ஒரு கவிதை…





நேற்று வகுப்பில் வழிகாட்டி  ஒரு கவிதையை எனக்கு படிப்பித்தார். தமிழ்ச் சூழலில் கவிதைகள் மொழியைச் சிக்கலாக்குவதன் வழியாக வாசகர்களை நெருங்கச் செய்வதில்லையோ என எப்போதும் தோன்றும். எளிய கவிதைகள் நவீனத்துவமற்றவை என்கிற நம்பிக்கை நம் சூழலில் பரவலாகவே நம்ப்பப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் முகநூலில் வாசித்த முத்துராசாகுமாரின் கவிதையொன்று மனதிற்கு நெருக்கமாய் இருந்தது.

“ஆற்றுவெள்ளத்தில் மிதந்துவந்த
தேங்காய் குழைகளுக்கு ஆசைப்பட்டு
புடைத்தவயிறோடு
மாண்டவள்தான் என் தாய்.
அவள் கருவினுள்
உயிரசைவுடனிருந்த என்னை
பழவிதையாக நெம்பியெடுத்து
ஆளாக்கினார் தந்தை .
கிறுக்குத் தாயோளி மகனென்ற
கிண்டல் ஒலியை கேட்கையிலெல்லாம்,
வைகையில் நீரடி மணலை
வாலாலேயே வட்டவீடாக்கும் மீன்களைத்
தனிமையில் வேடிக்கைப் பார்க்க
ஆழ மூழ்கிடுவேன்.”

            முதல் வாசிப்பில் நேரடியான அர்த்தங்களைத் தருவதாக இருந்தாலும் அடுத்தடுத்த வாசிப்பில் இந்தக் கவிதை நமக்குத் தரும் அனுபவமும் அர்த்தங்களும் அலாதியானது. மனிதர்களுக்கான பிரத்யேகத் தன்மை அவர்களின் செயல்களில் இல்லை,  குணங்களில் இருக்கிறது. ஆழ்மனதில் சிந்திப்பவற்றையெல்லாம் செய்ய விழைகிறவர்கள் அரிதானவர்கள். நிலத்தோடு நெருங்கிச் சென்று ஒரு கலைஞன் தனக்கான படைப்பை உருவாக்க நினைக்கையில்  மனிதர்களிடம் அவன் அதிகமும் காணமுடிவது குணக்கேடுகளையும்  இழிசொற்களையும்தான்.   
இந்தக் கவிதையின் பலம் இதன் எளிமை.  



rené philombe  எழுதிய l'homme qui te ressemble ( The Man Who Resembles You) என்னும் கவிதை வாசிக்க எளிமையானது. ஆனால் இந்தக் கவிதையின் பாடுபொருள் என்றென்றைக்குமாய் எல்லா சமூகங்களுக்குமானதாய் இருக்கிறது. rené philombe   கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர். 1930 ம் வருடம் பிறந்த இவர்  நாவல்,  கவிதைகள், கட்டுரைகளென ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். கேமரூன் நவீன இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரென புகழப்படும் இவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி மிக முக்கியமான செயற்பாட்டாளர். ( இவரைக் குறித்து இணையத்தில் நிறைய வாசிக்கக் கிடைக்கிறது, நண்பர்கள் தேடி வாசிக்கலாம். என் நோக்கம் இந்தக் கவிதையை அறிமுகப்படுத்துவதுதான். ( https://fr.wikipedia.org/wiki/Ren%C3%A9_Philomb%C3%A9 )
கேமரூன் பல வருடங்கள் ஃப்ரஞ்ச் ஆதிக்கத்தின் கீழிருந்த தேசம். ஒரு உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில் கேமரூன் அணி ஃப்ரான்சை வென்ற தருணத்தில் அவர்கள் அதனை எப்படி கொண்டாடி இருப்பார்களென இந்த இடத்தில் நினைத்துக் கொள்கிறேன். 

இந்தக் கவிதை நிகழ்த்தும் உரையாடலில் எந்த சலசலப்பும் இல்லை, ஆனால் மனதை ஊடுருவிச் செல்லும் ஆழுத்தம் உண்டு. தன்னை நிற ரீதியாக, இனரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக அதிகாரமிக்கவர்களாய் நினைத்துக் கொள்பவர்களின் இருதயங்கள் எத்தனை இறுக்கமானவை என்பதை தோலுரித்துக் காட்டுகிறது. ரெனே இயங்கிய காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கேள்வி மேற்குலகை நோக்கிய கேள்வியாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகை நோக்கிய கேள்வியாகவும் விரிகிறது. மனிதர்கள் எல்லோரும் ஒன்றே என நினைத்து வாழத் தடையாய் இருப்பது எது? ஒரு இனத்தைக் குறித்தான மொழியைக் குறித்தான பெருமிதங்கள். இந்தப் பெருமிதங்கள் உருவாக்குவதெல்லாம் வெறுப்பையும் பகைமையையும் தான்.


 மிக முக்கிய(கீழ் வருவது  வகுப்பில் படித்ததன் மூலமாய் செய்த அர்த்தங்களை மட்டும் உணர்த்தும் சுமாரான மொழிபெயர்ப்பு. இறுதியில் கவிதையின் ஆங்கில வடிவத்தைத் தந்துள்ளேன். )

                                    உன்னைப்போல் ஒருவர்

நான் உன் கதவுகளைத் தட்டுகிறேன்
நான் இருதயத்தைத் தட்டுகிறேன்
நல்லதொரு படுக்கைக்காக
நல்லதொரு உணவுக்காக
ஏன் என்னை மறுதலிக்கிறாய்?
என்னை அனுமதியுங்கள் சகோதரரே

என்னிடம் ஏன் கேட்கிறாய்
நான் ஆப்பிரிக்கனா
நான் அமெரிக்கனா
நான் ஆசியனா
நான் ஐரோப்பியனா
என்னை அனுமதியுங்கள் சகோதரரே

என்னிடம் ஏன் கேட்கிறாய்
என் மூக்கின் நீளத்தை
என் உதடுகளின் தடிப்பை
என் தோலின் நிறத்தை
என் கடவுள்களின் பெயரை
என்னை அனுமதியுங்கள் சகோதரரே

நான் கருப்பில்லை
நன் சிவப்பில்லை
நான் மஞ்சள் இல்லை
நான் வெள்ளை இல்லை
நானொரு மனிதன் வேறொன்றுமில்லை
எனக்காக திறவுங்கள் சகோதரரே

உன்னுடைய கதவுகளை எனக்காகத் திற
உன்னுடைய இருதயத்தை எனக்காகத் திற
எல்லாக் காலங்களுக்கும் நான் மனிதன்
எல்லா வானங்களுக்கும் நானொரு மனிதன்
உன்னைப்போல் ஒருவன்.

( மொழிபெயர்ப்பாளர்கள் எனது இந்த மொழிபெயர்ப்புக் கொலையை மன்னித்தருளவும். )



in english

http://learnspeak.blogspot.com/2006/09/lhomme-qui-te-ressemble-english.html

in french

https://www.youtube.com/watch?v=dNbSNWaPUGc 

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு