மூட்டைப்பூச்சி மனிதன்

                                                                            

                                                                    அனாமிகா    



 இன்று ஏனோ  வழக்கத்திற்கு மாறாக நிறைய குடிக்கிறேன் அறையெங்கும் மஞ்ஞு கவிழ்ந்த மாதிரி புகைச்சுருள்கள் வெவ்வேறு வடிவம் பூண்டு மெதுமெதுவாய் கலைந்து போகின்றன.ஆஸ்ட்ரேவில் நிறைய சிகரெட் துண்டுகள் ஒவ்வொரு நீளத்தில் எரிந்தடங்கியச் சாம்பலில் கிடக்கின்றன.அறை தூய ஒழுங்கின்மையில் அழுக்கோடு சிதறி இருக்கின்றது. கால அலைவரிசைப்படி இரவு மாறிக்கொண்டிருக்கின்றது. ஒன்றுரெண்டு மூட்டைப்பூச்சிகள் வெளிச்சம் இருளை ஔிந்துகொள்ளச்செய்த நிழல் தடத்தில் நுழைகின்றன.என் வயிற்றினுள் எப்போழ்தும் தீராத பசியின் உமிழ்நீர் சுரந்தபடி இருக்கின்றது. குடல்களை தின்றுகொண்டிருக்கிற பசி எவ்வளவு தின்று தீர்த்தாலும் சாகும்வரை அடங்காத மிருகம். என் அருகில் பெரியதொரு வட்டமேசையில் நீலநிற ஞெகிழி விரிப்பிற்குமேல் போத்திறைச்சியின் கஷ்னங்கள் ஒரு பழைய சீனத்துப்பீங்கான் தட்டில் மிச்சம் இருந்தன. உள்ளங்கை முழுவதும் வாரியெடுத்த துண்டங்களை போதையில் வாய் முழுவதிலும் அடைத்து அதக்கினேன். இந்த சிறு மாமிசத்தை கடைவாயில் நன்றாக அரைத்து ரசித்து சுவைத்து சிறுநாவு உரச தொண்டைக்குழி வழி இறக்கினேன் தேவாமிர்தமாக இருந்தது.  புனித நம்பிக்கையொன்று என் வயிற்றில்  பெரிய பள்ளத்தை குடல்ச்சுவரில் மோதி விழுந்தது. பின் இரைப்பை கனம்பொருந்தி பசியின் பேய்வாயை அடைத்ததும் சற்றுநேரத்தில் தலைவலி மெல்ல  மறையத் துவங்கியது. மலக்குடலுக்குள் புனிதக்கறி குசு நாற்றத்தை சூடாக தயார்செய்து சத்தமில்லாமல் வெளியிடும்போது மனிதர்களுக்கு எதிரான எல்லா தரங்கெட்ட ஒழுக்கங்களும் நாறித்தானே போகும்.  எப்படியோ போகட்டும்.ஏன் ஏதேதோ சம்பவங்களை மண்டைக்குள் இட்டு நிரப்பி பெரும் அவஸ்த்தைபடுகிறேன் என்பது புரியவில்லை நான் ஒரு மகத்தான ஆழ்ந்த நோய்மையாளன். மிகக் குருகிய ஆயுளின் நரம்பை அறுக்கும் குரூரத்தின் வாள் பற்றி மிக நீண்ட காலமாய் அலைவுருகிற ஒரு ராப்பட்சி நான். பறத்தலை நினைவுகூருகிற வெளியில் எனக்குள் இருக்கும் குரலின் பழங்கதை  இரவு முழுவதும் எனை அலைக்கழிக்கக்கூடும்?

கண்ணாடி டம்ளரில் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் கலக்காத ஒரு முழு தூயபோதை வஸ்துவை ஒரே முட்டாக வாய்வழியாக உடலுக்குள்  ஊற்றினேன்.
சரீரமெல்லாம் சிலிர்த்தது. நாலைந்து சிகரெட்களைப் புகைத்தேன்.
மேற்கத்திய பனி பிரதேசத்தில் கடுங்குளிரில் பள்ளத்தில் இறந்துகிடந்த ஏதோ மிருகத்தின் தோலைக் கிழித்தெடுத்து போர்வையாக்கி என்னை நிர்வாணமாய் அதில் சுற்றிக் கதகதப்பை உணர்தேன் என்  அற்புதப்புகையே. அதுபோலொரு கர்ப இருள்வாயில் சுருண்டு படுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். எதையெல்லாம் சாத்தியம் இல்லையோ அவற்றைதானே மனம் விரும்பித்தொலைக்கிறது. இன்றிரவு என் கடந்தகால அன்புமிகு வாவேவை நினைத்துக்கொள்கிறேன். மனம் வெம்மை தகிக்கும் உடலிடமிருந்து வெகு தூரம் விலகிவிட வேண்டுகிறது. துயரமும் ஆற்றாமையும் மேயும் இக்கால இரவிலிருந்து முற்றிலுமாக வெளியேறிவிட துடிக்கிறது. அவகாசமின்றி ஒரு தூய நிம்மதியடைய  நெடுநீளமாய் கொஞ்சம் மரண சாயல் போல் இன்றிரவில் உறங்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என் கனவினை அவளுக்கு மட்டும் அவ்வளவையும் சொல்லி திகட்டத்திகட்ட முத்தமிட்டு கரைந்துவிடுவேன், பாவம் மிகத்தொலைவில் அவளது அறையில் நல்ல கனவுகளில்  உறங்கும் அவளை என் தீவிரமான நினைவுகள் சலனமிக்கக்கூடும் . நான் நினைவை துண்டிக்கிறேன். அவள் உறங்கட்டும் என் கண்கள் லேசாய் மூடுகிறேன்.

சற்றுநேரத்திற்குள் எல்லாம் மூளைக்குள் மூட்டைப்பூச்சிகள் மொய்க்கத்தொடங்கின. திடுக்கென வேகமாக தலை குலுக்கி இருந்த இடத்திலிருந்து கண்களை துடைத்தபடி எழுந்தேன். உடல் அசதியில் தலைச்சுற்றியது. உலகம் தனிச்சியில் இயங்குகிறதா அல்லது இந்த மனித மனதின் அலைகழிப்பினால் சுழல்கிறதா ஏதும் விளங்கவில்லை. பரிணாமம் நிமிர்த்திய முதுகெலும்பில் இந்த பூமியின் நிலத்தரையில் தூக்கக் கலக்கத்தில் எழுந்து கொஞ்சம் ஆடி நிற்கிறேன்.லேசான நிம்மதியின்மை தத்தம்மாவின் பழைய நல்ல காலத்தில் உடுத்தியிருந்த சேலையால் என் கழுத்தை இறுக்கி  சாகத்துணிந்த அற்புதம் நிறைந்த விடுபடலை போன ஞாயிறில் ஒரு பூனை குஞ்ஞு ம்யாவொலி தடுத்து நிறுத்தியது.  இந்தவொரு ஆறு நாட்கள் அப்படியொன்றும் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிடவில்லை. இப்பொழுதும் தொங்கிக்கொண்டிருந்த அதேத் துணியைப் பிடித்துதான் நிற்கிறேன்.

ஆசனத்துளையிலிருந்து கிழிந்த உள்ளாடையிலிருந்து மூட்டைப்பூச்சிகள் தையல் பிரிந்த அரைகுறை ஆடையிலிருந்து வந்ததாக தோன்றியது. ஆள்காட்டிவிரலை குண்டித்துழைக்குள் விட்டு நோண்டினேன்.  அப்படியொன்றும் வரவில்லையென சரியாக சிரித்துக்கொண்டேன் .என்னப் பழக்கம் இது. அசிங்கமாக உணர்ந்தேன்.
தரையில் ஓலைப்பாய் விரித்து தலையணை இன்றி உடலை கிடத்தினேன். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஏன் இந்த மனம் மூட்டைப்பூச்சிகளைப் பற்றி இன்று அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறது. ஒன்றும் புரியவில்லை.  முதுகில் ஏதோ ஊறுகிறது. வலது கைவிரலை பின்புறம் திருப்பி சொறிந்தேன் சுகமாக இருந்தது. எப்பொழுதும்போல் கைகளை தலைக்கு அணைக்கக்கொடுத்து படுத்தேன். கண்களை மேல்நோக்கி அமர்த்தினேன்.  மேல்சாரத்திலிருந்து விடுபட்டசிலந்தி நூலைப்பிடித்து என் நெஞ்சுக்கு நேராக இறங்கிக்கொண்டிருந்தன   மூட்டைப்பூச்சிகள். மீண்டும் பின்புறம் கடி எரிச்சலோடு எழுந்து திரும்பிப்பார்த்தேன் மூட்டைப்பூச்சியொன்று ஓலைப்பாயின் சின்னத் துளைவழியாக மேலே ஏறி தலைசாய்த்த இடத்திற்கு மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.   அதை நசுக்கினேன் விரலில் மூட்டைப்பூச்சியின் மரணநாற்றம். பாயைச்சுற்றி பார்த்தேன் நூற்றுக்கணக்கான பூட்டைப்பூச்சிகள் மேல ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. எங்கெங்கும் மூட்டைப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இந்த அறை முழுக்க வந்து நிறைந்திருக்கின்றன.  குடிக்க வைத்திருந்த தண்ணீர் நிரம்பிய டம்ளரில் சிலதை பிடித்து சின்ன சுழிய நீர்ப்பரப்பில் மிதக்கவிட்டு சிறிதுநேரம் விளையாடினேன். ஒன்றும் சாவதாய் இல்லை சனியன். ஆற்றிலிருந்து மீன்களைப்பிடித்து நிலத்தில் விட்டுகொல்வதுபோல் மூட்டைப்பூச்சிகளை அச்சிறிய நீரில் முக்கிக்கொன்றேன். மனதிற்குள் விகாரமாய் சிரித்துக்கொண்டேன். என் பரிதாபங்கள்மீது ஈக்கள் வந்தமர்வதை வெகுவாக விரும்பியிருக்கிறேன்.  பரவாயில்லை மூட்டைப்பூச்சிகளாவது இந்த பாவம் உடலை கடித்து கொண்டாடட்டுமே.

ஆனாலும் கடுங்கோபம் தலைக்குள் பிறண்டது. என் மனிதம் நசிந்து நசிந்து மூர்க்கம்கொண்டு மிருகமாய் ஆவதாய் உணர்ந்தேன். மூட்டைப்பூச்சிகளை உக்கிரமாய் நசுக்கிக் கொன்றுகொன்றிருந்தேன். எனக்குள் இத்தனை வன்மம் வளர்ந்ததை நானே என்னிடமிருந்து தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கிறேன். நான் எனை நோக்கும் உயரம் பிரமாண்டமாகி. நிழலின் பெரு உருவம் பற்றி வளர்கிறதை  மெழுகுச் சுடரின் தீபநடன அசைவில்  அவ்வளவு ஆகி இருந்தேன்.  நான் ஒருவன் மட்டும் வாழும் உலகத்தில்  இருக்கிறேன்என் மனக்காதுகளுக்கு கேட்கும்படி ஏதோ பேசியிக்கொண்டிருக்கிறது . நான் சரியில்லை. இந்த அகால இரவில் மனம் நிலைத்தன்மையில் இருந்து விலகிக்கொண்டே இருக்கிறது. குழப்பங்கள் கூட்டிக்கட்டி ஒரு பொதியாக்கி மஜ்ஜையும் எலும்பும் நரம்பும் மூளையும் ரத்தமும் சதையுமான என்ஜென்ம உடலியிடம் பெரும் அழுத்தம் கனமாகிக்கொண்டிருக்கிறது. காலம் தன் பயணத்தின் சப்தத்தை டிக் டிக் டிக் என நகர்த்துவது கேட்கின்றன.

மீண்டும் பசிக்கிறது தண்ணீர் குடிக்கிறேன். குடல்புழு உறுப்பை உண்கிறது. 
மூளையை கழுவி விடவேண்டும். அறையெங்கும் குரூரமான சாவின் நெடி அசலாய் நாறியது. புழுத்த நாற்றம் கூடவே மனித இரத்தத்தின் வாடையும் குமட்டியது. திரும்பிய இடமெல்லாம் மூட்டைப்பூச்சிகள் மேலும் மேலும் மூட்டைகளை நசுக்கினேன். அதன் மிகச்சிறிய வயிற்றிலிருந்து தெறித்த இரத்தம் தரையில் விநோதமான  சித்திரத்தை வரைந்திருந்தன.  பல இரவுகள் பழக்கப்பட்டதுதான் என்றாலும் இன்று கூடுதலாகவே மூட்டைப்பூச்சிகள் வந்திறங்கியிருக்கின்றன. கண்களில் தூக்கம் வேறு தேங்கி நின்றது. விளக்கை அணைக்க விருப்பமில்லை. இருள் எனைக்கொல்லும் என்பதாக நான் நினைக்கும் அதே நம்பிக்கையில் வெளிச்சமும் எனை சிதைக்கும் என்பதை தீர்க்கமாகவே நம்புகிறேன். இச்சிறிய உயிரிகளின் தொந்தரவு காரணத்தால் இந்த வெச்சத்தை அனுமதிக்க சம்மதிக்கிறேன். இப்போதைக்கு இருளைவிட வெளிச்சம் எனக்கு நல்லதாகப்பட்டது.

மனது ஒரு விநோத உணருயிரி ஒருபாடு துயரங்களையும் காட்சிகளையும் மிகத்துல்லியமாய் எனக்குள்ளிருந்தே அது நிகழ்த்துகிறது. அது தருவிக்கும் அன்றாடங்களில் வலியை மட்டும் சுகிக்கப் பழகித் தருகிறதை பெரும்பாலும் அனுமதித்திருக்கிறேன் .தவிர்க்கவும் விரும்பியிருக்கிறேன். ஒரு நாடோடிப்போல எங்கெங்கோ பெயர் தெரியாத ஊர்களில் திரிய வைத்திருந்ததை  ஓர்மைகளில் ஆழமாய் சேகரித்திருக்கிறது. சில சமயம் விடுவிக்கக்கோரும் அதனிடமிருந்து தப்பித்தலை வேண்டுமென்றே அலட்சியமாய் கடக்கச்செய்திருக்கிறது.  பலசமயம் புகையினூடாக ஏதோ ஆசுவாசம் அடைந்திருப்பதாய் நம்ப வைத்திருக்கிறது. புத்தியை சமநிலைக்கு கொண்டுவர பெரும் பிரயத்தனம் செய்வதை நோய்போல் கொண்டாடிக் களித்திருக்கிறேன்.

ஒரு பட்டாம்பூச்சியின் பறத்தலை இரசிக்காத மனநிலையைப்போல் இந்த இருள் காற்றின் உயிரற்றத்தன்மை வெறுமையை தருவிக்கிறது.  பலதுகளில் புரிந்துகொள்வதான முயற்ச்சியில் தோற்றுப்போனதை எனை பலமாக குற்றப்படுத்தியிருக்கிறேன். பலவீனத்தை யாசிக்க விரும்புகிறதை மறைமுகமாக  பிடித்திருந்தது. காலம் ஆகச்சிறந்த ஆசான் என்பதை பலநூறு தோல்விகளிலிருந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். எப்படியும் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் சகிக்கப் பழகிக்கொண்டிருக்கிறேன். இன்று முடியாதுபோல் இருக்கிறது.

இன்று இந்த இரவில் படுமோசமாக சிதைந்துவிடுவேன்.  என்ன செய்வதென்று தெரியவில்லை  பயமாக இருக்கிறது. அதற்குள் பெரும் மதிப்புமிக்க வாழ்விலிருந்து அப்புறப்படுத்த அவசரப்படுத்தும் என்னந்த ஆழ்ந்த குரலின் வக்கிரம் தீவிரமடைந்திருக்கிறது. இந்த கணம் அருகில் யாரும் இல்லை. வாசிக்க முடியாத அளவிற்கு நெருக்கம் நெருக்கமாக கிடைத்த காகிதங்களில் குழந்தையைப்போல் கிறுக்கித்தள்ளினேன். ஆன்மாவை இந்த சுழியவடிவ பூமியின் நிலம் நோக்கியும் இப்போதைக்கு இருத்தியிருக்கிறேன்.  மலைபோல் பிரமாண்டமாய் குவிந்த புழுதி மணலின் முதுகையையும், பலமாய் காற்றிடையில் வெய்யிலின் கந்தகவாசத்தையும், பனியின் குளிரிடைக்குள்ளும் அந்தரங்கமாய் காமம் தீண்டும் உயிரியின் பரிணாம தத்துவங்களையும், மொழியச்சொல்லும் அந்தக் குரலை அதன் தனித்த யாரும் இதுவரை அறியாத இரகசியத்தையும், இடம்பெயர்க்க அழுந்தித் தள்ளி மூளுகின்றன.

அதோ மண்டைக்குள் மேலும் குரல்களில் ஆக்ராந்த சப்தம் என் மனிதத்தை உறுவியணிந்து அலைவுருகிறது. உடலின் மேல்தோல் ஆயிரங்கோடித் துகள்கலாய் உதிரித்தபடி இந்த இரவை கடக்க முனைகின்றன. எல்லா சாதனைகளுக்குப் பின்னிலும் ஒரு அழுத்தமான துயரத்தின் சொல் உக்கிறமாய் உலுக்கிக்கொண்டிருக்கிறது.  அது நெடிய வலியை வாழ்வின் மொத்த இருன்மையை எல்லா காலநேர கணங்களிலிருந்தும் சன்னமாய் கசிந்து வழிவதை வெறுமென வேடிக்கையோட கடந்து செல்வதென்பது பசிய கொடுமையைவிட கனமானது.

என்னுடலின் எடை கூடியும் குறைந்தும் இலகுவாகியும் பாரமாகியும் உணர்கிறேன்
இத்தனிமையை பரிபூரணமாய் ஒரு சில நிகோடியனில் உயிர் கரைக்கும் புகையை முரணினூடாக வளைய வளையமாய் ஊதி அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு பழையது மாதிரி இருந்துவிட கூடுமெனில் தத்தம்மையின் தசைமடியில் படுத்துக் கிடந்தபடி இதேபோல் இரவொன்றில் ஏகதேசமாய் நக்ஷ்த்திரங்களை ஒரு நேர்க்கோட்டில் துவங்கி மறுபூமி மணல்வெளியில். ஆகாசம் நோக்கியும் அம்புலி ஔிச்சம் தாழ இறங்கியும் அணுங்கிச் சரியும் .பின்பு  கானல் பாம்பெனவும் ஊர்ந்து நகர்ந்த அக்கதைவெளியில் நின்று நிறைய நிறைய எண்ணிக்கொண்டிருந்த காலத்தை நினைவுகூறுகிறேன். பலநூறு முகங்கள்கொண்டவனாய், பலாயிரம் நாவுகள் கொண்டவனாய், பலலட்சம் உருவங்கள் கொண்டவனாய், மரங்கள் பேசுகிற காலத்தில் ஏறியேறி உயரம் அடைந்திருக்கிறேன். மாடுகள் பேசுகிற காலத்தில் ஆடிப்பாடிக் கூடிக்களித்துக் கிடந்திருக்கிறேன். தொன்மப் பழசிபழம் மூளைப்புழு உண்டுசெறித்து மூன்று காலினூடாக ஓடித்திரிந்திருக்கிறேன். மர்மஜந்தவின் முதுகிலமர்ந்து  வெவ்வேறு சப்தங்களினூடாக அவ்வுயிரின் நிலத்தில் வாழ்ந்து தீர்த்திருக்கிறேன். நாகரீகமற்று ஒரு நினைவில் இக்கணம் இருக்கிறேன். மீண்டும் மீளுருச்செய் எனை ஜனித்த தத்தம்மையின் கர்பபந்தே.. கருயிருளில் எனை சுமந்து ஒருமுறை பிரசவிக்கக் கூடுமெனில் நான் மூளைப்பசியின்றி வாழநேரலாம்.?  

தூக்கம்வேறு கண்களை அமுத்தியது சுவரில் சாய்ந்துபடி மெல்லச்சரிகிறேன்.  இந்த மனம் இன்றைய உக்கிரத்தில இருந்து வெளிவர மறுக்கிறது.  மண்டை கனத்துப்போய் உடல் நடுக்கம் கண்டு அவ்வப்போது சிறுசிறு பதற்றம் ஏறி .பயம்கொண்டு ஆடுகிற இந்த உடலை. சற்று கண்ணயர்ந்து கிடப்பில் போட்டதும் .ஏதேதோ கண்ட காட்சிகளும் மனித வதையின் ஓலங்களும் தூக்கி உலுக்குகிறது. இதுவெல்லாம் சகி என்கிறது மூளையா மனமா?

ஒரு கொடுங்கனவில் என் சயனித்த உடல்மீது  இன்னொரு பூதஉடலின் கனம் புரண்டு படுக்கையில். பூமியின் அச்சிலிருந்து  திசைகளற்ற பால்வெளியில் ஒரு தும்பி இறகின் கனத்தில் மிதந்தலைந்தது  ஒரு அகால உயிரி. கொடிய மிருகத்தின் அலறல்போல்  என் தனிமையின் மீது மூட்டைப்பூச்சிகள் மனிதரத்தம் குடிக்க கூடுகின்ற  தரித்திரத்தை எதுவெல்லாமோ எனக்குள் வழங்கிப்போயிருக்கின்றது . எப்படியாவது எனை முழுவதும் மறந்துபோய் இந்த இருளிலிருந்து முற்றிலுமாக தொலைந்துபோனால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாளை புதிதாய் ஜனிக்கப் பிரிப்படுவேன் நீட்சியே.

சுகவீனத்தில் உயிர்பெருக்கிச்சுருங்கி விரிக்கிற அரூப காட்சியினுள்ளே இருக்கிற ஆத்மக்குரலொன்று, அலறியடித்துக்கொண்டு விழும் கேமராவைப் பிடிக்க முயல்கின்றது, அதற்குள் அது உடைந்து சில்லுச்சில்லாய் சிதறிப்போகின்றன.  ஒரு துண்டு லென்ஸ் எடுத்து இந்த உலகைப் பார்க்கிறேன், அத்தனை அகோரமாய் தெரிந்தது. என் கனவில் கேமராக்கள் உடைந்துக்கொண்டே  இருக்கின்றன. என்னிடம் இல்லாத ஒன்று அடிக்கடி உடைபடும்போது ஏன் பதற்றமாகிறேன்.  எங்கும் க்ளிக்குளின் சப்தங்கள் இருதயத்துடிப்பு வாழ்வின் கடிகையை வேகமாக ஓடவைத்திருக்கிறது. அதன் டெசிபெல் மனிதமூளை உணரி செல்லின் நரம்பால் உணர்ந்துகொள்ள முடியாது போவது எத்தனை துரதிஷ்டமானது.

கனவுகள் அற்புதமானது அதன் உலகில் பல்வேறு நிறமிகளினூடாக ஒருகாலத்தில் திரிந்திருக்கிறேன். அதியற்புதமான காட்சிகளை ஆழங்காணமூடியாத  ஓர்மைக்குள்
சிக்குண்டு மனித சஞ்சாரமற்ற உலகின் முதல் கரும் ஆழத்தில் இப்பொழுதும் நீந்தத்தொடங்கி அருகாக ஆசைப்படுகிறேன். என் அற்புதமே நான் ஔி, நான் பெரும் நிறை, நான் அசையும் உடலின் ஆன்மா, நான் இயற்கையில் ஒரு சிறு தூசு, நான் யாரிடமும் சரணடைதலை விரும்புகிறவன் அல்லன். ஆனாலும் ஔிச்சத்தை உள்வாங்கிக்கொள்ளும் கருந்துளைப்போல் சூன்யம் என்கிற அநாதைக்காலம் என்னை என் உயிரின் பேராற்றலை என் அழுக்கை அப்பழுக்கு இல்லாமல் வாங்கிக்கொள்ளும். நான் கனவில் எல்லாமுமாக நீந்துகிறேன். அங்கேயும் வந்து தொலைக்க வேண்டுமா  பீடைப்பூச்சிகள் .என் கண்களிலிருந்து மூட்டைப்பூச்சிகள் வெளியேறி வருகின்றன. மூக்கின் தூவாரத்தில் சளிபோல் ஒழுகி வருகின்றன. காதுகளில் இருந்தும் வரிசையாய் வருகின்றன . மேலும் பல்லிடுக்கில் உள்நாவில் தாடையில் கழுத்தின்கீழ் அக்குல்களின் ஓரத்தில் தொப்பில்க்குழியில் இருந்தும்கூட கசகசவென வருகின்றன . மர்ம உறுப்பின் துளையில். விதைக்காய் மயிரிலிருந்தும் வருகின்றன. மேலேயும் சிலதுகள் அடிவற்றின் தோலைக்கிழித்து இறங்குகின்றன. வேகமாக அதன் வழியே என் கைகளைவிட்டு இரைப்பையிலிருந்து அகப்பட்ட அத்தனை மூட்டைப்பூச்சிகளையும் அள்ளியெடுத்து வெளியே உதறினேன். கனவில் அசைந்த கைகள் என் உடல் சாய்ந்த சுவரில் மோதி கலைத்தது.  உயிர்போகும்வலி கைகளை தொடையிடுக்கில் அழுத்திப்பிடித்தேன். விரல்களின் காயத்திலிருந்து மூட்டைப்பூச்சியொன்று இரத்தத்தில் மிதந்தபடி இருந்தது. அது என் மனிதரேகையைப்பிடித்து ஒட்டிநின்றதை கவனித்தேன  .பாவமாய்  இருந்தது. தனித்துவிடப்பட்ட மூட்டைப்பூச்சியது என்னிடம் வசமாக சிக்கிக்கொண்டதை அது உணர்ந்திருக்கும்.  என்ன செய்ய அதன் சாவு என இரத்த அணுக்களில் இரைச்சுவை திரவத்தில் இருக்கின்றதை அறியாது போனது அதன் மகாதுயரம்தான்.

பசியில் இருக்கும் ஒரு சிறிய உயிரியை  எப்படிக்கொல்வது வயிறு நிறைக்கும்வரை என் இரத்தத்தை உறிஞ்ச அனுமதித்தேன். பிறகு நிதானமாக  என் இடதுகையில் இரத்தம் ஒழுகும் நடுவிரல் முனைக்கு அதனை நகர்த்திக்கொண்டேன். நன்றாகத் தரையைநோக்கி  குவித்தேன். தொங்கி நிற்கும் இரத்தத்துளிக்குள் அதன்  சிறியவுடல் உள்ளுக்குள் பலமாக சிரித்துக்கொண்டேன். மீச்சிறு உயிரின் மீதுதான் எத்தனை வன்மம் எனக்கு. உயிரிகளிலேயே அதிகம் ஆதிக்கம் கொண்ட உயிரியல்லவா மனித இனம். எத்தனை சிறிய பெண் உறுப்பாய் இருந்தாலும் வேட்டை மிருகம் போல் யோனிவெறி நக்கக்கூடிய ஜந்துக்கூட்டத்தில் பிறந்ததின் நாசமல்லவா நானும். இரத்தக்குளத்தில் உணவிலேயே அபாரமான அதன் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறதை  பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

சமயம் பார்க்கிறேன். காலம் எண்களுக்குள் சுறுங்கி கணிதமிடுகின்றன. ஒவ்வொரு எண்களுக்குள் இருந்தும் மூட்டைப்பூச்சிகள் உற்பத்தியாகி வெளிவருகின்றன.காலம் எவ்வளவு அழுத்தமான நாற்றப் பரிணாமத்தை நிகழ்த்திக்கொண்டு நகர்த்துகின்றது. அச்சம் கழிவறைக்குள் போய் தாழிடச்சொல்கிறது. செல்கிறேன். இந்த இரவுக்குள் நேற்றின் நிம்மதியின்மை கூடியிருக்கிறது. சற்று தாவிக் கடந்தால் போதும் நிச்சயம் வாழ்தலைவிட மரித்தலுக்கான நியமங்கள் போதுமான அளவிற்கு வளர்ந்திருக்கக்கூடும். கழிவறை தாழ்திறந்து அடைக்கிறேன். என் வயிற்றுக்குள் மலத்தின் நாற்றம் குதப்பின் துளை வழியாக காற்றுபிரிகிறது. மலத்தை கழிகிறேன் கெட்டிப்பட்டு உருளை உருளையாக வெளியேறியது. எழுந்து நின்று பார்க்கிறேன்  மலத்திலிருந்து மூட்டைப்பூச்சிகள் தடுக்கித்தடுக்கி உருண்டைகளின் மேலே சுற்றிக்கொண்டிருந்தன. எனக்குள் ஏதோ நிகழ்கிறது. உண்மையில் அதுகள் மூட்டைப்பூச்சிகளா அல்லது நானே உருவாக்கிக்கொள்கிறேனா தெரியவில்லை. உடல்மேல் நனைக்கப்போகிறேன். எல்லாம் சரியாகிவிடும் பயப்படாதே மனமே, நீரால் ஆறுதல் கிடைக்கும் நம்பிக்கையில் ஆடைகளைத்து  சவரைத் திறந்தேன். தூறும் நீர்த்துளிகள் என் நிர்வாணத்தை நனைத்தது. குளிர்ந்த தண்ணீரில் ஆழ்பிறழ் சரிந்து எல்லாவற்றிலிருந்தும் விலகி வெளியேறுகிறதை அழுக்கினூடாக காணுகிறேன். தூய்மை கவனத்தை கேலிசெய்ததுபோல் என்னுள்ளில் குவியும் ஆழ்ந்த இன்முகக் கண்ணின் கூர்மையில். கழுத்துக்கு கீழ் உடலை கூட்டிக்கட்டி கைகால்களை இடம் மாற்றி தைத்து வைத்து ஒரு விநோதமான ஜீவியை உயிர்ப்பிக்கின்றதை நானே இருவேறாய் பிரிந்து கண்டேன். அஞ்சினேன் அசடனே. இந்த வாழ்வின் திமிரில் அற்புதங்கள் என்று ஒன்று நிகழாது போகின்றதை இந்த சொற்பகால வாழ்வில் அனுபவத்தில் அடைந்த துன்பத்தில் நொந்திருக்கிறேன். என் சிந்தனையில் பலாயிரம் மூட்டைப்பூச்சிகள் மூளை அடுக்ககங்களிலிருந்து வந்துகொண்டிருக்கின்றது.   அரக்கர்களே என்னை நெருங்காதே. நான் கொஞ்சம் இருளறையிலிருந்து சுடரை வாங்கி வந்திருக்கிறேன். சற்றுப்பொரு இந்த இரவு முடிவுக்கு வரட்டும். நானே எனை முற்றிலும் அணைத்து அழித்துக்கொள்கிறேன்.அதற்குள் என்ன அவசரம்

நனைந்துகொண்டிருக்கிற உடலின்மேல்  வழிந்தோடும் தண்ணீரில்  மூட்டைப்பூச்சிகள் இறங்கியது. புறங்கையால் அழுத்தி தள்ளிவிடுகிறேன் அருவெறுப்போடு உடலை உதறினேன். என்னை பிய்த்து எறிந்துவிட போராடுகிறேன்  முடியவில்லை. உயிர் கூட்டுக்குள் பத்திரமாய் இயங்குகிறது . உடல்தான் தண்டனையை அனுபவிக்கிறது.  என்னப் பிறவியிது . நான் சவரிலிருந்து விலகினேன். துளைகளிலிருந்து மூட்டைப்பூச்சிகள்  நீர்சரடைப்பிடித்துக்கொண்டு  ஜலதாரியில் துள்ளிவீழுகிறது. சடாரென சவரை அடைத்தேன் சொட்டும் துளிகளியினுள் அது உருவாகி வருகின்றது. மூட்டைப்பூச்சிகளினால் மனஅழுத்தம் கூடிவிட்டதை உணருகிறேன். உள்வேதனையிலிருந்து தப்பிப்பதற்கு சுயமைதினம் செய்கிறேன். ஆணுறுப்பிலிருந்து விந்தோடு ஒட்டிக்கொண்டு மூட்டைப்பூச்சிகள் வந்ததை உச்சம் அடைந்த திருப்தியின்றி நோகிச்சாகிறேன். ஏதிலும் நிம்மதியில்லை உடலும் மனமும்  முழுமையாய் இசைந்துபோக மறுக்கிறது.

வெளியே எங்கேயாவது சென்றுவந்தால் சரியாகிவிடும் . எத்தகைய பாதுகாப்பற்றத் தன்மையில்  இருக்கிறேன்.  உடையணிந்துகொண்டு கழிவறையிலிருந்து வெளியேறி தெருவுக்கு வந்தேன். வானம் மேகங்கள் நிலா எல்லாம் அதனதன் இயங்குதலில் இருக்கின்றன.  தெருவிலிருந்து இறங்கி மெயின்சாலையை வந்தடைந்தேன். நான் ரோகியில் பிசுபிசுக்கத்தொடங்கியிருந்தேன். யாருமற்ற சாலையில் சிகரெட்டை ஊதிக்கொண்டு அப்படியே நிறைய தூரம் நடந்து கடந்து வந்துவிட்டேன் . இருளின் ஈர்ப்பு கனகச்சிதமாக வசீகரிக்கிறது. கட்டிடங்கள் வண்ணநிறங்களில் அழகுபடுத்தியிருக்கிறார்கள். மரங்களின் மகரந்த சேர்க்கையின் மணம் என் மனதையும் உடலையும் புத்துணர்வோடு இயங்கச்செய்கிறது. வானத்தில் நச்சத்திரங்கள் மினுங்குகையில் மேகங்களுக்கு இடையில் நிலா தன் வெண்மையின் சுழியத்திற்குள் மலைகளின் நிழலை புகைப்படம்போல் நிறுத்தி வைத்திருந்தது. இப்பொழுது நான் ரோகியிலிருந்து விடுபட்டதுபோல் உணரப்பட்டேன் . அதற்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னேன்.

ஒரு பெண்ணைத்தேடி தெருக்கள் சாலைகள் என அலைந்து அவள் வீட்டிற்கே வந்துவிட்டேன். அவ்வப்போது என் நோய்மையை குணமாக்கும் நறுமணம் கமழும் மூலிகைப்பெண் அவள். அவளறையில் தாகித்து நோக்கி நிற்கிறேன் . அவள் எனை கண்டுகொண்டாள் மெல்ல சிரித்தாள். கொஞ்சம் காலம் நல்ல வாழ்ந்தமுகம் அவளுக்கு. என் மனப்பிணியை நீக்கக்கூடியதென நான் நம்பிய ஆத்மா அவளுடையது. ன்பொழுக மானசீகமாக நானவளை தழுவிக்கொண்டேன். அவலத்தின் நாடகத்தில் அவள்தான் மகாராணி  துயரத்தின் பேயிருப்பிலும் அவளின் சிரிப்பு பேரழகாயிருந்தது. நெருங்கி வந்தாள். கண்களால் பேசினாள் காமம் எத்தனை அழகாய் உள்ளூரச்செய்கிறது . வெட்கமுறும் பெண்ணை அருகில் நிற்பதும் காண்பதும்  அந்தரங்கத்திற்கு தேவையாயிருந்தது . கைகளைப் பிடித்திழுத்தாள்  ஓங்கி அரவணைத்தாள்.  அவள் பிடியிலிருந்து தப்பிக்க நான் விரும்பியதேயில்லை  அது உயிரியக்கத்திற்கே எதிரானது  ஆம் அது ஆத்ம ஜீவிதாவின் உடல்.  அவள் முன் ஒப்பனையற்று நிற்கலாம்  தாராலமாக ஏற்றுக்கொள்வாள் .அவளிடம் பாசீசம் துளியும் இல்லை.  அவளுக்குத்தேவை அற்பணிப்போடு மார்புகளில் புதையும் ஒரு உயிர் . வளின் பெருந்துயரத்தையும் போக்கும் ஓருடல்.  இன்றிரவு நானாய் இருப்பது பெரும்மகிழ்ச்சியடைகிறேன். என் மொத்த காய்ச்சலையும் இன்று தணித்துவிடுவாள் உடல்பசியோடு வருபவனை பெண் என்பவளின் அருமருந்து குணப்படுத்திவிடும் சர்வநிவாரணியவள்.

நான் இரக்கமின்றி மிருகம்போல் அவள்மேல் முயங்கினேன். என் எல்லா மூர்க்க குண வெறிகளுக்கும் அவள் தன்னை முழுமையாக இரையாக்க சம்மதித்ததுபோல் இயங்கிக்கொண்டிருந்தாள். கன்னங்கள் உதடுகள் முத்தங்களால் இருவரும் மாறிமாறி வாரியிறைத்தோம். பெண்மை பொங்கும் மார்புகள் தீண்டி தொப்பிள்குழிக்குள் முத்தமிட்டு தொடையிடுக்கில் முழுமுற்றாக கரைந்துபோயிருந்தேன். அவளிடமிருந்த மூலிமை மணம் நாறத்தொடங்கியது. நாக்கிலிருந்து நிணநீர் வழியே மூட்டைப்பூச்சிகள் ஒழுகி வந்தது காரித்துப்பிவிட்டு அவளை பார்க்கிறேன். மூலிகைப்பெண்ணின் அக்குல் மயிர்களை சிலதுகள்  பிடித்துக்கொண்டிருந்தது. முலைக் காம்புகள் தொப்பில் குழி பின் அல்குல் என மூட்டைப்பூச்சிகள் கொழுத்தெழுந்து வந்துகொண்டிருந்தது. நான் அவளிடமிருந்து அறையிலிருந்து வீட்டிலிருந்து தெறித்தோடி அகால இருட்டில் மனம் பிசகியவன்போல் கடுமையாக ஓடினேன். கால்களை ஏதோ தடுக்க பெரியக் குப்பைமேட்டில் பலமாய் மூர்ச்சையாகி விழுந்தேன் .

சிறிது நேரம் கழித்து சில தெருநாய்கள் அதனுடைய வியர்க்கும் நாக்கு தொங்கிக்கொண்டு என் அருகில் உர்ர்ர் உர்ர்ர்ர் என குரைத்து வருகின்றது. நான் மயக்கத்திலிருந்து சன்னமாக தெளிந்தேன்.  கைகள் கால்கள் தொடைகள் முகம் காதுகள் தலையென அதற்கு கிடைத்த இடமெல்லாம் கடித்துக்குதறின. வலியால் நான் உயிர்நோகத் துடித்தேன் .கருணையற்ற பசி எல்லா ஜென்மங்களுக்கும் ஜீவகாருண்யமில்லாமல் இயற்கை கொடூரமாய் வழங்கியிருக்கிறது. பலமாய் தொண்டை கிழிய கத்தினேன். குப்பைக் கூழாங்கற்கள்மேல் உருண்டேன் . இரண்டு மூன்று நாய்கள் அதன் வாயில் சிக்கிய என் உடலின் சதைக்கறியோடு திசைக்கொருப் பக்கம் ஓடின. மறுபடியும் உடலை சுருட்டி விரித்து நெளிந்தேன். கோரப் பற்களிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட இரண்டு நாய்கள் படுவிகாரமாய் என் ஏதோ சதை பாகங்களை இழுத்து நாறுநாறாய் கிழித்தபடி சண்டையிட்டுக்கொண்டிருந்தது. தரைவறை தொங்கி நின்ற என்  உடல்கறியின்மேல்  நாய்களின்  கண்கள் கூர்ந்து நோக்கியது  பின் அதன் பார்வை வாழ்தலுக்கான நியம கொலைகளை சத்தியத்தின் நேரெதிர் திசையில் நின்று வலிமையின் உயிர்த் தங்குதலின் நேர்மையான மிருககுணத்தில் கம்பிரமாய் உர்ர்ர் ரென எதிரித் தன்மையோடு வியர்த்து வழியும் நாவை சப்பிக்கொண்டு  மெல்ல இருளுக்குள் ஓடி மறைந்தது. பெரும் காயத்தின் வலியில் நான் திமிரி ஆவேசம்கொண்டு எழுந்தேன். கடைசியாக என் இடது கைவிரல்களை ஒரே ஒரு நாயின் வாயில் கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. உக்கிரமாகி உலுக்கி விடுபட முனைந்தேன். விரல்களின் எலும்புகள் உடைந்து வளைந்து சுக்குநூறாகி பிய்ந்த கொஞ்சம் மிச்சமாகி கிடைத்தது . தலைக்குள் ஏறிய குரூரவெறி நாயின் கழுத்தைப் பிடித்து ஒரு சுற்றுச் சுற்றினேன். கழுத்தின் எலும்புகள் உடைந்தது. திருகித்திருகி தலையை தனியாக பிய்க்க முயன்றேன் படுதோல்வி அடைந்தேன்.  மேலும் ஒரு நாயைக்கொன்ற வெற்றி சிறிதும் இன்றி சாக்கடைக்குள் வீசியெறிந்தேன். மீண்டும் எனக்குள் திருப்தியின்மை சாக்கடைக்குள் கொலைசெய்த நாயின் பிணத்தின் மீது குதித்து குடல்களை கற்களால் நசித்தேன். அதன் கண்களை குத்தி கிழித்து பேரானந்தம் அடைந்தேன். என் உடலெங்கும் சாக்கடைக்கழிவின் நாற்றம். நாயின் நாற்றம் என் மனித உடலின் ரத்தக் காயங்களின் நாற்றம். மிகநாறிப்புழுத்தன. அங்கங்கே கழிவுப் புழுக்கள் என்மேல் ஊறி நெளிந்ததுநான் அலட்சியமாய் அப்படியே நடந்து போகத்தொடங்கினேன்.

சுற்றிலும் கும்மிருள் நான் வெளிச்சத்தில் தார்ச்சாலையில் நடக்கிறேன். கால்களின் அடிப்பகுதி சகதியில் சிக்கி எழுவதாய் உணர்ந்தேன். கீழே குனிந்து  பார்க்கிறேன். கோடிக்கணக்கான மூட்டைப்பூச்சிகள்  ஒன்றன்மேல் ஒன்றாக மேலே ஏறியேறி ஒரு நீளமான ரயில் மாதிரி ஏதோ தேசத்திற்கு அளவிறுதியில்லா வெளிக்கு   போய்க்கொண்டிருந்தது. நான் அதன்மேல் நடக்கிறேனா  அய்யோவென  கொஞ்சம் வேகமாக தார்ச்சாலையிலிருந்து மணற்பாதைக்கு தாண்டிக்குதித்தேன். பதற்றமாக இருந்தது.  நிலத்தை பார்க்காதே என்று எனக்குள் இருந்த குரல் தீவிரமாக கட்டளையிட்டது.  நான் அதன்படி நடக்கத்தொடங்கினேன். இருபக்கமும் மெர்க்குறி வெளிச்சம் இருளை அகற்றியிருந்தது. கம்பங்களை அதன் உயரம்வரை உற்றுநோக்கினேன் மெர்க்குறியிலிருந்து வெளிச்சம் பீ நிறத்தில் உமிழ்ந்தது. மெல்லமெல்ல அவ்வெளிச்சம் மூட்டைப்பூச்சிகளை உண்டுப்பண்ணத் தொடங்கியது. நான் நடப்பதிலிருந்து ஓடுவதற்கு மாறியிருந்தேன்.

வெளிச்சம் பெய்யும் மஞ்சலிலிருந்து மூட்டைப்பூச்சிகள் பூமியில் கணக்கிடமுடியாத அளவிற்கு சிந்திக்கொண்டிருந்தன.  நான் தடுமாறினேன்  நிதானம் தவறுகிறது. ஓடுகிறேன் வேகம்கூடக்கூட பயம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது. சாலைக்கு  இருபுறமும் மரங்கள் நெடுநீளமான மூட்டைப்பூச்சிகளாகிக்கொண்டிருந்தன, மீண்டும் வேகமெடுத்து ஓடுகிறேன் .மரமூட்டைப்பூச்சிகள் என்கூடேவே  ஓடிவருகின்றது. உயர்ந்த கட்டிடங்கள் பெருத்து வளர்ந்து  மூட்டைப்பூச்சிகளாகிக்கொண்டிருந்தது, என்னைப்பிடிக்க துரத்தி வருகின்றன. எனக்குள் பயம் பேயென அறைந்தது. இருதயம் வெளிவந்துவிடுமென நடுங்கினேன். கைகளால் நெஞ்சை அழுத்திப்பிடித்து ஓடினேன். நான் காணும் எல்லாமும் அதனதனுருவில்  மூட்டைப்பூச்சிகளாகிக் கொண்டிருந்தன. இருதயம் சம்மட்டியடி அடிக்கின்றது. வானைப்பார்த்து ஓடு என்கிறது அதே குரல். நான் அவ்வாறே செய்தேன். நீலநிறம் பரிசுத்தமாய் இருந்தது.மேகங்கள் பஞ்சுக்கூடுகள் வெவ்வேறு உருவமைப்பில் அண்டவெளியில் மிதந்துகொண்டிருந்தன. அந்தரத்தில் தொங்கிக்கொண்டு பதினாயிரங்கோடி நச்சத்திரங்கள் சிமிழியொளி மினுங்கி ப்ரகாசிக்கிற வெளியில்  நிலா பால்சிசுவைப்போல் குளிர்மையை பிரசவித்தபடி இருந்தது . அவ்வளவு அழகாய் இருந்தது . மனம் அற்புதத்தை அருகில் கண்டதுபோல் உணர்தியது. அப்போழ்துதான் நரகத்திலிருந்து துயரமொன்று எனக்குள் விழுந்தது .தாமதமின்றி அவ்வளவு மேகங்களும் பயங்கர மூட்டைப்பூச்சி வடிவங்களாயின.  நச்சத்திரங்கள் குட்டிக்குட்டி மினுங்கும் மூட்டைப்பூச்சிகளாயின. நிலா தன் பெரிய முகத்தை மூட்டைப்பூச்சியென மாற்றிக்கொண்டேயிருந்தது . என் கண்களை நம்புவதா என தெரியவில்லை. கண்கள் மனமும் காணுவதெல்லாம் பூட்டைப்பூச்சிகளா? ஏதும் எனக்கு விளங்கவில்லை .தலைதெரிக்க ஓடினேன் . வீடடைவதற்குள் நான் மொத்தமாக வெறுத்திருந்தேன்.  மனம் மனிதத் தன்மையில் இல்லை என்பதை உணர்ந்தியது மூளையின் தனிச்சசெயல்பாடு முற்றிலும் வேறாக மாறியிருந்தது. நான் தங்கி இருந்த வீட்டை நோக்கி ஓடினேன். 

ஓடியோடி என் கால்களில் இரத்தம் கட்டிவிட்டது. என் கைகள் சோர்ந்து தொங்கியது நிசப்தத்தின் பேரமைதி படுபயங்கிறமாய் மூளியது. சுவாசப்பையில் காற்று நிரம்பித் திரும்பும் சப்தம் என் காதுகளுக்குள் கேட்கிறது . உடம்பில் எல்லா இடங்களிலும் உயிர்  பிடுங்கி எறியும் வலி . அறையின் கதவை எட்டி உதைத்துக்கொண்டு  உள்ளே  நுழைந்தேன் . பெருச்சாலிகளும்,சிறுசிறு மூஞ்சி எலிகளும் எங்கெங்கோ ஓடி ஔிகின்றன. பெரும் காய்ங்களிலிருந்து இரத்தம்  ஒழுகி வழிந்துகொண்டிருந்தது. இரத்தத்தின் அணுக்களிலிருந்து மூட்டைப்பூச்சிகள் மெல்லப்பெருகி வெளியேறுகின்றது. எத்தனைவிதமான பசியெனக்கு கிழிந்து தொங்கும் என் கைகளின் சதையை பற்களால் கடித்திழுத்தேன். கடைவாயில் அரைத்து வயிற்றுக்குள் தள்ளினேன். இப்போழ்து என் நிழலுருவிற்கு மனித சாயலே இல்லை. முன்னிரவில் மிச்சம் வைத்த ஒயினை ஆவென வாய் பிளந்து ஊற்றினேன். தொண்டைக்குள் வெந்துகெண்டு குடலை நனைத்தது. மனப்பிறழ்வு முற்றி நான் நானாக இல்லாது போனபோது கஞ்சாவை பற்ற வைத்து  நுரையீரல்வரை இழுத்து காலத்திடம் ஊதிப்புகைத்தேன். பிரமாதம் என்றது உள் குரல்.

 பிறழ்ச்சியில் மனிதமனம் அதிபரிசுத்தமாய் இருக்க முடியுமா என்ன. ஒரு மாபெரும் துயரம் நிரம்பிய இரவில் என்னை இருத்திய காலத்திடம் நிர்கதியற்று ஒரு பாவம் ஜீவிதன் நிற்கிறேன்.  இந்த உலகத்திடமிருந்தும் தனித்துவிடப்பட்டு நிற்கிறேன். அப்பழுக்கற்ற மனம் சிதைந்த வெளியில் என் எல்லாக் கஷ்டகால நினைவலிகளும் கூட்டுசேர்ந்து பயங்கிறமாய் ஆடிக்களித்திருந்ததின் முன் நிற்கிறேன் . ஆளுயர நிலைக்கண்ணாடியினுள் இரத்தம் ஒழுக நிற்கிறேன்.  அது நானா? ஒரு முழு மனித மூட்டைப்பூச்சியென உருமாறிக்கொண்டிருந்தேன். அய்யோவென.என்மீது கழிவிரக்கம் கூடியது. பச்சாதாபமாய் இருந்தது. என் சிரிப்பில் உயிரேயில்லை .குரூரம் வழிந்துகொண்டிருந்தது. என்னுடம்பின் காயங்களை நாவால் வருடி பற்களால் மேலும் கடித்து உண்டேன் உதடுகளும் சிவந்து ஆலகாலபோதையாகினேன்.

ஏதுமற்றதிடம் ஒப்புக்கொடுக்கும் உடலைதானே.இத்தனை ஆண்டுகள் சுமந்தலைந்துகொண்டிருந்திருக்கிறேன்இந்த இரவு முடிவின்மைக்குள் அழைத்துச்செல்கிறது. தற்கொலை முனைக்கு நகர்த்தும்.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அத்தனை எளிதல்ல இந்த வாழ்வு. நரகத்தின் கதவுதிறக்கும் சப்தம்கேட்டுப் பதறுகிறது மனம். அறிவின் காத்திர இருப்புக்குள் சூன்யத்தின் மகா இருலொளி ஆன்மாவை பிணியின் தனிமைக்குள் உந்தித் தள்ளியிருக்கிறது. எதிர்பாரத துயரம் அழுத்தப்பிடிக்குள்ளிருந்து என்னின் நிறைவேறாக ஆசைகளின் பால்யம் பிசகி வெளியேற துடிக்கிறது. நித்தியத்துமற்ற பூரணங்காணாத மர்மப்பேய் ஒன்றோ பலதோ பூதாகரமாய் அழைக்கிறது. சைத்தானே தூரப்போ கொஞ்சங்காலம் பூமியில் சில்லறைத்தனமான மகிழ்ச்சிகளுக்கு வாழ்வை கொடுத்திருந்திருக்கிறேன். .போதும் சடையனே எதையும் தாங்கும் வலிமையற்று ஒரு பாவம் நான் நிற்கிறது . கருணையென்பதே உனக்கு இல்லை.  மனிதகோபங்கள் நிறைந்த ஐம்பத்தியொன்பதுகிழோ கனம்பொருந்திய மனிதன் நான். மூளை இருதயம் கிட்னி கொஞ்சம் பழுதாகி இருக்கும் . வலதுகையில் எப்போதோ உடைந்த எழும்புகள் ஒட்டியிருக்கும். வயிறு ஒட்டி இரைப்பையிலிருந்து கைகள் நீண்ட ஓர் அசல் சதை மிருகமாயிருக்கிறேன். ஐந்தரையடி உயரம் வளர்ந்த மூட்டைப்பூச்சிமனிதனாகி அருவெறுக்கத்தக்க ரூபம்கெட்டு மாறிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி நல்ல இறைச்சிதான். எதன் பசிக்கும் இரையாகக்கூடிய தகுதியை இயற்கை எனக்கு வழங்கியிருக்கிறது. முழுவதும் மாறித்தொலைப்பதற்குள் எனை அழித்துக்கொள்வது நல்லது.

இப்பொழுது எந்த பதற்றமும் என்னிடம் இல்லை. எனை முற்றிலும் வெறுத்தொதுக்கினேன். என் உடம்பிலிருந்து பிரிந்துகொள்ள இதுதான் தக்க சமயம் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவான இக்கணத்தை பெரிதும் மதிக்கிறேன். மேலும் பலவீனமடைந்தமனதோடு என் கழுத்தில் கயிற்றைப் பொருத்தி இந்த உலகத்தின் தரித்திரம் பீடித்த சகலவிதமான துயரங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட கால்களால் வாழ்வை எட்டி உதைத்தேன்என் முப்பத்தைந்தாண்டுகாலவுடல் பாவமாய் துடித்தது. கர்ணகொடூர தனிமையில் உயிரின் எல்லையில் என் கால்களுக்கு இடையில் மூத்திரமும் மலமும் மூட்டைப்பூச்சிகளோடு ஒழுகிக்கொண்டிருந்தன. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. எதையோ சொல்ல நாவு உள்ளே வெளியே வந்து செல்கிறது. கடைசி அரை கணம் என் உடல் பலவாகத் துடித்தது . என் கைகள் எதையாவது பற்றக்கொள்ள தீவிரமாய்  அலைந்தன. கந்தலாய் கிழிக்கப்பட்டிருந்த என்னை நேசிக்கும் உயிரை நினைத்துக்கொள்கிறேன். நரம்புகள் அழுந்த  எதன் பிடிமானமும் இல்லை  தொடைச் சதையை நகங்களால் கிழித்து பிய்த்தது. மூச்சுக்குளாய் இறுகி காற்று தடைப்பட்டு இருதயம் இறுதியாய் சுறுங்கி விரிந்தது. உடல் துடிதுடித்ததின் வேகம் மெதுமெதுவாய் குறைந்து சன்னமாய் அசைந்திருந்தபோது. தூக்கில் தொங்கி லேசாய் காற்றில் ஆடிக்கொண்டிருந்த ஜீவனற்ற என்னுடலின் நிழலிலிருந்து  மூட்டைப்பூச்சிகள் உற்பத்தியாகிக்கொண்டிருந்தன

 

  

_அனாமிகா

இயற்பெயர்:எஸ்.இரவீந்திரன்

(அனாமிகா  என்கிற  புனைப்பெயரில் கவிதைகள் எழுதி  வருறேன்.)

பிறப்பு:05/06/1983

பள்ளிப்படிப்பு:ஏழு வரை அதுவும் இரண்டு மாதங்கள்

வேலை:பலதும் இருக்கிறது  

பிரதானமாக டெய்லராக இருக்கிறேன்.

இப்போழ்து : கோவையில் காஸ்மிக் கம்பெனியில் கடைநிலை ஊழியனாக பணிபுரிந்துகொண்டிருக்கிறேன்

"நான் ஒரு மாற்றுத்திறனாளி"
"தும்பி மாயா"
என  இரு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன்

கோவை பேரூர் அருகில்   உள்ள ஆறுமுக கவுண்டனூரில் வசித்து வருறேன்

 

Anamikaana923@gmail.com


 

 


Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு