இந்த வருசம் புத்தகத் திருவிழாவில்....

புத்தகங்கள் வாசிக்கத் துவங்கிய வயதில் ஒரு நல்லப் புத்தகத்தை சொந்தமாக வாங்க முடியாதளவிற்கு துரதிர்ஸ்டசாலி நான். ஊரிலிருந்த ஒரு பெரிய இலக்கியவாதியிடம் அப்பொழுது நான் வாசிக்க ஒரு சில புத்தகங்களைக் கேட்டுப் போகையில் ஒரு பொருட்டாகக் கூட என்னை மதித்திருக்கவில்லை. லைப்ரைரியில இருக்க புத்தகத்த எல்லாம் படிச்சிட்டியா எங்கிட்ட வந்து கேக்கற?...
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.... வேறு வழியே இல்லை என்ற நிலையில் வீட்டிற்குத் திரும்பியவனுக்கு பக்கத்துவீட்டிலிருந்த ஒரு டீச்சர் நூலகத்தில் எனக்கு உறுப்பினர் அட்டை எடுத்துக் கொடுத்தார்....
இரவுகளில் தறி ஓட்டுகிற வேலை... பகலில் நூலகம்....நல்ல வேளை அந்த மாபெரும் எழுத்தாளன் எனக்குப் புத்தகம் தந்திருக்கவில்லை. தந்திருந்தால் நான் நூலகம் போயிருக்க மாட்டேன்...
தூசுகளும் குப்பைகளுமாய் அடர்ந்திருந்த நூலகத்தின் அத்தனை அடுக்குகளுக்குள்ளும் பகல் முழுக்க அலைந்து திரிந்தன என் கண்கள்., ஒரு நான்கு வருடங்கள் என்னுடைய பகல் நேரங்கள் முழுக்க அந்த நூலகத்தில் கழிந்தன... அங்கு வருகிற நிறையபேர் நான் அங்கு வேலை பார்ப்பதாகத்தான் நினைத்திருந்தார்கள்.
அட்டை கிழிந்த புத்தகங்கள்....யாருமே கையிலெடுத்துப் பார்க்காத முக்கியமான புத்தகங்கள் இப்படி அந்த நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் எடுத்து வாசித்து விடுவேன்... தமிழின் அத்தனை எழுத்தாளர்களையும் அந்த நூலகம்தான் எனக்கு அறிமுகப்படுத்தியது....
அப்பொழுதும் கூட சொந்தமாக காசு குடுத்து ஒரு புத்தகம் வாங்க முடியாத அளவிற்கு துரதிர்ஸ்டசாலியாகத்தான் இருந்தேன்...
பிறகு அலைச்சல்.... இடப்பெயர்வு.... எல்லாம் நிகழ்ந்தது...நானும் எழுதினேன்... எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டாலும் இப்பொழுதும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து எழுதுவதாலும் வாசிப்பதாலும்  மட்டுமே எனது இருப்பை உறுதி செய்கிறேன்....
எனது முதல் புத்தகம் வெளியிடப்பட்ட பொழுது நான் அந்த நிகழ்வுக்குத் தாமதமாகவே சென்றேன்...
இரண்டாவது புத்தகம் வெளியிடப்பட்ட பொழுது நான் நிகழ்வுக்குப் போக முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு எனது இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்ட பொழுது நிஜமாகவே சந்தோசமாய் இருந்தேன்...
புத்தகங்கள் வந்தது ஒரு காரணமென்றால் இன்னொரு புறம் இந்த வருடம் நிறைய பத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்... இங்கே வீட்டில் வைக்க இடமில்லாமல் எல்லா இடங்களிலும் நுழைத்து பாதியை எனது தலை மாட்டில் வேறு வைத்திருக்கிறேன்....
விடிய விடிய தூங்காமல் நான் புத்தக்ங்களை ஆசையோடு புரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து விஜி “லூசாகிடாதடா...” சொல்லி விட்டுப் போகிறார்... எத்தனை வருடங்கள் ஆனாலும் புத்தகங்களைப் பார்க்கிற பொழுது இருக்கிற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
முதல் நாளிலேயே முக்கியமான மொழிபெயர்ப்புகளை வ.உ.சி நூலகத்திலிருந்து நல்ல டிஸ்கவுண்ட்டில் வாங்கினோம்....
ஆயிரத்து ஓர் இரவுகள் - தமிழில் முழுத் தொகுப்பு
ஜாக்லாண்டன் கதைகள்
சர்வதேசக் கதைகள்
கெஞ்சிக் கதை - முதல் ஜப்பானிய நாவல்
அதோடு இன்னும் சில மொழிபெயர்ப்பு நூல்களும் உடன் ஏ.கே.செட்டியாரின் நூல்களும்...
பிறகு சாகித்திய அகாதெமியில்
பாதிக்கு விலையில் இந்திய மொழிபெயர்ப்புகள்
தயவுசெய்து சாகித்திய அகாதெமி ஸ்டாலுக்குப் போங்கள்.
அற்புதமான புத்தகங்கள் எல்லாம் மிக மிக குறைந்த விலையில் போட்டிருக்கிறார்கள்.
பிறகு முன்றில் போய்
சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ
எங்கள் தந்தையரைப் புதைப்பதற்கு -நாவல்
மார்த்தா த்ராபாவின் ஒரு ப்ரெஞ்ச் நாவல் எல்லாம் வாங்கிவிட்டு
பாரதி புத்தகாலயத்தில் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினோம்
முக்கியமான அல்பேனிய நாவலான பெனி என்னும் சிறுவன்...
மீண்டும் சுற்றி வந்த பொழுது பொண்ணியில் பூமணியின் ஐந்து நாவல்களை வாங்கினோம்...
கடைசியாக கிளம்பும் முன் சில கவிதைத் தொகுப்புகள்
மேலும் சில மொழிபெயர்ப்புகளென சுமக்க முடியாமல் சுமந்தபடி வீடு வந்து சேர்ந்தோம்....
இரண்டாவது முறை போன பொழுது எனது நூல் வெளியீட்டு விழாவை முடித்து விட்டு விட்டுப்போன மொழிபெயர்ப்புகளை சேகரிக்கத் துவங்கினேன்...
கையிலிருந்த கடைசி ரூபாய் வரை புத்தகம் வாங்கிய பொழுதுதான் அப்பாடாவென நிம்மதியாய் இருந்தது.
புத்தகங்களை எவ்வளவு தூக்கினாலும் சுமை தெரிவதில்லை... புத்தகங்கள் வாங்காமல் பையில் பணத்தை சுமப்பதுதான் பெரிய கவலையாக இருக்கிறது...
நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்கு எதிராக பிளாட்ஃபார்மில் சுற்றியபொழுது அதிர்ச்சி... காவ்யா பதிப்பகத்தின் முக்கியமான பல புத்தகங்கள் இருபது ரூபாய்க்கு...
ஒரு ப்ரெஞ்ச் நாவல்... யமுனா ராஜேந்திரனின் ஒரு கட்டுரைத்  தொகுப்பு
ரமேஸ் ப்ரேமின் சொல் என்றொரு சொல், வெறும் முப்பது ரூபாய்க்கு 'dictionary of drinks' என்னும் பொக்கிஷம்....மொத்தமாக நூறு ரூபாய்....
உள்ளே ஆதிரன் கண்ணி பட்டார்... அவர் சில புத்தகங்களை வாங்கித் தந்தார்.
வனவாசி, பிற்காலப்புலவர்கள், சமணக்கதைகள் இப்படி..... இப்படி சின்ன சின்னதாய் சில புத்தகங்கள் சேகரித்த பின் கடைசியாய் வந்த சந்திரா காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து ஒரு துருக்கிய மொழிபெயர்ப்பு நாவலை வாங்கித் தந்தார்.
மனமும் நிறைந்து போனது...
இன்னும் வாங்க வேண்டிய புத்தகங்கள் என கொஞ்சம் இருக்கிறது...
என் மீது ப்ரியமும் அக்கறையும் இருக்கிற நண்பர்கள் தாரளமாக வந்து அன்பு செய்யலாம்....
அதிகபட்சம் இன்னும் ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கான புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கிறது....

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.