ஒளிநார்கள் கிளித்து கூடுகட்டும் தூக்கணாங்குருவிப் பெண் பாயிஸா :

எஸ்.ஃபாயிஸா அலியின் கடல் முற்றம் தொகுப்பிற்கான முன்னுரை. 

----------------------------------------------------------------------------------------------------------------

பெண் சூழ்நிலைகளை எதிர்கொண்டு பொருந்திக்கொள்ள வேண்டும். அவள் ஏன் அப்படி
பொருந்திக்கொள்ள வேண்டியவளாகிறாள்?

இந்த உலகத்தில் இன, மத, நிற, தேசங்கள் என்னும் வேறுபாடுகள் கடந்து
பிரபஞ்சத்தின் சகல திசைகளிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெண்ணுக்கு
முன்பும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் மீற முடியாத ஏதோ ஒரு தடை
இருக்கின்றது. பூசிமெழுகப்பட்டதாகவோ, நன்கு கவனமெடுத்து
அலங்கரிக்கப்பட்டதாகவோ அன்றி சிலநேரங்களில் ஆறமுடியாத, ஆழமான
வெட்டுக்காயமாகவோ காய்ந்த தழும்பாகவோ உள்ளுர பெண் மாத்திரமே அதை
உணரக்கூடியவாறு அந்தத் தடையானது சிறுகச் சிறுக பெண்ணின் உயிர்ப்பையே
கொல்லுகின்றது. தொடர்ச்சியான நசிவுற்றலில் அகப்பட்டபடியே சிரித்துச்
சமாளித்து அவள் இந்த வாழ்க்கையை வாழக்கூடும். ஒரு பெண் எதை தன்னுடைய
கனவுகளால் தகர்க்க முயலுகின்றாள்? தன்னுடைய கவிதைகளால் எதைத் தாண்ட
முயலுகின்றாள்? அவளுடைய கலைத்துவத்தில் இதற்கான பதிலை கண்டெடுக்க
முடியும்.


பெண்ணுக்கென பிரத்தியேகமாக வார்க்கப்பட்ட அச்சுவடிவம் உள்ளது. மிகவும்
சுயநலமான அந்த அச்சுக்குள் முக்கோணம் சதுரம் வட்டமென, பள்ளமும் மேடும்,
குழிகளும் குறுகலும், நெளிவு, வளைவு சுழிகளும், என பல உள்ளறைகள்
காணப்படும். சவால் மிகுந்த அச்சில் பொருந்துவதற்காகவும் நிறைவதற்காகவும்
உயிருள்ள காலம் வரை தன்னை நிகழ்த்தியபடியும் உருகியவாறும் இருக்க பெண்
நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவ்விதமாக மனதைக் கொன்றுவிடுவது எந்தப்
பெண்ணுக்கு சாத்தியமோ அவள் அந்த அச்சினுள் எடுத்த எடுப்பிலேயே இறப்பர்
கட்டியைப்போல் உறைந்து பொருந்திவிடுகிறாள். இங்கே அச்சுவடிவங்களில்
பொருந்த முடியாமல் அல்லது உறைய விரும்பாமல் தழும்புகின்ற, மீறி வழிகின்ற
பெண்களின் நிலை அளவற்ற சவால் நிறைந்த ஒன்றாகின்றது. சிலரது அச்சினுள்
கவிதைப் பெண்ணை இட்டு நிரப்ப இயலாமல் இருப்பதுதான் இந்நூற்றாண்டிலும் ஒரு
பெண் முன்வைக்கும் சமூகப் பதற்றமாகவிருக்கிறது. சில ஆண்களுக்கு
நாள்தோறும் அச்சத்தைக் கொடுப்பதோடு அவர்களுக்கு தீராத நரம்புத்
தளர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.



பெண்ணுடைய நுண்திறன், பரந்த சிந்தனை, கல்வி, தொழில் ரீதியான அனுபவங்கள்,
இயலாமைகளின் அளுத்தங்களால் எழும் கோபம், உயிர்வாழும் காலம் முழுவதிலும்
பெண் தனக்கு வழங்கக்கூடிய முக்கியத்துவம், தன்னுடைய வாழ்வை சரியென்று
எண்ணும் நியாயத்துடன் எதிர்கொள்ள அவளுக்குள்ள உரிமை அனைத்யையும் சேர்த்து
படையாகத்திரட்டி போர்புரியத் தொடங்குகிறாள். முதற்கட்டமாக தனக்குள்ளே....
அடுத்த கட்டமாக தனக்கு வெளியே.... சொற்களைக் கூர்மையாக்கி இரும்புப்
பாளமாய் சமூகம் எழுப்பியுள்ள அகன்ற தூண்களை அகற்றப் போராடுகிறாள்.



மூடுண்ட இறுக்கமான சதா நிர்ப்பந்திக்கின்ற இச்சூழ்நிலைகளுக்குள்
இருந்துதான் பாயிஸா கவிதைகளை எழுதிவருகிறார். பாயிஸாவின் கவிதைகள் கனன்று
எரியும் பருவத்தில் உள்ளன. ஊதி ஊதி மேலும் எரியச் செய்யும் கனவுகள்
பாயிஸாவுக்கும் உண்டு. தணல்களில் சில குளிரந்த தாரகைகளாக மினுக்கம்பெற
அவர் சில தூரங்கள் நிச்சயம் பயணிக்க வேண்டும். நதி தடைகளை அதன் போக்கிலே
உடைத்துப் பாய்வதுபோன்று அதுவாக நிகழும் என நான் நம்புகின்றேன். யாரும்
கட்டளையிடாமலேயே காட்டு மரத்திற்குத் தெரியும் எந்தப் பருவத்தில் எத்தனை
பூக்கள் பூக்க வேண்டும் என்பது. மிக அழகான வார்த்தைகளால் புதிய சொற்களால்
பாயிஸா எழுதியுள்ள கவிதைகள் இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில்
முக்கியத்துவமானவையாக அமையும். தொடர்ந்து தன்னுடைய சமூகத்தின் முன்பு
கனவுகளையும் பெருமிதங்களையும் கேள்விகளையும் கவிதைகளாக அவர் எழுத
வேண்டும். பாயிஸாவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு.... அதை அவரே
தீர்மானிக்க முடியும்.



பெண் கவிதை வெளியானது உள்ளார்ந்த மூட்டங்களால் மொழிக்குள்
புனையப்படுவதாகும். வாழ்க்கையை மலர்ச்சியும் ஒளியும் கொண்டதாக மாற்றி
அமைக்கக்கூடிய கலைத்தன்மைகள் மிகுந்த மனம் அந்த வாழ்வின் சவால்களுக்கூடாக
பயணிப்பதற்கும் கடந்து செல்வதற்கும் வழங்கப்பட்ட மாயவலிமையாக
அமைந்துவிடுகிறது. பாயிஸாவின் மனமானது அவருக்கேயான கவிதைகளால்
நிறைந்திருக்கிறது.

கனவுகளையும் எதார்த்தங்களையும் தனது மொழியின் மென்மையான அசைவுகளால் தீட்ட
முற்பட்டிருக்கிறார்.

பாயிஸா மிகுந்த முதிர்ச்சியோடு தனித் தன்மையுள்ள பெண் மொழியைக்கொண்டு
அழுத்தம் திருத்தமான சிறந்த கவிதைகளை நமக்குத் தந்திருக்கிறார். அன்பும்
நம்பிக்கையும் பெருமிதமுமாய் பாயிஸாவை ஆறத் தழுவுகின்றேன்.



அனார்

Comments

  1. ‘பாயிஸா மிகுந்த முதிர்ச்சியோடு தனித் தன்மையுள்ள பெண் மொழியைக்கொண்டு
    அழுத்தம் திருத்தமான சிறந்த கவிதைகளை நமக்குத் தந்திருக்கிறார். அன்பும்
    நம்பிக்கையும் பெருமிதமுமாய் பாயிஸாவை ஆரத் தழுவுகின்றேன்.’
    எனது கடல் முற்றம் தொகுப்பிற்கான முன்னுரையை வழங்கியதோடு இத்தொகுப்பை வெளிக்கொணர்வதில் மிகுந்த அக்கறையோடு தனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கிய சகோதரி அனாருக்கும், சகோதரர் லஷ்மி சரவணக்குமாருக்கும் மற்றும் மோக்லிபதிப்பகத்திற்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்.
    எஸ்.ஃபாயிஸா அலி
    கிண்ணியா இலங்கை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....