மச்சம் தொகுப்பிற்கான தூரன்குணாவின் அணிந்துரை.


இந்தக் கதைகளோடு சில வார்த்தைகள்

மனிதர்கள் கரிமத்தன்மை மிக்கவர்கள்.ஆனால் அவர்களிலிருந்து உருவாகிவரும் கதைகள் வாழ்வின் எண்ணற்ற கோடி பரிமாங்களின் காப்பகமாகவும், இருத்தலின் புதிர்மையை விடுவிக்கும்  என்றைக்குமான ஆற்றல் கொண்ட கருவிகளாகவும் இருக்கின்றன. கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய இன்னொரு உலகமென்று ஒரான் பாமுக் சொல்கிறார்.சரியாக வாசிக்க அறிந்த ஒரு மனதுக்கு கதைகளும் இலக்கியத்தின் ஏனைய வடிவங்களும் தனது வாழ்க்கையை ஒரு இறுதியின் முன்வைத்துப் பார்க்கும் பக்குவத்தை அளித்துவிடுகின்றன.கதைகளில் துலங்கியெழும் இன்னொரு மனதின் அனுபவவெளியில் நுழையும்போது வெவ்வேறு வகையான வாழ்வின் நிறங்கள்  நம்மீது எதிரொளிக்கின்றன. கதைகளின் வழி நாம் ஆசிர்வதிக்கப்படுகிறோம்.
தமிழ்ச்சுழலில் குறிப்பிட்ட சில முன்னோடிகளைத் தவிர்த்து ஒற்றைத்தன்மையான நோக்கில் மட்டும் எழுதப்பட்டுக்கொண்டிருந்த விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையே லஷ்மி சரவணகுமாரின் கதையுலகில் பிரதானமாக இருக்கிறது.புதியகால இளைஞரான அவர்  நகரங்களிலும் கிராமங்களிலும்  நிறைந்திருக்கும் அவர்களின் வாழ்க்கையை, அதன் அகச்சிக்கல்களை புனைவும் யதார்த்தமும் இணைந்த சுருள்வடிவ கதைசொல்லல் முறையில் சொல்கிறார். பெரும்பாலும் இறுக்கமான வடிவங்களை கொண்டிருந்த அவருடைய முந்தைய தொகுப்புகளின் கதைகளோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் சிலவற்றில் இளகிய தன்மையும் அங்கதமும் கூடி வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
தொன்மத்தின் கூறுகள் நரம்புகளாக ஓடும் சுப்பு மற்றும் யானை ஆகிய கதைகளை ஒரு நேர்கோட்டில் வைத்து வாசிக்கலாம்.சுப்பு மற்றும் வீரசிங்கம் இருவரும் காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கவேண்டிய ஆனால் அறிந்தே மனிதர்களால் சிதைக்கப்பட்டவற்றை நமக்கு நினைவூட்டும் குறியீடுகளாக மாறுகிறார்கள்.சுப்புவில் பின்னப்பட்டிருக்கும் புதிர்த்தன்மை ஒன்றிற்கு மேற்பட்ட வாசிப்பைக் கொடுக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கையில் யானை கதையில் இத்தன்மையானது நமக்கு ஒரு தெளிவான சித்திரத்தை அளிக்கிறது. செவக்காட்டு புழுதியப்பிய தெற்கத்தி சிறுக்கிமவளான சுப்பு சனங்களின் கதையை கூத்தாடி தானியங்களென்று விதைப்பவளாய் மாறுகையில் வீரசிங்கம் இயற்கைக்குத் திரும்பும் வனராஜாவாக மாறுகிறார். நமது நிலம்,இயற்கை,கலை இவற்றை மீட்டெடுக்க வேண்டியதின் தேவையை இக்கதைகள் உணர்த்தி நிற்கின்றன.
இதேபோல் முடிவற்ற பிரார்த்தனைகள் மற்றும் நீலத்திரை ஆகிய கதைகளை சில ஒப்புமைகளோடு வாசிக்கலாம். யானை மற்றும் சுப்பு கதைகளைப் போலல்லாமல் புனைவம்சங்கள் ஏதுமற்று நேரிடையான கதைசொல்லல் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதைகள் இரண்டுமே தாய்க்கும் மகனுக்குமான உறவுச்சிக்கல்களைப்  நுட்பமாக அணுக முயல்பவை.இந்த நுட்பமானது முடிவற்ற பிரார்த்தனைகளில் மானுடத்தின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்றை விளக்கும் கலையாக மாறுகையில் நீலத்திரை சிறுகதை சற்றே நாடகீயத்தன்மை கொண்டதாக தோற்றம்பெறுகிறது.உன்னதங்களும் புனிதங்களும் மட்டுமல்ல உலகில் நிகழும் அல்லது நிகழ்வதற்கான சாத்தியங்களைக் கொண்ட அல்லது நிகழ்வதற்கான சாத்தியமேயில்லாத என எல்லாமே அது எந்தளவிற்கு கலையாக மாறுகிறது என்ற தகுதியில் இலக்கியத்திற்குள் இடம்பெறத் தகுதியானவைதான்.பெர்ணாண்டோ பெர்ட்லுச்சியின் தி டிரீமர்ஸ் திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்ல்லாம்.நீலத்திரை கதைக்கு இரண்டாவது வடிவமொன்றை லஷ்மி சரவணகுமார் முயன்றிருக்கலாமென்றே நினைக்கிறேன்.
நள்ளிரவில் கடவுள் பஞ்சம் பிழைக்க சென்று கொண்டிருக்கிறார் மற்றும் திருடன் கதைகள் இன்னொரு வரிசை.வாசிப்பு சுவாரசியமும் அங்கதமும் கூடியிருக்கும் இக்கதைகள் லஷ்மி சரவணகுமாரை versatile எழுத்தாளராக முன்வைக்கின்றன.அறுபதாண்டுகளுக்கு முன்னால் புதுமைப்பித்தன் சென்னைப்பட்டினத்திற்குள் கடவுளை இறக்கிவிட்ட கதை செவ்வியல் பிரதியாக மாறிவிட்ட நிலையில் இன்றைய கடவுள் பெண்களை நோக்குகிறார்,மனைவியைத் தொலைத்துவிட்டு தேடித் தனியாக அலைகிறார்.காவலர்களிடம் உதைபடுகிறார்..லஞ்சம் கொடுக்கிறார்..ஊக்க இலை புகைத்துவிட்டு மூத்திரசந்தில் விழுந்துகிடக்கிறார்..கடைசியில் திருடனாகவும் மாறுகிறார்.தேய்வழக்கு வடிவமாக இருந்தாலும் இக்கதையில் வெளிப்பட்டிருக்கும் அராஜகத்தன்மை கவனிக்கப்பட வேண்டியது.திருடன் கதையின் நாயகனான சொரிமுத்துவின் சாகசங்கள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன.
ஒரு குறும்படத்தைப் போல விரியும் அடிமாடுகள் கதையின் காட்சிகள் மிக வலுவானவை.எவ்விதமான மிகைத்தன்மையுமற்று மாட்டெலும்புகளின் வீச்சம் மிகுந்த வடிவேலுவைப் போன்ற எளிய மக்களின் வாழ்க்கையை அதன் கையறுநிலையை மீட்சியற்ற தன்மையை நேர்த்தியாக பதிவுசெய்திருக்கிறது இக்கதை.எளிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய சமகால நிகழ்வுகளின் பிண்ணனியில் சொல்லப்பட்டிருக்கும் ஜோக்கர் கதை குழந்தையின் அக உலகத்தை மிக அழகாக ஒரு சிறிய கீற்றாக கோடிட்டுக் காட்டுகிறது.தொழிலிருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்ட ஜோக்கர் மணி சர்க்கஸ் உலகத்தைத் தாண்டிய வெளியுலகத்தை முதன்முறையாக எதிர்கொள்ளும்போது அடையும் பதற்றங்களுக்கான மீட்சியை தன் குழந்தையிடம் தேடி செய்யும் வித்தைகளெல்லாம் அக்குழந்தையிடம் தோற்றுப்போகின்றன.அவனிடம் சிரிக்கவே மறுக்கும் அக்குழந்தை தன் பள்ளியில் குழந்தைகளுக்காக வித்தை செய்யும் தகப்பன் தவறிவிழும்போது சிரித்துவிடுகிறாள்.அவளுக்கு அக்கணத்தில் வேஷங்களற்ற இயல்பான தன் தந்தை திரும்பக் கிடைத்துவிடுகிறான்.
பெருங்கனவுகளின் உலகம் கதையில் கனவிற்குள் நிகழும் ஊழிக்காலத்தின் பின்னாலான காட்சிகள் விவரிக்கப்படுகின்றன.கனவும் புனைவும் வேறல்ல. மேலும் இரண்டுமே நமக்கு நேரிடையான அர்த்தங்களைக் உடனடியாக கொடுப்பதில்லை.நம்முடைய தேவையெல்லாம் கனவுகளை ருசிப்பதின் பொருட்டு உறங்குவதற்காக சபிக்கப்படுவதே.
தொடர்ச்சியாகவும் தனித்துவமாகவும் எழுதும் லஷ்மி சரவணகுமாரின் இந்தக்கதைகள் அவர் உற்றுநோக்கவேண்டிய உலகத்திற்கான பயணத்தின் சித்திரங்களாக இருக்கின்றன.தன் உலகம் எதுவென்று அவர் தெளிவாக அறிந்திருப்பது இக்கதைகளுக்கு இன்னும் அடர்த்தியூட்டுகின்றது.
லஷ்மி சரவணகுமாருக்கு வாழ்த்துக்கள்.
பெங்களூரூ                                                                 தூரன் குணா
டிசம்பர் 02,2012

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.