சமகாலத் தமிழ் சினிமா…. சில முக்கியக் கேள்விகளும் அனாவசிய கேள்விகளும்…

சினிமாவை அதன் அழகியல் மற்றும் ஒழுங்குகளோடு அனுகும் தமிழர்கள் வெகு அரிதே. எனினும் தமிழனிடமிருந்து ஒருபோதும் சினிமாவைப் பிரித்து எடுத்து விட முடியாது. கடந்த 80 வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொருவிதமான சமூக முக்கியத்துவம் திரைப்படங்களுக்கு இருக்கவேச் செய்கின்றன. தமிழ் சினிமாவின் கோணல் மானலான விதிகள் அல்லது யதார்த்தங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுப்பதென்பது நிஜமான கலைஞர்களுக்கு சவாலான விசயம்தான். சராசரி பார்வையாளனுக்கு தான் பார்க்கும் சினிமாவின் வியாபாரம் குறித்து எப்பொழுதும் பெரிய கவலைகள் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு படத்தின் கதையம்சம் குறித்தும் குறைந்தபட்சம் ஒரு படத்தில் அவனுக்கான தேவைகளும் வெவ்வேறாகவும் அனேகமாகவும் இருக்கின்றன. இந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கும் அல்லது வெகுஜன பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட படங்களை கவனிக்கையில் தமிழ் சமூகத்தின் வினோதத்தன்மை புரியும். இங்கு காதல், அழகி, வெயில், அங்காடித்தெரு மாதிரியான படங்களும் நிற்கின்றன, இன்னொரு பக்கம் எந்திரன், சிவாஜி, அயன், கோ என முழுக்க மசால் தடவிய மீன்களும் வியாபாரமாகியிருக்கின்றன. ஒரு படத்தின் வெற்றி என்பதை வெறுமனே வியாபாரம் என்பதை மட்டும் எப்படி பார்க்க முடியாதோ அதேபோல் பார்வையாளன் அல்லது விமர்சகனின் கருத்துக்களை மட்டும் கொண்டு பார்க்க முடியாது. இரண்டும் சேர்ந்து ஒரு படத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. 

ஒரு சமூகத்தின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிற கலையாகவும் எல்லை தாண்டி எல்லோருடனும் அது கொண்டிருக்கும் உறவிலிருந்தும்தான் அதற்கான முக்கியத்துவத்தினை உணரமுடிகிறது.. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிகழும் மாற்றங்களை சற்று நிதானிதுக் கவனித்தால் அதன் பின்பாக வெவ்வேறான சமூக நிகழ்வுகளின் மாற்றங்களும் பிணைந்து போயிருப்பதை நாம் உணரமுடியும்?


திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் வெவ்வேறான வயதிலிருந்த காலம் போய் இப்பொழுது முழுக்கவும் முப்பந்தைந்து வயதுக்குட்ப்பட்டவர்களுக்கான பொழுதுபோக்கு விசயமாக மட்டுமே இது மாறிக்கொண்டிருக்கிறது. இதை ஒரு உதாரணத்திலிருந்து சொல்லத் தோன்றுகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சாதாரண திரையரங்குகளுக்குச் செல்கிற கூட்டத்தை விடவும் அதிகமாய் இருப்பதற்கான காரணம் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. வடபழனி சிக்னலிலிருந்து விருகம்பாக்கம் எல்லைக்குள்ளேயே fame , இப்போது வர இருக்கிற ஃபோரம் மாலில் எஸ்கேப் சினிமாஸ், ஜெமினி மாலில் ஆறு ஸ்க்ரீன்ஸ் என அந்தப் பகுதியிலிருக்கும் சின்ன சின்ன திரையரங்குகளுக்கான இடத்தை ஸ்வீகரித்துக்கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளனுக்கு படம் பார்ப்பதோடு அருகிலேயே விளையாடுவதற்கு ப்ளே ஸ்டேசன்களும், உணவகங்களும் தேவையாயிருக்கிறது. எல்லா நகரங்களிலும் ஷாப்பிங் மால்களில் சினிமா தியேட்டர்கள் சிறப்பாக செல்வதற்கான காரணங்களில் இதை முக்கிய கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. இந்த விசயங்களுக்கும் ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்கும் என்ன தொடர்பென நீங்கள் வினவக்கூடும்… கண்டிப்பாக இருக்கிறது. இப்படியாக வருகிற விளையாட்டுத்தனமுடைய பார்வையாளன் எல்லாவற்றையும் கடந்து போகவே விரும்புகிறான். புரட்சியே செய்தாலும் கோக் குடித்தபடியும் கே.எஃப்.சி சிக்கன் சாப்பிட்டபடியும்தான் அவனால் புரட்சி செய்ய முடியும். உலகமே பார்த்து வியந்த எகிப்திய புரட்சியில் அவ்வளவு பேர் கூடினார்கள் என்பது செய்தி, ஆனால் அந்தப் பகுதி முழுக்க கோக் பாட்டில்கள் நிறைந்து கிடந்தது பெருமைக்குரிய தகவல். கோக் குடிப்பது என்பது மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை அதன் பிரஜைகள் தனக்கு சர்வேதச பார்வை இருக்கிறது என்பதை உணர்த்துவதான விசயமாகத்தான் இருக்கிறது. ஆக ஒரு லிட்டர் பெஃப்சி, மெகா சைஸ் கேரமல் பாப்கார்ன், பிளாக்ஃபாரஸ்ஸ்ட் கேக்குகளென திரையரங்கங்கள் மாறுவ்து போலவே திரைப்படங்களிலும் மாற்றங்களை ரசிகன் விரும்புகிறான். 


சில திரைப்படங்களை விமர்சகர்களும் நல்ல சினிமாவை ரசிக்கிற ரசிகர்களும் கடுமையாக விமர்சிப்பதை கவனித்திருக்கிறேன். ஆனாலும் அந்தப் படங்கள் வியாபார ரீதியாக பெரு வெற்றி அடைவது தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அரிதாக சில படங்கள் பெருந்தோல்வி அடைவதும் உண்டு. உண்மையில் இது வெறுமனே ஒரு திரைக்கதை ஆசிரியனின் தோல்வி மட்டுமல்ல. பார்வையாளனின் மொன்னைத்தனம். கேளிக்கை என்பதையே மலினமாக்கி இருக்கும் ஒரு தலைமுறை சமூகம் தான் நம்முடையது. சினிமா வெறுமனே பொழுது போக்கு சாதனம் மட்டுமல்ல, அது ஒருவிதமான கலை ஊடகம். எல்லாவிதமான கலைகளுக்கும் இடமளிக்கக் கூடிய இடம். ஆக, சின்னதொரு பொறுப்புணர்வு ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கும் இயக்குநருக்கும் இருக்க வேண்டியது அவசியம். சரி, இதுவெறும் பார்வையாளின் குறைபாடு மட்டும்தானா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நமது படங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான படம் வரும்போது அதை மறக்கச் செய்கிறபடி மட்டரகமான மசாலா சினிமாக்களும் வருகிற பொழுது பெரும்பாலான ரசிகன் அந்தப் படங்களை நோக்கி நகர நிர்ப்பந்திக்கப் படுகிறான். நீங்கள் கவனித்தீர்களானால் ஒரு விசயம் தெளிவாகப் புரியும். எல்லா மல்டி பிளக்ஸ்களிலும் இன்று தேர்ட் ரேட்டட் படங்களும் வெளியாவதும் ஒரு ஷோவாவது தினம் அந்தப் படம் ஓடுவதும் நடக்கிறது. எல்லா வார இறுதியும் மல்டி பிளக்ஸ்களில் இருக்கும் தியேட்டர் போவதை வாழ்வின் முக்கிய கடமையாய்க் கொண்டிருக்கும் அனேக பார்வையாளருக்கு ஒரு படம் பார்க்க வேண்டும் அவ்வளவு தான், அது என்ன படம் என்கிற கவலை எல்லாம் இல்லை. இது ஒரு வகையில் நல்ல விசயம் தான். ஆனால் பார்வையாளனின் ரசனை இப்படியாகத்தான் மலுங்கி ஒரு கட்டத்திற்குமேல் திரைப்படங்களைப் பார்ப்பதில் சோர்வைக் கொண்டு வருகிறது. அவனால் காத்திரமான ஒரு படத்தை ரசித்துப் பார்க்க முடிவதில்லை.
சரி, நமது திரைப்படங்களில் பேசப்படும் சமூகப் பிரச்சனைகள்தான் என்னனென்ன?... சினிமாவில் சமூகப் பிரச்சனையை பேசத்தான் வேண்டுமா?... எது நிஜமான சமூகப் பிரச்சனைகளை அலசுகிற படமாக இருக்கும்?... 


அரசியல் அல்லது சமூக பிரச்சனைகள் என்பது இரண்டே விதமானதாகத்தான் நமது படங்களில் பெரும்பாலும் கையாளப்படுகின்றன. ஒன்று அரசியல்வாதியால் ஏமாற்றப்பட்டும் கதாநாயகன் வெகுண்டு எழுந்து அந்த அரசியல் வாதியை வதம் செய்வது, தங்கச்சிக்காக அல்லது தோழிக்காக அல்லது காதலிக்காக நகரம் முழுக்க ரவுடிகளை அடித்துத் துரத்தும் வீரதீர பாசக்கார நாயகன். இன்னொன்று அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதையும் தனிமனிதன் சட்டத்தை மதிக்காதது கண்டு கொதித்தெழும் அப்பாவி கதாநாயகன் எல்லோரையும் திருத்துகிற மாதிரியான வகை… இதைத் தாண்டி நமது சமூக பிரச்சனைகள் அல்லது தனிமனிதனின் மீது செலுத்தப்படும் நுண்ணரசியல் பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய படங்கள் நம்மிடம் வெகு குறைவே. இந்த இடத்தில் சில படங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். கற்றது தமிழ், அங்காடித் தெரு, வழக்கு எண். இந்தப் படங்களைக் கவனமாக பார்க்கையில் கற்றது தமிழிலில் பிராபகர் தமிழ் படித்தது மட்டும் அவனுடைய பிரச்சனையில்லை, அவன் வெவ்வேறு சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறவனாய் இருக்கிறான். அவன் மீது யார் யாரெல்லாமோ அதிகாரம் செலுத்த நேர்கிறது. அதனால் தான் கொலை செய்ததற்கான காரணம் கேட்கையில் அந்நியன் நாவலில் காம்யூ சொல்கிற “அன்னைக்கு 2 டிகிரி வெயில் அதிகமா அடிச்சதுக்கு நானா ஸார் காரணம்…” எனச் சொல்ல முடிகிறது. ஆக ஒரு தனிமனிதனை குற்றவாளியாக்குவது பெரிய சிரமம் ஒன்றுமில்லை. இந்தப் படம் வளர்ந்து கொண்டிருக்கும் பெரு நகரங்களில் நமக்கு வெகு சமீபமாய் எதையும் அனுபவிக்க முடியாது எல்லாவற்றையும் ஏமாற்றத்தோடு பார்க்கும் ஒரு பெரும் சமூகக்கூட்டத்தை பிராபகரின் மூலமாய் முன்னிறுத்துகிறது.


அடுத்ததாக அங்காடித் தெரு. பெரும் வணிக நிறுவணங்களின் பல்வேறு முகங்களை இந்தப்படத்தில் நாம் கவனிக்க முடியும். வெறும் நாலாயிரம் ஐயாயிரம் சம்பளத்திற்காக வாழ்வின் சந்தோசமான தருணங்கள் அவ்வளவையும் தொலைத்துவிட்டு வந்தேறிகளாய் அடையாளமின்றி துயர்படும் மனிதர்களின் கதை இது. இந்தப் படத்தின் வாயிலாய் நமக்கு உணர்த்தப்படுவது அந்தத் தொழிலார்களின் மீதான கருணையை அல்ல, அவர்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை. மேலும் எல்லா பிரம்மாண்ட வியாபார ஸ்தலங்களும் தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டிருக்கிறது எனபதை. இன்னும் கவனமாக சொல்ல வேண்டுமானால் தென் பகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் இருந்து ஏதாவது பெரிய நகரங்களுக்கு கார்மெண்ட்ஸ்களிலும், தறி குடோனிலும் வேலைக்குப் போகிறவர்களின் வலியை ஒருவரும் நேரடியாய் உணர்ந்திருக்காத நேரத்தில் இந்தப்படம் அவர்களின் இன்னொரு பகுதி வாழ்வை நம்முன் வைத்தது. உண்மையில் இதை ஒட்டி சொல்வதற்கு இன்னும் சில கதைகள் இருக்கின்றன.


அடுத்தது வழக்கு எண். இன்று இருக்கும் virtual (மெய்நிகர்) உலகை நமது கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்திருக்கும் படம். இளம் பெண்களை ஆபாச படம் எடுப்பது, அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை ஊரறியச் செய்வது என்பது எங்கோ நடக்கிற ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு தங்கள் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை உணர்த்தி இருக்கும் படம்.
இந்த மூன்று படங்களோடு சேர்த்து ஜனாவின் ஈ படத்தையும் நான் குறிப்பிடுகிறேன். காரணம் நாம் அதிகம் வாசிக்காத பார்க்காத bio war ஐ மையப்படுத்திய படம் ஈ. ஆனால் அதன் வியாபார தன்மைகளுக்குள் அந்த விசயம் குறுக்கப்பட்டு அதை ஆரோக்கியமான முயற்சியாக இல்லாமல் ஆக்கிவிட்டது. இந்த நான்கு படங்களை நான் பேசக் காரணம் இவை சமகாலத்தை அழுத்தமாய் பேசுகின்றன என்பதால்தான். இதைத் தாண்டி பெரும்பாலான படங்களில் காட்டப்படும் தமிழ் சினிமாவின் வாழ்க்கை தமிழனின் வாழ்க்கைக்கு வெளியேதான் பெரும்பாலும் இருக்கிறது. நாயகன், நாயகியின் பின்புலம் அதில் காட்டப்படும்  வாழ்க்கை முறை எல்லாமே நமக்கு அந்நியமானதுதான். ஆனாலும் அவை எல்லாம் இங்கு ரசிக்கப்படுகின்றன. ,முழு முற்றாக கமர்சியல் படங்களிலிருந்து துண்டித்துக் கொள்வதென்பது அல்ல எனது விவாதம். நானும் கமர்சியல் படங்களை ரசிக்கவே செய்கிறேன். ஆனால் அந்தப் படங்கள் அடையும் பெறும் வெற்றியை நல்ல படங்களும் அடைய வேண்டுமென விரும்புகிறேன்.


தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் இரு மாநிலங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்படுகிறவைகளாய் மாறிப்போயிருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அனேக படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் அந்த மொழி ரசிகனுக்கும் சில விசயங்களை வைக்க வேண்டி கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் சினிமாவில் தெலுங்கு சினிமா ரசிகனுக்கான உணவே அதிகமாகி இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அதைப் பார்த்து பழக்கப்படும் நமது ரசிகனும் இப்பொழுது தெலுங்குப் படங்களை ரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டான். திடீரென அதிக அளவில் தெலுங்கு படங்கள் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்கள் வரை ஓடுவதும் இதனால் தான்.
சில தினங்களுக்கு முன் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் கே.வி.ஆனந்த், நிழல் திருநாவுக்கரசு இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். திருநாவுக்கரசு இன்னும் நிறைய இயக்குநர்கள் சமகால பிரச்சனைகளைக் கொண்ட நாவல்களைப் படமாக்க வேண்டும் என்று சொல்ல கே.வி.ஆனந்த் அப்படியான நாவல்கள் தமிழில் குறைவுதான். ஒருவேளை எதையெல்லாம் எடுக்கலாம் என்று சொல்லுங்கள் நாம் பேசலாம் என்கிறார். அந்த சமயத்தில் அவரால் சில நாவல்களை குறிப்பிட முடியவில்லை. உண்மையிலேயே சமகாலத்தை பிரதிபலிக்கும் நாவல்கள் அல்லது கதைகள் தமிழில் குறைவுதான். அப்படியே எழுதப்பட்டாலும் அது மேலோட்டமான பல்ப் கதைகளே. பின்பு நேரில் சந்திக்கையில் திருநாவுக்கரசு அது குறித்து கவலையுடன் பகிர்ந்து கொண்டார். இந்த இடத்தில் சில நாவல்களை குறிப்பிடுவதை ஒரு வாசகனாய் திரைக்கதையைப் பயின்று கொண்டிருக்கும் ஒரு திரைக்கதை ஆசிரியனாய் ஒரு நாவலாசிரியனாய் கடமையென நம்புகிறேன். 


பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி, சயாம் மரண ரயில், எரியும் பனிக்காடு, காவல் கோட்டத்தின் இன்னும் சில பகுதிகள், நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, தாண்டவராயன் கதையின் சில பகுதிகள், ரமேஷ் பிரேமின் குருவிக்கார சீமாட்டி & பரதேசி, கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன், கருப்பு ரயில், பிரமிளின் லங்கா ராஜா, ஆதவனின் என் பெயர் ராமஷேசன் மேலும் ஷோபா சக்தியின் ம் நாவல் வெள்ளிக்கிழமை என்னும் சிறுகதை, விலங்குப்பண்ணை என்னும் சிறுகதை. ஜெயமோகனின் நூறு நாற்காலிகள், சயந்தனின் ஆறாவடு… கடைசியாக லக்‌ஷ்மி சரவணக்குமாரின் உப்பு நாய்கள். இவை மிகக் குறுகிய பட்டியலே… இன்னும் நிறைய நாவல்களையும் சிறுகதைகளையும் என்னால் சொல்ல முடியும்… இவற்றை எல்லாம் அப்படியே படமாக்க முடியாத போதும் சிறு சிறு மாற்றங்கள் செய்து நாம் படமாக்க முடியும். ஆனால் சினிமாக்காரர்களை மட்டும் குறை சொல்லி எழுத்தாளர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. 


பெரும்பாலான எழுத்தாளர்கள் சினிமா ஒரு கலை என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லாதது துரதிர்ஷ்டம்… உண்மையிலேயே திரைக்கதை எழுதுதல் என்பது நாவலை போலவே ஒரு சாகசம்தான்… ( நான் குறிப்பிடுவது நல்ல திரைக்கதைகளை.) ஆனால் நாவலாசிரியர்களோ, புனைவு எழுத்தாளர்களோ இங்கு பெருமளவில் திரைக்கதையில் வேலை செய்வதில்லை. உண்மையில் இது சரியான தருணம். நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள், திரைப்படக் கல்வி பயிலும் மாணவர்கள் என எல்லோரும் ஒருங்கிணைந்து பெரிய அளவில் புதிய திரைக்கதை உருவாக்கம் குறித்து விவாதிக்க வேண்டும். அப்படி சரியானபடி நடக்கும் பட்சத்தில் இன்னும் ஆரோக்கியமான திரைப்படங்களை உருவாக்க முடியுமென நம்புகிறேன்….


உண்மையில் அனேக விசயங்கள் குறித்து விலாவரியாக எழுத விரும்புகிறேன்… இதனை ஒரு துவக்கமாகக் கொண்டு திரைப்படங்கள் குறித்து இன்னும் நிறைய உரையாடலாம்….


மிகுந்த அன்புடன்
லக்‌ஷ்மி சரவணக்குமார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.