இனியொரு.காம் ல் வெளியான ஒரு பழைய கட்டுரை.           எப்போதும் வாழும் கலை

            எப்பொழுதாவது கண்டுகொள்ளப்படும் கலைஞர்கள்......

      அடுத்தத் தலைமுறையினருக்கு நாம் கலையென விட்டுச் செல்லப் போவது எதனை? எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் கேம்ஸ்களுக்குள் அடைத்துவிடத் துடிக்கும் நவீன மனிதர்களுக்கு தாங்கள் கேள்விப்படுவது தங்களுக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வியாபாரமாக்குவதே பிரதானமாய் இருக்கிறது. இதைத் தாண்டி இவர்கள் தெரிந்து கொண்டிருக்கும் கலை, ஒன்று மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கானதாக இருக்கும், அல்லது ஏதாவதொரு அயல்தேசத்தின் அடையாளம் கொண்டதாக இருக்கும். இந்நிலத்திற்கென தொன்மந்தொட்டு இருக்கும் கலைகளை பலர் என்னவென்று தெரிந்து வைத்திருந்தாலும் ஆச்சர்யம்தான். சில வருடங்களில் மிஞ்சுகிற கலைகளையும் கலைஞர்களையும் அடையாளத்திற்காக மியூசியத்தில்தான் வைத்துப் பாதுகாக்கப் போகிறார்கள். ஊடகத்தின் அத்தனை வகையறாக்களும் தொடர்ந்து ஒரே விசயத்தில்தான் கவனம் கொண்டுள்ளன. வாழ்வோடு பிணைந்திருந்த எவ்வளவோ விசயங்களை நாம் தொலைக்க நேர்ந்ததுபோல் கலைகளையும், கலைஞர்களையும் நாம் தொலைத்து விட்டிருக்கிறோம். மீறியும் அவர்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டுமாயின் ஏதாவது கவர் ஸ்டோரிகளிலும் எக்ஸ்குளூஸிவ் பேட்டிகளிலும் படித்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியானதொரு காலகட்டத்திலும் கலைக்காகவே தொடர்ந்து பல காலமாய் தங்களை அற்பணித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களில் பலருக்கு நம்ப முடியாததாகக் கூட இருக்கலாம்.
      மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக நான் கூத்துப் பார்க்கச் சென்றது சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் உள்ள ஏர்வாடி என்னும் கிராமத்தில். எழுத்தாளரும் கூத்துக் கலைஞருமான மு. ஹரிகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த விழா. முழுக்க கூத்துக் கலைஞர்களுக்கான விழா. ஏராளமான எழுத்தாளர்களும் கலந்து கொண்ட அவ்விழாவிற்குப் பின்பாக அடிக்கடி அவ்வூருக்குப் போய்வந்திருக்கிறேன் இந்த மூன்று வருடங்களில். அந்த ஜமாவில் உள்ள அத்தனை கலைஞர்களும் மிக நெருக்கமான பழக்கமும்கூட. கூத்திலும் அப்பால் அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் வெவ்வேறு விசயங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதில் இப்பொழுதும் பிரமிப்பும் ஆச்சர்யமும் இருந்து கொண்டிருக்கிறது. எவ்வளவோ துயரங்களுக்கு மத்தியிலும் கலைஞனாக இருப்பதற்காக மட்டுமே அவ்வளவு துயரங்களையும் அனுபவிக்க முடிகிறதென்றால் அக்கலையின்மீது அவர்களுக்கு இருக்கும் காதலை நினைத்துப் பாருங்கள்.
 எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பாடலைக் கேட்க முடிகிற சில நொடிகளிலேயே ஒட்டுமொத்தமாக நம்மை வசீகரித்துவிடும். கூத்திற்கான அறிவிப்பை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே பாடலும் தாளமும் சொல்லிவிடுகின்றன. பிண்னனியில் மேளமும் ஆர்மோனியத்தின் இசையும் தாளத்தைக் கூட்டிச் செல்லும் குழலிசையும் கதை கேட்க நம் காதுகளைத் தயார்படுத்துகின்றன. சலிப்பின்றி விடிகிற நேரம் வரையில் பாடவும் ஆடவும் முடிகிற இவர்களால் மேடையென நினைத்துக் கொள்ளும் எதனையும் மேடையாக மாற்றிவிடமுடியும். இங்கே பார்வையாளனும் கலைஞனும் வேறுபாடில்லாமல் நிகழ்வோடு கலந்துவிடுவது தான் நம்மை ஆச்சர்யப் படுத்தக்கூடிய ஒன்று. கலையை மட்டுமே வாழ்வென கொண்டிருக்கும் இவர்களின் மீதான தமிழ் சமூகத்தின் க்கறை என்னவாயிருக்கிறது?
நான் பார்த்து வியந்த எவ்வளவோ பேரில் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சில கலைஞர்களைப் பற்ற்சிச் சொல்லலாமெனத் தோன்றுகிறது. மாயவன், கோவிந்தசாமி, சின்னவர், நத்தமேடு கணேசன், அம்மாபேட்டை கணேசன் போன்ற மூத்தத் தலைமுறைக் கலைஞர்களும், இந்தத் தலைமுறையில்  ரமேஸ், சிவசேகர், கனகராஜ் போன்றவர்களும் எப்பொழுது என்னை வியக்கவைப்பபவர்கள். இதில் மாயவன் போன்ற கலைஞர்களுக்கு அறுபது வயதைத் தாண்டிய பின்னும்கூட இன்னும் கூத்தில்தான் கழிகிறது வாழ்க்கை. ராஜவேஷங்கட்டுவதில் புகழ்பெற்ற கலைஞரான இவரைப் போலவே கோவிந்தசாமி பெண் வேஷங் கட்டுவதில் பெயர் பெற்றவர். காலங் கடந்தும் எவ்வளவோ ஊர்களில் இவர்களை கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கிறார்கள்.
எந்த வேலை செய்பவர்களாயிருந்தாலும் ஒரு வயதிற்கு மேல் கட்டாயத்தின் பேரிலேயோ விருப்பப்பட்டோ ஓய்வு கொடுக்கப்படுவதுதான் வழக்கம். கலைஞர்கள் மட்டும்தான் எத்தனை வயதைத் தாண்டினாலும் தங்களைக் கலைஞர்களாகவே பாதுகாத்துக் கொள்கிறார்கள். எண்பத்தைந்து வயதில் தள்ளாத உடல் அவஸ்தைகள் இருப்பினும் வேஷங்கட்டின நொடியிலேயே பாத்திரமாக மாறிவிடும் எத்தனையோ கலைஞர்கள் இன்றும் கூத்துக் கலைஞயில் ஈடுபாட்டோடுதான் இருக்கிறார்கள். ஒரு காலையில் சேலம் கலைப் பண்பாட்டுத் துறையில் நிகழ்ச்சி இருக்கிறதென்று இவர்களுடன் சென்றிருந்தேன். தோல்பாவைக்கூத்து நிகழ்த்துவதாக ஏற்பாடு. தயாரிப்புகளெல்லாம் முடிந்து துவங்க கொஞ்சநேரத்தில் உட்கார்ந்திருந்த அவ்வளவு பேரும் அசந்து போனார்கள். அவ்வளவு பேரும் அங்கு இசை கற்றுக் கொண்டிருக்கிற மாணவர்கள். தற்செயலாக அவரைப் புகைப்படம் எடுக்க உள்புறமாகச் சென்றவன் அப்படியே ஒரு ஓரமாக நின்றுவிட்டேன். ஒரே ஆள்தான். அத்தனை பாத்திரங்களுக்கும் குரல் மாற்றி உடம் தோல் பொம்மைகளையும் மாற்றியென மொத்த உடலும் இயங்கிக் கொண்டிருந்தது. கால் கை முகம் தலை எதுவும் சாதாரண நிலையில் இல்லை நண்பர்களே, சற்றேறக்குறைய இரண்டு மணிநேரம், ஒரு நிமிடம் ஓய்வில்லை. அவ்வளவு நேரமும் அவரிடமிருந்த வேகமும், ஆற்றலும் கற்பனை செய்து கொள்ள முடியாதது. அதன் பிரகு அவரைப் பார்க்கிற பொழுதெல்லாம் அந்தக் கணங்களில் வெளிப்பட்ட சூர்ப்பனகை மானபங்க கூத்துதான் நினைவிற்கு வரும். அம்மாபேட்டை கணேசன் என்கிற அந்த கணேசன் எங்கோ ஒரு கிராமத்தில் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறார் என்கிற உண்மை இப்பொழுதும் உறுத்துகிறது.
      எல்லாக் கலையிலுமே அந்தக் கலையினைக் கொண்டாடும் கலைஞனுக்குப் போட்டியென்பது மிக விருப்பமான விசயங்களில் ஒன்று. போட்டிக் கூத்துகளை நிகழ்த்துகையில் கலைஞர்களுக்கு கூட்டத்தைத் தம் பக்கமாக இழுத்துவிட வேண்டுமென்னும் ஆர்வமும் அக்கறையும் அதிகரிக்க மட்டுமிறிய உற்சாகத்தில்தான் ஆடுவார்கள். சினிமா என்பது வெறுமனே பிம்பம்தான், ஆனால் கூத்தில் பார்வையாளனும் கலைஞனும் தொட்டுக் கொள்கிற தூரத்தில்தான் இருக்கிறார்கள். இவர்களிருவருக்குமான ஓர் உரையாடல் துவக்கம் முதல் முடிவு வரை இருந்து கொண்டே இருப்பதால் எந்த இடத்திலும் இருவருக்கும் மத்தியில் தொடர்பற்றுப்போக வாய்ப்பில்லை.
இப்ப்டிப் புகழ் பெற்ற போட்டிக்கூத்துகள் எவ்வளவோ உள்ளன. மாயவனை ஒருமுறை கூத்தாடுகையில் கையில் ஒரு எரியும் தீபத்தைக் கொடுத்து ஆடச் சொல்லியுருக்கிறார்கள். அவர் அடவுகளை வேகமாக மாற்றி ஆடக்கூடியதில் புகழ் பெற்றவர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆடத் துவங்கியவர் அடவுகள் மாறி மூர்க்கமாக ஆடிக் கொண்டிருக்கிறார். காற்றைக் கிழிக்கிற வேகம், ஆடி முடித்து நிறுத்தினால் எரிந்து கொண்டிருந்த தீபம் அப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கிறது அணையாமல். ஒரு கலைஞன் தன் காலத்தில் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை இது.
அதேபோல் கோவிந்சாமி. ஒரு கிராமத்தில் கூத்து நிகழ்ந்த இடமும் டூரிங் கொட்டாயும் அருகருகே இருந்துள்ளன. இவர்கள் கூத்து துவங்குகிற நேரத்திற்கு படமும் துவங்கியிருக்கிறது. அந்த சத்தத்தில் அவ்வளவு பேரும் தொந்தரவாக பொறுத்துப் பார்த்த கலைஞர்கள் தாளம் பாட்டு என எல்லாவற்றிலும் வேகமேற்ற இவர்களின் அலப்பறையில் கொட்டாயில் இருந்தவர்களெல்லாம் வெளியே வந்து கூத்துப் பார்க்க வந்து உட்கார்ந்து விட்டார்கள். யோசித்தால் இதுவெல்லாம் சாத்தியம்தானா என்பதைப் போலிருக்கும், ஆனால் குறிப்பிட்ட அந்த தினத்தில் முக்கியப் பங்கு வகித்த கோவிந்தசாமி இப்பொழுதும் இதை சந்தோசமான நிகழ்வாகச் சொல்கிறார். இவையெல்லாம் மிகச் சாதாரண உதாரணங்கள்தான்.
புராணக்கதைகள், சொல்லப்பட்ட கதைகளைத்தான் பெரும்பாலும் கூத்தாக நிகழ்த்துகிறார்கள். கூத்து ஆடப்படும் இடங்களைப் பொறுத்து வடக்கத்திக் கூத்து, தெற்கத்திக் கூத்து என பொதுவாக இரண்டு வகையாக சொல்லப்படுவதுண்டு. நான் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் தெற்கத்திக் கூத்து ஆடுபவர்கள். வழக்கமான கதைகளோடு சிலர் சொந்தமாக நாடகப்பிரதிகளையும் உருவாக்கி ஆடியிருக்கிறார்கள். இப்படி நான்கைந்து பிரதிகளை உருவாக்கியுள்ள மாயவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. க்லைஞர்களின்மீது மக்கள் கொண்டிருக்கும் காதலை வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது, ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பண்ணவாடியிலிருந்து நாகமரைக்குச் செல்லும் படகுத் துறை, அங்கு உணவுப் பதார்த்தங்களைத் தயாரித்து விற்று வரும் ஒரு பெண்மனிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு குறிப்பிட்ட பேரைச் சொல்லி அவரைப் பற்றி பேசத்துவங்கினால் போதும் நீங்கள் அங்கிருந்து சாப்பிடாமல் போகமுடியாது. சாப்பிடுவதற்கு சாப்பிடுவதற்குப் பணமும் வாங்கிக் கொள்ள மாட்டாள் அந்தம்மா. இப்படி தினம் சாப்பிட நேர்ந்த போதும் தான் செய்வதை மட்டும் மாற்றிக் கொள்ள வில்லை. அந்தப்பெண் இவ்வளவு தூரம் மதிக்கிற நபர் அரசியல்வாதியோ, சினிமா நடிகரோ இல்லை, ஆனால் அதற்கும் மேலாக மதிக்கப்பட வேண்டிய ஒரு கூத்துக் கலைஞர். இப்படி ஒரு புறமிருந்தாலும், இதே மக்களில் சிலர் இவர்களை வேறுமாதிரியாகவும் இம்சிப்பதுண்டு.
காலத்திற்கும் நம்மால் மறக்க முடியாத நினைவுகளையும் சந்தோசங்களையும் தந்துவிட்டுச் செல்பவர்கள்  கலைஞர்கள் மட்டும்தான். ஆனால் அதே கலைஞர்கள் அவர்களின் சாதி காரணமாக இழிவு செய்யப்படுவதும் கொடுமைப்படுத்தப் படுவதும் சகிக்க முடியாத துயரங்கள். இன்று சாதிக் கொடுமைகள் அவ்வளவாக இல்லையென மார்தட்டி நீங்கள் சொல்வீர்களாயின் இந்த சம்பவத்திலிருந்து துவக்குவதுதான் சரியாயிருக்கும். நத்தமேடு கனகராஜன், கொங்குப் பகுதியில் பெரும் பெயரெடுத்தக் கூத்துக் கலைஞன். பல வருடமாக கூத்தாடி வரும் இவர் பெயரறியாத கலைஞர்கள் இருக்க முடியாது. அப்பேர்பட்ட கலைஞன் அவரின் சாதி காரணமாகவே திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு வீண்பழி சுமந்திருக்கிறார். திருமணமாகி மூன்று மாதக் குழந்தையாய் இவருடைய மகன். வீட்டில் ஏதோ விசேசமென்று கறி எடுக்க இவருடைய அப்பா சென்றவர் இரண்டு கிலோ கறியை வாங்கி வந்து வீட்டிலும் சமைத்து விட்டார்கள். இன்னொருபுறம் பக்கத்து ஊரில் கோவில் திருவிழாவிற்காக வெட்ட வைத்திருந்த ஆட்டுக் கிடாயை காணோமென்ரு அந்த ஊர்க்காரர்கள் தேடிக் கொண்டிருக்க கனக்ராஜனின் உறவினர் ஒருவரே ஆட்டைத் திருடியது கனகராஜந்தானெனக்  குடும்பப் பொறாமையை மனதில் வைத்து ஊர்க்காரர்களிடம் சொல்லிவிட்டார். விசயம் கேட்டு அந்த ஊர்க்காரர்களும் சுத்துப்பட்டு ஏழு ஊர்க்காரர்களும் இவரை பிடிக்கக் காத்திருக்கின்றனர். விசயமெதுவும் தெரியாத கனராஜன் அவர்கள் கூப்பிடுவதற்கு முன்பே தற்செயலாக கருங்கலூர் செல்கிறார். கூடியிருந்த ஏழு ஊர்க்காரர்களிலும்  ஆதிக்க சாதியினரே அதிகம், பல காலமாக நல்லபடியாக இவர்கள் தொழில் செய்வதிலும் புகழோடு இருப்பதிலும் ஏராளமானவர்களுக்கு பொறாமை இருந்திருக்கிறது. தக்க சம்யம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் இதுதான் சமயமென டிரண்டிருந்தனர். தனக்கும் இந்தத் திருட்டிற்கும் சம்பந்தமில்லையென எவ்வளவோ சொல்ல முயன்றும் ஒருவர் கூட இவரைப் பேச அனுமதிக்கவில்லை. பத்து இருபது பேர் என்றால் பரவாயில்லை, ஏழு ஊர் ஆட்களென்றால் என்ன செய்ய முடியும்? இன்னொரு புறம் இவருக்கு ஆதரவாக பேசமுயன்ற பெண்கள் முடியாமல் போய் அழுதுகொண்டிருக்க கூத்தாடி கூத்தாடியே பெண்களை மயக்கி வைத்திருக்கிறான் என இன்னும் அவரின்மேல் கோபம் அதிகமானது இவர்களுக்கு. வேறுவழியே இல்லை என்றாக கடைசியாக கையிலிருந்தது வீட்டிலிருந்த பண்ட பாத்திரமென அவ்வளவையும் விற்று அவர்கள் சொன்ன தொகையைக் கொடுத்திருக்கிறார்.
நம்முன் விரிந்து கிடக்கிற ஏராளமான அபத்தங்களுக்கு மத்தியில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில் நிஜமான கலைஞர்கள் தங்களின் அவஸ்தைகளை றைத்த படியேதான் வாழவேண்டியிருக்கிது. திரைப்படத் துறையிலும் சின்னத்திரையிலும் மிகக் குறுகிய காலத்திலேயே கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரும் பொருளைச்  சேர்த்து விடமுடிகிற கேமரா கலைஞர்களுக்கு மத்தியில் கூத்துக் கலைஞர்கள் பாவப்பட்டவர்கள்தான்.பெரும் ஜாம்பவனாகப் பார்க்கப்படுகிற  கலைஞர்களின்  வாழ்கை   முதுமையில் எவ்வளவு துயரமானதென்பதை அருகிலிருந்து பார்த்தால்தான் உணரமுடியும்.  மிகச் சாதாரனமானதொரு வாழ்க்கையை வாழும் இந்தக் கலைஞர்களிடம் மிகப் பெரிய சொத்தாக இப்பொழுது மிஜ்சியிருப்பது கூத்தும் மக்களிடம் பெற்ற பெருமைகளும்தான். பாராட்டுகள் மட்டுமே கலைஞர்களை எத்தனை வருடங்களுக்கு வாழவைத்துவிடும்.  திரையுலகில் பெரும் வருமானத்துடன் கலைச்சேவை ஆற்றுபவர்களுக்கெல்லாம் விருதுகளும் விழாக்களும் ஆர்ப்பாட்டமாக நடக்கின்றன. கலையைத் தவிர வேறொன்றையும் சேர்த்து வைக்காத இவர்களைப் போன்ற எவ்வளவோ பேரை அங்கீகரித்தால் குறைந்தபட்சம் இவர்களின் வாழ்நாளை சந்தோசமாகவும் அடுத்தடுத்து சில கலைஞர்களை  உருவாக்குவதற்கும் வழிவகுத்துக் கொடுக்கும். நமக்கு மிக அருகிலேயே நம்மோடு கலந்து விட்டிருக்கிற பல முக்கிய விசயங்களை பல சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம், உண்மையில் அதற்கான ஒட்டுமொத்தமான இழப்பு என்பது ஒட்டு மொத்த சமூகத்திற்குமான இழப்புதான். இனி நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொருத்துதான் கலைஞர்களுக்கான எதிர்கால வாழ்வு என்னவாயிருக்கப் போகிறது என்றிருக்கிறது.

                                                               

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.