அத்தை… (ஃபெமினா அக்டோபர் இதழில் வந்த கதை....)

             அவர்களிருவரையும் சற்றுமுன்பாக இறக்கிவிட்ட பேருந்து சாத்தூர் ரோட்டில் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்தது. பொசுங்கும் வெயிலில் செருப்பில்லாத கால்களோடு அந்த சுடுமணலில் நடப்பதற்கு யாருக்குத்தான் பொறுக்கும்?. என்றாலும் சாமி காரியமென்பதால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை, அழகருக்கு இரண்டு வயது இருக்கும்போது போட்டிருந்த நேர்த்திக்கடன். எட்டு வருசம் கழிந்து இப்பொழுது அவனுக்கும் பத்து வயதாகிவிட்டது. இப்பொழுதுதான் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வாய்த்திருக்கிறது அவன் அம்மாவிற்கு. ஒரு பொழுதிற்குள் போய்த் திரும்புகிற தூரத்தில்தான் இருக்கன்குடியும் செவல்பட்டியும். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் போய்த்திரும்பிட முடிகிறதா என்ன? வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கே அம்மாவிற்கு நேரம் சரியாயிருக்கும். குடை ரிப்பேருக்குப் போகிற அப்பா வருவதும் வாரத்திற்கு ஒருமுறைதான். பிறகு எங்கிருந்து இதற்கெல்லாம் நேரமிருக்கும். இன்று வந்ததுமேகூட ஏதோ அந்த இருக்கன்குடி மாரியம்மன் புண்ணியம்தான்.
      
     எப்பொழுதும் போலவே இன்றைக்கும் அம்மா ரேசன் கடைச் சேலையைக் கட்டியபொழுது அழகருக்குக் கொஞ்சம் ஆத்திரமாகத்தான் இருந்தது. பல்லைக்கடித்துக் கொண்டு ‘இன்னைக்காச்சும் வேற சேலயக் கெட்ட வேண்டிதானம்மா..?..’ அம்மா அவனை சட்டையே செய்யாமல். ‘ஆமா பெரிய சீமான் வீட்ல பொறந்திருக்கேன் பாரு…புதுசு எடுத்து உடுத்த…செத்தாலும் எனக்குக் கோடித்துணி போடறதுகூட பழசுதேன்…’ என அலுத்துக் கொண்டாள். அவன் எதுவும் பேசாமலிருந்தான். முகம் சுருங்கி இத்தூனூண்டாய்ப் போனது. பையன்கள் எவ்வளவோ நாட்கள் அம்மாவையும் இவனையும் ரேசன்கடை உருப்படிகள் என கிண்டலடித்திருக்கிறார்கள். இவனுக்கு நிஜமாகவே நாம் ரேசன்கடை உருப்படிகள்தானோ என வருத்தம். ஒரு நாளாவது நல்லதுணி உடுத்த வேண்டுமென்கிற தவிப்பு அவனுக்குள்.

      ரெண்டு வயதில் இவனுக்கு உடல் முழுக்க அம்மை போட்டு கொப்புளம் கொப்புளமாய் வெடித்திருந்தது. என்ன செய்தும் அம்மை இறங்கவில்லை. கடைசியில் இருக்கன்குடி மாரியின் மீது பாரத்தைப் போட்டு நேர்த்திக்கடன் எடுக்கவும் கொஞ்சம் குறைந்தது. ஒரு பத்து நாட்கள் பத்தியக் கஞ்சியும் பராமரிப்புமாய் இருந்தபின் அவனுக்கு உடல் சரியானது. அந்த வருசமே நேர்த்திக்கடனை கழிக்க நினைத்து முடியாமல்ப் போக, அடுத்தடுத்த இரண்டு வருடங்களும் தடங்கல்களாகவேப் போயிருந்தது. நாலாவது வருசம் மரகதம் அத்தை செஞ்ச காரியத்தால் ஊரில் குடும்ப மானம் போனதுதான் மிச்சம். சாத்தூர் ரயிலடியில் முறுக்கு விற்றுக்கொண்டிருந்தவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள். ஊரில் எல்லார் வீடுகளிலும் இருக்கிறதுதான், ஆனால் பக்கத்தில் யாருக்காவது நடக்கிறபொழுது அந்தக் காயத்தினைக் கிளறிப்பார்ப்பதில் எல்லோருக்கும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

      வெயிலைப் பொறுக்கமுடியாமல் வேக வேகமாய் அம்மாவும் பிள்ளையும் கோயில் நோக்கி நடந்தனர். எங்கேயுமில்லாத சனங்களெல்லாம் அந்த வெயிலிலும் கூட்டம் கூட்டமாய் கோயிலுக்கு வருவதும், போவதுமாயிருந்து கொண்டனர். கோயிலுக்குப் பக்கமாயிருந்த வேப்பமரத்தினடிக்கு வந்ததும்தான் ரெண்டு பேருக்கும் சற்று ஆசுவாசுமாயிருந்தது. செவல்பட்டியிலிருந்து பஸ்ஸேறி வந்ததே அழகருக்குப் பெருமையாக இருந்தது. அதுவும் இன்று இருக்கன்குடி வந்து நாளை மொட்டைத்தலையோடு பிள்ளைகளுக்கு விபூதி குங்குமம் குடுக்கப் போகிற சந்தோசத்தை நினைத்தால் அதற்கு முன்னால் இந்த வெயிலெல்லாம் அவனுக்குப் பொருட்டேயில்லை. பிள்ளைகள் மொட்டையன் என்று பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள்தான். கூப்பிடட்டுமே… அதற்குத்தானே மொட்டைத்தலையென நினைத்துக் கொண்டான்.

      அம்மாவும் ரொம்ப வருசத்திற்கும் இப்பொழுதுதான் கோவிலுக்கு வந்திருக்கிறாள். எல்லா ஊரும் நேற்று இருந்த மாதிரியா இன்று இருக்கிறது. மழை பெந்து காயும்முன் இப்பொழுதெல்லாம் புதுசு புதுசாய் வீட்டைக் கட்டிவிடுகிறார்கள். முடியெடுக்கிற இடம், சீட்டு வாங்குவது என எந்த விவரமும் தெரியாமல் ஒரே இடத்தில் நிற்பதை விடவும் அவனை மட்டும் நிற்க வைத்துவிட்டு அம்மா மட்டும் போய்வர நினைத்தாள். அவள் எங்குபோனாலும் தானும் கூடவே வருவேனென இவனும் அடம்பிடிக்க, வேறு வழியின்றி இவனையும் இழுத்துக்கொண்டு போனாள். கடந்து செல்கிற யாரைப்பார்த்தாலும் சிரிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவ்வப்பொழுது இடுப்பில் நிற்காமல் நழுவிய டவுசரை அருணாக்கொடியில் பிடித்து சுருட்டிக் கொண்டான்.

      முடியெடுக்கிற இடத்தில் பாடாவதியானக்கூட்டம். விசேச நாளென்பதால் ரொம்ப தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்திருந்தார்கள். ‘கன்றாவி இப்பிடியா சனம் அரி பரியாத் திரியும்?...கொஞ்சம் பொறுத்து வந்து போறதுக்கு கொள்ளையா வந்திருக்கு?..’ கூட்டத்தை சமாளிக்க மாட்டாமல் அம்மா புலம்பினாள். அழகர் முடியெடுக்கிற பிள்ளைகள் கத்தியழுவதை ஆர்வமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதுக்கு முன்பாக ஒரேயொருமுறைதான் அவனுக்கு முடியெடுத்திருக்கிறார்கள். அதுவும் காதுகுத்தி மொட்டை. குலசாமி கோயிலுக்கென மாடசாமி கோவிலில் எடுத்தது. சொந்த பந்தமெல்லாம் திரண்டு கோயிலில் திருவிழாக்கூட்டம். அதற்குப் பிறகு அவன் வீட்ட்இற்கு அவ்வளவு ஆட்கள் வந்ததில்லை. அம்மாவும் அவனும் மட்டும்தான் இன்று வந்திருக்கிறார்கள். அவனுக்கு இஷ்டத்திற்கு வேடிக்கப் பார்க்க முடிந்ததில் பயங்கரமான சந்தோசம். ஆனால் வாங்கித் திண்ணக் காசு கேட்டால் மட்டும்தான் முன்னைப் போல் குடுக்காமலிருந்தாள். ‘ஒத்தப்பிள்ளைக்குக் குடுத்தா என்ன?.. ஊருல மத்த வீடுகள்ல எல்லாம் பிள்ளைகள தாங்கு தாங்குனு தாங்கறாக… நம்மளுக்குத்தேன் இப்பிடி..’ என சலித்துக் கொண்டான். மற்ற பிள்ளைகளைப் போல் முடியெடுக்கையில் இவன் அழவில்லை. லேசாக தலையில் ஊர்வதைப் போன்ற உணர்வுதான் அவனுக்கு இருந்தது, கிச்சுகிச்சு மூட்டுவதைப் போன்றதொரு குறுகுறுப்பு. உடல் முழுக்க ஆங்காங்கே முடி ஒட்டியிருக்க அம்மா இவனை குளிக்கக் கூட்டிப்போனாள்.  இன்னென்ன சாமான் வாங்கவேண்டுமென்கிற கூறுவாறெல்லாம் அம்மாவிற்கு வல்லுசாக விளங்காது. கடைக்காரர்களிடமே கேட்டுக்கொள்ளலாமென்கிற தைர்யம்.

      தேங்காய், பழம் மற்ற சாமான்களை எல்லாம் வாங்கியாகிவிட்டது. மாலை வாங்குவதற்குத்தான் கொஞ்சம் தள்ளிப்போக வேண்டியிருந்தது. வாங்கிய சாமான்களை ஒரு கையிலும் அழகரை ஒரு கையிலுமாக இருக்கிக்கொண்டு பூக்கடை நோக்கி அம்மா நடந்தது. வரிசையாக மாலைகளைக் கட்டி தொங்கவிட்டபடி சின்ன சின்னப் பெட்டிகளில் வைத்துப் பூக்கட்டிக் கொண்டிருந்தனர். நான்கைந்து கடைகளிருந்ததால் தோததான ஆள் பார்த்துப் போகவேண்டுமென அம்மா நினைத்திருந்தாள். எல்லாக் கடைகாரர்களும் சொல்லி வைத்தாற்போல் ‘எக்கா மால வேணுமா, பூ வேணூமா…’ என மாறி மாறி ஒரே நேரத்தில் கூவிக்கொண்டிருந்தனர். கையைப் பிடித்துக் கடைக்குள் இழுக்காத குறை. அவ்வளவு சத்தத்திற்கும் மத்தியில் ஒரேயொரு குரல் மட்டும் சத்தமாக ‘மயினி…இங்க பாருங்க…ஏ..மயினி..’ எனக்கூப்பிட பரிச்சயமான குரல் வந்த பக்கமாக அம்மா திரும்பிப் பார்த்தாள். கருசக்காட்டுக்கே உண்டான கருத்த முகம், முன்னைப் போலில்லாமல் பார்வையும் மங்கிப்போனதால் அம்மா அந்தக் கடையை நெருங்கிப் போனாள். கொஞ்சம் எதிர்பார்த்திருக்கவில்லை. மரகதம் தான். ஒருநிமிசம் சங்கடமாகவும், கோபமாகவும் இருந்ததாலும் வாய் நிறைய ‘மயினி’ என்றுக் கூப்பிடுபவளை நடுத்தெருவில் வைத்துத் திட்டமுடியுமா? சிரமப்பட்டு சிரித்தபடி அம்மா ‘எப்பிடியிருக்க மரகதம்?’ கேட்டது. அத்தைக்கானால் தாங்கமாட்டாத சந்தோசம், பக்கத்துக் கடைக்காரர்களையெல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கண்ணே சம்சாரம்..எம்மயினிதேன்…’ என… மொட்டைத்தலையோடு நின்ற அழகரைத் தூக்கி வைத்து தட்டாமாலை சுற்றாத குறைதான். ‘மருமவனே, மருமவனே’ என உருகிய அத்தையைப் புதிதாகப் பார்ப்பவனைப்போல் பார்த்தான். ‘சின்ன வயசில பாத்தது, அதேன் என்னய அடையாளம் தெரியல போல…உங்க அத்ததேன்யா…’ அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள். அஞ்சாரு வருடப் பிரிவைப் பேசிவிடுகிற வேகம் அத்தையின் வார்த்தைகளில். வீட்டிலிருக்கிற எலோரைப் பற்றியும் நலம் விசாரித்தாள். அம்மாதான் பட்டும் படாமல் பேசிக்கொண்டிருந்ததுடன் பேச்சோடு பேச்சாக நாலு வார்த்தையானாலும் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுவிட நினைத்துக் கொண்டிருந்தாள். மனசுக்குள் ஒரு ஓரத்தில் இப்படி நினைத்துக்கொண்டாலும் வாய்விட்டுக் கேட்டுவிட முடியாத அளவிற்கு அத்தையின் பாசம் அவளைக் கட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. அம்மா மாலையை வாங்கிக்கொண்டு கோயிலுக்குப் போகிற சாக்கில் நகர்ந்துவிட நினைத்தாள். அவளை விடாமல் ’செத்த இரு மயினி அவரு கட வரைக்கும் போயிருக்காரு…இப்ப வந்திருவாரு…வந்ததும் நானும் சேந்து உங்கூட வாரேன்..’ பிடித்து நிறுத்தி வைத்தாள். அம்மாவிற்கு பதில் சொல்லவும் பிடிக்கமால் நிற்கவும் பிடிக்காமலிருந்தது.

      அத்தை வாளியிலிருந்து தண்ணீரை அள்ளீ முகத்தைக் கழுவினபொழுது நீரில் உதிர்ந்து கிடந்த மலரிதழ்கள் அத்தையின் முகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒட்டிக்கொண்டன. முகத்தைத் துடைத்தபடியே பக்கத்திலிருந்த சர்பத் கடைக்காரரிடம் ‘எண்ணே மூணு சர்பத் போடுங்கண்ணே..’ என்றாள். அம்மாவிற்கு அதில் வல்லுசாக விருபமில்லை. ‘எதுக்குவுள்ள அதெல்லாம் ஒன்னும் வேணாம்,…’ அம்மா முகத்தை சுளித்துக் கொண்டாள். ‘அட சும்மா இரு மயினி…இந்த வெயில் களப்புக்கு ஒரு சர்பத் குடிக்கிறதுல என்ன வந்துடும்…குடிங்க…’ அழகர் இரண்டு பேரின் பேச்சையும் கவனிக்கவில்லை. அவனுக்கு மஞ்சள் கலர் சர்பத்தான் எப்பொழுதும் பிடிக்கும், அதனால் கடைக்காரனிடம் தனக்கு மஞ்சள் கலர் சர்பத் வேண்டுமென கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.  அம்மாவும் அத்தையும் சிவப்புக்கலர் சர்பத்தும் இவன் மஞ்சள் கலர் சர்பத்தும் குடித்தனர். அம்மாவுக்கு அவளிடமிருந்து விலகியே பேசுவதும் கஷ்டமாக இருந்தது. எத்தனை நாட்கள் சேர்ந்து திரிந்திருப்பார்கள் இருவரும்?... ஊரிலிருந்து சாத்தூருக்கு வருவதென்றால் ரெண்டு பேரும்தான் கூட்டு. கல்யாணத்திற்கு முன்பே அழகரின் அம்மாவும் அத்தையும் அவ்வளவு நெருக்கம். சொந்தத்திலேயே கல்யாணமும் முடிந்துவிட்டபின் கல்யாணவீட்டில் மரகதத்துக்கும் சேத்துத்தாண்டி உன்னயக் கெட்டி வெச்சிருக்கு என கேலிபேசினார்கள். எல்லா சந்தோசத்தையும் அவளேதான் சிதைத்துவிட்டுப் போனாள். அவள் முகத்தில் இப்பொழுது நிறைவும் சந்தோசமும் இருப்பதை அம்மா புரிந்து கொண்டாள்.

      அத்தையின் தோற்றத்திற்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒருவரை மாமாவென கூப்பிட நேருமென அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. மூவரும் சர்பத் குடித்து முடிக்கும் முன்பாகவே அந்த மாமா வந்துவிட்டிருந்தார். ‘வாங்கக்கா எப்பிடியிருக்கிய?..மாமா எப்பிடி இருக்காவ?...’ அவர் ரொம்ப ப்ரியத்தோடு அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். முன்பே அம்மாவை அவர் பார்த்திருக்கக்கூடும். அழகர் சர்பத் குடித்து மஞ்சளாகியிருந்த நாக்கையே நீட்டி நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். மாமா வீட்டில் எல்லோரையும் நலம் விசாரித்தார். ‘என்னத்தா வெயில்ல சாப்பிடக்கூட்டு வராம இப்பிடி சர்பத்த வாங்கிக் குடுத்துட்டு நிக்கிற…’ என அத்தையிடம் சடவாகச் சொன்னார். அம்மா அவசரமா ‘அதெல்லாம் பரவாயில்லப்பா..இன்னொரு நாள் பாக்கலாம்..’ என்றாள். ‘இவென் என்ன ஆளுன்னு இப்பிடி வந்து கெடக்கா…மூக்கு முழு ஒண்ணாச்சும் காணச் சகிக்கிதா?...பித்துக் கித்து பிடிச்சப்போனாளோ?..’ அத்தையின் மீது அம்மாவிற்கு இப்பொழுது கோபத்தையும் மீறி இரக்கமே வெளிப்பட்டது. அத்தை அந்த மாமாவிடம் கடையைப் பார்க்கச் சொல்லிவிட்டு மாலை, பழக்கூடை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இவர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு வந்தாள். அர்ச்சனையெல்லாம் முடிந்து வெளியேறும் பொழுது விபூதி, குங்குமத்தோடு அத்தைப் பார்ப்பதற்கு மாரியம்மன் சிலையாட்டம் அழகாயிருந்தாள்.

      அவ்வளவு நேரமும் இருந்த தயக்கங்கள் அம்மாவிடம் இப்பொழுது இல்லை, மரகதம் இன்னும் செவல்ப்பட்டிக்காரியாகத்தான் இருக்கிறாள். அவளுடலில் இன்னும் கரிசல்க்காட்டின் வாசனையும் அன்பும் இருக்கிறது. ‘உனக்கு எத்தன பிள்ளைகடி…?’ அம்மா தயக்கமின்றி கேட்க, அத்தைக்கு மனதெல்லாம் சந்தோசம். அவ்வளவு சந்தோசத்தில் அத்தையின் முகம் இன்னும் அழகாய் பூரித்தது. ‘ஒரே ஒரு பொம்பளப் புள்ளதேன் மயினி…இந்த வருசந்தேன் பள்ளிக்கொடம் சேத்திருக்கோம்…’ என்றாள். அம்மாவிற்கு அந்தக் குழந்தையின் பேர், அவள் எப்படி இருப்பாளென எல்லாவற்றையும் கேட்க ஆசையாயிருந்தது. ஆனாலும் பிடிவாதமாய் அந்த உரையாடலை அதற்குமேல் அவள் தொடரவில்லை. அப்பொழுது இன்னும் நேரமாகிவிட்டதால் அத்தை அவசியம் வீட்டில் வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகனுமென்று நின்றாள். அம்மா என்னவானாலும் போவதில்லை என்கிற முடிவோடு ‘இல்லத்தா சாத்தூர்ல சின்னைய்யா வீட்ல வரச் சொல்லியிருக்காக..போய்ச் சாப்பிடாம இருந்தா மரியாதையா இருக்காது…’ என மறுத்துவிட்டாள். அத்தைக்கு சங்கடமாக இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் ‘எம்மருமவனயாச்சும் இங்கன ரெண்டுநாள் விட்டுட்டுப் போங்க மயினி…’ ஆசையோடு கேட்டாள். ‘ஏன் அவனும் உன்ன மாதிரியே திரியிறதுக்கா?...’ அம்மா வெடுக்கென சொல்லவும் அத்தையின் முகம் சுருங்கிப் போனது. அழகர் அம்மாவையும் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்க அம்மா சொத்தென அவன் மூஞ்சியில் ஒரு அறை விட்டாள். ‘பெரியவங்க பேசறப்போ வாயப்பாக்காத வாயப்பாக்காதன்னு எத்தனவாட்டி சொல்றது?...சனியனே நட…’ அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள். அழகர் எதுவும் புரியாமல் அத்தையைப் பார்த்து அழுதபடியே நடந்தான். முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி பேச எதுவுமற்றவளாய் நின்றாள். கொஞ்சதூரம் நடந்துவிட்டு மீண்டும் திரும்பி அத்தையையும் அந்த மாமாவையும் அழகர் பார்த்தான். நொட்டென தலையில் இன்னொரு குட்டு வைத்து ‘ஒழுங்கா ரோட்டப் பாத்து நடடா…’ அம்மா சொன்னதைக் கேட்டுவிட்டு தலையைத் தடவியபடியே அவனுக்கு முன்னால் கிடந்த வெயில் நிரம்பிய பாதையில் நடந்தான்.
      

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.