மத்திய சிறைவாசி எண் : 3718

                                              
அன்புள்ள விஜி…
”நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்க சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொருமுறை உன்னை பார்த்துவிட்டுத் திரும்பும் போதும் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய், எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவ அடிக்கடி பாக்கப் போறம்மா?’ என ஆதிரா கேக்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தை பதிலாக சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அனேகரும் என் முதுகுக்கு பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்து வைத்திருப்பது போல் சிரித்துக் கொள்கிறார்கள்.  என் பாதைகளெங்கும் இப்போதெல்லாம் அவமானத்தின் நகைப்புகள்  முதுகிலேறி தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. எதிர்காலம் குறித்து எந்தவிதமான நம்பிக்கைகளையும் உனக்கு இப்போது தர முடியாதுதான். ஆனாலும் உனக்கே உனக்கான அமுதாவாக இந்த வாழ்வை வாழும் உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த மாதத்தில் வந்து பார்க்கிறேன். ( உனக்கு தேவையானதை வாங்கிக் கொள். நான் வரும்போது பணம் தருகிறேன்.)
அமுதா.
     இந்த கடிதம் விஜியின் கைகளில் கிடைத்த போது அவன் வேலூருக்கு மாற்றப்பட்டு பத்து நாட்கள் ஆகியிருந்தன. பதில் கடிதம் எழுதுகிற சூழல் வாய்க்கவில்லை, தண்டனையின் நிமித்தமாய் மதுரை சிறையிலிருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து அச்சம் உடலின் ஒவ்வொரு நரம்பினுள்ளும் நுழைந்து அவனைத் தூங்கவிடவில்லை. கடுந்தண்டனைகளுக்கான தனிமைச் சிறையில் எட்டு நாட்களுக்கும் மேலாக அடைத்துவைக்கப்பட்டிருந்த விஜிக்கு பகல் இரவு எல்லாமும் இருளின் பிம்பங்களாகவே தெரிந்தன. வெளிச்சம் கசிந்து வருவதற்கென வைக்கப்பட்ட சின்னஞ்சிறு ஜன்னலை மறைத்தபடி உயர்ந்து வளர்ந்திருந்தது மரம். அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான அவனது அழுகைக்கும் கண்ணீருக்கும் ஆறுதலாய் ஒருவருமில்லாத தனிமை. பிரிவின் அதீத துயரமே நமக்கு விருப்பமானவர்களின் குரலையோ ஸ்பரிசத்தையோ உணரமுடியாமல் ஏற்படும் தவிப்புதான்.
அமுதா அவனின் காதலியென்றாலும் அவளுக்கு திருமணமாகிவிட்டது. சொல்லப் போனால் அவளின் திருமணத்திற்குப் பிறகாகத்தான் அவளை இவனுக்குத் தெரியும். காட்டு மரம் போன்றதொரு தேகம். அபூர்வமாகவே பெண்களுக்குள்ளிருக்கும் வலு அவளுக்கு.  தன்னை விடவும் மூன்று வயது அதிகமென்பதால் அவளோடு பேச அதீத கூச்சமும் அச்சமுமிருந்தது. தன்னை எதிர் கொண்ட சில நாட்களிலேயே தன் மீது அவனுக்கிருக்கும் எண்ணத்தை அமுதா புரிந்து கொண்டாலும் அவன் வயது காரணமாய் அவள் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை. பிறழ்வின் எந்தத் தடயங்களையும் அமுதா அவனுக்குக் காட்டியதில்லை. விடிகாலையில் மொத்த தெரு ஆட்களும் தத்தம் வீட்டு வாசலில் குழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கையில் கூட்டத்தை விலக்கி இவன் கண்கள் தெளிவாக அவளை அடையாளம் கண்டு கொள்ளும். தூரத்திலிருந்து சில நொடிகள் அவளும் கவனித்துத் திரும்புவாள். தன்னை மீறி அவனுக்குள் எழும் உணர்வெழுச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள ஒரே காரணம் மனோ அண்ணன் தான்.
மனோ அண்ணாவை தெருவில் எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கும். அவர் ராணுவத்திலிருப்பதாக சொல்லப்பட்டாலும் வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊரிலேயே தான் கிடப்பார். அமுதாவை விடவும் அரையடி உயரம் குறைவு. எப்பொழுதும் கண்களில் ஒளிரும் விளையாட்டு குணம். மனோ அண்ணா விடுமுறைக்கு வருவதும் இந்த பயல்களோடு  கிரிக்கெட் விளையாடுவதும், மாலை நேரங்களில் மதுவருந்துவதும் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. விஜிக்கு மட்டும் அவரை எதிர்கொள்ளும் போது தாங்கொண்ணாத குற்றவுணர்ச்சி எழும். தன்னை எதிர் கொள்ள தயங்கி விலகுகிறவர்களிடம் தான் மனிதர்களுக்கு இயல்பாகவே கவனமும் அக்கறையும் வரும். அவருக்கும் விஜியின் மீது அப்படியாகவே நிகழ்ந்தது. “ஏண்டா என்னக் கண்டாலே ஓட்ற?” “அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே… வேல…” “பெரிய பொடலங்க வேல… நம்ம ஏரியால இருக்கறதே நூறு வீடு. அதுக்கு ஒரு கேபிள் டீவி ஆப்ரேட்டர். இதுல  என்ன கேபிள் பிரச்சன வரப் போகுது.. இன்னிக்கு மதியம் வீட்டுக்கு வா.. உங்க அத்தாச்சி நாட்டுக்கோழி அடிச்சிருக்கா..” அவனுக்கு தயக்கமாகிவிடும். எப்படி எந்த உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளாமல் இருவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது. . அதன் பிறகு அவர் விடுமுறை முடிந்து ஊருக்குப் போகும் வரை கண்ணில் படவில்லை. ஊருக்குக் கிளம்பின தினத்தில் பார்க்க வந்த விஜி அவர் பையை எடுத்துக் கொண்டு அவரோடு ரயில் நிலையம் போனான். “டேய் அன்னிக்கு உன்ன சாப்ட வரச் சொன்னன்ல… ஏன் வரல..?” மனோ அண்ணா மறக்காமல் கேட்டார். அவனுக்கு தொண்டையில் முள் அடைத்துக் கொண்டதைப் போல் ஆகிப்போனாலும் சமாளித்து “முரளி அண்ணன் இப்ப புதுசா அப்பக்கரைலயும் கேபிள் நெட்வொர்க் ஆரம்பிச்சிருக்காருண்ணே. கலெக்‌ஷனுக்கு போயிட்டன்.”  சிரித்தான். “இதெல்லாம் ஒரு காரணமாடா?.. சரி இதுவே பொழப்புன்னு இருந்துடாத. ஒழுங்கா ஜிம்முக்குப் போ… அடுத்த வாட்டி வரும்போது எங்க யாரப் பாக்கனும்னு சொல்றேன். செலக்‌ஷன் இருக்கும். மிலிட்டிரிக்கி வந்துடு…” விஜி வெறுமனே சரியெனத் தலையாட்டிக் கொண்டான். இரவு நேர ரயில் நிலையத்தில் அதிக கூட்டமில்லை. அவர் செல்ல வேண்டிய ரயில் வருவதற்கு நிரம்ப நேரமிருந்தது. முன்பே தண்ணீர் பாட்டிலில் ரம்மை நிரப்பி இருவரும் எடுத்து வந்திருந்தனர். கடைசியாக வெளிச்சமில்லாமல் தனித்துக் கிடந்த கல் இருக்கையில் அமர்ந்து பேசியபடியே இருவரும் மெதுவாக மதுவருந்தினர். அவர் இயல்பாக தெருவிலிருக்கும் பெண்கள் குறித்து பேசியபடியே “நீ இன்னும் சும்மாவேதான் இருக்கியாடா? ஏரியாக்குள்ள ஒன்னுமா செட் ஆகல..?” கேட்டார். “ச்சே… ச்சே… அதெல்லாம் இல்லண்ணே.. எனக்கெங்க அதுக்கெல்லாம் நேரம்..?” முகத்தை வேறு பக்கமாக வைத்துக் கொண்டே சமாளித்தான். “சரி சரி மொச புடிக்கிற நாய் மூஞ்சியப் பாத்தா தெரியாது. நா தப்பா எதும் கேக்கலடா.. யாரையாச்சும் லவ் பன்றியா? எப்ப கல்யாணம் பன்னப் போற?” விஜிக்கு மனம் ஆறுதல் கொண்டாலும் அது தற்காலிகமானதே என்பதையும் தெரிந்து கொண்டான். தனது மனதை அரிக்கும் ஒன்றை எங்கு உளறிவிடுவோமோ என்கிற தயக்கத்தில் மதுவின் வீர்யம் போதையாக தலைக்கேறுமுன் கிளம்பிவிட நினைத்து “சரிண்ணே.. நீ பாத்து போயிட்டு வா… நா வீட்டுக்குப் போறேன்…” பெஞ்ச்சிலிருந்து எழுந்து கொண்டான்.  மனோ அவன் கைகளைப் பிடித்து நிறுத்தினார். “ஏண்டா ஊர்ல இருக்கறப்போ தான் முகங் கொடுத்து பேச மாட்டேங்கற, கெளம்பும் போதாச்சும் பேச வேண்டிதான…”  “இல்லண்ணே தம்பிக்கு ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சன. அது சம்பந்தமா முரளி அண்ணங்கிட்ட பேசி இருந்தேன். இப்போ போனாதான் சரியா இருக்கும்.” மனோ அவன் கைகளை விட்டுவிட்டு என்ன ஏதென்று கேட்காமல் பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணம் எடுத்து அவனிடம் கொடுத்தார். “இத வெச்சுக்கடா… எதாச்சும் வேணும்னா அமுதா கிட்ட கேளு. நான் அவ கிட்ட கூப்ட்டு சொல்லிடறேன்… அப்றம் வீட்ல வாட்டர் டேங்க் க்ளீன் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தா.. யாராச்சும் ஆள் இருந்தா வரச்சொல்லு” “சரிண்ணே…” விஜிக்கு அவரைத் திரும்பிப் பார்க்கவே கூச்சமாக இருக்க அவசரமாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அடுத்த நாள் பிற்பகலில் அமுதாவேதான் வீட்டிற்கு வரச்சொல்லி அவனுக்கு தொலைபேசினாள்.  தனக்கு விருப்பமான பெண் மட்டுமே இருக்குமிடத்தில் ஒரு ஆணுக்கு வரும் கூச்சத்தோடு உட்காரக் கூட முடியாமல் ஹாலின் ஒரு மூலையில் ஆதிரா சுவற்றில் வரைந்து வைத்திருந்த உயிரெழுத்துக்களை பார்த்தபடி நின்றான். “இந்தாடா… உங்கண்ணன் குடுக்க சொன்னாரு…” அவள் கையில் கொஞ்சம் பணமி்ருக்க “இல்ல பணம் வேணாம்.. பிரச்சன சரியாகிடுச்சு… இனி தேவப்படாது…” அவள் சிரித்தாள். “சரிடாப்பா மானஸ்தா.. வாங்கிக்கோ வேற எதுக்காச்சும் தேவப்படும்.” வம்படியாக அவன் சட்டைப் பைக்குள் திணித்தபோது அவள் கைகளிலிருந்து மலர்களின் நறுமணம் கசிந்து அவனுக்குள் சேர்ந்து கொண்டது. “உக்காரு.. இருந்து சாப்ட்டு போ…” இந்த சில நிமிட தனிமைக்கே மனம் பல்லாயிர முகம் கொண்டு சிலிர்த்துக் கிளர்ந்தது. “இல்ல நான் சாப்ட்டேன்… கொஞ்சம் வேல இருக்கு அப்றமா வர்றேன்..” அவசரமாக புறப்பட இருந்தவன் கதவுக்கு அருகில் வரை சென்று திரும்பினான். “வாட்டர் டேங்க் க்ளீன் பண்ண கேட்டிருந்தீங்களாமே… யாரையும் கூப்ட வேணாம்.. நாளைக்கு காலைல நானே வந்து பண்ணிவிடறேன்…” அவள் சரியெனத் தலையாட்டினாள். தாளிடப்பட்ட கதவின் மேல் தாள்ப்பாளை திறக்க முயன்றான். வலுவாக அடைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு கை வலிக்க மொத்த பலத்தையும் கொடுத்து இழுத்துப் பார்த்தான். அவன் தோளுக்கு நெருக்கமாக வந்து பின்னாலிருந்து தாள்ப்பாளை அமுதா லாவகமாக திறந்தாள். அவள் உடலின் சூடும் அருகாமையும் கிறுக்குப் பிடிக்க வைக்க திரும்பி அவசரமாய் அவளை அணைத்துக் கொண்டு முத்தமிட்டான். எந்த எதிர்வினைகளும்மில்லாமல் நின்றவள் சில நொடிகளுக்குப் பின் தன்னிலிருந்து பிரித்தாள். “உனக்கு இதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்கு. இத மட்டுமே நெனச்சு மனச குழப்பிக்காத… போ..” கண் கொண்டு அவளைப் பார்க்க முடியாமல் சடாரென எழுந்த குற்றவுணர்ச்சியோடு கதவைத் திறந்தான். “நான் இதுக்காக உன்னத் தப்பாவெல்லாம் நினைக்கலடா… எனக்கும் உன்ன ரொம்பப் பிடிக்கும். ஆனா அது  எல்லாத்துக்கும் சில வரம்புகள் இருக்கு… நீ எப்பவும் போல இங்க வந்துட்டு போ…” அவனுக்கு கண்கள் தளும்ப, “சரிங்க அத்தாச்சி…” என வார்த்தைகள் உடைய சொல்லிவிட்டு வேகமாக படியிறங்கிப் போனான்.
அதன் பிறகு அமுதாவை அப்படி பார்க்கக் கூடாதென எவ்வளவு முயன்றாலும் மனம் விடாப்பிடியாக மறுத்தது. அவள் குறித்தான எண்ணங்களே பூர்ண சந்தோசமாய் இருக்க, அதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. வாழ்க்கை ஒழுங்கீனங்களில் தான் அர்த்தப்பூர்வமானதாய் மாறிவிடுகிறது. நியாயங்கள் குறித்து மனிதர்கள் கற்றுக் கொண்ட எதுவும் பல நூற்றாண்டுகளாய் அவர்களை சந்தோசப்படுத்தவில்லை. ஆறுதலளிக்கவில்லை. எளிய தீர்மானங்களுக்காக அடகு வைக்கப்படும் நமது நேர்மைகள் துயர்மிக்கவை. பாவங்களினால் மட்டுமே இனிவரும் தலைமுறை தூய்மையடையக்கூடும்.
அந்தமுறை மனோ அண்ணன் விடுமுறைக்கு வந்தபோது ஊரில் திருவிழா போட்டிருந்தார்கள். எப்போதும் கொண்டாட்டத்தின் மனநிலையிலிருக்கும் மனோ அண்ணனுக்கு திருவிழா என்பது கொண்டாட்டத்தின் கொண்டாட்டம். வந்த முதல் நாளிலேயே விஜியிடம் செலக்‌ஷன் குறித்து அவர் பேச மறக்கவில்லை. ”கொஞ்ச நாள் போகட்டும்ணே… இப்ப உடனே வேணாம்…” மனோ அண்ணனின் பேச்சை மறுக்க மனமில்லாமல் சொன்னாலும் நிஜத்தில் அவனுக்கு இந்த ஊரைப் பிரிந்து எங்கும் செல்ல விருப்பமில்லை. ”யோசிச்சுக்கோடா.. நாலு காசு பாத்தாத்தான் ஊருக்குள்ள நம்மளுக்கு மதிப்பு.” அவர் ஆதுரமாகப் பேசினார். எப்போதும் போல் அடுத்த நொடியே முந்தைய நொடியில் நடந்த அவ்வளவையும் மறந்துவிட்டு அவனைக் கூட்டிக் கொண்டு தெருப் பையன்களுடன் மதுவருந்தச் சென்றார்.
திருவிழாவின் முதல் நாள் மாலை அவர் உறியடிக்க ஆர்வமாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு இறங்கி போதையில் தள்ளாடி தள்ளாடி காந்தி சிலை வாசலில் முட்டி விழுந்தார். விஜிதான் அவர் கண்களை அவிழ்த்துவிட்டுத் தூக்கி வந்தான். எல்லோரும் அவரைப் பார்த்து கேலி செய்து சிரித்ததைக் கூட அவரால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடிந்தது. அதன் பிறகு அவரை விஜி பார்க்கவில்லை. இரண்டாவது நாள் திருவிழா முடிந்து ஊர் அடங்கிக் கொண்டிருந்த நேரம். இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு காராணமாய் இந்தப் பகுதியிலிருந்த மதுக்கடைகளுக்கு விடுமுறை விடும்படி காவல்துறை உத்தரவு. ஹைவேயில் புதிதாகத் துவங்கியிருந்த தாபா பாரில் தான் தெரு ஆட்கள் மொத்தமும் இரவு பகலென மதுவருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஏரியாவிற்கும் பல காலமாகவே ஒரு பனிப்போர் நடந்தபடி தான் இருக்கிறது. அது யார் பகுதி கோவிலுக்கு நிறைய பேனர் வைப்பது என்பதில் துவங்கி பாட்டுக் கச்சேரி யாரைக் கூப்பிடுவது, டான்ஸுக்கு யாரைக் கூப்பிடுவதென எல்லாவற்றிலும் வரும் போட்டி நிகழ்ச்சி நடக்கும் போது சண்டைகளோடும் முடிவதுண்டு. முந்தைய தின இரவு ஏரியாவில் டான்ஸ் நடந்து கொண்டிருந்த போது கீழே இருந்து யாரோ சிலர் மண்ணை அள்ளி போட என்ன ஏதென்று விசாரிக்கும் முன்பாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆளுக்கொரு பக்கமாய் ஓடிப்போய் ஜெனரேட்டரை இணைத்தார்கள். டிரான்ஸ்ஃபார்மரில் யாரோ பச்சை வாழ மட்டையை போட்டுவிட்டு ஓடியதால் அது செயலிழந்து போனது. அப்போதே இது இந்த ஏரியாக்காரர்களின் வேலையாகத்தான் இருக்குமென எல்லோருக்கும் சந்தேகம்.  
இரண்டாவது நாள் மதுவருந்துகையில் பரிசாரகனான இளைஞன் ஒருவன் தான் அந்த தாபாவிலிருந்து குடித்துக் கொண்டிருந்த இரண்டு பேரை காட்டி இவர்கள் தான் நேற்று நடந்த பிரச்சனைக்கு காரணமென்று சொல்ல, குடிவெறியில் சண்டை துவங்கியது. எப்போதும் போல் இளைஞர்களோடு மதுவருந்திக் கொண்டிருந்த மனோ சண்டை வேகமாக வளர்வதைக் கண்டு ஓடிப்போய் விலக்கி விட்டார். எவ்வளவு கோவமிருந்த போதும் மனோ சொல்லியதற்காகவே ஏரியா ஆட்கள் சமாதானப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதற்குள் அடிவாங்கியவர்களின் நண்பர்கள் சிலர் அங்கு வர இப்பொழுது கோவம் முழுக்க மிச்சமிருந்த ஆட்களின் பக்கமாகத் திரும்பியது. இந்தமுறை நடந்த தாக்குதலில் யார் மீதும் காயம் பட்டுவிடக் கூடாதென்கிற கவனத்திலேயே மனோ சிலுவையை தனி மனிதனாய் சுமந்து கொண்டார். முழு போதையிலிருந்த மற்றவர்களால் அவரின் வெட்டுண்ட உடலை மட்டுந்தான் மீட்க முடிந்தது.
    மருத்துவமனையில் மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த உடலை தூரத்திலிருந்து பார்க்க கூட ஒருவரையும் அனுமதிக்கவில்லை. போலீஸ்காரர்கள் கொலைக்கான காரணத்தை விசாரித்தார்களேயன்றி ஆட்களைப் பிடிப்பதாயில்லை. எந்த விசாரணையும் இனி தன் கணவனை திரும்பத் தரப் போவதில்லையென்கிற வேதனையில் அழுது அரற்றிய அமுதாவின் வதங்கிப் போன உடலோடு ஒட்டிக் கிடந்தாள் அவளின் மகள். தெரு ஆட்கள் கொஞ்சம் பேர் வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்தும் போஸ்ட்மார்ட்டம் முடிந்து உடலைத் தருவது வரை எங்கும் செல்வதில்லையென பிடிவாதமாக இருந்தாள். எப்போதும் எல்லோரோடும் சிரித்துப் பேசி வாழ்ந்த அந்த மனிதனின் உடல் இறுதியாய் மயானத்தில் எரிந்தடங்கிய போது அவனருகில் ஒருவருமில்லை.
துயரத்தின் மொத்த நிறங்களையும் பூசி அழுது வடிந்திருந்த தெருவில் ஒவ்வொருவருக்குமே பிரியத்திற்குரிய ஒருவனை இழந்துவிட்ட வலி. ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாது கசங்கிப் போயிருந்த அமுதாவுடன் இரண்டு நாட்களும் விஜி இருந்தான். செய்தித் தாள்களின் வழியாகத்தான் கொலைக்குக் காரணமானவர்கள் கோர்ட்டில் சரண்டரானதும் அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படுவார்களென்பதும் தெரிய வந்தது. அமுதா செய்தித் தாளின் அந்தப் பக்கத்தை கிழித்து வைத்திருந்ததை விஜி மட்டுமே கவனித்திருந்தான். அவளிடமிருந்து அதைப் பிடுங்கி எடுக்க மனமில்லை. 
ஒரு வாரத்திற்குப்பின் அந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் வழக்கம் போல் ஆட்கள் கூடியிருந்த மதுரை நீதிமன்ற வளாகத்தில் என்ன நடக்குமென பார்க்க வந்திருந்த ஆட்களுடன் விஜியும் வந்திருந்தான். அமுதா ஏழெட்டு நாட்களாக அழுததில் இளைத்துப் போயிருந்தாள். பேயுரு கொண்ட கண்களில் வஞ்சத்தின் தீவிரம். மகளுக்காக கட்டுப்படுத்திக் கொண்ட பழியுணர்ச்சி வெளிப்படுத்தவியலாத தவிப்பாய் கொதித்தது. காவலர்கள் புடை சூழ அழைத்து வரப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்து கூடியிருந்த தெருக்காரர்கள் சராமாரியாக வசைகளைக் கொட்டினர். போலீஸ்காரர்கள் அவர்களின் முகத்தை மறைத்து வேகமாகக் கூட்டிச் சென்று கோர்ட் ரூமிற்கு வெளியே அமர வைத்தனர். சுற்றிலும் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.  கொலைகாரர்கள் இரண்டு பேரும் அமர்ந்திருந்த வளாகத்தில் சில வழக்கறிஞர்கள் அவர்களோடு சம்பந்தப்பட்ட சில விசாரணைக் கைதிகள் காவல்துறையினர் மட்டுமே போவதும் வருவதுமாய் இருந்தனர். விலங்கிடப்பட்ட கைகளோடு குத்த வைத்து அமர்ந்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அருகில்  இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர். சில வழக்கறிஞர்களோடு பேசியபடியே வந்த விஜி இருவருக்கும் அருகில் வந்ததும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆவேசமாக வெட்டினான். அந்த விபரீதத்தை எதிர்நோக்கி இராதவர்களாய் எல்லோரும் அலறத் துவங்க காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் எவ்வளவு அடித்தும் அவன் பின் வாங்கவில்லை. அவன் உடம்பில் பெருந்தீயென பற்றியெறிந்தது ஆவேசம். வெட்டுப்பட்டவர்கள் துடித்து அலறிய சத்தத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாய் அமுதாவின் கண்ணீரையும் அழுகையையும் மறக்கத் துவங்கினான். அதனாலேயே முன்னைவிடவும் மூர்க்கமாய் வெட்டினான். யார் யாரோ வந்து அடித்து இழுத்த பின்னரே அவன் கைகளிலிருந்த கத்தி நழுவியது. இரண்டு பேருக்கும் உயிரில்லையென உறுதிசெய்துகொண்டபின் எந்த எதிர்ப்புகளையும் காட்டாமல் போலீஸ்காரர்களோடு நடந்தவனின் கண்கள் தனக்கு எதிரிலிருந்த பெரிய கூட்டத்தில் அமுதாவைத் தேடின. பழியுணர்ச்சியின் சுவடுகள் கரையத் துவங்கின அவளின் கண்கள் அவனுக்காக கசிந்து கொண்டிருக்க, அவன் அவளுக்கு மட்டுமே தெரியும்படியாக புன்னகைத்தான். அந்த மிகச் சிறிய புன்னகைதான் அவனுக்கும் அவளுக்குமான அந்தரங்கம்.
சிறைக்கு வந்த முதல் நாளிலேயே அவனுக்கு தண்டனைகளின் அசல் பரிமாணம் பிடிபட்டது. முதல் தடவையாக பலர் கூடி நின்ற ஒரு வெளியில் தன்னை உடை களையச் சொன்ன காவலரைப் புரியாமல் பார்த்தான். “துணிய அவுடான்னா என்ன வேடிக்க..” பொடனியில் ஓங்கி போலீஸ்காரர் அடிக்க அவசரமாக அவிழ்த்தான். “வாயில எங்கயும் ப்ளேட சொருகி வெச்சிருக்கானான்னு பாருங்கய்யா..” அவனைப் பற்றின விவரங்களை எழுதி கொண்டிருந்த போலீஸ்காரர் சொல்ல “டேய் வாயத் தொற…. ம்… கால விரிச்சு நில்லு… ம்ம்ம். முன்னால குனி…” போலீஸ்காரரின் இறுக்கமான குரலுக்கு பணிந்து எல்லாவற்றையும் செய்தான். எல்லாம் முடிந்து உடை மாற்றிக் கொண்ட போது தன்னுடலில் அவமானத்தின் தழும்புகள் இடைவெளியில்லாமல் நிரம்பியிருப்பதாய் உணர்ந்தான். அங்கிருந்த சிலருக்கு முன்பே சிறையனுபவம் இருந்ததால் இயல்பாய் இருந்தனர். “இவய்ங்களப் பூராம் பி ப்ளாக் ல கொண்டு போயி போடுங்கய்யா..” பாரா நின்ற போலீஸ்காரர் இவர்களை மொத்தமாக ஒரு கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போனார்.  
 ஓவ்வொரு முறையும் அமுதா அவனைப் பார்த்துவிட்டுச் செல்லும் போதெல்லாம் அவள் தரும் பணத்தை வாங்க கூச்சமாக இருக்கும். சிறையிலிருக்கும் ஒருவனுக்கு ஒவ்வொரு ரூபாய்க்குமான மதிப்பு தெரியும். தனிமை வலி நிராசைகள் இவற்றை மறந்து உயர்ந்த சுவர்களுக்குள் ஒருவன் உறங்குவது எளிதானதில்லை. துவக்கத்தில் இருமல் மருந்துகள் காய்ச்சல் மாத்திரைகளென சாத்தியமுள்ள வழிகளிலேயே உறங்குவதற்கு முயன்று பார்த்தான். ஆனால் அவை கைகொடுக்கவில்லை. கொஞ்சம் புகையிலை உறக்கத்தை தராது போனாலும் துயரத்தை மறக்கச் செய்தது. அவனுக்கு அந்த சின்னஞ்சிறு தேவையை நிறைவேற்றிக் கொள்ளவும் அவசர தேவைகளுக்காகவும் பணம் தேவைப்படவே செய்தது. ஒரு பீடித்துண்டு முப்பது ரூபாய். ஹான்ஸ் புகையிலை பாக்கெட் ஐம்பது ரூபாய் இவற்றையெல்லாம் சிரமங்கொண்டு கைதிகளின் உறக்கத்திற்காகவும் பழக்கத்திற்காகவும் கொண்டு வரும் நீண்ட காலக் கைதிகள் இதில் மிச்சம் பண்ணும் சின்னதொரு தொகையைத்தான் அவ்வப்போது வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அமுதாவிடம் பணம் வாங்க கூச்சமிருந்ததால் அவனே ஏதாவது செய்து சிறைக்குள் சம்பாதிக்கலாமென சிலரிடம் உதவி கேட்டபோதுதான் கஞ்சா விற்பவர்கள் குறித்து தெரியவந்தது. வாரத்திற்கு ஒருமுறை வீட்டிலிருந்து பார்க்க வருகிறவர்களிடம் கிலோக் கணக்கில் மிச்சர் வாங்கச் சொல்லி அதற்குள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவைக் கலந்துவிடுவதுதான் டிரிக். ஆனால் அது பத்திரமாக வந்துசேர்வது அத்தனை எளிதான காரியமில்லை. அத்தோடு சிறைக்குள் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்து பாதுகாப்பதும் சிரமமான காரியம். தேவைக்கு முன்னால் எதுவும் சிரமமில்லையென விஜி உறுதியாய் இருக்க பக்கத்து பிளாக்கில் இருந்த ஒச்சு சொல்லித்தான் பொன்ராஜின் அறிமுகம் கிடைத்தது. “தம்பி உனக்கு என்ன ஆனாலும் பொருள் சேஃப்டியா இருக்கனும். முடியுமா? நீ புதுசுன்னு வேற சொல்ற. எப்டித் தாங்குவ?..” நம்பிக்கையில்லாமல் பொன்ராஜ் கேட்டான். “அதெல்லாம் நம்பலாம்ண்ணே… எனக்கு என்ன ஆனாலும் பொருள் சேஃப்டியா இருக்கும். காசும் கரெக்டா உங்களுக்கு வரும்ணே..” அடக்கமாக கை கட்டி நின்றான். “சரி ரெண்டு நாள் போகட்டும் பாக்கலாம்..” பொன்ராஜுக்கு கேட்டதும் கொடுக்க மனதில்லை. இரண்டு நாட்களுக்குப்பின் கொஞ்சமாக வந்த பொருளை அவன் பாதுகாப்பாக வைத்து விற்றதோடு குறைவாகவே கமிஷனும் எடுத்துக் கொண்டிருந்ததால் அவனை பொன்ராஜுக்குப் பிடித்துப் போனது.
ஒவ்வொரு புதன்கிழமையும் வழக்கமாக எல்லோருடைய செல்லுக்குள்ளும் நடக்கும் சோதனையில் அந்த முறை அவன் காட்டிக் கொடுக்கப்பட்டான்.  அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை அவனைக் காட்டிக் குடுத்தது அவனைப் போலவே திருட்டுத்தனமாக கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இன்னொருவனென. மாட்டிக் கொண்ட இரவில் நல்ல மழை. பரேட் நடக்கும் இடத்தையொட்டி வளர்ந்திருந்த அகன்ற மரத்தைக் கட்டிப்பிடித்தபடி நிற்க வைத்து கைகளை கட்டியிருந்தனர். தடித்த பிரம்புகளால் விடியும் வரை ஆள் மாற்றி ஆள் அடித்துத் துவைத்ததில் அரை உயிராய்ப் போனான். சில தொழில்களுக்குப் பழக்கப்பட திறமை மட்டும் போதுமானதில்லை, அனுபவமும் தந்திரங்களும் முக்கியம். பிந்தைய இரண்டும் விஜிக்கு வாய்த்திருக்காததால் அவனை அங்கிருந்து வேலூருக்கு அனுப்பிவைத்தனர்.
தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தண்டனை கைதிகளுக்கான பிளாக்கிற்கு மாற்றப்பட்ட இரண்டாம் நாள் அமுதா அவனைப் பார்க்க வந்திருந்தாள். நடக்க முடியாமல் தள்ளாடி வந்தவனை காணச் சகிக்கவில்லை அவளுக்கு. வழக்கமாக கச்சேரியில் இருக்கும் பேரிரைச்சல் தான். ஆனால் அன்று பிரபஞ்சமே பேசுவது போல் இருவருக்கும் காதுகள் அடைத்துப் போயின. பேச நா எழாமல் தவித்தான். “எதாச்சும் வேணும்னா எங்கிட்ட கேக்க வேண்டியதுதான? ஏன் இப்டி செஞ்ச?” அமுதா கோவத்தைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள். பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து கொண்டான். “பக்கத்துல இருக்கும் போது நெனச்சதும் வந்து பாத்துக்க முடியும், இப்ப பாரு எவ்ளோ தூரம்? எங்கிட்ட கேக்கறதுக்கு என்னடா உனக்கு?” அமுதாவின் குரல் அழுகையும் தவிப்புமாய் எதிரொலிக்க, பிடிமானத்திற்காக கம்பிகளைப் பிடித்து நின்றிருந்த விஜியின் கைகள் நடுங்கின. “இல்ல … நீயும் எவ்ளோ நாளைக்குத்தான் எனக்குக் குடுத்துட்டு இருப்ப… இனி நானே என்னப் பாத்துக்கறேன். நீ இவ்ளோ தூரம் அலைய வேணாம்…” இதை சத்தமாக சொல்லும் திராணியில்லாமல் விஜி முனுமுனுத்தான்.  ”நான் வந்து உன்ன பாக்கனும்னு நெனைக்கிறது நீ அனாதையா போயிடக் கூடாதுங்கறதுக்காக இல்ல, நான் அனாதையா போயிடக் கூடாதுன்னுதான்.. நீ சொன்னதும் பாதில விட்டுட்டுப் போற உறவு இல்ல நான். கொஞ்ச நாளைக்கு தயவு செஞ்சு எதுவும் செய்யாம பொறுமையா இரு…” அவன் அவளின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் வெறுமனே தலையை ஆட்டினான். “சரி கவுண்ட்டர் கிட்ட வா… கொஞ்சம் பழம் வாங்கிட்டு வந்தேன் வாங்கிட்டுப் போ…” கூட்டத்தை விலக்கி இரண்டு பேரும் வந்தனர். பார்வையாளர்களுக்கும் கைதிகளுக்கும்  இரண்டு கம்பி வேலிக்கு நடுவில் பொறுப்பிலிருந்த காவல் அதிகாரி அமுதா எழுதி உள்ளே அனுப்பியிருந்த பார்வையாளர் மனுவைப் பார்த்தார். உறவினர் என்ற இடத்தில் மனைவி எனக் குறிப்பிடப்பட்டிருக்க, ஒருமுறை இருமிக் கொண்டு “நீங்கதான் மனைவியா… ஏம்மா பாக்க நல்லவங்களா தெரியறீங்க. இவனுக்கு புத்தி சொல்லக் கூடாதா… பனிஷ்மெண்ட் வாங்கிட்டு வர்றதெல்லாம் பின்னால விடுதல செய்ய நினைக்கறப்ப ப்ளாக் மார்க் ஆயிடும்.. எடுத்து சொல்லுங்கம்மா..” அவர் மனுவைப் பார்த்துவிட்டு சொன்ன வார்த்தைகளைக் கேட்ட விஜியின் கண்கள் அமுதாவை விட்டு அகலவில்லை. தான் கொண்டு வந்த  பொருட்களை காவலரிடம் கொடுத்து  “இனிமே அந்தமாதிரில்லாம் செய்ய மாட்டான் ஸார்… கொஞ்சம் பாத்துக்கங்க…” நன்றியோடு புன்னகைத்தாள். கம்பிக் கதவின் வழி துண்டில் பழங்களை வாங்கிக் கொண்ட விஜியின் கைகள் குளிர்ந்து போயிருந்தன.


Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.