ப. சிவகாமியின் – பயனற்ற கண்ணீர்….


நான் போன நூற்றாண்டில் கவிஞனாய் இருந்த போது கவிதை குறித்த சில அபிப்பிராயங்கள் இருந்தன.
அதனை அபிப்பிராயங்கள் என்று திட்டவட்டமய் சொல்ல முடியாவிட்டாலும் அந்த எளிய புரிதல்தான் கவிதை எழுதுவது ஒரு சாகசம் என்பதை உணரவைத்து அத்ற்காக கடுமையாக உழைக்கும் திராணியற்று புனைவிலக்கியத்தின் பக்கமாய் என்னைத் திரும்பச் செய்தது.
எனது தாத்தாவிற்கு தாத்தா ஒரு கதை சொல்லி
எனது தாத்தா அதிலிருந்து விடுபட்டு என்ன காரணத்தினாலோ ஒரு மேடை நாடக நடிகரானார்.
தாத்தாவி9ன் தாத்தாவிடம் இருந்த காப்பிய மனநிலை அவரோடு போயிருக்க வேண்டும்
என் தாத்தா ஒரு நடிகனாக இருப்பதை மட்டுமே விரும்பியிருந்தார்.
எனக்கு சின்ன வயதில் வீட்டில் தாத்தா குடிக்க பணமில்லாமல் சில பழைய இசைக் கருவிகளை ஊருக்குப் பக்கத்தில் இருந்த சாப்டூர் ஜமீனிடம் விற்றது நினைவிருக்கிறது.
அவற்றின் பெயர்கூட தெரிந்திருக்காத எனக்கு அந்த இசையைப் பற்றி சத்தியமாக ஒன்றும் தெரியாது.
நான் பார்த்தே இராத அந்த தாத்தாவின் தாத்தாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பிற்பாடுதான் இயல்பாகவே கதை சொல்லுதலின் மீது ஒரு ஆர்வம் வந்தது.
இப்படியான வரலாற்று ஆதாரத்துடனான ஒரு காரணத்தைச் சொல்வதன் மூலம் எனக்குக் கவிதை சரியாய் எழுத வரவில்லை என்கிற நிஜத்தை உங்களிடமிருந்து மறைப்பதாய் நீங்கள் ஒருபோதும் நம்பிக் கொள்ள வேண்டாம்…
ஒரு கவிதை தன் இலக்கிய ஆசிரியனின் நோக்கங்களிருந்தும் அனுபவங்களில் இருந்தும் சுதந்திரமானது. இவற்றிற்கு அப்பாற்பட்டு வாசகனின் எதிர்வினைகள் நிரூபிக்குமளவுக்கு தவறானதாகவும் வேறுபாடுகள் மிகுந்ததாகவும் இருக்கின்றன. ஆனால் ஒரு கவிதை தன் இருப்பை நிலையாகக் கொண்ட ஒரு பொருள். மேலும் கவிஞன் தன் கவிதையை சிருஷ்டித்த மனநிலைக்கு இப்போது கவிதையை இடம்பெயர்த்து ஒப்பிட முடியாது.
ஆக, கவிதை என்பது ஒரு வாசகனுக்கு உணர்வு அல்லது அனுபவத்தின் காரணம் என்பதைவிட விளைவாகவே மாறுகிறது. கவிதையை வாசிக்கும் பொழுது வாசகனின் தனிமனித அனுபவத்திற்குள் கவிதை நிலைத்துத் தங்கிவிடுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி நிலைத்துத் தங்கிவிடுவதை நாம் அனுமதித்தால் ஒவ்வொரு முறை வாசிக்கப்படும் பொழுதும் அது எத்தனை தடவையோ அத்தனை கவிதைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வதாகிவிடும்.
சமகாலத்தின் தமிழ்க்கவிதைகள் குறித்து உண்மையில் வினோதமான சில எண்ணங்களே எனக்குள்ளன. கவிதகளில் ஒருவிதக் கூட்டுத்தன்மை குறைந்துபோய் பெரும்பாலான கவிதைகள் ஒற்றைத்தன்மையுடனும் தட்டையாகவும் மாறிப்போயிருக்கின்றன.
அனுபவமின்மையின் சொற்களை நெறிசெய்வதின் மூலம் சின்னதொரு உணர்வை பதிவு செய்வதாகவோ, சம்பவத்தை காட்சிகளாக்குவதாகவோதான் பெரும்பாலான கவிதைகளும் இருக்கின்றன. தமிழின் பெரும்பாலான கவிஞர்கள் அவர்கள் எழுதும் சில நல்ல கவிதைகளை அதுவே ஆகச் சிறந்த கவிதை என்பதை நம்புவதன் மூலமாய் அதே மாதிரியான கவிதைகளையே தொடர்ந்து எழுதிப் பார்ப்பதன் மூலம் வாசகனுக்கு தங்களது கவிதைகளில் புதிய அனுபவங்களைத் தரத் தவற்விடுகின்றனர்.
சிவகாமியின் கவிதைகளை வாசிப்பதற்கு முன்பாக எனக்கிருந்த சில முன் முடிவுகளிலிருந்து என்னைப் பிரித்தெடுத்துக் கொள்ள விரும்பினேன்.
முதலில் நான் ஆனந்தாயியை மறக்க வேண்டும், பிறகு என்னை வசீகரித்த சிவகாமியின் சில கதைகளை,
பின்பு புதிய கோடாங்கியில்  வந்த சிவகாமியின் கேள்வி பதில்களையும், கட்டுரைகளையும்… இப்படி அனேக விசயங்களை மறந்துவிட்டு சிவகாமியின் அரசியல் நிலைப்பாட்டை மட்டும் கவனத்தில் கொண்டவனாய்…
இதனாலேயே மின்னஞ்சலில் வந்த கவிதையை மொத்தமாக ஒரே அமர்வில் படிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்து பிறகு மொத்தமாய் இன்னொரு முறை வாசித்தேன்.
சிவகாமியின் கவிதைகளை வாசித்த முடித்த கனம் முதலில் எனக்குத் தோன்றியது இக்கவிதைகள் பெரும்பாலும் தன்னிலை என்பதை மீறி அதிகமும் சகமனிதர்களைப் பற்றியதாகவேத்தான் இருக்கின்றன. தன்னைப் பற்றிப்  பேசுவதை விடவும் தான் பார்க்கும் உலகையும் அவ்வுலகின் முரண்பாடான அல்லது உலகோடு தங்களைப் பிணைத்துக் கொள்ள முடியாதவர்களின் வாழ்வையுமாய் அதிகமும் பேசுவதாய் இருக்கின்றன.
சமகாலத்தின் கவிதைகள் அதிகமும் தன்னிலை விளக்கங்களாகவும் அகமனதின் சிக்கல்களைப் பேசுவதாகவும் தான் பெரும்பாலும் இருக்கின்றன. இந்தத் தலைமுறைக் கவிஞனுக்கு போன தலைமுறை கவிஞன் சொல்லிக் கொடுப்பதெல்லாம் கவிதைனா என்னன்னு தெரியுமா/ எப்டி இருக்கனும்னு தெரியுமா? இப்படித் தெரியுமா? தெரியாதா என்கிற கேள்வி பதில்களையும் அரைகுறையாய் வாசித்து வன்கலவி செய்யப்பட்ட தத்துவங்களையும் தான். இதையும் மீறி போன தலைமுறைக் கவிஞர்களிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு இந்தத் தலைமுறையில் தனித்துவத்தோடு கவிதை எழுதும் கவிஞர்களென சிலர் இருப்பதில் மகிழ்வே. மற்றபடி அனேகம் பேர் இன்னும் போன தலைமுறையின் கவிதைகளை அடியொட்டியே கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
சிவகாமியின் கவிதைகளுக்கு இப்படியானதொரு முன்னோடிகள் ஒருவரும் தேவையாய் இருந்திருக்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு இருக்கும் சமூகத்தின் கவனமே இக்கவிதைகளின் ஆதாரமாய் இருக்கின்றன. அபிதான சிந்தாமணியிலிருந்து சொற்களை உருவி அடுக்குவதன் மூலம் கவிதை எழுதிவிட முடியுமென்றும் கோணங்கியின் கதைகளை அப்படியே வரிகளைக் குறைத்து அடுக்குவதன் மூலமாய் ஒரு பேர்லல் டெக்ஸ்ட் அல்லது கவிதையை என்றாவது ஒருநாள் எழுதிவிட முடியுமென்றும், கவிதை என்பது பைத்தியமாதல் என்கிற அபார நம்பிக்கையில் அதை மட்டுமே எழுதுகிற அபத்தங்களும் இக்கவிதைகளில் வெளிப்பட்டிருக்கவில்லை.  சொற்களை கண்டடைவதில் இருக்கிற ஆர்வத்தை விடவும் சொல்ல வேண்டிய ஒரு வாழ்வை அல்லது அவ்வாழ்வின் அழிக்க முடியாததொரு கனத்தை கண்டடைவதில்தான் சிவகாமியின் சொற்கள் அக்கறை கொண்டிருக்கின்றன.
“முட்புதர்களில் ஒளித்து வைக்கப்பட்டு 
வல்லுறவு கறைகளுடன் கிடந்த 
பூக்களின் கடைவாய்ப் பற்களில் 
முழுதும் தின்று முடிக்காத
பாதி சாக்கலேட்டைப் பார்க்கும் போது
கதறி அழுகிறது கருணை
அதன் நேரம் குறைக்கப்பட்டதென்று ….”
சிறுமிகளின் சடலங்களின் கருணை என்னும் இக்கவிதையின் வரிகள் அதன் கடைசி வரிகளில் நம்மையும் கையாலாகதவர்களாக்குவதுடன் சகிக்கவியாலததொரு குற்றவுணர்ச்சி கொள்ளவும் செய்கிறது. குழந்தைகளின் மீதான நமது கரிசனங்களும் கவனிப்புகளும் குறைந்து போயிருக்கும் சமகாலத்தில் அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமலேதான் நாம் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்… உண்மையில் நமது ஆதார உணர்ச்சிகளிலிருந்து அழிக்கப்பட்டதொன்றாய் மாறிப்போயிருக்கிறது கருணை.
வனத்தின் குரல் என்னும் இன்னொரு கவிதை…

“உருவாகி வரும் 
சிறுநகரின் தடித்த சுவர்களுக்கு 
மிக அருகில் மிச்சமிருக்கும்
சன்னமான வனத்தின் குரல்
அழைக்கிறது..”
                
இப்படித் துவங்குகிறது. விளை நிலங்களும் சேர்த்து பிளாட்டுகளாக்கப்பட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன நகரங்களிலும் சிறு நகரங்களிலும். அடுத்த தலை முறை விவசாயிகள் சந்தேகமேயில்லாமல் போன்சாய் விவசாயத்தை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மரங்களையும் செடிகளையும் தொட்டிச் செடிகளாக்குவதுபோல் சின்ன சின்ன வயல்காடுகளை கண்ணாடிப் பெட்டிகளுக்குள் கொண்டு வந்துவிடும் தீவிரத்தோடுதான் விளை நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
தோல் துளைகளில் கரி அமிலம்
பொதிந்திருக்கும் மென்னுடலை 
வியர்வை மலமற்ற
தூய பிணங்களாக்குவதை 
இலக்காகக் கொண்டு நகர்கிறது
விளம்பரப் பரிசுத்தம்..”
        
விளம்பரங்கள் ஒரு மனிதனை சொஸ்தப்படுத்துவதையும் சுத்தப்படுத்துவதையும் இந்த நூற்றாண்டில்தான் இந்த உலகம் கண்டு பிடித்திருக்கிறது. நீங்கள் ஏழு வாரங்களில் சிகப்பாகிவிட முடியும், பன்னாட்டு நிறுவனத்தின் ஆடைகளை அணியாத பட்சத்தில் மன்னிக்கவே படாத குற்றவாளிகள், முக்கியமாய் உங்கள் இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பெண்களைக் கவர்வதாக சொல்லப்பட்டால் மட்டுமே நீங்கள் வாங்க வேண்டும். நீங்கள் விளம்பரங்களைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதனாய் இருக்க வேண்டுமென்பது நிர்ப்பந்தமல்ல, ஆனால் கவணிக்கப்படாமல் போவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன. ஒரு இந்திய சோப்பை பயன்படுத்தி இந்தியனாவது மாதிரியான ஆபாசம் வேறு என்ன இருக்க முடியும் நீங்கள் சுவாசிக்கும் இந்த பன்னாட்டு நிறுவன வாழ்வில்…. வாழ்க கே.எஃப்.சி, வாழ்க கோக், வாழ்க லீவைஸ் வாழ்க அமெரிக்கா… நீங்கள் எப்பொழுது சிகப்பாகப் போகிறீர்கள்?...
கையற்ற உடல் எனத் துவங்கும் கவிதை

“முற்றிலும் அழிக்கப்படாது 
குற்றுயிராயிருக்கும் கையற்ற சிலை
எல்லாம் மனிதசெயல் என்கிறது
அமைதியில் உயர்ந்த கையுடைந்திருப்பது
நடந்து கொண்டிருப்பது யுத்தமென
சிலையுள்ள இடமெல்லாம் இயம்புகிறது
இந்த தேசத்தின் அதிகமும் பரிதாபத்திற்குரிய தலைவர்களின் சிலைகளைப் பற்றித்தான் பேசத்துவங்குகிறது.


ஆனால் இந்தக் கவிதையின் நோக்கம் அந்த சிலைகளைப் பற்றி மட்டுமே பேசுவதல்ல.

” ஆதிக்கர் உலகத்தில் 
அழிவில்லா அதிகாரமே
அவர் வேண்டும் தேவ வரமென்பதை
தேடாமலே தெரிந்து கொள்ள 
நடுகல்லாகியிருக்கிறது
கையற்ற உடல் …”


ஒருவனிடம் அதிகாரம் இருக்கும் பட்சத்தில் வீட்டில் பொழுது போகாத நேரங்களில் வீதியிலிறங்கி வெயிலி வாடி வதங்கிப் போயிருக்கும் தலைவர்களின் சிலைகளோடு மல்லுக்கு நிற்கலாம்… குறிப்பாக அவன் சார்ந்த சாதியின் அல்லது   வழிபாட்டின் இடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களின் சிலைகளை வழிபாட்டுத் தலங்களை சிதைத்து வன்முறைக்கு  பழக்கிக் கொள்வதன் மூலம் வரலாற்றின் மதிப்புமிக்க பக்கங்களில் சிறப்பானதொரு இடத்தைப் பெறமுடியும். வன்முறை ஒரு சாகசமென்கிற மனநிலைக்கு வரும்போது தேவையாய் இருப்பது கொஞ்சம் ஆயுதங்கள் மட்டுமே…  அதிகாரமென்பதை தேவ வரமென்னும் வரிகள் வெவ்வேறான புரிதல்களை அல்லது கேள்விகளை எனக்குள் ஏற்படுத்துகின்றன, அதிகாரம் ஏன் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு கொடுக்கப்படும் போது குடும்பச் சொத்தைப் போல் ஒரே ஆளின் வம்சாவழியனரிடம் ஒப்படைக்கப் படுகிறது. நாம் சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்பது நகைச்சுவையா? வரலாற்றுத் துயரமா? அல்லது கேலிசெய்வதற்காக எழுதப்பட்ட நகைச்சுவையா?...


அரிதாகிக் கொண்டிருக்கும்
உலோக வரிசையில்
புன்னகையை சேர்த்துவிடும்
ஆர்வம் கொப்பளிக்கிறது…”


இந்தச் சமூகம் எப்படி கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் மறந்து போயிருக்கிறதோ அப்படியே புன்னகைக்கவும் மறந்திருக்க்கிறது. எசமானர்கள் சிரிக்கும் போது சேர்ந்து சிரித்து அவர்களுக்காக அழுது தங்களது கடமையுணர்வையும் விசுவாசத்தையும் காட்டுவதை மேன்மையென நம்பிக் கொண்டிருக்கிறது. எசமானர்களின் புன்னகை என்னும் இக்கவிதையில் தொழிலாளர்களின் வாழ்க்கை ஒரு இருதலை உயிராயிருப்பதை சிவகாமி குறிப்பிடுகிறார்.
நான் அதிகமும் காதல் குறித்து பேசுகிறவன் என்பதாலும் நிறைய பேரைக் காதலிப்பதாலும் சிவகாமியின் காதல் குறித்த கவிதையொன்றை விருப்பத்தோடு வாசித்தேன். அந்தக் கவிதையை மட்டும் முழுமையாக வாசிக்க அனுமதியளிக்கும்படி உங்களிடம் எளியதொரு கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்…


காதலின் புதிய தோற்றம் 
ரொம்பவும் புனிதப்படுத்தப்பட்ட காதலின் மீது 
வசதியாக அமர்ந்துவிடுகிறான் சாத்தான்
கொலையும் தற்கொலையும் கலந்த காதல்
அரிவாளில் தொங்கியிருக்கும் இதயமென 
பயமளிக்கிறது

கதவை உட்புறமாய் தாழிட்டுக் கொள்ள 
காதலர்க்கு இன்னமும் அனுமதியில்லை
காதலும் காமமும் கலப்பது தேவைதான்
அது மனிதக்காதலெனில் 

கிழிந்த காதலை பலமுறை தைத்து அணிவது
சரிதான் புதிய தொன்று கிடைக்கும் வரை
சாகும் வரை அல்லது சாவில் இணைவதுதான்
உண்மைக் காதலென்ற பகட்டில்
கிழிந்ததையே உடுத்திக்கொள்ளும் 
பிச்சைத் தோற்றம் கனிகிறது
பேசிக்கொள்ள ஒன்றுமில்லாமல்
வறுமையாகிறது வாழ்க்கைப் பாத்திரம் 

முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சென 
புதிய தோற்றத்திற்கு 
காதல் எப்போதும் தயாரிப்பிலிருக்கிறது …
தயவுசெய்து உலகக் காதலர்களே ஒன்று கூடுங்கள். நாம் நம் காதல்களின் புதிய தோற்றம் குறித்து ஆலோசித்தே ஆக வேண்டும்…
ஒரு ஆண் பெண்ணைக் குறித்து எழுதுவதிலிருந்து முற்றிலும் வேறானது ஒரு பெண் சக பெண்களைக் குறித்து எழுதுவது.


அன்பு மீதுற்ற அவள் 
பிசைந்த குயவரும் திகைக்கும் வண்ணம் 
பேரிசையாகி வெடித்தாள் ….”

என்பதை ஒரு ஆண்மனம் யோசிக்குமாவெனத் தெரியவில்லை. மூவருக்காக என்னும் இக்கவிதை தன்னிலை விளக்கங்கள் எதற்குள்ளும் மாட்டிக் கொள்ளாமல் வாழ்விற்கான இயல்போடு விரிவதன் மூலம் சிறப்பானதொன்றாகிறது. இந்தத் தொகுப்பிலிருக்கும் இன்னும் சில நல்ல கவிதைகளென மலர் வளையம், ஞான வெட்டியான், நீதிக் கதைகள்,  குளம், பிரிவின் உடல் இவற்றைச் சொல்ல முடியும்.


எதுவொன்றின் அடியும் நுனியும் தேடி 
சொல்லை பட்சியாக்கி அமர்கின்றேன்
பறத்தல் சுலபமாகிறது..”
என்கிற வரிகளில் ஒரு படைப்பாளிக்குள்ளிருக்கும் கம்பீரமான சுதந்திர உணர்வு வெளிப்படுகிறது.


” பெரிய ஒற்றைக் கண்ணென குளம்
நீலம் பச்சை பாரித்த கருமணியுடன் 
அகன்ற இலைகள் மலர்ந்த தாமரைகள் மிதக்க
என்ன செய்து கொண்டிருக்கிறது..”
என்று துவங்கும் குளமென்னும் கவிதை குளத்தை பிரம்மாண்டமானதொரு கண்ணாக்கி அதன் வழியாய்ப் பார்ப்பதன் மூலம் அந்தக் காட்சிகள் உணர்த்தும் பிரம்மாண்டம் மலைக்கச் செய்கிறது.


”துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்புநீர்ப் பறவைகள்…”
என்னும் தருமு சிவராமின் கவிதையிலிருக்கும் காட்சி உணர்த்தும் பிரம்மாண்டத்தைப் போல்வேதான் இந்த வரிகளும் எனக்குள் ஏற்படுத்தின.


நீதிக்கதைகள் என்கிற தலைப்பில் துவங்கும் கவிதை காலம் காலமாய் நம்மை நம்ப வைத்திருக்கும் கதைகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் வரலாறுகள் அதன் போலித்தன்மைகளோடு நமக்குள் படர்ந்து போயிருப்பதை அழுத்தமாய்ச் சுட்டிக்காட்டுகிறது.


“அத்தனைப் பேரும் காலப் பிழையில் 
வெற்றியுடன் திரும்பிய 
கட்டுக்கதைகளை நீதியின் போதனையென
சொல்லவியலாமலிருக்கிறது
போராடி தொடர்ச்சியாய் 
செத்துத் தொலைந்தவரின் 
சந்ததிக்கு ….”


ராஜாக்கள், ராணிகள், தளபதிகள், மந்திரிகள் இவர்கள்தான் சரித்திரத்தில் வாழும் பாக்கியவான்கள். அல்லது சாணக்கியர்கள் என்று வணங்கப்பட்ட பார்ப்பணர்கள். இவர்களோடு பார்ப்பணர்களை இந்நிலத்தின் பூர்வகுடிகளென்பதை நம்பும் பார்ப்பண சேவகர்கள். இவர்களைத் தாண்டிய சாதாரண மனிதனைப் பற்றி இறந்த காலமும் சமகாலமும் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. மதுரை வீரனும், காத்தவராயனும், நந்தனாரும் மேல் சாதியினரால் துண்டாடப்பட்ட வரலாறுகள் அல்லது கதைகள் சொல்லத் தேவையற்றக் கதைகளாகியிருக்கின்றன. காத்தவராயனை காலத்தோடு சேர்த்து நாமும் மறந்தாகிவிட்டது. மனுதர்மம் சொல்லித் தந்திருக்கும் நீதி போதனைகளையே நிஜமென நம்பப் பழகிவிட்ட நமக்கு முயல்களும் ஆமைகளும் கொல்லிவாய்ப் பிசாசுகளும் பெரும் வணிக நிறுவணங்களாகியிருக்கிற பெருந்தெய்வ வழிபாடும் நமது வாழ்வின் மதிப்பு மிக்க ஆதார நம்பிக்கைகளாகவும் வாழ்க்கை முறையின் பிரதிநிதிகளாகவும் மாறிப்போயிருக்கின்றனர். அறம் என்கிற வார்த்தையை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு ஒரு மனிதனால் பார்ப்பன அறம் குறித்து கதைகள் எழுத முடிகிறது, அதனை இந்தச் சமூகம் கொண்டாடுகிறது. ஆக இந்தச் சமூகம் தன்னை அதிகமும் ஏதாவதொரு அதிகாரத்திற்கு உட்படுத்திக் கொள்ளவே விரும்பியபடி இருக்கிறது. அப்படியானபட்சத்தில் காலம் காலமாய் பழகிப் போயிருக்கும் அதிகாரத்தின் கீழ் தன்னை பிணைத்துக் கொள்வதில் அதற்கு சிரமமிருக்கப் போவதில்லை. விளிம்புகளை மையம் நோக்கி நகர்த்துதல், அல்லது மையமென்பதையே தகர்த்தல் என்கிற தத்துவ சண்டைகளும் விவாதங்களும் இந்தச் சமூகத்தின் சராசரி மனிதனை எதை நோக்கி உண்மையில் நகர்த்தியிருக்கிறது?... ஒரு படைப்பாளிக்கு அரசியல் நிலைப்பாடு முக்கியம்… அது என்னவிதமான அரசியல் என்பதையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். சிவகாமியின் படைப்பிலும் சமூகச் செயல்பாட்டிலிருக்கும் அரசியல் குறித்து எனக்கு ஒருபோதும் சந்தேகமோ தயக்கமோ இல்லை. அதனால்தான் பேசத் துவங்கியபோதே இந்தக் கவிதைகளை வாசிக்கத் துவங்கும் முன் ஆனந்தாயியை தற்காலிகமாய் மறக்க வேண்டியிருந்ததைக் குறிப்பிட்டேன். ஏனெனில் இக்கவிதைகள் எனக்குள் கவிதைகளாய் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிற ஆர்வம் எனக்குள் நிறையவே இருந்தது. இப்பொழுது சில நல்ல கவிதைகளை வாசித்த நிறைவும் கவிதைகள் குறித்துத் தொடர்ந்து பேசியும், கவிதைகளை வாசித்தும், கவிஞர்களோடு சண்டை போட்டும், முன்பு சில கவிதைகள் எழுதியும் இருக்கும் நான் இன்னும் ஒரு கவிதைத் தொகுப்புக் கொண்டு வராததது குற்ற உணர்வும் இருக்கிறது. அதே சமயத்தில் எனது கவிதைகள் என்ன மாதிரியான எதிர்வினைகளை எதிர்கொள்ளுமென்றும்,  வாசகனின் நலன் கருதி இன்னும் சில வருடங்கள் நான் கவிதைத் தொகுப்புக் கொண்டு வருவத் குறித்து யோசிக்காமல் இருப்பதே நல்லதென்கிற இறுதி முடிவையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இறுதியாக Wittgenstein ன்
“ to understand a sentence means to understand a language. To understand a language means to be master of a technique…”
என்கிற வரிகளோடு எனது இந்த எளிய உரையை முடித்துக் கொள்கிறேன்….




























Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு