மிகத் தாமதமானதொரு கடிதம் அல்லது எப்பொழுதோ எழுத சேகரித்திருந்த ஓர் கடிதம்....



பிரியமுள்ள ரம்யாவுக்கு,

இந்த ப்ரியமென்கிற வார்த்தை என்னை இப்பொழுது சில வருடங்களுக்குப் பிந்தையதொரு நிமிடத்திற்கு கொண்டுபோகிறது. எந்தவிதமான நேசத்திற்கான வார்த்தைகளையும் நீயோ அல்லது நானோ நேரிடையாக ஒருபொழுதும் பகிர்ந்து கொண்டதில்லை. என்றாலும் ப்ரியமுள்ள என்கிற வார்த்தை இந்நொடி என்னை உனக்கு மிக நெருக்கமானவனாக உணரச்செய்வதில் சந்தோசப்படுகிறேன்.

ஒவ்வொருமுறையும் உன்னிடம் பகிர்ந்திருக்க வேண்டிய வார்த்தைகளென்று கொஞ்சம் எப்பொழுதும் எஞ்சி நிற்கும். சம்பந்தமேயில்லாமல் ரயில் பயண இரவுகளிலும், திரையரங்குகளில் டிக்கெட் எடுப்பதற்கான வரிசையில் காத்திருக்கையிலும் வந்து தொலைக்கும் அந்த சொற்கள் உனக்கென்று எழுத நினைக்கிற சமயங்களில் ஒருபொழுதும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. சில நாட்களுக்கு முன் தஞ்சை வந்திருந்தேன் ரம்யா. முன்பு நீ பார்த்த அந்த அழுக்கு சட்டை சரவணனாக அல்ல...கொஞ்சம் புதிதாக, அல்லது சிரமப்பட்டு கொஞ்சம் ஒப்பனைகளுடன். ஒவ்வொரு முறையும் தஞ்சை வருகிற பொழுது ஏதோ உலகின் இன்னொரு துருவத்திற்கு போவதுபோல் அப்படியொரு சந்தோசமும் உற்சாகமும் இருக்கும். எல்லாவற்றிற்கும்ன் இரண்டே காரணங்கள்தான். ஒன்று நீ...இன்னொன்று மிஷன் தெரு.

மிஷன் தெருக் கதைகளை உன்னிடம் கூறி, பின்பொருநாள் தஞ்சை ப்ரகாஷின் ‘கடைசிக் கட்டி மாம்பலம்’ கதையை வாசித்து விட்டு நீ திட்டியது நினைவிருக்கிறதா?...எனக்கு அப்பொழுது உன்னைச் சமாதானப்படுத்துகிற வழி தெரியாமல்தான் ப்ரகாஷின் ‘மீனின் சிறகுகள்’ நாவலை வாசிக்கச் சொன்னேன். இந்தமுறை நீ இரண்டு நாட்கள் என்ன்னோடு பேசியிருக்கவில்லை. என்னை ரங்கமணி என பட்டபெயர் சொல்லி அழைக்கச் சொன்னபொழுது உன் கோபம் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீண்டிருந்தது.

நமது முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும் ஜன சந்தடியானதொரு இடத்தில்தான் என்பது கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ளும்படியானதொன்றாக இருக்கிற்அது எனக்கு. முதல் சந்திப்பு கொஞ்சம் உற்சாகமானதும்தானே. நாம் ஒரு முந்நூறு பேர் இருப்போமா?.,...வரிசையில் ஒரு பன்பலையில் வேலைக்குச் சேர்வதற்கான நேர்முகத்தேர்வில் காத்திருந்த வரிசை அது. உன் தோழிக்குப் பின்பாக நீயும் உனக்குப் பின்பாக நானுமாய் நாம் நின்றிருந்ததும் கடைசிக்கட்டத் தேர்வுவரை நகர்ந்த நமக்குத் துணையாயிருந்த உன் தோழியிடம் அவள் அழகாயிருப்பதாய்ச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த என் சான்றிதழ்கலைப் பார்த்து எந்த சங்கடமும் கொள்ளாத நீ, என்னைவிட 13 நாட்கள் மூத்தவள் என்கிற குறிப்பைக் கண்டதும் உன்னை அக்கா என்று கூப்பிடச் சொன்னாய். அவ்வளவு நேரமும் வரிசையில் நமக்குப் பின்னால் நின்று கவனித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.

உண்மையில் நம் முதல் சந்திப்பு எந்தவிதத்திலும் உன்னை கவனிக்கச் செய்யவில்லை. அப்பொழுது வெளியாகிய்டிருந்த என் கதைகள் சிலவற்றை உனக்கு அனுப்பியிருந்தேன். என் பேச்சில் இருந்த விருப்பம் உனக்கு என் கதைகளில் இல்லை. ஆனாலும் என்னோடு உரையாடுவதை நீ விரும்பியதை உன் குரல் சொன்னது. நான் கதை எழுதுகிறேன் என்பதிலேயே ஒருவேளை நீ சந்தோசங் கொண்டிருக்க கூடும்.
எம்.எஸ்.ஸி ப்யோ டெக்னாலஜி படித்தும் நீ சம்பந்தமில்லாமல் வேலைகளைத் தேடிக்கொண்டிருந்தது எனக்கு அப்பொழுது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். நீ அதிகம் பதட்டப்படுகிறவள் என்பதை முதல் சந்திப்பின் நேர்காணலில் நீ அழைக்கப்படுவதற்கு முன்பாக யுன் விரல் நடுங்கியதையும் சிரமத்துடன் அதை மறைக்க முயன்றதையும் பார்ட்ர்ஹ்துப் புரிந்து கொண்டிருந்தேன். பின்பு நம் தொலைபேசி உரையாடல் அனேகமானவற்றில் அதனை உணர்த்தினாய்.

நாம் இருவரும் சந்தித்துக்கொண்டது ஏழுமுறைகள் மட்டும்தான். ஆனால் அந்தச் சந்திப்புகள் குறித்து நாம் திட்டமிட்டுக் கொண்டதும் சந்திப்பின் பொழு8து பேசிக்கொள்ள வேண்டியது குறித்தும் நாம் பேசிக்கொண்டதற்கு கணக்கில்லை. ஏதோ மிக முக்கியமானதொரு உடன்பாட்டிற்குத் தயாராகிறவர்களைப்போல் மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைப் பேசியும் நாம் சலிப்பதில்லை. பின்பு நாம் சந்திக்கிற பொழுது நினைத்துக் கொண்ட விசயங்களை மீறி வீட்டிற்குத் ஹிரும்பிச் செல்கிற நேரம் பற்றியே அதிகம் யோசித்துக் கொண்டிருப்பாய். நாம் சந்தித்ததில் உனக்கு மலைக்கோட்டை பிடித்திருந்தாய் எப்பொழுதும் நினைத்துக் கொள்கிறேன். அன்றுதான் கொஞ்சம் இயல்பாக பேசினாய். ஏனோ ஒவ்வொரு முறையும் உனக்கு உரையாடலைத் துவக்க உன் தோழியின் விசயம்தான் தேவையாயிருந்தது. ‘ஜெனி உன்னக் கேட்டாடா...என்றோ...இந்த ஜெனி பிள்ள ரெண்டு நாளா ஆளையே காணோமென சம்பண்ட்க்ஹமே இல்லாமல் ஜெனி எப்பொழுதும் நம்முரையாடலில் இருப்பாள். எதன் பொருட்டு அது ரம்யா?

நாம் எப்படி நேசிக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்ளவில்லையோ அப்படித்தான் இனி பேசிக்கொள்ள வேண்டாமென்பதையும் சொல்லிக் கொள்ள்சவில்லை. உண்மையில் நாம் கடைசியாக என்ன பேசினோமென்பது எனக்கு சத்தியமாக நினைவில்லை. இதற்காக நான் உன்மீது கொண்டிருந்த நேசம் குறித்து உனக்கு சந்தேகமெதுமிருந்தால் நிச்சயமாக அதற்கு நான் பொறுப்பில்லை. 
உன் அலைபேசி வழி கடைசியாய் என்னிடம் பேசியது உன் அம்மாதான். நீ அந்த எண்ணை அவளுக்குத் தந்துவிட்டதாய்ச் சொன்னதும் நீ எனக்குத் தராத அந்த இன்னொரு எண்ணை அவளிடம் கேட்க வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை. பின்பு எப்படியும் உன்னிடமிருந்து குறுஞ்செய்திகளோ அழைப்போ வருமென்று திடமாக நம்பினேன். இப்பொழுதும் கூட சில நேரங்களில். ஆனால் அது வெறும் நம்பிக்கையாய் மட்டுமே இன்னுமிருக்கிறது.

பின்பு நான் தஞ்சை வருவது அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உன் வீதிக்கும் மிஷன் தெருவுக்குமாய் பலமுறை அலைந்து திரிந்திருக்கிறேன். ஏனோ உன்வீடு விசாரித்து உன்னை நேரில் காணும் துணிவு எனக்கில்லை. உண்மையில் ஒவ்வொரு முறையும் அந்த வீதியில் நுழைந்து வெளியேறும் பொழுது எங்கே உன்னை முகந்தெரியாத யாரோவொரு நல்லவனின் மனைவியாக பார்த்துவிடுவேனோ என அச்சமாக இருக்கும். அப்படியான துரதிர்ஸ்டங்கள் நல்ல வேளையாக நடக்கவில்லை. 
தஞ்சைக்கோ அல்லது கும்பகோணத்திற்கோ வாக்கப்பட்டுப் போயிருக்கலாம் நீ என நினைத்துக் கொள்ளலாம்தான் ஆனால் அது சிரமாமக இருக்கிறது. எந்த ஊரில் புழுதியப்பிய வீதியுல் நீ ஒளிந்திருந்தாலும் என்னோடு பேசிய சில வார்த்தைகள் உனக்குள் எப்பொழுதும் இருக்குமென நம்புகிறேன் ரம்யா.
உன்னிடம் சொல்வதற்கு இன்னுமொரு தகவலிருக்கிறது, என் கதைகள் இரண்டு தொகுப்பாக வந்துவிட்டன. இப்பொழுது நான் சினிமாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு பெண்ணை நேசிக்கிறேன். இந்த கடைசி வாக்கியம் நிச்சயம் உன்னை சிரிக்கை வைக்கும். ஏனெனில் என்னால் யாரையும் உண்மையாக நேசிக்க இயலாது என நீ எதன் பொருட்டு கூறினாயென்பது தெரியாது. ஒருவேளை அது உண்மையாயிருக்குமோ என்கிற வருத்தம் மட்டும் எப்பொழுதும் எனக்குண்டு. எனினும் நேசிப்பது சந்தோசமாயிருக்கிறது ரம்யா.

காற்றின் தடமறியா பெருநகரம் ஏதோவொன்றில் நீ வசிக்கலாம், அல்லது இன்னும் தஞ்சையின் அதே வீதியில் உலவிக்கொண்டிருக்கலாம் என்னவானாலும் ஒரேயொருமுறை இன்னொரு முறை நான் சந்திக்க வேண்டியிருக்கிறது. நேரில் உன்னிடம் பேச வேண்டிய விசயங்கள் குறித்து வழக்கம் போலவே நிறைய யோசித்திருக்கிறேன். விருப்பமிருந்தால் கொஞ்சம் அவகாசம் ஒதுக்கித் தா...

ப்ரியமுடன்
உனக்கு உரிமையில்லாத நான்....

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.