கொம்பு இந்த இதழில் வந்திருக்கும் சிறுகதை.....






பெருங் கனவுகளின் உலகம்…

”நீங்கள் உங்களின் வாழ்வில் எதிர்கொள்வதில் தற்செயலானவை எதுவும் இருக்கப் போவதில்லை. எல்லாம் எப்போதோ உங்களின் கனவுகளில் உங்களுக்கு நேர்ந்தவையே.”  

கனவென்னும் நீருடல்…
” நீ வாசிக்க இருக்கும் இக்கதை சொல்லப்பட்டதோ கேட்கப்பட்டதோ அல்ல எனதன்பு வாசகா…. கதை சொல்லியின் குழப்பமான துர்கனவுகள்… வெவ்வேறு தினங்களில் தனது கனவுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்ததாக சொல்லும் கதை சொல்லி, யாவும் கனவே என்கிறான்….”
                           1
அந்த ரயில். களைத்து ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் ரயில் மூன்றாவது நாளாக பயணித்துக் கொண்டிருக்கிறது, மழையின் ஊடாக.  இந்த பூமி இதுவரை கண்டிராத பெருமழை. உலகமே நீரால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. பறவைகளின் சப்தம், வாகனங்கள், மனித இரைச்சல், வெவ்வேறு விதமான இசை, சில தினங்களுக்கு முன் இந்த உலகம் எதிர்கொண்ட எதுவும் இப்போது இல்லை. உலகம் நீரால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அந்த நீர் முழுக்க மனித சடலங்கள். இறந்து நாறிய மனிதர்களின் உடல்கள் நீருக்குள் ஓடும் இந்த ரயிலின் கண்ணாடி ஜன்னல் வழியாய்ப் பார்க்கையில் யாவும் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கின்றன. இறப்பதற்கு முன்னால் ஒருவன் அச்சத்தில் வெளியேற்ற நேர்ந்த மலம் இடது பக்க ஜன்னலின் கண்ணாடியில் வந்து முட்டிச் சென்றது. அவனோடு சேர்த்து அந்த ரயிலில் இன்னும் சிலர் மட்டுமே. இந்த ரயில் எப்போது நிற்குமென அவர்களில் யாரிடமும் நம்பிக்கையானதொரு பதிலில்லை. அவனது பெரிய தோள் பையில் சின்னதொரு கூடாரம் அமைப்பதற்கான துணி, கொஞ்சம் ரொட்டிகள், குடிக்க இரண்டு பாட்டில் தண்ணீர், மாற்றிக் கொள்ள உடை, விருப்பமான ஒரேயொரு புத்தகம் இவற்றோடு கடைசியாய் தன் நண்பர்களோடு அவன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இவ்வளவுதான் இருக்கின்றன.
இந்த ரயில் ஏதாவதொரு இடம் சேர்ந்த பின் என்ன செய்வதென்கிற பதட்டம் அங்கிருந்த  எல்லோருக்கும். எங்கும் நீர். சவங்களை உள்வாங்கி திறந்த வெளி மயானமாகியிருக்கும் நீர். மரணம் என்பதே நீர்மையென அச்சுறுத்தும்படி மாறிப்போன நீர். உறக்கம் பிடிக்காத ஒரு குழந்தை தனது தந்தையிடம் கதை சொல்லக் கேட்கிறாள். அவளுக்கு பசியிருக்க வேண்டும். கண்களில் சின்னதொரு கருவளையம். அச்சத்தால் மருண்ட விழிகள். யாருடனும் நெருங்கிப் பேச அச்சங் கொண்டவளாய் அப்பாவின் மடியில் சுருண்டு கிடந்தாள். யாரோ ஒரு நெருக்கமான தோழியை நினைவு படுத்தும் முகச்சாயல். அவளுக்குப் பாதி பிய்த்த ஒரு ரொட்டியைத் திண்ணக் கொடுத்ததான். ஈரமிக்க கண்களுடன் வாங்கிக் கொண்டவள் மீண்டும் தன் அப்பாவிடம் கதை சொல்லச் சொன்னாள். எனக்கு கதைகளே சொல்லப்பட்டதில்லை எனவும், கதைகளென்று இந்த உலகில் ஒன்றுமில்லை என்றும் அவன் சொல்லிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து கழிவறைக்குப் போனான்.
அவளைத் தூக்கி தனது மடியில் போட்டுக் கொண்டான்.
“கண்ணே எல்லாம் கதைகள் தான். நீ பயணிக்கும் இந்தக் கனவைப் பற்றின கதை உனக்குத் தெரியுமா?...”
அந்தச் சிறுமிக்கு இவன் பேச்சில் நம்பிக்கை இல்லை.
“இது கனவா?.. இல்லை நாம் ரயிலில் பயணிப்பதும் நீரை உணர்வதும் நிஜமாகத்தானே நடக்கிறது…”
அவள் விரல்களில் நீர்மை. நீரில்லாத இடமில்லை. எல்லா பொருட்களிலும் நீர் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதத் துளைகளெங்கும் கசியும் நீர்.
“ஆம்.. ஆனாலும் இந்த நிஜம் இதற்கு முன்பும் இன்னொருவனின் கனவில் நிகழ்ந்த ஒன்று… அவன் விருப்பப்படி அந்தக் கனவில் தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவைத்தான் இந்த உலகம் எதிர்கொண்டுள்ளது…”
அவளுக்கு இவனது புரிந்திருக்கவில்லை.
அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு “நான் உன் மடியிலேயே உறங்கட்டுமா?” கண்களை மூடிக் கொண்டு கேட்டாள். இவன் தென் தமிழகத்தின் மிகப்பழைய தாலாட்டுப் பாடலைப் பாடத் துவங்கியபடி “உறங்கு என் செல்லமே ஒரு போதும் கனவுகளுக்குள் மட்டும் பயணப்படாதே…;” அவளுக்குத் தட்டிக் கொடுத்தான்… ஒருவேளை அவள் கண்கள் மூடி உலகைக் காண விரும்பியிருக்கலாம், விழிகள் இங்கும் அங்குமாய் அசைந்து அலைந்தபடியிருந்தன.
அந்த ரயில் முட்டி நின்றது ஒரு சிறிய குன்றுகளின் கூட்டமிருந்த இடத்தில். பாதிக் குன்றுகளை நிரைத்தபடி மழைநீர். ரயிலிலிருந்த ஒவ்வொருவரும் தண்ணீருக்குள் குதித்தனர். மேட்டை நோக்கி வேகமாய் நீந்தும் போதும் அந்தச் சிறுமி பாதி உறக்கத்திலிருந்தாள். இந்த முறை அவளுக்கு அதீத பசி மயக்கம். மேட்டை அடைந்தபோது அவர்கள் பதினைந்து பேர் அந்தப் புதிய உயிர்வாழும் பிரதேசத்திற்குள் நுழைந்தவர்களாய் இருந்தனர். அவர்களுக்கு முன்பாக இன்னும் சிலர் அந்தப் பிரதேசத்தில் சிறு சிறு கூடாரங்கள் அமைத்துத் தங்கியிருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தப் புதியவர்கள் ஒருவகையில் வேண்டா விருந்தாளிகள். இவர்களுடன் ஒருவரும் பேசியிருக்கவில்லை. அந்தச் சிறுமியின் தகப்பன் அவளைத் தூக்கிக் கொண்டு அந்தக் குன்றின் இன்னொரு முனை நோக்கி வேகமாய் நடந்தான். அதிகபட்சம் ஆறேழு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருக்க முடிந்த அந்தப் பிரதேசத்தில் தனித்தனியாகத்தான் எல்லோரும் வசித்தனர். தனது கனத்த தோள் பையை இறக்கி வைத்து விட்டு  கூடாரத்தை அமைத்துக் கொண்டான். இன்னும் வெயிலைப் பார்க்க முடியவில்லை. கடைசியாய் வெயிலடித்த தினம் அரூவமான சில முன்னறிவிப்புகளை உணர்த்தியும் ஒருவரும் எச்சரிக்கை கொண்டிருக்கவில்லை. ஒரு பெருமழைக்கான அறிகுறி.
“வாழ்க்கை ஒரு பிரச்சினையாக இருக்கும்போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறேன்…” முன்பு எப்போதோ அவன் படித்த ஆஸ்கார் ஒயில்டின் இந்த வாக்கியங்கள் இந்த பூமியிலுள்ள அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தித்தான் போகிறது. எதிர்க்கொள்ள முடியா கனவுகளின் விசித்திர சாபம் கண்டவர்களாய் கோடிக்கணக்கானவர்களின் சடலங்களைப் பார்த்து வாழ்தலின் அச்சத்தில் எஞ்சியிருக்கும் இந்தக் குன்றிலிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இருள் ஒரு அச்சுறுத்தும் மிருகம்.
நீண்டகாலம் காட்டை மறந்து போன மனிதர்களின் இருப்பைக் கண்டுகொண்ட மிச்சம் மீதியிருந்த வனமிருகங்கள் கொடுங் குளிரில் மிகுந்தெழும் பசி தாளாமல் கூடாரங்களோடு வேட்டையாடிச் சென்றன. அவன் கூடாரம் அமைத்திருந்த குன்றின் தென் மூலையிலிருந்து துவங்கும் இன்னொரு காட்டில் முன்னூறு ஆண்டுகளாய் உறங்காது விழித்திருக்கும் புலி ஒன்றினைப் பற்றியக் கதைகளை மிருகங்கள் மிருகங்களின் வாயிலாய் இங்கு ஒதுங்கியிருக்கும் மனிதர்களுக்குச் சொல்லியிருந்தன. பெரும்பாலும் எல்லா மிருகங்களுக்கும் இது மாதிரியான செய்தி பரிமாற்றம் செய்வது கிளிகள்தான். கிளிகளுக்கு வேறு ஒருவருக்கும் இல்லாத சிறப்புண்டு. எந்த உயிரினத்தின் கனவிற்குள்ளும் நுழைந்து வெளியேறிவிடும். அந்தக் கிளிகள்தான் பசி கொண்ட மிருகங்களிடம் ஒருபோதும் குழந்தைகளை வேட்டையாடக் கூடாதென அங்கிருந்த பெரியவர்களின் பிரார்த்தனையை  சொல்லியிருந்தன. இதுவரையிலும் எந்தக் குழந்தையும் மிருகங்களால் வேட்டையாடப்படாமல் பாதுகாக்கும் சத்திய வாக்கு கொண்ட கிளிகள் அவை. உறங்காது விழித்திருக்கும் புலி கடைசியாய் உறங்கிய தினத்தில் கண்ட கனவு இன்னொரு முறை வந்துவிடக் கூடாதென்கிற அச்சத்திலும் அக்கனவு நிகழும் கனம் இந்த அழகிய வனம் நீரால் அடித்துச் செல்லப்படுமெனவும் நடுங்கியது. முன்னூறு ஆண்டுகால கனவின் நீட்சியே இவையாவும். தனது கனவின் கசப்பிலேயே நீண்ட ஆயுளைப் பெற்றுவிட்ட அந்தப் புலி கண்மூடும் தினத்தில் இந்த மழை ஓய்ந்து நீர் வற்றத் துவங்கலாம். ஆனாலும் இது அந்தப் புலியின் கனவில்லையே? இந்தக் கனவில் வனம் அழியவில்லை, இந்த பூமி மனிதர்கள் அவ்வளவு பேருமல்லவா அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவனது கூடாரத்திலிருந்து சிறிது தொலைவு தள்ளியிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க  ஒருவன் அன்று இரவு அவனோடு வந்து தங்கிக் கொண்டான். பிற்பகல் அவன் வேட்டையாடிய அழகான மயிலை கத்தி கொண்டு வெட்டி எடுத்து வந்தான். நெருப்பிலிட்டு சுடுவதற்கான வாய்ப்புகளில்லாமல் பச்சையாகவே இருவரும் உண்ணத் துவங்கினர். பசி அனைத்தையும் செய்யச் சொல்லும். காட்டமான மது கொஞ்சம் அவர்களிடம் இருந்தது. முதல் மிடறிலேயே முன்னோர்களின் துர்கனவுகள் அவ்வளவையும் நினைவு படுத்தக் கூடிய சுவை கொண்ட அந்த மதுவை வெறி கொண்டு குடித்தனர். பக்கத்துக் கூடாரத்துக்காரன் உறங்கிப் போனான். இவன் எழுப்பி தன் மடியில் வைத்துக் கொண்டு அவனுக்கு தனது ஆதித்தாயின் தாலாட்டைப் பாடினான்.
“உறங்கு என் செல்லமே ஒருபோதும் கனவுகளுக்குள் மட்டும் பயணப்பட்டு விடாதே..” இவனது அடித்தொண்டையிலான முரட்டு இசையை அவன் காதுகள் விறைத்துக் கேட்டன, உறக்கத்தில் காதுகள் விறைக்கும் போதுதான் ஒரு மனிதனுக்கு கனவுகள் உச்சத்திலிருக்கின்றன. படுத்த சில நிமிடங்களுக்குள் கனவின் உச்சத்திற்குச் சென்ற அவன் அப்படி எதைக் குறித்து கனவு காணக்கூடும். காதுகளை கைகளால் அடைத்தான். உள்ளிருந்து கடலின் மூர்க்கமான அலைகள் எழுப்பும் ஓசை. அச்சத்தோடு அந்த இருளில் கூடாரத்திலிருந்து எழுந்து ஓடிய இவனுக்கு தூரத்தில் கிளி ஒன்றின் எச்சரிக்கைக் குரல்… “ஓடாதே என் செல்லமே… நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய். உறக்கத்தில் ஓடும்போது கால் இடறக்கூடும்…”
நிதானித்து அவன் நிற்கும் முன்பு இருள் முடிந்து வனத்தின் மெல்லிய வெளிச்சம் துவங்கியிருந்தது. ரயிலில் இவனுடன் பயணப்பட்டக் குழந்தை தூரத்தில் உட்கார்ந்து எதையோ சலனமின்றி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி வேகமாய் ஓடினான். இவனோடு சேர்ந்து சூரிய வெளிச்சமும் ஓடி  இறுதியில் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும் பிரம்மாண்ட ஒளியானது. அவளுக்கருகில் சென்ற பின்னும் அவள் இவனைத் திரும்பியே பார்த்திருக்கவில்லை.  அவள் பார்த்துக் கொண்டிருந்தது புலியை. ஆம் அதே புலிதான். முன்னூறு ஆண்டுகால கனவின் சாபத்தில் வாழ்ந்த புலி. இப்பொழுது அதன் சடலம் குன்றிலிருந்து வழியும் நீரில் மெதுவாய் அசைந்த சென்று கொண்டிருந்தது. அது யார்?.. அந்தப் புலியை இவ்வளவு இறுகக் கட்டியணைத்தபடி ஒருவன். கண்களில் தெளிச்சி இல்லாமல் இவன் நீரை அள்ளி தனது முகத்தைக் கழுவிக் கொண்டான். பிண நாற்றம் அவ்வளவும். கண்கள் தெளிச்சியானது. அவனேதான். இந்தக் குழந்தையின் தகப்பன். புலியை இறுகக் கட்டியிருந்தான். அவன் உடல் முழுக்கப் புலியின் கோடுகள். அவனே புலியானதுபோல் உடல் விறைத்து இறுக அந்தப் புலியை அணைத்திருந்தான். இவன் பதட்டத்தோடு திரும்பி அந்தச் சிறுமியைப் பார்த்தான்.
“எங்கப்பா கட்டிப் பிடிச்சிருக்கறது என்னோட அம்மாவ?..”
இந்தக் குழந்தையின் அம்மாவா அந்தப் புலி?... கேட்டவனுக்கு கைகள் நடுங்கின. அவள் தன்னை இவனோடு கூட்டிப் போகச் சொல்லிக் கேட்டாள். தாகத்தில் நா வறண்டு நின்ற இவனுக்கு கண்களை மூடிக்கொள்ளச் சொல்லி ஒரு இலையைக் கசக்கி அதன் பச்சைச் சாறைத் தந்தாள்.
“இன்னும் இது ஒன்னுதான் விசமாகல..” அவள் இயல்பாக சிரித்துவிட்டு நடக்க சிறிது நேரமே இருந்த வெளிச்சம் வேகமாய் மறையத் துவங்கியது.
கிளிகள் மீண்டுமொருமுறை சத்தமாய்க் கத்தின
“ஓடாதே என் செல்லமே.. நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய்…”
                           2
அடுத்த நாள் சின்னதொரு தூறல் மட்டுமே இருந்தது. மெல்லிய வெளிச்சம். சூரிய வெளிச்சம் என்று சொல்ல முடியாதபடி, பக்கத்து கிரகத்திலிருந்து கசிந்த அதீத வெளிச்சத்தின் மிச்சமாக வேண்டுமானால் இருக்கலாம். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மரங்களுக்கும் கனவுகளிருப்பதைப்போல் நிலத்திற்கும், கோள்களுக்கும் பெருங்கனவுகள் இருக்கவே செய்கின்றன. இவனது கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவன் இன்னும் விழித்திருக்கவில்லை. உறங்கிக் கொண்டிருந்தவனின் உடல் முழுக்க மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன என அந்தச் சிறுமி அச்சத்துடன் சொன்னாள். இவனால் காணமுடியாத அம்மீன்கள் உறங்கிக் கொண்டிருந்த உடலின் நீர்மையை பூதாகரமாய்க் காட்டுகிறதெனெச் சொல்லி அவன் நம்மோடு இருக்கும் பட்சத்தில் பிரம்மாண்டமானதொரு மீனாகி நம்மை விழுங்கிவிடக் கூடுமென அச்சிறுமி அச்சப்பட்டாள்.
“அப்படி நடக்க சாத்தியமில்லை என் செல்லமே… அவனால் இந்த வனத்தைத் தாண்டி வேறு கனவுகளை உருவாக்கிக் கொள்ள முடியாது. அவனது கனவுகள் இந்த வனத்தில் வேட்டையாடப் போகும் மிருகங்களைச் சுற்றித்தான் சுழன்றபடியிருக்கிறது…”
அவள் இவனை மறுத்தாள்.
“உனக்குத் தெரியுமா?...அவனது பால்யம் மீன்களால் ஆனது. மீன்களோடு விளையாடும் செம்படவனின் மகன். நேற்று அவன் உனது மடியில் உறங்குகையில் அவன் காதுகள் விறைத்து அசைந்தன தானே..”
துணுக்குற்ற இவனது முகத்தை பொருட்படுத்தாதவளாய்
“உன்னால் மறுக்க முடியாது, மீன்கள் மட்டுந்தான் செதில்களை அசைத்து நீந்த எப்போதும் தயாராக இருக்கும். இந்த நீர்.. நம்மை அச்சங்கொள்ளச் செய்யும் இந்த பிரம்மாண்டமான நீர் இவனை மீனாக்க துடிக்கிறது… பரிசோதிக்க விரும்புகிறாயா?..”
அமைதியாய் இருந்த இவனது கையில் எதையோ வைத்து மீண்டும் கையை
மூடினாள்.
“கண்களை மூடிக்கொண்டு மெளனமாய் இரு…”
கையிலிருந்தது ஒருவிதமான கல் என்கிற பிரக்ஞை, கண்கள் மூடி மெளனித்தான். முதலில் பிரம்மாண்டமான அலைகளாய் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு ஆழ்கடலின் அமைதி, இப்போது அந்த ஆழ்கடெலெங்கும் மீன்கள் நீந்துகின்றன… அவ்வளவும் பிரம்மாண்டமான மீன்கள்… சரி மீன்களுக்கும் கனவுகளுக்கும் என்ன தொடர்பு?... இவனது கனவுகளுக்குள் மீன்கள் எப்படி நுழைய முடியும்?.. குழப்பத்தில் இவனுக்கும் காதுகள் விறைத்தன. அவசரமாய் ஒரு பிஞ்சுக் கை இவனது கையிலிருந்த அந்தக் கல்லை தட்டிவிட்டது. கனவிலிருந்து துண்டிக்கப்பட்டு விழித்துப் பார்த்தான். தூரமாய் ஒரு கல், கூழாங்கல் உருண்டது. அவள் கூடாரத்தில் படுத்துக் கிடந்தவனின் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்துப் போட்டாள். அவ்வளவும் அழகான கூழாங்கற்கள்.
“இப்பொழுது நம்புகிறாயா?...”
மறுக்கவும் நம்பவும் முடியாத இவனுக்கு அவனை தூக்கிக் கொண்டு நடப்பது சிரமமாயிருக்கவில்லை. இவன் தூக்கியதுமே படுத்திருந்தவன் நெகிழ்ந்து கொடுத்தான். குன்றின் இறக்கத்திலிருந்த நீரை நோக்கி இவனும் அவளும் நடந்தனர். நீர் தனது மூர்க்கம் குறைந்து மெளனமாய் எதையோ எதிர்நோக்கிக் காத்திருந்தது. தன் தோள்களில் இருந்தவனை தூக்கி நீருக்குள் போட்டான். திரும்பி கூடாரம் நோக்கி நடக்கப் போனவனின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். அவள் விழிகள் நீர்வெளிக்குள் நிலைத்திருந்தது. இவனும் அதே திசையில் நோக்கினான். மெளனமாயிருந்த நீரின் சலனம் கலைத்தது ஒரு பெருஞ்சப்தம். ஒரு பெரிய மீனின் துடுப்பு மட்டும் அசைந்தபடி போவதைக் கண்ட இவர்களுக்கு அந்த மீனை முழுமையாகப் பார்க்க ஆவல். அவள் கடைசியாய் தனது கையிலிருந்த கூழாங்கல்லை தூக்கி வானை நோக்கி எறிந்தாள். அது கீழே விழும் முன் நீரைக் கிழித்து ஏதோவொன்று மேலெழுந்து அந்தக் கல்லை நோக்கி தாவியது. அவனேதான். பாதி உடல் மனிதனாகவும் பாதி உடல் மீனாகவும் உற்சாகவும் மலர்ச்சியும் பொங்க அந்தக் கல்லைப் பற்றி மீண்டும் நீருக்குள் ஓடிப்போனான். ’இது எப்படி சாத்தியம்?.. கடல் கன்னிகள் தானே இருக்க முடியும்? ஆண்களும் அப்படி இருக்க முடியுமா?...’ இவன் மனவோட்டத்தை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும், “எல்லோருக்கும் கனவுகள் இருக்கிறதுதானே…”
இரண்டு பேரும் கூடாரம் நோக்கி நடந்தனர்.
அடுத்த வேளை உணவுக்கு எதையாவது வேட்டையாடியே ஆகவேண்டும். அவள் பசிக்கிறதென சொல்வதற்கு முன்னால் சின்னதொரு பறவையாவது கிடைத்துவிடாதா என்ன? எவ்வளவு நீரென்றாலும் பறவைகள் மட்டுந்தான் தங்களைக் காத்துக் கொள்கின்றன. மற்றவர்களின் பசிக்கு உணவாக வேண்டியிருப்பதால் பறவைகள் கரிசனமிக்கவை. அவளை கூடாரத்திற்குப் போகச் சொல்லிவிட்டு, இவன் இன்னொரு திசையில் நடந்தான்.
சிறு சிறு மரங்கள், இலைகள் இன்னும் நீரை உதிர்த்துக் கொண்டிருந்தன. சில கூடாரங்களில் ஆட்கள் ஒருவருமில்லாமல் அவர்களின் பொருட்கள் மட்டுமே இருந்தன. பறவைகளின் திசையறிதல் அவ்வளவு எளிதான காரியமில்லை. எங்கும் நீரின் வாசணையை மட்டுமே உணர்ந்தான். ஒரு இடத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்கும் ஒரே முகச்சாயல். இரட்டையர்களாய் இருக்க வேண்டும். இவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்தக் கூடாரத்தைக் கடந்து செல்லும் போது கூடாரத்தினுள் ஒரு பெண் நஞ்சேறிய உடலோடு தனது உயிரின் கடைசித் துளிகளை மிச்சம் பிடித்திருப்பது தெரிந்தது. சரிவில் இவன் இறங்கிய போது அந்தக் கூடாரத்தினுள் வேட்டையாடப்பட்ட சில பறவைகளுடன் அவளின் கணவன் நுழைந்தான். சரிவிலிருந்து அவனைக் கவனித்தான். எங்கும் பார்த்ததாய் நினைவிலில்லாத முகம். கூடாரத்திற்குள்ளிருந்து வரும் போது அவன் கையில் நெருப்பிருந்தது. இந்த பிரதேசம் முழுக்க வேறு யாரிடமும் இல்லாத அதிசயம்… அந்த நெருப்பை விரவச் செய்ய தனது மனைவியின் பழைய துணிகள், புத்தகங்கள் அவ்வளவையும் எரித்தான். இந்தப் பகுதி முழுக்க காய்ந்த குச்சிகளையோ சுள்ளிகளையோ பார்க்க முடிவது ஏலாது காரியமென அவன் நினைத்திருக்கலாம். அந்த நெருப்பில் வேட்டையாடப்பட்ட பறவைகள் வெந்து கொண்டிருந்தன.
சரிவில் இறங்கிய இவன் உருண்டையாக சில கற்களை எடுத்துக் கொண்டான். ஒரு மரத்தின் சரிவில் ஒளிந்து கொண்டு காத்திருந்தவனுக்கு  இந்த முறையும் முதலில் கண்ணில் பட்டது மயில்தான். மழையில் நனைந்து கொஞ்சம் களைத்துப் போயிருந்த அதன் கால்களை நோக்கி  எறிந்த முதல் கல்லிலேயே அது சுருண்டு விழுந்தது. அடிபட்டு விழுந்த மயிலை  எடுத்துக் கொண்டு ஈரமில்லாத சில குச்சிகளை மரத்திலிருந்து ஒடித்தான். சின்ன பொதி வரும் வரை தேடித் தேடி ஒடித்தபின் மயிலை அந்தப் பொதிக்குள் வைத்து மேட்டை நோக்கி நடந்தான். அந்தக் குழந்தைகள் அமைதியாய் நெருப்பைப் பார்த்தபடி அமர்ந்திருந்தன. வேகமாய் நடந்து பொதியிலிருந்து ஒரு குச்சியை உருவி அந்த நெருப்பிலிருந்து தனக்கான நெருப்பை எடுத்துக் கொண்டான். நன்றி சொல்லும் விதமாய் அவனைப் பார்த்து சிரித்தான். அவனிடம் பதில் புன்னகை இல்லை. அவன் புன்னகைக்கு காத்திருக்கும் அவகாசமில்லாமல் இவனது கூடாரம் நோக்கி நடந்தான்.
அந்தச் சிறுமி  கொண்டு வந்திருந்த ஒரேயொரு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள். ”மகிழ்ச்சிக்கும் சிரிப்புக்கும் பின்னால்கூட செப்பமற்ற, கடினமான உணர்ச்சியற்ற ஒரு மனநிலை இருக்கக்கூடும், ஆனால் துயரத்துக்குப் பின்னால் துயரம்தான் இருக்கிறது. வலி மகிழ்ச்சியினைப்போல் முகமூடி எதையும் அணிந்து கொள்வதில்லை. “
அவள் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து இவனைப் பார்த்த பொழுது  வேட்டையாடி எடுத்து வந்த மயிலைத் துண்டுகளாக்கி நெருப்புக்குள் போட்டு வாட்டிக் கொண்டிருந்தான். மயிலின் உடல் வேகும் வாசனையின் வசீகரம். அவள் சில வரிகளைக் கடந்து “வெளித்தோற்றம் உள்தோற்றத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது. ஆன்மா மனித உருக்கொண்டதாய் உள்ளது. உடல் ஆன்மாவுடன் உணர்வு கொண்டதாய் உள்ளது. இந்தக் காரணத்தினாலேயே துயரத்துடன் ஒப்பிடக்கூடிய உண்மை எதுவுமில்லை…” இவன் அவள் குரலின் வழி கசியும் சொற்களைக் கவனமாய்த் தொடர்ந்தான். அச்சிறுமி புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு எழுந்து இவனுக்கு நெருக்கமாய் வந்தமர்ந்தாள்.
“இந்த நீர்நிலை முடியும் அடுத்த மேட்டுப்பகுதியை நீ அறிவாயா?.. ஒருவேளை அது எவ்வளவு தொலைவிலிருந்தாலும் நீ இன்றே புறப்பட்டாக வேண்டும்.”
இவன் புரியாமல் பார்க்க “ நீ கொலை செய்யப்படப் போகிறாய்… மிக விரைவில்…” அவள் எழுந்து கொண்டாள். இவனுக்கு அப்பால் காற்று மிக மெதுவாய் வீசிக்கொண்டிருக்க, காற்று வந்த திசையில் அவள் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். ” நான் கொலை செய்யப்படப் போகிறேன்… யாரால்? எதனால்?... வேகமாய் எழுந்து அச்சிறுமியை நோக்கி பதட்டத்தோடு ஓடினான். “நீ கூறியது உனது துர்கனவையா?...” அவள் சிரித்தாள். “கனவில் ஏது துர்கனவு? எல்லாமே கனவுகள்தான்… ஆனால் கொலை செய்யப்படப் போவது என் கனவின் நீட்சியல்ல… சற்று முன் நீ சந்தித்த அந்த சீக்காளிப் பெண்ணினுடையது… அவள் தனது மரணத்திற்குப் பதிலாக உறக்கத்தில் உன் கொலையை நிகழ்த்திப் பார்க்க விரும்புகிறாள்.” அந்தப் பெண்ணின் முகம் கூட எனக்கு நினைவிலில்லை, அப்படியிருக்க எப்படி?... இவனுக்கு அதிர்ச்சியாகிப் போக ஓடிப்போய் தனது கூடாரத்திற்குள்  முழுவதுமாய் அடைத்துக் கொள்ள நினைத்தான். கூடாரத்தில் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தாள். ” இவ்வளவு நேரமும் என்னோடு உறையாடியது யார்?...” அவனுக்குப் புரியவில்லை. வேட்டையாடிய மயில் இன்னும் பாதி உயிரோடு கண்களைத் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் தலையில் டொம்மென அடித்தான். ரத்தம் முகத்தில் தெறித்தபோது கூடாரத்தினுள் வெயில் வர நீண்ட மழை நாட்கள் முடிந்திருந்தது. அந்தச் சிறுமி இவனைக் கட்டிக் கொண்டு உறங்கினாள்.
                                3

கொலை என்பது கனவின் பித்த வடிவம் …

முந்தைய நாள் பார்க்க நேரந்த அந்தச் சிறுவனையும் சிறுமியையும் பார்த்தான். அவர்களின் உடலில் ரத்தம் தெறித்திருந்தது. அவர்கள் இவனைத் தேடித்தான் வந்திருக்க வேண்டும். ”எங்கம்மா செத்துட்டாங்க… அவங்கள அடக்கம் பண்ணனும் வந்து உதவி பன்றிங்களா?..” அந்தச் சிறுவனின் குரலில் துயரம். எழுந்து கொண்டு அவர்களோடு நடந்தான். அவர்களின் கூடாரம் இன்னும் இருள் விலகாது கிடந்தது. நேற்று எந்த நிலையில் பார்த்தானோ அதே நிலையில் அந்தப் பெண் கிடத்தப்பட்டிருந்தாள். உடலில் ரத்தமே இல்லையென சொல்லும்படி அவ்வளவும் உறைந்துபோயிருந்தது. நாசித் துவாரத்தில் மட்டும் எறும்புகள் ஒன்றிரண்டு நெருங்கிச் சென்று திரும்பியபடியிருக்க அவளது இடது கண் இமையைத் திறந்து பார்த்தான். கருவிழிகளில் இன்னும் உயிரின் ஈரம் கொஞ்சம் மிச்சமிருக்க அதிர்ந்து பின்வாங்கினான். அது தன்னைக் கொலையிலிருந்து காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சிய விழியின் அசைவு. இன்னும் தன்னையே நோக்குவது போலிருக்க இன்னொரு கண்ணின் இமையையும் திறந்து பார்த்தான். அவள் தனது விரல் நகங்களால் இவனது கை மணிக்கட்டில் கீறினாள். அவளது சாபம் இவனுக்குள் நுழைவதுபோல்  நினைவுகள் தடுமாறி மங்கலாகிப் போனது. திரும்பி அந்தச் சிறுவனைப் பார்த்தான்.
‘இன்னும் உயிர் இருக்கிறதென அவன் சொன்னதை அவர்களால் நம்பியிருக்க முடியவில்லை.’ அம்மாவின் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டுமென உறுதியாய் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரின் தொண்டைக்குழியிலும் ஈரம் வற்றி எதையோ குடிப்பதற்குக் காத்திருக்கும் வன்மம்… அவன் அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஓடிப்போய் நீருக்குள் குதித்தான்… இந்த நீர் எங்கு போய் முடியும்?
உடல் களைத்து, மனம் களைத்து சோர்வுற்று வீழும் வரை நீந்தினான் . அந்த நீர்நிலை முடிந்த இடத்தில் அவன் காண முடிந்தவை பிரம்மாண்டமான மரங்களை மட்டுந்தான். அவ்வளவும் உறங்கும் மரங்கள். ஒரு வனமே உறங்கிக் கொண்டிருந்தது. அதனுள் நுழைவதற்கான அத்தனை வழிகளும் சாத்தப்பட்டிருக்க, பால்யத்தில் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட மிகப்பழமையான அந்தத் தாலாட்டுப் பாடலைப் பாடினான். அது உறங்காதவர்களை உறங்கச் செய்வதைப் போலவே நீண்ட உறக்கத்திலிருப்பவர்களை எழவும் செய்யும். இவனது முரட்டுக் குரலின் கோரம் தாங்காமல் மரங்களிலிருந்து ஒரு அசீரீரி… “இந்த வனத்தை எழுப்பினால் நீ சாபம் பெறுவாய்…” இவன் இன்னும் பாடுவதை நிறுத்தி இருக்கவில்லை. கண்கள் திறந்தபடியே இருந்தன. சில நிமிடங்களில் மரங்களிடம் அசைவு. இன்னொருமுறை அதே அசீரிரி… “என்ன வேண்டும் உனக்கு?...”
குரல் வந்த திசையில் திரும்பினான்… “கனவுகளால் சாபம் பெற்றவர்களை மீட்கும் மருந்து வேண்டும்.. உறங்கும் இந்த மரங்களில் ஏதோவொன்றில்தான் அந்தப் பொன்னிற திரவம் இருக்கிறது…”
இவனது குரலுக்குப் பதிலில்லை, மீண்டும் பாடுவதா வேண்டாமா எனக் குழப்பம்…
மரங்கள் விலகி வனம் வழி விட்டது. ஆவலோடு உள் நுழையப்போனவனிடம் “ஒரேயொரு நிபந்தனை… “
அந்த நிபந்தனையைக் கேட்கக் காத்திருந்தான். “நீ உனக்கு விருப்பமான ஒரேயொரு கைவிரலை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சமிருக்கும் ஒன்பது விரல்களை வெட்டித் தர வேண்டும்…”
இப்படியானதொரு நிபந்தனையை எதிர்ப்பார்த்திருக்காத அவன் அந்த வனத்திற்குள் நுழையும் அச்சம் முதன் முதலில் எழப்பெற்றவனாய் தயங்கி நின்றான்.
“உனக்கு பதிமூன்று வினாடிகள் அவகாசம்” என்று சொன்ன ஐந்தாவது நொடியிலேயே யோசிக்க விருப்பமில்லாதவனாய் ஒன்பது விரல்களையும் வெட்டி எறிந்தான்.
பிரத்யேகமான அந்த மரத்தை அடைவதற்கான வழியும் தெறிந்துவிட தனது பாடலை மீண்டும் பாடியபடியே அந்தத் திரவத்தை எடுத்துத் திரும்பினான்… நீண்டு கிடந்த பிரம்மாண்டமான நீர்வெளி இன்னொருமுறை அச்சுறுத்தியது. மருந்தை பத்திரப்படுத்தித் நீருக்குள் குதித்தான். இந்தமுறை களைப்பையும் மீறி அந்தப் பெண்ணைப் போய்ச்சேர வேண்டிய நெருக்கடியே அதீதமாய் இருந்ததால் வேகமாய் நீந்தினான். குன்று நெருங்கிவிட்டது. அதன் மேட்டுப் பகுதியை அடைந்துவிட்டான். இடையில் பதுக்கி வைத்திருந்த மருந்தை எடுத்துப் பார்த்தபோது அதிலிருந்து ஒரு துளி தெறித்து நீருக்குள் விழுந்தது. மொத்த நீர்நிலையும் தனது கனவிலிருந்து விடுபட்டு சில நொடிகளில் இயல்புக்குத் திரும்பியது.
அவன் கனவின் பிரதேசத்திலும் உலகம் நிஜத்தின் வடிவத்திலும் நிற்க வேக வேகமாய் அந்தப் பெண்ணைத் தேடி ஓடினேன். அப்படியொரு கூடாரமே இல்லை. ஆனாலும் இவனது கூடாரம் இருந்தது. சரி எங்கே தன்னுடன் இருந்த அந்தக் குட்டிப்பெண். அவளையும் காணவில்லை. இவர்கள் வந்த ரயில் குன்றின் அடிவாரத்திலிருந்து அடுத்த கனவிற்குள் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தது. அவனிருந்த பிரதேசம் முழுக்க அந்தப் பெண்ணைத் தேடி ஓடினான்.
ஒரு இடத்தில் முதல் நாள் அவன் பார்த்த அந்தப் பெண்ணின் கணவனும், அவனோடு ரயிலில் பயணித்த அந்தக் குழந்தையின் தகப்பனும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பின்னால் உறங்கவே உறங்காத அந்தப்புலி. இவன் கையிலிருந்த மருந்தைப் பிடுங்க வேகமாய் ஓடிவந்தவர்களிடமிருந்து தப்ப முயன்றான். முடியாமல் புலி அவனைச் சுற்றி வளைத்தது. என்ன செய்வதென விளங்கவில்லை. மூன்று பேரும் நெருங்குகிறார்கள். கால்கள் வியர்த்தன… சின்னதொரு மட்டையிலிருந்த அந்த மருந்தை யோசிக்காமல் குடித்துவிட்டான்… அவனது உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் துகள்களாகி காற்றோடு உதிர்ந்து ரோஜா மலரிதழ்களாக பறக்கத் துவ்வங்கின. அவன் அந்தப் பிரதேசத்தின் அழிக்கமுடியாத கனவின் வாசனையாகிப் போனான்.

உறங்காத இரவுகளில் கனவுகள் வானத்தில் நாட்டியமாடிக் கொண்டிருக்கின்றன.
வாசகா …. கனவை ருசித்திருக்கிறாயா?... பெருங் கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் சிலைகள் தான் நிம்மதியானவை. சிலைகளுக்கு கனவுகளுண்டு. அதன் நூற்றாண்டின் அடிப்படையில் கனவுகள் சேமிக்கப்பட்டு நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  நாம் எப்போதும் உதிர்த்துக் கொண்டிருக்கும் நினைவுகளை காற்று உள்வாங்கிக் கொள்வதோடு நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் கனவுகளோடு அந்நினைவுகளையும் சேர்த்துவிடுகிறது. ஆக உறங்குவதெற்கென எப்போதும் சபிக்கப்படு… அல்லது நீ தவறவிடும் வானத்தில் எப்போதும் நாட்டியமாடிக் கொண்டிருக்கும்.




Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு