இலங்கைப் பயணம் : சில தருணங்கள். 1
படிப்பின் மீதான வெறுப்பில் கைவசம் இருந்த இரண்டு துணிகளோடு பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவில் வீட்டை விட்டு ஓடிய நாளில் தான் ஊர் சுற்றுதலின் மீதான பெரும் விருப்பம் துவங்கியது. அப்போதிலிருந்தே சிரமங்கள், சந்தோஷங்கள், தனிமை என எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள பயணம் அத்தியவசியமாகிப் போனது.  அலைச்சலுக்கான தவிப்பை உடல் தான் முதலில் ஏற்படுத்துகிறது. வெவ்வேறான கால நிலைகளில் வெவ்வேறான கூரைகளின் கீழ் சலித்து உறங்கும் நாட்களில் தான் வினோதமானதொரு நிறைவை உணர முடிகிறது. பொதுவில் நான் தனித்து அலைய விரும்புகிறவன். ஏனெனில் இலக்குகளோடு சரியாக திட்டமிட்டு பயணிப்பதை விரும்பாதவன். இத்தனை நாட்களுக்குள் இத்தனை இடங்களை சுற்றிவிட வேண்டுமென நினைப்பது ஒரு டூரிஸ்ட் கைடின் வேலை. ஒரு இன்பச் சுற்றுலாவிற்கான மனநிலைகளுக்குள் நான் எந்த ஊரின் சாலைகளையும் தேடுவதில்லை. ஒவ்வொரு சாலையும் பிரத்யேக கதைகளின் மனிதர்களின் பொக்கிஷம். அவற்றோடு பயணிப்பதின் வழி தான் அந்தரங்கமாக அனேக சமாச்சாரங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. பயணம் தரும் இன்பத்தை முழுமையாய் உணர நாம் அது குறித்து முன் முடிவுகளோடு இல்லாதிருப்பது தான் முக்கிய அடிப்படைஎதாவது ஒன்றை தெரிந்து கொள்ளவோ, கற்றுக்கொள்ளவோ எதையும் செய்ய விரும்கிறவனில்லை நான். எதையும் கற்றுக் கொள்ளாமல் இருப்பதில் மட்டுமே பாதுகாப்பை உணர்கிறேன். எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமென வலிய செய்யும் காரியங்கள் கசப்புகளையே உருவாக்கி இருக்கின்றன.

பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளை தவிர்த்து இந்தியாவின் கிரமாங்களுக்குள் சுற்றி வரும் ஒருவன் வறண்ட மலைகளும் பெருகியோடும் நதிகளும் சலனமில்லாமல் அந்நிலப்பரப்பை சூழ்ந்த மனிதர்களின் வாழ்வோடு எத்தனை அழுத்தமாக பிணைந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தேசம் முழுக்க நில மீட்பிற்கான போராட்டத்தை முன்னெடுப்பது இன்றளவும் எளிய மக்களே
எல்லா ஊர்களையும் இணைப்பதற்காகத்தான் சாலை என்கிற அறம் மறைந்து போய் அவசரங்களுக்குள் நம்மை வாழ நிர்ப்பந்தித்து விட்டார்கள். எல்லா மாநிலத்துக்காரனோடும் பேசி பழக முடிந்த வசதி இருந்தது முன்பு. தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் நடத்திய நாளில் இரவு நேரம் எங்களுக்கு பொக்கிஷம். வியாபாரத்தை தாண்டி ஒவ்வொரு நாளும் எவ்வளவோ சுவாரஸ்யம். நாற்கரச் சாலைகள் ஒவ்வொரு ஊரையும் அதன் மனிதர்களிடமிருந்து துண்டித்துவிட்டது
வியாபாரம், பிரயாணம், புதிய உறவுகள் என்பதெல்லாம் அழிந்து போய் எதற்காகவும் யாரையும் சந்திக்கும் தேவை இல்லாமல் போனது.

            இந்த முறை இலங்கைப் பயணம் குறித்து யோசிக்கும் போது நிச்சயமாக கார்கியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென முடிவு செய்திருந்தேன். ஒரு புதிய நிலத்தை சந்தித்து தெரிந்து கொள்வதை விடவும் புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டியது முக்கியமானதாய் இருந்தது. கடந்த முறை இலங்கைப் பயணம் குறித்து நான் விலாவாரியாய் எழுதி இருக்கவில்லை. அந்தப் பயணத்தின் வழி நான் கண்டு கொண்டது அனேகம். எந்தவிதமான முன்முடிவுகளும் திட்டமிடல்களும் இல்லாமல் ஓட்டமாவடி துவங்கி கிழக்கிலிருந்து வடக்கிற்கு நானும் நண்பர் இம்தாதும் ஒரு சின்னஞ்சிறிய ட்ரக்கில் நீண்ட தூரம் பயணித்தோம். வாழ்க்கை முறை சார்ந்து இப்படியெல்லாம் இருக்கக் கூடுமென நான் நம்பியிருந்த எல்லாமும் அங்கு இறங்கின நொடியில் தகர்ந்து போனது. மேலும் எல்லா ஊர்களிலும் உரையாடலுக்குத் தயாராய் இருந்த நண்பர்களை சந்திக்க முடிந்தது மிகப்பெரிய சந்தோசம். அத்தனை பேருமே முதல் முறையாக என்னை சந்திப்பவர்கள். நில அமைப்பிலும் வாழ்க்கை முறையிலும் தமிழ் நாட்டு தமிழர்களோடு கொஞ்சம் ஒத்திருப்பதாகத் தோன்றினாலும் நுட்பமாக அணுகும் போது வாழ்க்கை முறையில் ஏராளமான வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. உள்நாட்டு யுத்தம் முடிந்திருக்கிறது என்பது ஒரு வகையில் நிஜமென்றாலும் உண்மையில் இலங்கையர்கள் எதிர்த்து நிற்க வேண்டியது அங்கு வலுவாக காலூன்றியிருக்கும் இந்திய மற்றும் பிறநாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எதிராகத்தான். இலங்கையின் நாங்கள் பயணித்த பெரும்பாலான சாலைகளும் ஜப்பான், சீனா அரசாங்கத்தின் உதவியுடன் போடப்பட்டவை. தனித்துவமான புத்த தேச அடையாளமாய் இலங்கையை இந்த நாடுகள் பார்ப்பதும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை நிதியாக கொடுப்பதும் வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் மட்டுமல்ல. இலங்கையின் வளங்கள் மற்றும் துறைமுகங்களின் மீது இருக்கும் கவனமும் தான். மேலும் மதங்கள் நிறுவனமாகி இருக்கும் நூற்றாண்டு இது.
     கடந்த முறை பயணிக்கையில் கொழும்பிலிருந்து ஓட்டமாவடி, மட்டக்களப்பு, கல்முனை, அக்கறைபற்று என கிழக்கில் பயணித்து பின் அங்கிருந்து திருகோணமலை வழியாக முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி, பூ நகரி, யாழ்ப்பாணம் என நீண்ட பயணம் கண்டி வந்து பின் அங்கிருந்து ஹற்றனில் முடிந்து மீண்டும் கொழும்பு வருவதோடு முடிந்தது. இந்திய அமைதிப்படை இலங்கையில் நிகழ்த்திய அத்துமீறல்களை கொஞ்சமாய் வாசித்தும், ஆட்கள் சிலரின் வழியாகவும் கேட்டும் தெரிந்து கொண்டிருந்தாலும் உள்ளூரில் மக்களிடம் நேரடியாய் விசாரித்துத் தெரிந்து கொண்ட போது ஏற்பட்ட கொந்தளிப்பு கட்டற்றது. வல்வெட்டித் துறை வீதிகளில் வல்வெட்டித்துறை படுகொலை எங்கிருந்து துவங்கி எதன் வழியாக ஊருக்குள் வந்து பின் எவ்வாறு பெரும் குருதிக்களமாக மாறியது என்பதை அவ்வூரைச் சேர்ந்த ஆனந்த ராஜ் அவர்களின் மூலமாக தெரிந்து கொண்ட போது போலி சமாதானத்தின் வழியாய் இன்னும் இலங்கையரின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு தேசத்தின் குடிமகனாய் இருக்க கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது.
    
நல்லது முதல் பயணம் நிறைய புரிதல்களையும் நண்பர்களையும் கூடவே சில முரண்பாடுகளையும் தந்திருந்தாலும் இரண்டாவது பயணத்தை முடிந்த வரை இலகுவாக வைத்துக் கொள்ளவே விரும்பினேன். வருடத்தின் பெரும் பகுதி நாட்களை அலுவலகத்தில் கழிக்கும் கார்கிக்கு என்னோடான பயணங்கள் எப்போதும் புத்துணர்வு தரக்கூடியவை. முன்பு அவ்வப்பொழுது ஏதாவது ஒரு பயணம் மேற்கொள்வோம். பயணத்தின் சந்தோசங்கள் தூரத்தை பொருத்ததில்லை உடன் பயணிக்கும் நபரின் வழியாய் நாம் இவ்வுலகை எவ்வாறு பார்க்கிறோம் என்கிற அன்பில் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பல காலம் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள மறந்து போன விஷயங்களைக் கூட ஒரு பயணம் வெளிப்படுத்திவிடக் கூடும். பயணம் மனிதர்களை ரகசியங்கள் அற்றவர்களாக்கி விடுகிறது. புதிய நிலங்களில் புதிய மனிதர்களோடு பயணிக்கையில் இனம் புரியாத ஒரு விடுதலையுணர்வில் நம் அகவுலகம் எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்ப்பதை நாம் உணரமுடியும்.

ஆக இந்த முறை கொழும்பைத் தவிர்த்துவிட்டு இலங்கையின் உள் பகிதிகளில் சுற்றுவதெனத் திட்டமிட்டிருந்தோம். கொழும்பில் இறங்கிய சில நிமிடங்களிலேயே அன்றைய தினத்தின் மிக மோசமான வெயில் எங்களுக்கு இணக்கமானதொரு வரவேற்பைத் தந்திருக்கவில்லை. விமானநிலையத்திலிருந்து பெட்டா சென்று அங்கிருந்து கண்டி செல்ல திட்டம். நண்பர் உமாஜி வரவேற்க வந்திருந்தார். உடலில் இருந்து நீர்ச்சத்துகளை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் வல்லமை கொண்ட வினோத வெயில். போதாக்குறைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வேறு சென்றிருந்தோம். சென்னையிலிருந்து மதுரை திருநெல்வேலி பகுதிக்கு பத்து வருடங்களுக்கு முன்பு செல்லுமே அரசுப் பேருந்துகள் அது மாதிரியானதொரு விமானம். ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் மூட்டைப் பூச்சிகள் கடிக்கத் துவங்கிவிட்டன. எப்படியும் இறங்குவதற்குள் பெருச்சாளிகள் எதும் காலில் கடிக்கக் கூடுமென அச்சத்தோடு காத்திருந்தோம், நல்லவேளையாக அப்படி எதுவும் நடந்திருக்கவில்லை. ( இந்த இடத்தில் லங்கன் ஏர்வேஸ் குறித்து சொல்லியே ஆகவேண்டும். மிகக் குறைந்த செலவில் அருமையான வசதிகள் கொண்ட விமானச் சேவை லங்கன் ஏர்வேஸினுடையது. அவ்வளவு சுத்தம். அத்தோடு அழகான ஏர்ஹோஸ்டஸ்… இந்த விஷயத்தில் ஏர் இந்தியா கொடூரம்…) விமானப்பயணம் குறித்த எரிச்சலில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே கொழும்பு வெயில் வெழுத்து வாங்க, புதிய சிம் கார்டுகளை வாங்கிக் கொண்டு கண்டிக்கு பேருந்து ஏறினோம். சரியாக பள்ளிக்கூடம் முடிந்து விடுமுறை துவங்கும் காலம் என்பதோடு நான்கு நாட்களில் தமிழ் புத்தாண்டு. சிங்களவர்களுக்கும் அதே நாள் தான் அவர்களின் புத்தாண்டும். ஒட்டுமொத்த இலங்கையும் கொண்டாடும் பண்டிகை நாள் என்பதால் பேருந்துகளிலும் கூட்டம். சாலையிலும் கடுமையான வாகன நெருக்கடி. இலங்கையை ஒரு வகையில் திருவிழாக்களின் நாடென்று கூட சொல்லலாம். ஒவ்வொரு பெளர்ணமி தினத்தையும் பெளத்த மதத்தினர் மிக விசேஷமாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் பள்ளிக்கு கட்டாய விடுமுறையும் உண்டு. அத்தோடு இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களென எல்லோரைடய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன, இலங்கையின் முக்கியப் பண்டிகைகளுல் ஒன்று பெரஹர. ஆகஸ்ட் மாதத்தில் கண்டியில் நடக்கும் இந்த திருவிழா அற்புதமான ஒன்று. கடந்த முறை கண்டியில் இருந்தபோது இந்த திருவிழாவைக் காண நேரிட்டது. இலங்கையிலிருக்கும் யானைகள் அலங்கரிக்கப்பட்டு பெரும் ஊர்வலமாக கண்டிய அரண்மனையிலிருந்து கிளம்பி நகர் வலம் வந்து மீண்டும் அரண்மனையை அடைகின்றன. ஒவ்வொரு யானைக்கு முன்பாகவும் இலங்கையின் பிரத்யேகமான நடனத்தை இளைஞர்களும் யுவதிகளும் ஆடியபடி செல்வார்கள். வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்களை அந்த திருவிழாவின் போது நாம் காணமுடியும். அத்தோடு அந்த திருவிழாவையும் அந்த ஊர்வத்தில் ஆடும் யுவதிகளையும் காணும் ஒருவன் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் கண்டிதான் உலகின் அழகான ஊரென்று. என்ன ஆச்சர்யமென்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் அந்த திருவிழா முடிந்த இரவில் நீங்கள் நகரைக் காண வேண்டும்,. அத்தனை சுத்தமாக இருக்கும். அந்த சின்னஞ்சிறிய நகரை அவர்கள் அத்தனை அழகாக பராமரித்திருக்கிறார்கள்.

கண்டிக்கு கொஞ்சம் முன்பாகவே மவனுள்ளயில் நண்பர் ஆஷிக் எங்களுக்காக காத்திருந்தார். எனது இன்னொரு நண்பர் ஃபர்ஹானின் அறையில் வைத்து கடந்த முறை கொழும்பில் அவரது அறையில் சந்தித்த வகையில் பழக்கம். இந்தமுறை எங்களோடு மலையகம் முழுக்க பயணித்தது இவர்தான். சுற்றுலா வழிகாட்டியாகவும் மலையேற்றக்காரராகவும் அறியப்பட்ட ஆஷிக்கோடு மூன்று நாட்கள் மலையகத்தில் அலைந்து திரிந்த அனுபவம் அலாதியானது. அதிக கூட்டத்திலிருந்தாலும் சுற்றி இருக்கும் எல்லோரையும் ஊடுருவிப் பார்த்து கவனிப்பதையே விரும்பும் நான் தனித்திருப்பதை ஒருவிதக் கொண்டாட்டமாகவே எடுத்துக் கொள்வேன். பரந்து விரிந்து மலை முகட்டில் யாருமற்ற பொழுதில் நாமிருக்கும் போது இந்த மொத்த பிரபஞ்சமும் நமக்கேயானது என்னும் கர்வம் எழும். அதுவொரு விதமான போதை. மவனுள்ளவில் அவரது வீட்டில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மாலைக்கு மேல் கண்டியை நோக்கி பயணித்தோம். இரைச்சல், வாகன நெருக்கடி என எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் நகருக்குள் நுழைந்ததும் மயக்கும் தன்மை கொண்ட ஊர் கண்டி. கார்கிக்கும் அந்த ஊர் பிடித்துப் போனது.


                

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.