பெருநகரில் நிலைகொள்ளாது அலையும் உப்புநாய்கள் …


நாவலுக்கான முன்னுரை

               

-     

பார்க்கிற கேட்கிற எல்லாக் கதைகளைவிடவும் பெருநகரங்கள் பிரம்மாண்டமானதொரு கதையாய் எப்பொழுதும் என் முன்னால் விரிந்து கிடக்கின்றன.  பகலில் வெவ்வேறான முகம் கொண்டிருக்கும் அத்தனை நகரங்களும் இரவில் ஒரேமாதிரியானவைகளாய்த்தான் இருக்கின்றன.  இரவுகளில் பாதுகாப்பற்றதாய்ப் போயிருக்கும் நகரங்களில் மெளனம்  மட்டுந்தான் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. எல்லா வீதிகளிலும் யாரோ சிலர் மெளனத்தின் நீள் கயிறுகளைப் பிடித்தபடி இரவையும் பகலையும் பிணைக்கும் அத்யாவசியாமனதொரு வேலையை செய்கின்றனர்.  அவர்களின் விரல் வழி இரவு காற்றென கரைந்து எல்லோரின் நினைவுகளுக்குள்ளும் சொல்லாத கதைகளாய் நிரம்புகின்றன. ஏதேதோ கிராமங்களிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வருகிறவர்களின் கனவுகள் தங்களின் விருப்பங்களின் வழியாயும், யாரோ சிலரின் நினைவுகளின் வாயிலாகவும் இந்நகரின் எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளவே விழைகின்றன.

     விரல்களை மடித்து விரிக்கையில அதிலிருக்கும் ஈரமும் வெறுமையும் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியா கதைகளே, கடந்த காலத்தின் தடயங்கள் அவ்வளவையும் தொலைத்துவிட்டு மனிதன்  தன்னைப் புதுப்பித்துக் கொள்வதைப்போல் கதைகளும் காலத்திற்கேற்றாற்போல் தானாய் புதுப்பித்துக் கொள்கின்றன. கடந்து செல்லும் எல்லோரிடமிருந்தும் எனக்கான கதைகளை பெற்றுக்கொள்கிறேன், அல்லது திருடுகிறேன்.  சில நூறு ரூபாய்களுக்காக மட்டுமே நாள் முழுக்க அலைந்து திரியும் எவ்வளவோபேர் ஒருபோதும் தீர்க்க முடியா வன்மங்களோடு நமக்கு வெகு சமீபமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத்தலைமுறையின் கதைசொல்லி எல்லாவற்றோடும் சேர்த்து வன்மத்திற்கும் தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது, எழுதா வன்மம் ஏற்படுத்தும் அழுத்தம் எல்லாவிதமான குற்றங்களுக்கும் தூண்டுவதோடு அதனை நியாயப்படுத்தவும் சொல்கிறது. சலிப்பும், ஏமாற்றங்களும் சகமனிதனுக்கு வாதையை ரசிக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது,  அந்தரங்கமாக ஒவ்வொரு மனிதனும் வலிகளை விரும்புகிறான், வாதை ஒரு ருசியென்பதையும் மீறி சாகசம். வாதையும் வன்மமும் மட்டுமே எனக்கு எழுதுவதற்கு விருப்பமானவைகளாய் இருக்கின்றன. எழுத்தின் மூலமாய் வன்மத்திற்கும் வாதைக்கும் என்னைப் பழக்குகிறேன்.

      2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாவல் எழுத வேண்டுமென்கிற தீவிரத்தோடு வேகமாய்த் துவங்கி ஒரு நூற்றி ஐம்பது பக்கங்களை எழுதி வைத்திருந்தேன். பிறகு வெவ்வேறு காரணங்களால் அதனைத் தொடர முடியாமல் போய் மீண்டும் நாவல் எழுத வேண்டுமென நினைத்தபொழுது முதலில் எழுதிய நூற்றி ஐம்பது பக்கங்கள் என்னை திருப்தி செய்திருக்கவில்லை. அந்தக் காகிதங்களை குப்பைகளோடு குப்பைகளாய் நல்ல மதுவருந்திய ஒரு தினத்தில் கிழித்துத் தூக்கிப்போட்டபின் சென்னையின் சில தெருக்களும் சில மனிதர்களும் மட்டும் கதைகளாய் எனக்குள் சுற்றிக்கொண்டிருந்தனர்.

இன்னொரு முறை நாவல் எழுத வேண்டுமென்கிற விருப்பம் எழுந்த தினங்களில் பாதி விலைக்கு வாங்கிய ஒரு மெமரி கார்டிலிருந்து எனக்குத் தெரியாத யாரோ ஒருவனின் நிர்வாணங்களையும் அவனின் ரகசியங்களையும் நண்பன் நரேஷ் எடுத்துக் காட்டினான். இன்னொருபுறம்  வேலை காரணமாய் பிரம்மாண்டமான கட்டிடங்களின் கட்டிடப்பணி நடைபெறுகையில் போய்வர நேர்ந்த பொழுது அந்தக் கட்டிடங்கள் முழுக்க வேறு வேறு ஊர்களிலிருந்து வந்து வேலை பார்க்கும் ஆந்திராக்காரர்களும், ஒரிஸ்ஸாக்காரர்களும் இதுவரை பார்க்காத இன்னொரு வாழ்வை புரிந்து கொள்ள வைத்தனர். எல்லாப் பெருநகரங்களிலும் இப்படி உழைப்பிற்காக தேசாந்திரிகளாய்ச் சுற்றுகிற ஆயிரக்கணக்கானவர்களை இந்தச் சில வருடங்கள் அதிகமாய்ப் பார்க்க முடிகிறது. சொந்த ஊரிலிருந்து வெளியேறுகிற இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு இன்னொருமுறை ஊர் திரும்புவது விருப்பமற்ற ஒன்றாகவே இருக்கிறது.  சொந்த ஊரைப்பற்றின இவர்களின் நினைவுகள் மீதுதான் நெடுஞ்சாலைகள் இரக்கமற்ற கதைகளாய் நீண்டு கொண்டிருக்கின்றன.  இப்படி அங்கும் இங்குமாய் என்னோடு பயணித்துக் கொண்டிருந்த சிலரைச் சுற்றித்தான் உப்புநாய்களுக்கான சொற்களையும் வாழ்வையும் யோசித்தேன்.  

நாவல் எழுதத்துவங்கியதும் அதில்  எதையெல்லாம் வைக்கலாம்,  பேசலாமென ஓராயிரம் விசயங்களை பெங்களூர் பாலாவிடமும், தூரன் குணாவிடமும் பேசித்தீர்த்தேன். இதை எழுதத் துவங்கின தினத்திலிருந்து முடித்து வைக்கிற நாட்கள் வரை அவர்கள் தொடர்ந்து பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் ஏராளம். பாதி நாவல் முடிந்த நிலையில் தற்செயலாய் பழக்கமான நண்பன் நேசமித்ரன் இந் நாவலின் சின்ன சின்னப் பகுதியைக்கூட விலாவரியாய் பேசவும் தொடர்ந்து நாவல் குறித்து உரையாடுவதுமாய் தன்னுடைய பங்களிப்பை செய்து வந்தான். சென்னையிலிருந்து எழுதத்துவங்கிய நாவல் பெங்களூருக்கும், நைஜீரியாவிற்கும் நகர்ந்து வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பிறகு அங்குமிங்குமாய் சுற்றி மதுரையில் வந்து முடிந்திருக்கிறது. நாவலின் இறுதியான வடிவம் வருகிற வரை இந்த மூன்று பேரின் பங்கும் முக்கியமானது. இவர்களோடு சேர்த்து தொடர்ந்து எனது கதைகளைக் குறித்து உற்சாகமாக பேசிவரும் எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ந.முருகேசபாண்டியன் இவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

அரவான் படப்பிடிப்பு முடிகிற சமயமாய் நாவலை எழுத நினைத்து  எழுதுவதற்கான ஒரு இடம்  தேவைப்பட்டவன் யோசிக்காமல் சரணடைந்த இடம் சிந்தாதிரிப்பேட்டை வீடு. இரவு பகலென தொடர்ந்து தட்டச்சு செய்வதற்கான மனநிலையை வீட்டில் உருவாக்கித் தந்த சுபத்ரா அம்மா, விஜி, என் குட்டித் தங்கைகளான நிவேதிதா, பாரதிக்கும்  நாவல் முடியப்போகிற நேரத்தில் சென்னைப் பற்றின சில முக்கியமான தகவல்களைச் சேகரித்துத் தந்த பழனி அண்ணன், எல்லோரையும்விட எனது ஒவ்வொரு எழுத்தையும் பெருங்காதலோடு வாசித்தும் அதனை அழகான நூல்களாக்கித் தரும் சுதீர்செந்தில் இவர்கள் எல்லோருமே இந்த நாவலை சாத்தியப்படுத்தியவர்கள். இவர்கள் அவ்வளவு பேருக்குமே என்றென்றைக்குமாய் நிறைய அன்புகள் .

                                    

                                     தீராத ப்ரியங்களுடன்

லக்‌ஷ்மி சரவணக்குமார்

சென்னை

9176891732

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.