சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்.




அதிகாரம் - 1
1.     தன் தாயிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் நாளிலேயே தகப்பன்மார் எவரும் சாத்தானாகிறார்கள். அவர்களின் கீழ்மையினாலே நிகழும் எல்லா அழிவுகளும் பிள்ளைகளையும் கேடுகளை நோக்கி இழுத்துச் செல்கிறது.
2.     தன் தகப்பனை கடவுளென நம்பச் சொல்லும் சமூகத்தவனாகிய கதிர், பால்யத்தில் எதிர்கொண்ட துர்கனவுகள் அவ்வளவிற்கும் தகப்பனே காரணம் என்று நம்பினபடியால் அவரை ஒரு நாளும் மரியாதைக்குரியவராய் நினைத்தானில்லை. பொறுப்பற்ற கணவன்மார் குடுமபத்தை சீரழிக்கும் களைகள்.
3.     கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்பட பழகினான். எல்லா சந்தோசங்களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்கு கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது.
4.     பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூட பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை.
5.     கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு, அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதுண்டு. எல்லா வருத்தங்களையும் நான் நீக்கப் பண்ணுவேன், உன்னை வருந்தச் செய்கிறவர்களுக்கும் சேர்த்து பிரார்த்தி. ஸ்தோத்திரம்’ என்பார்.
6.     அவன் தன்னைக் கைவிட்ட பெற்றோர்களுக்காய் பிரார்த்தித்தான். அவர்களின் உடல் மன நலனுக்காய் பிரார்த்தித்தான்.
7.     பரிசுத்தவான்களுக்கு வருத்தங்கள் நிரந்தரமில்லை. ஒரு புதிய நாளின் அபூர்வ துவக்கமாய் கதிரின் வீட்டிற்கு அழகர்சாமி திரும்பிய போது அவரோடு அவரின் மகனாய் இணங்கிப் போக முடியாத நெருக்கடியிலிருந்தான்.  அச்சுறுத்தக் கூடிய தோற்றமும், புன்னகைக்க பழகாத முகமும் அவரால் யார் மீதும் அன்பாயிருக்க முடியாதென்பதை உணர்த்தியது.
8.     எப்போதும் குற்றத்தின் நறுமணம் வீசும் அவர் அவனுக்கு தந்ததெல்லாம் தன்னைப் போன்ற மனிதர்களின் சகவாசத்தை தான்.  மனிதர்கள் வருவார்கள்.  மதுவருந்துவார்கள். தர்மசகாயங்கள் குறித்து அவர்கள் ஒருபோதும் பேசியதில்லை.  அந்த வீடு அவர்கள் இளைப்பாறும் விடுதியானது. அப்பா மட்டுமல்ல அவரைச் சார்ந்த ஒவ்வொருவருமே புதிர்.
9.     பள்ளிக்கூடத்திற்கும் முடிந்ததும் மாலை வேளைகளில் வேலைகளுக்கும் போய்க்கொண்டிருந்த கதிர், அப்போ ஏன் எந்த வேலைகளுக்கும் போவதில்லையென ஒருபோதும் அம்மாவிடம் கேட்டதில்லை. அம்மா அவரின் இருப்பை பாதுகாப்பென நம்பினாள். மாட்டை விடவும் கடுமையாய் உழைக்கும் திராணியிருந்த அவளுக்கு ஆண் துனையை இழக்கும் திராணியில்லை.
10.   அவர் நீண்ட காலம் அவர்களோடு இருந்ததில்லை. சில மாதங்கள் அங்கும் சில மாதங்கள் வேறு இடங்களிலுமாய் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் வருகையை எப்படி முன்னுணர முடியாதோ வெளியேறுதலும் அப்படித்தான்.
11.   அவர் வெளியேறும் நாட்களின் இரவுகளில் விளக்குகள் அணைக்கப்பட்ட சின்னஞ்சிறிய வீட்டிற்குள் பின்னிரவில் அம்மா வெளி உலகத்திற்கு கேட்காதபடி அழுவதுண்டு. தனிமையின் எல்லா அவஸ்தைகளையும் கொப்பளிக்கும் அந்த அழுகுரலைக் கேட்க நேரும் ஒரு ஆண்மகன் ஒருபோதும் பெண் துணையை விரும்ப மாட்டான்.
12.   இல்லற வாழ்வில் பிடிப்பில்லாத மனிதர்களுக்கு திருமணம் ஒரு சாபக்கேடு. அந்தக் கேடு அவர்களையல்ல, அவர்களின் மனைவிமார்களையே சிதைக்கிறது.
13.   அழுது பெலவீனப்பட்ட அம்மாவை கதிர் வெறுத்தான். ‘அவள் ஏன் ஒவ்வொருமுறையும் அந்த மனிதனை வீட்டிற்குள் அனுமதிக்கிறாள்?; இப்படியான ஒருவனுக்கு மகனென்று சொல்வதைக் காட்டிலும் தன்னை தகப்பனறியாது பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் ஆறுதலடைந்தான்.
14.   மழையை மழையென்று உணர முடிவதைப் போல், வெயிலை வெயிலென உணரமுடிவதைப் போல் பரிசுத்தமான அன்பும் அருகாமையினாலும் தீண்டுதலிலும் தான் நிஜமாகிறது.  பெற்றோர் என்னும் வழியில் தன்னை அன்பு மிகுதியில் அவர்கள் ஒருபோதும் தீண்டியதில்லை என்னும் ஏக்கம் கதிருக்கு எப்போதும் உண்டு.
15.   தன் தகப்பனை கொலை செய்யும் இடிபஸின் கதையை ரோஸி ஆண்ட்டிதான் முதலில் அவனுக்குச் சொன்னவள். வாழ்வின் மீதான கசப்புகளை ஒரு தன் தகப்பனைக் கொல்லுவதின் வழியாக கடந்து செல்ல முடியுமென நம்பினான்.  தங்களின் அசிரத்தையினால் பிள்ளைகளைக் கைவிடும் தகப்பன்மார்கள் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள். எப்போதும் தங்கள் நலன் குறித்து அக்கறையும் கவலையும் அவர்களுக்குண்டு. தின்று கொழுத்த குதிரையென உடல் திமிறி எப்போதும் காமத்தின் தகிப்பு மிக்க கண்களோடு அலையும் அப்பாவை பார்க்கும் பொழுதுகளில், மெலிந்து கழுத்து எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் தன்னைத் தானே சபித்துக் கொள்வான். யாரெல்லாம் தன் மீது வன்முறையை பிரயோகிக்கிறார்களோ அப்போதெல்லாம் தன் தந்தையைக் கொலை செய்வதாகவே நினைத்துக் கொள்வான்.  பதி மூன்று வயதிற்குள்ளாக பல்லாயிரம் முறை அவன் மனம் அவரை கொலை செய்திருந்தது.
16.   தந்தையைக் கொல்லுதல் பாவமென நீதிமொழிகள் வலியுறுத்தின. பாவங்கள் வழியாகவே பிறப்பு முழுமையடைகிறதென சமாதானம் செய்துகொண்டான்.









அதிகாரம் – 2
1          மேலும் அவன் விளங்கிக் கொண்டது,,  பாவத்தை விதைக்கிற ஒருவன் அதையே அறுவடை செய்கிறான். சின்னதாய் விதைக்கும் யாவும் சிறிய விளைச்சலாகவும், பெரியதாய் விதைக்கிற யாவும் பெரியதாகவும் விளைகிறது.
2.          அப்போது, பதிமூன்று வயது கதிருக்கு. வலது புறம் பத்து வீடுகளும் இடது புறம் பத்து வீடுகளுமாய் உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குள் இருந்த காம்பவுண்ட்டில் தனித்திருந்த மாடி வீடு அவர்களுடையது. பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அத  கல் வீடுகளெங்கும் சுண்ணாம்பு உதிர்ந்து முதுமை எய்தியிருந்தன.
3.          ப்ரியங்களை பகிர்ந்து தந்த ஸ்திரீகளால் நிரம்பிய அந்த உலகில் தன்னை பாக்கியவானாய் உணர்வான். பசி குறித்து விசனப்படாதிருக்கும் படி அவர்கள்  உணவளித்தனர். இரவென்றும் பகலென்றும் பாராமல் கதைகளால் நிரம்பிய அந்த நாட்கள் அவனுக்கு தற்காலிக விடுதலை.
4.          அப்பாவும் அவரின் சினேகித மார்களும் வருவதுண்டு. அந்த மாடியின் திறந்த வெளி இரவுகளில் மதுவருந்துவதற்கும், உறங்குவதற்கும் தோதாய் இருந்தது. மற்ற வீட்டுக்காரர்கள் எவரும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.
5.          தன் மனைவியோடு பிணக்காயிருந்த செல்வம் என்பவன் அவ்வப்போது அப்பாவோடு வந்து மதுவருந்துவதுண்டு. வறுத்த கோழி மணக்க அவர்கள் இரவுகளில் முரட்டுக் குரலில் பேசிக் கொள்வதைக் கேட்கும் எவருக்கும் அருவருப்பாயிருக்கும். கொச்சையான வார்த்தைகள் மொத்த மதுவையும் குடித்த போதையில் பெண்களின் உடல் நுகர மட்டுமேயானதென பெருங்குரலில் சொல்லும்.
6.          வீட்டின் பின்புறமிருந்த பழைய வீட்டின் மூன்றாவது மாடியில் பல வருடங்கள் முன் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்பதால் எப்போதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த  அறையும் இவர்கள் வீட்டைப் பார்த்தது போல் இருக்கும் அந்த ஜன்னலும் அமானுஷ்யமான ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். இரவில் மூத்திரம் பெய்கையில் அந்த வீட்டின் மஞ்சள் நிற வர்ணம் அடிக்கப்பட்ட சுவர்களை கவனித்துவிடாதபடி கவனமாய் தவிர்க்க கதிர் முய்ல்வான். இறந்த பெண்ணின் நீண்ட கூந்தல் இரவுகளில் அந்த வீட்டின் சுவர்களெங்கும் அலைவது போன்ற அச்சம்.
7.          அப்பாவுக்கும் அவரின் சினேகிதர்களுக்கும் பேய்கள் குறித்த அச்சமேயிருப்பதில்லை. அவர்கள் இரவுகளுக்கு அஞ்சாதவர்களாகவும் பாவங்களுக்கு பழகினவர்களாகவும் இருந்தவர்கள்.
8.          தன்னைச் சார்ந்தவர்களுக்கு துரோகிக்கும் எவர் ஒருவரும் பாவிகளே என கதிர் தீர்க்கமாய் நம்பினான். துரோகித்தல் தான் மனிதன் தன் அழிவை நோக்கித் தூவும் முதல் விதை.
9.          பின்னொரு நாள் செல்வமும் அவன் மனைவியுமாய் வீட்டிற்கு வந்தபோது, மதுவருந்திய அவன் நட்சத்திரங்கள் தன்னை கவனிக்கிற பிரக்ஞையின்றி உறங்கிப் போக, கதிரின் அப்பாவும் செல்வத்தின் மனைவியும் அவனருகிலேயே உறவு கொண்டனர். இரவின் சாட்சியாய், பின் வீட்டின்  மஞ்சள் நிற சுவர்களெங்கும் கூந்தல் அலைபாயும் இறந்த பெண்ணின் சாட்சியாய், நட்சத்திரங்கள் மற்றும் வீட்டைச் சூழ்ந்திருந்த வாதா மரம், மற்றும் வேப்ப மரங்களின் சாட்சியாய் நிகழ்ந்த அந்த உறவின் போது மூத்திரம் பெய்ப்வதற்காக வெளியே வந்த கதிர், இரண்டு முரட்டு எருமைகள் யுத்தம் செய்வதைப் பார்த்தான்.
10.        அதிகாலையில் நிர்வாணமாய் தன் மனைவி அழகர்சாமியின் உடலோடு பிணைந்து கிடப்பதைப் பார்த்த செல்வம் அவள் இத்தனை காலம் துரோகிக்க காரணமான ஆண்மகன் இவனே எனப் புரிந்துகொண்டு, உறக்கத்தில் இருந்தவளின் மீது எட்டி உதைத்தான். ஊர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த அகால வேளையில் களைந்த தன் உடையை சரி செய்து கொண்டவளாய் அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து ஓடினாள்.  கரைச்சல் சத்தம் கேட்டு கீழ் வீட்டுக்காரர்கள் ஓடிவர, கதவைத் திறந்து பார்த்த கதிரும் அவன் அம்மாவும் ஸ்தம்பித்துப் போயிருந்தனர். உடலில் சிறு ஆடைகள் மட்டுமே சுற்றியிருந்த இரண்டு ஆண்கள்.  அந்த நேரத்திற்கு பொருந்தாத வன்முறை. தப்பிச் சென்ற பெண் நடந்ததை ஊகிக்கச் செய்திருந்தாள். செல்வத்திற்கும் அழகர்சாமிக்குமான சண்டையில் செல்வம் சராமாரியாக வெட்டப்பட, அரை உயிராய் அப்படியே மயங்கினான்.
11.        அத்தனை காலம் இல்லாத ரத்தச் சுவடுகளோடு அந்த நாள் விடிந்ததை பாரதி தெரு வியப்போடு பார்த்தது. சந்தோசங்களை, கொண்டாட்டங்களை மிக அரிதாக சண்டைகளைப் பார்த்துப் பழகிய அந்த வீதியில் நிகழ்ந்த முதல் கொலை.  பக்கத்து வீடுகளில் கூட நிறைய பேர் உறக்கம் களைந்து எழுந்து வந்திருந்தனர்.
12.        முன்னும் அனேக குற்றங்களுக்கு பழகின அழகர்சாமி, தன் மனைவியிடமும், கதிரிடமும் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டுமெனச் சொல்லாமலேயே அவசரமாக தப்பித்துச் செல்ல, தன் முன்னால் வெட்டப்பட்ட மனிதனைப் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கதிர் அச்சத்தில் நின்ற இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டான்.
13.        மிச்சமிருந்த உயிரோடு துடித்துக் கொண்டிருந்த மனிதனின் குருதியிலும் முகத்திலும் மெல்லிய அதிகாலை வெளிச்சம் பரவத் துவங்கிய போது அவன் “கதிரு கொஞ்சம் தண்ணி குடுய்யா.” என உயிரைப் பிடித்துக் கொண்டு அனத்தினான்.
14.        இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்க்க வேண்டாமென எவ்வளவு தவிர்த்தும் கதிரால் முடியவில்லை. கண்களும் மனதும் குருதி கசிந்த அவனின் இறுதிக் கனங்களை கவனமாகப் பார்த்தன. அருகில் செல்ல வேண்டாமென எவ்வளவு தடுத்தும் கேட்காதவனாய்  ஒரு சொம்பு நிறைய தண்ணீர் எடுத்துச் சென்று அவரின் கையில் கொடுத்தான். சொம்பை பிடிக்க முடியாதபடி வெட்டப்பட்டு துண்டாகியிருந்த மணிக்கட்டைக் கண்டதும் அவனே அவர் அருந்த ஏதுவாக வாயில் கொஞ்சம் கொஞ்சமாய் நீரை ஊற்ற, பாதிக்கும் மேலான நீர் குருதியோடு சேர்ந்து அறுபட்ட தொண்டை வழியாய் வெளியேறியது.
15.        தூர நின்று பார்க்கையிலிருந்த அச்சம் இப்பொழுது குறைந்து கதிர் நிதானமானான்.  ஏமாற்றப்பட்ட வேதனைகளோடு செத்துக் கொண்டிருந்த மனிதனின் துர் கனவுகள், வன்மம் யாவும் அவன் கண்களில் நீராய்க் கொப்பளிக்க, அவரின் கண்களை வேதனையோடு கவனித்த கதிர் அந்த வன்மம் யாவும் இனி தனதேயென நினைத்துக் கொண்டான்.
16.        இறப்பு அந்த மனிதனை எளிதில் தழுவவில்லை.  தாங்கொண்ணாத வலியிலிருந்து தன்னை விடுவிக்கும் படி கதிரின் பிஞ்சுக் கைகளைப் பிடித்து மன்றாடினான். பதறி ஓடிவந்த அம்மா கதிரை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். அந்த மனிதன் துரோகித்த மனைவியையும், கொலை செய்த அழகர்சாமியையும் மறந்துவிட்டு தனது கடைசி மூச்சை நிறுத்தும் படி வானத்தைப் பார்த்து மன்றாடிக் கொண்டிருந்தான். மரங்கள் அசைவதை நிறுத்தியிருந்தன. காற்று அந்த வெளியிலிருந்து காணாமல் போயிருந்தது.
17.        காவல் துறையினரும், அரசு மருத்துவமனை ஆட்களுமாய் வந்து அவனுடலை அள்ளிக் கொண்டு போனபோதும் அவனால் மிகத் தெளிவாக பேச முடிந்தது. மருத்துவமனையின் எந்த சிகிச்சைகளையும் எதிர்பாராத அவன் இறக்கும் முன்பாக தன் சாவுக்கு காரணம் அழகர்சாமியென அழுத்தமாக வாக்குமூலம் கொடுத்திருந்தான்.
18.        இப்படியாக இன்னொரு கொலைக் குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்ட அந்த மனிதன் இந்த முறை அதற்கான விளைச்சலை தன் குடும்பம் அறுக்கும்படி செய்துவிட்டிருந்தான்.




















அதிகாரம் – 3
1.     துர்குணரும், பொல்லாத மனுஷருமான அழகர்சாமியின் சூழ்ச்சியால் அன்றைய காலை வேளையில் கதிரும் அவனது அம்மாவும் விசாரணைக்கென கைது செய்யப்பட்டார்கள். அந்த வீதியும் மக்களும் இவர்களை பாவிகளாய் பார்த்தபடியால் தனக்கிருந்த இந்த முகத்தையும், தகப்பனால் ஆன உடலையும் வெறுத்தான்.
2.     காவல் நிலையத்தின் லத்திகளுக்கு பெண்கள் குழந்தைகள் என்கிற பேதமில்லை. “எல்லோரும் சேந்து தான கொல செஞ்சீங்க?” என்னும் துவக்க கேள்விக்கு பதில் எதிர்பார்த்து போலிஸ்காரர்கள் இடைவிடாமல் அடித்தனர். முதலில் முழங்கால்களுக்குக் கீழும் பின்பு கைகளிலும்.  அவன் அலறினான். மெலிந்து எலும்புகளும் கொஞ்சமே சதையுமிருந்த அவன் அம்மா அலறவும் தெம்பில்லாமல் மயங்கிப் போனாள்.
3.     இறந்த மனிதனின் குருதி தேம்பிய கண்களை நினைத்த பொழுதெல்லாம் அவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அப்போதும் அடித்தார்கள். கேள்வி இப்பொழுது உங்கப்பன எங்கடா? என திரும்பிய போது நிஜமாகவே அதற்கான பதில் தெரியாத கதிர் அப்பாவியாய் தெரியாதென்றான். ”பொய்யி, பொய்யி இந்த வயசுலேயே பொய்யி..” என அவன் கால் விரல்களை ஒரு போலிஸ்காரர் தன் பூட்ஸ்களால் நசுக்கினார். அவன் அலறித் துடித்த போது  அருகில் இருந்த டேபிளில் வலி தாளாமல் சாய்ந்து விழுந்தான்.
4.     இந்த பிறப்பு எத்தனை கேவலமானதென மனம் பேதலித்துக் கிடந்தவன் கடவுளர்களை, அவர்களின் போதனைகளை நிந்தித்தான்.  எல்லா நம்பிக்கைகளும் போலியானவை.  வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக எந்தக் கடவுள்களும் மனமிரங்குவதில்லை. பாவிகள் சுதந்திரமானவர்களாகவும் நியாயவான்கள் தண்டிக்கப்படுகிறவர்களாகவும் விதிக்கப்படும் இந்த நீதி தான் எத்தனை அவமானகரமானது.  வலியிலிருந்து, போலிஸ்காரர்களின் உதைகளில் இருந்து தற்காலிகமாக மறத்துப் போகும் வரத்தைக் கூட கடவுள் தராமல் போனதென்? தேம்பி அழுதவனுக்கு பசி வயிற்றுக்குள் புழுக்களாய் நெளிந்தது.
5.     கேள்விகள் இப்பொழுது அனேகமாகின. “செல்வம் கொண்டு வந்த காச எல்லாம் எங்க? நீங்கதான திருடினீங்க?” உங்கப்பன் காசோட எங்க ஓடினான்?” இது மாதிரி இன்னும் எத்தன பேர கொல பண்ணி இருக்கீங்க?” ஒரே நாளில் அவர்கள் தேர்ந்த குற்றவாளிகளின் வரிசையில் சேர்க்கப்பட்டார்கள். இல்லையென்று சொல்லும் போதெல்லாம் லத்திகளும் பூட்ஸ்களும் அவனுடலை பதம் பார்த்ததால் அவன் பேசவே பயந்தான். கால்சட்டையை கழற்றிவிட்டு கைகளைப் பின்னால் கட்டி ஒரு மூலையில் குத்த வைத்து உட்காரச் சொன்னார்கள். இரண்டு கெண்டைக் கால்களிலும் லத்தியால் அடித்ததில் ரத்தம் கட்டிப் போயிருந்ததால் சில நொடிகளிலேயே அப்படி உட்கார முடியாமல் வலியில் அலறினான். எல்லோருக்கும் முன்பாக தன் மகன் நிர்வாணமாக உட்கார வைக்கப்பட்டிருந்த வலிதாளாமல் கதிரின் அம்மா கதறினாள். ஒரு போலிஸ்காரன் அவள் முதுகில் எட்டி உதைத்தான்.
6.     அவர்களின் சாட்சியை ஏற்றுக்கொண்டு, அவர்களை சத்தியமானவர்களென அங்கிருந்து வெளியே அனுப்ப ஒருவரும் முன் வந்திருக்கவில்லை.
7.     பக்கத்து வீட்டுக்காரர்களும், இறந்தவனைப் பார்த்தவர்களுமாய் வந்து சாட்சி சொன்னார்கள். வாக்கு மூலங்கள் எழுதப்பட்ட இடைவெளியில் இவர்களுக்கு அடி விழாமல் இருந்ததால் அந்த இடைவெளியில் வலி மறக்க உறங்கினான். சார்லஸ் மாமா, கீழ் வீட்டிலிருந்த கான்ஸ்டபிள் ரங்கராஜ், ஹரி, பூக்காரர் மாதவன் என 16 பேர் சாட்சியளித்தார்கள்.
8.     இத்தனை காலம் அன்பு காட்டின விசுவாசத்தில் சார்லஸ் மாமா இவனுக்கும் இவன் அம்மாவிற்கும் உணவு வாங்கித் தந்துவிட்டுப் போனார்.  
9.     உடல் வேதனை சாப்பட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் குருதியின் மணம். சாவின் அடையாளங்கள். கையில் அள்ளி உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் இறந்த மனிதனின் சதைத் துண்டுகள்.  பாவம் செய்கிறவன் மட்டுமல்ல அதற்கு சாட்சியமாகிறவனும் அதில் பங்கெடுத்தவனாய் ஆகிறான்.
10.   இறந்த மனிதனை புசித்த அந்த பிற்பகல் வாழ்வின் மீதான நிரந்தர அச்சத்தை அவனுக்குள் உருவாக்கியது.
11.   கதிரின் மாமாவும் இன்னும் சிலரும் அஸ்தமனத்தில் ஜாமீன் எடுக்க வந்திருந்தார்கள்.  வழக்கை அப்பொழுதே பேசி சமாதனாம் செய்து கொள்ள காவல் துறையும் கொலை செய்யப்பட்டவனின் தரப்பும் ஒரு தொகையை முன் மொழிந்தார்கள்.  ஒரு மரணம் இப்பொழுது விலை பேசப்பட்டுக் கொண்டிருக்க, அவர்கள் கேட்கும் தொகையை தரமுடியாத சூழலில் ஜாமீன் எடுத்துச் சென்றனர்.
12.   “நல்ல யோசிச்சுக்கங்கய்யா. சாட்சி எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கு. மரண வாக்குமூலமும் இருக்கு. இப்பயே முடிச்சுக்கிட்டா எல்லாருக்கும் நல்லது” என போலீஸ்காரர் எச்சரித்த எதையும் இவர்கள் பொருட்படுத்தியிருக்கவில்லை.
13.   காயங்கள் ஆற நாட்கள் பிடித்தன. வீடு திரும்பிய நாளில்  பக்கத்ஹு வீட்டுக்காரர்கள் எல்லோரும் இவனைத் தவிர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் ஒதுக்கப்பட்டான். அவமான உணர்ச்சி அவன் முதுகின் பின்னால் எப்போதும் மனிதக் கண்களாய் தொடர்ந்தபடியே இருந்தது. ஒரு மாதத்திற்குப் பின் மதுரை நீதிமன்றத்தில் சரண்டரான அப்பா, அந்தக் குடும்பத்தை நிரந்தரமாய் குற்றத்தின் உலகிற்கு பழக்கியதாய் மாற்றியிருந்தார்.
14.   மனிதர்களிடத்தும் இறைவனிடத்தும் விசுவாசமாயிருந்தும் அவன் நித்திய ஜீவனை உடையவனாய் இல்லை. உலகின் வெறுப்பிலிருந்து தப்பிக்க தன்னை வெளிச்சத்தின் கதிர்கள் எட்டாத இருண்ட வெளிக்குள் புகுத்திக் கொண்டான். நினைவென்பது வலி. அங்கு சந்தோசங்கள் இல்லை. நன்மைகள் இல்லை. வெளிச்சமில்லை.
15.   பட்டுநூல்காரன் பேட்டைக்கு இடம் பெயர்ந்த போது பழைய நட்புகள் இல்லை, சந்தோசங்கள் இல்லை. அவனிடம் அதன் பிறகு ஒருபோதும் சிறுவர்களுக்கான  விளையாட்டுத்தனங்கள் இல்லை.




அதிகாரம் - 4
1.     ஆரோக்கியமான உபதேசங்களை அவனிடத்திலே சொல்லாதவர் இல்லை. நீதிமானாய் இரு, புறம் பேசாதே, பிறர் பொருட்களின் மீது விருப்பம் கொள்ளாதே என இங்கும் சிலர் அவனுக்கு நீதிமொழிகளைக் கற்றுக் கொடுக்கத் தவறவில்லை. அவன் வாழ்தலின் நீதியே தப்பிப் பிழைத்தல் தான் என்று மறுமொழி கூறுவான். வாழ்க்கை குறித்த மனிதர்களின் நம்பிக்கைகள் அவர்கள் ஒருபோதும் பின்பற்றாதவைகளாகவே இருக்கின்றன என்றான்.
2.     பட்டுநூல்காரன் பேட்டை வீதியில் துரத்தியடிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் ஏக்கங்கள் ஒவ்வொரு வீட்டின் சுவர்களிலும் கேவி அழுதுகொண்டிருந்தன. பாவங்களை பொருட்படுத்தாமல் இந்த மனிதர்கள் சந்தோசமாய் இருந்தார்கள். அம்மா வேலைக்குப் போனாள். அதிகாலையில் நீச்சத் தண்ணீர் குடித்துவிட்டு தன் குட்டைக் கால்களை பரப்பி நடந்து செல்லும் அவளுக்கு போலிஸ்காரர்களிடம் வாங்கிய அடி கால்களில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
3.     வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஜாமீனில் விடுதலையான கதிரின் அப்பா தற்காலிகமாய் வீட்டிலிருக்க, இரண்டாவது குற்றவாளியாய் குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்ட கதிரின் அம்மாவைத் தேடி ஒருநாள் போலிஸ்காரர்கள் அங்கு வந்தார்கள்.
4.     ”அப்பவே பேசி முடிச்சுக்கலாம்னு சொன்னேன், கேட்டீங்களா?” என தேடி வந்த போலிஸ்காரனின் குரல் இளக்காரமாய் வம்பிழுத்தது. பள்ளிக்கூடம் கிளம்பிக் கொண்டிருந்த கதிர் அந்த மோசமான காலையில் என்ன செய்வதெனத் தெரியாமல் உறைந்து போய் நின்றான். போலிஸ்காரர்களின் லத்தி அடிகளும் பூட்ஸ் கால் மிதிகளும் நினைவுக்கு வர, அம்மா நடுக்கத்தோடு சொம்பில் நீச்சத் தண்ணீர் எடுத்துக் குடிக்கப் போனவள் கைகளில் சொம்பை பற்றிக் கொள்ள முடியாமல் கீழே தவறவிட்டாள். ”பயப்படாதம்மா அடிக்க மாட்டோம். நேரா கோர்ட்டுக்குத்தான் கூட்டிட்டுப் போவோம்” என போலிஸ்காரன் அவளின் அச்சத்தைப் புரிந்து கொண்டு சொன்னான்.
5.     வீதியில் இருந்த எல்லோரும் வாசலில் குடி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் போலிஸ்காரர்கள் கூட்டிச் செல்லும் போது பொங்கி எழுந்த கண்ணீரைக் காட்டிக் கொள்ள முடியாமல் அம்மா தலை குனிந்தபடியே சென்றாள். வீதி எல்லை வரை தொடர்ந்து சென்ற கதிரை போலிஸ்காரன், “தம்பி நீ போய்யா.” என துரத்தினான். இதற்குப் பிறகு என்ன செய்வதெனத் தெரியாத அச்சத்தில் கதிர் வீட்டுக் கதவை சாத்திக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்தான். நீண்ட நேரத்திற்குப் பிறகு அன்று கணிதத் தேர்வு என்பது நினைவுக்கு வர, பசியில்  கண்கள் சொருகி மயக்கம் கண்டது.
6.     யாரும் அவனிடம் எதும் விசாரிக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியேற கூசினான். “அந்தப் பொம்பள தொழில் எதும் செஞ்சிட்டு இருந்துச்சா? எதுக்கு போலிஸ் கூட்டிப் போறாங்க?” என பக்கத்து வீட்டில் பால்க்கார அம்மா பேசுவதைக் கேட்டு ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான். நள்ளிரவிற்கு பக்கமாய் முற்றிய போதையில் வீடு திரும்பிய அழகர்சாமி “என்னடா  கொம்மால போலிஸ் புடிச்சிட்டு போயிருச்சா.. ஒன்னும் கவலப்படாத மூணு நாலு மாசம் கழிச்சு சாமின் எடுத்துக்கலாம்” என சொல்லிவிட்டு நடு வீட்டில் கால்களையும் கைகளையும் பரப்பிக் கொண்டு படுத்து உறங்கிப் போனார்.
7.     ஒரு வீடிருக்கிறது. பெயருக்கு அப்பாவென இந்த மனிதர் இருக்கிறார். ஆனால் இன்னும் நான்கு மாதங்களுக்கு தான் அடிமைதான் என கவலைப்பட்டுக் கிடந்தவனை ஆறுதல் படுத்தியவன் மாரி மட்டுமே. அடுத்த நாள் காலை அவனுக்கு உணவளித்து பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தான். போலிஸ்காரர்கள் தந்த அச்சம் குறையாமல் நடுங்கிக் கொண்டிருந்தவனுக்கு  பள்ளிக்கூடம் கூடுதல் பயம் தந்தது. எந்தக் காரணங்களையும் விசாரிக்க தயாராய் இல்லாத கணக்கு வாத்தியார் கையில் கிடைத்த எல்லாவற்றையும் கொண்டு அவனை அடித்தார்.  சிலருக்கு சிலரை அடிக்க காரணங்களே தேவைப்படுவதில்லை.  இவன் கணக்கு வாத்தியாருக்கும் அப்படித்தான். மற்ற பாடங்களில் தொண்ணூறுகளுக்கு குறையமால் எடுக்கும் இவன் கணக்கில் ஐம்பதைத் தாண்டுவதே அபூர்வம். இதனாலேயே அவன் மீது தீராத ஆழமான வெறுப்பும் கசப்பும் இருந்தது அவருக்கு. அவர் தன்னை அடிக்கும் எதாவது ஒரு நாளில் அந்தாளின் கொட்டையைப் பிடித்து நசுக்க வேண்டுமென இவனுக்கு ஆத்திரமெழும். பல்லைக் கடித்து தாங்கிக் கொள்ளுவான்.
8.     வலி தாங்காமல் அவன் காரணத்தை சொன்ன போது அந்த வாத்தியார் இவனை ஒரு புழுவைப் போல் பார்த்தார். நசுக்கப்பட வேண்டிய ஒரு கரப்பான் பூச்சியைப் பார்க்கும் மனிதனின் கண்களில் இருக்கும் அருவருப்பு, சக மனிதனைக் கண்டு அருவருப்படையும் மனிதக் கண்களை நோண்டி எடுத்து காகங்களுக்கோ நாய்களுக்கோ திண்ணக் கொடுத்தால் என்ன?  ஒரு மனிதனின் தோற்றத்தை வறுமையைக் கண்டு அருவருப்புக் கொள்கிறவன் எத்தனை இழிவானவான்.  இத்தனை இழிவான மனிதனா தனக்கு பாடம் கற்பிக்க முடியுமென அந்த மனிதரை அடியாழத்தில் இருந்து வெறுத்தான்.
9.     இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு சாலையோர உணவகத்தில் இரவு வேலைக்கு அவனை அழகர்சாமி சேர்த்துவிட்டார். மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பதினோறு மணி வரை ஆனந்தா தியேட்டர் வாசலில் இருந்த அந்தக் கடையில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைப்பதும் குடிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவதும் அவனுக்கு வேலை. இரவு உணவும் இருபது ரூபாய்க் கூலியும் அவனுக்கு.  அந்தக் கடை அவனோடு படித்த சல்மாவின் வாப்பாவினுடையது. அவர் அன்பான மனிதர். சல்மாவும் அவன் தன் வாப்பாவிடம் வேலை செய்வது குறித்து சங்கடப்பட்டிருக்கவில்லை. ஆனால் மற்ற மாணவர்களுக்கு இவன் ஒரு கேலிப் பொருளானான்.
10.   அவன் எச்சில் தட்டுகளை கழுவுவதைப் பார்க்க வேண்டிய சக மாணவர்கள் அடிக்கடி அங்கு சாப்பிட வந்தார்கள். உதாசினப்படுத்தும் போது கிடைக்கும் சந்தோசத்தை சிறுவர்கள் வேறு எதையும் விட அதிகம் ரசிக்கிறார்கள். சகவயதிலிருப்பவனை வீழ்த்த எளிய வழிகளில் ஒன்று அவனை உதாசீனம் செய்வது. கதிர் எல்லோரிடம் தோற்றுக் கொண்டே இருந்தான். அந்தத் தோல்வி எல்லோரின் மீது பகையையும் வன்மத்தையும் வளர்த்தது.
11.   துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து பழகிய பால்யமும், இந்த வளர் பருவமும் அவனை உள்ளூர ஒவ்வொரு நாளும் பலவீனப்படுத்தியபடியே இருந்தது. தனது பலவீனங்களைக் காட்டிக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெரிய மனுஷத்தனமான எல்லாக் காரியங்களையும் செய்ய விழைந்தான்.
12.   விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெரும் நாளில் கூட அதற்காக சந்தோசப்பட்ட சில ஆசிரியர்களுக்கு நடுவில் கணக்கு வாத்தியார் “இத மட்டும் ஒழுங்கா செய்யி, கணக்குப் போடாத.” என அதையும் ஒரு காரணமாகக் கொண்டு உதைத்தார். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆட்களை தேர்வு செய்கையில் 100 மீட்டரிலும், 400 மீட்டரிலும் முதலாவதாக வந்து அவன் தேர்வு செய்யப்பட, அவனை அனுப்பக் கூடாதென அந்த வாத்தியார் பிடிவாதமாய் மறுத்தார்.
13.   மைதானத்திலிருந்து மாலை வகுப்பிற்குத் திரும்பிய மாணவர்களுக்கு இவன் எப்படியும் போட்டிகளுக்குச் செல்வான் என்ற நினைப்பு எரிச்சலூட்டியது. நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள வெகுசிலரே இருந்த அந்த சின்னஞ்சிறிய உலகில் எதற்காக தன் மீது இத்தனை வெறுப்பென யோசித்தே கதிர் நொந்து போவான்.  பின் வரிசை இருக்கையில் படம் பெயர் சொல்லி விளையாடிக் கொண்டிருந்த சில மாணவர்கள் விளையாட்டினூடே கீழே விழுந்த ஒரு நோட்டை எடுக்கச் சொல்லி இவனைக் கூப்பிட்டனர். “டே எச்சித்தட்டு அந்த நோட்ட எடுத்துக் குட்றா.” என பாண்டி சத்தமாகக் கத்த வகுப்பிலிருந்த பெரும்பாலனவர்களும் சிரித்துவிட்டார்கள். அவன் இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் அப்படியே கத்த எழுந்த கதிர் அவன் உட்கார்ந்திருந்த டெஸ்க்கோடு சேர்த்து அவன் தலையை அடித்தான்.
14.   அந்த வகுப்பறை அப்படியான எதிர்வினையை எதிர்பாராததில் மலைத்துப் போனது. மண்டைப் பிளந்து ரத்தம் கொப்பளித்த பாண்டியை சில மாணவர்கள் தூக்கிக் கொண்டு தலைமையாசிரியர் அறைக்குச் சென்றார்கள். கதிர் முதல் முறையாக ஆழ்ந்த நிம்மதியோடும் சந்தோசத்தோடும் தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். அவ்வளவு நாட்களும் அவன் மீதிருந்த கேலிப்பார்வைகள் இப்பொழுது அச்சமாக மாறியது.
15.   தலைமையாசிரியர் அறை வாசலில் கதிரை ஆசிரியர்கள் மாறி மாறி அடித்தார்கள். அவன் அந்த வலியைப் பொருட்படுத்தவில்லை. “பாருங்க ஸார் எவ்வளவு தெனாவெட்டுன்னு, நாம இவ்ளோ அடி அடிக்கிறோம். அசஞ்சு குடுக்க மாட்டேங்கறான்.” கணக்கு வாத்தியார் மாட்டிக் கொண்ட தன் பகையாளியை வதம் செய்யும் முடிவோடு இவனை குச்சிகளால் பிளந்தார். “இந்த வயசுலயே என்ன தெனாவெட்டு. நீயும் உங்கப்பன மாதிரிதான் வரப் போற. இப்பவே தோல உரிச்சா தான் ஒழுங்கு வரும்..” பேசியபடியே விடாமல் அடித்தார். அவனுக்கு உடல் வலித்து ஓய்வுக்காக கதறியது. வலி தாள முடியாமல் இப்பொழுது அங்கும் இங்குமாக அவன் ஓட அவனை வென்றுவிட்ட மகிழ்ச்சியில் அந்த வாத்தியார் விடாமல் அடித்தார்.
16.   கைகள் வீங்கிப் போயிருந்தன. பின்புறத்தில் ஏற்கனவே கிழிந்து போயிருந்த பேண்ட் கூடுதலாக கிழிந்து தொங்கியது. அடித்தவரின் கம்பை பிடித்து நிறுத்திய கதிர் “தேவ்டியா மவனே நான் திருப்பி அடிச்சா நீ செத்துருவடா பொண்டுகா” என ஆத்திரமாகக் கத்தினான். தனது ஆண்மையைக் கொச்சைப் படுத்திவிட்டான் என்கிற ஆத்திரத்தில் அவர் முன்னை விடவும் மூர்க்கமாக அவனை அடித்தார். தப்பித்தால் பொதுமென்கிற முடிவோடு கதிர் அங்கிருந்து வேகமாக ஓடினான்.
17.   பதினைந்து நாட்களுக்குப் பிறகு மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்து கணக்கு வாத்தியாரிடமும் மன்னிப்பு கேட்டபின் அவனை பள்ளிக்கூடத்தில் அனுமதித்தனர். வழக்கமாக  அவன் உட்காரும் இடத்திலிருந்து வேறு இடத்தில் உட்கார வைக்கப்பட்டான். அவன் குறித்து கேலி பேச இப்போது அந்த வகுப்பில் ஒருவருக்கும் தைர்யம் இருந்திருக்கவில்லை.

























அதிகாரம் – 5
1.     ’நானென்பது கொலை செய்யப்பட்ட நானல்ல’ என செல்வம் அவன் கனவில் வந்து தூக்கம் களையும் இரவுகளில் எல்லாம் பனிக்கட்டியில் உறைந்த மீன் தனிமை மிகுதியில் தற்கொலை செய்து கொள்ளத் துடிப்பது போல் கதிர் துடிப்பான்.
2.     பூமியில் கொல்லப்பட்ட யாவரின் ரத்தமும் அவனிடத்திலே நியாயம் கேட்டது. துரோகத்த மனிதர்களையும் கொலை செய்யப்பட்ட மனிதனையும் அருகருகே பார்த்த அவன் நீதிபரிபாலனை செய்ய தகுதியுடையவனாய் இருந்தான்.
3.     அம்மாவின் சிறைவாசம் இரண்டு மாதங்கள் மூன்று மாதங்களென நீண்டு கொண்டிருக்க, தன்னைச் சூழ்ந்த எல்லா இழிவுகளுக்கும் பழக்கப்பட்டுப் போன கதிர் வேலை முடிந்த பெரும்பாலான இரவுகளை ஆனந்தா தியேட்டரில் கழித்தான். பரந்து விரிந்த அந்த திரையும் அவன் கண்ட படங்களும் வலிகளை மறக்கச் செய்தன.
4.     மாரியும் அவன் வீடும் அடைக்கலம் குடுத்தபடியால் தனிமை குறித்த அச்சம் அவனிடமிருந்து கொஞ்சமே விலகியது. விடுமுறை நாட்களில் தனக்குத் தேவையானதை கதிர் சமைக்கப் பழகினான். மற்ற நாட்களில் பள்ளிக்கூட இலவச உணவு பசியாற்றியது.
5.     அம்மாவின் முகம் மறக்கத் துவங்கியது. எவ்வாறாயினும் வாழ்ந்து தீர்க்க வேண்டுமென்கிற நிர்ப்பந்தம் தன்னைத் தவிர எதுவும் முக்கியமிலை என்ற எண்ணத்தை உருவாக்கியதால் யார் மீதும் அன்பு கொள்வதை தவிர்த்தான். விசுவாசம், நேசம் என்கிற வார்த்தைகள் அர்த்தமற்றவைகளாய்ப் போயிருந்தன. அப்பா அருகிலிருக்கும் ஒவ்வொரு நாளும் அவரின் மீதான வெறுப்பு அதிகரித்தபடியேதான் இருந்தது. முற்றிய போதையில் இரவுகளில் அவர் உறங்குகையில் ‘நானென்பது கொலை செய்யப்பட்ட நானல்ல கதிர்’ என செல்வம் அவனை அனத்தி உசுப்பி விடுவான். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பொருட்களை எடுத்து அழகர்சாமியை கொலை செய்துவிட நினைப்பான்.
6.     கடையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது சோர்வு இரண்டு தோள்களையும் அழுத்தும்.   செருப்பில்லாத கால்களோடு வீடு வந்து சேரும் போது குதி கால்களில் இருந்து இடுப்பு வரையிலும் நரம்புகள் வலித்து இழுக்கும்.  இன்னும் செருப்பில்லாமல் தன் வயதில் நடப்பது தான் மட்டுந்தான் என்னும் நினைப்பு தாங்கொண்ணாத தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும். கோவில்களிலோ பள்ளிக்கூடத்திலோ தனக்கென ஒரு செருப்பை திருடும் தைரியம் அவனுக்கு வந்திருக்கவில்லை. குதிகால்களில் பித்த வெடிப்பு மிகுந்த நீர் படும் போதெல்லாம் நீரோடு குருதி கசியும்.
7.     மஞ்சள் விளக்கெரிய திறந்து கிடக்கும் கதவைத் தாண்டி வீட்டின் வாசல் வரை சாராய நெடி நிரம்பியிருக்கும். சாராய நெடியும் சில நாட்களில் அழகர்சாமி எடுத்து வைத்த வாந்தியின் நெடியும் சேர்ந்து ஏற்படுத்தும் அருவருப்பான உணர்ச்சியில் இருந்து மீள்வது எளிதானதல்ல.  காலையில் பயன்படுத்திவிட்டு உலர்த்தப் போட்டிருக்கும் துண்டை எடுத்துக் கொண்டு மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்வான். அடுத்த நாள் காலையில் அந்த வீடு அப்படி இருக்கிறதென்கிற எந்தக் கவலைகளும் இல்லாமல் அவர் எழுந்து வெளியே போய்விடுவார். வீட்டு முதலாளியம்மாவின் வசவுகளைக் கேட்டுவிடக் கூடாதென்கிற கவலையில் அதிகாலையிலேயே எழுந்து போய் குடலைப் புரட்டும் அந்த நாற்றத்தை சுத்தம் செய்வான். சகிப்புத்தன்மைக்குப் பழகுகிறவனுக்கு கொலை செய்தல் ஆக எளிதானது.
8.     இந்த வீதியின் இரவுகள் வினோதமானவை, கொண்டாட்டத்தின் சாபத்திற்கு பழகியிருந்தாலும் இங்கு ஒரு சூன்யம் எப்போதும் கவிந்திருக்கும். பழைய சிப்பாய் ஒருவன் விடுமுறையில் ஊர் திரும்பியிருந்தான். கொஞ்சம் மாட்டிறைச்சியும், நாட்டுச் சாராயமும் வழமையான இரவு உணவாகக் கொள்ளுமவனோடு அழகர்சாமியும்  இரவுகளை பகிர்ந்து கொள்ளத் துவங்கினார். மதுவில் நிரம்பிய இரண்டு குரல்களும் பாடும் போது ஆந்தைகள் அலறி ஒளியும். ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் மனிதர்களின் மீது நிகழ்த்தப்படும் மகா வன்முறை அது.
9.     கதிர் அவர் இல்லாத அந்த சில நாட்கள் நிம்மதியாக உறங்கினான். சிலருக்கு சந்தோசம், நிம்மதி, ஆறுதல் எல்லாமே தற்காலிகமானவை தான் போல.
10.   உப்புச் சுவையோடிய அவன் மனம் வாழ்க்கை எப்போதும் துவர்க்கும் தன்மையுடையது என தீவிரமாய் நம்பியது. காளை மாட்டின் உருவத்தையொத்த தன் தந்தையிடமிருந்தே தன் மீதும் இந்த துவர்ப்பு பரவியிருக்கக் கூடுமென தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ஒரு அமாவாசை இரவில் கடை விடுமுறை  என்பதால்  அந்த வீதியிலிருந்த சிறுவர்களோடு விளையாடியவன் எப்போதும் போல் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டான். அந்த மாடியை பெரும் வயலாக்கி, வயலை நாசம் செய்யும் யானைகளாய்  விளையாடிய மற்ற சிறுவர்களும்  களைப்பில் அவனோடு  ஆழ்ந்து உறங்கியிருந்தனர். அவன் ஒரு முரட்டு யானையாய் இன்னும் வயல்களை தன் கனவுகளில் மிதித்து விளையாடிக் கொண்டிருந்தான். மெல்லிய பனித்துளிகள் அந்த குட்டி யானையின் முரட்டுத் தோல் மீது மழையெனப் பொழிந்து உடலை நனைத்திருந்தது. தன் சாணத்தை தானே மிதித்து விளையாடும் குஷியின் அந்த யானை இன்னும் தன் விளையாட்டிலிருந்து ஓயவில்லை. சில நிமிடங்களுக்குப் பின் அவனது அந்தப் புதிய வயலில் அவனுக்கு நன்கு தெரிந்த காளை மாடு புகுந்து அலைந்தது. ஒருபோதும் உறக்கம் கொள்ளாத அந்த காளைமாட்டின் கொழுத்த பின்புறங்கள் அசைவதை பின்னிரவில் பாதி உறக்கத்தின் வழிக் கவனித்தவன் தன் மீது இரண்டு பாறைகள் கவிழ்ந்த அழுத்தத்தை உனர்ந்தான்.
11.   முச்சுவிட முடியாது தவித்த அவன் நாசித்துவாரங்களில் காட்டுப் புழுக்களின் வீச்சம் நிரம்பி வழிய தான் இன்னும் ஒரு சிறுவன் என்று சொல்ல முடியாதவனாய் விழி பிதுங்கி திணறினான். அதே மாதிரியான காளைகள் அவன் விடுதியிலிருந்த நாட்களில் அவன் மீது மிக மோசமான வன்முறையை பிரயோகித்துள்ள நினைவு வர அவனுக்கு வயிற்றில் குடல்கள் எல்லாம் அச்சத்தில் கரைந்து வெளியேறிவிடும் போலிருந்தது. அது கனவில்லை. ஒரு குழந்தையின் மீது ஒருபோதும் நிகழ்த்தப்படவே கூடாத ஆகப்பெரிய வன்முறை. அந்த நிஜம், அந்த நிமிட வலி மனித உறவுகளின் மீது நிரந்தரமாக எழுந்த அருவருப்பு எல்லாமுமாக சேர்ந்து தன்னையே கொல்லும் வலிமையைத் தரச் சொல்லிக் கேட்டது.
12.   முந்தைய இரவின் குரூரங்கள் எதற்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்பதைப் போல் நடந்து கொண்ட காளை மாட்டிடமிருந்து தப்பிக்கவே அடுத்தடுத்த நாட்களில் மாரியின் வீட்டில் உறங்கச் சென்றான்.
13.   நம் வீடு தான் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று நம்புவது எத்தனை பெரிய பொய்.
14.   அவன் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை பகிர்ந்து கொள்ளக்கூட ஒருவருமில்லாமல் தவித்தான். குறைந்தபட்சம் கற்பகம் கூட அருகிலில்லை. வன்முறைகளை எதிர்கொள்ளும் பருவமா இது?  கொஞ்சம் சந்தோசமும், மூன்று வேளை உணவும் இருந்தால் போதுமென்று எதிர்பார்க்கும் இந்த எளிய சிறுவனின் உலகம் ஏன் இத்தனை துயர்மிக்கதாகவே இருக்க வேண்டும்.
15.   இறந்த காலம் நிகழ் காலம் எல்லாமே துர் சொப்பனம். கழுத்தறுபட்ட பறவையை நீரருந்தப் பழக்க இயலுமா? அவன் கடுந் தாகத்தில் இப்போதெல்லாம் முறிபட்ட தன் கழுத்தை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
16.   உலகின் மீது, வாழ்வின் மீது எந்த விருப்பங்களும் இல்லை. இந்த இழிந்த வாழ்வும் தனக்குத் தேவைதானா? என மனம் அடித்துக் கொண்டது. நான்காவது மாதம் முடிந்த பின்பும் அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவன் உறவினர்களின் வீடுகளுக்குப் போனான். ஓரிரு நாட்களுக்கு மேல் யாரும் அவனை வைத்துப் பராமரிக்க விருப்பப் படவில்லை என்பது ஒருவேளை உணவை நிறுத்துவதில் இருந்து புரிந்து கொள்ள முடியாது.
17.   வழக்கு விசாரணைக்கு மதுரைக்கு வரும் அம்மாவை பார்க்க போகலாமென்றால் அழகர்சாமியோடு தனியே பயணிக்கும் துணிச்சல் இல்லை அவனுக்கு. அம்மாவின் முகத்தை முழுவதுமாக மறந்து போனான். அவளை அடையாளம் பார்த்துக் கொள்ள வீட்டில் அவளது ஒரு புகைப்படம் கூட இல்லை. அவளின் பழைய உடைகள், அவள் பயன்படுத்திய பொருட்கள் எதன் வழியாகவும் அவளது நினைவுகளை மீட்டுக்கொள்ள முடியவில்லை. அம்மா என்று அழும் போது அந்தக் குரல் அந்த வீட்டின் சுவர்களுக்குள்ளேயே அமிழ்ந்து போனது.
18.   சபிக்கப்பட்ட தன்னை வெறுத்தவன் ஒருநாள் தற்கொலை செய்து கொள்ளலாமென முடிவு செய்தான். துணையிழந்த புறாக்கள் கற்களை விழுங்கி உயரப் பறந்து மரிப்பது போல் கடுமையான வேதனைமிக்க ஒரு சாவு வேண்டும். என்ன செய்யலாம்? உடலில் நெருப்பு வைத்துக் கொள்ளலாமா? வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் ரயில் ரோட்டில் தலை வைத்துவிடலாமா? ரயிலில் அடிபட்ட உடல்களை சிலமுறை அவன் பார்த்ததுண்டு. தலை நசுங்கி கூழாகி கால்கள் சிதறி உடல் பல துண்டுகளாய் சதைகள் ரயில் ரோட்டில் மனிதர்கள் கழித்து வைத்த மலங்களோடு சேர்ந்து அருவருப்பாய் இருக்கும். தன் இறப்பு அத்தனை அருவருப்பாய் இருப்பதை  அவன் விரும்பவில்லை.
19.   எளிய வழியாய் அம்மாவின் சேலையின் உதவியோடு தூக்கிட்டுக் கொள்ள முடிவுசெய்தான். திரைப்படங்கள் இந்த வழியை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பதால் அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முதல் முயற்சி இதுதான். வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு இறப்பதற்கு முன்னால் நீண்ட நேரம் கடவுளை வழிபட்டான். மர ஸ்டூலின் உதவியோடு காற்றாடியில் சேலையை முடிச்சிட்டவன் கழுத்திலும் சுருக்கிட்டுக் கொண்டு ஸ்டூலை தள்ளிவிட்டான்.
20.   தூக்கிட்டு சாவது அத்தனை எளிதானதாய் இல்லை. சேலை கழுத்தை இறுக்கத் துவங்கின சில நொடிகளில் தொண்டைக்குக் கீழிருந்த எல்லாமும் உறிஞ்சு எடுப்பது போல் மூச்சை பிடித்து நிறுத்தியது. கண்கள் மேல் நோக்கி சொருகிக் கொள்ள நரம்புகள் எல்லாம் சுருட்டிப் பிடித்துக் கொண்ட அவஸ்தையில் குறி தானாகவே விரைத்தது. மரணமும் காமமும் இத்தனை நெருக்கமானவையா? அவனுக்கு தொண்டைக்குழி முழுவதுமாக முறிவது போலிருக்க வெளியே எழும்ப முடியாத சப்தத்தை திக்கித் திணறி எழுப்பினான். திரைப்படங்களின் வழி கற்றுக் கொள்ளும் எல்லாவற்றிலும் சில பாதகங்கள் உண்டு. அவை நமக்கு முழுமையானவற்றை கற்பிப்பதில்லை. அந்தப் பழைய காற்றாடி இவன் சுமையை தாங்காமல் உடைந்து விழ இவனும் கீழே விழுந்தான்.
21.   சத்தம் கேட்டு ஓடிவந்த முதலாளி அம்மா அவன் கிடந்த கோலத்தைப் பார்த்து நடந்ததைப் புரிந்து கொண்டு “அய்யயோ என்னயவும் கொலகாரியா மாத்த பாத்துட்டானே. கொலகாரப் பாவி.” என வாசலில் கிடந்த விளக்குமாற்றால் அடிக்கத் துவங்கினாள்.
22.   இரண்டு நாளிலேயே அந்த வீட்டை காலி செய்தாக வேண்டுமென அவள் ஒற்றைக் காலில் நின்றபோது, மாரியின் அப்பா தான் பேசி சமாதானம் செய்தார். “ஆச்சி அந்தப் பயலோட அம்மா வர்ற வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கங்க. எதுண்டாலும் நாங்க பாத்துக்கறோம்.” அவரின் வார்த்தைகளுக்கு ஆச்சி சம்மதிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவனைப் பார்க்க மாரியும், சல்மாவும், அவளின் வாப்பாவும் வந்திருந்தனர்.
23.   “இந்த வயசுல என்ன வந்துச்சுன்னுடா சாகப் போற?” என அவனைத் திட்டிய யாரிடமும் அவனால் காரணங்களை சொல்லி இருக்கமுடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் மனிதன் தன் சாவுக்கு  எப்போதும் ஒற்றைக் காரணங்களைக் கொண்டிருப்பதில்லை.
24.   காயங்கள் குணமானபோது அழகர்சாமியின் மீதான கதிரின் வன்மம் ஒருபோதும் அழிக்க முடியாத ஓவியமாய் முழுமையடைந்திருந்தது.  சீக்கிரம் வளர்ந்து பெரியவனாக வேண்டும். கையில் ஒரு கத்தியைப் பிடிக்கும் வலுவும், அந்த மனிதன் தப்பித்துச் செல்ல முடியாதளவிற்கு பிடித்து வயிற்றைக் குத்திக் கிழிக்கும் பலமும் வரவேண்டும். அதற்காகவேணும் வேகமாக வளர வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்தான்.
25.   அம்மா ஜாமீனில் விடுதலையானாள். வழக்கு விசாரணை தொடர்ந்தது. இவன் வளர்ந்த போது அடுத்த ஒரு வருடத்திற்குப்பின் அழகர்சாமிக்கு மட்டும் அந்த வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்தது. அம்மா குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்திருந்தார்கள்.
26.   தனக்குள் வளர்ந்த இந்த பகையை வெறுப்பை தீர்த்துக் கொள்ள இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமாவென அழுது புலம்பியபோது கதிருக்கு பதினைந்து வயது.




Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு