முடிவற்ற பிரார்த்தனைகள்.


முன்னைமாதிரி இல்லை. அம்மாவுக்கு இப்பொழுது வேதக்கோயில் போக கொஞ்சமும் விருப்பமில்லாமல் போனது. வண்டி வந்து நின்று எல்லோரையும் இரண்டு பெண்கள் வந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த வீதி முழுக்க பெண்களோடு சேர்ந்து ஆண்களும் வேதக்கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறதோ? அம்மாவும் வாரந்தவறாமல் போய்க்கொண்டிருந்தவள்தான், இப்பொழுது அவளுக்கு அதில் விருப்பமோ அக்கறையோ இல்லாமல் போயிருக்கிறது.

சாச்சியாபுரத்தைச் சுற்றி அனேகமாய் கிறிஸ்தவ வேதக்கோயில்கள் வந்துவிட்டிருக்கின்றன. சனிக்கிழமை பிரிண்டிங் ஆபீஸ்களில் டே நைட் என ஷிஃப்ட் பார்த்துவிட்டு வந்திருக்கும் ஆட்களும்கூட சலிக்காமல் கிளம்பிப் போகிறார்களென்றால் ஆச்சர்யந்தான். முன்னெல்லாம் மார்கழி மாசம் மாரியம்மன் கோயிலுக்குப்போகவும் பங்குனிப் பொங்கலுக்கும் தான் இவ்வளவு பேர் ஆர்வமாய்ப் போவார்கள். என்ன மாயமோ இப்பொழுது சனம் வேதக்கோயில் பக்கமாய் படையெடுத்தனர். ”பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே….” என பாதிரியின் அதிக சத்தமில்லாத குரலில் பிரசங்கம் கேட்கவே ஒரு கூட்டம் போகும். ஒன்றுமில்லையென்றாலும் வாய் பார்க்கிற ஆர்வம். குருடர் பார்ப்பதும், ஊமையர் பேசுவதும் செவிடர் கேட்பதும், முடவர் நடப்பதுமாய் தேவனின் மகிமைகள் குறித்தான சொற்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களின் கஷ்டங்களை எல்லாம் துடைத்தெறியும் வல்லவர் என்கிற நம்பிக்கையை இந்த மக்களுக்குள் வரச்செய்துவிட்டிருந்தது. ’தேவனே என் மீட்பர்…’

பிரிண்டிங் ஆபிஃஸில் வேலை இல்லாமல் போன நேரத்தில் ரொம்பவும் கஷ்டமான அம்மா ஆறுதலுக்காக எல்லோரும் கூப்பிடுகிறார்களே என வேதக்கோயிலுக்குப் போனது. அந்தக் கூட்டமும் ஆராவாரமும் அவளுக்குப் புதுசாக இருந்தது. ’இந்த சாமியக் கும்பிடறதும் நல்லாத்தான் இருக்கு…’ அவளுக்கு அந்த பிரார்த்தனை பிடித்திருந்தது. அந்த இசையும், பிரசங்கமும் ஏதோவொரு வகையில் அவளை அமைதிபடுத்தியதால் அவளோடு சேர்த்து மகனையும் கூட்டிப்போனாள். சுரேஷை அங்கு போன இரண்டாவது வாரத்திலேயே சூசையாக்கிவிட்டார்கள். மாரியம்மாளென்கிற இவளின் பெயரை மேரியாக்கிவிட்டார்கள். அவளுக்கு தன்னை எல்லோரும் இவ்வளவு நாகரீகமான பெயரில் கூப்பிடுவதில் சந்தோசமும் பெருமையும். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நல்லது கெட்டது பார்க்கிறாளோ இல்லையோ? காலையில் கண்டிப்பாக சர்ச்சுக்குப் போவதை வழக்கமாக்கினாள். சர்ச்சின் மூலமாகவே இன்னொரு நல்ல வேலை கிடைத்தது. பிரிண்டிங் ஆபிஃஸை விடவும் தினம் முப்பது ரூபாய் சம்பளம் அதிகம். பையனையும் சி.எஸ்.ஐ ஸ்கூலில் இலவசமாக சேர்த்துக் கொண்டார்கள். இதுக்கு மேல் வேறு என்ன வேண்டியிருக்க்கிறது?... இயேசு இஸ்ரவேலில் பிறந்தால் என்ன? இஸ்லாமாபாத்தில் பிறந்தால் என்ன அவர்தானே வாழ்வளிக்க வந்த மகான்…. இவர்களின் வாழ்வை துயரிலிருந்து மீட்க வந்த மீட்பர். மேரியம்மாள் சில நாட்களிலேயே தீவிரமாக இயேசு கிறிஸ்துவை வழிபடத் துவங்கிவிட்டாள். சர்ச்சில் ஒருவேளை வருடத்திற்கொரு முறை அலகு குத்தி பூக்குழி இறங்க வேண்டுமென சொல்லியிருந்தால் அதையும் செய்ய சித்தமாய் இருந்திருப்பாள். 


சூசைக்கு அம்மாவைப் பார்க்க ஆச்சர்யமாயிருந்தது. நம்ம அம்மாவா இது?... தூங்கி எழும்போதே முருகனையும் மாரியம்மாளையும் மாறி மாறிக் கூப்பிட்டபடியே எழுபவள் நாளுக்கு ஒரு ஆயிரம் முறையாவது முருகனைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பாள். இப்பொழுது தும்மினால்கூட ஏசப்பாதான்… எப்படி? அவனும் இனி அப்படித்தானிருக்க வேண்டுமென அவள் நிர்ப்பந்திப்பதுதான் இன்னும் புரியாமலிருக்கிறது. சிலுவையை வாங்கி இவன் கழுத்தில் போட்டுவிட்டிருக்கிறாள். என்ன கொடுமையோ? மாயமோ?... ஏசப்பா…. ஆமா ஏசப்பா… வெங்காயம்… அவனுக்குக் கோயிலுக்குப் போகத்தான் பிடிக்கும். கருப்பசாமியும் சுடலைமாடனும் ஒரு ஜாடையில் அப்பாவைப் போலவும் தாத்தாவைப் போலவும் இருப்பார்கள். அவர்களைவிட எந்த விதத்தில் இந்தச்சாமி பெருசாகிவிடும். சுரேசை சூசை என்று கூப்பிடுவதே அவனுக்குப் பிடிக்கவில்லை. அம்மா ஆசையாய் சூசை என்றுதான் கூப்பிடுகிறாள். இவனுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும், சில சமயங்கள் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்கமாட்டான். மூன்றாவது சத்தத்திற்குத் திரும்பாவிட்டால் ஏதாவது கெட்ட வார்த்தைதான் அம்மாவின் வாயிலிருந்து வரும். அதற்காகவே வேண்டா வெறுப்பாய் அம்மா செய்கிற எல்லாவற்றையும் அமைதியாய் பொறுத்துக்கொண்டான். 


சர்ச்சுக்குப் போகத்துவங்கின கொஞ்ச நாட்களிலேயே அம்மா இரவில் உறங்கப்போவதற்கு முன்னால் பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்குப் படிக்கத் தெரியாதென்கிற துயரமிக்கதொரு காரணத்தினாலேயே பைபிளை சூசையிடம் குடுத்து தினமும் சில பக்கங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்பாள். ”  இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன், பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ: ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.” – யோவான் – 12”                  


இப்படி பைபிள் படித்துக் காட்டும் நேரத்தில் உருப்படியாய் பாடத்தையாவது படிக்கலாம். ஆனாலும் எல்லாவற்றுக்கும் தேவனே மீட்பர் என்னும் அதீதமான நம்பிக்கை மேரியம்மாவுக்கு இருந்ததால் அவன் பாடத்தைத் தொடுவதென்றால் கூட பைபிளை அம்மாவுக்கு வாசித்துக் காட்டிவிட்டுத்தான் படிக்க வேண்டும். 


பள்ளிக்கூடம் முழுக்க சுரேஷ் சூசையான கதை தெரிந்து போய் எல்லோரும் சூசசுரேசு என புதுவிதமான பெயரில் கூப்பிட்டனர். கூடப்படிக்கும் பையன்கள் இப்படிக் கூப்பிடும்போது கொலைவெறியான கோவம் வரும், திட்டுவான் சண்டைக்குப் போவான். பையன்கள்தான் இப்படியென்றால் வாத்தியாரும் அப்படியே கூப்பிடத் துவங்கிவிட்டனர். காலையில் அட்டனண்ட்ஸ் வாசிக்கும் சொக்கலிங்க வாத்தியர் சுரேஷு என அசட்டையாகத்தான் கூப்பிடுவார், இப்பொழுது சூச சுரேஷு என ஒரு டைப்பாகக் கூப்பிடுகிறார். இவன் தலையை சொறிந்து கொண்டே ‘பிரசண்ட் ஸார்…’ நிற்பான். பையன்களும் பிள்ளைகளும் குனிந்து கொண்டே சிரிப்பார்கள். மனதளவில் அவன் சுரேஷாகத்தான் இருந்தான். எல்லோரும் அவனை சூசையாகவேப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு சுரேஷின் மீது வெறுப்பு வரத்துவங்கிவிட்டது. எல்லோரும் கூப்பிடுவதைப்போலவே தன்னை சூசையாக நம்பத்துவங்கிவிட்டான்.


ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் முழுக்க கேட்கும் பாடல்களும் இசையும் அவனுக்கு கொஞ்சம் ஏசப்பாவைப் பிடிக்க வைத்தது. எடுத்ததெற்கெல்லாம் கோவப்படும் அம்மாகூட இப்பொழுது எல்லாவற்றையும் ஏசப்பா பார்த்துக்கொள்வாரென இவனிடம் அன்பாகவே பேசுகிறாள். ஞாயிற்றுக்கிழமை விடிந்தும் விடியாததுமாய் அம்மா தயாராகியிருந்தாள், இவனும் ஆர்வத்துடன் சில தினங்களாக சர்ச்சிற்குப் போகிறான். வண்டியில் நகரமுடியாத கூட்டம். எல்லாம் சுத்தமாய்க் குளித்து ஜம்மென்று உட்கார்ந்திருந்தார்கள். நைட் ஷிஃப்ட் பார்த்துட்டு வந்த ஆட்கள்கூட குளித்து முடித்து அசதி தெரியாமலிருக்க பாடியபடியும் பேசியபடியும் வந்தார்கள்.  சூசை இப்பொழுது தேனினும் இனிய ஏசுவின் நாமம் பாடப்பழகிவிட்டான். பைபிள் வகுப்புகளில் இவனுக்கு இருந்த ஆர்வம் அலாதியானதாய்த் தெரிய எல்லோரும் அவனை தேவ ஊழியம் செய்ய தேவகுமாரனால் அனுப்பப்பட்டவனென சொன்னார்கள். அதில் உண்மை எதுவும் இருப்பதாய் அவன் நம்பியிருக்கவில்லை. ஆனாலும் எல்லோரும் தன்னிடம் பிரியமாய் அதைச் சொல்வதைக் கேட்க சந்தோசமாகத்தான் இருக்கிறது. அவன் குரல் பாடும்போது கரைந்து குழைந்தது. கர்த்தரை அதீதமாய் நேசிப்பவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் குரல். 


மேரிக்குப் பிள்ளை படித்து பெரிய அரசாங்க உத்தியோகத்திற்குப் போகவேண்டுமென்பதுதான் கனவு. அது என்ன வேலையோ?... ஆனால் அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும். அது மட்டுமே தன் வாழ்நாள் கனவென உறுதியாய் இருந்தாள். இப்பொழுது சர்ச்சிலிருந்த எல்லோரும் அவன் கண்களில் ஞான ஒளி தெரிவதாகவும் இந்த மாதிரியான குருத்துக்கள்தான் இந்த சமூகத்தில் மக்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்டவர்களென கூடுமானவரை அவனை ஊழியக்காரனாக்க முயன்றனர். துவக்கத்தில் எல்லோரும் தம் பிள்ளையின் மீதுள்ள பிரியத்தால்தான் அப்படி சொல்கிறார்களென மேரி நினைத்தாள். சர்ச்சில் பெரிய பாதிரி முதற்கொண்டு எல்லோரும் அதனை மேரியிடம் நேரடியாகச் சொல்லத் துவங்கியபோதுதான் கொஞ்சம் கலக்கமானது அவளுக்கு. முதலில் யார் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும் சிரித்து மழுப்பியவள், பிறகு மூஞ்சியை இறுக்கமாக்கினாள்.
“மேரியம்மா… பிள்ளயக் கர்த்தர் பாத்துக்கிடுவாரு… நீங்க ஒன்னுக்கும் கலங்காதிய…”
சர்ச்சுக்குப் போகும் வேனில் பக்கத்திலிருந்த ஒரு அம்மா சொன்ன போது அமைதியாய்ச் சிரித்தாள். சூசை பின்னாலிருந்த சில பெண்களுடன் சேர்ந்து கொண்டு சத்தமாக ஜீசசைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு லயிப்பு. திரும்பிப் பார்த்த மேரிக்கு சுர்ரென இருந்தது. ‘எல்லோரும் சொல்ற மாதிரியே ஆகிடுவானோ?...” கோவத்தில் ‘எலே சுரேஷு… இங்கன வாடா…” அவன் அந்த லயிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. ‘எலே சுரேஷு வெளக்கமாரு…’ அந்தச் சத்தம் மொத்த வேனையும் சிதறடித்தபோதுதான் தனது முன்னால் பெயரின் நினைவு வரப்பெற்றவனாய் மலங்க மலங்க அம்மாவைப் பார்த்தான். அவளின் முகம் கனன்று கொண்டிருந்தது. “என்ன எழவுக்கு அப்படி ரசிச்சுப் பாடறவன்….” சுரேஷுக்குப் புரியவில்லை. இவளின் கோவம் எதன் பொருட்டு?... மற்றவர்களும்கூட ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள். “இங்க வந்து உக்காரு…” அவன் அமைதியாய் நகர்ந்து அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அதற்குப் பிறகும் பாட்டு பாடினார்கள். சூசை மட்டும் வாயைத் திறக்கவில்லை.
அவன் மனம் முழுக்க பெரிய நற்செய்தி கூறும் பிரசங்கியாகும் கனவு தலைவிரித்து ஆடியது. அவன் ஆங்கிலம், தமிழ் என இதுவரை அவன் காதுகளில் கேட்டிருந்த வெவ்வேறு மொழிகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறான். பிரம்மாண்டமான மேடை கண்களை மூடி பிரசங்கம் செய்யும் இவனால் முடவர் நடக்கிறார்கள் “உமது பிரஸ்ஸ்ஸன்னம் இவர்களை சுகப்படுத்தப்பட்டும் ஆண்டவரே… அற்புதமான இந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை உமது திருக்கரத்தால் ஆசீர்வதிக்கப்படட்டும்….” அந்த வார்த்தைகளுக்கு பெரும் சனத்திரளான மக்கள் ‘அல்லேலூயா..’ சொல்கிறார்கள். எங்கோ வண்டி நறுச்சென அழுத்தமான பிரேக்கடித்து நிற்க இவனும் சத்தமாக அல்லேலூயா சொன்னான். பக்கத்திலிருந்த அம்மா திரும்பி ஒரு முறை முறைத்தாள். அமைதியாய் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான் சூசை. 


சர்ச்சில் பைபிள் வகுப்புக்குப் போய் உட்காரப் போனவனை நிறுத்திய மேரி தன்னோடே கூட்டிப்போனாள். அவளுக்கு எதிலும் மனம் கொள்ளவில்லை. ’இந்தப்பய வெள்ள அங்கியோட இப்பிடி சாமியாரப் போயிடுவானோ?...’ திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் கண்களை மூடி அருட்த்தந்தையின் பிரசங்கத்தில் லயித்திருந்தான். நிஜமாகவே கர்த்தருக்காக கரையும் முகம். அச்சம் மேலிட அவனை உலுக்கி “மேலுக்கு சொகமில்லாத மாதிரி இருக்கு… வா வீட்டுக்குப் போவோம்….” சூசை இயல்புக்குத் திரும்பி அம்மாவைப் பார்க்கவே சில நொடிகள் ஆகிப்போனது. ஒன்றும் புரியாதவனாய் அவளோடு கிளம்பிப் போனவனை கர்த்தர் துயரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
சூசை மறுபடியும் சுரேஷாகிவிட்டான். மேரியம்மா மறுபடியும் மாரியம்மா ஆகிவிட்டாள். ஒருக்காலமும் அவளால் தன் பிள்ளையை சாமியாராகப் பார்க்க முடியாது. சர்ச்சுக்குப் போகக்கூடாதென அவனிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டவள் தானும் இனிமேல் சர்ச்சுக்குப் போவதில்லையென உறுதியாய் இருந்தாள். அப்படியும்கூட அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவளை விடுவதாயில்லை. ‘ஏன் மேரியக்கா… ரெண்டு மூணு வாரமா சர்ச்சுக்கே வரல… புள்ளயவாவது அனுப்பலாம்ல…’ வேன் வரும்போதோ, கம்பெனியிலோ யாராவது கேட்டால், “அவனுக்கு வல்லுசா சர்ச்சுக்கு வர இஷ்டமே இல்ல… நாம ஏன் குத்தி குத்தி விரட்டனும்னுதேன் விட்டுட்டேன்…” ஒருவித அலட்சியத்தோடு மாரியம்மா சொன்னதை ஒருவராலும் நம்பமுடியவில்லை. அதற்கும் மேல் ஏதாவது கேட்டவர்களை “அவரவரு சோலிய மட்டும் பாத்தா போதும்… ஊரா வீட்டுல என்ன எழவு விழுகுதுன்னு எட்டிப் பாக்க வேணாம்….” மாரியம்மாளின் வார்த்தைகள் கொடுக்குகளாகின..


பைபிளைத் தொடவே கூடாதென கண்டிப்பாக அம்மா சொல்லிவிட்டாலும் இவனால் அப்படி இருக்க முடியவில்லை, அந்த சொற்களிலிருந்த சுகம் அவனை மீள விடவில்லை. திருட்டுத்தனமாய் எடுத்துப் படித்தான். அவள் என்னதான் சுரேஷூ சுரேஷூ எனக் கத்திலும் தன்னை சூசையாகவே அவனால் உணரமுடிந்தது. அவன் திருட்டுத்தனமாய் பைபிள் வாசிக்கிற விசயம் தெரிந்துவிட முதலில் தப்பைக் குச்சி வரிவரியாய் விழும் அளவுக்கு அவனை அடித்துத் துவைத்தவளுக்கு அவனை அப்படியே விடவும் மனசில்லை. ஒளித்து வைத்துப் படித்த பைபிளை எடுத்து அடுப்பில் போட்டுவிட்டாள். பைபிளோடு சேர்த்து மாபெரும் பிரசங்கியாகும் அவனது கனவும் அதில் எரிந்தது. அடுத்த நாள் விடிந்தும் விடியாமல் அவனை இழுத்துக் கொண்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொட்டையைப் போட்டுவிட்டு கூட்டிவந்தாள். “இனி எல்லாத்தையும் அந்த மாரித்தாயிதேன் கேக்கனும்…” பாரத்தை எங்கோ இறக்கி வைத்துவிட்ட நிம்மதி.
“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்….”
( யோவான் – 3:16 )


பேருந்தில் அம்மாவுடன் ஊர் திரும்பிய சூசைக்கு மனப்பாடமாகிப் போன பைபிள் வசனங்கள் அவனையும் அறியாமலேயே வெளிப்பட்டன. சத்தம் வெளியில் கேட்காதபடி வாய்க்குள்ளேயே முனகியவனை சினிமா பாட்டுதான் பாடுகிறானோ என நினைத்துக் கொண்ட அம்மா நிம்மதியாய் ஜன்னலில் சாய்ந்து தூங்கினாள்.

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.