மற்றுமொரு பிரிவுக்கதை 

   -அலீனா. 



 

நீண்டதொரு கடற்கரையாய் அவளிருந்த காலத்தில் அவன் ஒரு சிறு படகாய் இருந்தான். சந்தடிகள் நிறைந்திருந்தாலும் வெறுமை சூழ் உலகு அவளது. காற்றும் அலையும் என அலைக்கழிக்கப்பட்டாலும் நிறைவானவை அவனது நாள்கள். அலைச்சல்கள் மிகுந்த வாழ்விலிருந்து ஓய்வெடுக்க எண்ணி அவன், அவள் கரை சேர்ந்திருந்தான். வருவோரும் போவோருமாய் இருக்குமிடத்து தங்கிவிட்ட அவனிடம் அவள் கதை பேசத் துவங்கினாள். அவனிடம், சொல்வதற்குப் பல கதைகளிருந்தன - அவன் சுமந்த மனிதர்களும், கால் நனைத்த தேசங்களும், போராடிக் கடந்த தூரங்களும், எட்டி அடைந்த கனவுகளுமாய் அவனின் கதைகள் அவளுக்குச் சுவாரசியமாய் இருந்தன. அவளறியாத, காணவும் இயலாத அந்த உலகின் வாயில்களை அவன் தன் கதைகளைக் கொண்டு திறந்திருந்தான். அவன் பேசி சலிப்புற்ற நேரங்களில் அவள் தன் சிறு உலகத்தின் பெருங்கதைகளை அவனுக்குச் சொல்வாள். பகலும் இரவும் எல்லா நேரங்களிலும் தன்னோடிருக்கும் அவனது அருகாமையில் அவள் திழைத்திருந்தாள்.

வழமை திகட்டி  மனம் மாற்றத்தை வேண்டிய ஓர் நாளில், தான் பயணம் போக எண்ணுவதாய் அவளிடம் கூறினான். விடைகள் பல கூறியவள் தான் எனினும், அவனின் பிரிவுக்கு அவள் தயாராய் இல்லாத காரணத்தால் தான் சொல்லும் நாளில் போகுமாறு மன்றாடினாள். அவனும் சரியென்றான். ஆனால் அதன் பின் பயணம் பற்றிய உரையாடல்களைத் தவிர்த்தும், கடல் ஆபத்துக்களை நினைவுறுத்தியும், மாபெரும் முழக்கங்களோடு அவளிடமிருந்து விடை பெற்று, மரத்துண்டுகளாக அவளிடத்தில் கரை ஒதுங்கிய கப்பல்களைக் குறிப்பிட்டுமே உரையாடினாள். அவளின் அச்சங்களை புரிந்துகொண்டு முதலில் அமைதி காத்தவன், பொறுமையிழந்த ஒரு பொழுதில், படகுகள் கரையில் இளைப்பாறுவதால் அவை கரைகளுக்கு மட்டுமே உரியவையல்ல; பயணம் தான் தங்களின் வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும் என்பதை அழுத்தமாகவே அவளிடத்தில் தெரிவித்தான்.  வார்த்தைகளிலிருந்த உறுதியை   உணர்ந்தவள் அரைமனதாய்  விடை கொடுத்தாள்.

சென்றவனுக்கு வானெங்கும் அவள் பிம்பம்; பிரிகையில் களையிழந்திருந்த அவள் முகமும், தன்மீது கொண்ட அன்பினாலே அவள் அவ்வாறு  நடந்து கொண்டாள் என்ற எண்ணமும் அலைக்கழிக்க, அவன் மிக விரைவிலேயே திரும்பி வந்தான். வந்தவனைக் கண்டவளுக்குக் கொண்டாட்டம் தாளவில்லை. அவர்களின் மகிழ்ச்சியில் கடலும் காற்றும் சேர்த்துக் கொண்டன. ஆட்டமும் பாட்டமுமாய் முடிந்த அவ்விரவிற்குப் பின் வந்த இரவுகளிலும் அந்த உயிர்கள் அளவளாவினர்.

அந்த சந்திப்புகளின் போதெல்லாம், நீ அங்குப் போயிருக்கிறாயா? அதைக் கண்டிருக்கிறாயா? என அவர்கள் பேசும் போதெல்லாம் தன் இயலாமையை  எண்ணித் தாழ்வு மனப்பான்மை கொண்டாள். நாளும் அதைத் தின்று பொறாமை தீ அவளுள் வளர்ந்திருந்தது. இங்ஙனம் இருக்கையில் ஓரிரவில், கடல் நடுவில் தான் கண்ட ஒரு தீவையும், அதன் அழகையும் அவன் கூற, கடலும் காற்றும் அதை ஆமோதித்ததைப் பார்த்த அவள் முகம் வாடிப் போயிற்று. அதைச் சுட்டிக் காட்டிய காற்று, உனக்கு வாழ்நாளெல்லாம் ஒரே இடம் ஒரே காட்சி எனப் பகடி  பேசிற்று. தனக்காய் பரிந்து பேச அவன் வருவான் என்று அவள் எண்ண அவனோ, நண்பர்களுக்குள் விளையாடிக் கொள்கிறார்கள் என அமைதியாக இருந்தான். கோபத்திலும் ஆற்றாமையிலும் எல்லாரும் தன்னைவிட்டுப் போகும்படி கத்திவிட்டு மௌனமானாள். சமாதானத்திற்கு அவள் உடன்படாமலே அவ்விரவு கழிந்தது.

காலையில் கண்விழித்த அவள் அவனைக் காணாது கடலிடம் விசாரிப்பதைக் கண்ட காற்று, எங்களுக்குத் தெரியாது நீயே போய் தேடிக்கொள் என்றதும் கோபத்தில் நிதானம் தவறி வெறுப்பெனும்  தீயை உமிழத்துவங்கினாள். அவனை அவளிடமிருந்து பிரிக்க அவர்கள் சதி செய்வதாய் குற்றம் சாட்டியதும், அவ்வார்த்தைகளின் வெம்மை அவர்களை கோபமூட்ட எதிர் வாதம் செய்யத்துவங்கினர். சொற்களின் வீரியம் போதாமல், அவர்களின் வலிமையும் பிரயோகப்படுத்தியதால் அவ்விடத்தில் ஒரு பிரளயம் ஏற்பட்டிருந்தது. சொல்லவும் செய்யவும் இனி ஏதுமில்லை என்ற நிலையில், அவர்கள் நிதானத்திற்கு வந்த போது, அவள் மடியில் சில மரத்துண்டுகளும் சில பூக்களும் கிடந்ததைக் கண்டாள். அப்பூக்கள், அவன் முன்பு குறிப்பிட்ட தீவில் மட்டுமே கிடைக்கும் அரியவகை பூக்கள் என்பதைக் காற்றும் கடலும் அவளிடம் சொல்லவேயில்லை. 





அலினா தன்னைக் குறித்த சுயவிவரங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என மின்னஞ்சல் செய்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்பது மட்டும் அவர் தந்த தகவல்.

கதையை வாசித்து கருத்துக்களை பகிருந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.  

alinanathanf@gmail.com

                                                                                                              


Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு