மகிழ்வானதொரு தருணம்.




                தமிழில் புனைவிலக்கியம் தொடர்பான உரையாடல்கள் எதுவும் நீண்ட காலமாய் இருந்திருக்கவில்லை என்கிற ஏக்கத்தில்தான் முதலில் ஒரு கூட்டம் நடத்தும் எண்ணம் எனக்குள் விரிந்தது. விஜியுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்த ஒரு இரவில் சரி ஒரு கூட்டம் நடத்திவிடலாம் என இருவருமாய் ஒரு முடிவுக்கு வந்து முகநூலில் சின்னதாய் ஒரு நிலைத்தகவலிட்டேன்…. உடனடியாக அதற்கு வந்த சில எதிரினைகளைப் பார்த்தபொழுது எல்லோரும் ஆர்வமாய் இருப்பது தெரிந்தது. செல்மா அதில் ‘செயல் அதுவே சிறந்த சொல்…. உன்னை நம்புகிறேன்…’ என்று பதிலிட்ட கனமே முடிவு செய்துவிட்டேன் கூட்டத்தை உடனடியாக நடத்திவிடுவதென. அடுத்த நாள் ந.முருகேசபாண்டியனிடம் பத்தாண்டுகாலத்தின் முக்கியமான நாவல் குறித்துக் கேட்ட பொழுது அவர் முன்பே காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார். அந்தக் கட்டுரையை ஒட்டியே அவரின் நினைவிலிருந்து சில புத்தகங்களைக் கூறினார். அவரோடு நிறுத்தாமல் எஸ்.ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன்,ஜெயமோகன்,நேசமித்ரன்,விசயலட்சுமி இப்படி எல்லோரிடமும் முக்கியமான புத்தகங்கள் குறித்துக் கேட்டிருந்தான். ஜெயமோகன் இதில் எந்த பதிலும் சொல்லாமல் விட்டது வேறு விசயம். பா. வெங்கடேசன் ஒரு நாவல் வரிசயைத்  தர, இன்னொரு புறம் எஸ்.ரா மிக நீண்ட ஒரு வரிசையை தந்திருந்தார். தொடர்ந்ந்து கூட்டம் குறித்து அவர் அளித்த உற்சாகம் முக்கியமானது. இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
     முதலில் சென்னையில் கடற்கரை சாலையில் தடாகம் நண்பர்களுடன் இணைந்து நடத்துகிற எண்ணத்தில்தான் இருந்தேன். தற்செயலாக ஆதிரன் தேனியில் நடத்தச் சொல்லிக் கேட்ட பொழுது செலவுகள் மற்றும் வசதிகள் கருதி தேனியில் நடத்த முடிவுக்கு வந்தேன். இப்படியாக கூட்டம் குறித்தான ஒரு அரைகுறையான வடிவம் கிடைத்தபின் புத்தகங்களின் இறுதிப்பட்டியல் ஒன்றைத் தயார் செய்து எந்தெந்தப் புத்தகத்திற்கு யார் யாரைக் கூப்பிடலாமென ஒரு விவாதம் துவங்கியது. இதற்கிடையில் முக்கியமான அத்தனை ஆளுமைகளையும் நிகழ்ச்சிக்கு வரச்செய்துவிட வேண்டுமென்கிற எனது விருப்பம் பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க எழுத்தாளர் சிவகாமி ஒப்புக் கொண்டதில் சந்தோசம், பிறகு கோணங்கி, சமயவேல், பா.வெங்கடேசன்,ரமேஷ் பிரேதன், யவனிகா இப்படி ஒவ்வொருவராய் சம்மதம் சொன்னதோடு உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாய் இருந்தது. பேச்சாளர்களையும் இறுதி செய்தபின் அழைப்பிதழை வெய்யில் வடிவமைத்துக் குடுத்தான். பெரும்பாலும் பேச அழைத்த எல்லோரும் நெருக்கமான நண்பர்களென்பதால் எப்பொழுதும் போல் விளையாட்டுத்தனமாய் பேசிக்கொண்டே கட்டுரைகள் குறித்து கேட்டுக் கொண்டிருந்தேன். முதல் கட்டுரையை தோழி நறுமுகை தேவி அனுப்பி வைக்க, அன்றே நண்பன் இசை தனது கட்டுரையை அனுப்பினான். அடுத்ததாக ஆதவன் தீட்சண்யா தனது கட்ட்டுரையை அனுப்பினார். இப்படியாக கட்டுரைகள் கொஞ்சம் வந்து சேர பெரும் விருப்பங்களோடும் சின்னதொரு பயத்தோடும் தேனி வந்து சேர்ந்தேன். கூட்டத்திற்கு முதல் நாள் நான் கூப்பிடுவதற்கு முன்னாலேயே சிவகாமி அவர்கள் தொலைபேசியில் அழைத்து வாசிக்காத சிலப் புத்தகங்கள் குறித்து விலாவரியாய்க் கேட்டார். பிறகு அவரை அழைத்ததற்கான காரணத்தைக் கூறினேன். சந்தோசத்துடன் காலையில் சந்திக்கலாமெனச் சொல்லிவிட்டு வைத்தார்.
     ஆதிரனோடு சேர்ந்து நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைப் பார்த்து வந்தோம். திருப்தியாய் இருந்தது. முதல் நாள் இரவே யவனிகா, குமார் அம்பாயிரம், நேசமித்ரன், சரவணக்குமார் என கொஞ்சம் நண்பர்கள் வந்துவிட அதிகாலை நான்கு மணிக்கு தேவி என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பினாள். (பன்மையில் குறிப்பிடுவது தோழமையின் பொருட்டு இருக்கும் அன்பே…) பிறகு விஷ்ணுபுரம் சரவணன், சந்திரா, கவின்மலர் என ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தது ஏதேதோ கல்யாண வீட்டிற்கு ஒவ்வொருவரையும் வரவேற்றது போலிருந்தது. சமயவேலோடு சேர்ந்து காரில் வருவதாய்ச் சொன்னக் கோணங்கியை ‘இப்பவே வரனுமென சின்னப்பிள்ளைப்போல் நான் அடம் பிடிக்க அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஓடி வந்தார். துரதிர்ஸ்டவசமாய் அவர் தேனி வந்து சேர்ந்த பத்து நிமிடத்திலேயே சமயவேலும்  ச.விசயலட்சுமியும் வந்து சேர்ந்துவிட்டார்கள். காலை சற்றுத் தாமதமாகத் துவங்கினாலும் சிவகாமியின் நிதானமான பேச்சு வசீகரமாயிருந்தது. சொந்த அனுபத்திலிருந்து அனேக விசயங்களைப் பேசியவர் தொடர்ந்து தமிழ் எழுத்துக்கள் கடக்க வேண்டிய தூரம் குறித்து ஒரு நாற்பது நிமிடங்கள் பேசினார். அடுத்ததாக பா.வெங்கடேசனின் கட்டுரை. பத்தாண்டுகால நாவல்களின் கதைமொழி. விலாவரியாக தமிழ் நாவல்களுக்குள் இயங்கும் கதையாடல் குறித்தும் மொழி குறித்தும் விவாதித்தக் கட்டுரை. கதை நீக்கம் செய்யப்பட்ட கதைகள் என்னும் அவரின் கட்டுரையிலிருந்து துவங்கிய விவாதம் முதல் கட்டுரையையே பிரமாதமான விவாதங்களுக்கு இட்டுச் சென்றது. ரமேஷ், யவனிகா, பா.வெங்கடேசன் என மாறி மாறி சுழன்ற விவாதம் கோணங்கிக்கு வர கொற்றவை நாவலில் எவ்வாறு பெருங்கதையாடல் நீக்கப்பட்டு கதை வந்திருக்கிறதென கோணங்கி பேசினார்.
தொடர்ந்து முருகேச பாண்டியனின் கட்டுரை. எஸ்.ராவின் துயில் குறித்து விலாவரியாக அவர் பேசிமுடித்தபின் நிறைய விவாதங்கள் எழுந்தது. ப்ரான்ஸிஸ் கிருபாவ்வின் கன்னி நாவலுக்கு சா.தேவதாஸ் அருமையான ஒரு கட்டுரை வாசித்தார். அதிகமும் சத்தமில்லாத ஆறுதலான ஒரு குரல். நாவலின் கவித்துவம் குறித்து பிற்பாடு விவாதத்தில் பேசப்பட்டது, அதன் முக்கியத்துவம் குறித்தும். ஒரு நீண்ட உணவு இடைவேளை. நண்பர்களை பசியோடு காக்க வைத்ததில் சின்னதாய் ஒரு மனவருத்தம். உணவு இடைவேளைக்குப்பின் கீதாரி நாவலுக்கு ஜி.தேவியின் கட்டுரையும் தொடர்ந்து உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை நாவலுக்கு உமா சக்தி எழுதிய கட்டுரையை அவர் வராததால் கொற்றவையும் வாசித்தனர். அடுத்ததாக நேசமித்ரன் கோணங்கியின் பிதிரா நாவல் குறித்து கட்டுரை வாசிக்க கட்டுரை குறித்த காரசாரமான விவாதம். தொடர்ந்து ரமேஷ் ப்ரேமின் சொல் என்றொரு சொல் நாவலுக்கு மனோ மோகன் கட்டுரை வாசிக்க மீண்டும் நீண்ட உரையாடல் துவங்கியது. யவனிகா விவாதத்தைத் துவக்க மீண்டும் வெங்கடேசன், ரமேஷ் கோணங்கி என விவாதம் நீண்டது. இதில் ரமேஷின் விவாதம் சிறப்பானது. இறுதியாய் காமுத்துரை பூமணியின் சமீபத்திய நாவலான அஞ்ஞாடிக்கு எள்ளலும் பகடியுமிக்கதொரு கட்டுரையை வாசித்தார். பூமணியின் படைப்பு குறித்து விவாதிக்கப்பட நாவலை இன்னும் நிறைய பேர் வாசிக்காததால் பெரிய விவாதம் வைக்க முடியாமல் போனது.
முதல் நாள் மாலையே நல்ல உரையாடலுக்கான திறப்புகள் கிடைத்துவிட்டதால் அறைக்கு வந்தும் ஃபிக்‌ஷன் தொடர்பான உரையாடல் நீண்டது. பா.வெங்கடேசன், கோணங்கி, கார்த்திகை பாண்டியன், சா.தேவதாஸ் என ஒரு குழு அறையில் பின்னிரவு வரை பேசிக்கொண்டிருந்தனர். அடுத்த நாள் அமர்வை விரைவாக துவக்க வேண்டிய நிர்ப்பந்தம். சல்மாவின் நாவலுக்கு கட்டுரைத் தருவதாக சொன்ன தோழர் கடைசி நேரத்தில் தனக்கு இதைவிடவும் முக்கியமான இன்னொரு வேலை இருக்கிறதெனச் சொல்லி விட்டதால் அந்த இடத்தில் பாமாவின் மனுஷி நாவலை வைத்துவிட்டேன். ஏற்கனவே மதுரையில் ஒரு கட்டுரை வாசிக்க வேண்டி இரவு பகலாக முட்டிக் கொண்டிருந்த விஜியிடம் கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நாவலைக் குடுத்து கட்டுரை எழுதச் சொல்லிவிட்டேன். இரண்டாவது நாள் முதல் கட்டுரை பாமாவின் நாவலுக்கு விசயலட்சுமி வாசித்தது. நிறைய நண்பர்கள் வந்து சேர்ந்திருக்காததால் கோணங்கியின் உரையைத் தள்ளி வைத்துவிட்டு ஹரிகிருஷ்ணனின் மயில்ராவணன் தொகுப்பிற்கு கறுத்தடையானின் கட்டுரை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து எனது நீலநதி தொகுப்பிற்கு சந்திராவும் சந்திராவின் அழகம்மா தொகுப்பிற்கு விஷ்ணுபுரம் சரவணனும் கட்டுரை வாசித்தனர். சரவணனின் கட்டுரை சந்திராவின் கதைகளின் மீதான நுட்பமான அவதானிப்புகளைக் கொண்டிருந்ததோடு அக்கதைகளில்லிருக்கும் உலகை அதன் உயிர்ப்போடு பேசியது. பா.வெங்கடேசன் தனது கருத்தை முன்வைக்க சரியாக வந்து சேர்ந்த யவனிகாவிடமிருந்த மிகச்சிறந்த எதிர்வினை வெளிப்பட்டது. எல்லோரும் இருக்கையில் வாசிக்க வேண்டுமென பாதுகாத்து வைத்த பாலசுப்ரமணியத்தின் தாண்டவராயன் நாவலுக்கான கட்டுரையை நான் வாசித்தேன். கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ‘தமிழின் முதல் பின்நவீனத்துவ நாவல் என்கிற வார்த்தை குறித்துப் பேசின மனோ மோகன் அது தவறான கூற்றெனவும் ரமேஷின் சொல் என்றொரு சொல் நாவல் 1999 லேயே எழுதப்பட்டது பற்றியும் விவாதத்தை முன்வைக்க தொடர்ந்து வெங்கடேசன் நாவல் குறித்த விவாதம் நீண்டது. இறுதியில் தனது நாவல் கவனிக்காமல் போனது குறித்தும், நாவல் எழுத எடுத்துக் கொண்ட சிரமங்கள் பற்றியும் வெங்கடேசனும் பேசினார். அன்றும் உணவு வர தாமதமானதால் ஜே.பி.சாணக்யாவின் கனவுப்புத்தகம் தொகுப்பிற்கு கார்த்திகை பாண்டியன் கட்டுரை வாசித்தார். அதற்குள் உணவும் வந்துவிட சாணக்யாவின் கதைகள் குறித்து நான் பேச நினைத்த சில விசயங்களைப் பேச முடியாமல் போனது. எனக்கும் சேர்த்து யவனிகா மிகச் சரியாக அக்கதைகள் குறித்து விவாதங்களை முன் வைத்தார். உணவு இடைவேளைக்குப்பின் நேரம் குறைவாக இருந்ததால் முடிந்தவரை விவாதங்கள் இல்லாமல் கட்டுரை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம். கோணங்கி காலையில் ஆற்ற வேண்டிய தலமை உரையை உணவு இடைவேளைக்குப்பின் நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து அசதாவின் தொகுப்பிற்கு வடகரை ரவிச்சந்திரனும், காலபைரவனின் புலிப்பானி சோதிடன் தொகுப்பிற்கு லிபி ஆரண்யாவும் கட்டுரை வாசித்தனர். லிபியின் கட்டுரை அவ்வளவு நெருக்கடியிலும் பிரமாதமான எள்ளலுடன் இருந்ததோடு வாசிக்கும் போதே நல்ல வரவேற்பைப் பெற்றது. லிபியைத் தொடர்ந்து ஆதவன் தீட்சண்யாவின் தொகுப்பிற்கு கவின் மலரும், குமார் அம்பாயிரத்தின் ஈட்டி தொகுப்பிற்கு செல்மா ப்ரியதர்ஷனும் கட்டுரை வாசித்தனர். காமுத்துரையின் பூமணி தொகுப்பிற்கு பூமிச்செல்வன் கட்டுரை வாசிக்க ஆதவனும், நண்பன் இசையும் அனுப்பியிருந்த கட்டுரையை வாசிக்க நேரமில்லாமல் சமயவேலின் உரைத் துவங்கியது. இரண்டு நாட்கள் முழுக்க எல்லா அமர்வுகளும் கூட்டத்திலும் விவாதத்திலும் பங்கெடுத்திருந்த சமயவேலின் உரையோடு நிறைய முரண்பாடுகள் இருந்த பொழுதும் விவாதிக்க நேரமில்லாம முதல் நாள் யவனிகா பேச வேண்டிய கவிஞனின் பார்வையில் புனைவிலக்கியம் என்னும் உரை துவங்கி விட்டது. அப்பொழுதே தாமதமாகிவிட்டதோடு நிறைய பேர் ஊருக்குச் செல்ல வேண்டியும் இருந்ததால் ரமேஷ் பேசுவதாக இருந்த முக்கியமான ஒரு உரையைக் கேட்க முடியாமல் போனது.
விளையாட்டுத்தனமாய்த் துவங்கிய ஒரு விசயத்தை உண்மையில் செயல் படுத்த கட்டுரை கேட்டு ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து பேசியும் அவர்களின் வரவை உறுதி செய்துமாய் தொடர்ந்து நடந்த வேலை. இன்னொரு புறம் இப்படிப் பேசும்போதுதான் உண்மையில் நம் நண்பர்கள் நம்மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. அடுத்த நாள் சென்னையில் இன்னொரு கூட்டமிருந்தும் இங்கு கூட்டத்திற்கு வர ஜி.தேவி ஒப்புக்கொண்டதிலிருந்து முதல் நாள் புத்தகம் குடுத்து கட்டுரை வேண்டுமெனக் கேட்டதற்காக இரவெல்லாம் உட்கார்ந்து கட்டுரை எழுதிய விசயலட்சுமி,  நடக்க முடியாத காலோடும் எனது அன்பிற்காக வந்திருந்த தங்கை கவின்மலர், உடல் நில முடியாத பொழுதும் மொத்த அமர்விலும் பங்கெடுத்த சந்திரா இரண்டு நாள் அமர்வுகளிலும் இடைவிடாத விவாதங்கள் செய்த பா.வெங்கடேசன், கோணங்கி, ரமேஷ், யவனிகா, வசுமித்ர எல்லோருக்கும் இந்தக் கனத்தில் எனது அன்பு. கூட்டத்திற்கு வந்த ஒவ்வொருவரிடத்திலும் ஒரு நல்ல நிகழ்விற்கு வந்திருந்த பூரிப்பைக் காண முடிந்திருந்தது. உள்ளூரில் ஆதிரனோடு சேர்ந்து பணிகளைப் பகிர்ந்து கொண்ட தோழர். காமுத்துரை வசுவைப் போலவே இரண்டு நாள் அமர்வுகளிலும் தொடர்ந்து விவாதித்த கொற்றவை அவர்களோடு சேர்த்து ஸ்வாதி, செந்தி, குமார் அம்பாயிரம், ஸ்ரீசங்கர், சின்னச்சாமி, சரவணக்குமார் அழகாக புகைப்படங்கள் எடுத்த நண்பன் முருகன், ஒளிப்பதிவு செய்த சுரேன் இப்படி எல்லோருக்குமாய் எனது அன்பும் நன்றிகளூம்.
இது வெறுமனே நன்றி நவிழல் அல்ல. நிறைவாக நிகழ்ந்த ஒரு கூட்டத்தைப் பற்றின  பூரிப்பு. இவர்களோடு சேர்த்து நெருக்கடியானதொரு காரணத்தால் வரமுடியாது போனாலும் சின்னதொரு பொருளாதார உதவிசெய்த தமிழச்சி அக்காவிற்கும், நான் கேட்டதற்காக கொஞ்சம் பொருளுதவி செய்த தடாகம் அமுதரசனுக்கும், அழைப்பிதழ் வடிவமைத்துத் தந்த வெய்யிலுக்கும் நன்றி. இன்னும் சின்ன சின்ன அளவில் உதவிகளைப் பகிர்ந்து கொண்ட சாத்தப்பன் போன்ற நண்பர்களையும் அன்புடன் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். வாய்ப்பிருந்தால் இன்னொரு முறை சந்திக்கலாம் நண்பர்களே….

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....