரு குடும்பம்போல் பாதுகாப்பு என எல்லாமும் கிடைத்தது கம்பெனியில். ஆதக்காளிடம் கொஞ்சம் காசிருந்தால் சின்னதாக வீட்டிலேயே  முதலாளிகளுக்கு ஒரு கோவில் கட்டி விடுவாள், அவ்வளவு மரியாதை. தீபாவளி நெருங்கியது. நேற்றுத்தான் போனஸ்கூட கம்பெனியில் குடுத்திருந்தார்கள். நிறைய ஆர்டர் வந்திருந்தது, வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய அவசரம். எல்லாம் இரவு பகலென வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவசரமாக சில பண்டல்களை வண்டியில் ஏற்ற பெண்கள் அரக்க பறக்க ஓடிக்கொண்டிருந்தனர்.  ஆதக்கா ஒரு பெரிய பண்டலை தூக்கிக் கொண்டு போனாள். அரைகுறையாய் கட்டப்பட்டிருந்த பண்டல் பாதியில் உருவ படிக்கட்டில் வழுக்கி உருண்டாள். அங்கிருந்த பரபரப்பிலும் சத்தத்திலும் இவளுக்கு என்ன நடந்ததென்று எல்லோருக்கும் தெரிய சில நிமிடங்கள் ஆனது. விழுந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை. இன்னும் அதே இடத்திலேயே கிடந்தாள். முதுகில் நல்ல அடி. அவள் அலறல் அந்த கூடம் முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஓடி வந்த பெண்கள் அவளைத் தூக்கி கம்பெனி வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவளைப் பார்த்துக்கொள்ள இரண்டு பெண்கள்.


        மருந்துக்குக் கூட அவள் இதுக்கு முன் ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை. ஒரு காய்ச்சல், தலைவலியென்று வந்தாலும் கை காலில் அடிபட்டாலும் எல்லாமே கை வைத்தியம்தான். எல்லாத்துக்கும் கை வைத்தியம் கற்றுத் தந்திருந்தார்கள் வீட்டில். இப்பொழுது அந்த வைத்தியமும் மறந்து போனது, ஊரின் அந்த துணிவும் தொலைந்து போனது. ஆஸ்பத்திரியில் விழுந்ந்ததும் தான் பிள்ளை நினைப்பு வந்தது. அதற்குள்ளாக மகளைப் பார்க்க யாரோ வீட்டிற்குப் போயிருந்தார்கள். சொந்த பந்தம் யாரும் இருக்கிறார்களாவென கேட்டதற்கு யாரைச் சொல்வதென்கிற குழப்பம் ஆதக்காளுக்கு. அமைதியாயிருந்தாள். மூக்கொழுக வந்து நின்ற மகளைப் பார்க்க ஆத்தமாட்டாமல் இருந்தது. எழுந்து நடக்க எப்படியும் ரெண்டு மாதம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். ’பொழப்பு என்னாகுமோ?’ மனமெல்லாம் தவியாய் தவித்துப் போனது. ஊருக்கு ஆள் சொல்லி விட்டாள். பெரியாத்தாகாரிதான் வந்திருந்தாள். பாவம் இந்த வயதில் அவளைப் பார்த்துக் கொள்ளவே ஒரு ஆள் வேண்டும், இதில் இவளையும் பார்த்துக் கொள்வதென்றால்?... கொஞ்சம் சரியானதும் அவளை அனுப்பிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.


        பிள்ளை பள்ளிக்கூடம் போவதில்லை இப்பொழுது. அம்மா ஆஸ்பத்திரியில் விழுந்த நாளிலிருந்து அங்கேயேதான் கிடையாய்க் கிடக்கிறாள். இப்பொழுதுதான் நடை பழகிய சின்னப்பிள்ளையாய் அந்த ஆஸ்பத்திரி முழுக்க அந்தக் குழந்தை ஓடிக்கொண்டிருந்தது. எல்லோருக்கும் முத்து மாரியைப் பிடிக்கும். அந்தக் குழந்தையுடன் விளையாட யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். கிழவி ஒரு பதினைந்து நாள் உடனிருந்து இவளைப் பார்த்துக் கொண்டாள். அவ்வப்பொழுது கம்பெனியிலிருந்து வந்து பார்த்துக் கொண்டார்கள். முதலாளி ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் தந்து கொண்டிருந்தார். ஒரு மாசம் கிட்ட போயிருக்கும். கொஞ்சம் தேவலை என்பது போலிருந்தது. ஆனால் இனிமேல் கனமான வேலை எதுவும் செய்யக்கூடாதென டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். கனமான வேலை செய்யாமல் எப்படி இருக்க முடியும். அவளுக்கும் புரியவில்லை. கம்பெனியிலிருந்து ஆள் வந்திருந்தார்கள் பார்க்க. கொஞ்சம் பெரிய ஆட்கள். கையில் ஒரு தொகையை இவளுக்கு செலவுக்குக் கொடுத்தார்கள். ஒரு பத்தாயிரம் கிட்ட இருக்கும். முதலாளி தரச்சொன்னதாய்ச் சொல்லிக் கொடுத்தார்கள். ’இனி எப்பிடிம்மா கம்பெனில வந்து வேல செய்வ?....அதான் முதலாளி இதக் குடுத்து விட்டாரு மேல் சொகமானதுக்கப்பறம் வந்து ஒருவாட்டி முதலாளியப் பாத்துட்டு போம்மா” சொல்லிவிட்டு சாதாரணமாகப் போய்விட்டார்கள். அவ்வளவு நாட்களும் சாதரணமாக இருந்த ஆஸ்பத்திரி நாட்கள் இப்பொழுது அவளுக்கு நரகமாகியிருந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறோமென குழப்பமும் தவிப்புமாய்க் கிடந்தாள். வேறு எங்கும் வேலைக்குப் போக முடியுமாவெனத் தெரியவில்லை. தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டுப் பார்த்தாள். வேட்டுக் கம்பெனி, தீப்பட்டிக் கம்பெனி எல்லா இடத்திலும் இவளுக்கு வேலைதர ஒருவரும் முன்வரவில்லை. வீட்டு வாடகை, ஆஸ்பத்திரியில் இருக்கயில் சாப்பாட்டுச் செலவு எல்லாத்துக்கும் சரியாகப் போனது. வெறுங்கையோடு இனி என்னச் செய்யப்போகிறோமென கலங்கி நிற்கையில் மறுபடியும் ஊருக்கே போய்விடலாமென நினைத்தாள். ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்புகிற தினத்தில் அந்த ஊர் தந்த எதுவும் அவளிடம் மிஞ்சியிருக்கவில்லை.


        வெயில் எங்கும் நிறைந்திருந்தது ஊரில். அவளுக்குக் கண்ணீரும் காய்ந்து இப்பொழுது உடலில் ஈரமின்றிக் கிடந்தாள். இத்தனை நாளுக்குப் பிறகு வந்தும்  கருவேங்காடு குறைந்திருக்கவில்லை. வீடு இப்பொழுது வீடாக இல்லை, எல்லாம் மாறிப்போயிருக்கிறது. அந்த வீட்டை சரிசெய்யவே ஒருநாள் பிற்பகலாகிப்போனது. ஆத்தளும் மகளுமாய் இருந்த அந்த வீட்டிற்குள் மறுபடியும் இருட்டடைந்து போனது. ஆதக்கா அழுதது அன்று அவளின் மகளுக்குக்கூட தெரிந்திருக்காது. முன்னைப்போல் முள்ளுவெட்டக்கூடப் போகமுடியவில்லை. ஆதக்காளுக்கு இப்படியாகிப்போனதே என துடித்துப்போன சொந்தமெல்லாம் ஆத்தமாட்டாமல் அவளுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லி தெம்பாக பார்த்துக் கொண்டார்கள். வீட்டிலிருந்து தானியத்தில் ஆளுக்குக் கொஞ்சம் தந்து கொஞ்சநாள் அவளுக்கு பசியாற்றிக் கொண்டிருந்த சனத்திற்கு தங்களது பாடே செரமமாகத்தான் இருந்தது. கீழத்தெரு சூன்யமாகியிருந்தது பசியாலும், வெறுமையாலும். பெரும் வயிறு கொண்ட மிருகங்கள் சதாவும் அவ்வீதியின்மேல் அலறிக்கொண்டிருந்தன.


        யாரிடமும் எதுவும் கேட்டுவிடக்கூடாதென்கிற வைராக்யம்தான் இவளுக்கும். என்ன செய்தும் பொறுத்திருக்க முடியவில்லை, பசியையும் வெயிலையும். முற்றிய வெறிநாயின் தீவிரத்தோடு ஊரைச் சூழ்ந்திருந்த வெறுமை ஒவ்வொருவராய் காவு கொள்வதும், ஊரிலிருந்து துரத்துவதுமாயிருந்தது. முத்துமாரி பசிக்கிது பசிக்கிதென அலறும் குரலுக்கு இப்பொழுது யாரும் செவி சாய்ப்பதுகூட இல்லை. சும்மாவே இருந்ததில் ஆதக்காளுக்கு உடல் இன்னும் மோசமாகித்தான் போனது. உடலிலும் மனதிலும் தெம்பில்லை. ஊர்க்கொடை நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னெல்லாம் கொடை வந்தால் ஊர்க்கஞ்சி போடுவார்கள். மூன்று நாட்களுக்கு ஊரில் ஊர்க்கஞ்சிதான். இப்பொழுது ஊரிலேயே கஞ்சி இல்லை, இதில் ஊர்க்கஞ்சிக்கு எங்கு போவது. எல்லோருக்குமே ஊர்க்கொடையப் பற்றி பேசவே அச்சம். எல்லோர் வயிறும் ஒரு பெருந்தீணிக்குத் தயாராகத்தான் இருக்கிறது, தானிய,ம்?... வழக்கமாக கொடை போடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாதி ராத்திரி தாண்டி மகளைத் தூக்கிக் கொண்டு ஆதக்கா ஊரிலிருந்து சாத்தூர் போகும் காட்டுப்பாதையில் நடக்கத் துவங்கினாள். இருட்டையும் மீறி படர்ந்து கிடந்த வெளிச்சத்தில் இன்னும் பகலின் வெம்மை. இந்த ஊர் இப்படித்தான் இருந்தது இதற்கு முன்னும். சனம் அப்பொழுதும் இப்படித்தான் பஞ்சம் பிழைக்கப் போனது, ஆனாலும் இந்த ஊர் அழிந்துபோகவில்லை. எதோவொரு காலம் கஷ்டமென்றால் இன்னொரு காலம் சந்தோசம்.


        ஊர்ப்பனைகள் வரிசையாய் காவல் காத்துக் கொண்டிருந்தன ஊரை, பனம்பழம் எதும் விழுந்து கிடக்கிறதாவெனத் தேடிப்பார்த்தாள். எல்லாம் பாம்புகள் ஊர்ந்த தடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலம். சட்டையுரித்து சட்டையுரித்து வெக்கையாகிப்போன இடம். பனம்பழமும் இல்லாமல், எப்பொழுதோ உதிர்ந்து போன மஞ்சணத்தி மரங்களைப் பார்த்தவள் எரிந்துபோன அம்மரங்களைப் போலவே மனமெரிய வேகமாக நடந்தாள். இன்னும் ஊரெல்லையைத் தாண்டவில்லை. கம்மாய் வறண்டு பாளம் பாளமாய்க் கிடந்தது. சின்ன உயிர்கூட இருப்பதற்கான அடையாளமின்றி எரிந்து கொண்டிருந்தது ஊர். தன் கடந்த கால நினைவுகளின் மீது கனவுகளையும், விருப்பங்களையும் எரித்துக் கொண்டிருக்கும் ஊர். யாருமற்ற வெறுமையை சகிக்க முடியாத துயரம். அந்த அகாலத்தில் முத்துமாரி பசி பசி என அலறுவதை அவளை விடவும் பெரும்பசியிலிருந்த ஆதக்காளால் சகிக்க முடியவில்லை. எவ்வளவு அலறியும் அவள் குரல் வற்றியிருக்கவில்லை. இருட்டைக் கிழித்து வேகமாக நடந்து கொண்டிருந்தவள் ஊருக்கு வெளியே கொடிக்கா கிணறு தாண்டும்போது ஒரு நிமிசம் நின்றாள். எப்பொழுது தண்ணீர் வற்றிப்போன அந்தக் கெணற்றில் செத்தையும் குப்பையுமாய் அண்டிக்கிடந்தது. தண்ணீர் இருந்த காலத்தில் ஆழம் பார்க்க முடியாத கெணறு. அலறிக்கொண்டிருந்த பிள்ளையைக் கொண்டுபோய் கிணற்றில் தூக்கிப் போட்டாள். முதலில் பசி பசி என அலறிய பிள்ளையின் குரல் கொஞ்ச நேரத்தில் மங்கிக் காணாமல் போனது. ஊரைத் திரும்பிப் பார்க்காமல் சாத்தூர் ரோட்டில் ஆதக்கா வேகமாக நடந்து கொண்டிருந்தாள். 

Comments

  1. வம்சி போட்டி முடிவைப் பார்த்து இந்த பக்கமா வந்தேன். சார்... என்ன கத சார் இது!!! உலுக்கிடுச்சி சார் அப்டியே. Too Good.

    ReplyDelete
  2. வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....