நேசமும்... வாழைப்பழமும்..

                                                                                         -மரு. பா. வாணிப்பிரியா. 



அதோ அந்த பெரியக்குளம் பஸ் நிக்குமே அங்க தா நம்ம ஊடு. உனுக்கு எங்க….?” “ நமுக்கு திருச்சி  பஸ்... பரஸ்பர விலாசங்கள் பரிமாறப்பட்டது. “ஏம்புள்ள நானும் பாக்கேன் தனியாவே குந்தினு இருக்கியே.. உனுக்கும் கூட ஆருமில்லயா…” “தனியாருக்க எனுக்கின்னா  பயமாபளகிருச்சு... அவரவர் ஆளம்பு சேனைகள் விளக்கப்பட்டது..

அந்தப்பக்கம் வந்த காலை ரோந்து வண்டியை வெறித்தவாறு   ஏந்தாத்தா.. நெதமு ரோந்து வண்டியே வருதே...இன்னிக்காவுது சோத்து வண்டி வருமா..?” அவளிடத்தில் தன்னைப்போலவே பசித்துக்கிடக்கும் ஒரு வயிறு கண்ட நெருக்கம்..  தாத்தாவாஎன்ன இன்னா கிழவனாருன்னு நெனிச்சியாகொமரம்புள்ள…!” இல்லாத மீசையை முறுக்கிச் சிரிக்க.. அங்கே இன்ஸ்டென்டாக வழிந்தது நேசம். அய்யே போதுமே...!!”ஓரமாய் வெட்கப்பட்டாள்..  அந்த பதின்மச்சிட்டுக்கு பெரிதாய் மறுக்க ஒன்றுமில்லாததாய்....... அந்த பேருந்து நிலையத்தில் ஒண்டி ஒதுங்கிய உயிர்களில் இவர்களும் அந்த இன்ஸ்டென்ட் ஸ்னேகமும் அடக்கம்...

உணவு கண்டு மூன்று நாளாகிய அசதி  மட்டும் அங்கே பொதுவுடைமையாக...

ஊரடங்கு உபயத்தில் திருச்சியும் பெரியக்குளமும் சந்திக்கும் சந்து  அந்த வயது மறைந்தோரின் வாழிடமாய்... அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளுக்குள்ளிருந்த  தேவதை வெளிவரத்தெடங்க .. அந்த அனுபவம் அங்கே தடுமாறியது... தொண்டையைச் செருமியபடி  ஆருமில்லன்னு  நெனிக்காத புள்ள.. உனுக்கு நா இருக்கேன்... நீ கவலப்படாம தூங்கு... அந்தப் பருவம் அங்கே நகைக்க எனுக்கின்னா கவல... போயா கெழவா...!” உறங்கிப்போனாள் .. மணி பன்னண்டு இருக்கும் போலயே.. ஏம்புள்ள குளூரல உனுக்கு... கிழிந்த கைலியும் வெற்றிலைப்பாக்குக் கரையுமாக சிரித்தவனைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை அவள்...

சித்திரை வெய்யிலும்  மனதின் இறுக்கமுமாக ஊரே ஊரடங்கில் புழுங்கியபடி இருந்தது .

தூக்கத்தின் முனகலாய் அவ அவளுக்கு இங்க வேத்து ஒழுகுது .. இங்க மைனர் மாப்பிள்ளைக்கி குளூருதாம்ல..! என்னய்யா சரக்கா..?!” பிரண்டு படுத்துக்கொண்டாள்.. இப்ப எவந்தாராஞ் சரக்கு.. அவன் பேசவில்லை... தொடக்கமும் முடிவுமான சந்து அரவமற்று.. இவளும் ஆளற்று... இத்தனை நேரப் பேச்சுக்களெதற்கும் மறுப்பில்லை... துணிந்துவிடத் துணிந்தான்....

அவள் எதிரொலிக்கவுமில்லை.. எதிர்க்கவுமில்லை..

வியர்வை வழியக்கிடந்தவன்  ஒருக்களித்துக்கிடந்தவளிடம் ஏம்புள்ள இப்புடி கட்ட கணக்கா கெடக்க... அவனிடம் கொஞ்சம் ஏமாற்றத்தின் சாயல்... ஆமா இவுரு பெரிய மம்முதந்தா... போதும் போயா..... சலித்தவாறே தவறவிட்டக் கனவைத் தொடர ஆயத்தமானாள்......

மீண்டும் அவளை உலுக்கி நா இருக்கேம்புள்ள.. உனுக்கு நா.. எனுக்கு நீ.. இனி எங்காலத்துக்கும் உன்னோடதாம்புள்ள...அவள் விழித்துப்பார்த்து ஒரு ஓரமாக  உதட்டைச் சுழித்து  அதுக்கென்ன இருந்துட்டு போய்யா... நாந்திங்கிற  சோத்துல உனுக்கொரு கவளந்தான... எனுக்குந்தா ஆருருக்கா..அங்கே அவசர உடன்படிக்கையாக நேசம் எழுதப்பட்டது...

எழுந்து அவனை ஒட்டிய சுவரோரமாக அமர்ந்தாள் .. நட்சத்திரங்கள் பார்த்தபடி அதன் பின்னே விடிய விடிய கதைக்கப்பட்டதெல்லாம் ஸ்வீட் நத்திங்ஸ் வகையறா.....  நாளிக்கி சோத்து வண்டி வந்ததும் உனுக்கும் சேத்து நா வாங்கியாறம்புள்ள... அவளுக்கு கொஞ்சமாய் சிலிர்த்தது... இந்த வெயாதி முடிஞ்சோன்ன நாம வேற எங்கனயாச்சும் போய்டலாம்புள்ள .... உன்ன நா வச்சு காப்பாத்துறேன்..... இதற்கு அவளுக்கு கொஞ்சம் அழவும் கூட வந்தது..

நாம ஏயா வேற எங்கயும் போனும்... இங்கனயே ஏதாச்சும் ஒரு டீ கடயாப் போட்டு  பொழச்சுக்கலாம்யா.... கற்பனைகள் தான் எத்தனை எளிதாக இருக்கிறது.. பசியைப்போக்க மட்டும் கற்பனையால் முடியுமென்றால்..

விடியக்கருக்கலில் உறங்கியவளுக்கு சத்தத்தில் விழிப்பு தட்டியது.. ஒரே திசையில் விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தது  ஒரு கூட்டம்... யோ.. யோ.. எந்திரியா.... சோத்து வண்டி வந்துருச்சு போலருக்கு... அத்தனை உசுப்பலுக்கும் அவனிடம் பதிலில்லை..  இரவின் அசதி இன்னுமவனிடம் மிச்சமிருந்தது... சற்று சலித்தவாறு பார்த்துவிட்டு  உணவு வந்த திசை நோக்கி விறுவிறுத்தாள்....

அள்ளி அள்ளிக் கொடுத்துப் பழக்கப்பட்ட கைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் காயடிக்கப்பட்டு  வாங்க பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது அங்கே.

வியர்வையைத் துடைத்தவாறு வந்தமர்ந்தவள்  கண்ணில் காதடைத்த பசியின் கோபம்.. கழிச்சல்ல போறவிங்க... ஒரு  பொட்டலங்கூட தரலியே... இப்பிடி மக்க எதுக்கும் ஆலாப்பறந்தா நானெல்லா சோத்துக்கு எங்க போவ...?” சபித்தவாறே வந்தவள் அவனை உசுப்பினாள்... அவனிடத்தில் துளி நகர்வில்லை... எழப்போவதில்லை என்ற உறுதியுடன் அவனை ஒரு ஓரப் பார்வை  பார்த்தவாறே தன்  துணிப்பையை அவிழ்த்துக் கிண்டினாள்... உள்ளே எட்டிப் பார்த்தாள்... மொத்தமாக கவிழ்த்துப் பார்த்தாள்... உள்ளே அது இல்லை...

ஒட்டிக்கொண்டிருந்த கடைசி நம்பிக்கையும் சிதறடிக்கப்பட காளியென்றாகியவள் கண்ணில் பட்ட  அவனை உலுக்கினாள்... யோ.. எந்துணிப்பைய எடுத்தியா... சொல்லுயா...?”உலுக்கலில் திணறி விழித்தவன் ஆமாம்புள்ள .. ராத்திரி நீ தூங்கயில... அதற்கு மேல் அவனை பேசவிடவில்லை...

அவளடித்த அடி சொல்லியது அவளிழப்பு  .... கையிட்டு கும்பிட்டு தெரியாம எடுத்துட்டேம்புள்ள... அடிக்காத புள்ள வலிக்கிது...  நா வேற வாங்கியாறன்...அவளடங்கவில்லை.... கண்கள் கலங்க வுட்டுடு புள்ளவயோதிகத்திலும் வலியிலும் தடுமாறினான் அவன்... நேற்றைய மன்மத மிடுக்கு மொத்தமும் அழிந்து  பரிதாபமாக நின்றவனுக்கு வக்காலத்து வாங்கவென   யாரும் அங்கே நின்றிருக்கவில்லை...

நேற்றைய நேசத்துக்கும் இன்றைய நிதர்சனத்துக்கும் சாட்சியாக அந்த ஆளற்ற பேருந்து நிலையம்... கிழிசல் லுங்கி ஒரு கையிலும் துடைத்த ரத்தம் ஒரு கையிலுமாக  அவன் அடுத்த சந்து தேடிப்போக துணிப்பையை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள்... அந்தப்பிறவியின் மொத்தப் பசிக்குமான  பறிக்கப்பட்ட பதிலாக அந்த சந்தின் மூலையில் கிடந்தது அந்த வாழைப்பழத்தோலும் பிஸ்கட் பாக்கெட் உறையும்....

ஒரு நூற்றாண்டு உறவென கருதப்பட்டதை அங்கே பசி வென்றிருந்தது...


மருத்துவர் வாணிப்ப்ரியாவிற்கு போட்டியின் முடிவுகளை அறிவித்து மின்னஞ்சல் செய்திருந்தேன், இதுவரையிலும் அவரிடமிருந்து பதில் இல்லை. அவர் திருச்சியில் வசிக்கும் மருத்துவர் என்பது அவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து கிடைத்த செய்தி. 
கதையை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவரது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

vanipriya23395@gmail.com

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு