மண்ட்டோ , நர்கீஸ் மற்றும் சில பெண்களும் அவர்களைத் துரத்தும் நானும்... “


எனக்குத் தெரிந்த மட்டில் அவன் யாருடைய சிந்தனைகளாலும் எப்பொழுதும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உலகததை விளக்க முயற்சிப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்களென்றே கருதினான். இந்த உலகத்தை ஒருவனால் மற்றவனுக்கு விளக்க முடியாது. ஒருவன் தானாக அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
      - ‘மண்ட்டோவைப்  பற்றி மண்ட்டோவே எழுதியதொரு சொற்சித்திரத்திலிருந்து..’
       பம்பாயின் அழுக்கும் இருளும் நிரம்பியதொரு தெருவிலிருந்து கிளம்பி கொஞ்சம் கதைகளடங்கிய காகிதக் கட்டுகளுடன் பழைய ரயில் பெட்டியொன்றில் பயணிக்கும் மண்ட்டோ உடன் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு செல்கிறார். கதைக்கார்ர்களுக்கு மட்டுமேயான அந்த பிரத்யேக பெட்டியில் எல்லா ஊரிலும் சிலர் ஏறிக்கொள்வதும் அவருடன் மதுவருந்தி சண்டையிட்டு முடியாமல் பாதி வழியில் இறங்கிக் கொள்வதும் வெகு இயல்பாய் நடக்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்படி சிலர் ஏறிக்கொள்வதும் அவர் கதைகளில் வரும் பெண்களின் மீது காதல் கொண்டு பேசப்போய் சண்டை போட்டுக் கொண்டு வருவதும் நடந்து கொண்டேயிருக்க இரண்டாயிரத்து ஒன்றாமாண்டு ஒரு வெயில் காலத்தின் வியாழக்கிழமையில் துரதிர்ஸ்டவசமாய் நானும் ஏறிக்கொள்ள வேண்டியதாகிப் போனது. மொத்த கதைகளடங்கிய தொகுப்பென தேர்ந்தெடுத்த கதைகளடங்கிய ஒரு தொகுப்பை எனக்குத் தந்தது, மற்றவர்களுக்குப் புத்தகம் தருவது இழுக்கு எனும் மாபெரும் கொள்கை கொண்ட தோழர். இரண்டு நாள் அவகாசம் சொல்லி வாங்கிய புத்தகம் என்னோடு சிரம்மின்றி இரவும் பகலும் அலைந்து கொண்டிருந்தது.
      ஒரு இரவும் ஒரு பகலும் தாண்டியதும் நான் வாசித்த முறையில் திருப்தி கொள்ள முடியாமல் இன்னொருமுறை அதனை வாசிக்கலானேன். எனக்குள் அந்த கதைகள் சொல்லிவிடமுடியாததொரு பரவசங்களையும் உத்வேகத்தையும் கிளறிவிட்டிருந்தது. அந்தக் க்தைகள் நிகழும் தெருக்களின் வழியாகவும் ஊர்களின் வழியாகவும் அனாதையாய் சுற்றியலைய மனம் பரபரத்துக் கிடக்க அதையும் மீறி என்னை முழுக்க குருதி வாடை சூழ்ந்துவிட்டதான ஒரு பிரம்மை எழுந்தது. வாசித்திருந்த கதைகளின் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் என்னோடு உரையாடு விருப்பு கொண்டிருப்பதாய் சர்வநிச்சயமாய் நம்பியிருந்தேன். ஏனெனில் மண்ட்டோவின் கதைகளில் வரும் பெண்கள் அதற்கு முன்பு நான் கதைகளின் வழி நேசிக்க நேர்ந்த பெண்கள் அவ்வளவு பேரையும் மறக்கச் செய்துவிட்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக நான் அதுவரையிலும் வெகுதீவிரமாய்க் காதலித்துக் கொண்டிருந்த தஸ்தாவ்ஸ்கியின் நாதன்ஸ்காவையும் கூட ஷகினாவும்,முஜைலும் மறக்கச் செய்துவிட்டிருந்தனர். குறிப்பாக முஜைல், இந்த புத்தகம் வாசித்து முடித்த சில நாட்களுக்குப்பின் சாலையில் நிறைய முஜைல்களைப் பார்க்க முடிந்தது என்னால். துவக்கத்த்ஹில் அதுவொரு பிரம்மையென நினைத்துக் கொண்டிருந்தவனை மண்ட்டோவின் ரயில் நிஜமென நம்பச்செய்தது. சுதந்திரத்தையும் பேரன்பையும் விரும்புகிற ஒருத்தி அறிமுகமானாள் சிவகாசியில். ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் அவளுடனான தோழமையில் ஒவ்வொருமுறையும் முஜைலின் நிறைய சாயல்களைக் கண்டுகொண்டேன்.
      கதைகளைக் குறித்து தமிழ் உத்தம எழுத்தாளர்களின் அபிப்பிராயங்கள் நிறையக்கேட்டு சோர்வும் நம்பிக்கையின்மையும் கொண்டிருந்தவனை மண்ட்டோ மீட்டெடுத்தார். உண்மையில் ஒரேயொரு சிறுகதைக்குப் பின்னால் எழுதுவதைப் பற்றிய எந்தவொரு அக்கறையுமில்லாமல் போனதற்கு தத்துவ வாசிப்பு ஒரு எழுத்தாளனுக்கு அவசியமென தொடர்ந்து வலிய வாசிக்க வைக்கப்படும் துரதிர்ஸ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டதுதான். மண்ட்டோவின் கதைகளனைத்தும் பெண்களைக் குறித்து எழுதப்பட்டவையல்ல, ஆனால் அந்தக் கதைகளின் ஜீவனுள்ள பகுதிகளில் சொற்களில் பெண்கள் தனித்துவமானதொரு பங்கினைச் செய்கின்றனர். குறிப்பாக ஜானகி, முஜைல், திற கதையி ஷகினா, கருப்பு சல்வார் இப்படி அவர்களின் இருப்பென்பது தனிப்பட்டதொரு கதையில் வரும் பாத்திரத்தின் இருப்பாகவோ அல்லது அக்கதை நிகழும் காலகட்டத்தின் எளியதொரு பிரதிபலிப்பாகவோ இல்லை. மாறாக அப்பெண்கள் அக்காலகட்டத்தின் வாழ்முறை அல்லது கலாச்சாரத்தின் மிக முக்கியமான எதிர்வினைகளாயிருக்கின்றனர். பெண்களின் உடல் ஒரு கலாச்சார எதிர்வினையாய் இக்கதைகளில் மாறியிருப்பது அசாத்தியமான ஒன்று. ஷகினா தேடப்படுகிறாள் என்பதுவரை அக்கதை பிரிவினையின் பெருந்துயரத்திற்கான காட்சிகள் அவ்வளவையும் பேசியபடிச் செல்கிறது. ஆகக்கடைசியாய் அவளின் கால்கள் வெறும் அசைவிற்கு மட்டும் கட்டுப்பட்டு விலகிக்கொள்கிற இடம் அவளுடலை வன்மத்தின் எதிர்வினையாய் அவள் கொள்ளும் செயலாய் உணர்த்துகிறது. ஷகினாவிடமிருந்து நீங்களோ நானோ அந்த ஒரு கனம் பெரும் அச்சுறுத்தலுடன் விலகி ஓடமுயற்சிக்கிறோம்.  இந்தக் கதை வாசித்து முடித்தப்பின்பாக இரண்டு மணிநேரங்கள் புத்தகத்தினை மீண்டும் என்னால் நெருங்க முடியவில்லை. தெருவெங்கும் உடைகளைக் கிழித்துக் கொண்டு ஓடலாமென்கிற அளவிற்கு உடலின்மீது பெரும் வெறுப்பும் அருவருப்பும் எழுந்தடங்கியது.
      முஜைல் இவளிடமிருந்து சற்றே வேறுபட்டவள். அல்லது ஆளுமையில் ஒன்றானாலும் இருப்பில் அலைக்கழிப்பில் வேறு மாதிரியாய் வந்துசேர்ந்தவள். வழிபாடு கலாச்சாரம் உறவுமுறைகள் இவற்றில் எதிலும் தன்னைப் புகுத்திக் கொள்ளாதவள் எல்லாவற்றிற்கும் மேலாய் தன் தோழனின் மீது பேரன்பு கொண்டவளாயிருக்கிறாள். அவளின் அன்பை எதிர்கொள்வதிலேயே அவ்ளின் தோழனுக்கு அச்சமிருக்கிறது. சீக்கியர்களும் இஸ்லாமியர்களுமாய் மாறி மாறி வன்கொலைகளுக்கு பலியாகிக்கொண்டிருந்த நேரம். அந்த ஊரிலிருந்து எப்பொழுதும் சிலர் வெளியேறி வேறு ஊர்களுக்கு ஓடுவதும் வேறுசிலர் இங்கு வந்து சேர்வதுமாயிருக்கிறார்கள். ஆகக்கடைசியாய் தன் தோழனின் காதலனையும்  அவனையும் காப்பாற்ற வேண்டி வன்கொலைக்கு நேர்கிற கனத்தில் ஒரு ஜீஸஸ் க்ரைஸ்ட்டாய் நம் மனப்பிம்பத்தில் விழுந்தாலும், த நிர்வாண உடலில் அவன் டர்பனை அவிழ்த்துப்போட்டு மறைக்கும்போது “இதை எடுத்துப்போ..உன்னுடைய இந்த மதத்தை….” என தன்னுடலை எல்லா அடையாளங்களிலிருந்தும் துண்டித்துக்கொள்கிறாள். ராஜாங்கத்தின் முடிவு கதையில் தொலைபேசி வழியாய் வரும் பெண்ணுக்கும் என்னுடைய மரணத்திற்கான காத்திருப்பில் வரும் பெண்ணுக்கும் சத்தியமாய் நிறையத் தொடர்புகள் இருக்கவே செய்கின்றன.
      அடிப்படையில் தனிமனித சுதந்திரம் குறித்து பேசுகிற கதைகளாகவே மண்ட்டோவின் கதைகளை உணரமுடிகிறது. ஒரு தனிமனிதனின் இருப்பு பாதுகாப்பற்றதாய் எப்பொழுதுமிருப்பதைத்தான் கடமை,காலித்,முற்போக்கு கல்லரைகள், ஷரிஃபான், கடவுள் மீது சத்தியமாக என ஒவ்வொரு கதைகளும் சொல்லிச் செல்கின்றன. இந்தக் கதைகள் பேசிய இடர்களை அடிப்படையில் மண்ட்டோவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, மண்ட்டோவின் பெரும்பாலான கதைகளும் பாலியல் தன்மை கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒழுக்கத்தை மிக உறுதியோடு பின்பற்றுவர்களால் நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தது. அவரின் தண்டா கோஷ் சிறுகதை ஆபாசமானது என்று தொடரப்பட்ட வழக்கில் லாகூர் உயர்நீதிமன்றம்
”ஓர் எழுத்தாளனின் குறிக்கோள் என்னவென்பதோ, அது நல்லதா கெட்டதா எனபது பற்றியோ சட்டம் அக்கறை கொள்ள முடியாது. சட்டம் ஒரு வாசகனின் மனநிலை எவ்வழியில் நடத்திச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றி மட்டுமே கவலைப்பட ,முடியும். ஓர்  எழுத்து ஆபாசமான உணர்வுகளை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் என்றால் அந்த எழுத்தை ஆபாசமானது எனக் கருதுவதற்கும் அதற்காக தண்டனை கொடுப்பதற்கும் தகுதி உடையதாகிறது. “
இந்த தீர்ப்பு குறித்து ‘pas manzar’ ல் மண்ட்டோ “ தங்களை எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் பிரகடனப்படுத்திக் கொள்கிறவர்கள் காலம் கடப்பதற்கு முன் புத்தியைப் பெற வேண்டும். கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கு வேறு ஏதேனும் தொழிலுக்கு மாறிக்கொள்ள வேண்டும்…” இப்படி ஒவ்வொருமுறை தன் மீது சுமத்தப்படும் அவதூறுகள் எதையும் பொருட்படுத்தாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். எதையெல்லாம் ஆபாசமென்றும், அருவருப்பென்றும் மற்றவர்கள் ஒதுங்கியிருந்தனரோ உண்மையில் அதன் அழகியலை மட்டுமே மட்டுமே எழுதியிருக்கிறார்.
      மண்ட்டோவின் கதைகளைப் போலவே அவரின் சொற்சித்திரங்களும், ஹிப்டுலாக்களும் மிகச் சிறந்த வாசிப்பனுபவம் கொண்டவை. ‘மிருகத்தனன், ஜவ்வுமிட்டாய், துணிச்சலான செயல், பிழை, கடவுள் உயர்ந்தவன்’ என சொற்சித்திரங்கள் ஒவ்வொன்றிலும் அவரின் பிரமாதமான எள்ளல் வெளிப்பட்டிருக்கும். உண்மையில் அவையும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகள்தான். மோசமான வியாபாரம் என்னும் சொற்சித்திரத்தில் இரண்டு நண்பர்கள் ஒரு விபச்சார விடுதிக்குப் போகிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கும் பெண் வேறு மதத்தைச் சேர்ந்தவள் என பொய் சொல்லப்பட்டு இவர்களிடம் அனுப்பப்படுகிறாள். எல்லாம் முடிந்த இரண்டுபேரில் ஒருவன் அவளை விசாரிக்கையில் உண்மை தெரிந்து “தேவடியாப் பசங்க, நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம்முடைய மதத்தைச் சேர்ந்த பெண்ணையே நமக்கு விற்றிருக்கிறார்கள். வா, நாம் இந்தப் பெண்ணைத் திருப்பி விட்டுவிடுவோம்…” இப்படி கடக்கவே முடியாத அடையாளங்களின் மீதான மண்ட்டோவின் விமர்சனங்கள் கதைகள் என்பதையும் மீறி பெருந் தாக்கமொன்றை நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றன.
      ’பாரிக் அலி , நூர்ஜஹான், அசோக் குமார், நர்கிஸ்’ இவர்களைப் பற்றின நினைவோடைகளில் என்னை அதிகம் கவர்ந்திருந்தது நர்கிஸைப் பற்றின நினைவோடைதான். அதற்கு முன்பு நர்கிஸின் படமெதையும் நான் பார்த்திருக்கவில்லை. நர்கிஸின் நடிப்பு குறித்தும், பாடும்போது அவளின் குரலின் தன்மை குறித்தும் மேலதிகமான நக்கல்களோடு சொல்கிறவர் அதையும் தாண்டி நர்கிஸின் தனிப்பட்ட வாழ்வில் அவள் தோழமைக்கு தந்திருக்கும் முக்கியத்துவத்தினைச் சொல்கிறார். நர்கிஸிற்கு நடிக்கத் தெரியாது என்கிற நம்பிக்கையோடுதான் ஒருமுறை மதர் இந்தியா படம் பார்க்க நேர்ந்தது. என்னால் சிறிதளவான் விருப்புடன் கூட அந்தப் படம் பார்க்கச் செல்லமுடியவில்லை. மிகுந்த பிரயத்தனத்திற்குப்பின் அப்படம் முழுமையாக பார்த்து முடித்த பொழுது மனம் முழுக்க நர்கிஸ் மட்டுமே நிறைந்ந்திருப்பது தெரிந்தது. இந்த மனிதன் என்னை ஏமாற்றியிருக்கிறான் என பெருங்கோபம் கொண்டவனாய் அன்றிரவு முதல் முறையாய் மதுவருந்தச் சென்றேன். 2004 ஆகஸ்ட். அந்த இரவு முழுக்க மனதிலிருந்து ஷகினாவையும், முஜைலையும் தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் நாதன்ஸ்காவையே இருத்தி வைத்துக்கொள்ளப் போவதாக சபதமெல்லாம் எடுத்துச் சென்றவன் அடுத்த நாள் மண்ட்டோ சொல்லியிருந்த நர்கிஸின் ஒரு பாதியையும் நான் பார்த்த நர்கிஸின் ஒரு பாதியையும் சேர்த்து இன்னொரு நர்கிஸை நினைத்துக் கொள்ள முடிகிற சமாதானத்திற்கு வந்துவிட்டேன். இப்படி மண்ட்டோவின் கதைகளோடும் நினைவோடைகளோடும் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிற வாசிப்பு நெருக்கந்தான் தொடர்ந்து எழுதுவதற்கான சாத்தியங்களையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
“ உன்னை எப்போதும் நினைத்ததில்லை அவன். ஆனால் சாத்தானை எப்போதும் பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறான். முன்பு ஒருமுறை உன் அதிகாரத்திற்கு கட்டுப்பட மறுத்த அதே தேவதூதன் தான் அவன்.”
      - மண்ட்டோவின் பிரார்த்தனை.
            

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.