கதைசொல்லி என்பவன் சாகசக்காரனோ வித்தைக்காரனோ அல்ல, அவனொரு மந்திரவாதி.




( ம.நவீனின் போயாக்கை முன்வைத்து.) 



    சிறுகதை என்னும் வடிவம் ஒரு எழுத்தாளனுக்கு எப்போதும் சவாலானது, கடும் உழைப்பைக் கோருவது. ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கான பயணத்தில்கூட எழுதுகிறவன் தன்னையும் தனது சிந்தனைகளையும்  முற்றிலுமாய் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். வடிவரீதியாகவும் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்திலும் அக்கறை காட்டுகிறவர்களால் மட்டுமே தொடர்ந்து சிறந்த கதைகளை எழுத முடிந்திருக்கிறது. நாவல் எழுதுகையிலிருக்கும் சுதந்திரம் சிறுகதைகள் எழுதும்போது இருப்பதில்லை. ஒரு கதையை யோசித்த இடத்திலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாறும்போது அது வெவ்வேறு கிளைகளாகப் பிரிந்து செல்லும். இந்த உபகதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை.  உபகதைகளிலிருந்து துண்டித்துக் கொண்டு கதைக்குள் ஆழமாகப் பயணிக்க லாவகம் வேண்டியிருக்கிறது. இந்த லாவகம் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு அத்தனை எளிதில் அமையக்கூடியதல்ல.

            தமிழ் சிறுகதைகளின் முகமானது இந்த தசாப்தத்தில் பெரும் மாற்றம் கண்டுள்ளதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். ஒரேவிதமான வாழ்க்கை முறை, ஒரேவிதமான நிலவியல் காட்சிகள், சலிப்பூட்டக்கூடிய வாழ்வின் பழைய அறங்கள் இவற்றிலிருந்தெல்லாம் துண்டித்துக் கொண்டு முற்றிலும் புதிய பாதையில் இந்தக் கதைகள் பயணிக்க இந்தக் கதையை எழுதுகிறவர்களிடம் ஏற்ப்பட்டிருக்கும் கலாச்சார மாற்றத்தை ஒரு தவிர்க்க முடியாத காரணியாகக் கூறலாம். நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றம் கதைகளில் வெளிப்படுகிறதா என்கிற கேள்வியை ஒரு எழுத்தாளன் அவ்வப்போது கேட்டுக் கொள்ள வேண்டியது முக்கியமானது. தமிழின் பெரும்பாலான கதைகளை நாவல்களை வாசிக்கையில் இவர்கள் ஏன் கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்களென சலிப்பாய் இருக்கும். கடந்த காலத்தின் கதைகளை எழுதுதல் என்பது வேற, கடந்த காலத்தின் மனநிலையோடு இப்பொழுதும் இருப்பது வேற. நம் மொழியின் அனேக கதைசொல்லிகளின் மனம் கடந்த காலச் சிந்தனைகளிலிருந்து இன்னும் மீளவில்லை. புதிய சிந்தனைகளை, புதிய சொற்களை கைக்கொள்கிறவர்கள் மிகச் சிலரே. எதனால் இந்த புதிய சிந்தனை ஒரு மொழியில் அதிலும் குறிப்பாய் சிறுகதைகளில் வெளிப்படவேண்டியது முக்கியமென்றால் புனைவுலகின் வடிவை சடாரென மாற்றக்கூடிய வல்லமை சிறந்த சிறுகதைகளுக்குண்டு. இன்றைக்கு ஒவ்வொரு  வாரமும் ஒரு புதிய எழுத்தாளர் தனது புதிய சிறுகதையுடன் வெளிவருவதைக் கவனிக்க முடிகிறது. இந்தப் பெரும் அலையிலிருந்து மிகச் சிலரை மட்டுமே நம்மால் தொடர முடிவதற்குக் காரணம் அவர்கள் சிறுகதை என்னும் வடிவத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. 


            நவீனின் போயாக் என்னும் இந்தச் சிறுகதைத் தொகுதியிலிருக்கும் எட்டுக் கதைகளும் தனது நிலத்தின் முன்னோடிகளிடமிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டவையாய் இருக்கின்றன. மலேசிய தமிழ்ச் சிறுகதைப் போக்கிலிருந்து பழைய பிம்பங்களையும் கதாப்பாத்திரங்களையும் தாண்டி இந்தக் கதைகள் தனித்துவமாய் மிளிர்கின்றன.  இதற்கு முன்னும் தோட்டத்து வாழ்க்கையையும், தோட்டங்களில் இருந்து துரத்தப்பட்ட மக்களின் பாடுகளையும் ஏராளமானக் கதைகளில் வாசித்திருந்தாலும் நவீனின் கதைகளில் வாசிக்கும்போது அந்தக் கதாப்பாத்திரங்கள் புனைவின் வசீகரத்தை நமக்கு உணரச் செய்கின்றன. ஒரு கதை யதார்த்தமாய் இருக்கிறது என்று சொல்லாடலும், வாசிக்கையில் நெகிழச் செய்யும் என்கிற பாராட்டுக்களும் அதை எழுதுகிறவனையும் அந்தக் கதையையும் அவமதிக்கக் கூடியவை.  பத்திரிக்கை செய்திகள்கூட யதார்த்தமாய் இருக்க முடியாததொரு காலகட்டத்தில் யதார்த்தமானக் கதை என்று சொல்வதன் வழியாய் ஒரு வாசகன் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்த நினைக்கிறான்? நமக்குத் தெரிந்த வாழ்வை அப்படியே சொல்வதல்ல ஒரு கதைசொல்லியின் வேலை, அந்த வாழ்வின் அடியாழங்களில் மறைந்து போயிருக்கும் ரகசியங்களுக்குள்ளும் மர்மங்களுக்குள்ளும் கசடுகளுக்குள்ளும் பயணித்து புனைவாக்க வேண்டும்.  அப்படியான கதைகள்தான் அடர்த்தியாகவும் செழுமையாகவும் இருக்கின்றன.  சிறுகதைகள் எழுதும் காலகட்டத்தில் எழுத்தாளனுக்குள் இருக்கும் கொந்தளிப்பு அலாதியானது. ஒவ்வொருக் கதையைத் துவங்கி முடிக்கும்போதும் முன்னோடிகளின் சிறந்தக் கதைகளுக்கு ஈடான ஒன்றை அல்லது அதனைக்  கடந்த ஒன்றை எழுதிவிட வேண்டுமென்கிற ஆர்வமும் விருப்பமும் பெருகி வழியும். அப்படியொரு கதை நம் முன்னோடிகளின் கதைகளின் வரிசையில் வைக்கக் கூடும்படி வரும்போது ஏற்படும் பரவசமும் நிறைவும் அலாதியானது. அந்தப் பரவசத்திற்காக மட்டுமேதான் ஒருவன் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதவேண்டுமென மெனக்கெடுகிறான். எந்த விமர்சகனின் சொற்களாலும் அந்த பரவசத்தை உணரச் செய்துவிடமுடியாது. எழுத்தாளன் தன் அகத்திலிருந்து அதைக் கண்டு உணர்வான். 


            மசாஜ் என்னும் முதல் கதை ஒரு புள்ளியில் துவங்கி வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறது. உடலின் ரகசியங்களை அறிந்துகொள்ள மனிதர்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் ஏராளமானவை. இச்சையை ரகசியமானதென்று நம்பும் சமூகத்திலிருக்கும் ஒருவன் அதற்கென பெரும் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்தக் கதையின் நாயகன் வெவ்வேறு மசாஜ் செண்டர்களில் எதிர்கொள்ளும் அனுபவத்தைப் பதிவு செய்வதாக இதன் முதல்பகுதி தோன்றினாலும் அதில் வெளிப்படுவது முழுக்க முழுக்க அலைக்கழிப்புதான்.  பிழைப்பிற்காக இடம்பெயர்தலின் அலைக்கழிப்பும் இந்த வாழ்வின் துயர்களிலிருந்து விடுதலை செய்ய யாதொரு ஆதுரமான யாதொரு துணையுமில்லை என்கிற அலைக்கழிப்பே அவனுக்குள்ளிருக்கும் இச்சையை மீறி வெளிப்படுகிறது. அந்த அலைக்கழிப்பின் புள்ளி இரண்டாவது பகுதியில் ஒரு மசாஜ் செண்டரில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருத்தியைப் பார்க்கும் போது வேறொன்றாக நம்மை அதிர்வுக்குள்ளாக்குகிறது. ‘நான் எந்த மசாஜ கண்டேன்’ என வருத்தத்தோடு சொல்லும் அந்தப்பெண் போரைக் குறித்தும் சொந்த ஊரில் வசிக்க முடியாத தனது ஏதிலித்தன்மையையும் அவனிடம் வெளிப்படுத்துகிறாள். இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் கதை சொல்லப்பட்ட முறையானது முன்பின்னாக வெவ்வேறு புள்ளிகளை இணைக்கும்விதமாக எழுதப்பட்டிருக்கிறது.  ஒரே அகச்சிக்கல்களை எதிர்கொள்ளும் வெவ்வேறு சூழல்களைக் கொண்ட மனிதர்களை அக்கதைகளில் நாம் காண்கிறோம். இங்கும் நாயகனின் அப்பா திருவிழாவில் பெண் வேடமிட்டு கூத்துக்கட்டக்கூடியவர் வயதானபின்பு அவரை இனிமேல் அவரைக் கூத்துக்கட்ட வேண்டாமென ஊர்க்காரர்கள் சொல்லும்போது அவரிடம் வெளிப்படும் அழுகைதான்  நாயகான போஸை ஊரைவிட்டுத் துரத்துகிறது. கதையின் இறுதியில் அந்தப் பெண் முதலாளியிடம் சொல்லிவிடவேண்டாமென அவனிடம்  இரைந்துவிட்டு உடலை பிடித்துவிடும்போது அவளிடம் வெளிப்படும் அழுகையை அப்பாவின் அழுகுரலாகத்தான் போஸ் நினைக்கிறான். மசாஜ் செண்டர்களைப் பற்றின நுட்பங்கள், எவ்வாறு அங்கிருக்கும் பெண்களை அணுக வேண்டுமென கதை முழுக்க கதை நாயகனின் நண்பன் வழியாக வரும் விவரிப்புகள் எல்லாமே இவ்விடத்தில் காணாமல் போய்விடுகிறது. யாக்கை என்னும் இன்னொரு கதையும் மசாஜ் செண்டருக்குச் செல்லும் ஒரு ஆணையும் அங்கு எதிர்கொள்ளும் பெண்ணையும் சுற்றித்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் பயணிக்கும் வெளி வெவ்வேறானது. எந்தவொரு படைப்பையும் அணுக அடிப்படையான விஷயங்களில் ஒன்று அகப்பார்வை ( பெர்ஷப்சன்). ஒரு கதையை வாசிக்கும் வாசகன் அந்தக் கதையின் சூழலுக்குள் தானே இருப்பதான சித்திரத்தை உருவாக்க ஒரு எழுத்தாளனுக்கு இந்த அகப்பார்வை முக்கியமானது.  இந்த இரண்டு கதைகளையும் நுட்பமாக வேறுபடுத்திக் காட்டுவது கதைசொல்லிக்குள்ளிருக்கும் இந்த ஆற்றல்தான். 



            இரண்டு புள்ளிகளை நவீனின் அனேக கதைகளுக்கான மையப்புள்ளியாய் பார்க்க முடிகிறது. ஒன்று உடல், மற்றொன்று தொன்மம். இரண்டையும் அவர் கதைகளாக்கும் விதத்தில் தேர்ந்த கதைசொல்லியின் நுட்பத்தை நாம் கவனிக்க முடியும். உடலைத் தேடும் அவரின் கதாப்பாத்திரங்கள்  சாகசத்தை செய்து திரும்புவதில்லை.  உடலை என்பது தமிழில் அதிகமும் ஆணின்  கற்பனையான பாலியல் சாகசத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கிறது. ரமேஷ் ப்ரேமின் கதைகளிலும் நாவல்களிலும் உடல்களின் வாதையை அவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள். ரமேஷ் பிரேதன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருப்பார் மனிதர்களுக்கு அவர்களின் சுதந்தரமான உடல் மீட்டுத்தரப்பட வேண்டுமென. நவீனின் கதைகளில் வெளிப்படும் இச்சையின் தேடலானது அந்த விடுதலையை நோக்கியதாய் இருப்பதால்தான் அங்கு சாகசம் காணாமல் போகிறது. முக்கியமாய்  இந்தக் கதைகளில் இச்சையில் தனித்துத் தெரிவது பெண்கள்தான்.  உடலின் மர்மத்தைப் புரிந்துகொள்வது எத்தனை சிக்கலானதென்பதை  அப்பெண்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். அது யாக்கை கதையில் வரும் நாயகியாகட்டும், அல்லது நாகம், பேச்சி கதையில் வரும் பெண்களாகட்டும் அவர்களிடம் தனித்துத் தெரிவது ஆளுமைதான். உடலைப் போலவே நவீன் தொட்டுச் செல்லும் தொன்மங்களும் முக்கியமானது.  வாதை இங்கு எவ்வாறு வெளிப்படுகிறதென்றால்  மசாஜில் திரட்சியான அந்தப்பெண் இச்சையைத் தூண்டுவதற்குப் பதிலாக யுத்தத்தின் கதையைச் சொல்லும்போது அங்கு இச்சை காணாமல் போய் வாதை ஆக்ரமிக்கிறது. யாக்கை சிறுகதையில் நாயகனோடு கூடும் பெண் தன் தந்தையின் கதையைச் சொல்கிறாள். மீனவனான அந்த மனிதனின் உடல்  கடலால் ஆட்கொண்டபோது மீன்களால தின்னப்பட்டு எந்த அடையாளமுமில்லாமல் எப்படித் திரும்பக் கிடைத்ததெனச் சொல்லும்போது உடல் குறித்து நமக்கிருக்கும் கற்பிதங்கள் அவ்வளவும் நொறுங்கிப் போகின்றன. கடந்த வருட புயலின் போது கன்னியாகுமரி மீனவர்கள் ஆழ்கடலில் காணாமல் போய் பல நாட்களுக்குப்பிறகு சிதைந்த உடல்களாகக் கிடைத்தக் காட்சிகள் எல்லாம் நினைவிற்கு வந்தன. அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது என்னுடலில் ஏற்பட்ட நடுக்கம் அசாதாரணமானது. அதே நடுக்கத்தை இந்தக் கதையை வாசிக்கையிலும் உணர்ந்தேன். நாம் நினைவுகளால் ஆனவர்கள், எப்போதோ எங்கோ மிக அழுத்தமாக நம்மைத் தொந்தரவு செய்யுமொரு நினைவு  வாழ்க்கை முழுக்க நம்மைத் துரத்துவதாய் இருக்கிறது. எனது சிறுவயதில் நான் விடுதியிலிருந்த நாட்களில் எங்களுக்கு போதுமான உணவு கிடைக்காது. இரைச்சிக்கு வாய்ப்பே இல்லை. அப்படியான நேரங்களில் அருகிலுள்ள கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை ஊருணி வற்றும் நாள்தான் கொண்டாட்டம். அன்று சகதியும் நீருமாய் இருக்கும் ஊருணியில் யார் வேண்டுமானாலும் மீன் பிடித்துக் கொள்ளலாம். அப்படியானதொரு நாளில் எங்கள் விடுதி மாணவர்கள் எல்லாம் மீன்பிடிக்கச் சென்றோம். எங்களை ஊருணியின் தென்பகுதியில் ஒதுக்கிவிட்டார்கள். மலம், மாட்டுச் சானமென எல்லாம் கலந்து அதோடு சகதிக்குள் கிடந்த மீன்கள். நாங்கள்  கிடைத்த மீன்களை எல்லாம் அள்ளி பாத்திரத்தில் போட்டுக்கொண்டு திரும்பினோம். ஒரு மீனை வெட்டி எடுத்தபோது அதன் உடலுக்குள் ஆங்காங்கே மலம். உடனடியாக குமட்டி வாந்திவந்தது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் மீனை சாப்பிட வேண்டுமென நினைக்கிறேனோ அப்போதெல்லாம் அந்த மலம் சூழ்ந்த மீனின் உடல் நினைவிற்கு வருவதால் இன்றுவரை என்னால் மீனை சாப்பிட முடிவதில்லை.  இச்சையை சுமக்கும் உடல் இதுபோன்ற அதிர்வுகளை எதிர்கொள்ளும்போது அங்கு வாதையே எஞ்சிவிடுகிறது. 


            தொன்மத்தை கதைகளாக்கும்போது  எழுத்தாளன் அதற்கு விசுவாசமாய் இருகவேண்டி அதனை மிகைப்படுத்த நேர்ந்துவிடும். தொன்மம் என்பதை நாம் கடந்த காலத்திற்கானதாய் மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறாய் நம் வாழ்வோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாகம் பேச்சி என்னும் இரண்டு கதைகளும் தொன்மத்தை மிகச் சிறப்பாக புனைவாக்கின கதைகளாகக் கொள்ளலாம்.   இந்தக் கதைகளில் ஆண்கள் தங்களின் நினைவின் வழியாய் ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறார்கள். அசாதாரணமான பெண்கள்.  இரண்டிலும் பேச்சி குறித்த சித்திரங்களை வாசிக்கையில் மலைப்பாயிருக்கிறது. ஆண்கள் பெண்ணின் ஆகுதிக்கு முன்னால் எத்தனை பலவீனமானவர்கள் என்பதை பேச்சி உணர்த்துகிறாள். ஏன் வண்டி சிறுகதையில் வரும் எம்.ஜி.ஆரை பற்றின உரையாடல்களுமே கூட நமக்கு மிக நன்றாய்த் தெரிந்த மனிதர் குறித்து சமூகம் என்ன மாதிரியான கற்பிதங்களை உருவாக்கியிருக்கிறதென்கிற படிப்பினையை நமக்குக் கொடுக்கிறது. வண்டி கதையில் அந்தச் சிறுவன் எதிர்கொள்ளும் பால்யம்,  எந்த அடையாளத்தில் தானிருக்கிறோமென ஒவ்வொரு முறையும் அவனைச் சூழ்ந்தவர்களும் பள்ளியில் இருப்பவர்களும் அவனுக்கு உணர்த்தும்போது எதிர்கொள்ளும் அவமானம் சாதி எனபது தமிழ் சமூகம் எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் தனித்திருக்கும் குரூரமான நிஜம் என்பதை புரியவைக்கிறது. சரண்குமார் லிம்பாலேவின் தலித் பிரமாணன் தொகுப்பிலிருந்த சில கதைகளும் அவரது அனார்யா நாவலும் எனக்கு நினைவிற்கு வந்தது. அனார்யாவில் அந்தச் சிறுவனின் பாட்டி உணவில்லாத நாட்களில் மாட்டுச் சாணத்தால் தயாரான எரு வரட்டியை நீரில் நனைத்து உண்பாள் என்பதை வாசிக்கும்போது நமக்குள் எழும் பதட்டம் அசாதாரணமானது. சிறுவர்கள் சாதியின் காரணமாய் அல்லது அவர்களது ஏழ்மையின் காரணமாய் அவமானப்படுத்தப்படுவதைப் போன்ற குரூரமான செயல்கள் வேறில்லை. இந்தக் கதையில் அப்பா அவனுக்காக எடுத்து வரும் எல்லாமே மற்றவர்கள் வேண்டாமென குப்பையில் எறிந்தவை. அவன் ஆசையோடு அதனை பள்ளிக்கு எடுத்துப்போய் அவமானப்பட்டு வந்தாலும் ஓரிடத்தில் தன்னை சமாதானப்படுத்த அப்பா ஏதாவதொன்றை செய்ய வேண்டுமென நினைக்கிறார் என்பதே அவனை ஆறுதல்படுத்துகிறது. எளிய மனிதர்களை ஆற்றுப்படுத்த அன்பு மட்டுமே போதுமானது. அந்தந்த நேரக் கனவுகளை ஏமாற்றங்களை வெற்றியை மகிழ்ச்சியை எல்லாவற்றையும் அந்த அன்பு மட்டுமே உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.  


            இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாக போயாக்கை சொல்வேன். இந்த ஒரு கதையைக் குறித்து மட்டுமே நிறைய எழுதமுடியும். அத்தனை நுட்பமும் செறிவும் நிறைந்த கதை. இவ்விடத்தில் இரண்டு கதைகளை வைத்து இந்தக் கதையோடு எழுத வேண்டியிருக்கிறது. சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம், ஷோபா சக்தியின் காயா நவீனின் போயாக்.  உன்னத சங்கீதத்தில் ஒரு சிறுமியோடு கலவிகொள்ளும் மனிதன் எந்தவிதமான குற்றவுணர்ச்சியுமில்லாமல் அதைக் கொண்டாடுகிறான். இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது ஒரு வாசகனுக்குள் எழும் விபரீதமான எண்ணங்களும் அருவருப்பும் எல்லையில்லாதவை.  நாம் லோலிட்டாவைக் கொண்டாடினோம் இதைக் கொண்டாடக் கூடாதா என எதிர்கேள்வி கேட்டு நகர்ந்துவிட முடியாது. லோலிட்டாவில் நபக்கோவ் உருவாக்குவது வெவ்வேறு வயதுகளில் இருக்கும் இரண்டு உடல்களுக்கு இடையிலான அதீத தூண்டுதல்களையும் அதன் தவிப்பையும். ஆனால் உன்னத சங்கீதம் புணர்ச்சியையும் அதன் நிலைகளையும் மட்டுமே பக்கம் பக்கமாக விவரிக்கிறது. அடுத்ததாக ஷோபா சக்தியின் காயா. காயாவில் நாயகன் தன் நண்பனின் மகளோடு ஏதோவொரு தருணத்தில் பாலியல் இச்சையோடு நடந்துகொண்டு பின் குற்றவுணர்ச்சிகொண்டு நண்பனிடம் மன்னிப்புக் கேட்கிறான்.  அந்தக் கதையில் நாயகனின் குற்றவுணர்ச்சி மட்டுமே பிரதானமாயிருப்பதால் ஒரு குழந்தை பாலியல் அத்துமீறலுக்குள்ளானது இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. கதை செல்லும் புள்ளி நமக்குத் தவறான சித்திரத்தை உருவாக்கிவிடுகிறது.  இந்த இரண்டு கதைகளிலிருந்தும் வேறுபடும் போயாக் பலவிதங்களில் முக்கியமாய்ப் படுகிறது. முதலில், முற்றிலும் புதிய சூழல் ஒன்றுக்குள் கைவிடப்பட்டவனாய் வந்து சேரும் மனிதனுக்கு ஒரு பெண்ணின் அருகாமை எத்தனை பாதுகாப்பான நம்பிக்கையைத் தரக்கூடுமென்கிற சித்திரம்.  சொந்த ஊரிலிருந்து மொழி கூட புரியாத ஓரிடத்திற்கு வருகிறவனுக்கு அங்கிருந்து தப்பித்துச் செல்வதே நோக்கமாக இருக்கிறது. தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறவர்களின் விரைத்த ஆண்குறி அவர்கள் மனதிலிருந்த எதை வெளிப்படுத்த முனைந்திருக்குமென பலமுறை யோசித்திருக்கிறேன். தனிமையில் அல்லது கைவிடப்பட்ட நிலையில் மனிதர்களின் ஆழ்மனதில் ஒளிந்து கிடக்கும் காமமே அவர்களின் சிந்தனையை நிறைக்கத் துவங்குகிறது. அந்தச் சூழலில் அவன் அசாதாரணமானதொரு பெண்ணை எதிர்கொள்கிறான். அவளோடு மோகிக்க விரும்புகிறான். இங்குதான் இந்தக் கதையின் நுட்பமான இன்னொரு இழை இணைகிறது. அந்தப் பெண்ணின் தந்தை மந்திரவித்தை தெரிந்தவன். அந்தப் பழங்குடி இனத்தின் பெண்களோடு மோகிக்கும் ஆண்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டே ஆகவேண்டும், அவ்வாறு இல்லாதபோது அவர்கள் சாகடிக்கப்படுவார்களென்பதை அங்கிருப்பவர்கள் சொல்லித் தெரிந்து கொள்கிறான். அந்த நிலத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொன்றுமே நமக்கு வெவ்வேறான பார்வையைத் தருகின்றன. மனிதர்களும் முதலைகளும் பிரிக்கமுடியாமல் வாழும் பகுதி, நீருக்குள் செல்லும்  மனிதர்கள் முதலைகளுக்குச் சொந்தம், நிலத்திற்கு வரும் முதலைகள் மனிதர்களுக்குச் சொந்தம்.  அவனது இந்தப் புதிய வாழ்க்கையில் அவனைச் சூழ்ந்திருக்கும் எல்லாமே அச்சுறுத்தக்கூடியவை. அவனது இருப்பைத் தூண்டக்கூடிய அந்தப் பெண்ணோடும் மோகிக்க முடியாதென்கிற நிலையில் அவன் அவளின் தங்கையான சிறுமியோடு மோகிக்கிறான்.  அந்த தவிப்பை, மோகத்தை, ஒரு மனிதனின் சிந்தையை மீறி கொப்பளிக்கும் பதட்டமான வாதையை  மற்ற கதைகளில் வெளிப்படுத்தியதைப் போலில்லாமல் தேர்ந்த கதைசொல்லிக்குரிய நுட்பத்தோடு எழுதிச் செல்கிறார்.   உறக்கக் கலக்கத்தில் கிடக்கும் சிறுமியின் அழுத வடிந்த முகம் மட்டுமே நமக்குச் சொல்லப்பட்டாலும் அவன் அவசரமாய் அந்த ஊரிலிருந்து தப்பித்துச் செல்லும்போது உன்னத சங்கீதத்தின் நாயகனைப் போல் சாகசக்காரனாகவோ, காயாவின் குற்றவுணர்வு கொண்டவனாகவோ இல்லாமல் குற்றமிழைத்தவனின் புதிய முகமொன்றை நமக்குத் தந்துவிட்டுச் செல்கிறான். 


            நவீனின் முந்தைய சிறுகதைத் தொகுப்பையும் கவிதை நூலையும் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகள் எனக்கு விருப்பமானவை. ஆனால் இந்தத் தொகுப்பில் அவர் கடந்திருக்கும் உச்சம் அசாத்தியமானது. கதைமொழியிலும், எடுத்துக்கொண்ட கதையிலும்  தனக்கான தனிச்சிறப்பானதொரு போக்கை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் வரும் புதிய சிறுகதை எழுத்தாளர்களிடம் வாழ்க்கை குறித்தான புரிதல்கள் என்னவாயிருக்கின்றன என்பதை அவர்களின் கதைகள் வழியாகத் தேடுவேன். பெரும்பாலானவர்களின் கதைகளை வாசிக்கையில் பார்வையாளர்களுக்கேயான விளையாட்டுத்தனங்கள் மட்டுமே  அதிகமாய் வெளிப்பட்டிருக்கும் அல்லது அவர்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றை  மறு உருவாக்கம் செய்தவர்களாயிருப்பார்கள். தனித்த அடையாளங்களை உருவாக்குவதற்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை விடவும் கூடுதலாய் உழைக்க வேண்டியது  அவசியமாகிறது. வெறுமனே புத்தகங்களை வாசிப்பதும் உரையாடுவதும் மட்டுமே ஒரு எழுத்தாளனை உருவாக்கிவிடுவதில்லை.  கலைமனம் என்பது தன்னைத் தானே சுயவதை செய்துகொள்ளும் சிக்கலானதொன்று. ஒருவன் எல்லாமுமாக மாறி யோசிக்க வேண்டும். தன் கதைகளின் பார்வையாளனாக அல்லாமல் அதை நிகழ்த்துகிறவனாக அதனுள் பயணிக்கும்போதுதான் அழுத்தமான கதைகள் உருவாகின்றன. அவ்வகையில் போயாக் சமீபத்திய வருடங்களில் நான் வாசித்த நல்ல சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று.

           


Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு