வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவைக்கு ஊடகவியலாளர் சுகிதா எழுதியிருக்கும் விமர்சனம்.

எழுத்து சார்ந்த புரிதலும் .... எழுத்தாளர் சார்ந்த புரிதலும் படைப்புக்கான வெற்றியை தீர்மானிக்கின்றன... வாசகனுக்கு எழுத்தாளன் சார்ந்த புரிதல் தேவைப்படாது...ஆனால் எழுத்து சார்ந்த புரிதல் வேண்டும் ....இந்த இரண்டும் எனக்கு வாய்த்திருக்கிறது நண்பன் என்ற முறையில் லஷ்மையை நன்கறிவதால் ....
ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது.

இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத் துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. . அந்த வரிசையில் லஷ்மியின் கதைகளில் புனைவுகளை தாண்டி இயல்புகள் ஆங்காகங்கே துருத்திக் கொண்டு நிற்கின்றன.
இன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது.
கதையை படிக்கும் சில நேரங்களில் நானே அப்பாத்திரமாக மாறினேன்... குறிப்பாக அத்தை கதை என் ஊரில் எனக்கு நேர்ந்த அதே திருவிழா அனுபவத்தை மணக்கண்ணில் பார்த்தது.
விமர்சனங்கள் எப்போதும் சூடானவை... அதன் வலி தான் படைப்பாளியை அடுத்த இலக்கை வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது. விளையாட்டை விட வேறெங்கும் முழுமையாக விமர்சினத்தை யாரும் சொல்வதில்லை ... என்கிறார் ராமகிருஷ்ணன் .. ஒவ்வொரு விளையாட்டிற்கு ஆடுகளம் ஆரம்பித்து விளையாட்டு விதிகள் வரை உண்டு. ஆனால் எழுத்தாளனுக்கு அப்படி எந்த விதிகளும் வரையறைகளும் தேவை இல்லை …ஆதனால் தான் ஒருவருக்கு பிடிக்கும் படைப்பு மற்றவருக்கு பிடிக்காமல் போகிறது…

லஷ்மியின் வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை உண்மையாகவே என்னை அதிகம் பாதித்தது....பெண்களின் வலி ... நாகரிக வளர்ச்சியை நுகராத ஒரு பெண்ணின் இயல்பை வடித்திருக்க கூடிய இடங்களில் லஷ்மி பெண்கள் மனதை கொள்ளை கொள்கிறார்.... ரொம்ப யோசிக்கதேவை இல்லை அவர் கதைகளை படிப்பதற்கு ..ஒச்சம்மா ,ஆதக்கா ,வசுந்திரா,சுந்தரி,ஆகிய பாத்திரங்கள் நம்மை பக்கத்து வீடுகளில் நமக்கு மகிவும் பரிட்சயமான ஒன்றாக தான் இருக்கிறது.... கிராமத்து நெடிகள் ஒவ்வொரு பக்கத்திலும் நம் நாசியை துளைக்கிறது...
அதிகம் படிக்காத பெண்களிடம் சுற்றம் ,நாகரிகம் ,முகத்தாட்சண்யம் போன்ற எந்த தடங்கலும் இல்லை அவர்கள் உண்மை ,நியாயம் இதை தாண்டி எது குறித்தும் யோசிக்க மாட்டார்கள் ...அது லஷ்மி தன் அனைத்து கதையின் நாயகிகளிடமும் கையாள்கிறார் .உதாரணமாக பேருந்தில் ஒருவன் தன் மீது உரசினான் என்றால் சத்தம் போட்டு திட்டலாமா ? எச்சரிக்கலாமா ? கத்தி பேசினால் நம்மை பற்றி சக பயணிகள் என்ன நினைப்பார்கள் இப்படி பல கேள்விகளை மனதிற்குள் கேட்டுக் கொண்டுத் அதன்பின் அடுத்த கட்டமாக தன் நகர்வை முடிவெடுப்பாள் நாகரிகம் அறிந்த ஒரு பெண் ..சில நேரங்களில் அவள் நகர்ந்து சென்று மனதிற்குள்ளேயே புழுங்கிபோகவும் வாய்ப்புண்டு... ஆனால் எதுவும் படிக்காத கிராமத்து பெண்,தன் உடலின் மீது உரசியவனை தீப்பொறி கக்க திட்டவும் ஏன் அடிக்கவும் கூட சட்டை காலரை பிடிக்க முடியும் ...அவளுக்கு அந்த தைரியம் எதார்த்தமாக வந்தது... அதனை லஷ்மி தன்னுடைய பெரும்பான்மை கதைநாயகிளிடமும் வடித்திருக்கிறார்.
கதைகள் எல்லாமே மனித மனத்தின் கற்பனைதான் என்றாலும், இதன் அடிப்படை ஒன்றுதான். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டதாகவே இருக்கின்றன.
முதல் தகவல் அறிக்கை ..எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை ... ஒரு கிழவியின் மரணத்தை ஒரு ஊர் எப்படி பேசும் என்பதை முதல் தகவல் அறிக்கைக்கான 5 சாட்சிகளை கொண்டு பதிவு செய்கிறார் ... இந்த கதை நடையே சற்று வியக்க வைக்கிறது ... அது மட்டும் அல்ல வாழ்வில் நம்மை சுற்றி நடக்க கூடிய சம்பவங்களுக்கு மொழி உருவம் கொடுத்தால் எத்தகையதாக இருக்கும் ...இன்றைக்கு நாடு முழுவதும் 3 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி இருப்பதாகவும் உச்சநீதிமன்றங்களில் ஆண்டுக்கு 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது... அப்படி என்றால் லஷ்மியிடம் எத்தனை கதைகள் இருக்கிறது... பதிவு செய்தும் பதிவு செய்யப்படாமலும் ... இருப்பதை லஷ்மியின் கவனத்திற்கே விட்டுவிடலாம் ...நாளையிலிருந்து தினமும் போலிஸ் ஸ்டேஷன் சென்றால் உங்களுக்கு விதவிதமான கதைகளும் ஏன் வருங்காலத்தில் கதையின் கதப்பாத்திரங்களும் கிடைக்கும் ... இந்த கதையில் பாட்டி கடைசி வரை தனியாக வாழ்வாள் ....அது போன்று பெரும்பாலான பாட்டிகளை இன்றைக்கும் நாம் கிராமங்களில் பார்க்க முடியும் ...வயது வரைந்தகோடுகளில் ,இளமையோடு குடும்பங்களையும் தொலைத்த பல கிழவிகளுக்கு தனிமையில் முதுமை மட்டுமே துணையாக இருக்கும் ... அவர் கடந்து வந்த பல கிழவிகளை அந்த ஒரு கதைகளில் சாட்சிகள் வாயிலாக சொல்லி இருக்கிறார் ... இறந்து போனவளின் கடந்த காலத்தை பேசும் கதை என்றில்லாமல் முதல் தகவல் அறிக்கை என்பதால் அந்த நடைக்கு ஏற்ப பாத்திரத்தின் கற்பனை ... அளவோடே இருப்பதில் லஷ்மியின் கவனம் இருந்திருக்கிறது...பெண் என்றாலே குழந்தை பெற்றுக் கொள்ள கூடியவள் ... என்ற சித்தாந்த்தை சமூகத்தில் பெண்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எழுதப்படாத விதிக்கப்படாத கட்டளைகளை பதிவு செய்யும் போது ... இன்னும் இந்த தளத்தில் பெண்ணுரிமை குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பது படிக்கும் போது நம் காதுகளில் இறந்துபோன பாட்டியின் குரலாக ஏதோ ஒரு பாட்டியின் முகச்சாயலில் ஒலிக்கிறது,...

முகம் தெரியாத ஒரு எழுத்தாளனின் கதையை படிக்கும்போதும் வாசகனுக்கு கதை குறித்த புரிதலோடு முடிந்து போய்விடுகிறது ..ஆனால் பரிட்சியமான எழுத்தாளர் அல்லது நண்பர் என்னும் பட்சத்தில் இன்னும் கூடுதலாக அந்த கதைகள் நம்மை ஈர்க்கின்றன..சில நேரங்களில் எழுத்தாளனின் குணங்களோடு ஒப்பீடு வரை செய்யமுடிகிறது… இதை எல்லாம் தாண்டி விமர்சனம் செய்வதற்காக கதை படிக்கும் போது சில விதிகளும் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை போன்று வந்து ஒட்டிக் கொள்கின்றன. ஆனால் லஷ்மியின் கதை இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி அந்த கதை களத்திற்கு என்னை இழுத்தது.
அம்மா மகள் இருவரையும் ஒருவன் ஒரே நேரத்தில் ஆசைக் கொள்ள முடியுமா ..நீண்ட நாட்களாக அம்மாவின் மீது கண்ணாக இருந்தவன் சந்தர்ப்பம் வாய்க்கிறது என்பதற்காக மகளுடன் புணைகிறான் … இது எப்படி சாத்தியம் ..அல்லது மரபாகும் இப்படி எல்லோரும் கேள்வி கேட்பார்கள் என்பதை புறந்தள்ளி அதாவது உடலின் தேவையை சந்தர்ப்பம் தான் தீர்மானிக்கிறது என்று தன் கதையில் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறார் லஷ்மி…
கிராமங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன…தண்ணீரின்றி விவசாயம் முற்றிலும் முடங்கி நகரத்தை நோக்கி நகர்பவர்களுக்கு இருக்க கூடிய பிரச்சினைகளை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்… கிராமங்கள் மறைகின்றன…என்று ஒவ்வொரு வரியிலும் அந்த கதையில் உஷார் படுத்துகிறார்.
நெசவுதொழிலின் முழுவதையும் கண் முன்னே கதையில் கொண்டு வரும் லஷ்மியின் அந்த கதையில் நெசவு தொழிலில் நூல் சுற்றுவது ஆரம்பித்து இயந்திரங்கள் இயக்குவதை வரை நாம் கதை வழியாகவே கற்றுக் கொள்ளலாம் … அவ்வளவு நேர்த்தியாக அந்த தொழில் குறித்து எழுதுகிறார் .
அதே நேரத்தில் யாராலும் மதிக்கப்படாமல் தொடர்ந்து பல ஆண்டுகளால வேலை செய்தும் சூதானம் இல்லாமல் பொறுப்பும் இல்லாமல் அந்தநெசவாலைக்கே கோமாளியாக வலம் வரும் கதாநாயகனுக்கு திருமணம் ...அவனை காதலிக்கும் சுந்தரியை வேண்டாம் என்று உறவுகள் சொல்லி வேறு சாதியில் திருமணம் செய்து வைக்கிறார்கள் …கோமாளியாக ஊர் சுற்றினால் கூட சாதி என்று வரும் போது அவனுக்கு தாழ்த்தப்பட்ட பொண்ணை கல்யாணம் செய்து வைத்துவிடக் கூடாது என்று சாதியை தூக்கிப் பிடிக்கும் உறவுக் கார பெருசுகளை ஒற்றை வரியில் சொல்லி விடுகிறார்… .’அந்த சாதி புள்ள வேண்டாம் ‘. இந்த ஒற்றை வரி இன்று தமிழகத்தின் நிலையை புரட்டி போடும் சம்பவங்களும் கலவர பூமியாக மாறிவருவதை யும் பார்க்கும் போது சமூக பொறுப்பை போகிற போக்கில் எழுத்தாளனால் சொல்ல முடிகிறது .
பாம்பிற்கு பல் எடுத்துவிட்டால் விஷம் இருக்காது என்பதை அனைவரும்அறிந்த ஒன்று ..ஆனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை விஷப்பை பாம்பிற்கு கட்டும் அதை நீக்காவிட்டால் ஆபத்து என்பதை உணர்த்தும் போது கற்பனை கதை என்றில்லாமல் பாம்பு குறித்த முழு புரிதலோடு அந்த கதையை எழுதி இருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதே நேரத்தில் சினிமாக்காரனாக ,சினிமாவில் ஹீரோவை எப்படி நடத்துவார்கள் ஒரு பாம்பாட்டியை எப்படி நடத்துவார்கள் என்பதையும் சொல்ல தவறவில்லை அவரது ஆர்ஞ்சு சிறுகதை …
சினிமாவை நம்பி வரும் பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை யும் இந்த தொகுப்பில் இருக்கிறது. பள்ளிகளில் மேடை ஏறியதை நம்பி சினிமாவில் பெரிய நடனக் கலைஞராக வேண்டும் என்ற கனவோடு வரும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ,வலிகளை அவர்களது கண்ணீரை வரிக்கு வரி வேதனையோடு கண்முன்னே வடிக்கிறார்… பிரியாவின் கதையை படித்த போது சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கை பேட்டிக்காக இன்றைக்கு டான்ஸ் மாஸ்டராகவும் அன்றைக்கு நடன உதவியாளராக பணி ஆற்றிய சாந்தயின் கதை நினைவுக்கு வந்தது.
இப்படி ஒவ்வொரு கதையும் நாம் சந்தித்த பெண்களை மீண்டும் அச்சில் வார்த்தெடுத்த்து போன்று இருக்கிறது… ஒரே ஒரு குறை லஷ்மியின் நாயகிகள் எல்லாம் இறுதியில் தோற்றுப் போனவர்களாகவே இருக்கிறார்கள் … ஆனால் வசுந்திரா என்னும் நீல வர்ணப்பறவை கதையும் நீலநதியும் விதிவிலக்கு . ஒரு பெண்ணுக்கு சிறகு முளைத்து வானில் பறந்தால் எப்படி இருக்கும் …கட்டுபாடுகளை உடைத்து எல்லைகளை கடந்து திரியும் வசுந்திரா உண்மையாகவே எல்லா பெண்ணிற்குள்ளும் இருக்கும் ஆசை பாத்திரம் தான் … பெண் மனதோடு எழுத்துகளில் உள்வாங்கி லஷ்மி சரவணக்குமார் எழுதியிருக்கிறார் . பெண்களை மிக நுட்பமாக ஆழமாக கவனிக்கிறார் என்று அதற்கு அர்த்தம். வசுந்திரா என்னும் நீலவர்ணப்பறவை கதையில் வசுந்திரா கடல் மேலே உயரமாக பறப்பதும் அப்போது தொடையின் கீழ் அந்த பறவைக்கு ரத்தம் வழிவதாகவும் அப்போதும் மேலே மேலே அந்த பறவை பறப்பதோடும் முடிகிறது கதை…பெண்ணின் பருவ மாற்றத்தை இங்கே கூத்தாக்கி கொண்டிருக்கும் போது சமூகத்தில் எப்போதும் பெண் என்பவள் சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டியவள் என்பதை உணர்த்துகிறார் .
எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தனக்குள் படிக்கும் போது தீர்மானிக்ப்பார்கள் ..ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் கதையின் முடிவை அனைத்து கதைகளிலும் நேர்த்தியாக லஷ்மி முடித்திருப்பது லஷ்மியின் எழுத்து ஆளுமைக்கான சான்று .ஒரே ஒரு வேண்டுகோள் லஷ்மி வெற்றி பெற்ற பெண்கள் குறித்து விரைவில் ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் …
பின் குறிப்பு
முன் குறிப்பை பின் குறிப்பாக எழுதுவதற்கு காரணம் இருக்கிறது ..இதனை படிப்பவர்கள் விமர்சின கூட்டத்துக்கு அழைத்ததால் தான் இப்படி எழுதி இருக்கிறேன் என்று எந்த ஒரு இடத்திலும் மேலே படிக்கும் போது நினைத்துவிடக் கூடாது..அதனால் பின் குறிப்பு …லஷ்மியின் 5 நூல்கள் குறித்த விமர்சன கூட்டத்தில் பங்கேற்க கடந்தவாரம் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது… பெரும்பாலும் இலக்கிய உலகிற்கு அன்னியமானவள் நான் . தினசரி செய்திகள் அதன் பின்னணி குறித்து படிக்கவும் அடுத்த நாள் தன் நிகழ்ச்சிக்கு தயாராவதற்கான குறிப்புகளை படிப்பதலயுமே என் நேரம் முழுவதயும் கட்டுரைகள் சாப்பிட்டுவிடும். பிறகு எங்கு சிறுகதை நாவல் என்று படிப்பது ..இருப்பினும் அவ்வப்போது படிப்பதுண்டு ..அந்த வகையில் இலக்கியத்திற்கு வெளியில் உள்ள ஒரு ஆள் தன் சிறுகதையை எப்படி பார்க்கிறார் என்று லஷ்மி நினைத்திருக்க கூடும் ..அந்த சோதனை எலியாக கூட நான் இருக்கலாம் …அதே நேரத்தில் பெண்களின் உரிமை பாதுகாப்பு தளத்தில் தொடர்ந்து நிகழச்சிகளை நடத்துவதால் இந்த சிறுகதை தொகுப்பை விமர்ச்சிக்க சரியான ஆள் என்றும் நினைத்திருக்கலாம் ..அது லஷ்மிக்கே வெளிச்சம் ..இருப்பினும் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முழு மனதோடும் ,ஆர்வத்துடனும் மகிழ்வுடனுமே செய்து முடித்திருக்கிறேன் …அன்று கூட்டத்தில் நேரம் குறைவென்பதால் நான் குறைவாகவே பேசினேன் …அதனால் தான் …இந்த பதிவு…

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.