முதல் தகவல் அறிக்கை...

      க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே தெருவில் மேற்கண்ட இலக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் கேள்விப்பட்டு 15. 7. 2008 காலை ஆறு மணியளவில் தலமைக் காவலர்கள் அ.சுப்பிரமணி மற்றும் ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அப்பொழுதுதான் வீட்டுக் கதவை உடைத்து இறங்கி இருந்தார்கள். 
கிழவி நல்ல கருத்த தேகம், பல் இன்னும் வலுவாய் இருக்கிறது. செத்து நீண்ட நேரமாகியிருந்ததில் நாக்கு நீலமாகிவிட்டது.  இது விசயமாய் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு 15.7.2008 அன்று பதிவு செய்யப்பட்டது. மேலதிக கவனிப்பில் திருமங்கலம் நகர் அரசு மருத்துவர்கள் திரு . எஸ்.அழகன் மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோரின் பிரேத பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு ஒச்சம்மாள் அவர்களின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பின்வருமாறு.
( பிரேத பரிசோதனை அறிக்கை தனியாக இணைக்கப்பட்டுள்ளது.)
இதுவிசயமாய் உதவி காவல் ஆய்வாளர் திரு. கு.ரவீந்திரன் அவர்களின் மேற்பார்வையில் கீழ்வரும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.


( வாக்குமூலங்கள் யாவும் சாட்சிகளின் தெளிவான மனநிலையிலும் உடல்நிலையிலும் பெறப்பட்டவையே. )
தலமைக் காவலர் அ.சுப்பிரமணி மற்றும் எழுத்தர் உ.வ.ராமலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டன.
சாட்சிகள் :
1 . மு.ஆறுமுகம் , த/பெ : முத்தைய்யா.
2 . த. மாசிலாமணி, த/பெ :  தவசித்தேவர்.
3 . ரா. கண்ணப்பன் த/பெ :  ராக்கைய்யன்
4 . சு. கோபிகிருஷ்ணன் த/பெ : சுப்பைய்யாக்கோணார்
5 . ஒ. பேச்சி  த/பெ : ஒச்சாத்தேவர்.

1 . மு. ஆறுமுகம், க/எ 103/62 நாதமுனி தெரு என்பவரிடமிருந்து 16.7.2008 அன்று பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கை பின்வருமாறு.
சாட்சி ஆறுமுகம் கடந்த பதினெட்டு வருடங்களாக மேற்குறிப்பிட்டத் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருக்கிறார். மதுரை மேலமாசி வீதியில் சாலையோர துணிக்கடை வியாபாரியான இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கொலை, கொள்ளை முதலிய எந்தவிதமான சமூக விரோத செயல்களிலும் இதற்குமுன்பு இவர் ஈடுபட்டதில்லை. இறந்துபோன ஒச்சம்மாள் குறித்து அவர் சொன்னவை….


“ நான் இளவட்டமா இருந்தப்ப இந்த தெருவுக்குக் குடிவந்தம்ங்க… கிழக்கும் மேற்குமா இந்தத் தெருவுல மொத்தமா ஒரு முப்பதுவீடு இருக்கும். ரெண்டு மாட்டுவண்டி நிதானமா உருண்டுபோற அகலமிருக்கும் வீதி. இப்ப மாதிரியில்ல. இங்க குடியிருந்ததுல பாதிபேருக்குமேல பட்டுநூல்க்காரவுகதேன். தறிச்சத்தம் நாலுதெரு தாண்டி கேக்கும்.
”காஞ்சிப் பட்டெல்லாம்  இதுல கால்பங்கு வந்துடுமா
காசிப்பட்டெல்லாம் இது கண்ணெடுத்தும் பாத்துடுமா
பச்சப்பட்டுடுத்தி பவனிவரும் மீனாட்சி
மீனாட்சி மேனியில நான் நெஞ்ச பட்டுத்துணினு…”
அந்த வீட்டுப்பொம்பளைக பாட்டுப்பாடறதப் பாத்தா மத்த ஆளுக பொம்பளைகளுக்கெல்லாம் பொச்சுக்காப்பாதேன் இருக்கும். இந்த ஒச்சம்மா ஆத்தா மட்டுந்தேன் எல்லாத்தையும் அனுசரிச்சுப் போகும். ஏதாச்சும் சண்ட சத்தம்னா பாதிப்பேறு எனக்கென்னன்னு வேடிக்கப் பாப்பாக, இன்னும் சிலபேரு கதவப் பூட்டிக்கிட்டு இருந்துக்குவாக. இந்த ஆத்தா பகையாளி பங்காளின்னு யாரும் பாக்காம நாயம் பேசும். மகராசி, ஒத்தப் பொம்பளையா இருந்து பிள்ளய வளத்துச்சு. அப்பவே வயசு அறுவது இருக்கும். ஆனா தளராத உடம்பு. நல்ல உழைப்பு. சாணி தட்டு எருப்போடும், பால் பீய்ச்சி வீடுகளுக்குக் குடுக்கும், வெறகு பெறக்கிக் கொண்டு வந்து வீடுகளுக்குக் குடுக்கும். ரவையும் பகலும் ஏதாச்சும் வேல செஞ்சிக்கிட்டுத்தான் இருக்கும்.
ஒரு நல்ல நா ஒரு கெட்ட நாளுக்கு புதுத்துணிமணி உடுத்தாது, நல்ல சோறு ஆக்கித் திங்காது. ஏந்த்தா இப்பிடி இருக்கன்னு கேட்டா, “சீவி சிங்காரிச்சு எங்கப் போகப்போறோம்…எல்லாம் புருசன் போனதோட போச்சப்பா…” னு சொல்லிடும். வைராக்கியமா புள்ளைய படிக்க வெச்சுச்சு பாவம். ஒத்தப்பைய. நல்லாத்தேன் படிச்சான். சின்னவயசுலயே அப்பென் செத்துப் போனதால ஆத்தா வளத்த புள்ள பாருங்க… கருத்தா படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டான். மகன் வேலைக்குப் போனாலும் விடாம இந்த ஆத்தா எருத்தட்டவும் பால் பீய்ச்சி விக்கவுமாத்தான் இருந்துச்சு. ஒதுங்க இருந்த ஒரு ஓட்டுவீடா ரெண்டா ஆக்குச்சு. அப்பறம் இன்னும் கொஞ்சம் காசு சேத்து அந்த ஓட்டுவீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு காரவீடு கட்டுச்சு. சும்மா சொல்லக்கூடாது அப்பிடியொரு உழைப்பு. ஆம்பள மாதிரி வேல பாக்கும்ங்க… யார் கண்பட்டுச்சோ மகனுக்கு கல்யாணம் பன்னிவெச்சு ஆறேழு வருசமாகியும் புள்ள குட்டி இல்ல. அந்த பையந்தான் வீட்டுக்காரம்மாவ எந்த நேரமும் சொல்லி சொல்லித் திட்டுவான். இந்த ஆத்தா மருமகள  எங்கயும் விட்டுக் குடுக்காது. என்ன வேணும் ஏது வேணும்னு பாத்து பாத்து செய்யும்ங்க. மருமகளும் அப்பிடித்தான் இந்த ஆத்தா மேல அப்பிடியொரு பாசம். எந்த காலத்துலயும் கோயில் குளத்துக்குன்னு போகாத கிழவி மருமக கூப்புட்டா எதுக்கும் மாட்டேன்னு சொல்லாம கூடப்போவும். அந்தப்பையன் ”கூட வேல பாக்கற எல்ல்லோரும் என்னய கேவலமாப் பேசுறாய்ங்க… ஒரு புள்ளப் பெத்துத்தர வக்கில்லாட்டி எதுக்குடா பொண்டாட்டின்னு கேக்கறாங்க..” இப்படி சொல்லிச் சொல்லி இன்னொரு கல்யாணம் பன்னி வெய்க்கச் சொன்னான்.  அந்த ஆத்தா என்ன சொன்னாலும் காதிலயே வாங்கிக்காம இருந்துக்கிச்சு. என்ன நெனச்சானோ திடீர்னு ஒருநா ஊர்ல போயி சொந்தத்துல ஒரு புள்ளயப் பாத்துக் கெட்டிட்டு வந்துட்டான். அது இல்லாத வீட்டுப் புள்ள. காடு மேடுன்னு ஆடு வளத்துத் திரிஞ்ச புள்ள. நல்லா வாழ்ந்தா போதும்னு வந்திருச்சு. அன்னியோட அந்த ஆத்தா மகன தல மொழுகிடுச்சு. மூத்த மருமகள தன்னோடு வெச்சுக்கிட்டு மகன் வீட்டுக்குள்ள கடைசி வரயிலும் நொழயவே இல்ல. இத்தனைக்கும் ஓட்டு வீட்ல கெழவியும், பக்கத்துல காரவீட்ல மகனுமா இருந்தாக. ஆனாலும் பேசவே இல்ல, கெழவி மருமகளயும் பேசவிடல. புதுசா கல்யாணங் கட்டிட்டு வந்த புள்ள இந்த கெழவிகிட்ட நாலு நல்ல வார்த்த கேட்டுட மாட்டமான்னு தவியா தவிப்பா பாவம். அந்த ஆத்தா இல்லாத சமயத்துல மூத்த மருமகதே போயி அந்தப் புள்ளகிட்ட பேசும். இப்படி எந்தப் பிரச்சனையுமில்லாமா போனதுதான் ரெண்டாவது வந்த மருமக ஒரு புள்ளயப் பெத்துப்போடவும் அதுவரைக்கும் கெழவி பேசாதான்னு கெடந்தவ அந்தக் கெழவிய எங்கயாவது துரத்தனும்னு ஆத்தரப்பட ஆரமிச்சிட்டா.


      இத்தன வருசம் தவங்கெடந்து ஒரு வாரிசு வந்திருக்கு, என்னன்னுகூட கேக்கலயேன்னு ஆத்தாமேல மகனுக்கும் கோவம். பொண்டாட்டியக் கூட்டிட்டு மதுரைக்கு குடிபோயிட்டான். கெழவி சாகவாசமே வேணாம்னு. மூத்த மருமக என்ன நெனச்சதோ பாவம் நான் எங்க ஆத்தா வீட்டுக்குப் போறேன்னு அதுவும் போயிடுச்சு. கெழவி இத்தன வருசத்துல எதுக்கும் கலங்காம இருந்து அன்னியோட தளர்ந்து போச்சு. பத்து நா முந்தி பெரிய மருமகளுக்கு மேலுக்கு சொகமில்லன்னு பாக்க போச்சு. ரெண்டு நாள்லயே அந்தப் புள்ள செத்துப்போனா. அன்னிக்கு வந்து விழுந்த கெழவிதான் வீட்ட விட்டு வெளிய வரவே இல்ல. பக்கத்துல யார்கிட்டயும் பேசவும் இல்ல, புருசன் செத்தப்பக்கூட கலங்காமக் கெடந்த கெழவிக்கு மருமக போனத தாங்க முடியல.  நேத்து இப்பிடி செஞ்சுக்கிடுச்சு பாவம்.


      2 . க/எ 105 / 64 என்ற இலக்கத்தில் அதே தெருவில் வசிக்கும் த. மாசிலாமணி என்பவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்.


“என்னன்னு சொல்றதுங்க… இந்தக் கெழவி ஒரு கெட்டெண்ணம் புடிச்ச கெழவி. எந்த நேரமும் யாராயவது நோண்ட்டிக்கிட்டே இருக்கும். பக்கத்து வீடு, எதுத்த வீடுனு எல்லார் கிட்டயும் ஏதாச்சும் காரணத்த வெச்சு சண்ட போட்டுக்கிட்டேதான் இருக்கும். அது கண்ணு முன்னால யாரும் நல்லா இருந்துரக்கூடாது, அதுக்குத் தாங்காது. பெரிய மருமகள நல்லா பாத்துகிடுச்சுன்னு சொல்றதெல்லாம் சும்மாங்க. நல்லா அந்தப் பிள்ளய வெச்சு வேல வாங்கி எருத்தட்ட, பால்பீய்ச்சன்னு எல்லாத்துலயும் காசு பாத்துச்சு. எம்புட்டு காசு இருந்தாலும் பத்தாது அந்தக் கெழவிக்கு. அதனாலதேன் பெரிய மருமக ஓடிப்போயிருச்சு. என்னதான் கோவமா இருந்துட்டுப் போகட்டும் வீட்ல தவங்கெடந்து ஒரு வாரிசு வந்திருக்கு ஒரு வார்த்த என்னன்னு கேக்கனுமே?... அம்புட்டு தூரத்துக்கு வீம்பு அந்த ஆத்தாவுக்கு.


      அந்தப்பையன் ரொம்ப நல்லவன், முடிஞ்ச மட்டிலும் ஆத்தாள தாங்க்கு தாங்குன்னு தாங்குவான். வாங்குற சம்பளத்த எல்லாத்தயும் ஆத்தா கிட்டயே கொடுத்துடுவான். என்ன செய்யும்னு தெரியல அம்புட்டுக் காசையும்?. பொறுத்துப் பொறுத்துப் பாத்தான் மகன், கெழவி திருந்தாதுன்னு கெளம்பிப் போயிட்டான். இந்தக் கெழவி கிட்ட யாரும் இருக்க முடியாதுங்க. புருஷங்காரனே இது இம்ச தாங்காமதான சீக்கிரமா போய்சேந்துட்டாரு. அப்பவும் ஒரு சொட்டுக் கண்ணீர் வரனுமே… என்ன பொம்பளையோ? தெய்வம்ன்னு ஒன்னு இருக்கப்போயிதான இன்னைக்கு கேட்டிருக்கு… நாலு பேருக்கு நல்லது நெனைக்கலைன்னா இப்பிடி சாவுதேன் வரும்.”


( மாசிலாமணியின் இந்த வாக்குமூலம் குறித்து இன்னும் சிலரிடம் விசாரித்த போது, ஒச்சம்மாள் காரவீடு கட்டத்துவங்கும் போது பில்டிங் காண்டாக்டரான இவரை விடுத்து வேறு ஆளை விட்டு வீட்டைக் கட்டியதால் கெழவியின் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்று தெரிய வருகிறது. இந்த முதல் தகவல் அறிக்கைக்கு இது அவசியமற்றதுதான் என்றாலும் மேற்கண்ட வாக்குமூலத்தின் நீட்சியாய் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. )


      3 . க/எ 103 / 65 என்ற இலக்கத்தில் அதே தெருவில் வசிக்கும் திரு. ரா. கண்ணப்பன் என்பவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம்.


      ” நான் பக்கத்துல சிட்கோவுல ஒரு கம்பெனில தறி ஓட்றேங்க. டி.புதுப்பட்டி சொந்த ஊர். குடும்பத்தோட இந்த தெருவுக்குக் குடிவந்து பத்து வருசமாச்சு. இந்த ஆத்தாவோட ஒரு ஓட்டு வீட்ல ஆத்தாவும் இன்னொரு வீட்ல நாங்களும் இருந்தோம். அதனால கிட்டத்துல இருந்து நெறயப் பாத்துருக்கோம். ஒரு ஆறு வருசம் அந்த வீட்ல இருந்தோம். சொந்த பந்தம்னு யாரும் வந்து பாத்துட்டுப் போனதில்ல, இந்த ஆத்தாவும் யார் வீட்டுக்கும் போனதாத் தெரியல. கள்ளவீட்டு ஆளுகன்னு சடார்னு ஒட்டிக்கிரும். மத்த ஆளுகன்னா கொஞ்சம் தூரமாத்தான் வெச்சிருக்கும். நாங்க கோணார் வீட்டு ஆளுக, எங்ககிட்ட பெருசா பேச்சு வார்த்த எல்லாம் வெச்சுக்காது. அனாவசியமா நாங்களும் பேசறதில்ல. அந்த ஆத்தாவோட மூத்த மருமகளும் ஆத்தா மாதிரிதாங்க. பத்தாள் வேலைய ஒரு ஆளாச் செய்யும். புள்ள இல்லைன்னு அதுக்கு அம்புட்டு கவல. யாரு என்ன செஞ்சுட முடியும். விதிய மாத்த முடியுமா? பலநாள் நான் செகேண்ட் ஷிஃப்ட் முடிச்சு வர்றப்போ அந்த அக்கா மட்டும் தூங்காம நடந்துக்கிட்டு இருக்கும். எனக்கு நல்லா யாவகம் இருக்குங்க ஒரு நா இப்பிடித்தேன் செகேண்ட் ஷிஃப்ட் முடிச்சு வர்றேன் அந்த அக்கா நடந்து குடுத்துக்கிட்டு இருக்கு, ரோட்டுக் கரண்ட்டும் இல்லாம தெரு லைட் எரியல. நான் தெருவுல பாதித்தூரம் வரும்போதே யாரோ பாடற மாதிரி சத்தம்.


“மார்கழி மாசத்துல
மங்காத நேரத்துல
சரம் சரமா பூமால
கட்டிப்போட்டேன் ஆத்தாளுக்கு
ஆடி மாசக் கெழமயெல்லாம்
ஆறுவக சோறு செஞ்சு
படயலும் போட்டுப் பாத்தேன்
பந்தல்குடி கருப்பனுக்கு
வருசம் பல ஆச்சு
என் வாழ்க்கையும் வாழ்க்கையும் பாழாச்சு
பாவி வயித்துல ஒரு புழு பூச்சி வளரலயேன்னு…”


நான் தெருவுக்குள்ள வர வர பாட்டுச் சத்தம் மட்டும் கிட்டத்துல கேட்டுக்கிட்டே இருக்கு. என்னடா இது இந்த நேரத்துல முனி கினியா இருக்குமோன்னு நானும் பயந்துகிட்டே வந்தா இந்த அக்கா. “என்னக்கா தூங்கலையான்னு கேட்டா.’ எதுவும் பேசாம உக்காந்திருக்கு. இது எதுக்கு நம்மளுக்குக் கெரகம்னு நானும் விட்டுட்டேன். அந்த ஆத்தாவுக்கும், அது மருமகளுக்கும் முனியோட பாதம்ங்க. யாரையும் கிட்ட அண்டவிடாது. நல்லாப் பாத்துருக்கேன் ஒச்சம்மா ஆத்தாவுக்கு நல்லா பாதம் பெருசு பெருசா இருக்கும். எல்லாம் கடுசா உழச்சதால வந்ததுன்னு சொல்றாங்க, அப்பிடியில்ல முனியோட லட்சணம் அது. முனி ஆம்பளையாத்தான் இருக்க வெய்க்கும்ங்க. அதனாலதேன் அந்த அக்காவுக்கு புள்ளயே பொறக்கல. ஒச்சம்மா ஆத்தா கொஞ்சம் சிடுசிடுன்னு இருந்தாலும் யார்கூடயும் வம்புக்கெல்லாம் போய் நிக்காது. அந்த அக்காவும் அப்பிடித்தான். பெறகு இப்ப இருக்கற வீட்டுக்கு நான் வந்ததுக்கு அப்பறம் பெருசா பேச்சு வார்த்த இல்லங்க. என் வீட்டுக்காரிக்கும் அந்த அக்காவுக்கும் கொஞ்ச நல்ல நெருக்கம். அவதேன் அப்பப்ப போயி பாத்துட்டு வருவ. இன்னும் ஒரு விசயம் சொல்லனும். ஆனா அதச் சொன்னம்னா எங்க தப்பா ஆயிடுமோன்னு இருக்கு. இத வாய்த் தகவலா மட்டும் வெச்சுக்கங்க. எழுத்துல பதிய வேணாம். ‘அந்த ஆத்தாவுக்கு நெசத்துல பிள்ள இல்லங்க… இந்தப்பையன் அந்த ஆத்தாவோட மதினியா மகன். யாருக்கும் இந்த சமாச்சாரம் தெரியாது. ஆத்தாவுக்கும் அது வீட்டுக்காரருக்கும் மட்டுந்தேன் தெரியும். மதினியாளுக்கு ஆறு புள்ளைக. அதனால இந்தப்பையன் பொறந்தொண்ணயே போயித் தூக்கிட்டு வந்துடுச்சு. மகனோட இந்த ஊருக்கு வந்ததுன்னுதான் எல்லோருக்கும் தெரியும், மத்தபடி இந்த விசயம் யாருக்கும் தெரியாது. மகென் இப்பிடி போயிட்டானேன்னு ஆத்தா மாட்டாம ஒருநால் பெரிய மருமககிட்ட இந்த விசயத்த சொல்லி இருக்கு. பொம்பளக்கி ரகசியத்த மனசில வெய்க்கிறது மூக்குல ஒட்டுன பீயாட்டம்ல, தூக்கி கீழ போடனும் இல்ல வேற யார் காதிலயாவது போடனும் அந்தக்கா என் வீட்டுக்காரி காதுல போட்டுருக்கு. அந்த அக்காவும் விட்டுட்டுப் போயிருச்சுங்கறதத்தான் ஆத்தாவால தாங்கிக்க முடியல பாவம். இப்பிடி செஞ்சுகிடுச்சு. இது விசயமா எனக்குத் தெரிஞ்சது அவ்ளோதாங்க.


      4 .க/எ 100 / 60 என்ற இலக்கத்தில் வசிக்கும்  சு.கோபிகிருஷ்ணன் என்பவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம்.


      என்பேரு கோபிங்க… நான் சின்னப்புள்ளையா இருக்கறப்போ ஒச்சம்மா ஆத்தா கிட்டதேன் வளந்தேன். எங்க வீட்ல எல்லாம் வேல வெட்டிக்கின்னு போயிருவாங்க. ஆறுகண் பாலத்த ஒட்டியிருக்க சுண்ணாம்புக் காளவாசல் எங்களோடதுதேன். எங்க அப்பா வெச்சிருந்தாரு, இப்ப நான் பாத்துட்டு இருக்கேன். எட்டு வயசு வரயிலும் நானும் ஒச்சம்மா ஆத்தா மகனும் ஒன்னாவேதான் திரியிவோம். அங்கயே சாப்பிட்டு அங்கயே தூங்குவேன். ஆத்தாவுக்கு எல்லாரையும் விட என்மேல பாசம். ஒருநா ரெண்டு நா ஊருக்கு எங்கயாவது போயிட்டா தவியா தவிக்கும்னு எங்க அம்மா சொல்லும். சின்னப்புள்ளைக கிட்ட வேல வாங்குதுன்னு எல்லாரும் சொல்வாங்க. அப்பிடியெல்லாம் இல்ல. நாங்களே போயி தட்டி வெச்ச எருவ தூக்கிட்டு வந்தாக்கூட எங்களத்தேன் திட்டும். எம்புட்டுத்தூரத்துக்கு கடுமையா வேல செய்யிதோ அம்புட்டுத்தூரத்துக்கு சின்னப்புள்ளைக கூட விளயாடவும் செய்யும். இப்பிடித்தேன் ஒருநா பெட்ரோல் பங்க்குக்கு பக்கத்துல ஒரு புதுவீடு கட்டிட்டு இருந்தாங்க. அங்க நாங்க எல்லாம் விளையாடிட்டு இருந்தோம். முள்ளுக்காட்டுக்குள்ள இருந்து நல்லா ஒரு எட்டு ஒம்போது அடிக்கு ஒரு பெரிய நல்ல பாம்பு. எல்லாரும் தெறிச்சு ஓடறோம். நல்ல சொளகு மாதிரி தலைய விரிச்சுப் படம் எடுத்துட்டு நிக்கிது பாம்பு. எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியல \ஒச்சம்மா ஆத்தா சட்டுன்னு பாம்ப கையோட புடிச்சுத் தூக்கிடுச்சு. கொஞ்சமாச்சும் பயம் இருக்கனுமே. முகத்துல சின்ன சுருங்கல்கூட இல்ல. புடிச்ச பாம்ப என்னவோ பொம்மையக் காட்டற மாதிரி சின்னப் புள்ளைக மூஞ்சிக்கு நேரக்காட்டி விளையாட்டு வேறக் காட்டுது. நல்லக் கழுத்த மட்டும் கெட்டியா புடிச்சிருக்கும் போல பாம்பு உடம்ப அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுது. அப்பிடியே தூக்கிட்டுப் போயி எட்டாவுல காட்டுக்குள்ள எறிஞ்சிட்டு வந்திருச்சு. தெருப் பொம்பளைக எல்லாம் சேந்து இன்ன பேச்சுன்னு இல்ல. எதுக்கும் பதில் சொல்லல, அன்னயில இருந்து யாரும் சின்னப்புள்ளைகள ஒச்சம்மா ஆத்தாகூட விளையாட வுடறதில்ல.


      பொழுசாயம் வேல முடிஞ்சு வந்த எங்கம்மாவும் அப்பாவும் நடந்தத கேட்டுட்டு ஆத்திரத்தோட கெழவிக்கிட்ட போயி சண்ட போட்டாங்க. அப்பவும் கெழவி எதுக்கும் அசரல. எங்கம்மா கடைசியா கெளம்பறப்போ நீயெல்லாம் பொம்பளையா இருந்தாத்தான, அதுவும் இல்லாம இதுவும் இல்லாம இருந்தா உருப்படுமா? வாடான்னு என்ன இழுத்துட்டு வந்திருச்சு. எனக்கு அப்போ என்ன ஏதுன்னு புரியல. ஆனா எதுக்குமே அழுவாத ஒச்சம்மா கெழவி அன்னக்கி முழுக்க அழுதிருக்கு. சிலபேருக்கு பேசும் போது குரல் மாதிரியாவும் அழும்போது வேற மாதிரியாவும் இருக்கும்னு அன்னக்கித்தான் பாத்தேன். சத்தமா பேசறப்போகூட எனக்குத் தெரிஞ்சிருக்கல, அன்னைக்கி அழுதப்பதான் ஒச்சம்மா ஆத்தா குரல் ஆம்பளக்குரலா இருந்ததப் பாத்தேன். கோவிலுக்கு நேத்திக்கடன் போட்டு அலகு குத்தறப்ப சாமி வர்றப்ப சத்தம் பல சமயம் ஆம்பள சத்தமா பொம்பள சத்தமான்னு தெரியாத அளவுக்கு இருக்குமே அந்த மாதிரிதான். அன்னயிலருந்து கெழவி வீட்டுக்குப் போறதில்ல.


      அப்பறம் மகனுக்குக் கல்யாணம்னு வந்து சொன்னப்போ என்னதான் பகைன்னாலும் நம்மளப் பாத்துக்கிட்ட பொம்பளைன்னு இறங்கி கூட இருந்து எல்லா வேலைகளையும் பாத்தேன். அந்த ஆத்தாவோட சொந்த பெரியப்பன் மகளத்தேன் மகனுக்கு கெட்டி வெச்சது. அந்த மதினியும் சும்மா சொல்ல முடியாது. அத்தையத் தாங்கு தாங்குன்னு தாங்கும். என்ன ஒரு புள்ளகுட்டின்னு ஆயிருந்தா நல்லா இருந்திருக்கும். அந்த  மயினியும் கோயில் குளம்னு சுத்திப் பாத்துச்சு, ஒன்னும் விருத்டியாகல, ஆகக்கடைசியா இன்னொரு கல்யாணத்தப் பன்னிக்கிட்டான் அவன். இதுல ஒம்ப ஒத்துமையா இருந்த அந்த கெழவிக்கும் மயினிக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியல, ரொம்பநாள் கெழவிகூட அது இருக்கல. இந்த வீடுன்னு மட்டும் இல்லாம அந்த ஆத்தா வம்பாடுபட்டு உழச்சு கொஞ்சம் எடமும் வாங்கிப் போட்டுறுக்கு. இந்த புதுசா வந்த சிரிக்கி சொத்து எதுவும் மூத்த மருமகளுக்குப் போகக்கூடாதுன்னுதான் இவ்வளவையும் செஞ்சிருக்கா. இப்பக்கூட கெழவி தானா தூக்கு மாட்டி இருக்கும்னு நம்ப முடியல, புருஷனும் பொண்டாட்டியுமா சேந்து செஞ்சிருப்பாங்களோன்னு தோணுது… எது எப்படியோங்க இத யார் செஞ்சாலும் அந்தப் பாவம் சும்மா விடாது. காலம் பூரா ஒழச்சு ஒழச்சு ஓடத்தேஞ்சா மனுஷி ஒச்சம்மா… சின்னவயசுல நீயெல்லாம் பொம்பளயா இருந்தாத்தான தெரியப்போகும்னு எங்கம்மா கேட்டதுக்கு எனக்கு அர்த்தம் தெரியல. ஆனா, கடைசியா அந்த மயினி வீட்ட விட்டுப் போறதுக்கு முன்ன கெழவி ஏதோ சொன்னதுக்கு “நான் ஒன்னும் ஒன்னயா மாதிரி ஒன்னுக்குமத்த சிரிக்கி இல்ல, ஒரு நா இல்ல ஒருநா ஒரு புள்ளயப் பெத்துப் போடறனா இல்லயா பார்னு” தெருவுல நின்னு கத்திட்டுப் போச்சு. அந்த நிமிசம் ஒச்சம்மா ஆத்தா எப்பிடி நின்னுச்சுன்னு நெனச்சா இன்னும் உசுரு கருகுதுங்க…”


      க/எ 108 / 68 என்ற இலக்கத்தில் வசிக்கும் ஒ.பேச்சியிடம் பெறப்பட்ட வாக்குமூலம்.


       ”நல்ல விசயத்தகப் பத்தி கேட்ட சொல்லலாம், கெட்ட விசயத்த என்னண்டு சொல்றதுங்கய்யா?.. மனுசன் வாழ்ற வரக்கிம்தான் மரியாத, செத்துப்போனா பொணமாக்கூட இன்னக்கில்லாம் மதிக்கிறதில்ல. இந்த மனுஷிய உசுரோட இருக்கப்பவே அம்புட்டுபேரும் பேசியே கொன்னுட்டாங்க. ’எள்ளுன்னு நெனச்சு எடுத்துப் பாக்கவும் நாதியில்லாம உமின்னு நெனச்சு ஊதிப்பாக்கவும் நாதியில்லாம’ வாழ்ந்த சீவனுங்க அந்தக் கெழவி. பொறந்து வளந்து சொந்த மண்ண விட்டு வரும்போது ஒடம்புல தெம்பயும் கூட புருசனயும் கூட்டிக்கிட்டுப் பிள்ளயோட இந்த ஊருக்கு வர்றப்போ ஒதுங்கறதுக்கு ஒரு குடிசகூட இல்லாமத்தான் இருந்தா பாவம். ரெண்டு பேர் கால்நீட்டிப் படுக்க முடியாத அளவுக்கு ஒரு குடிச, அதுக்குள்ளதான் குடும்பம் நடத்துச்சு. யாருக்கும் அந்தக் கெழவியோட பூர்வீகம் தெரியாது. எங்க ஆத்தாவுக்கும் அந்த ஆத்தாவுக்கும் சமவயசு. ஆனா எங்காத்தா நாப்பது வயசுல சீக்கு வந்து படுத்தமாதிரி அந்த ஆத்தா படுக்கல. ஒருநா ஒருபொழுது மேலுக்கு ஒன்னு காலுக்கு ஒன்னுன்னு அசரனுமே?... அந்த ஆத்தாவோட வீட்டுக்கார அய்யா இருக்காரே… விடிஞ்சா சாராயம், அடஞ்சா கூத்தியான்னு திரியிவாரு மனுஷன். வெளில எம்புட்டு சண்டியர்த்தனம் செஞ்சாலும் வீட்டுக்கு வரும்போது தெருமுனைலயே சத்தங்காட்டாம சுருக்கிக்கிட்டுத்தான் வருவாரு. இந்த ஆத்தா அந்த அய்யாவ கிட்டத்துலயே விடாது, எல்லாரும் இந்த ஆத்தாள பொம்பளயே இல்லைன்னு இன்னைக்கு நாக்குல பல்லப் போட்டுப் பேசுதுக, நாலு வயசுல இருந்து நாயா வேல பாத்த ஒடம்பு ஆம்பளையா இருந்தா என்ன? பொம்பளையா இருந்தா என்னங்கய்யா?... ஒரு நல்லது தெரியாது கெட்டது தெரியாது, சந்தோசந் தெரியாது. ஒழைக்கும். என்ன வேலைன்னாலும் செய்யும். சொந்த பந்தம்னு இருந்ததெல்லாம் பெருசா இந்தக் கெழவியக் கண்டுக்கல. இந்த கெழவனுக்கு ரெண்டாவது சம்சாரந்தான் கெழவி. மாசத்துல பத்து நா அந்த பொண்டாட்டிக்கு போயிடுவாரு. இந்தப் பையன் இருக்கானே… செலபேரு அது கெழவியோட மதினியா மகன்னு சொல்வாங்க. இல்லங்கய்யா அது மூத்த சம்சாரத்தோடு மகன். ஆனா தான் யார் புள்ளன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாத அளவுக்குத்தான் மகனயும் வளத்திருக்கு பாவம்.
      சீக்கு வந்துதேன் அந்த பெருசு செத்தாரு. ஊர்ல எல்லோரும் இந்தக் கெழவி வெசத்தக் கொன்னான்னு பேசிக்கிறாங்க… இல்லத் தெரியாமத்தேன் கேக்கறேன், ஆட்டையும் மாட்டையும் மடில போட்டு உண்ணி புடுங்கி அதுகளுக்கு ஒன்னு வந்திருக்கூடாதேன்னு நெனைக்கிற பொம்பளைக்கி என்னண்டு சொந்த புருசனக் கொல்ல மனசு வரும்?... கோவப்படத்தெரியாத மாதிரியே பாசங்காட்டவும் தெரியாத சீவனுங்க.. எங்காத்தாகாரி சொல்லும், ”’வயசுல கல்லும் மண்ணும் சுமந்த ஒச்சம்மா பட்ட கருமாயம் கொஞ்ச நஞ்சமில்லடி, எல்லாருக்கும் ஒருகாலம் இல்லாட்டி ஒரு காலம் நல்லா இருக்கும், இவளுக்குத்தேன் பாவம் கட்ட வேகற காலம் வரக்கிம் தீரல…” என்னதான் பொம்பள தெறமயா இருந்தாலும் வீறாப்பா இருந்தாலும் ஒரு புள்ள நம்ம வயித்துல பொறக்கலையேன்னு கவல இருக்கத்தேன் செய்யும். ஆனா ஒச்சம்மா சொல்லும் “இந்த வீதில இருக்க அம்புட்டும் எம் புள்ளைகதான்னு…” நாக்குல இருந்து வர்ற வார்த்தையா இருக்காது எதுவும். ஆனா அது ஆம்பளையா பொம்பளையான்னு காலம் பூரா இந்த தெரு சனம் பேசிப்பேசியே அவள யார்கூடவும் அண்டவிடல. இதே தெருவுல மொக்கையாத்தேவர்னு ஒரு பெருசு இருந்துச்சு கொஞ்சம் வருசம் முந்தி. கள்ளவீட்டு ஆளுதேன். அந்தக்காலத்துல ரொம்ப தாட்டியமா இருந்த ஆளு. காலம் போன காலத்துல எல்லாம் அம்போன்னு விட்டுட்டு போக, கடைசி காலத்துல இந்தக் கெழவிதேன் கஞ்சி ஊத்துச்சு. யாரும் சொல்லி இதச் செய்யல. நம்மள மாதிரி அனாதயா கெடக்குற உசுருன்னுதேன் இது அக்கற. இது மத்தவங்கள உறுத்துச்சோ இல்லயோ? மகன உறுத்திருச்சு… எங்கோ இருக்கற காச எல்லாம் கெழவி இப்பிடியே தீத்துருமோன்னுதேன் வாரிசு இல்லன்னு இன்னொரு கல்யாணம் கட்டினான். ஒரு வாயிக் கஞ்சில என்ன வந்துரும் பாருங்க. ஒருநா கெழவி கிட்ட இருந்துக் கஞ்சியப் பிடுங்கிட்டு “அந்தாளு என்ன உன் புருஷனா…வக்கனையா ஆக்கிப் போடறன்னு’ சண்டைக்கிப் போயிட்டான். கெழவிக்கு ஆத்திரம்னா அப்பிடியொரு ஆத்திரம் அவன அடிக்கப் போயிருச்சு. “வாக்கப்பட்ட புருசனுக்கே பொண்டாட்டியா இருக்க துப்பில்ல, இதுல காலம் போன காலத்துல எதுக்கு இதெல்லாம் உனக்கு” அவன் நேரா சொல்லாட்டியும் என்ன சொல்றான்னு கெழவிக்குப் புரிஞ்சு போச்சு. அதோட அந்த வீட்ட விட்டு வெளிய வந்தவதேன். அப்பறம் பெரிய மருமககூட இருந்துச்சு. அந்தப் பிள்ளயும் போகவும்தேன் கடைசி கொஞ்சநாள் நான் பாத்துக்கிட்டேன்.


      பேரப்புள்ளயத் தொட்டுக் கொஞ்ச முடியலையேன்னு எத்தன நாள் அழுதிருக்கும்? ஒருநா மத்தியானமா இந்தக் கெழவிக்கு சாப்பாடு குடுக்க வீட்டுக்குப் போனேன். இது சன்னல் வழியா தன் மகன் வீட்டப் பாத்துக்கிட்டு இருக்கு. என்னடான்னு பாத்தா பின்வாசல்ல உக்காந்து ரெண்டாவது மருமக குழந்தைக்கி பால் குடுத்துட்டு இருக்கா.. நானும் இந்தக் கெழவி என்னதேன் செய்யிதுன்னு பாக்கறேன். கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே இருந்த கெழவி என்ன நெனச்சுச்சோ சன்னல மூடிருச்சு. கொஞ்ச நேரத்துல உள்ள இருந்து அந்தக் கெழவி விசும்பற சத்தம். லேசாக் கதவத் தொறந்து பாத்தா மாரப் பிடிச்சுக்கிட்டு அழுவுதுங்க… நான் உள்ள போனது பேசுனது எதுவும் அது காதுல விழுவல…. இன்னக்கி வரயிலும் அந்த அழுக யாவகத்துல இருக்கு.


      ஒச்சம்மா ஆத்தா மகன் வீடு மாறிப்போனதில இருந்தே இந்தக் கெழவி ஒரு மாதிரிதான் இருந்துச்சு. வீடு மாறிப்போற நாலு நாள் முந்தி ஏதோ சின்னத் தகராறு. தெருச்சனமே வேடிக்க பாக்க “நீயா பெத்த அக்கற பொத்துக்கிட்டு வருது…” காறித்துப்பாத குறையா சொல்லிட்டான். மூத்த மருமக, எளய மருமகன்னு ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் போயிட்டாளுக. நடு ரோட்ல நின்னுட்டு இருக்கு இந்த ஆத்தா. யாரும் ஒரு வார்த்த சொல்லல. இவன் வீடயும் மாத்திட்டு போயிட்டான். கடைசியா கெழவி இருக்கற வீட்டயும் அவன் கேக்கவும்தான் அதுக்குத் தாங்கல. “வம்பாடுபட்டு ரத்தத்தச் சிந்தி நான் கட்டுன வீடுடா… இங்க இருந்து போகச் சொன்ன, ரயில்ல விழுந்து செத்துருவேன்னு…” கெழவி கதறுனா… பதிலுக்கு அந்த சிரிக்கி மகன், “அந்த மாதிரி செஞ்சு தொலச்சிடாத, அப்பறம் உன் பொணத்த எடுக்க நான் தெண்டம் கட்டனும் தொலஞ்சுன்னு…” சொல்லிட்டுப் போயிட்டான். ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்னு சும்மாவா சொல்லி இருக்காங்க… என்னமோ எல்லாம் அந்த மாரித்தாயிதேன் கேக்கனும். நல்ல வாழ்க்கையும் வாழல, நல்ல சாவும் சாகல… என்ன மனுச பொறப்போ?...”


      தற்கொலை வழக்கிற்கு மேற்கண்ட வாக்குமூலங்கள் போதுமானவை என உதவி ஆய்வாளரின் அறிவுரையின் பேரில் முடித்துக் கொள்ளப்பட்டது.
மேலும் திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணக்கு வரும் திங்கள் கிழமை எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


இவண்.
தலமைக் காவலர் அ.சுப்பிரமணி மற்றும்
எழுத்தர் உ.வ.ராமலிங்கம்.
திருமங்கலம் நகர்க் காவல் நிலையம். 

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.