நானும் உயிரெழுத்தும்.

சிற்றிதழ்களின் வழி எழுத்தை அறிந்து கொள்வது பதின் பருவத்தில் அலாதியான மயக்கம். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும் மறுதலிக்கவுமான அபரிமித துணிச்சல்கள் வாசிப்புத் தரும் இரவலாய் ஒரு வாசகனுக்குள் இறங்கிவிடுகிறது. அப்படியாகத்தான் நான் எழுதத் துவங்கிய நாட்களில் உயிரெழுத்தும் எனக்கு அறிமுகமானது. உயிரெழுத்தின் முதல் இதழ் வெளியான ஒரு சில மாதங்களுக்கு முன்பாகத்தான் நான் லஷ்மி சரவணகுமார் ஆகியிருந்தேன். அதற்கு முன்பு வேறு வேறு பெயர்களில் இலக்கிய களமாடிய வரலாறு அத்தனை சுவாரஸ்யமில்லை. லஷ்மி சரவணகுமாரின் மூன்று சிறுகதைகள் பிரசுரமானதின் வழி எழுத்தாளராக தனக்குத் தானே அறியப்பட்டுக் கொண்டிருந்தார். அல்லது ஏற்கனவே அவரைத் தெரிந்த சிலருக்கு தெரிந்ததொரு கூடுதல் விசயமாய் அந்த சங்கதிகள் இருந்திருக்கக் கூடும். வாழ்வின் யதார்த்தம் ஆசைக்கு எழுதிய வரை போதுமென பின்னிழுக்க, விடாது மனம் தளரா வேட்கையுடன் எழுதிக் குவித்த நாட்களவை. உயிரெழுத்தின் முதல் இதழில் சிறுகதைகளுக்கு சிறப்பான கவனம் கொடுக்கப்பட்டதில் உற்சாகம் பிறந்தது. ‘ஆஹா இது நமக்கென இதழ்.
அந்த களிப்பு எழுதிக் கொண்டிருந்த கதைகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து வேகமாய் அதை உயிரெழுத்து இதழுக்கானதாக மாற்றியது. உயிரெழுத்தின் நான்காவது இதழில் வெளியான ‘காற்றை மொழிபெயர்த்தல்’ என்னும் கதை பரவலான வாசக கவனம் பெற்றது. அக்கதையின் இறுதிப் பகுதியில் தேவையான நிரம்ப மாற்றங்களை சுதிர் செய்து செம்மைபடுத்தினார் என்கிற ரகசியத்தை இதுகாறும் அவரோ நானோ யாரிடமும் சொல்லாத ரகஸ்யமாகவே வைத்திருக்கிறோம். காலச்சுவடும், உயிர்மையும் பின்னே தீராநதியுமாய் பரவலான இலக்கிய சாமரம் வீசிக்கொண்டிருந்த அந்த நாட்களில் உயிரெழுத்தின் வருகை தடலாடியாக எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதழின் அளவு, உள்ளடக்கம் யாவும் புதுமாதிரியாய் இருந்ததோடு நிறைய புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் சாத்தியமும் அதில் கிட்டியது முக்கியமான விசயம். சிறுகதைகளுக்கான பக்கங்களை பத்திரிக்கைகள் குறைத்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் பெருமளவு அதற்கான இடத்தை தந்ததில் இன்றளவும் உயிரெழுத்தின் பங்கு அலாதியானது. கடந்த சில வருடங்களில் உயிரெழுத்தில் வந்த கதைகளை மட்டும் தனியாகத் தொகுத்துப் பார்க்கும் போது புதிதாக சிறுகதை எழுத வந்திருக்கும் நிறைய பேரை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ( உயிரெழுத்து கதைகள் என்ற தேர்ந்தெடுத்த தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.)
ஒரு சிற்றிதழ் தனக்கான இடத்தை விஸ்தாரமாக்கிக் கொள்ளும்போது அடுத்தடுத்த நகர்தலின் பொருட்டு புதிய பரிமாணங்களை மேற்கொள்வது இயல்பே. அப்படித்தான் பதிப்பகம் துவங்கப்பட்டதும். அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர்களின் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்ட வகையில் பதிப்புத்துறையில் நிகழ்ந்த ஆரோக்கியமான மாற்றம் அது. ஒரே நேரத்தில் எட்டுப் புத்தகங்கள் வெளியிடப்பட்ட அந்த அரங்கின் ஒரு ஓரத்திலிருந்த எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, அடுத்த இரண்டாவது வருடத்தில் என் இரண்டாவது சிறுகதை தொகுப்பு உயிரெழுத்து வெளியீடாக வெளிவருமென. முதல் சிறுகதைத் தொகுப்பு யாராலும் கவனிக்கப்படவில்லை என்கிற வருத்தமுண்டு இப்பொழுதும். மாதத்திற்கு இரண்டு மூன்று கதைகளென எழுதிய வேகத்தில் கதைகள் ஏராளமாய் சேர்ந்திருக்க, இரண்டாவது தொகுப்பை முன்னைவிடவும் சிறப்பாகக் கொண்டுவரவேண்டுமென முயற்சித்த போதுதான் சுதீரின் அறிமுகம் கிடைத்தது. அதற்கு முன் என் கதையை அவர் பிரசுரித்ததும், புதுக்கோட்டையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவரை சந்தித்ததும் தான் அவரோடான என் நட்பு. அதன் பிறகு எனது நான்கு புத்தகங்கள் உயிரெழுத்தின் வழியாகத்தான் வெளியாகியுள்ளன. ( உப்பு நாய்கள் நாவலின் முதல் பதிப்பு உட்பட.) இருபத்தைந்து வயதில் அசாத்தியமான விருப்பங்களோடு அலைந்த ஒரு இளைஞனுக்கு தொடர்ந்து இத்தனை பெரிய இடமளித்தது சாதாரணமானதில்லை. வெறுமனே பதிப்பாளர் என்பதைத் தாண்டிய ஒரு நட்பாகத்தான் சுதிருடனான எனது நட்பு. சரியாக அவர் வயதில் பாதிக்கும் கொஞ்சம் அதிகம் தான் என் வயது. ஆனாலும் உரிமையாக எல்லாவற்றையும் குறித்தும் விவாதிக்கும் சுதந்திரமிருக்கிறது. என் புத்தகங்கள் தயாரான காலங்களில் அங்கேயே உட்கார்ந்து எனக்குப் பிடித்த மாதிரி கேட்டு வடிவமைத்ததும் உண்டு. ஒரு கதையை பிரசுரம் செய்வதற்கு முன்னால் அதைக் குறித்து தனிப்பட்ட முறையில் பேசி திருத்தங்கள் தேவைப்படும் இடங்களில் திருத்தங்கள் செய்து அந்தக் கதை கூடுமான வரை சிறப்பாக வர உழைப்பதால் தான் உயிரெழுத்து இதழின் கதைகள் வலுவானதாய் இருக்கின்றன.
     உயிரெழுத்து என்றவுடன் அடுத்த கணம் நினைவுக்கு வருது தோழர் எஸ்.வி.ஆர் தான். உயிரெழுத்து இதழில் அவரெழுதிய கட்டுரைகள் அவ்வளவும் முக்கியமானவை. தொடர்ந்து மிக முக்கியமான விவாதங்களை ஏற்படுத்தியவை அந்தக் கட்டுரைகள். தேர்ந்த அரசியல் கட்டுரைகளுக்கு நீண்ட பக்கங்களை ஒதுக்குவதென்பது ஒரு இதழ் தன் மொழிக்கு செய்யும் தர்மம். போலவே பிரபஞ்சன் இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பகுதியும், அவரது சில கட்டுரைகளும். கதைகள் அளவிற்கு முக்கியமான விவாதங்களை உண்டாக்கிய கட்டுரைகளும் உயிரெழுத்தில் வெளியாகியுள்ளன. ந.முருகேசபாண்டியன், ஹெச்.ரசூல் என நான் மதிக்கும் நிறைய எழுத்தாளர்கள் தொடர்ந்து பங்களித்து செய்தபடியேதான் இருக்கிறார்கள். இப்பொழுது நின்றுபோய்விட்டாலும்  முன்பு உயிரெழுத்தில் வெளியான எழுத்தாளர்களின் நேர்காணல்கள் சுவாரஸ்யமானவை. ( சுதிரிடம் பேசிய சில தருணங்களில் நானே அதைத் தொகுத்துத் தருவதாகக் கூட சொல்லியிருக்கிறேன்.) வெவ்வேறு தளங்களில் இயங்கும் எழுத்தாளர்களை விரிவாக அறிந்து கொள்ள முடிந்த நேர்காணல்கள் அவை.
நான் அதிகமும் புனைவெழுத்து சார்ந்த இயங்குகிறவன், மிக அரிதாக நானெழுதிய சில கவிதைகள் உயிரெழுத்தில் பிரசுரமாகியிருப்பதோடு தேர்ந்தெடுத்தக் கவிதைகளை ஃபிரஞ்ச்சில் மொழிபெயர்க்கும் போது எனது இரண்டு கவிதைகளையும் அந்தத் தொகுப்பில் சேர்த்திருந்தனர். அத்தோடு உப்பு நாய்கள் என்னை எடுத்துச் சென்ற எல்லை நானே எதிர்பாராதது. அந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது புத்தகக் கண்காட்சிக்கு மிகச் சில நாட்களே இருந்தன. நண்பர்கள் கூட இத்தனை அவசரம் வேண்டாமென்றுதான் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனாலும் நான் தளர்வதாக இல்லை, நாவலோடு சேர்த்து ஒரு சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வர வேண்டும். குறைந்த நாட்களில் அச்சாக்கி எடுத்து வர முடியுமென பதிப்பகத்தின் மீதிருந்த நம்பிக்கையால் மட்டுமே அத்தனை வேகமாக வேலை செய்ய முடிந்தது. ஒரு எழுத்தாளனுக்கு இதுமாதிரி பதிப்பகம் கிடைப்பது அபூர்வம். ஒரு இதழ் தொடர்ந்து முதலில் இருந்த வேகத்துடனேயே நூறு இதழ்களைக் கடந்திருப்பது உற்சாகமான விசயம். பிரசுரமென்பது இன்று எளிமையான விஷயமாகிவிட்ட போதும் அச்சிதழில் தொடர்ந்து இயங்குவது புதிய எழுத்தாளர்களுக்கு தனி கெளரவம். சிற்றிதழ்கள் பெரும்பாலும் படைப்புகளுக்கு சன்மானம் அளிப்பதில்லை என்கிற நிலையில் இப்பொழுது வரையிலும் இதழில் வெளியாகும் கதைகளுக்கென சிறிய அளவிலேனும் ஒரு சன்மானத்தை அனுப்புவதை சுதிர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தரமான படைப்புகளை வெளியிடுவதோடு பதிப்பகம் வாயிலாக அவற்றை புத்தகமாகவும் கொண்டு வரவேண்டும். உயிரெழுத்து பதிப்பகத்திலிருந்து புத்தகம் பதிக்கப்படுவது சிறிது குறைந்திருக்கிறது. மீண்டும் பழைய உற்சாகத்தோடு ஏராளமான நல்ல படைப்புகளை நூல்களாக வெளியிட வேண்டுமென்பதே எனது விருப்பமும். நூறு இதழ்களில் சிலவற்றில் ஏதோவொரு வகையில் என்னுடைய பங்களிப்பும் இருக்கிறதென்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
    


               

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு