நவீன மனிதன் என்பவன் தன்னைக் கண்டுபிடிக்க முயல்பவன், நவீனத்துவம் அவனை அவனது இருத்தலில் இருந்து விடுதலை செய்யவில்லை.”
-    மிஷெல் ஃபூக்கோ.

மிகப் பழக்கப்பட்ட ஒரு மொழியில் சொல்லப்பட்ட கதைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு கதை சொன்னவர்கள் தமிழில் இதற்கு முன்னும் நிறையபேர் இருக்கவே செய்கிறார்கள். தொண்ணூறுகளில் பின் நவீனச்சிறுகதைகள் மாஜிக்கல் ரியலிஸத்தையும் தாண்டி வேறு வேறு கூறுகளுடன் இயங்க ஆரம்பித்தன. நேரற்ற எழுத்து, வகைமை தாண்டிய எழுத்து, பகடி செய்தல், தரப்படுத்தப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குதல் போன்ற பலவிதமான முயற்சிகள் எழுத்தில் மேற்கொள்ளப்பட்டனஜெயமோகன் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளில் வடிவப் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். ஆனால் இவர்களின் பிரதிகளில் தங்கள் காலத்தின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லைஅந்தவகையில்  அவை வெறும்  மிகையுணர்ச்சிப் பிரதிகளாக  மட்டுமே நின்று விட்டன.  பகடி, நகைமுரண், அங்கதம் ஆகிய கூறுகளின் மூலம் வாசகனின் சமநிலையைக் குலைக்கும் நவீன கதைகள் புதிய திறப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருக்கின்றன. எழுத்து மலினப்பட்டுப்போயிருக்கும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து அதில் தீவிரமாக இயங்க இலக்கியத்தின் மீதான அசாத்தியமான நேசம் இருக்கவேண்டியிருக்கிறது. உலகின் எந்த மொழிக்கும் இணையாக தமிழிலும் மகத்தான சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் எழுத வந்தவர்களிடம் இருந்த அரசியல் உணர்வும் தீவிரமும் சமகாலத்தில் எழுதுகிறவர்கள் பெரும்பானவர்களிடம் இருப்பதில்லை.

சிற்றிதழ்  வெளியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவரும் கார்த்திகைப் பாண்டியன் தமிழ் சிறுகதைகளைப் பொறுத்தவரை எஸ்.ராவையும் சாருவையும் தனது ஆதர்ஷங்களாகக் குறிப்பிடுகிறார். அதற்கேற்றாற் போல் அவரது கதைமொழியிலும் எஸ்.ராவின் தாக்கம் மிகுதியாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எல்லா எழுத்தாளனும் ஏதோவொரு வகையில் தன் ஆதர்ஷத்தைப் பின்பற்றியே எழுதுகிறான். கார்த்திகைப் பாண்டியனின் இந்தக் கதைகளின் வழியாய் நாம் அறிந்து கொள்ள முடிகிற சில மனிதர்கள் முற்றிலும் புதிதானவர்கள் இல்லை. நம்மோடு நம்மளில் ஒருவராக இருப்பவர்கள் தான், ஆனால் இந்தக் கதைகளின் வழி நாம் அறிந்த கொள்ள முடிகிற ரகசியங்கள் அந்தக் கதாப்பாத்திரங்களோடு சேர்த்து நம்மோடு இருக்கும் அந்த சிலரையும் முதல் முறையாய் சந்தேகிக்கச் சொல்கிறது. நமக்கு பரிட்சயமான நிழலென்பது சமயங்களில் யாரோ ஒருவரின் கனவாகவுமிருக்க சாத்தியமிருக்கிறது.
ஒரு மனிதனின் நான்கு நிழல்களின் வழியாய் நான்கு சாயல்களை அல்லது மற்றவர்களின் பார்வையில் தெரியும் பிரதிகளை கதையாக்கியிருக்கும் நிழலாட்டம் மனிதனின் அதீத உணர்ச்சிக்கும் சமூகத்திலிருந்து தன்னைத் தானே அவன் வெளியேற்றிக் கொண்டிருப்பதற்குமான உள்ளார்ந்த தொடர்புகளை விவரிப்பதாகக் கொள்ளலாம். ஒவ்வொரு நிழலும் பிறிதொன்றைப் போலில்லாததுடன் வெவ்வேறான வன்மங்களையும் தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது. வாசகனை சடாரென எதிர்நிலைக்கு இட்டுச்சென்று அதிர்ச்சி கொள்ளச் செய்யாமல் மெல்ல மெல்ல நிகழ்கிறது ஒரு விலக்கம். கதையின் இறுதியில் அவன் தன் செயல்களை அணைத்தையும் வெகு இயல்பாய் கடந்து செல்கிறவனாய் இருக்கிறானென்பதை வாசகன் தனக்கு மட்டுமே தெரிந்ததான சில ரகசியங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.
உலகம் முழுக்கவே தங்கள் மொழியின் இலக்கிய ஆளுமைகள் குறித்து எழுதப்படும் படைப்புகள் எப்போதும் சுவாரஸ்யமிக்கவையாய் இருக்கின்றன, தமிழ் இலக்கியம் அதற்கு விதிவிலக்கென்றாலும் இங்கு தொடர்ந்து அதுமாதிரியான முயற்சிகள் நடந்தபடியேதான் இருக்கின்றன. எல்லா அரசியல் குறித்தும் தீவிரத்துடன் இயங்குகிற இலக்கிய உலகின் அரசியல் குறித்து பேசாமல் தவிர்க்கவியலாது. சாருவின் சில கதைகளும் கோணங்கியின் நாற்பத்தி எட்டு கோடி வார்த்தைகளின் மரணம் கதையும் வெற்றிகரமான முயற்சிகள் என்று சொன்னாலும் பொலானோவின் நாவல்களை வாசிக்கையில் அது வேறு ஒரு எல்லையில் இருப்பது புரிகிறது. Viva La Muerte என்னும் கதை மொழி மற்றும் கட்டமைப்பு எல்லாவற்றிலும் பெரும்பாலான வாசகனுக்கும் அறிமுகமான சாருவின் கதை சொல்லலை நினைவுபடுத்தினாலும் சம்பந்தப்பட்டவரையே பகடி செய்வதில்தான் முக்கியமாகிறது. ஆதர்ஷங்களை தொடர்ந்து நிராகரிப்பதின் வழியாகத்தான் நாம் நமக்கான புதிய கதைகளைக் கண்டடைய முடிகிறது. அந்தரமீனில் வரும் அந்தப் பெண்ணின் பதட்டத்தை விடவும் அவளை எதிர்கொள்ள சாத்தியங்களின்று தப்பிக்கத் துடிக்கும் கெளதமின் பதட்டமே சலனங்களை உருவாக்குபவையாய் இருக்கின்றன. இறுக்கமான மொழியிலும் நீண்ட விவரணைகளில் வழி சொல்லப்படுவதாலும் ஒரு கவித்துவ அனுபவத்தைக் கொடுக்கிறது இக்கதை. யூகிக்க முடிந்த திருப்பங்களோடு நீண்டாலும் கதையின் இறுதி வரையிலும் ஆழ்ந்திருக்கும் மெளனம் அசாத்தியமான நிறைவைக் கொடுக்கிறது.
இந்தத் தொகுதியின் பெரும்பாலான கதைகளும் பெயர் குறிப்பிடப்படாத நகரில் நடப்பவையாய் இருப்பதோடு அகாரணமாய் தற்செயலானவர்கள் சந்தித்துக் கொண்டபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கிடையிலான உறவு ஏதோவொரு புள்ளியில் துவங்கி புதிரான சில முடிச்சுகளைத் தொடர்ந்து நழுவவிட்டபடியே இருக்கிறது. பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதை அதன் முரணான தலைப்பின் காரணமாய் அங்கதமான ஒரு உணர்வுக்கு நம்மை தயார்ப்படுத்தினாலும் கதை சொல்லப்பட்டதின் இறுக்கம் அந்த அங்கதத்திற்கு எதிரானதாகவும் மறைக்கப்பட்டதொரு வன்மம் எந்த நொடியிலும் எட்டிப் பார்க்கலாமென்கிற பதைப்புடனும் நீள்கிறது. தனது மார்புகளை அவமானத்தின் அடையாளமாக நினைக்கும் ஒரு ஆணையும் தன் மார்புகளை உயிர்ப்பின் வடிவமாக நினைக்கும் பெண்னையும் ஒரு புள்ளியின் கொண்டு வந்து சேர்க்கும் இந்தக் கதையின் இறுதியில் அவன் அவள் மார்புகளை அறுக்கும் போது உண்மையில் தன்னுடையதை அறுத்துக் கொள்ள முடியாததின் இயலாமையே ரெளத்ரமாய் வெளிப்படுகிறது. வெகு சிரத்தையாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய இந்தக் கதை சம்பந்தமேயில்லாமல் அவனது பால்யகாலத்தில் அவனை விட வயதில் மூத்தவர்களால் அந்த பெருத்த மார்புகள் காரணமாக புணரப்பட்டான் என்ற கதை ஒருவித ஆயாசத்தையே தருகிறது. வலிந்து ஒரு கதாப்பாத்திரத்தை அதீத உணர்ச்சிக்குள்ளாக்கும் தேவையை கதைகளில் வைப்பதன் மூலம் லட்சியவாத எழுத்தின் மிச்சத்திற்குள்ளேயே போய்ச்சேரும் அபாயம் நேர்கிறது.
ஒரு கதை எப்போதும் ஒரே கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி நிகழவேண்டும் என்னும் எந்த நிர்ப்பந்தங்களும் ஒரு கதைசொல்லிக்கு இல்லை. மரநிற பட்டாம் பூச்சிகள் வெவ்வேறான சம்பவங்களைச் சொல்கிறது. சிலரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன, சில தவிர்க்கப்படுகின்றன. நூலகத்தில் வரும் இரண்டு ஆண்களுக்கு இடையிலான கதை மட்டும் மற்ற எல்லாப் பாத்திரங்களையும் விஞ்சி தனித்து நிற்கின்றன. ஏனெனில் இது மட்டுந்தான் இங்கு சொல்லாத கதை. கடலும் கடல் சார்ந்த நிலமும் ஒரு புனைவெழுத்தாளனுக்கு எப்பொழுதும் தனித்துவமான ஃபேண்டஸி தான். ஜெயமோகனின் கன்னியாகுமரி அந்த ஊருக்கான எந்த தனித்துவமான உணர்வுகளையோ சிறப்புகளையோ கதையாக்காத தோல்வியுற்ற ஒரு பிரதி. இந்தத் தொகுப்பிலுள்ள கதையும் பகவதி அம்மனை பெண்மைக்கான பிரம்மாண்டமான ஒரு மாயவடிவாய்க் கொண்டுதான் துவங்குகிறது. வெவ்வேறு காலங்களில் ஒரே ஊரைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களில் காலமாற்றம் எல்லாவற்றிற்குப் பின்னாலும் மனித மனத்தின் வெறுமையை எந்த வகையிலும் நிறைவு செய்திருக்கவில்லை. உடலும் காமமும் மனிதனின் சுமையாகவே இங்கும் நீள்கிறது. நடுத்தர வயது ஆண் ஒருவன் தன் குடும்பத்திலிருந்து வெளியேறுவதும், தற்செயலாக எதிர்கொள்ளும் வினோத நபர் அவர்களுக்கிடையிலான உறவு என தற்கொலைக்கு முந்தைய கணத்தையும் காமத்தையும் பேசுகிறது.
இந்தக் கதைகளின் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் ஒருவித அலைச்சலைக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடனான தங்களது இருப்பை மறுக்கிறவர்களாய் இருக்கிறார்கள்.  ஹொட்ரோவ்ஸ்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையில் / யாரென்று அறிந்திராத மனிதனுக்காக நான் ஏன் சாக வேண்டும்? இத்தனை காலம் என்னை இருட்டறைக்குள் பூட்டி வைத்த போது ஏனென்று கேட்காத ஏதோவொரு மயிருக்காக நான் சாக முடியாது./  என்ற வரிகள் இதற்கு முந்தைய லட்சியவாத எழுத்தாளர்கள் யாருடைய கோஷங்களையும் நினைவுபடுத்தாத புதிய கேள்வியாய் இருக்கிறது. சில பழைய கதைகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றிருப்பதுடன் புதிய கதைகளையும் தனக்குள் கொண்டிருக்கும் இந்தக் கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை.
கலைடாஸ்கோப் மனிதர்கள், தனி போன்ற கதைகள் இவரின் ஆரம்பகால கதைகளாய் இருக்க வேண்டும் என்பது போல் மொழியும் கதை சொல்லல் முறையும் வேறு சில எழுத்தாளர்களின் சாயல்களிலேயே இருக்கின்றன. மொழியின் இறுக்கம் தளர்ந்து வாசகனுக்கு இளைப்பாறுதலைத் தருகிறது. பரமபதம் கதையை வாசிக்கையில் காம்யூவின் அந்நியனும் ஒருசேர நம்மோடு பயணிக்கிறான். /மரணம் என்கிற ஒற்றைத் துயரத்துக்கு வெளியே, சந்தோசம் அல்லது மகிழ்ச்சி, எல்லாமே விடுதலைதான்./ நவீன மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தனது இருப்பு குறித்து அதிகமும் கவலை கொள்கிறவனாய் இருக்கிறான். இருப்பை வெறுமனே வாழ்வியலாக அல்லாமல் அரசியல் அடையாளங்களோடு பொறுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உரையாடலுக்கு அழைக்கும் வீர்யமிருக்கிறது. தனித்தனி கதைகளாக இவை மிகச் சிறந்த வாசிப்பனுவத்தைக் கொடுப்பதும் தொகுப்பாக வாசிக்கும் போது ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் வேறுசில கதைகளிலும் பார்க்க முடிவதால் சின்னதொரு சலிப்பு ஏற்படுகிறது. அத்தோடு சில இடங்களில் ‘கடற்கரை மணலில் தன் பெயர் எழுதிப் பார்த்தாள், அலை அடித்துக் கொண்டு சென்றது’ என்பது மாதிரியான பழகிப் போன உவமைகள் வீர்யத்தைக் குறைக்கவும் செய்கின்றன. இவற்றையெல்லாம் ஒரு பெரிய குறைகளாக கருதாமல் கதைகள் இயங்கும் வெளிகளுக்காக இக்கதைகள் மிக முக்கியமான சில உரையாடல்களைத் துவக்கி வைக்குமென்று திடமாக நம்புகிறேன்.

லஷ்மி சரவணக்குமார்.
சென்னை.




Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....