ஒரு நாடோடி எழுத்தாளனான கதை.

நண்பர்களே.
எழுத்தாளன் எப்போதும் சுவாரஸ்யமானவன், சமயங்களில் எழுத்தை விடவும். விதிவிலக்குகள் உண்டு, ஆனால் தன்னிலையிலிருந்து பேசுவதால் இப்பொழுது விதிவிலக்குகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை. நிர்ப்பந்தப்படுத்தி ஒரு மனிதனை ஒருநாளும் இலக்கியத்தின் பக்கமாய் நகர்த்திவிட முடியாது, அடிப்படையில் கலை சுதந்திரத்தின் அடையாளமென்பதால் இந்த உரையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி எங்கிருந்து வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானதொரு பாடலை வாயில் முனுமுனுத்தபடி காதுகளை மட்டும் என் சொற்களுக்காக விட்டுவைப்பது கூட நல்லதொரு பரிசுதான். எதுவாயினும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பதினைந்து நிமிடங்கள் இந்த அரங்கத்தில் என்னோடிருக்கும் எல்லோரையும் ஏதோவொரு வகையில் என் எழுத்திற்கு நியாயம் செய்தவர்களாய் நினைத்துக் கொள்கிறேன்.
எனக்குக் கவிதைகளைப் பிடிக்கும். அடிப்படையில் நானொரு புனைகதை எழுத்தாளனென்றாலும் கவிதையின் பால் கொண்ட விருப்பமென்பது அலாதியானது. பாரதியின் கவிதைகளையும், நெரூதாவின் கவிதைகளையும் கவிதை என்பதைத் தாண்டி பாடலாகப் பாட முடியும். மீனவர்களோடு பயணம் செய்த கார்லஸ் ஃபுயந்தஸ் அந்த மீனவர்கள் பாடும் பாடலைக் கேட்டு அதிசயப்பட்டு “இது நெரூதாவின் கவிதையாயிற்றே எனக் கேட்கிறார். பதிலுக்கு அந்த  மீனவர்கள் “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க, ஆனா எனக்குத் தெரிஞ்சவங்களும் அவங்களுக்குத் தெரிஞ்சவங்களும் இதத்தான் பாடறாங்க..” என்றார்களாம். ஆக நல்ல படைப்பென்பது அதை எழுதியவனை மீறி உலகத்தால் அறியப்படுவது. ஆனால் பெரும்பாலான நவீன கவிதைகளை என்னால் அப்படி பாடலாக பாட முடியாமல் போன துரதிர்ஸ்டத்தால் நான் புனைவெழுத்தின் பக்கம் நகர்ந்துவிட்டேன். இந்த நகர்தல் என் சோம்பேறித்தனம் காரணமாகவோ அல்லது அறிவுக் குறைபாட்டின் காரணமாகக் கூட இருக்கலாம்.
எழுத்துக்கு முன் எழுத்துக்குப் பின்னென இலக்கியத்தை நேசிக்கும் ஒருவனுக்கு இரண்டுவிதமான வாழ்க்கை இருப்பதாகவே தோன்றுகிறது.
எழுத்தாளனாக மட்டுமே வாழ்வதென்பதை நகைப்புக்குரியதொரு காரியமாய்ப் பார்க்கும் சமூகத்தில் அப்படி வாழ்வதை விரும்பி ஏற்றுக்கொள்ள நினைத்தபொழுது என் வயது பதினைந்து. என் நண்பர்கள் எல்லோருக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் கனவுகள் விருப்பங்களென ஏராளமாய் இருந்தது, எனக்கு இருந்ததைப் போல். என்னவாகப் போகிறாய் என யார் கேட்டாலும் மகிழ்வோடு எழுத்தாளனாகப் போகிறேனெனச் சொன்ன என்னை விசித்திரமாய்ப் பார்த்தவர்களுண்டு. பள்ளி இறுதியாண்டைக் கூட முடிக்க முடியாத அளவிற்கான வீட்டுச் சூழல். குற்றமும் வன்மமும் உடன் மட்டற்ற வறுமையும் பிண்ணிப் பிணைந்த குடும்பம். மிகச் சிறு வயதிலேயே பொறுப்புகளுக்குள் நகர்தப்பட்டு சம்பாதிக்க வேண்டிய நெருக்கடிகளையும் தாண்டி வாழ்வோடு இனக்கமாயிருந்தது இலக்கியம் மட்டுமே.
முதலில் வாழ்விலிருந்து தப்பிப்பதற்காக இலக்கியமென நினைத்து தீவிரத்தோடு வாசிக்கவும் அலையவும் செய்ய, அலைச்சலின் வழியாகத்தான் வாழ்வே இலக்கியம் என்பது பிடிபட்டது. இருபத்தி மூன்று வயதிற்குள் இருபத்தியாறு வேலைகளைப் பார்த்த அனுபவம் சம்பாத்யம், குடும்பம் என்பதன் மீதான வெறுப்பை அதீதமாய்த் துப்பிப் போட தப்பி ஓடி பரதேசியாய் அலைந்து ஆக இறுதியாய் அலஹாபாத்தில் பசியும் குளிரும் மிகுந்த ஓர் நள்ளிரவில் அழுகிய வாழைப்பழம் ஒன்றிற்காக ஒரு தெருநாயுடன் கட்டிப்புரண்ட தருணத்தில் தான் வாழ வேண்டுமென்கிற அதீத விருப்பமேற்பட்டு மீண்டும் ஊர் திரும்பியது. அதற்கு முன்பு லஷ்மி சரவணகுமார் சரண் என்கிற பெயரில் நிறைய எழுதியவர் தான். இடதுசாரி இதழ்களிலும், வேறு சில வார இதழ்களிலும் கவிதைகள் கட்டுரைகள் கதைகளென எழுதியிருந்ததோடு நிழல் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பு கூட கொண்டு வந்திருந்தேன். ஆனால் அவை எல்லாவற்றையும் மாற்றிப் போட்டது லஷ்மி சரவணகுமார் என்கிற பெயரில் எழுதிய முதல் கதை. 2007 ஜனவரியில் வெளியான அந்தக் கதையின் வாயிலாகத்தான் நான் லஷ்மி சரவணகுமார் ஆனேன்.


    
ஒவ்வொரு காலகட்டத்திலும் திசைமாறி பறக்கும் பறவைகள் கொஞ்சத்தை முதன் முதலாக பார்த்த ஒரு பிற்பகலில்தான் நிறம் மாறும் வானத்தின் குழந்தை முகம் பிடிபட்டது. பாட்டியின் கதை கேட்டு வளரும் அதிர்ஸ்டம் இல்லாதிருந்தாலும் ஜீசஸின் கதைகளை சொல்லவும் தோத்திரப் பாடல்கள் சொல்லிக் கொடுக்கவும் அருகாமையில் ரோஸி ஆண்ட்டி இருந்தது பேரதிர்ஸ்டம். தெரிந்த ஒன்றிலிருந்து  தெரியாத ஓர் உலகின் அத்தனை முடிச்சுகளிலும் ஓடி விளையாட சொல்லிக் கொடுத்தவள் அவளாகத்தான் இருக்க முடியும். என்னை முதலில் கதை சொல்லச் சொல்லிக் கேட்டவளுக்கு நான் சொன்ன கதைகளின் அத்தனை ராஜா ராணிகளையும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம், ஆனால் தேவதைக் கதைகளின் அத்தனை தேவதைகளும் அவள் மட்டும்தான் என்பதை ஒருநாளும் அவளுக்கு நானும் சொல்லியிருக்கவில்லை, அவளாகவும் கேட்டிருக்கவில்லை.
     அதற்கும் முன்பாகவே என்னுடைய கவிதைகள் நண்பர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்திருந்த்து. ஏனெனில் அவை அவர்களின் தோழிகளுக்காகவும் காதலிகளுக்காவும் எழுதப்பட்டவை. எல்லாக் கவிதைகளும் யாரோவொருவரின் காதலுக்காக எழுதப்படுவதும் வாசிக்கப்படுவதும் அற்புதமான விசயமன்றி வேறென்ன? யார் யாரின் நேசத்திற்கோ எழுதப்பட்ட என் கவிதைகள் எனக்காக எழுத முயற்சிக்கையில் புள்ளிகளாகக் கூட வெளிப்பட்டிருக்கவில்லை. அப்படி வெளிப்படுத்தப்பட முடியாத நேசத்தினை வெவ்வேறு மாயக்கிளிகளின் உடலில் அடைத்து கடல்களைக் கடந்து மலைகளைக் கடந்து பறக்கவிட்டேன்...ஆலிஸின் பேசும் முயலிடமிருந்து கொஞ்சமும், ஆயிரத்து ஓரு இரவுகளையும் கதை சொல்லிக் கடந்த முகம் தெரியாத அந்த இளவரசியிடமிருந்து கொஞ்சத்தையும், கரிசல் காட்டின் முகம் சுருங்கின கிழவிகளின் எச்சில் தெறிக்கும் சொற்களிலிருந்து கொஞ்சத்தையும் இரவல் வாங்கின கிளிகள் அவற்றை கதைகளாய் சொல்லத் துவங்கினதுவக்கத்தில் நான் கதைகளைக் கடக்க விரும்பினேன்,  கனவின் பெருங் கயிறு பிடித்தும், வற்றாத மாய நதியின்  வலுமிக்கதொரு ஓடமாகவும் கடந்து கொண்டிருந்தவனிடம் வெவ்வேறு நிலங்களின் கன்னிமார்கள் சொல்லப் படாத தங்களின் கதைகளை சொல்ல பொட்டல் காடுகளின் எல்லா இரவுகளிலும் பாடிக்கொண்டிருந்தனர். ஈரம் வற்றிய அவர்களின் தொண்டைக் குழிகள் கதைகள் நிரம்பிக் கிடந்த சூட்சுமம் புரிந்த தினத்தில் கதைகள் என்னைக் கடந்து போனது புரிந்தது, ஒரு குழந்தையின் புன்னகையைப் போல், விருப்பத்திற்குரியதொரு பெண்ணின் முத்தத்தினைப் போல் அற்புதமானதாய்.
     படித்து தெரிந்து கொண்டதை விடவும் மிகுதியானவையாய் இருப்பது கேட்டுத் தெரிந்து கொண்டதுதான், கேட்க முடிந்த ஓராயிரம் கதைகளை எந்தக் காலத்திலும் எவராலும் எழுத முடிந்திருப்பதில்லை என்பதற்கு நானும் விதிவிலக்கானவனில்லை. கண்களை விடவும் காதுகள்தான் எப்பொழுதும் பெரும் தோழனாய் இருக்கின்றன. முதல் கதை எழுதின தினத்தில் நான் தனிமையில் இருந்திருக்கவில்லை, சோகத்திலோ , சந்தோசத்திலோ , அல்லது குறைந்த பட்சம் கதை எழுத வேண்டுமென்கிற உணர்வுகூட இல்லாத கனமொன்றில் எழுதியதுதான். அந்த கதையின் கதையை முன்பாகவே சொல்லியிருந்தேன், என்னவொன்று அது நான் மட்டுமே வாசித்த கதை. நான் வாசிக்கக் குடுத்த  முதல் கதை இன்னும் சுவாரஸ்யமானது, பூக்களை நேசிக்கும் ஒரு கிழவியைப் பற்றின கதை, அதுபற்றிப் பூரிப்பு கொள்ளமுடியாது நிச்சயமாய். பின் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும் தேடிச் சோறு நிதம் தின்றதில் பார்த்தவையும் கேட்டவையும் உடன் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க எத்தனித்த வாசிப்பிலிருந்தும் வசப்பட்டிருந்தது புதியதொரு உலகம். ஏதொவொரு இடத்தில் அடைந்திருக்க முடியாதபடி செய்தன புத்தகங்கள், வாசித்த சொற்கள் கேட்ட கதைகள் அவ்வளவும் எப்பொழுதும் என்னைச் சுற்றிக் கொண்டிருந்தன, பிரியத்திற்குரிய ஆவிகளைப் போல். மாஸ்கோவின் வீதிகளும்பீட்டர்ஸ்பெர்க்கின் பனி மூடிய வீதிகளும், சைபீரிய மர்மங்களும் ஒரு புறம் மயக்கிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் மதினிமார்கள் புதித்தாக  இன்னொரு கொழுந்தான் வந்துவிட்டான் என்கிற பூரிப்பில் என்னையும் சொந்தக்காரனக்கிக் கொண்டார்கள். கரிசல் நிலத்தின் வாசனை நான் புரட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் நிரம்பிக் கிடந்தது. எஸ்தர் சித்தி பஞ்சம் பிழைக்க வந்த வழியில் என்னையும் கடந்து போனாள்.      
வாசித்த காகிதங்களில் எழுத்துக்களை இடம் மாற்றி எல்லா வார்த்தைகளையும் வேறொன்றாக்கி விளையாடுவதும் , சொற்களை வெட்டி எடுத்து வெற்றுக் காகிதங்களில் கோர்த்தும் மாய சொற்களை உருவாக்க முடிந்தது என்னால்...ஒன்னும் ஒன்னும் சேர்த்தால் பெரிய ஒன்னு ” என பஷீரின் அந்த பெரிய ஒன்னைப் போலவே வும் வும் சேர்ந்தால் ஒரு பெரிய என எனக்கு வந்த யோசனையில் கோடி யா க்களை சேர்த்து விட்டால் நிச்சயாமாக ஒரு யானைக்கு உயிர் குடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. காகித மடிப்புகளாகவே இருந்தது நான் பார்க்க நேர்ந்த அத்தனை பேரின் வாழ்வும், சிறிதும் பெரிதுமாய் அவர்கள்  சொல்ல நினைத்து முடியாமல் போன சொற்களை அழுதும் சிரித்தும் கொட்டியதில் எப்பொழுதும் நிரம்பிக் கிடக்கும் அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள். ஒரு புன்னகைக்குள் நூறாயிரம் கவிதைகளையும், ஒரு விசும்பலில் கோடி கதைகளையும் மனிதனால் சொல்ல முடிந்திருப்பது பேரதிசயமான ஒன்று. கிழவிகளின் ஒவ்வொரு சுருக்கத்தினுள்ளும் ஒரு தலைமுறை வாழ்க்கைக் கிடப்பதை வைகை அணையின் தொலைந்து போன சில கிராமத்துக் கிழவிகளிடம் பார்த்திருக்கிறேன், அப்படியான கிழவியொருத்தி வெப்பம் மிகுந்த ஆந்திர தேசத்தில் முறுக்குப் போடும் தன் மகனுடன் இருப்பவள். வருடத்திற்கு ஒரு முறை ஊர் வரும் அவளின் கால்களும் கண்களும்  தொலைந்த ஊரைத் தேடி ஓடுகிற பரபரப்பில் இருந்த அதிசயத்தை கண்டு காரணம் கேட்டேன். அவள் ஒவ்வொரு சதுர அடியிலும் நடந்த நிகழ்வுகளை நினைவுகளின் எல்லா ரேகைகளிலிருந்தும் எடுத்துச் சொல்லப் பிரயத்தனப்பட்டாள். உண்மையில் அவள் எனக்காக சொல்லியிருக்கவில்லை, அங்கு நினைவுகளை விட்டுச் சென்றிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சொல்லியிருக்கிறாள் என்பது ஊருக்குக் கிளம்பி பேருந்து ஏறுகையில் முந்தானையால் துடைத்துக் கொண்ட அவளின் கண்ணீரைப் பார்த்துதான் தெரிந்தது
     தறிகளோடு கழிந்த ஒன்றரை வருட இரவுகளில் ஒரு நாள் அந்தத் தறிகளுக்குள்ளாக இருந்தே ஓர் கதையை எழுதினேன், தறிச்சத்தம் அலற தள்ளி நின்று அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து கண்கானிக்கும் மேஸ்திரிக்கு பாய்ண்ட் எழுதுகிற பேடாக காட்டியே இரண்டு இரவுகளில் அந்தக் கதை முடிந்திருந்தது. விருப்பமே இல்லாமல் அனுப்பிய அந்த கதை அடுத்த மாதமே புதியகாற்று இதழில் வெளியாகியிருந்த பொழுதுதான் முதல் முறையாக நான் ஓட்டிய எட்டுத் தறிகளையும் கொஞ்சம் நேசத்தோடு அனுகினேன். புத்தகங்களைத் தேடிப்போவதும், புத்தகங்கள் வாசிப்பவர்களைத் தேடிப்போவதும் விருப்பத்திற்குரிய ஒன்றாய் மாறின பொழுது நண்பர்கள் உறவுகள் அவ்வளவு பேரும் எழுத்தை நேசிப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள். அடிக்கடி நான் இடம் மாற ஒவ்வொரு வேலையும் இன்னொரு வேலைக்குத் தூக்கி போட்டது, ஒரு கதை சொல்லியான தொழிலாளியை சொல்லி வைத்தாற்போல் எந்த முதலாளிக்கும் பிடித்திருக்கவில்லை, நானே முதலாளியாவதற்கும் வாய்ப்பில்லாததால் மாதம் ஒரு பெரு முதலாளியை பார்க்க வேண்டிய பெரும்பேரு பெற்றவனானேன். என்றாலும் என் புத்தகங்களையும் காகிதங்களையும் நான் எந்த கனத்திலும் பிரிந்திருக்கவில்லை. புத்தகங்களை பிரிகிற கனங்களில் வாழ்வை எதிர்நோக்கின பெரும் பயம் ஒன்று அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ஏனெனில் எழுத்தைத் தவிர எதுவும் எனக்கு அடையாளமாய் இருந்திருக்கவில்லை.   இந்த அடையாளம் வாழ்வாதரங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிக்கல்களை தந்திருந்த பொழுதும் வருத்தங்களைத் தந்திருக்கவில்லை
     சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் மலைகளின் பின்புறத்தில் ஏதேதோ எஸ்டேட்களில் சுற்றிவிட்டு ஊர் போன தினத்தில் ஒவ்வொரு எஸ்டேட்களின் பின்னாலும் மறைந்து கிடக்கும் ஓராயிரம் கதைகளை அம்மா சொல்லத் துவங்கியது கேட்டு வியப்பாகத்தான் இருந்தது. யார் யாரின் கதைகளையோ சொல்லிக் கொண்டிருக்கும் நான் இவள் கதையை எப்பொழுது சொல்லப் போகிறேன் என்கிற ஏக்கம் வந்தது. இரண்டு மாநிலங்களை நடந்தே பிழைப்பிற்காக கடந்திருக்கும் அவளிடம் கிடக்கின்றன ஆயிரக்கணக்கானவர்களின் கதைகள். எனக்கோ மாநகரின் தூசிபடிந்த ஆச்சர்யங்களும் பிரம்மாண்டமும் அவற்றுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நிர்வாணங்களும் புரிந்து கொள்ள முடியாத கதைகளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரே சமயத்தில் இப்படி வெவ்வேறான நிலங்களின் மீதான நினைவுகளை அள்ளிக் கொண்டு வருவதில் நான் எந்த நிலத்தவன் என்கிற தவிப்பும் எந்த நிலத்தின் கதையை சொல்லப் போகிறோம் என்கிற மலைப்பும் வந்து சேர்ந்து விடுகிறது. சொல்ல நினைக்கிற எல்லாவற்றையும் சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை, ஆனால் சொல்லத் தவறுகிற காகிதங்களில் வெளிப்படப்போகும் சில தலைமுறை மனிதர்களைப் பற்றி இங்கு யார் சொல்லப் போகிறார்கள். அல்லது எப்பொழுதும் சொல்லப்படாமலே போய்விடுவார்களா என்கிற பதட்டம்தான் எழுதுகிற எல்லாப் படைப்பையும் முதல் படைப்பாக எண்ணச் சொல்கிறது. கரிசல் காடுகளையும், பெருநகர தனிமையையும் நானேதான் அனுபவிக்கிறேன் என்றால் நானே ஏன் எழுதக்கூடாது. இதுவரைக்குமான எனது எழுத்தில் நிச்சயமாக ஒன்றுமில்லை, ஏனெனில் நான் எழுதுகிறேன் என்பதை சொல்வதற்காகவே எழுதியதாகத்தான் அவற்றைப் பார்க்க முடிகிறது. அதையும் தாண்டி என் கதைகளிலும் கவிதைகளிலும் சில புதிய இடங்களை தொட முயற்சித்திருப்பதாக நண்பர்கள் சொல்வதும் தெரியும்தான்என் மாயக்கிளிகள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கதைகளை இன்னும் நான் வீர்யத்துடன் சொல்லத் துவங்கியிருக்கவில்லை. சக மனிதர்களின் வாழ்க்கை சொல்ல முடியாததையா சரித்திரங்களும் புத்தகங்களும் சொல்லிவிடப்போகின்றன. மனிதர்கள், யாராலும் வாசிக்கப்படாத புத்தகங்களாய் விரியும் அற்புதங்கள். மனிதர்களின் வாழ்க்கை குறித்த ரகசிய திகில் எப்போதும் எனக்குள் இருக்கிறது
இந்த நிலம் எப்போதும் யாரோ சிலரின் மீள் வருகையின் மீது நம்பிக்கை கொள்வதும் அதன் வழியே தனக்கான மீட்சியை அடைந்துவிடுவதுமான எதிர்பார்ப்புகளிலேயே பல நூற்றாண்டுகளை கடத்திவிட்டது. அந்த ஏமாற்றங்களின் துயரங்களின் கசகக்கப்பட்ட இருள் வரலாற்றின் அழுத்தமான தடம் என்னுள்ளும் எஞ்சியிருக்கிறது. எழுத்தின் வழியாக அவற்றின் பிசுக்கேறிய பகுதிகளைத்தான் பதிவு செய்யவும் விரும்புகிறேன். வாசித்தல், எழுதுதல், பயிற்றுவித்தல், கற்றல் என்பனவெல்லாம் ஒருவருக்கொருவர் நாகரீகங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதை நோக்கமாய்க் கொண்டுள்ள நடவடிக்கைகளே, அதிலிருந்தும் சரி பிரக்ஞை பூர்வமாக இன்றும் சரி, எந்தப் பண்பாடும் தனித்த நிலையில் தன் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதில்லை.
ஒரு நாவல் அனுபவம் வரலாறாக உருமாறுவதே  என்கிறார் ஃபுயந்தஸ். எனது முதல் நாவலான உப்பு நாய்கள் என் வாழ்வினை கதையாக்கியதின் விளைவு. இரண்டாவது நாவலான கானகன் எழுத தூண்டுதலாய் இருந்த தங்கப்பன் வடகரைக்கு மேலிருக்கும் வனப்பகுதியில் 60 களில் வாழ்ந்த ஒரு வேட்டைக்காரன். முதல் நாவல் முழுக்க முழுக்க சென்னையென்னும் பெருநகரையும் அந்நகர் சார்ந்து வாழும் உதிரிகளையும் குறித்து எழுதப்பட்ட நாவல். தங்குவதற்கு இடமில்லாமல் ஒரு குளிர்காலத் துவக்கத்தில் எக்மோரின் பிரதான பிளாட்ஃபார்மில் தற்காலிகமாக ஒதுங்கியவனுக்கு ஏதாவதொன்றின் வழியாக தப்பித்து வெளியேற வேண்டுமென்கிற தவிப்பு ஏற்பட நண்பர் ஒருவரின் வீட்டில் இந்த நாவல் எழுத அடைக்கலம் புகுந்தேன். பதிமூன்று நாட்களில் இரவு பகலென இடைவிடாது எழுதி முடித்தபின் அதன் முழுமை குறித்து ஆயிரம் சந்தேகங்கள் இருந்தன. ஆனாலும் அந்தப் புத்தகத்தை அப்போது நான் கொண்டு வராத பட்சத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும். அந்த நாவல் எழுதுவதற்காக இரண்டு வருட காலம் உழைத்து தகவல்கள் சேகரித்திருந்தேன். குறிப்புகள் எடுத்திருந்தேன். என் உழைப்பு வீணாகவில்லை. அந்த நாவலுக்கு நானே எதிர்பார்க்காத பெரும் வரவேற்பு கிடைத்ததுடன் இன்று வரையிலும் தமிழின் முக்கியமான நிறைய இயக்குநர்கள் அதைப் படமாக்க என்னை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். இப்பொழுது மூன்றாவது பதிப்பும் வேகமாக விற்றுக் கொண்டிருக்கும் வேளையில் புதிய வாசகர்களை அந்த நாவல் எனக்குக் கொண்டு வந்து சேர்த்தபடியேதான் இருக்கிறது. 2012 ம் வருடம் சிறந்த நாவலுக்கான சுஜாதா விருது கிடைத்தது.
முதல் நாவலுக்கும் இரண்டாவது நாவலுக்கும் எந்தத் தொடர்புகளும் இருக்கக் கூடாதென்பதற்காகத்தான் வனத்தையும் வனத்தைச் சார்ந்த பழங்குடி மக்களின் வாழ்வையும் பின்னனியாகக் கொண்டு கானகனை எழுத விரும்பினேன். கானகன் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் பளிகர் இன மக்களின் வாழ்வை விலாவாரியாகப் பேசும் நாவல். 2014ம் வருடம் எழுத்தாளர் பா.சிங்காரத்தின் பெயரில் நடத்தப்பட்ட நாவல் போட்டிக்காக எழுதப்பட்டு இரண்டாவது பரிசு பெற்றது.
முதல் இரண்டு நாவல்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாதென்கிற அக்கறையில் தான் நீலப்படம் நாவல் எழுதினேன். ஐந்து வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்களில் வேலை செய்து கொண்டிருப்பதால் அதன் பிண்னனியில் ஒரு நாவல் எழுத வேண்டுமென்பதுதான் விருப்பமாயிருந்தது. 1935 ல் துவங்கி 2010 வரைக்குமான முக்கியமான சிலப் பதிவுகளை உள்ளடக்கிய அந்நாவல் ஆயிரம் பக்கங்களுக்கு குறைவில்லாமல் வரும். நீலப்படம் அதில் வரும் ஒரு சிறிய பகுதிதான். அதன் மற்றப் பகுதிகளோடு பொருந்தாமல் இருந்ததால் தனியாக அதை ஒரு நாவலாக்கி இருக்கிறேன்.
முதல் கதையை எழுதும் போது எத்தனை வேகமும் கவனமும் இருந்ததோ, அதே கவனமும் வேகமும் இப்பொழுது பத்து புத்தகங்கள் எழுதிய பின்னும் இருக்கிறது. ஏனெனில் இலக்கியத்தின் பக்கம் வராமல் போயிருந்தால் மதுரையின் இந்தத் தலைமுறை குற்றவாளிகளில் ஒருவனாய் உலவிக் கொண்டிருக்கும் சாத்தியங்களைத்தான் என் அப்பாவும் அவரின் நண்பர்களும் விட்டு வைத்திருந்தனர். சிறைச்சாலை, நீதிமன்றம், குற்றவாளிகளென இருபது வயது வரையிலும் வாழ்க்கை அதைச் சுற்றியேதான் நகர்ந்து கொண்டிருந்தது. எழுத்து மட்டுந்தான் கடந்த காலத்தின் எல்லா சூன்யங்களிலிருந்தும் என்னை மீட்டெடுத்தது. அதனாலேயே  விருதுகள் அங்கீகாரங்கள் எல்லாவற்றையும் தாண்டி எழுத்தின் மீதான காதல் எப்போதும் அபரிமிதமாய் இருக்கிறது. ஏனெனில் நான் எழுத்தாளனாய் இருப்பதே எனக்கான மிகப்பெரிய அங்கீகாரமாய் நினைக்கிறேன். ஃபுயந்தஸ் சொல்வது போல் “என்னை வகைப்படுத்தாதீர்கள், வாசியுங்கள். நானொரு எழுத்தாளன். இலக்கிய வகைமை அல்ல.”

நன்றி.

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.