துய்ப்பு எந்திரத்தின் ஒளிர்நீல விளக்கும் நறுமணத் தைலம் படர்ந்த வாசனைக் கத்திகளும் – நேசமித்ரன்

லைஞன் என்பவன் தான் சார்ந்த சமூக அமைப்பின் மேலும் ஒரு ஒத்திசைத்துகள்தான் என்றானால் அவனது மீச்சிறு உராய்வே அவனது படைப்புலகு. குற்றங்களுக்கான தகவுகளை பெருக்கிக் கொண்டே தண்டனைகளுக்கு நம்முடலை பழக்கும் பன்முனை அதிகாரமையங்கள் 
நம்மை ’வளர்த்துப் பழக்கும் ’ (Taming ) வாழ்முறைக்கு எதிராய் எழும் ‘அவசியத்தீங்கே’ (Necessary evil) கலை ஆகிறது.


ஆசிரியரின் இந்த தேர்ந்தெடுத்த கதைகள் எழுதப்பட்ட காலத்தை முன்னிருத்திப் பார்க்கையில் நுகர்ச்சியை கொண்டாடும் நுகர்ச்சியின் படிநிலைகளை ஆராதிக்கும் நுகர்ச்சியை அருவருக்கும் நுகர்ச்சியின் மீது உமிழும் கலையை எழுத நிர்பந்தப்பட்டவர்களாய் புத்தாயிரத்தின் எழுத்தாளர்கள்  புறப்பாடு அமைந்திருப்பதை உணர முடிகிறது.இங்கு முன் வைக்கப்படும் பிரதி சார்ந்த பார்வைகளை அறிபுலன்கள் கொண்டு நிகழ்த்தும் குறுக்கீடுகளாக வாசிக்கப்படுவதாக. இந்த பிரதி சொல்லும் கதைகள் அவ்விதமாகவும்/ அவ்வாறில்லாமல் மேம்பட்டும் திரிந்தும் தம்மை உங்கள் வாசிப்பிற்கேற்ப  நிகழ்த்திக் காட்டக்கூடும்

வாழ்புலத்திலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்ளும் வேட்கையுடைய கதைமாந்தர்களின் தேடல் மற்றும் பயணமே இத்தொகுப்பின் கதை வெளியாய் இருக்கிறது. இச்சை எந்திரங்கள் எனச் சொல்லத்தக்க அத்தகைய உடல்கள்தாம் வாழ்வுக்கு எதிராய் இவர்கள் ஏந்தும் ஆயுதமும் கேடயமுமாய் இருக்கிறது. இருப்பு சார்ந்த சிக்கல் மற்றும் தகவமைப்பு சார்ந்த உராய்வுகளே இக்கருக்களின் பேசுமொழி. உதிரிகளுக்கும் உபரிகளுக்குமுள்ள என்றைக்குமான சிராய்ப்புகளை ஊடுபாவாக கொண்டு எழுதுவதும் அதன் புழங்குவெளி காமமாய் இருப்பதுவும் இக்கதைகளின் பிரதான இழை எனச் சொல்லலாம்.

அடையாளங்களைத் தேடுவதும் அடையாளங்களைத் துறப்பதுவும் அடையாளங்களை தொலைப்பதுவுமான செயல்நோக்கங்கள் கொண்ட சம்பவங்களைக் கொண்டு  உருவகம் சார்ந்த உத்திமுறைகள் (tropological discursive techniques )இக்கதைப் பிரதிகள் பின்னப்பட்டிருக்கின்றன என்பதுவும் ஒரு வாசிப்பாகக் கொள்ளத்தக்கது .

உன்னதங்களை எழுதுவதும் அனுபூதி தத்துவங்களுக்கு இணக்கமாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்குமான பக்கநிரப்பிகளுக்கு இணையாக தர்க்கங்களில் இருந்து தம் மீது திணிக்கப் பட்ட அடையாளங்களில் இருந்து வெளியேற எத்தனிக்கின்றன .சுமத்தப்பட்ட பிம்பங்களில் இருந்து தம்மைக் கத்தரித்துக் கொள்ள திமிர்கின்றன .

விருப்ப எந்திரங்களின் துய்ப்பு சாகசங்கள் அவற்றின் பாவனைகள் ,தந்திரங்கள் மற்றும் பாசாங்குகளை எழுதுவதன் பின்னுள்ள அரசியல் இவற்றை பிரதானமாக கொண்டு தம்மை பிரதிமையாகிக் கொள்கிறார்கள் நவீன கதைமாந்தர்கள்.

விளிம்புநிலை உதிரிகள் கைக்கொள்ளும் வாழ்வியல் அவற்றின் இடர்நுகர்வு பரவிய கதையாடல்களை பதிவு செய்யும் போக்கு வரவேற்கத்தக்கது .

கைவிடப்பட்ட நிலத்தில் இருத்தலின் எச்சங்களில் இருப்பவனின்  நனவிலி மனம் மற்றும் அவனது துய்ப்பு வேட்கை
,தொன்மங்களின் சிதைவு அதனோடான புணர்வு குறித்த பதிவாக
’நீலநதி’ வாசிக்கக் கிடைக்கிறது

 ” கொம்புகள் சூடுவைக்கப்பட்ட உழவுமாடுகளின் அசைவற்ற கண்கள், நாள்பட்ட ரோகிகளின் நாற்றம் பீடித்தத் தாவரங்கள், கடல் கடந்த தேசத்தின் தேக்கு மரங்களின் ஆவி குடித்த நூற்றாண்டு கால கட்டில் நாற்காலிகளை அவ்வறை நிராதரவானதொரு வெளியாய் மாற்றிக் கொண்டிருந்தது, நதிநீர் அவனுறக்கத்தில். உறங்கி விழிக்கிற கனங்கள் தோறும் அதிர்ச்சியுற்றவனாய்த் தம் படுக்கையிலிருந்து எழுந்தோடி வருபவன் கண்சாட்சியாய்க் கண்டும் நம்ப இயலாதவனாயிருந்தான் அவ்வூரின் இருப்பை.
                சிதைவுகளின் நெடியப்பிய புளிப்பு மனிதனாய் முழுக்க நீர்மை படர்ந்துவிட்டிருந்தது மேனியில். முடிவுறாத கனவுகளின் நீள்நாவுகள் விருப்பத்துடன் வருடியதில் இளஞ்சூடாய்  பரவிப்பெருகியது நஞ்சு. தனக்காக கிடத்தப்படும் படுக்கையில் நெடுநாள் பாதுகாக்கப்படும் சவத்தின் துர்வாடையினையும் ஸர்ப்பங்கள் புணர்கையில் வெளிப்படும் மூர்க்கமும் பின்னிக்கிடந்ததாய் உணர்ந்தவனுக்கு கைவிரல்கள் மெலிந்து உதிரம் கட்டிப்போயிருந்தது. புதுவகையான நோயெனக் கருதி மேற்கொண்ட வைத்தியத்தில் மருந்துகள் கொடுக்க முடிந்ததெல்லாம் மிகுதியான தளர்வினையும் உடல்நடுக்கத்தினையும்தான் “

இவ்வரிகளில்  ஒரு கனவு வெளியை நிலத்தன்மைகளின் மர்மஸ்தானங்களுடன் ,அதன் புதிர்களோடு பதிவு செய்திருப்பது வாசிப்பின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.ஒரு தேவதாசி  என்னும் மரபு வடிவ அடிமை எந்திரம் யாசிக்கும் தன்விடுதலையை நடனமாய் வெளிப்படுத்தி நிறுவ ,அவரது முதுமையின் தளர்ந்த கிளை இலையுதிரும் நிலையிலும் துய்க்கும் முடிவு விமர்சனத்திற்கும் உரையாடலுக்கும்  உரியது. இப்பிரதி அத்தகைய உரையாடலை கிளர்த்தும் நாளுக்காய் ஒரு வாசகனாய் காத்திருக்கிறேன் 

’இருள் மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கெளபீகத் துணி ‘ என்ற தலைப்பின் கீழ் வரும் ஆசிரியரின் துவக்கநிலைப் பிரதியில் கடவுள் மீது நாயகி செலுத்தும் எள்ளல்,சாத்தான் மீதான விருப்பம் மற்றும் கலவி , நன்மை X தீமை மற்றும் புனித X அ-புனித பைனரிகளுக்கு இடையில் ஊடாடும் விளிம்புநிலை உடல் காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கதை ஒரு சம்பவமாக மட்டுமே தன்னை குறுக்கிக் கொள்ளும் தன்மையையும் குறிப்பிட்டாக வேண்டும்.பிறகான கதைசொல்லியின் பரிணாமங்கள் இரு நாவல்கள் வரை நீண்டிருப்பது உற்சாகத்திற்குரியது

அறத்தின் முன் ஒழுங்கின்மையாக முன்வைக்கப் படுபவையே அதிகாரத்தின் முன் குற்றமாக முன் வைக்கப் படுகிறது .குற்றம் /தண்டனை மற்றும் இவை உருவாக்கும் ப்ரக்ஞை, தன்னிலை அது சார்ந்த தன்னுலகு மீது அச்சத்தை பிரயோகிக்கிறது.அவ்வச்சம் வலியுறுத்தும் ஒழுக்கம் அதன் வரைமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய   சமூகத்தன்னிலையை நிறுவ விழைந்து கொண்டே இருக்கிறது.  அதிகாரத்தின் கருவிகளுக்கு வேண்டியது சான்றுகள் . சான்றுகளின் புனைவுத்தன்மை வேறெந்த இதிகாசத்திற்கும் குறைவானவை அல்ல.’முதல் தகவல் அறிக்கை’ என்னும் பிரதி எழுதப்பட்டிருக்கும் உத்தி முறை வாசிப்பின்பத்திற்கு உத்தரவாதமளிப்பது . ’உண்மை’ என்ற பதம் கட்டமைக்கப்படும் விதம்
குறித்த புனைவாக்கமாகவும் ,இறந்த மூதாட்டி எதிர்கொள்ளும் புறக்கணிப்பு ஆணாதிக்கத்தின் இருபிரதிமைகளாய் இருக்கும் தந்தை மற்றும் மகன் .குழந்தைப் பேறு என்ற மையப்புள்ளி அது சுடர்த்தும் ஏக்கம் சார்ந்த பதிவுகளுடன் வளரும் கதை வடிவ ரீதியாக ஆசிரியர் கொண்ட பரிசோதனை முயல்வு எனலாம் .  


மெய்மையில் இங்கோர் ஆழமான முரண் உள்ளது. ஆதிக்கத்திற்காக, மனித முயற்சியால் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட வலிந்து கைப்பற்றப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட அனைத்துமே இணைந்த வடிவமே கலாச்சாரம். ஆனால் இது ஒரு தனிமனிதன் தொடர்பானதாய் இல்லாமல்  ஒரு சமூக மனிதன் தொடர்பான விஷயமாக இருப்பதால், கலாச்சாரம் வர்க்க ஒடுக்குமுறையின் அடிப்படைக்கருவியாக இருந்து வருகிறது . “செப்டம்பர் மாதத்தின் ஸ்பானியத் தோழியும் விசுவாசமிக்க நல்மேய்ப்பர்களும்”கதை நாயகி  தன்விருப்பங்களுடன்
கூடிய பால் தேர்வுகளுடன் படைக்கப் பட்டிருக்கிறாள் . அயல் தேசத்தவளான அவளின் காமம் மற்றும் துய்ப்பு சார்ந்த பார்வை பெரிதும் பாவனைகளற்று அமையப் பெற்றுருக்கிறது. .நிலம் சார்ந்த புனிதங்கள் மீது தனது ஒவ்வாமையை முரணை கதாசிரியர் நிகழ்த்திப் பார்த்திருப்பதை உணர முடிகிறது.குற்றப் பின்புலம் . அதீதமான காமப் பிறழ்வுகளுடன் அமைந்திருக்கும் சம்பவங்கள் தற்பாலின புணர்வாளனாக வரும் அயலான் சிறுவன் ஒருவனைப் புணர்ந்து அவன் மரித்து போவது காட்சியுறுகிறது.நாயகியோ விடலைச் சிறுவர்களுடன் பின்னர் ரயில் பயணத்தில் அந்நியர் பலருடன் எனக் கூட்டுக்கலவியில் ஈடுபடுகிறாள். இக்கதையின் சொல்லியாக வரும் மனிதன் அவளோடு நிலம் பெயர்கையில் தானும் ஒரு உதிரப்தெளித்த குற்றப் புலத்திலிருந்து ஒளிந்து வாழ்பவன் என்று ஒப்புக் கொடுக்கையில் கதையின் கோள்சுற்றுப்பாதை துலக்கம் அடைகிறது. ஆசிரியரின் பரிசோதனைக் கதைகளில் ஒன்றாக இக்கதையைச் சொல்லலாம் .

’யாக்கை ‘ இவரது துவக்க காலக் கதைகளில் ஒன்றாக வந்து பரவலான கவனத்தை ஈர்த்த பிரதி. பெருநகரமொன்றின் விளிம்பு வாழ்வை முன்னிருத்தும் களம் பிசுக்கும் வியர்வையும் விந்தும் கலவி திரவங்களும் கஞ்சாவும் துரோகமும் நிரம்பிய வாக்கியங்களால் ஆனது. அன்றாட வாழ்வியல் தேவைகள் ’இருப்பு’ குறித்த பதட்டங்கள் எனவிரியும் கதையில் பாலியல் தொழிலாளி பெண்களற்ற வீட்டில் பர்மா பஜாரில் விற்பனயாளனாய் இருக்கும் ஒருவனை மணம் கொள்ளும் முஸ்தீபுகளுடன் தந்தை மகன் என இருவருடனும் கலவும் தன்மையுள்ள கதைப் போக்கு உடையது.இன்செஸ்ட் எனக் கொள்ளத்தக்க இப்பொருந்தாக் காமம் மற்றும் பின் தொடரும் துரோகங்கள் அதன் நீட்சியாக நிகழும் வன்முறை சார்ந்த பதிவுகள் சற்றே நாடகீயமான முறையில் இருந்தாலும் சரியாக பதிவு செய்யப் பட்டிருப்பதை உணரலாம்.

நீலத்திரை கதை நவீன வாழ்வில் ஊடகக் காமம் சார்ந்த உளவியல் மற்றும் வாழ்வியல் சிக்கல்களை உணர்வு பெருக்கமான முறையில் சித்தரிக்கிறது எனலாம்.

சமகாலத்தில் எழுத வந்து மிகக்குறுகிய காலத்தில்  ஒரு இளைய படைப்பாளிக்கு தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்னும் தொகுப்பமையும் அளவு  கதைகள் சேர்ந்திருப்பதும் அவற்றில் குறிப்பிடத்தக்க நல்ல கதைகள் அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்க நிகழ்வாக குறிப்பிடலாம்.ஒவ்வொரு கதையும் தனித்த சொல் மொழி கொண்டு அமைந்திருப்பதும் இக்கதைகளின் மைய இழை குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறிய கருக்களால் அமைந்திருப்பதும் தற்செயலோ திட்டமிட்டதாகவே தோன்றவில்லை.தத்தம் இயல்புடனும் பாவனைகளுடன்  அவை பேசுவதைப் பார்க்கிறோம் . பிரதியின் பாத்திரங்கள் அவரது தன்னிலையில் இருந்தே பிறந்திருப்பது போன்றும் எதிர்கொண்ட சம்பவங்களை மனுஷிகளை மனுஷர்களைக் கொண்டே கதைப் புலங்களை அமைத்தது போன்றும் தோன்றுவது ஆக்கப் பூர்வமான படைப்புச் சான்றெனத் தோன்றுகிறது.பிறிதொரு பார்வையில் லிங்கமையப் பிரதிகள் எனச் சொல்லத்தக்க பார்வையின் பொதுக்குணமாக இக்கதை வெளியில் காமத்தின் நிறங்கள் விரவி இருக்கின்றன இன்செஸ்ட்,பரத்தமை, போர்னோ கிராப்பி , குழுக்கலவி  மீது விருப்பமுள்ள கதைமாந்தர்களால் ஆனதாய் இருக்கிறது இப்புனைவுலகம்.விளிம்பு நிலை மனிதர்களை/ களங்களைச் சுற்றியே தன்னியல்பான வட்டார மொழியில் இலாவகமாகப்  புழங்குவதைக் காண்கிறோம். தொடர்ந்த முயல்வுகளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து இந்த வாசகப் பார்வையின் இறுதி வரியை எழுதுகிறேன். புதிய களங்களுடன் புதிதான கருப் பொருளுடன் தொடர்ந்த பரிட்சார்த்தங்ளுடன் விரிக உன் படைப்புலகு.              
                                             மிக்க நேயத்துடன்
                                           நேசமித்ரன்
27-11-14
அபூஜா,
நைஜீரியா




    

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு