வசுந்தரா தொகுப்பில் வந்திருக்கும் ஒரு கதை... எனக்கு விருப்பமானது.                                                                                ஆரஞ்ச்…
     இப்படியானதொரு வேலையாயிருக்குமென தெரிந்திருந்தால் மணி கொஞ்சம் யோசித்துத்தான் வந்திருப்பான். சினிமா சூட்டிங் என்றதும் ஆசையில் அத்தனை உருப்படிகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிவந்தது எத்தனை தப்பாய் போனதென இப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு. எடுத்ததையே எத்தனைமுறைதான் எடுப்பார்கள். உருப்படிகள் அவ்வளவும் வெயிலுக்கு வெறியேறிப் போய்க் கிடந்தன. வழக்கத்தை விட அதிகமான சீற்றம். எல்லாத்தையும் பெட்டிக்குள் வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. போதாக்குறைக்கு மகனையும் கூட்டி வந்து அவனும் பாவம் உருப்படிகளையும் மேய்க்க முடியாமல், வெயிலில் நிற்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான். பத்து வயதுதான் ஆகிறது. ஆனாலும் சுருத்தான பயல், தனக்குப் பிறகு உருப்படிகளைப் பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறானென அவனைப் பார்த்து நம்பிக்கையாகவும் சந்தோசமாகவும் இருக்கும் மணிக்கு. கடைசியாய் ஆறு மாதத்திற்கு முந்தி வந்த ’ஆரஞ்ச்சோடு’ சேர்த்தால் மணியிடம் பதிமூன்று உருப்படிகள் தேறும். இன்னைக்குத் தேதியில் பாம்பு வித்தை காட்டும் யாரிடமும் இத்தனை உருப்படிகள் இல்லை. பாம்புகளை உருப்படிகள் என்று சொல்லக்கூடாதென்றுதான் மணியின் மகன் எல்லாத்துக்கும் செல்லப் பெயர் வைத்தான். பெரிய சாரைக்கு இடிமுட்டி, பூ நாகத்துக்கு காடு காத்தான், இப்படி எல்லோருக்குமே பேர்  இருக்கிறது. ஆரஞ்ச் எல்லோரையும் விட அழகானவள். படமெடுத்து நிற்கையில் அவ்வளவு அழகாயிருக்கும். வழக்கமாய் மற்ற பாம்புகள் படமெடுக்கையில் அதன் வடிவம் ஒரு சொளகைப்போலிருக்கும். ஆரஞ்சுக்கு அப்படியில்லை, வெற்றிலையைக் கிள்ளி வைத்தது போல் அவ்வளவு லட்சணம். அதன் நிறமும் வழக்கமான நாகங்களின் நிறமாயிருக்காது. அதன் தோலிலிருந்து எப்பொழுதும் ஆரஞ்சு சுளைகளின் வாசணை வருவதால் சின்னவன் தான் ஆரஞ்ச் என்று பெயர் வைத்தான்.
     ஸ்னேக் மணிக்கு நல்ல தொழில்காரன் என அந்த மாவட்டத்திலேயே நல்ல பெயர் இருந்தது. எப்படிப் பார்த்தாலும் மாதத்தில் பத்திலிருந்து பதினைந்து ப்ரோகிராம் இருந்துவிடும். சளைக்காமல் மூணு மணிநேரம் நாலு மணிநேரத்திற்கெல்லாம் நிகழ்ச்சி பன்னுவான். பணமும் யாரிடமும் இவ்வளவு வேண்டுமென அழுத்தமாய்க் கேட்பதில்லை. குடுப்பதை வாங்கிக் கொள்வான். அதனாலேயே எல்லோருக்கும் விருப்பமானவனாய் இருந்தான். சினிமாக்காரன்கள் துட்டு நிறைய தருவதாக சொன்னதற்காக இவன் ஒத்துக்கொள்ளவில்லை, சின்ன வயசில் இருந்தே ஒரு காட்சியிலாவாது சினிமாவில் தலை காட்ட வேண்டுமென்பது அவன் விருப்பம். அதற்காகவேதான் ஒப்புக்கொண்டான்.  வித்தை காட்டுகிற சீன் எடுக்கப்போகிறார்கள் என்று நினைத்துதான் வந்தான், பிறகுதான் தெரிந்தது வேறொரு காட்சியில் உபகாட்சியாய் இது வருகிறதென. ஒரு பெரிய சந்தையில் ஆட்டம், பாட்டத்தோடு பாம்பு வித்தையும் நடப்பதாக காட்சி. அதை கதாநாயகன் வந்து பார்த்துப் போவதாக எடுக்க வேண்டும். கதாநாயகன் மூஞ்சியே தெரியவில்லை, மூக்கு மட்டும்தான் தெரிந்தது, எந்தூர்க்காரனோ?... இப்போதான் காசிருந்தால் எல்லா நாயும் கதாநாயகன் ஆகிவிடுகிறதே… அவனுக்கு கதாநாயகனைப் பிடிக்கவில்லை. அதற்கு ஆட்டக்காரனும், ஆட்டக்காரியும் எவ்வளவோ தேவலாம் எனப்பட்டது. இவன் காட்சியை விட்டு விட்டுத்தான் எடுத்தார்கள். பெரிய கூட்டம் வேறு. காற்றடித்து அணலும் புழுதியுமாய் மூஞ்சியில் அப்பியது. செம்மண் வெக்கையில் உடல் எரியும். போதாக்குறைக்கு அவ்வப்பொழுது அந்த பெரிய காத்தாடியை வேறு போட்டுவிடுவதால் வியர்வையில் செம்மண் அப்பி எரிந்தது.
     காலையில் கூட்டி வந்த முதல் கொஞ்ச நேரத்திற்கு விழுந்து விழுந்து கவனித்தார்கள், எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான், வேலை ஆரம்பிக்கவும் தண்ணி குடுக்க கூட ஒரு நாய்கூட இல்லை. அப்பொழுதே கிளம்பிப் போகலாமெனப் பட்டது. ஆனாலும் ஒத்துக்கொண்டு பாதியில் போவது மரியாதையாய் இருக்காதென அமைதியாய் இருந்தான். டைரக்டரின் அசிஸ்டெண்ட் யார் யாரென இவனுக்கு இன்னும் மட்டுப்படவில்லை. திடீரென எங்கிருந்தாவது ஒருத்தன் ஓடிவருவான், குண்டிக்கு மேலிருக்கும் வேட்டியை இழுத்துவிட்டு சரிசெய்துவிட்டு ‘கண்டினியூட்டிண்ணே’ சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே ஓடிவிடுவான். என்ன கன்றாவியோ?... கூட்டத்தை எப்படித்தான் கட்டி மேய்க்கிறார்களோ என ஒரு பக்கம் ஆச்சர்யமாயிருக்கும்…. அதிலும் அந்த பன்னிமூஞ்சி அசிஸ்டெண்ட் ஒருத்தன் இருக்கிறானே… அவனை பன்னி மூஞ்சி என்று சொல்ல முடியாது, கொஞ்சம் குரங்கு மூஞ்சியும் கொஞ்சம் பன்னி மூஞ்சியும் பாதிப் பாதியாய் சேர்ந்த கலவை. யார் எவர் என்று பார்ப்பதெல்லாம் இல்லை. எல்லோரையும் ‘ஆத்தா, அம்மா என்று ஏகவசனத்தில்தான் பேசுவான். அப்படியே நாக்கில் பாம்பை விட்டுக் கடிக்க விடவேண்டும்போல் இருக்கும் மணிக்கு. பார்க்க எந்த நேரமும் கத்திக்கொண்டே இருப்பவனை பெரிய வேலைக்காரனோ என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள், ஆனால் எல்லாம் டக்கால்டி… ஆளைப்பார்த்து செய்கிற சேட்டைகள். பொம்பளைகள் யாராவது அவன் வசத்திற்கு வராவிட்டால் அவ்வளவுதான் அந்தப் பொம்பளையைப் போட்டு தாக்கி விடுவான். முதலில் நாம்தான் இப்படித் தப்பாய் நினைக்கிறோமோ என எண்ணியவன் தொடர்ந்து சில பெண்களை அவன் விரட்டுவதையும், திட்டுவதனூடாய் அப்பெண்களைத் தொடுவதையும் கவனித்தபின் நிஜம்தானென உறுதிசெய்து கொண்டான்.
     காலையில் எடுப்பார்களெனக் காத்திருந்து கடைசியாக இவன் காட்சியை எடுக்க மதியம் பணிரெண்டு மணியாகிவிட்டது. அதுவரைக்கும் உருப்படிகள் அவ்வளவும் வெயிலில்தான் கிடந்தன. இவன் படமெடுப்பதை வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கதாநாயகன் கூட்டத்தை விலக்கி விட்டு வந்து ஆட்டம் பார்க்க வேண்டும். இதைத்தான் காலையிலிருந்து எடுத்தார்கள். ஆட்டக்காரிகள் சும்ம சொல்லக்கூடாது. பார்த்ததும் தீப்பிடிக்கிற மாதிரி இருந்தாள்கள் இரண்டு பேரும். ஒருத்தி நல்ல கருப்பு, அந்தக் கருப்புக்கேத்த அழகும், திமிரும். அவளைத்தான் அந்த பன்னி மூஞ்சி அசிஸ்டெண்ட் நீண்ட நேரம் கவுத்த முயற்சித்தான். அவள் இவனை ஒரு நாயாய்க்கூட மதிக்கவில்லை. நெருங்கிச் சென்று, ’இல்லம்மா நீ சுத்தி ஆடிவரும்போது கொஞ்சம் தள்ளி வரனுமென்று சொல்லியபடியே சைசாக கையை இடுப்புப் பக்கமாய்க் கொண்டுபோனான். அந்தப் பிள்ளை சிரித்துக் கொண்டே ”கையத் தள்ளி வைய்யி… இல்லன்னா பாதிக்கை காணாமப் போகும்….” சொல்லியதும்தான் இது வேலைக்காகதென ஆடிக்கொண்டிருந்த இன்னொரு பிள்ளை பக்கமாய்க் கவனத்தைத் திருப்பினான். ஸ்னேக் மணிக்கு இதையெல்லாம் பாக்க சிரிப்புதான். பிறகுதான் துவங்கியது வினை, வித்தை காட்டுகிற மாதிரி எடுக்கலாமென ஆரம்பித்தார்கள். இவன் வழக்கமாக நிகழ்ச்சிக்கென்று சில வழிமுறைகள் வைத்திருப்பான். எந்த உருப்படியை எதற்கடுத்து எடுக்க வேண்டுமென, அதுதான் கொஞ்சம் பாதுகாப்பும். ஆனால் இவர்கள் அதற்கெல்லாம் அவனை அனுமதிக்கவில்லை. அவர்கள் சொல்வதைத்தான் எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாய் ஐந்தாறு உருப்படிகளை எடுத்து கையில் வைத்திருப்பது வழக்கத்தை விட இன்று அதிகம் கவனமாகத்தான் இருந்தான். பேசிப் பேசி தொண்டை வறண்டது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் வியர்வை இன்னும் இன்னுமென உடலை உலர்த்திப் போட்டது.
     எவ்வளவு நேரமானதெனத் தெரியவில்லை, கொஞ்சம் கண்ணைக் கட்டத் துவங்கியது. அவசரமாக ஒவ்வொரு உருப்படியாய் பெட்டிக்குள் வைத்தான். பசி மயக்கம். இரண்டு மணியைத் தாண்டியிருந்தது. இன்னும் தேவையானதை அவர்கள் எடுத்து முடித்திருக்கவில்லை. கையில் இரண்டு உருப்படிகளை மட்டும் வைத்திருந்தான். பசிக்கிதென்றான். ’இன்னும் ஒரு பத்து நிமிசம் கழிச்சுப் போகலாம்னே’ என்றார்கள். அவன் மறுபடியும் ஒவ்வொரு உருப்படியாய் கையில் எடுத்தான். உருப்படிகள் பாதி வெக்கையில் சோர்ந்து போயிருந்தன, இடிமுட்டியும், ஆரஞ்சும் மட்டும் வெக்கையில் வெறியேறியிருந்தார்கள். அவர்களுக்கு இவ்வளவு வெக்கை ஆகாது. அதிலும் இடிமுட்டி ஏற்கனவே இரண்டு முறை தலையில் கொத்தியிருந்தான். இரண்டுமே வலுவான கொத்து. வழக்கமாக ஒவ்வொரு உருப்படியும் அன்னன்னைக்கு எப்படி நடந்து கொள்ளுமென ஒரு கணிப்பு அவனுக்கு எப்பொழுதும் இருக்கும். என்னதான் உருப்படிகளுக்கு விஷப்பல்லைப் பிடுங்கி விட்டாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சின்னதாக நஞ்சுபை கட்டும். இப்படிக் கட்டுகிற பொழுது கவனமாக அதனையும் எடுத்துவிட வேண்டும். இடிமுட்டிக்கு எடுத்தாகிவிட்டது. பிரச்சனையில்லை. கொத்தட்டுமென விட்டுவிட்டான். உருப்படிகள் சோர்ந்து போயிருப்பதால் ஆரஞ்சையே வெளியிலெடுத்தான். இப்போ வரப்போறது எல்லாத்துக்கும் இளையவருங்க…. வாங்க வாங்க….ஆரஞ்ச் வெளிய வாங்க… அய்யா இருக்காக.. அம்மா இருக்காக… குழந்தைகள் இருக்காக… வந்து உங்க முகத்தக் காட்டுங்க….” வெளியிலெடுக்கும் போதே படம் விரித்து மூர்க்கமாக வந்து நெளிந்து கொண்டிருந்தது ஆரஞ்ச். இடிமுட்டியை தோளில் சரிய விட்டான். இடிமுட்டி வேகமாக ஊர்ந்து உடலெங்கும் நழுவி மெல்லத் தரையிறங்கியது. மகன் இன்னொரு உருப்படியை கையிலெடுத்துக் கொடுத்தான். மணி சிரித்தபடியே ஆரஞ்ச்சை வாங்க வாங்க ஒரு முத்தம் குடுங்க என்று சொல்லியபடியே தனது முகத்திற்கு அருகே கொண்டு வந்தான். அந்த நேரம் பார்த்து இடிமுட்டி ஆவேசமாக சுற்றி நின்ற மக்களை நோக்கி ஓட அவசரமாக காலால் மிதிக்க வேண்டி முன்னேற எச்சரிக்கையில் கை ஆரஞ்ச்சை இன்னும் இறுக்கமாகப் பிடிக்க ஆரஞ்ச் மிகச்சரியாக அவனது நாக்கில் கொத்தியது. லேசாக வலியோடு இந்த முறை கண்ணில் சின்னதாக தீப்பறி பட்டதுபோலாகிவிட சுதாரித்து அத்தனை உருப்படிகளையும் பெட்டிக்குள் போட்டான். ஆரஞ்ச் இன்னும் சீறிக்கொண்டிருக்க அவளைத் தனிப்பெட்டியில் போடச் சொல்லி மகனின் கையில் குடுத்தான். குடுக்கும்போதே கண்கள் சொருகியது. மயங்கி விழப்போகிறானெனத் தெரிந்ததும் மகன் ஆரஞ்ச்சை பெட்டியில் போட்டுவிட்டு நெருங்கி ஓடிவந்தான். கூட்டம் சற்று பின்வாங்கியது. அவசரமாக தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். காட்சிக்குத் தேவையானது எடுத்தாகிவிட்டது என்று படக்குழு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். தயாரிப்புக் குழுவிலிருந்து ஒரு ஆள் மட்டும் மணியுடன் சென்றிருந்தார். மணிக்கு உயிருக்கு ஒன்றுமில்லை என்று சொன்னதும், கையில் ஒரு இரண்டாயிரம் ரூபாயைக் குடுத்துவிட்டு உடம்பைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றிருந்த ஆள் திரும்பிவிட்டான். அந்தப் பணம் புரோகிராமுக்குத் தருவதாகச் சொன்னதை விடவும் குறைவானத் தொகை. ஒரு காலி வவுச்சரில் அவன் மகனிடம் கையெழுத்து வாங்கிகொண்டான். அந்தப்பையனும் சூட்டிங் முடிந்து வந்து எல்லோரும் விசாரிப்பார்களென நினைத்துக் கொண்டு விட்டுவிட்டான்.
     இரண்டு மூன்று நாட்கள் போனது, ஆஸ்பத்திரி பில் மட்டுமே நாலாயிரம் ரூபாயைத் தாண்டியிருந்தது. சூட்டிங் ஆட்கள் மறுபடியும் ஒருவர்கூட வந்து விசாரிக்கவில்லை. மணிக்கு உயிருக்கு ஒன்றுமில்லை, பேச்சுத்தான் சுத்தமாக வராமல் வாய் குழறியது. இன்றோ நாளையோ ஆஸ்பத்திரியிலிருந்து அனுப்பி விடுவார்கள். அடுத்து செலவுக்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான் மணியின் மகன். எப்படியும் கூப்பிட்டால் அவர்கள் வந்து காசு கொடுப்பார்களென்கிற நம்பிக்கையில் சூட்டிங்கிற்குக் கூப்பிட்ட மேனேஜருக்கு ஃபோன் பன்னினான். மூன்று நான்குமுறை கால் போய் கட்டானது. பிறகு கூப்பிடுவதை விட்டுவிட்டான். கொஞ்ச நேரத்தில் அந்த நம்பரிலிருந்தே இவனுக்கு அழைப்பு வரவும்தான் திரும்பவும் நிம்மதி வந்தது. அந்த ஆளுக்கு இப்படியொரு விசயம் நடந்ததே மறந்து போயிருந்தது. இவன் தன்னை நினைவுபடுத்துவதற்கே இரண்டு மூன்று முறை சூட்டிங் வந்ததை விலாவரியாக சொல்ல வேண்டியிருந்தது. பிறகு இவர்களை தெரிந்து கொண்ட மேனேஜர் “சொல்லுப்பா என்ன விசயம்?....’” இவனுக்கு இப்படிக் கேட்டால் என்ன சொல்வதென்கிற குழப்பம். “இல்ல சார்… அப்பாவ இன்னைக்கு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்… மிச்சப் பணம் குடுத்திங்கன்னா, கூட்டிட்டு போயிடுவேன்…” எதிர்முனையிலிருந்து பதில் வரவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு “உங்களுக்குக் குடுக்க வேண்டியத குடுத்தாச்சேப்பா… ஆறாயிரம் ரூவா குடுத்ததா வவுச்சர்ல கையெழுத்தப் போட்றுக்கிங்களே….” இவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. கையால் ரெண்டாயிரம் தாண்டி ஒரு பைசா வாங்கவில்லை. பிறகு மிச்ச பணம் யார் யாருக்குக் குடுத்தது. இவன் அதைப் பற்றிக் கேட்பதற்கு முன்பாகவே எதிர்முனையிலிருந்தவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான். அந்தப் பையனுக்கு வேற யாருடைய தொலைபேசி எண்ணும் தெரியாது. ஏற்கனவே குழம்பிப்போயிர்ந்தவன் இந்தக் குழப்பத்தை எப்படி மணியிடம் சொல்வதென யோசித்தான்.
     மணிக்கு பேச்சு மட்டும்தான் முழுமையாய் வந்திருக்கவில்லை, ஆனால் ஆஸ்பத்திரியை முழுக்க வலம் வரத் துவங்கினான். எல்லோரிடமும் பேச்சுக் குடுத்தான். அவனின் அரைகுறைப் பேச்சை எல்லோருமே ரசித்தார்கள். டாக்டர் அவனைப் பேசக்கூடாதென உறுதியாக சொன்னார். அவனால் பேசாமலிருக்க முடியவில்லை. அப்படி தத்தா பித்தாவென பேசுவதில் அவனுக்கு இன்னும் விருப்பம். இந்தப்பையன் அவனைத் தேடிப் போகும்போது ஆக்சிடெண்டாகி ஒரு மாதத்திற்கும் மேலாக உள்நோயாளியாயிருக்கும் ஒரு ஆளிடம் மணி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும் “பணம் வந்திருச்சா போகலாமா?....” ஆர்வமாகக் கேட்டான். தலையைக் குனிந்து கொண்ட இந்தப்பையன் விசயத்தைச் சொன்னான். சொத்தென அந்தப் பையனுக்கு ஒரு அறை விழுந்தது. அவன் மூஞ்சியைப் பிடித்துக் கொண்டு அழுதான். “எதுக்குடா கையெழுத்துப் போட்ட புழுத்தி…போச்சா…போச்சா… இதுவும் போச்சா….” புலம்பத் துவங்கினான். எதுவும் புரியாத வார்த்தைகளும் அழுகையும் உளறலுமாய் அவன் சத்தம் அந்த வார்டு முழுக்க எழுந்தடங்கியது. கடைசியில் வீட்டிலிருந்து ஸ்னேக் மணியின் தம்பி கொஞ்சம் பணம் எடுத்து வந்து கட்டி வீட்டுக்குக் கூட்டிப்போனான். மணிக்கு பணம் வரவில்லை என்பதை விடவும், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதில்தான் வேதனை. அவசரப்பட்டதற்காக குமுறினான். பணமே வராவிட்டாலும் பரவாயில்லை, குரல்?.... அவன் வித்தைக்கு மூலதனமே குரல்தான். உண்மையில் எல்லா உருப்படிகளும் இவனின் தொடுதலுக்குக் கொஞ்சம் பழகியிருக்கிறதென்றால் இன்னொரு வகையில் இவனது குரலுக்கும் பழகியிருந்தது. அந்தக் குரலில்லாமல் எப்படி இனி உருப்படிகளைப் பழக்குவது. வீட்டில் வேறு யாரும் உறுப்படிகளை பெரிதுபடுத்துவதில்லை. அதிகமாய்ப் போனால் இவனுக்குக் கஞ்சி ஊற்ற முடியும்.. என்கிற அளவில்தான் எல்லோருமிருந்தனர்.
     இரண்டு மாதங்கள் போயிருந்தது. எல்லா உருப்படிகளையும் விற்றுவிட்டான். இனி ஒருபோதும் தொழிலுக்குப் போவதில்லையென முடிவுசெய்தான். பையனை வெளியூரில் ஒரு ஹாஸ்டலில் சேர்க்க வேண்டி இப்பொழுது ஒரு வாரமாய் ஒரு பாதிரியாரைப் பார்க்க அலைந்து கொண்டிருக்கிறான். இது மட்டும் முடிந்துவிட்டால் ஒரு பெரிய கடமை அவனுக்கு முடிந்ததாகிவிடும்.  பாதிரியார் இவன் பாம்பாட்டியாய் இருந்தவன் என்பதாலேயே இவனை நெருங்கவிடத் தயங்கினார். அவனும் விடாமல் முயன்றான். பையன் உருப்படிகளோடே வளர்ந்தவனென்பதால் எதையும் பெரிதாய் நினைக்கவில்லை. பள்ளிக்கூடம் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி எப்படியும் பிழைத்துக் கொள்ளலாமென உறுதியாய் நம்பினான். வீட்டில் இப்பொழுது பாம்பின் வாசனை இல்லை. ஆனாலும் மணியின் பொண்டாட்டி ’எதற்காக இந்த மனுசன் அந்த ஒரு சனியனை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறானென..’ ஆரஞ்ச் இன்னும் வீட்டிலிருப்பது புரியாமல் புலம்பினான். மற்ற எல்லா உருப்படிகளையும் விற்ற பின்னாலும் அவனால் ஆரஞ்ச்சை மட்டும் விற்கமுடியவில்லை. அவன் பொண்டாட்டி சொல்லிப் பார்த்தாள். அவன் பொருட்படுத்துவதாயில்லை. ‘நீ இல்லாத நேரமாப் பாத்து தூக்கி எறியறனா இல்லயா பாரு..’ இப்படி சொன்ன ஒரு நாளில் அவளைத் துரத்தி துரத்தி அடித்தான். அதிலிருந்து அவள் அந்த சனியனை வைத்து என்ன செய்யட்டுமென விட்டுவிட்டாள்.
     பாதிரி ஒரு வழியாக இறங்கி வந்தார். மணியின் மகனுக்கு ஹாஸ்டலில் இடம் கொடுக்க ஒப்புக்கொண்டதோடு விருப்பமிருந்தால் இவனும் சர்ச்சிலேயே காவலாளியாக வேலைக்கு சேர்ந்து கொள்ளலாமென்றார். இவனுக்கு பாதிரியாரைப் பார்க்கையில் ஜீசஸ் க்ரைய்ஸ்ட்டையே பார்ப்பது போலிருந்தது. ”பையன சேத்துக்கங்கய்யா… நான் கொஞ்ச நாள்ல மேல் சுகமாகவும் சேந்துக்கறேன்…” சந்தோசமாக சொல்லிவிட்டு வந்தான். அடுத்த நாள் காலை மகனை அனுப்பி வைக்க வேண்டும். இப்பொழுது மனதில் மெல்லிய நிம்மதி. அவன் பொண்டாட்டியும் இப்பொழுது நிம்மதியாயிருந்தாள். மழை பெய்து ஓய்ந்திருந்த இரவு, எல்லோரும் உறங்கப் போயிருந்தார்கள். மணிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. எவ்வளவோ காலம் உறுப்படிகளோடு உறங்கிப் பழகியவன். வெறுமனே உறுப்படிகள் என்று சொல்ல முடியாது அவனால், அவ்வளவும் அவனின் குழந்தைகள். இப்பொழுது யாருமில்லாதவனாய் தன்னை உணர்ந்தான். இனிவரப்போகும் தனிமை கண் முன் மிகக்கொடூரமாய் நிழலாடியது. ஆளற்ற தேவாலயத்தின் வாசலில் தான் வாட்ச்மேனாய் இருக்கிற காட்சி துர் நாடகமொன்றின் சகிக்கமுடியாத காட்சியாகவே அவனுக்குத் தோன்றியது.  ஆரஞ்ச் ஆர்வத்துடன் பெட்டிக்குள் சுருண்டிருந்தது. அதைக் கையிலெடுத்துத் தவழவிட்டான். ஸ்பரிசம் இவனுடையதாய் இருந்த போதும் அந்தக் குரலை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நெளிந்தது. அவ்வளவு சாந்தம். அதன் தலையில் தடவிக்கொடுத்தான். நெளிந்து நெளிந்து இன்னும் இன்னுமென தன்னுடலை தழுவக் குடுத்தது. அவன் ஸ்பரிசத்தில் முழு ஒப்புதலோடு தன்னை ஒப்புக் கொடுத்த ஆரஞ்ச் நன்றாக சுருண்டு படுத்துக் கொண்டது. அப்படியே பெட்டியில் படுக்க வைத்தான். அவன் கைகள் முழுக்க இப்பொழுது ஆரஞ்ச் வாசனை.

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.