எனது சிறுகதைத் தொகுப்பிற்கு ச.விசயலட்சுமி எழுதிய முன்னுரை....



விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும்

வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான்

1
பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தை நோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன.

இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான ஒத்திசைவற்ற அம்சங்கள் சிந்தனையின் வேர்க்கால்களை அசைக்கிறது.உயிர்பிடித்து வாழவும் வாழ்க்கைக்கென சிறிது ருசியிருக்கிறதாவென தேடவும் தொடங்குகிற மனசின் அந்தகாரப்பகுதி முழுமையாய் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளப் பழக்கிவைக்கப் படுகிறோம்.வெளியுலகிற்கு தக்கவகையில் உள்ளுணர்வை பதப்படுத்துகிறோம்.உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தினால் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட சமூகம் தன்னை பார்க்கும் விதம் குறித்த ஐயத்தை சுமந்து கொண்டு வாழ்கிறோம்.

கைகால் விரல் நகங்களை, பற்களை இளைப்பாற விடுவதால் அவை மூளைகளில் முளைத்துச் செழித்துகொண்டிருக்கிறது.அறியாமையை அடிப்பொடியாக்கி ஏவிக்கொள்ளப்பழகிக்கொண்டு அதிகாரம் செலுத்த விழைகிறோம்.மூளையும் மூளையும் கைகுலுக்கிக் கொள்கிற அரசியல் பழைமை, நவீனம், அறிவியல், மலைகள், மணல், காடு,விதை, குழந்தைகள், புழு, பூச்சிகள் அனைத்தையும் கபளீகரம் செய்துவருகிறது.எல்லா தட்பவெப்பங்களிலும் மூளையுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறவர்கள்,
வசதிகளுக்காக புகழுக்காக அதிகாரத்திற்காக நொடிகளைக் கணக்கிட்டு வருகிறவர்களுக்கிடையே அன்றாட வாழ்க்கைக்காக அலைக்கழிந்து கொண்டிருப்பவர்கள் நிச்சயமற்ற நாட்களோடு தவித்துக்கொண்டிருக்கின்றனர்.சாமானியர்களெனக் கருதி கருத்து சுதந்திரமற்ற நிலையை தக்கவைக்க அத்தனை வழிமுறைகளும் ஆதிக்கத்தின் மறைமுக சக்திகளால் முன்வைக்கப் படுகிறது.

@அரசியல்,சமூக விமர்சனங்களை வெளிப்படையாகக் கூறுவதற்கும் கருத்துத்தெரிவிப்பதால் நேரும் பின் விளைவுகளுக்கும் அச்சமுற்று நீர்த்துப்போவதும் மக்களின் உண்மையான ஓர்மை குரல்களை ஊடகங்கள் மழுப்புவதும் மறைப்பதுமான நிலையில் குறிப்பிட்ட மொழியில் அம்மண்சார்ந்த மாற்றங்களையும் இன்னபிற விமர்சனங்களையும் புதிய திறப்புகளையும் படைப்பாளிகள் படைப்புகளின் மூலமாக மக்களிடம் கொண்டு செல்கின்றனர் என்கிற நிதர்சனம் படைப்பாளிகள் தரப்பிலிருந்து பெருமைகொள்ளச்செய்வதாயிருக்கிறது.மக்களின் மனசாட்சிகளாக பேசுவதான படைப்புகள் புதிய பல கட்டுடைப்புகளை நிகழ்த்துகின்றன.

.      .ஒரு படைப்பு உரக்க அரசியலைப் பேசவேண்டிய அவசியமில்லை.வாசகனுக்கும் படைப்புக்குமான இடைவெளி குறையக்குறைய படைப்பு பரவலாகிறது.அவ்வகையில் வாசகருக்கு நெருக்கமானதொரு வாழ்க்கையில் அவர்கள் காணாமல் தவறவிட்ட நுட்பமான விஷயங்களைத் தொட்டுக்காட்டினால் அவன் அட இப்படியா? என நின்று கவனிக்க வாய்ப்புதருகிற படைப்புகள் முக்கியமானவை. தமிழில் புதுமைப்பித்தன் துவங்கி தஞ்சை ப்ரகாஷ், ஜி.நாகராஜன், கந்தர்வன் என வாழ்க்கையின் ரத்தமும் சதையுமான பதிவுகளையும்  மண்டோவையும்  படித்தபின்  மனம் ஓயாமல் பிசைந்துகொண்டிருந்தது. மண்டைக்குள் கிர்ரென இரத்தம் பரபரத்து ஓடியதை வெளியே சொன்னால் அகவயமான இந்த பித்துநிலை புரியாது என  வெளிப்படுத்திக்கொள்ளாமல் உணர்ந்து இரசித்திருக்கிறேன்.இவர்களது எழுத்துகள் மரபார்ந்த எழுத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகைமையாக இருக்கிறது. பேசக்கூசிய வார்த்தைகளென தவிர்க்கப்பட்டதை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களின் கதையைப் பேசியது. 

யதார்த்தம்,வட்டாரவழக்கு,அகமனதின் ஓட்டம்,பின்நவீனத்துவம்,தலித்திய வாழ்க்கை என தமிழ்ச்சிறுகதைகள் பயணப்பட்டிருக்கிறது.மரபார்ந்த ,பண்பாடு சார்ந்தவற்றை கேள்விக்குட்படுத்திவருவது போன்றே காலத்திற்கு ஏற்ப புதுப்புது அலைகளில் வெளிப்படுவது அவசியம்.
2

சமகால வாழ்வின் அசல் தன்மையை விமர்சனம் செய்யாமல் பாத்திரங்களின் மூலம் உலவ விடுகிற லக்‌ஷ்மிசரவணகுமாரின் கதைகளில் வன்மத்தைத் தேக்கிக் கொண்டிருக்கிற உடல்,நிராசைகளால் நிரம்பிய,அழுக்குகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிற உடல் எவ்வித நிர்பந்தங்களுமில்லாமல் பாலுறவைத் தேர்ந்துகொள்கின்றன.
பாலியல் கதைகளாக மேலோட்டமாகக் கருதுகிற பொதுப்புத்தியிலிருந்து வெளியேறி இக்கதைகளின் பின்னிலவும் அரசியல் முக்கியமானது. பண்பாட்டினையும் மரபார்ந்தவற்றையும் பரிசீலிக்க சொல்லுவது காலத்தின்  அவசியமாகிறது.அவற்றோடு சமகாலத்தில் மண்ணிலிருந்தும் தனக்கான வாழ்வாதாரத்தினை இழந்தும் பிழைப்புக்காக பிடுங்கி எறியப்படும் சாமானிய மக்களின் அல்லற்பாடு வயிற்றுப்பசிக்கு இணையாக உடல்பசியை தணித்துக்கொண்டு ஆறுதலடைகிறது.
லக்‌ஷ்மியின் முதலிரண்டு தொகுப்புகளான நீலநதி,யாக்கையில் கதைமாந்தர்களில் பெண்கள்  பிரதானமாக முன்னிறுத்தப்படுகின்றனர். உடலை வர்க்கத்தின் பின்னணியில் பகுத்துப் பார்க்கமுடியும்.இங்கு நிலவுகிற பொருளாதார அடுக்குகளுக்கேற்ப அவர்களின் மனமும் தைரியமும் இயங்குகிறது.நடுத்தட்டுவர்கத்தினர் கட்டிக்காப்பாற்றும் பிம்பத்தினை அடித்தட்டு மக்கள் உடைத்து நொறுக்கியிருப்பர். அன்றாட வாழ்க்கைக்கு உடலை மூலதனமாகக் கொண்டவர்கள் வேறெதையும் பொருட்டாக நினைத்துக்கொண்டிருப்பதில்லை.உழைத்துக்களைத்திருக்கிற மக்களுக்கு அன்றைய களைப்புக்கான தீர்வொன்று போதுமானதாயிருக்கிறது.
விளிம்புநிலை மகளிர் உணர்வுப்பெருக்கெடுத்து அழுது கொண்டிருப்பதில்லை.நடுத்தரப் பெண்களிடத்திலிருக்கும் அச்சமில்லை.பெண்ணுக்கான தேவையை,பெண் பாலியல் தொழிலாளியாவதை,உடனடியாக பெண்ணுடல் தயக்கமின்றி தயாரிப்பின்றி மிகக்குறைந்த பணத்திற்காக இறக்கப்படுவதைப் பேசுகின்ற கதைகளாக லக்‌ஷ்மியுடைய கதைகள் இருக்கின்றன.நடைமுறையில் அதிகாரமும்,அடிமைத்தனமும் பாயாத பெண்கள் இல்லை.இவர்களது உடல் வண்மை மிக்கதாயிருந்தாலும் கூட நினைத்தவிடத்தில் பயன்படுத்திக்கொண்டு,வன்முறை செலுத்தப்படுகிறது.
அய்யோபாவம் என்றோ இந்தநிலைமாற வேண்டுமென்றோ வெளிப்படையாக கருத்துகளை முன்வைக்காமல் கதைகளும் பாத்திரங்களும் வாசிப்பவரின் மன ஓட்டத்தினை அசைக்கின்ற இடத்தில் அழகியலோடு கதையாகின்றன.எழுத்து ஏற்படுத்தும் அதிர்வில் வாசகமனம் படபடக்கிறது;சபிக்கிறது;என்னசெய்யலாமென உக்கிரம் கொள்கிறது.இத்தகு புள்ளிக்கு மனங்களை நகர்த்துகிற நேர்த்தி குறிப்பிடத்தக்கது.
கதைகளில் அதிகமும் பெண்களை மையப்படுத்தியிருப்பதால் எதிர்பாலினரை ஆசிரியர் பயன்படுத்துவதற்குரிய இணைவுக்குக் காரணமென்ன? என்று பார்க்க வேண்டியிருக்கிறது.பெண்களின் வாழ்க்கை - பெண்களை எழுதுவதன் மூலம் உண்டாகிற உண்டாக்குகிற கிளர்ச்சி இவற்றிற்கிடையிலான இடைவெளி மிகக்குறைவு.இதனை கவனத்தில் கொண்டு நுட்மாய் இயக்கவேண்டியிருக்கிறது.

3
 முந்தைய தொகுப்புகளிலிருந்து மாறுபட்ட கதைகளைக் கொண்டிருக்கிறது வசுந்தரா எனும் நீலப்பறவை. பரிட்சார்த்த முயற்சிகளைக் கைவிடாமலிருப்பதுதான் எழுத்தின் உயிர்ப்பு.இந்தத் தொகுப்பிலும் அத்தகு முயற்சிகளைக் காணமுடிகிறது.
வடிவத்தில்,உத்தியில், கருத்தில் என மூன்று இடங்களிலும் தொழிற்பட்டிருக்கிறது.தேர்ந்தெடுத்திருக்கிற மாறுபட்ட கதைக்களங்கள், கதாபாத்திரங்கள் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விளிம்பைக்காட்டுகிறது.  ஓடிப்போன அத்தைக்கு கொடுக்கப்படும் இடம் குழந்தை மனநிலையில் சொல்லப்பட்டிருக்கிறது. தன்விருப்பத்திற்காக உடன்போக்கியவள் குறித்து சங்கப் பாடல்களில் பதிவு இருக்கிறது நற்றாயும் செவிலித்தாயும் பதற்றங்கொண்டு தேடுவதைப் பார்க்கிறோம்.
காலம் மாறினாலும் மாறாத ஒன்றாக அப்படி செய்தவளின் மீது கையாளப்படுகிற புறக்கணிப்பு இக்கதையின் அடிநாதம்.இன்னும் மாற்றமில்லாதிருக்கும் பெண்களின் நிலையைக்காட்டுகிறது
ஆட்டத்தின் விதிகள் கதைத்தலைவி குழுநடனமாடுபவளாயிருந்து,திருவிழாவில் ஆடுகிறாள்.”முப்பதைக்கடந்த பெண்களுக்கு உண்மையில் சினிமாவில் எந்தப்பிரயோசனமும் இருக்கப்போவதில்லை தான் எம்மாத்திரம்”என சினிமா கனவிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழத்தொடங்குகிறாள்.
முதல் தகவல் அறிக்கை கதையின் ஒச்சம்மா பெண்வடிவாய்இருக்கும் அர்த்தநாரி,அவளது தாய்மைமனதையும் மீறி அவள் தாயாகவில்லை என்பதன் வசவு குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாய் இருக்க அத்தனை தைரியமும் பலமும் கொண்டவள் தற்கொலையைத்தேர்கிறாள்.ஒரு நபரை வெவ்வேறு கோணங்களில் அறிமுகப்படுத்துகிற உத்தி இக்கதையின் தனிச்சிறப்பு.
நீலநதி, முதல் தகவல் அறிக்கை,வசுந்தரா எனும் நீலப்பறவை ,முத்துப்பிள்ளைகிணறு ,ஆட்டத்தின் விதிகள் ஆகியன இத்தொகுப்பில் முக்கியமான கதைகள்.

         
வாழ்க்கை திசைமாறிப்போவது,உடல் மூலதனமாக இருப்பதும் அந்த உடலுக்கு முடியாதென்ற நிலையில் மனிதம் தொலைப்பதும்,ஆளுமைகள் தடம்புரண்டு போவது என்கிற கதைகளுக்கான ஓட்டங்களைக் கொண்டிருக்கிற மொழி சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. நமக்கு வெளியே இருக்கும் மொழிதான் நமக்கு அணுக்கமாகிறது.அகவயமாக செயல்படுகிறது.
லக்‌ஷ்மிசரவணகுமாரின் மொழி வசப்படுத்தக்கூடியது;கட்டுக்கோப்பான அமைப்பைக்கொண்டிருப்பது;தேர்ந்த வார்த்தைகளின் கோவை. ”கூட்டுப்பண்பு முக்காலத்திற்கும் உரியது.கால,இட,மொழி வேறுபாடுகளுக்கு ஏற்ப வடிவங்களே மாறுபடும்.ஆனால்,மூலம் ஒன்றே ”எனும் யூங்கின் கருத்தையும் கவனத்தில் கொண்டுபார்க்கையில் எதையும் இலாவகமாக வெளிப்படுத்தக்கூடிய மொழி லக்‌ஷ்மி சரவணகுமாரின் தேர்ந்த ஆயுதம் . ஆயுதத்தை எத்திசையில் சுழற்றலாமென்பதன் விழிப்புணர்வோடான தீவிரத்தைக் கைவிடாது தொடர வாழ்த்துகள் ……

                                                          



Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு