மச்சம் நூல் வெளியீட்டு விழா பதிவு ....


வழக்கமான எதிர்பார்ப்புகளோடும் காத்திருப்போடும் இந்த வருடப் புத்தக வெளியீடும்... சில தனிப்பட்ட காரணங்களால் கொண்டு வர நினைத்த சில புத்தகங்களை கொண்டு வர முடியாமல் போனாலும் சரியாக ஜனவரி 17 ல் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. பல சமயங்களில் அதீத குழப்பங்கள்தான் ஒரு முடிவை நோக்கி நிர்ப்பந்தித்தேனும் நம்மை நகர்த்தும் போல... அப்படித்தான் இந்தப் புத்தகம் வந்ததும்.
எனது நான்காவது சிறுகதைத் தொகுப்பு. உண்மையில் சமீபமாய் சிறுகதை எழுவதிலிருந்து முழுவதாக விலகி அடுத்த நாவலுக்கான உந்துதலில் தான் அதிகமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் இந்தப் புத்தகம் எனக்கு முக்கியமானதாகப் பட்டது. முதலில் தொடர்ந்து நான் இயங்குகிறேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதை விடவும் எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யார் உடன் இருக்கிறார்கள் இல்லாமல் போகிறார்கள் என்று பார்க்கும் நேரமல்ல இது. எல்லோருக்கும் அவரவர் தன்னளவில் முக்கியம் அவ்வளவுதான். நல்லது... ரஜினி படத்திற்கு பொட்டி வரக் காத்திருந்ததைப் போல் நண்பர்கள் ஏழு மணியிலிருந்து புத்தகம் வரக் காத்திருந்தனர். ஒரு குழு ஆறரை மணிக்கெல்லாம் உயிர் எழுத்து ஸ்டாலுக்கு வந்துவிட்டனர்.. புத்தகம் தான் வந்தபாடில்லை. தற்செயலாக வந்திருந்த மாலதி அக்காவிடம் விசயத்தை சொன்னேன்... மாலதி அக்கா தனது நண்பர்களோடு வந்து பொறுமையாகக் காத்திருந்ததோடு விழா முடியும் வரை இருந்தது சந்தோசமாய் இருந்தது. புத்தகம் எப்ப வரும் எப்ப வரும் என நான் செய்த டார்ச்சர் தாங்காமல் சுதீர் செந்தில் நைஸாக நழுவி விட்டார். மணி ஆஃப்செட்டிற்கு போஃனடித்தால் இன்னும் பத்து நிமிசத்துல வண்டி கிளம்பிடும் ஸார்னு சொன்னது ஏழு மணிக்கு. நாசமா போச்சு... எல்லோரிடம் நானும் பத்து நிமிடத்தில் புத்தகம் வந்துவிடும் என மெய்ண்டெய்ன் செய்து கொண்டிருந்தேன். சகோதரர்கள் அருள் எழிலனும் கார்ட்டூனிஸ்ட் பாலாவும் இரண்டு முறை வந்து பார்த்துவிட்டு இன்னும் வர வில்லையென்றானதும் மீண்டும் சுற்றிவரக் கிளம்பிவிட்டார்கள் ( புத்தகம் வந்தது எட்டரை மணிக்கு.)
எங்கள் இயக்குநரிடம் ஏழு மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லி பிறகு அவரை தாமதமாக வரச் சொல்ல அப்படியும் பொறுப்பாக ஏழே முக்கால் மணிக்கு வந்துவிட்டார்.... நண்பர்கள் கொஞ்சம் பேர் இங்கும் அங்குமாக வந்து அவ்வப் போது கேட்டுவிட்டு சென்றனர். மாலதி அக்காவுடன் வந்திருந்த நணபர் பேசாம புத்தகம் ஆட்டோல வருதுன்னு எஸ்.எம்.எஸ்ஸ ரிலீஸ் பண்ணிடுவோம் என்றார்.... ஆஹா நம்ம ட்ரைலர்லயே படத்த ரிலீஸ் பண்ண விஸ்வரூபம் கமலஹாசனா?... ம்ஹூம்.. புத்தகம் வரனும்... இடையில் சுதீரும் எங்கள் இயக்குநரும் நாளைக்கு வேணும்னா வெச்சுக்கலாம்டா என்று சொல்லிப் பார்த்தனர். விடுவதாக இல்லை நான்.... கடையை மூடச் சொல்லி விசில் அடிக்கும் நேரத்திற்கும் புத்தகம் வரவும் சரியாய் இருந்தது.
அறிமுகங்களுக்கு அவகாசமில்லாமல் ச.விசயலட்சமி எல்லோரையும் வரவேற்க ( கொஞ்சம் சொதப்பலுடன். - ஆனாலும் அவரின் பங்களிப்பு முக்கியமானது. ) இயக்குநர் வசந்தபாலன் சுடச் சுட முதல் பிரதிகளை வெளியிட ( மூணு பிரதிகளா இருந்துச்சு அதான். ) சுதீர் வாங்கிக் கொண்டார். பிறகு எனது கதைகள் குறித்தும் உப்பு நாய்கள் குறித்தும் மிகச் சுருக்கமாகவும் இயக்குநர் வசந்தபாலன் பேசி முடித்தார். சுதீர் எனது கதைகளை தொடர்ந்து புத்தகமாகக் கொண்டு வருவதற்காக பெருமைப்படுவதாகவும், என் கதைகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்....
அடுத்ததாக என் முறை. நான் கொஞ்சம் நிறையவே பேச நினைத்திருந்தேன். ஆனாலும் அவகாசமில்லாததால் முக்கியமாக பேச நினைத்ததை மட்டும் பேசி முடித்தாகிவிட்டது.
அதிகபட்சம் பதினைந்து நிமிடங்களுக்குள் முடிந்து போனாலும் மனதிற்கு நிறைவான நிகழ்வு...
வந்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் இன்னொரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்...

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....