பட்டு - ஆழ் குளத்தில் நீந்தும் வார்த்தை மீன்கள்.


மிக அற்புதமான இரவு இது ... அலெசாண்டோ பாரிக்கோவின் ‘பட்டு’ நாவலை வாசித்தேன்... வெறும் ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிட்டாலும் அந்த நாவல் ஏற்படுத்தியிருக்கும் மனக்கிளர்ச்சி அபாரமானதாய் இருக்கிறது. வாசிப்பவனின் மனதிற்குள் மிக ஆழமாக பயணிக்கும் சொற்கள் ... ஒரு மிக இனிய இசையைக் கோர்வையைக் கேட்டபடி தொலைவில் எங்கோ இருக்கும் காதலியை அணைத்துக் கொள்வது போன்ற மனநிலை ... தனிமனிதனின் மென்னுணர்வுகளைலாவகமாக சுழலுக்குள்ளாக்கி மீண்டும் மீண்டும் வார்த்தைகளை விழுங்க வைக்கிறது நாவல்...
மிக அற்புதமான மொழிபெயர்ப்பு .... இப்படியொரு நாவலை மொழிபெயர்த்துக் கொடுத்ததற்காக நன்றி சுகுமாரன்...
( ஆயிரம் பக்கம் எழுதினால் தான் நாவல் என பிடிவாதமாக மொக்கை போடும் என் சக நாவலாசிரிய செல்லக்க்குட்டிகளுக்கெல்லாம் ஆளுக்கொரு பிரதி வாங்கி அனுப்பி வைக்க ஆசையாய் இருக்கிறது... )

இந்த நாவலில் திடீர்த் திருப்பங்களோ, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களோ, உலகையே புரட்டிப்போடும் வரலாறோ ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு ஜென் துஇறவி அமைதியாக இவ்வுலகைக் கண்டு புன்னகைக்கும் ஒரு அசாத்தியமான எளிமையும் கவித்துவமும் இருக்கிறது. இருப்பதிலேயே மிகச் சிறந்த உரையாடல் ஒரு புனைவில் எப்போழுதும் மிகக் குறைவாக உரையாடல் எழுதுப்படுதல் தான். குறைவாக எழுதப்படுதல் என்பது துண்டு துண்டாகச் செய்தல் அல்ல. கச்சிதமான வார்த்தைகள். வார்த்தைகளுக்காக தமிழ் எழுத்தாளன் படும் துயரம் சொல்லி மாளாதது... அம்மாவை ம்ம்மா என்று எழுதினால் புதுமையாக இருக்கும் என இருக்கும் வார்த்தைகளையும் கழுதை மயிர்களைப் போல் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பட்டு நாவலை வாசிக்கையில் அந்தப் பாத்டிரங்களின் உரையாடலுக்குள் ரகசியமாய் வாசகனையும் விருந்துக்கு அழைக்கும் சாமர்த்தியமும் தனது கதைக்குள் புகுந்து வெளியேறச் செய்யும் அக்கறையும் இழையோடியுள்ளது. ஹெர்வே ஜான்கர் ஒவ்வொரு முறையும் ஜப்பானுக்குப் பயணமாவதை அதன் ஒரு வார்த்தை கூட மாற்ராமல் திரும்பத் திரும்பச் சொன்னாலும் மலை ஏறுகிறவன் களைப்புத் தெர்ரியாமலிருக்க அல்லது இது என் வேலை இல்லை என் வாழ்க்கை அர்த்தப்படுத்தும் கலை என வெளிப்படுத்திக் கொள்வது போல் அந்த வரிகளுக்குப் பின்னாலிருக்கும் அந்தக் காலகட்டத்தின் வரலாறுகளுக்குள், நீண்ட தூரப் பயணத்திற்குள் எல்லைகள் நிகழ்த்தின அதிகார அரசியல் என அல்லாமும் அடங்கியுள்ளது. ரயிலில் ஜெர்மானிய பத்திரிக்கையை வாசிக்கும் ஒரு ரஷ்யனை அவன் சந்திப்பதாக சொல்லும் இடமும் பயணப்படும் அந்த காலகட்டமும் மறைமுகமாக நமக்கு அதன் பின்னால் கனன்று கொண்டிருந்த அரசியலை சொல்லிச் செல்கிறது. உண்மையில் இந்த நாவலுக்கு அப்படியான அரசியல் சமாச்சாரங்களை தனக்குள்ளே நேரடியாகவோ பூடகமாகவோ பேசிச் செல்ல வேண்டுமென்கிற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. இருந்தும் நாவலின் துவக்கமே “அது 1861 ம் ஆண்டு, ஃபோளோபேர் மேடம் பவாரியை எழுதிக் கொண்டிருந்தார். மின் விளக்கு வெறும் கற்பனையாக இருந்தது. பெருங்கடலுக்கு அப்பால் ஆப்ரஹாம் லிங்கன் தனது ஆயுளில் முடிவுகாண முடியாமற்போன ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்.” என்று தான் துவங்குகிறது. நாலுவரிகளில் அந்தக் காலகட்டத்தையும் அந்தக் காலகட்டத்தின் வாழ்விற்குப் பின்னாலிருந்த அரசியல் தேவையையும் நமக்குப் புரியவைத்து விடுகிறது.
’ஒவ்வொரு நூழிலை பட்டிற்கும் பின்னால் கடக்க வேண்டியிருந்த தூரங்கள் ... வாங்க வேண்டியிருந்த ஆயுதங்கள், நிகழ வேண்டியிருந்த கண்டுபிடிப்புகள் ... மேற்கும் கிழக்கும் தங்களை ரகசியமாய் குதறிக் கொள்ள நேர்ந்த தருணங்கள் எல்லாமே நம்மை கவனமாக வாசிக்கச் சொல்லுகின்றன. இந்த வரிகளை அல்ல இந்த வரிகளினூடாய் மறைந்து கிடக்கும் நூற்றாண்டை கவனிக்கச் சொல்லி. இதை ஒரு அரசியல் தன்மையான நாவலென்று ஒருக்காலமும் சொல்லி விட முடியாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ரொமாண்டிச நாவல் என்று நாம் புரிந்து கொள்ளலாம். மனித உணர்வுகளுக்குள் உறவுகள் மற்றும் நம்பிக்கை குறித்தான விருப்பங்கள் எல்லாம் ஒவ்வொரு கனமும் என்னவாகவெல்லாம் பரிணமிக்கின்றன, நம் கனவுகளை நாமே அழித்துக் கொள்ள முடிவதைப் போலத்தான்.
‘திரும்பி வா ... இல்லை என்றால் இறந்து விடுவேன் ‘ என்று கடிதம் தந்துவிடுகிறவள் கடைசி வரை அவனுடன் எதையும் பேசிக்கொள்ளவில்லை. அவளை சந்திக்க நேர்ந்த மலையையும் அந்த மலையெங்கும் விரவிக் கிடக்கும் மரங்களையும், பறவைகளையும் தனது மனவெளியுங்கும் அள்ளி நிரப்பிக் கொள்கிறவன் அதை தனது ஊரிலேயே கொண்டு வரும் முயற்சியாகத்தான் அப்படியானதொரு தோட்டத்தை உருவாக்குகிறானோ என்று நினைக்க வைக்கிறது.
“உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறவைகளைக் கூண்டில் நிரப்பு... உனக்கு நல்லது ஏதாவது நடக்கும் நாளில் அவற்றைத் திறந்து விட்டு அவை பறந்து போவதை சுதந்திரமாகப் பார்” என்று தன் மனைவியிடம் சொல்லும் ஜான்கர் , கடைசியாய் தனக்கு அவள் விட்டுச் சென்றிருக்கும் அந்த வினோத அன்பளிப்பையும் அது தரும் நிறைவின்மையையுமே சுமந்து கொண்டு வாழ்கிறான்...
ஒரு வகையில் கதை சொல்வதல்ல இப்பதிவின் நோக்கம். ஒரு கதை வாசிப்பவனுக்குள் என்னவிதமாகவெல்லாம் உணவர்லைகளை எழுப்பியிருக்கிறது என்பதை சொல்வதுதான். கதையை நீங்களே வாசியுங்கள். ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஆழ்ந்த அமைதியும் உங்களை நிம்மதியாக கண்மூடி உறங்கச் செய்யும் மந்திரமும் இருக்கிறது.... சந்தேகமே இல்லாமல் இது மெஸ்மரைஸிங் நாவல் ....

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.