நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி

கோடைபுற்களின் இடப்பெயர்வு…
ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது. ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது. புலி தானொரு புலியாயிருக்கவே ஆசைப்படுகிறது.”
- ஸ்பினோசா
ஆதம்மா இந்த நகருக்கு வந்த நாள் முதல் ஒருமுறையேனும் கடற்கரைக்குப் போகவேண்டுமென ஆசைகொண்டிருந்தாள். வெக்கையும் உலர்மணலும் நிரம்பிய தன்னூரில் குடிக்கத் தண்ணீர் எடுக்க வேண்டு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவள் இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் தண்ணீர் பேரதிசயம். ஊரிலிருக்கும் எல்லோரையும் போலவே இவர்கள் குடும்பமும் கிடைத்த வேலைகளைச் செய்வதற்காக சொந்த ஊரைவிட்டுக் கிளம்பினார். ராஜஸ்தானிற்கும் மஹாராஷ்டிராவிற்குமாக இவளின் சொந்தக்காரர்கள் நிறையபேர் நகர்ந்து போனாலும் இவள் அப்பாவான ராஜீவுக்கு அவ்வளவு தூரம் போவதில் விருப்பமில்லை, வீட்டிலிருந்து கொஞ்சம் பொருட்களைக் கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய தினத்தில் மொத்த நகரும் பெருமழை பெய்து நிறைந்திருந்தது. சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் வீடுகள் அவ்வளவிலும் மழைநீர் தேங்கிய குளமென தளும்பிக்கொண்டிருந்தன. இந்த ஊரில் வெயிலே இருக்கப்போவதில்லையென எண்ணிக்கொள்ள முடிகிற அளவிற்கு அழகானதாயிருந்தது சென்னை. பின்னிரவு அவர்கள் ரயிலேறியபொழுது கூட்டத்தில் இடமின்றி அவர்கள் மூன்றுபேரும் சரியாய் உறங்கியிருக்கவில்லை. அதிலும் தமிழ்நாடு பார்டரை நெருங்கும்போதே நல்ல குளிர்வேறு. ஆதம்மா அம்மாவை இறுக்கிக் கட்டிக்கொண்டு சாய்ந்திருந்தாள். முழுமையாய் கை கால்களை நீட்டி உட்கார இடமில்லாமல் தரையில் உட்கார்ந்து பாதிக் கால்களை இருக்கைக்கு அடியில் நீட்டி சாய்ந்திருந்தாள். ராஜீ எதிர்த்தாற்போல் ஒரு சீட்டில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். நடக்கப் பாதை எதுவுமில்லாததால் பாத்ரூம் போகவேண்டி அடிக்கடி ஆட்கள் தலை முதல் உடல் வரை அவ்வளவையும் தாண்டிச் சென்றனர். பாதிக் கண்களை மூடியும் மூடாமலும் ராஜீவின் மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். ஆதம்மா மட்டும் அவள் மடியில் சாய்ந்து கால்களை நன்றாக நீட்டி தூங்கினாள்.
இவர்களோடு சேர்ந்து ஜம்பலமடுகிலிருந்து இன்னும் சில குடும்பங்களும் வந்திருந்தனர். அதிகாலையில் அவ்வளவு பேரும் செண்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கி அம்பத்தூர் போகிற பேருந்திற்கு வழிகேட்டு நின்ற பொழுது இந்நகரம் இன்னும் சில அகதிகளை தனக்குள் வாங்கிக் கொண்டது. எப்பொழுதும் உறங்கிக்கொண்டிருக்கும் செண்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய மரங்கள் அவ்வளவு பெரிய இரைச்சல்களுக்கு மத்தியிலும் சலனிமின்றி நின்றிருந்தன. அவ்வளவு பெரிய ஸ்டேஷனும், சாரைசாரையாக மக்கள் வந்து போவதுமாய் இருப்பதைப் பார்க்க, இந்த ஊர் கடப்பாவை விடவும் பெரியதென நினைத்து சந்தோசப்பட்டாள். பேருந்து செல்லும் வழி முழுக்க கடைவீதிகளும் பெரிய பெரிய கட்டிடங்களுமாய் அவள் முன்பின் பார்த்திராததொரு உலகமயிருந்தது. அந்த பஸ் அப்படியே இன்னொரு சுற்று சுற்றிவிட்டு வந்து இறக்கிவிட்டால்கூட சந்தோசப்பட்டிருப்பாள். அவர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஒரேயிடம்தான். தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே அந்தக் கட்டிடம் தெரிந்தது. பதிமூன்று மாடிக் கட்டிடம். பார்க்கையில் மலைப்பாகவும் அந்தக் கட்டிடத்தில்தான் வேலை பார்க்கப் போகிறோமென நினைக்கவும் ஆச்சர்யமாயிருந்தது அவளுக்கு. கீழ்நின்று அன்று பகலில் அடிக்கடி கட்டிடத்தில் உயரத்தை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மழைபெய்ததால் வேலை நடந்திருக்கவில்லை. வேகமாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தினடியில் இவர்களை மாதிரி நிறையபேர் தெலுங்கு பேசுகிற ஆட்கள் சின்ன சின்னதாய் டெண்ட் அடித்து அங்கே சமைத்துக் கொண்டிருந்தனர். சின்னதொரு வீடாகவே ஒவ்வொரு டெண்ட்டும் மாறியிருந்தது. மழையின் ஈரம் மிகச் சிறிதளவே உள்ளே எட்டியிருந்தது. குழந்தைகள் விளையாடுவதும் சண்டைபோடுவதுமாய் அந்த இடம் சந்தோசம் நிரம்பியதாகப்பட்டது ஆதம்மாவுக்கு. இவர்களோடு வந்திருந்த குடும்பங்கள் எல்லாம் ஒரேயிடத்தில் டெண்ட் அடித்துக் கொண்டனர். எல்லோருக்கும் சேர்த்து சமைத்துக் கொண்டனர். கதை பேசிக்கொள்வதும் விளையாடுவதுமாய் ஆதம்மா அங்கிருந்த குழந்தைகளுடன் வெகுசீக்கிரமாகவே இணக்கமாகிவிட்டாள். விளையாடும் பொழுதுதான் ஒரு சிறுவன் ’இந்த ஊரில் கடலிருக்கிறதென்றான்.’ ஆதம்மாவுக்கு கண்கள் ஆர்வத்தில் விரிந்து கொண்டன. ‘நீ போயிருக்கியா?...’ அவன் பெருமையாய் ’ஆமாம்’ என்றான். ‘இன்னொரு நாள் லீவ் விடுகிற பொழுது அவளையும் கூட்டிப்போவதாகச் சொன்னான்’. அவளுக்கு அந்த இன்னொரு நாள் நாளையே இருக்கக்கூடாதாவென ஆசையாயிருந்தது. அந்த நாளை வந்து சில மாதங்களாகியும் வந்திருக்கவில்லை. கடலைப் பார்க்க முடியாத ஏக்கமிருந்ததே தவிர இங்கிருப்பது அபரிமிதமான சந்தோசம் கொண்டிருந்தாள். மாலை ஏழெட்டு மணிக்குமேல் அந்தபகுதியை சுற்றி வரும்பொழுது சந்தோசமாயிருக்கும். சுற்றிலும் வசதியானவர்களின் குடியிருப்புகள் வேறு. பெண்கள், முதியவர்களென வெவ்வேறு வயதுகளில் நிறையபேர் நாய்களுடனும் தனித்தும் வாக்கிங் போய்க்கொண்டிருப்பார்கள். இன்னும்கூட எதற்காக அவர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பது இவளுக்கு விளங்கியிருக்கவில்லை. ஆனால் அப்படி அவர்கள் நடப்பதைப் பார்க்கவே உற்சாகமாயிருக்கும். அதிலும் உடல்பெருத்தவர்கள் சத்தமாகச் சிரித்தபடியே நடப்பதும் கொஞ்ச தூரம் போனபின் நின்று மூச்சு வாங்குவதும் பார்க்க சிரிப்பாயிருக்கும் அவளுக்கு.
வறட்சியும் வெறுமையும் நிரந்தர உறவுகளாகிவிட்ட தன் நிலத்தின் நினைவுகள் இப்ப்பொழுதும் அவள் மனம் முழுக்க விரிந்து கிடந்தன. பறவைகள் பல வருடங்களாய் வரத்துக் குறைந்து சில மாதங்களுக்கு முன்பு ஊரில் பறவைகளின் ஒலியே இல்லை என்கிற அளவிற்கு மாறிப்போயிருந்ந்தது. ஆதம்மா பறவைகளைவிடவும் உடும்புகளுடனும் கோடைவிஷமேறிய ஸர்ப்பங்களுடனும் விளையாடவே அதிகம் விருப்பங்கொண்டிருந்தாள். அந்த நிலத்திற்கிருக்கும் இறுக்கமும் வெக்கையும் இவர்களின் உடல்களிலும் நிரம்பி ஓடியிருந்தது. பெண்கள் சூன்யக்காரிகளைப் போலவே எப்பொழுதும் நடமாடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த வீடுகள் பெரும்பாலும் இடிந்து ஆட்களின்றிதானிருந்தது. அவர்களுக்கு மழை வரும் திசையின் மீது முன்பிருந்த நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போனதொன்றாகவும் எரிச்சல் கொள்ளும் விசயமாகவும் மாறிப்போயிருந்தது. ஜம்பலமடுகுவிலிருந்து கண்டிக்கோட்டா வரையிலும் பாறை வெடிப்புகளும் காய்ந்த புற்களும் விரவிக்கிடந்தன. ஆதம்மாவுக்கு அவள் பார்த்ததிலேயே பெரிய ஊர் கடப்பாவும் இப்பொழுது சென்னையும்தான், கடப்பாவில் கடலில்லை ஆனால் கடலை விடவும் பிரம்மாண்டமான வெயிலிருந்தது. சென்னைக்குப் போகிறோமென வீட்டில் எல்லோருமாக முடிவெடுத்த பொழுது இவளுக்கு மனம் முழுக்க குதூகலம், புது ஊர், இனி தினம் தண்ணீர் எடுக்க நடக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேலை கிடைக்கும்பட்சத்தில் இரண்டு வேளையாவது சாப்பிடலாம். தன் வயிற்றிடமும் உடலிடமும் உற்சாக வார்த்தைகள் கூறி தேற்றி வைத்திருந்தாள். சிறுமியென்றும் குமரியென்றும் சொல்ல முடியாத பருவம் அவளுக்கு. வயது பதினாறை நெருங்கியிருந்தும் அவள் பூக்கவில்லை. அவள் வயதுப் பெண்கள் ஊரிலும் ஜம்பலமடுகிலும் இப்பொழுது பிற்பகல் தாண்டியபிறகே ‘ ‘ போகிறார்கள். இவள் இன்னும் உடும்புகளுடனும் பாம்புகளுடனும் விளையாடிக்கொண்டிருக்கிறாள். இந்த ஊரிலிருந்து பிடிக்கப்பட்ட பாம்புகளுக்கு எங்கிருந்தோ நல்ல விலை கொடுக்க வியாபாரிகள் தேடிவந்தபடியிருந்தனர். இதைக் கொண்டுபோய் என்ன செய்வார்களென ஊர்க்காரர்கள் எல்லோருக்குமே தெரிந்து கொள்ள ஆசைதான். ‘தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறதென’ அப்படி யோசிப்பதோடு நிறுத்திவிடுவார்கள். பாம்புகளைப் போலவே உடும்புகளும் அதிகமாய் வாங்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆதம்மாவுக்கு பாம்புகளின் உடல்வாகு பிடித்திருந்தது. அதனை கையில் நழுவிச்சென்றாலும் தீண்டமுடியாதபடி லாவகமாய் பிடிக்கும் திறனை யாரும் சொல்லித்தராமலேயே கற்றுக்கொண்டிருந்தாள். வெவ்வேறு நிறங்களில், உயரத்தில் நஞ்சு மிகுந்த நஞ்சில்லாத பாம்புகளை அவள் பிடிப்பதும் அதனை பாதுகாப்பாக அப்பாவிடம் கொடுப்பதும் அவளைப் பொறுத்தவரை விளையாட்டாகவே செய்துகொண்டிருந்தாள். ஸர்ப்பத்தின் நஞ்சு அவள் விரல் ரேகைகளில் படிந்ததனூடாகவே அவள் இன்னும் பூப்பெய்தியிருக்கவ்வில்லை என ஊரில் பெரியவர்கள் சொல்ல ராஜீவிற்கும் அவன் மனைவிக்கும் கவலையாகிவிட்டது. மகளுக்கு நாகதோஷம் இருப்பதாக யாரும் சொல்லாமலேயே அவர்கள் நம்பினார்கள்.
அவளிடம் யாரும் கேட்காதபொழுதும் அவள் பாம்புகளைப் பிடித்து வந்து தருவதை மட்டும் ஒருபோதும் நிறுத்தியிருக்கவில்லை. அம்மா முதலில் சொல்லிப் பார்த்தாள். பிறகு கோபமாக திட்டும்பொழுது ‘தனக்கு பொம்மைகள் என்று எதுவும் இல்லாததால் விளையாடுவதற்கு இதுமட்டும்தான் கிடைக்கிறதென’ ஆதம்மா அழுதாள். அம்மாவிற்கு பொம்மை என்கிற வார்த்தையே பல வருடங்களுக்குப் பிறகு கேட்டதால் புதிதாய்த் தெரிந்தது. அவளுமே பால்யத்தின் பொம்மைகள் வைத்து விளையாடியதில்லை. அந்த ஊரிலிருந்து சொற்ப குழந்தைகளிடமே பொம்மைகளிருந்தன. அதுவும் மண் பொம்மைகள். ஆதம்மா தனக்கு பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பொம்மைகள் வேண்டுமென்று அழுதது அப்பாவுடன் ஒருமுறை கடப்பா போய் வந்த பிறகுதான். இவள் வயதிற்கு அவளின் குழந்தையைத் தூக்கித்தான் அவள் விளையாடியிருக்க வேண்டும், பொம்மைக் கேட்கும் இவளை என்ன செய்வது? ராஜீவுக்கும் இவள் அம்மாவுக்கும் தீர்க்கமுடியாத கேள்வியாகிப்ப்போனது. இந்த வறண்ட காட்டையும், வெயிலையும் தவிர்த்துப் போனால் அவள் சரியாகக்கூடுமென அம்மாதான் முதலில் யோசனை சொன்னாள். ராஜீ அதன்பிறகு மூன்று தினங்கள் வீட்டிற்குத் திருமபவேயில்லை. வீட்டில் அம்மாவும் இவளும் மட்டுமேயிருந்தனர். கடைசியாயிருந்த கேழ்வரகில் அவர்கள் களி செய்து தின்றனர். அந்த மூன்று நாட்களின் பகல் வேளைகளிலும் ஆதம்மா எங்கேனும் காடுகளிலோ புதர்களிலோ இருந்து கிழங்குகள், காய்களைத் தேடி எடுத்து வருவாள். அப்படித் திரும்பிவருகிற நேரத்தில் அவளுடல் வெக்கையின் ரேகையோடிப் போயிருக்கும். வீட்டின் எல்லா மூலைகளிலும் மண்சுவர் உதிர்ந்து வெடிப்பு விழுந்திருக்க அந்த வெடிப்புகளின் ஊடாக வெக்கையும் காற்றும் ஒரே சமயத்தில் கசிந்து வரும். அம்மா வீட்டிற்கு உள்ளேயுமில்லாமல் வெளியேயுமில்லாமல் பாதி வாசலில் படுத்தபடிதான் எப்பொழுதும் கிடப்பாள். வாசலையொட்டிய கல்லில் பகலில் குடித்த வெக்கையெல்லாம் உதிர்ந்து மெல்லிய குளிர்ச்சி ஏரிக்கிடக்க ஆதம்மா எப்பொழுதும் அதில் உறங்குவாள். ராஜீ அந்தக்கல்லில் உறங்குகிற நாளில் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டு இவளும் உறங்குவாள். உறங்குகையில் எப்பொழுதும் வாயில் விரல் சப்புகிற பழக்கமிருந்தது அவளுக்கு. நல்ல அயர்ச்சியில் உறங்கும்போது எடுத்துவிட்டாலும் மீண்டும் அவளின் கை தானாகவே வாய்க்குப் போகும். தான் தூக்கி விளையாடிய ஸர்ப்பங்களின் வாசனை அவ்வளவையும் சுவைக்கிறதான உணர்வின்றியே அவள் சப்பிக்கொண்டிருப்பாள்.
மூன்றாவது நாள் இருட்டி நீண்ட நேரத்திற்கு வீட்டுத் திரும்பிய ராஜீ தன்னோடு ஒரு பெரிய பொதியைத் தூக்கி வந்திருந்தான். அம்மாவும் ஆதம்மாவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். எதுவுமே பேசாமல் தட்டில் வைத்துக் கொண்டிருந்த களியைக் கிளறி கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தவன் ‘இந்த ஊர் வேணாம்…மெட்றாஸ் போயிரலாம்…அங்க நம்மாளுக நிறைய இப்போ கட்டிட வேலைக்குப் போறாங்க…அவங்களோட போயிடலாம்…” அம்மாவும் மகளும் தங்களுக்குத் தெரியாத அந்த ஊரின் இயக்கத்தை சில நொடிகள் கண்களுக்குள் ஓட்டிப் பார்த்துக்கொண்டனர். ஆதம்மாவின் உடல் முழுக்க தான் தூக்கி விளையாடிய ஸர்ப்பங்களின் ஊறலிருப்பதாய் உணர்ந்தால். இனி ஒருபோதும் ஸர்ப்பங்களோடு விளையாட முடியாமல் போகுமோவென கவலையாயிருந்தது. ஊரின் மிக நீண்டகால வெறுமையில் ஒவ்வொரு நாளும் அதன் நிசப்தம் பெருகியோடிக் கொண்டிருந்தது வீதிகளில். உடல் முழுக்க புழுதியப்ப நாய்கள் எதையோத் தேடி சதாவும் அந்த வீதிகளுக்குள் ஓடுவதும் எதையாவதுப் பார்த்துக் குரைப்பதுமாயிருக்கும். முதலில் இரக்கப்பட்ட மிஞ்சுகிறதை எடுத்து அந்த நாய்களுக்கும் கொஞ்சம் திண்ணக் கொடுத்த ஊர்க்காரர்கள் இப்பொழுது நாய்கள் குரைக்கிற பொழுது தங்களின் செவிகள் மரத்துப்போய்விட்டதாய் நினைத்துக்கொண்டனர். தானியமென்று எதுவும் யார் வீட்டிலும் இருந்திருக்கவில்லை. அந்த ஊரின் வெளிக்கு மேலாக அங்கிருந்த புலம்பெயர்ந்தவர்களின் வயிறுகளும், என்னவானாலும் அந்நிலத்தை விட்டுப்போவதில்லையென உறுதியோடு கிடந்தவர்களின் வயிறுகளும் பிரம்மாண்டமாய் சுருங்கி விரிந்து கொண்டிருந்தன இடைவெளியின்றி.
இந்த ஊர் அவளுக்குப் பிடித்திருக்கிறதுதான், ஆனால் ஏதோவொன்றை எல்லா வீதிகளிலும் வேலை செய்கிற நேரங்களில் பெரும்பாலனவர்களின் முகங்களிலும் தேடிக்கொண்டிருந்தாள். பலர் மனித அசைவின்றி மனிதனும் மிருகமுமல்லாத ஜீவராசிகளாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் கிடந்தனர். இன்னும் சில நாட்களில் தானும் அப்படியாகிவிடுவமோ என்கிற அச்சம் அவளுக்கு.

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு