ஆம் நண்பர்களே நாங்கள் அப்படித்தானிருக்கிறோம்.....


          

இது தமிழ் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு மட்டும்...அல்லது அதனை வாசிக்கிற அன்பர்களுக்கு மட்டும்...நிச்சயமாக சுடசுட இல்லை..கொஞ்சம் ஆறிப்போனதுதான்..ஒரேயொரு நிபந்தனை இதை வாசிக்கும் முன்பாக நீங்கள் சிறு தொகையொன்றை எனக்குத் தந்துவிட வேண்டும், ஏனெனில் நானும் காசுக்காக  எழுதுகிறவன்...

ஒரு பொஸ்தவத்த எதுக்காகவெல்லாம் விமர்சனம் செய்வாக, பொழுது போகாங்காட்டி பொறங்கைய தலக்கிக் குடுத்து படிச்ச அலுப்புத் தீர...இல்லாங்காட்டிக்கு எங்காச்சும் நாலு இளிச்சவாயனுங்க உக்காந்திருந்தா அவய்ங்களுக்கு வெளயாட்டுக் காட்டி சிரிக்க வெக்க...பெறகு எழுதறவன்னு ஒருத்தன் இருப்பானே அவன் தெரிஞ்சவனா இருந்தா சொறிஞ்சு விடனும்..இல்லியா டவுசரக் கழட்டிப் பிடனும்..இதுக்குப் பெறவால என்ன தேவயிருக்கு வெமர்சனத்துக்கு..(இன்னும் பாத்தியன்னா உரிமையோட படிச்சிப்பிட்டு வெமர்சனம் செய்யப் போயி செல பேரு என்ன மாதிரி செருப்படி வாங்கிட்டு வாறதும் நடக்கும் அது தனிக்கத)

செரி..நா விசயத்துக்கு வாறேன்....கொஞ்ச நா மிந்தி சேலத்துல நாவல் விமர்சனக் கூட்டம் நடந்துச்சாமாம்...நல்ல விசயந்தான..எழுத்தாளன் பாவம் பொஸ்தவம் போட்டுப்பிட்டு நீ படிச்சயா நீ படிச்சயானு கேட்டுக்குத் திரியாம வம்பாவாச்சும் ரெண்டு பேரப் படிக்க வெச்சு கேக்கறதில கொஞ்சம் நிம்மதியாப் போவும்...நாமதேன் போக முடியலையே போனவுக என்ன சொல்றாகனு பாக்க நெனச்சு மெல்லங்காட்டிக்கி சுத்தி வந்தேன்....எலே எச்சுமி எச்சுமி....இந்த மாதிரி இந்த மாதிரி உங்க தமிழ்நதியக்கா நல்ல பதிவு எழுதியிருக்காமாண்டா அப்பிடியின்னு கல்யாணத்துக்குப் போன எட்த்துல ஒருத்தன் சொல்லக் கேட்டு வந்து படிச்சேன்....
விதி யார விட்டுச்சு?..
மொத ரெண்டு பாரா பாத்தியன்னா கூட்டம் நடந்த்தப் பத்தி அம்புட்டு செறப்பா எழுதியிருந்த்த படிச்சிப்பிட்டு ஒரே சந்தோசந்தேன்..சூப்பரப்புன்னு..
பெறவால தாண்டிப் போகையிலதேன் வந்த்து வென...வாடா ராசா வாட்ட சாட்டமா..வாங்கிட்டு போ ஓட்ட ஓட்டமானு எங்காயா சொல்லும் அந்த மாதிரிக்கி ஆகிப் போச்சுக் கத....அதேங்க....இந்த வாமு மாமு...ச்சீ...வா மு கோ மு இருக்கார்ல அவரு நாவல் முழுக்க அம்மணக் குண்டி கதையா இருக்குன்னு உலகத்தில யாருக்குமே தெரியாத ஒரு பெரும் ரகசியத்த கண்டு பிடிச்சு இவுக வெமர்சனம் பன்னினாகளாம்.....முதல்ல படிச்சேன் சிரிப்பு வந்துச்சு...பெறவால மறுக்கா படிச்சா இன்னுஞ் சிரிப்பு...என்ன்ங்டா சாமியிது இந்தாளு அம்மணக் குண்டி கதயாத்தான் எழுதுவானு வாசிக்கிற பத்து பேர்ல எட்டு பேருக்குத் தெரியும்..அப்படியிருக்க மொத்த பொஸ்தவத்துலயும் அவர் ஏதாச்சும் வெசயம் சொல்லுராறானு பாத்தேனா என்ன செய்ய?...

சரி படிச்சிய..விட வேண்டிதான...எனக்குத் தெரிஞ்சி இந்த பொஸ்தவத்துல எங்கனக் குள்ளயும் தமிழ் வாசிக்கத் தெரிஞ்சவங்க இத வாசிக்கலைனா தள்ளி வெச்சிப்பிருவோம்னு சொல்ல்ல...உலகத் தரத்துல எலக்கியம் பண்ணியிருக்கம்னும் அந்தாள் சொல்ல்ல...அப்பறம் என்னாத்து சூட்டு பாமா..மாட்டு பாமா...ஆங்..அதேன் ஆர்ட்டு பாமு...ஆர்ட்டு எல்லா எழவுந்தேன்..இருக்கும்னும் சொல்ல்ல..ஆனா அதுக்கெல்லாம் முன்னயே நான் பணத்துக்காகத்தேன் எழுதறம்னு அந்தாளும் சொல்லிப்பிட்டான்..(எம்புட்டு திமிரு பாத்தியளா?) இம்புட்டும் தெரிஞ்சு பொஸ்தவம் வாங்கினது யார் தப்பு? செரி...வாங்கினதுமில்லாம முழுசா படிச்சது யார் தப்பு..?
இதுக்கு பெறவு வருவோம்..முந்தி வேற சோலி இருக்குல்லா...ஒரு பொஸ்தவத்தப் படிச்சிப்பிட்டு இது நாவலாகல, கவிதையாகல, கதையாகல, கழுதையாகல, குதிரையாகலனு முடிவு பண்ணி தீர்மானிக்கிற புலிக இங்க பெருசா என்ன செஞ்சிருக்காகளாம்...ஒரு பிரதிய மறுக்கக்  காரணமே வாசிக்கிறவனோட அதிகாரத் திமிர் ( பணத்திமிர்) அல்லது மேல் சாதித்திமிர், அதுவும் இல்லாங்காட்டி அறிவாளித்திமிர்....அறிவாளித்திமிர் தமிழ் இலக்கியக் குடும்பத்தில் வர வாய்ப்பில்ல...வாரதா இருந்தா உருப்படியா எதாவது நடந்திருக்கனும்ல சமகாலத்துல....பெறகு இது என்னவா இருக்கும்னு நீங்க பாத்து தெரிஞ்சிக்கங்க சாமி....

     நானும் கொஞ்ச நாளா கெவுனிக்கிறேன்...எங்க அக்கா மாருக பாலியல எழுதினாக்கா அது கலகமாயிப்போவது...எவனாச்சும் பஞ்சாயத்துக்கு வந்தாலும்...மனுஷ மக்க வந்து என்ன்னு கேளுங்கய்யா...பஞ்சாயது பண்ண வாறாய்ங்கனு சபையும் கூடிப் போவுது.....இதே நாங்க எழுதிப்பிட்டம்னா..அவன் எந்த நேரமும் அந்த நெனப்புல திரியறவன்ல அப்பிடித்தேன் இருப்பாய்ங்கனு பக்கத்துல நின்னு விளக்குப் பிடிச்ச மாதிரி சொல்லிப்பிடுவாய்ங்க....பத்தாத்துக்கு...அவிய்ங்க ஆம்பளையும் ஆம்பளையும் செஞ்சிக்கிருவாய்ங்க...ங்கறது...யாரு  இல்லையின்னா..ஆம்பளையும் ஆம்பளையும் இருக்கட்டும் இல்லங்காட்டிக்கி ஆட்டுக் குட்டியோட இருக்கட்டும் என்ன வந்துச்சு?..
( இத எழுதக்கூடாதுன்னு முந்நூறு தரம் மனசுக்குள்ள சொல்லியும் நிப்பாட்ட முடியல கெரகம்..)
எங்களுக்கும் பாலியலப் பத்தி எழுத உங்களோட பணக்கார எழுத்தாள சமூகத்துகிட்ட நாங்க உத்தரவு கேக்கறோம் சாமி... மனசிருந்த அனுமதி குடுங்க...இல்லயின்னா நாங்க சரோசாதேவி புத்தகத்துல எழுத ட்ரை பண்றோம்..
நாவலுக்கான எந்த அடையாளமும் இல்லையாமா? செரி..நாவலுக்கான அடிப்படை என்ன? விரிவா சொல்லுங்க...நீங்க படிச்ச ஒலக நாவலுகல்ல எப்படி நாவல் இருக்கனும்னு இருந்தா அதயும் சொல்லுங்க..முடியலையா நீங்க ஒரு நல்ல நாவல எழுதுங்க...வாமு மாமூ சொன்ன மானிக்கி குளத்தாங்கரை சமாச்சாரம் கூட நாவலாகட்டுமே...
விட்டுப்போட்டு தக்கனூண்டுல ஒரு பனைவ எழுதிப்பிட்டு மத்தவங்களோட்த கொற பேசப்பிடாது....நல்ல நாவல் ஒன்னு நீங்க எழுதுங்க....நாங்க தல வணங்கறோ...அதுவும் இல்லாங்காட்டி மாமூக்கு இருக்கவே இருக்க பிரிண்டிங் பிரஸ் அங்க வேலக்கி போட்டுப்பிடலாம்...(யோவ் இப்பவே கேட்டுக்க..பெறவால சண்டைக்கி நிக்கப் பிடாது..) அப்படி எழுதுற வரையிலும் நாங்க அம்மணக்குண்டியா எழுதறம் பொம்பளைகளப் பத்தி அசிங்கமா எழுதறம்னு சொல்லக்கூடாது..நாங்க என்னிக்காச்சும் ஆம்பளைகள நீங்க குற சொல்றீங்கனு சொல்றமா?
ஆத்தி இந்தப் பஞ்சாயத்த இழுத்தா உதைக்க வருவிய..விட்டுடுறேன்...
ஷோபாவப் பத்தி குப்பையா ஒரு கட்டுரை எழுதி ஷோபாவ ரெண்டாவது தடவையா சாகடிச்சா அக்கா கூட ரொம்ப கோவமா சண்ட பிடிச்சதமா...செரி அடிப்படையா என்ன காரணம் ...நாவல்ல பாலியல் மட்டும்தான் இருக்கு..

இப்ப நாவல்ல இருக்க ஒரு சின்ன விசயத்த சொல்றேன் கேளுங் மக்கா..
ஒரு குட்டிக்கத...ஒருத்தி ஒருத்தன காதலிச்சிப்பிட்டு இன்னொருத்தனுக்கு வாக்கப்பட்டு போயிடுறா...போனவள மொத ராத்திரில புருஷங்காறன் வெறித்தனமா கடிச்சதுல அவளோட மார்ல ஒரு துண்ட கடிச்சித் துப்பிடறான்..அலறியடிச்சி அவ ஆத்தா வீட்டுக்கு வந்துடறா....வந்தவ..கொள்ள நாளைக்கப்பறமா காதலிச்சவன வரச் சொல்லி பேசிக்கிருக்கா...பெறவு அழுது முடிச்சு ரெண்டு பேரும் டுங்கா டுங்கா செய்றாங்க....அதயும் முடிச்சிப்பிட்ட அவங்கிட்டு பேசறவகடவுள் உடம்பும் உடம்பும் ஒரசுற இந்த பத்து நிமிசத்துல எவ்ளோ சந்தோசத்த வெச்சிருக்கான் பார்டா..இதுக்காகவாச்சும் எம் புருஷன்கிட்ட திரும்ப்ப் போகனும்டாஅப்பிடிங்கறா...

இதக்காட்டிலும் அந்த விசயத்த புரிதலோட என்ன்ண்டு சொல்லறது? நீங்க சொல்ற ஆர்ட்டு எங்க விட்டுப் போயிருக்கு...ஆர்ட்டு பார்ட்டுனு சும்மா டக்கால்ட்டி விடறத விட்டுப்போட்டு மெச்சுப் போற மாதிரி ஒன்ன எழுதிக் காட்டுங்க...இல்ல சவாலாவே சொல்றேன்....இவ்வளவு அழுத்தமான விசயத்த உங்களால எழுத முடியும்னு எழுதிக்காட்டுங்க...பெறகு ஒத்துக்கிறோம்...சும்மா ஆனந்த விகடன்ல கவிதை கதை எழுதுற ஆட்களெல்லாம் வந்து ஆர்ட்ட பத்தி பேசப்படாது....சரி ஆர்ட்டு? அதுக்காவது விளக்கம் சொல்லுங்க...எதுவுமே நாங்க சொல்ல மாட்டோம் ஆனா உங்கூட்டுது நாவல் இல்ல கதையில்லன்னா உங்களுக்கெல்லாம் பதில் சொல்ற அவசியம் எங்களுக்கில்ல.....கோமுவோட நாவல்ல வர்ற பொம்பளைக ஆம்பள கிட்ட போறவளுங்கதேன்...ஆனா நெறையா காச வெச்சுக்கிட்டு என்ன செய்யனும்னு தெரியாம...இல்ல ஏ சி ரூம் ரொமப போரடிச்சிப் போச்சு செத்த அப்பிடி காத்தாட உலகம் எப்படியிருக்கும்னு பாக்கப் போயி ஒவ்வொரு நாளும் காலைல தூங்கி எந்திரிக்கிறப்ப எங்க இருக்கம்னு தெரியாத அளவுக்கு பணக்கார சென்மங்க இல்ல...அவளுக பூராம் வம்பாடுபட்டு உழைக்கிற சன்ங்க....உழைக்கிறதின்னா என்ன்னு கேப்பிய ? என்னத்தச் சொல்றது? இதுக்கெல்லாம் மேல நாங்க எழுதறது பணத்துக்காகத்தானு (என்னையும் சேர்த்துதான்) அவர் சொல்லியும் உம் படைப்பு  படைப்பில்லனு சொல்லப்பிடாது....எங்களுக்கு காவியம் எழுதனும்னு எந்த கட்டாயமும் இல்ல..உங்களுக்கு இருந்தாக்கா சந்தோசம்....

இப்பவும் இருக்க மொள்ளனுக்கு மத்தியில இத உக்காந்து எழுதனும்னு என்ன அவசிய மயிரு எனக்கிருக்கிதுன்னு எனக்கும் எம்மேலயே பலியாக் கோவந்தேன்...என்ன செய்றது.. நானும் அம்மணக் குண்டி கதையத்தேன் எழுதறேன்..எனக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் வேணுமில்ல....சின்னப்பையன்னு இப்பவேபரவாயில்லை நீங்களும் கூட..னு “ இளக்காரமா மெஸேஜ் அனுப்புறாங்க...வார காலத்துல பேசவே முடியாம போயிட்டா...அதேன்..அதோட கோமு மாமா எனக்கு பீர் வாங்கி குடுப்பார்னு ஊருக்கேத் தெரியும்..அதுக்காகவும்தான்( யோவ் மாமூ இப்ப குடிக்கிறதில்ல அதினால காசக் குடுத்துப் பிறனும்...) எல்லாம் உண்மைதான் ஆனால் எங்களிடம் கொஞ்சம் நேர்மை இருக்கிறது நண்பர்களே..என்ன எழுதுகிறோம் என்பதில்...இதற்கு மேலும் கல்லெறிவதுதான் உங்களின் விருப்பம் எனில் தாரளமாக எறியலாம்...ஏனெனில் நாங்கள் பணத்திற்காகத்தான் எப்பொழுதும் எழுதப்போகிறோம்........

                     லக்‌ஷ்மி சரவணக்குமார்..

Comments

  1. என்னா வொரு கொலவெறி அக்காமேல?
    எப்போதோ வாங்கினேன், கள்ளி நாவலை,இப்போதுதான் இருபது நாளைக்கு முன் எடுத்து புரட்டிப்பார்த்தேன், வா மூ கோமு --ஏதோ ஒரு பொம்பள எழுத்தாளிண்ணு அசால்ட்டா பொறட்டிப் பார்த்தேன். நீ இல்லீண்ணா நா என்னத்துக்குதான் ஆவப்போறேன் கண்ணம்மாண்ணு தொடங்குச்சு கதை. சரி.. இன்னொரு வட்டார வழக்கு எழுத்தாளரா... வெளங்குனாப்புலண்ணு கதைய படிச்சேன்...அப்புறம் முழு நாவலயும் படிச்சேன், 10நாளைக்கு முன் இன்னும் கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம், தவளைகள் குதிக்கும் வயிறுலாம் வாங்கி இப்பவும் படிச்சிகிட்டு இருக்கேன். இந்த குட்டி பிசாசுக தொல்ல தாங்க முடியல சாமி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு