மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்


           

“ஒரு சிறந்த நாவல் மிகவும் ஞானமிக்கதாக இருக்கிறது, சொல்லப்போனால், அதனைப் படைத்த நாவலாசிரியனை விடவும் அது கொஞ்சம் கூடுதல் புத்திசாலியாக இருக்கிறது. இந்த ஞானத்திலிருந்துதான் நம் வாழ்வுக்கு அர்த்தமூட்டும் அரிய கண்டுபிடிப்புகள் புலப்படுகின்றன. நமக்கான திசைகளும் வெளிகளும் புலப்படுகின்றன. கனவுகளின்றி பரிதவிக்கும் நம் காலத்துக்கான கனவுகளைப் பரிசளிக்கின்றன.”

-      நாவல் கலை நூலில் சி.மோகன். 




 

            இலக்கிய வடிவங்களில் நாவல் ஏன் மகத்தான வடிவமாய்க் கொண்டாடப்படுகிறதென்றால், அது வாழ்வைப் பிரதிபலிக்கிறது. வாழ்வின் மீதான பார்வைகளையோ விசாரணைகளையோ வெறுமனே அள்ளித் தெளிக்காமல் ஒரு எழுத்தாளன் முழுமையாய் தனது எண்ணவோட்டங்களின் வழியாய்த் தேடிச் சென்று வாழ்வின் புதிரான சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண விழைகிறான். எல்லாவற்றைக் குறித்தும் அபிப்பிராயம்  எழுதுவதும் அனுபவத்தின் வழியாய் நாவல் எழுதுவதும் ஒன்றல்ல. இரண்டுவிதமான அனுபவங்கள் ஒரு நாவலசாரியனுக்கு முக்கியமானதாகப்படுகிறது, ஒன்று வாழ்வனுபவம். மற்றொன்று நீண்ட வாசிப்பு மற்றும் தேடலின் வழியாய் கிடைக்கப்பெறும் அனுபவம். நமக்கிருக்கும் ஒற்றை வாழ்வைக் கொண்டு மனிதர்களின் அக புற பிரச்சனைகளை  புரிந்துகொண்டு முடியாது. நிலம், அரசியல் சூழலென ஏராளமான காரணிகள் மனித மனங்களை உருவாக்குவதில் பங்குவகுக்கின்றன.  ஒருவன் எவ்வாறு வன்முறைச் சமபவங்களைச் செய்கிறான் என்பதை நுட்பமாக எழுதுவதை விடவும் அவனை அவ்வாறுச் செய்யத் தூண்டிய காரணிகள் எவை எனத் தேடிச் செல்வதே ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அறம். எழுத்துக்காரர்கள் சுவாரஸ்யத்திற்காக வன்முறையை எழுதும்போது  அந்த வன்முறை உருவாகக் காரணமான சமூககாரணிகளை பல சமயங்களில் அணுகாமலேயே போய்விடுகிறார்கள்.   

            இந்த நாவல் இரண்டு தலைமுறைக் கதைகளைப் பேசுவதோடு இரண்டு வெவ்வேறு நிலங்களின் வாழ்க்கை மற்றும் சமூகப் பிண்ணனியையும் விரிவாகப் பேசுகிறது. நிலங்களின் வழியாய் கதைகளை அணுகுவதை எப்போதும் நான் முக்கியமானதாய்ப் பார்ப்பேன். ஒவ்வொரு நில மனிதர்களுக்கும் பிரத்யேகமான குணங்களுண்டு. நெய்தல் நிலத்து மனிதர்கள் கடந்த சில தசாப்தங்களாக எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் ஏராளம். சமகால பிரச்சனைகளை எழுதுவது பத்திரிக்கை செய்திகளை அப்படியே படியெடுப்பதல்ல, அதன் வரலாற்றுக் காரணிகளை ஆராய்ந்து மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொணர வேண்டும். கதை ஏன் சுவாரஸ்யமானதென்றால் அதை உண்மை என்று நம்பும் வரையில் உண்மை, வெறுமனே புனைவென எடுத்துக்கொண்டால் புனைவு. உண்மைகளை விடவும் புனைவுகள் தான் நமக்கு எப்போதும் நெருக்கமாயிருக்கின்றன. வாழ்வில் நாம் தவறவிடும் தருணங்களை புனைவில் காணும்போது பிழைகளைத் திருத்திக்கொண்ட மகிழ்ச்சியடைகிறோம்.

அலைந்து திரிகிறவனுக்கு சொல்வதற்கு ஏராளமாய் கதைகளுண்டு.  எல்லா நிலங்களிலும் எல்லா மனிதரிலும் அவன் தனக்கான கதைகளைக் கண்டடைவதற்கு சிரமம் கொள்வதில்லை. இந்த நாவலை வாசிக்கையில் கதை சொல்லியின் அலைச்சலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. துல்லியமான நிலவியல் காட்சிகள், உரையாடல்கள், காலமற்றத்தை பிரதிபலிக்கும் தரவுகளென ஒரு நல்ல நாவலுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொண்டிருக்கிறது. 



பர்மாவிலிருந்து யுத்தம் காரணமாய் சொந்த ஊருக்குத் திரும்பும் இரண்டு சகோதரர்களிடமிருந்து ஒரு புள்ளியிலும், அம்பாசமுத்திரத்திற்கு அருகில் சின்னஞ்சிறிய கிராமமொன்றில் சாபத்தை சுமக்கும் குடும்பத்திலிருந்து தப்பிவரும் இசக்கியிடமிருந்து இன்னொரு புள்ளியிலும் கிளைத்தெழும் இந்தக் கதையை இணைப்பது இருதயராஜ்தான். பூமணியின் வெக்கையில் வரும் செலம்பரத்திற்கும் வேல்முருகனின் இந்த நாவலில் வரும் இருதயராஜிற்கும் சில ஒற்றுமைகளை நாம் அவதானிக்க முடிகிறது.   வெக்கை கோவக்கார தந்தைக்கும் அவரைப்போலவே ரெளத்திர குணம் கொண்ட மகனுக்குமிருக்கும் தலைமுறை இடைவெளியைப் புரிந்து கொள்ள வைப்பதற்கான பயணமாய் அமைகிறது. நிலம், சாதி என்ற பிரதானமான இரண்டு காரணிகள் அங்கு பகைக்கும் வன்முறைக்கும் காரணிகளாய் இருக்கின்றன. செலம்பரத்தின் அண்ணன் கொல்லப்படுவதால் ஆத்திரமடையும் செலம்பரம் எதிரியைக் கையெறிகுண்டு எறிந்து கொல்கிறான். காவல்துறையிடமிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி வறண்ட காட்டிற்குள் அழைத்துச் செல்லும் அவன் தந்தை அந்த தலைமறைவு நாட்களில் அவனுக்கு வாழ்வின் நிதர்சனங்களைப் புரியவைக்கிறார்.  இந்த மையச்சரடு மன்னார் பொழுதுகளிலும் சின்னதாய் வெளிப்பட்டாலும் முன்பின்னாய் நீளும் கதைகள் அது இழுத்துச் செல்லும் பரந்த தளம் வெக்கையில் இல்லாதது.  செலம்பரத்தைப் போல் இருதயா எடுத்ததும் ஆத்திரக்காரனாகிவிடவில்லை. அப்பாவும் அண்ணனும் கொலை செய்யப்பட்டபிறகு தன்னைக் காத்துக்கொள்ள தப்பிக்கிறான். எந்த யுத்தத்தையும் எதிர்கொள்ள ஒருவனுக்கு தற்காப்புதான் முக்கியம். இருதயராஜ் பண்படுவது நஞ்சுண்டானை சந்தித்த பிறகுதான்.  சொல்லப்போனால் இந்த நாவலை வெக்கையின் முடிவிலிருந்து துவங்கப்பட்டதாக நாம் பார்க்கமுடியும். தற்செயலாக நடந்ததாய் நினைக்கும் ஒவ்வொரு வன்முறைக்குப் பின்னாலும் ஒரு வரலாறுண்டு. மனிதன் நினைவுகளால் உருவானவனென்றால் அந்த நினைவுகளில் அதிகமும் தேங்கிக் கிடப்பது வெறுப்பும் பகையும்தான். பகையைப்போல் அழிவற்ற உணர்ச்சி வேறில்லை.

            உலகம் முழுவதிலுமுள்ள கடற்கரை நகரங்களுக்கென்று சில பிரத்யேகத் தன்மைகளுண்டு. கடற்கரை நகரங்கள் மிக வேகமாய் வளர்ச்சி பெற்றவையாய் இருக்கும், அந்த வளர்ச்சியின் இன்னொரு முகம் வன்முறைகளும் குற்றங்களுமாய் நிரம்பியிருக்கும். குற்றங்கள் இல்லாமல் வளர்ச்சிகள் இல்லையென்பதுதான் யதார்த்தம்.  வெவ்வேறு மொழிகளை பேசக்கூடிய, கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் இப்படி வளரும் நகரத்திற்கு வந்து சேரும்போது ஒரு காலகட்டத்தின் பிறகு அங்கு புதிய வாழ்க்கைமுறையும் கலாச்சாரமும் உருவாகிறது.  போர்ச்சுக்கீசியர்கள் அராபியர்கள் ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்கள் ஃபிரஞ்சுக்காரர்களென நமது கடற்கரை நகரங்களில் ஏராளமான கலப்புண்டு. வழிபாட்டிலும் வாழ்க்கை முறையிலும் இந்தக் கலப்பினக் கூறுகள் முக்கியமானதொரு பங்கை வகிக்கின்றன.  முகுந்தனின் மய்யழிக் கரையோரம் நாவலில் ஃபிரஞ்ச்சுக்காரர்கள் இறுதியாய் மாகேயை விட்டுக் கிழம்பும்போது  பூர்வகுடிக் கிழவிகள் அவர்களும்  நம்மோடே வாழ்ந்தவர்கள் தானே, அவர்கள் ஏன் நாட்டை விட்டுப் போகவேண்டுமென ஏங்குவதாக இருக்கும். மாகேயிலும் பாண்டிச்சேரியிலும் காரைக்காலிலும் நம்மால் இப்போதும் ஃபிரஞ்சு வாழ்வின் மிச்சங்களைப் பார்க்க முடிகிறது.  இப்படி கடந்த சில நூறாண்டுகளில் அபரிமித வளர்ச்சி கண்ட நகரங்களில் மும்பை, சென்னையைப் போலவே தூத்துக்குடியும் முக்கியமானது. முக்கியமாக துறைமுகம் வந்தபிறகான தூத்துக்குடியின் வளர்ச்சியென்பது  தென் தமிழகத்தில் வேறு எந்த நகரங்களுக்கும் இல்லாத ஒரு முக்கியத்துவத்தை அந்நகருக்குக் கொடுக்கிறது.  ஏராளமான தொழில்களுக்கான வாய்ப்புகளை  மட்டும் உருவாக்காமல்   இதுவரையில்லாத வன்முறைகளுக்கும் துவக்கமாய் மாறிப்போயிருக்கிறது.

            கிழக்குக் கடற்கரை நகரங்களின் நாகரீகங்களுக்கான வயதை பூம்புகாரிலிருந்து துவங்கினாலும் நமக்குப் பலநூறு வருட பாரம்பர்யமும் மிக உயர்ந்த கலாச்சாரப் பின்னணியும் இருப்பதை அறியமுடியும். தமிழர்கள் ஆதிக் கடலோடிகள் என்பதற்கான சான்றுகளை நாம் இன்றளவும் இந்தக் கடற்கரை நகரங்களிலிருந்து  தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் நாகப்பட்டினத்தின் துறைமுகத்திலிருந்து மலேயாவிற்கும் ஜாவாவிற்கும் ரங்கூனுக்கும் கூட்டம் கூட்டமாய்ச் சென்ற செட்டிமார்களும் பிற தமிழர்களும் தென்னாசியா முழுக்க தமிழர்களின் கலாச்சாரம் வேரூன்ற காரணமாயிருந்துள்ளார்கள். பிழைப்பிற்காக போனவர்களில் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி வளர்ந்தவர்களும் உண்டு.  ரங்கூன், மலேயா, இலங்கை போன்ற நாடுகளின் தோட்டங்களுக்கு கூலியாட்களை அழைத்துப்போன கங்கானிகள் அப்படி ரத்தம் குடித்து வளர்ந்தவர்கள்தான். இன்றைக்குத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கிளைபரப்பியிருக்கும் மிகப்பெரிய ஒரு ஆடை நிறுவனத்தின் முன்னோர்கள் இலங்கைக்கு கூலியாட்களைக் கொத்தடிமைகளாய் அழைத்துப்போனவர்கள் என்பது மறைக்கப்பட்ட வரலாறு. இந்த நாவலில் நஞ்சுண்டானின் அப்பாவும் பெரியப்பாவும் ரங்கூனில் கங்காணிகளாய் இருக்கிறார்கள். யுத்தம் காரணமாக நாடு திரும்பும் அவர்களின் வாழ்வு ஏற்றமும் இறக்கமுமாய்த்தான் நகர்கிறது.  கங்கானியாய்ச் செய்த பாவங்களின் சாபமாகக் கூட அந்தக் குடும்பத்தின் நசிவை நாம் பார்க்க முடியும். நஞ்சுண்டானின் வாழ்விலும் அந்த சாபமே பிரதிபலிக்கிறது. இன்னொரு புறம் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் யட்சியின் சாபம் பெற்று நசியும் இசக்கியின் குடும்பம் நஞ்சுண்டானின் குடும்பத்தைப் போலவே ஏற்ற இரக்கங்களை எதிர்கொண்டு சுவடில்லாமல் ஒடுங்குகிறது. சாபம்  பெற்ற இரண்டு குடும்பங்களின் கதையாக ஒடுங்கிப் போகாமல் இந்தக் கதை விஸ்தாரம் பெறுவது கதைகள் நிகழும் காலத்தின் சமூக மாற்றங்களையும் கலாச்சார முரண்களையும் அழுத்தமாக பேசுவதால்தான்.  

             இந்த நாவலின் ஆதாரம் இசக்கியும், நஞ்சுண்டானும் தான்.  இவர்கள் இரண்டு பேரும் செழுமையாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களாய் உயர்ந்து நிற்கிறார்கள்.  நஞ்சுண்டானுக்கு இருக்கும் அரசியல் புரிதல் இசக்கியிடம் இல்லாதபோதும் அவன் மனிதர்களை அவர்களின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளக்கூடியவர்களாய் இருக்கிறான். இசக்கியின் எழுச்சியை இந்த நாவலில் மிகச் சிறப்பாய் எழுதப்பட்ட பகுதிகளாய்க் குறிப்பிட முடியும். திருநெல்வேலியின் பழைய விடுதியொன்றில் ரூம் பாயாக இருக்கும் சாதாரண மனிதனான இசக்கியை சூழல் எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறது. ஓரிடத்தில் சுவடுகளே இல்லாமல் முடிந்துபோகவிருந்த அவனது வாழ்வு நஞ்சுண்டானை சந்திப்பதன் மூலமாய் வேறு தளத்திற்கு நகர்கிறது.   இசக்கியின் குற்றப்பின்னணி என்பது தனிமனிதத் தேர்வாகவும், நஞ்சுண்டானின் குற்றப் பின்னணி அரசியல் தேர்வாகவும் இருக்கிறது. நஞ்சுண்டானின் கதை தனித்து எழுதப்பட்டிருந்தால் முழுமையான தமிழ் தேசிய அரசியலைப் பேசக்கூடிய முக்கியமானதொரு பிரதியாக பரிணமித்திருக்கக் கூடும். வேல்முருகன் அதனை தவறவிட்டுவிட்டதாகக் கூட இப்போது தோன்றுகிறது. தமிழ் தேசிய இயக்கங்களைக் குறித்து எழுதுவதே பாசிசம் என்கிற பிம்பத்தை இங்கிருக்கும் திராவிட இலக்கியவாதிகள் உருவாக்கிவிட்டார்கள். தமிழ் தேசிய அரசியலுக்காக ரத்தம் சிந்தியவர்களை கருணையே இல்லாமல் திராவிட அரசியல் இருட்டடிப்பு செய்திருப்பதுதான் நிதர்சனம். இன்றளவும் அவர்கள் சமூக விரோதிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் யாருக்காக போராடினார்களோ அவர்களாலேயே புறக்கணிக்கப்படவும் செய்திருக்கிறார்கள். திராவிட, இடதுசாரி இயக்கப் போராட்ட வரலாறுகள் எழுதப்பட்ட அளவிற்கு தமிழ் தேசிய அரசியலின் வரலாறு இங்கு எழுதப்படவில்லை என்கிற குறையுண்டு.

            நீண்ட வாழ்வை நாவலாக எழுதும்போது சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்வது எத்தனை முக்கியமோ அதைவிடவும் முக்கியமானது கதாப்பாத்திரங்களின் மனவெளிக்குள் ஒரு எழுத்தாளன் ஆழமாய்ப் பயணித்து அவர்கள் அகவுலகையும் எழுதுவது. இந்த நாவலில் அதுவொரு முக்கியமான குறையாக இருக்கிறது.  சம்பவங்களின் முக்கியத்துவம் காரணமாக கதாப்பாத்திரங்கள் வலுவானவர்களாய் வெளிப்படுகிறார்களே ஒழிய, அவர்களின் ஆழ்மனம் வெளிப்பட்டிருக்கவில்லை. பூமணியின் வெக்கை சிவசாமி, செலம்பரம் இவர்களின் அகவுலகை அழுத்தமாய் பிரதிபலிப்பதால்தான் தனித்துவமான நாவலாக பரிணமிக்கிறது.  முன்பின்னாக கதை சொல்லப்பட்ட விதத்தில் துவக்கம் முதல் இறுதிவரை ஒரு பரபரப்பு இருக்கிறது. இதுவே ஒருவகையில் பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது. கதையில் ஆழமாய் எழுதப்பட்டிருக்க வேண்டிய சில இடங்களை அவசரமாய்க் கடந்து போயிருக்கிறார்.  அதிலும் இசக்கி – ஜோஸ்லின் இருவருக்குமான உறவிலிருக்கும் அழகை புரிதலை எழுதாமல் அப்படியே அந்தப் பகுதியிலிருந்து விலகிச் சென்றது ஒரு ஏமாற்றத்தையே தந்தது. இந்த நாவல் முழுக்க முழுக்க ஆண்களின் மனங்களை மட்டுமே பிரதிபலிப்பதுதான் இதன் மிகப்பெரிய பலவீனம். ஏராளமான பெண்கள் கதையில் வருகிறார்கள், ஆனால் அவர்களின் மனம் எங்கும் வெளிப்படவில்லை. கதையின் ஆதாரமும், நகர்வும் ஆண்களைச் சுற்றியே அமைகின்றன. பெண்கள் ஆண்களுக்கான உலகில் சின்னதொரு அங்கமாய் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கென தனித்து ஆளுமை வெளிப்படாமல் இருப்பது ஒரு பக்கம் இந்த நாவல் செல்லும் உயரத்திலிருந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாய் கீழே இறக்கிவிடுகிறது. பத்தோடு பதினொன்றாக எழுதப்பட்ட ஒரு நாவலென்றால் இதனை நாம் கருத்திக் கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம், ஆனால் சிறப்பான நாவலுக்கான எல்லா அம்சங்களையும் வெளிப்படுத்தியிருக்கும் ஒரு எழுத்தாளர் இந்த விடயத்தில் அசிரத்தையாய் இருந்ததை நாம் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.  வெவ்வேறு சமூகங்களையும் அந்த சமூகங்களின் பின்னணியில் சுழன்று வரும் குற்றங்களையும் நேரடியாக எழுதியிருப்பது சிறப்பானதொன்று. ஆனால் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் இடங்களில் வலிந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கதையை மீறி கதைசொல்லியின் குரல் வெளிப்படுவதாகப்படுகிறது. முக்கியமாக ஈழப்போரட்டப் பகுதிகளை எழுதும் இடங்களில்.  கலை பிரச்சாரத்திற்கானதில்லை என்பதில் நான் உடன்படுகிறவனில்லை. ஆனால் கலை வடிவத்திலிருக்கும் கதாப்பாத்திரங்கள் தான் பிரச்சாரத்தின் குரலாய் இருக்கவேண்டுமே தவிர, கதை சொல்லி துருத்திக் கொண்டு தெரியக்கூடாதென்பது என் அபிப்பிராயம்.

            வாழ்வை அப்படியே பிரதிபலிப்பதால் சிறந்த நாவல்கள் உருவாகிவிடுவதில்லை, அந்த நாவல் உருவாக்கும் பார்வைகளும் வெளிகளும் புற உலகின் சலனங்களிலிருந்து துண்டித்துக்கொண்டு முற்றிலும் புதிய தரிசனங்களை நமக்குத் தரும்போதுதான் ஒரு நாவல் அதன் முழுமையை அடைகிறது. தஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் ரஸ்கோல்னிகவ் என்னும் மனிதனின் மனம் குற்றத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் நடுவே எதிர்கொள்ளும் நீண்ட போராட்டங்களை காட்சிப்படுத்தியதால் தான் காலம் கடந்து நிற்கிறது.  உணவு உடை என்பதில் மனிதர்கள் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டாலும் வாழ்க்கைக்கான ஆதார உணர்ச்சிகள் எல்லாக் காலத்திற்கும் மாறாதவை. அதனால்தான் இந்த ஆதார உணர்ச்சிகளை ஒரு கதைசொல்லி மிகக் கவனமாக எழுதவேண்டியது அவசியமாகிறது.

முதல் நாவலை எழுதும்போது நமக்கு எந்த நெருக்கடிகளும் இருப்பதில்லை. மதிப்பீடுகள் குறித்த கவலைகளின்றி மனதில் தோன்றுவதை துணிச்சலோடு நாம் எழுதமுடியும்.  உப்புநாய்களைப் போலொரு நாவலை என்னால் இப்போது எழுதமுடியாது. சிறந்த நாவலை எழுதவேண்டுமென்கிற அக்கறையை விடவும் எனக்கிருக்கும் சமூக மதிப்பும், பொலிடிகல் கரெக்ட்னஸுமே இப்போது எனக்கு முக்கியமாகத் தோன்றும். அந்த வகையில்  தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்த மற்றவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல்  தன்னளவில் சரியென்று பட்டதை வேல்முருகன் இளங்கோ எழுதியிருக்கிறார். இசக்கி – ராஜசேகர், இசக்கி – நஞ்சுண்டான் இந்த  புள்ளிகளை இணைத்து வேல்முருகன் இளங்கோ எழுதியிருக்கும் மன்னார் பொழுதுகள் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களிடமிருந்து அவரைத் தனித்து அடையாளப்படுத்தியிருக்கிறது. கதை சொல்லல் முறை, மொழி, உரையாடல் எல்லாவற்றிலும் அவர் தனித்துவமானவராய் வெளிப்பட்டிருக்கிறார்.  அவரின் முதல் நாவலான ஊடறுப்பு லிருந்து இந்த நாவல் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழ் இலக்கியச் சூழலின் கூச்சல்கள், சுய விளம்பரங்கள் இவற்றிலிருந்தெல்லாம் விலகி அவர் தொடர்ந்து இதுபோல் சிறந்த நாவல்களை எழுதவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Comments

  1. மிக்க நன்றி.
    -பதிப்பகத்தார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....