"உப்பு நாய்கள்" நாவல் குறித்து வாசகரின் பார்வை..


/
எனது நலம்விரும்பியும் நண்பருமான ஒருவர் லக்ஷ்மி சரவணகுமாரின் “உப்புநாய்கள்”பற்றிய எனது பதிவைப் படித்துவிட்டு விரிவாக எழுதும்படி கூறியதால் அந்நாவலைப் பற்றி விரிவாக எழுதும் முயற்சியே இப்பதிவு.

முதலில் இந்நாவலின் கதையை ஒரே வரியில் கூறிவிடுகிறேன்.மூன்று வெவ்வேறு விதமான மனிதர்களுக்கும் சென்னை என்கிற இப்பெருநகரத்திற்குமான தொடர்பே இந்நாவலின் மூலம்.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் என்பது சுவாரஸ்யமாகவோ நல்ல கதையம்சத்துடனோ இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.ஆனால் அது ஏதேனும் ஒரு சமூகத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்க வேண்டும்.அல்லது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் மனிதர்களையே கதைமாந்தர்களாகக் கொண்டு அக்கதைமாந்தர்களுக்கான உளவியலைப் பற்றிப் பேசவேண்டும்.அந்தவகையில் உப்புநாய்கள் இந்த இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது.இப்போது இந்த நாவலில் ஆசிரியர் எத்தனை வகையான மனிதர்களையும் வாழ்வியல் கூறுகளையும் நமக்குக் காட்டியிருக்கிறார் என்று பார்ப்போம்.

வடசென்னையின் சேரிப்பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள்.

சௌகார்பேட்டையில் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் மார்வாடிகள்.

கஞ்சா விற்கும் இளைஞர்கள்,அவர்களுக்கிடையே நடக்கும் தொழில்முறைப் போட்டிகள்.

ஆர்மீனியன் சர்ச் பாதிரியாரின் காமக்களியாட்டங்கள் மற்றும் அங்கு சேவையாற்ற வந்திருக்கும் கன்னியாஸ்திரிகளின் பாலியல் வேட்கைகள்.

இரவுகளில் தெருநாய்களை வேட்டையாடி அறுத்துப் பக்குவமாகப் பெட்டிகளில் அடைத்துப் பெரிய பெரிய உணவகங்களுக்கு அனுப்பிக் காசுபார்க்கும் மனிதர்கள்.

பிக்பாக்கெட் தொழில் செய்யும் பெண்கள்.

பெண்கள் சிறைச்சாலையில் சிறைவாசிகளாக இருக்கும் விதம்விதமான குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்.

மின்சார ரயில்நிலையங்களில் இரவுகளில் தங்களுக்கான துணையைத் தேடி உறவுகொள்ளும் ஓரினச்சேர்க்கையாளர்கள்.

அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பிக்கட்ட முடியாததால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாகவும் செயல்படும் கொஞ்சமும் மனிதாபிமானமற்ற காவல்துறையினர்.

சரீர வேட்கையின் காரணமாக தவறான ஒருவனிடம் தன்னை இழக்கும் மார்வாடிப் பெண்.(அவன் தனது உடம்பை அவனது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்சிப்பொருளாக்கியது கண்டு ஆத்திரத்தில் அவனை அடித்து மிரட்டி அவனைத் தன் வழிக்குக் கொண்டுவரும் காட்சி அருமை.)

பிழைப்புக்காக சொந்தமண்ணை விட்டு சென்னைக்கு வந்து கட்டடத் தொழிலில் ஈடுபடும் வேற்று மாநிலத்தவர்கள்.

நகரமென்றால் என்னவென்றே அறியாத ஆந்திரச் சிறுமி முதன்முதலாக சென்னை போன்ற பெருநகரைப் பார்த்ததும் இந்நகரை அவள் எதிர்கொள்ளும் விதம்,அவள்மீது பரிவுகாட்டும் பணக்கார யுவதி.

தன் கணவனும் அவனது கூட்டாளிகளும் தன்னை பலாத்காரம் செய்ய முற்படும்போது அதற்கு இனங்கிவிடாமல் துணிச்சலாகப் போராடி அவர்களை விரட்டியடிக்கும் பெண்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஒரே நாவலில் இவ்வளவு விஷயங்களையும் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையைப் போல எழுதியிருப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.மேலும் இந்நாவலில் இடம்பெற்றுள்ள பல சம்பவங்கள் மிகவும் நுட்பமாகப் புணையப்பட்டுள்ளன.எடுத்துக்காட்டாக,”சம்பத்தின் வீட்டிலேயே தங்கியிருக்கும் அவனது நண்பன் மணிக்கும் சம்பத்தின் அம்மாவிற்கும் தொடர்பு இருப்பதாக சம்பத் சந்தேகிக்கிறான்.அதன்படி ஒருநாள் வெளியூர் செல்வதாக இருவரிடமும் கூறிவிட்டுச் சென்றவன் பாதிவழியிலேயே வீடு திரும்புகிறான்.கதவைத் தட்ட மனமின்றி வீட்டின் மேல ஏறி ஓட்டைப் பிரித்துப் பார்க்கிறான்.கீழே கட்டிலில் யாருமில்லை.உற்றுப் பார்க்கையில் வீட்டின் கதவருகே மணி படுத்திருக்க அவன் மேலேறி சம்பத்தின் அம்மா இயங்கிக் கொண்டிருக்கிறாள்”.இதில் மணியின் மீது சம்பத்தின் அம்மா அமர்ந்து இயங்குவதாகக் காட்டியிருப்பதன் மூலம் அவள்தான் மணியை இதற்குத் தூண்டியிருக்கிறாள் என்று புலனாகிறது.இதற்குமுன் சம்பத்தின் அம்மா மணியின் மீது ஆசை கொண்டதாக ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடவில்லை.அதனை இந்த ஒரு செயலின் மூலமாகவே வாசகர்களுக்குப் புரியவைக்க முயல்கிறார் ஆசிரியர்.இதேபோல் பல சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

இந்நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் சொந்த அனுபவத்தைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.கடுமையான கள ஆய்வு இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு நாவலை எழுதியிருக்க முடியாது.மேலும் இந்நாவலில் என்னை ஈர்த்த மற்றொரு விஷயம் இதன் மொழிநடை.ஒவ்வொரு வரியும் அடர்த்தியும் அர்த்தச்செரிவும் மிகுந்தவை.ஒரே ஒரு வரியை மட்டும் இதற்கு உதாரணமாகத் தருகிறேன்.

“மொத்த வீதியிலும் நல்ல கூட்டம்.எல்லோரிடமிருந்தும் பிய்த்தெறியப்பட்ட வார்த்தைகள் அவ்வளவுபேரின் தலைகளுக்கு மேலாகவும் இரைச்சலாய் மிகுந்திருந்தது.”

இதுபோன்ற கனமான வரிகள் நாவல் முழுக்கவும் விரவிக்கிடக்கின்றன.உரையாடல் அதிகமாக இல்லாத காரணத்தினால் வாசகர்களுக்கு இதுபோன்ற வரிகளின் மூலம் நேரடியாகக் கதைசொல்லியிருக்கிறார்.

இயக்குனர் கிம் கி டுக்-ன் 3 Iron பட நாயகனுக்கும் இந்நாவலின் நாயகனான சம்பத்திற்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிந்தது.இருவருமே தங்கள் நிழலை மறைப்பதில் வெற்றி கண்டவர்கள்.சம்பத்-ஷிவானி காதல் அத்தியாயத்தின் முடிவும் 3Iron படத்தின் முடிவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.இதனால்தான் முதல் பக்கத்திலேயே கிம் கி டுக்-கிற்கு தனது சிறப்பு நன்றியைத் தெரிவித்திருக்கிறார் போலும்.அதேபோல் சாரு நிவேதிதாவின் “தேகம்” நாவலில் மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ள சில சம்பவங்கள் இதில் விரிவாகக் கையாளப்பட்டுள்ளன.

எ.டு;

குப்பி கொடுப்பது(தேகம்)=சொம்படிப்பது,காய்அடிப்பது(உப்புநாய்கள்),பிக்பாக்கெட் அடிப்பவர்களின் அணுகுமுறைகள்,கூலிப்படையினர் மூலம் நிகழ்த்தப்படும் கொலைச்சம்பவங்கள் மற்றும் ஆள்கடத்தல் சம்பவங்கள்,மார்வாடிப் பெண்கள் தவறான இளைஞர்களிடம் காதல் என்ற பெயரில் அகப்பட்டு அவர்களுக்கான பணம் மற்றும் சரீர இச்சைகளுக்கு வடிகாலாக மாறுதல்,பேருந்தில் கூட்ட நெரிசலில் பெண்களின் பின்புறத்தில் தன் குறியால் இடித்தும் தேய்த்தும் இன்புறும் காமுகன்...........இப்படி இன்னும் சிலவற்றைக் கூறலாம்.

இந்நாவலைப் படிக்கும்போது இரண்டு இடங்களில் எனக்கு உறுத்தியது.ஒரு இடத்தில் திருநங்கைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது "உஸ்சுகள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.உண்மையில் பெரும்பான்மையானவர்கள் அவர்களை அப்படித்தான் அழைக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடலின் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தால் எனக்கு உறுத்தல் ஏற்பட்டிருக்காது.ஆனால் ஆசிரியர் கதையை விவரிக்கும் இடத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அடுத்ததாக மற்றொரு இடத்தில் செல்வி கூட்ட நெரிசலில் தான் திருடுவதற்கு ஏற்ற ஆளைத் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு வயதான பெண்மணி அகப்படுகிறாள்.அவளைப் பற்றிக் குறிப்பிடும்போது,"அவள் கண்டிப்பாகப் பாப்பாத்தியாகத்தான் இருக்க வேண்டும்"என்று குறிப்பிட்டிருக்கிறார்.எதற்கு சம்பந்தமே இல்லாமல் இந்த சாதிப்பெயரைப் பயன்படுத்த வேண்டும்?இந்த இரண்டைத் தவிர எனக்கு வேறொரு பிரச்சனையும் இல்லை.

மொத்தத்தில் இந்நகரின் அசலான வெளித்தெரியாத பிம்பங்களைத் தன் எழுத்தின் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார் ஆசிரியர்.தமிழ் இலக்கிய உலகிற்கு இப்படிப்பட்ட மகத்தான படைப்பை நல்கிய லக்ஷ்மி சரவணகுமாருக்கு என் நன்றிகள்.
/

- அருணிடமிருந்து...

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.