தஞ்சை ப்ரகாஷும் மிஷன்தெரு ரம்யாவும்... (361 இதழில் வெளியாகியுள்ள சிறுகதை....)

     இந்தமுறை எப்படியும் நல்லதொரு அறையினை அமர்த்திக் கொள்ளவேண்டுமென்கிற எனது எதிர்பார்ப்பு அந்த அறையைத் திறந்த சில நொடிகளிலேயே தகர்ந்து போனது. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமான பயணக்களைப்பு இப்பொழுது இன்னும் அதிகமாகியிருந்தது. பல வருட தூசியப்பிய அவ்வறையில் போன நூற்றாண்டு மனிதன் எவனாவது கடைசியாய் தங்கிச் சென்றிருக்கக்கூடும். இன்னும் விலகாத ஒரு பெருநாற்றம் அறையில் நிறைந்து கிடக்க, இரண்டு மாடிகள் என்னோடு எதையும் கையிலெடுக்காமல் நடந்து வந்த ரூம்பாய் சில்லரை கேட்டு நின்றான். ரூம்பாயென்று சொல்லமுடியாத ஓல்டுபாய் அவன். அதிகமாகப் போனால் மூனேமுக்கால் அடி, அவன் உயரத்திற்கு சம்பந்தமேயில்லாமல் ஒரு பேண்ட்டும் அதனோடு சிரமத்துடன் ஒத்துப்போக முயற்சிக்கிற சட்டையுமாய் என்னை அதிகபட்ச எரிச்சலுக்குட்படுத்தும் எல்லா தகுதிகளுடனுமிருந்தான். அவனைச் சொல்லி குறையில்லை. பாதி உறக்கத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறதென்கிற வேகத்தில் நான் வந்ததற்கும் வெளியிலிருந்து பார்க்க சுமாரான விடுதியாய்த் தெரிகிறதென நம்பிக்கொண்டதற்கும் அவனை எப்படி குறைசொல்ல முடியும்?
பத்துரூபாய்க்குக் குறைத்து வாங்குவதில்லை என்கிற அவன் உறுதியும் ஐந்து ரூபாய்க்குமேல் குடுக்கப்போவதில்லை என்கிற என் உறுதியும் சில நிமிடங்கள் வார்த்தையாக மோதி, ஆகக்கடைசியாய் எப்பொழுதும்போல் நானே தோல்வியைத் தழுவினேன்.
     தஞ்சாவூருக்கு வருவது இதுவொன்றும் புதிதில்லை, எவ்வளவோமுறை நண்பர்களுடனும், தனித்தும்  வந்துபோயிருக்கும் இவ்வூரில் எல்லா வீதிகளும் மிக நன்றாய் பரிச்சயமாகியிருந்த ஒன்றுதான். முன்பு இங்கு வந்து தங்கிப்போகிற தினங்கள் நண்பர்களின் வீடுகளிலோ அல்லது வேறு நண்பர்களின் விடுதிகளிலோ  கழிவதாயிருக்கும். அங்கெல்லாம் குடிப்பதற்கும் சத்தமாகப்பேசி சண்டை போடுவதற்கும் நண்பர்களென சில அப்பாவிகளிருப்பதால் இந்தச் சிக்கலில்லை. இந்தமுறை நான் வந்தது அலுவலக வேலையாய். ஒரேநாளில் செய்து முடிக்கவென நிறைய வேலைகளிருந்ததால் நண்பர்களைச் சந்திப்பதென்கிற விருப்பம் நிபந்தனைகளின்றி என்னால் ஒதுக்கப்பட்டிருந்த்து. மூன்று வருடத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் வேலையிது. இதையும் கெடுத்துக் கொண்டால், பிறகு மறுபடியும் இலக்கியவாதி என்கிற பெயரில் நண்பர்களிடம் ஓசிச்சோறு திண்ணத்தான் காத்துக்கிடக்க வேண்டும். அப்படியிருப்பது ஒன்றும் இழுக்கான விசயமுமல்ல. துரதிர்ஸ்டவசமாய் இப்பொழுது கல்யாண ஆசை. இருப்பத்தெயேழு வயதில் இப்படியானதொரு ஆசை வருவதிலும் தவறு இருக்கப்போவதில்லை. ஆக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் அறையிலிருந்து கிளம்பிப் போகவேண்டுமென நினைத்துக் கொண்டேன்.
ஒரு அரைமணி நேரம் ஓய்வெடுக்கலாமென நினைத்துப் படுத்திருந்தவனை அதற்கெல்லாம் அவகாசமில்லை என எழுப்பியது அலைபேசி அழைப்பு. எழுந்து பேசிக்கொண்டிருக்கும் போதே ஓல்டுபாய் மீண்டும் அறைக்கதவைத் தட்டினான். தண்ணி ஏதும் வேணுமா சார்...’  அப்படியே மூஞ்சியில் ஒரு குத்துவிடலாமா என்கிற கோபம் எனக்கு. வேணும்னா கூப்டறேன்..... சொல்லி அனுப்பினேன். இனி படுக்க முடியாது. அரைமணிநேரத்தில் மருத்துவக்கல்லூரி வருவதாகச் சொல்லிவிட்டுக் குளிக்கப் போனேன். பைப்பைத் திறந்து சில நிமிடங்களுக்கு எந்தவிதமான எதிர்வினையுமில்லை. மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு அறைக்கதவைத் திறந்து யாரையாவது கூப்பிடலாமெனப் போகையில் தடபுட சத்தத்துடன் தற்கொலை செய்துகொள்ளக் காத்திருப்பதைப்போல் நீர் வழிந்த்து. தூய பொன்நிற நீர். குளிக்கிற விருப்பமே போயிருந்தது. நல்ல வேகத்தில் தண்ணீர் வ்ரத் துவங்கியிருந்த சில நொடிகளுக்குப்பின் தண்ணீர் நிறம் மாறியது. வாளீயிலிருந்த தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு குளிக்க நீர் பிடித்துக் கொண்டிருக்கும்போதே ஓல்டுபாய் கதவைத் தட்டினான். “ஸார், பக்கத்து கடைல இட்லி அம்சமா இருக்கும்...முடியறதுக்குள்ள நாலு இட்லி கெட்டி வாங்கி வந்துரட்டுமா?...
இவனுக்கு என்ன பதில்தான் சொல்லித் துளைப்பது. பையிலிருந்து இருபதுரூபாயை எடுத்துக் கொடுத்தேன். ‘இத வெச்ச்சு நீ போயி சாப்பிடுப்பா, எனக்கு வேணாம்.காசை கையில் வாங்கிக் கொண்டு சந்தோசமாக இறங்கிப் போனான். மீண்டும் நான் குளியலறைப் போனபோது ஒருவழியாக வாளி நிறைந்திருந்தது.
வேலைகளை மட்டும் முடித்துவிட்டு அதிகபட்சம் மிஷன் தெரு போவதற்கான சாத்தியங்களிருந்தாலும் தவிர்த்துவிட வேண்டுமென உறுதியாயிருந்தேன். அப்படியொன்றும் பெரிய பகையெதுவும் அந்த வீதியுடன் இல்லை. எனக்கு விருப்பமான ஒரு எழுத்தாளனும், நான் சில வருடங்களுக்குமுன் நேசித்த ஒரு பெண்ணும் அந்த வீதியைச் சேர்ந்தவர்கள். தேவையில்லாமல் இப்போது அவர்களின் நினைவுகளில் மூழ்கி உணர்வெழுச்சி கொள்ள விரும்பவில்லை நான். ரம்யா இப்பொழுது அதே வீதியிலிருப்பாளா என்பது தெரியவில்லை. அவளின் வீடு இன்னும் அங்குதானிருப்பதாக நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். கொஞ்சம் பழைய பிராமாண வீடு, நிறம் உதிர்ந்த முன் சுவர்கள், வீட்டிற்குள் மூன்று பழைய காற்றாடிகளில் ராட்சத டொரய்ங் சத்தம் என பல காலத்தைய நினைவுகளைச் சுமந்தன் அவ்வீட்டில் ஆள்புக முடியா இடமென எங்களுக்கே எங்களுக்கான சில ரகசிய இடங்களை நாங்கள் தெரிந்து வைத்திருந்தோம். அவளுக்குத் திருமணமெனச் சொல்லி என்னிடமிருந்து விலகும் நாள் வரையிலும் அந்த ரகசிய இடங்களை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை, அவளுக்கும் முன்பாக அவளின் அம்மாவும் அல்லது அவ்வீட்டு ஆண்களும் பயன்படுத்தி மறந்துபோயிருந்த இடமாகவும் அது இருந்திருக்கலாம். ரகசியங்கள் சுமந்த இருள் கொண்ட அறையது.
நான் பிரகாஷைப் பிடிக்குமென்றதும் அவளும் வாசித்தாள். துரதிர்ஸ்டவசமாய் அவளுக்கும் பிடித்திருந்தது. அருவருப்பு இவ்வளவு சுவையானதா? என்பாள். அருவருப்பை விடவும் சுவையானதிருக்க முடியுமா என்ன?. அவளை ரங்கம்ணி என என்னைக் கூப்பிடச் சொன்னதற்காக பெருங்கோபம் கொண்டவள், “நீ ஒரே சமயத்தில் ரங்கமணியையும்,உன்னையையும் சேர்த்து அவமானப்படுத்துகிறாய் எனக்குப் புரியாததொரு உண்மையைச் சொல்லும் ஆர்வமிருந்தது அவளிடம். உண்மையில் பெருங் காம்ம் கொண்டலைபவனாய் உன்னைக் காட்டிக் கொள்ளும் அறியாச் சிறுவன் நீ...இப்படி அவள் சொன்னது சில முறை நாங்கள் நிர்வாணங் கண்ட பிறகுதான். எனக்கு அவளே விருப்பம், என் வீரமல்ல, இருக்கலாமென்றேன். இல்லை, அதுதான் நிதர்சனமென்றாள்.பிறகு நான் ரங்கமணியை வெறுக்கத் துவங்கினேன். என்னிடமிருந்த மீனின் சிறகுகள் நாவலை முதலில் நண்பனொருவனுக்கு கொடுக்கலாமென்றுதான் நினைத்தேன், அவள் இப்படி பேசிய நாளில் ஒவ்வொரு பக்கமாக்க் கிழித்துப் போட்டுவிட்டேன்.
மிஷன் தெருவிற்கு என்னை நன்றாகத் தெரியும், என் பாதடிகளின் ரகசியங்கள் என் எச்சிலின் வாசணை எல்லாமும்.
அப்படியே பிரகாஷின் மீது நான் கொண்டிருக்கும் காதலும். இப்பொழுது அந்த வீதியில் பிரகாஷின் வீடும் ரம்யாவின் வீடும் இருக்கவே செய்கிறது. அவர்களிருவரும் இல்லை. மீனின் சிறகுகள் நாவலில் வரும் ரங்கம்ணியின் காதலிகளும், கடைசிக் கட்டி மாம்பலம் கதையின் குடும்பமும் தஞ்சையின் ஏதோவொரு மூலையில்தான் ஒளிந்து கிடக்க வேண்டும். தஞ்சையைச் சுற்றி நிறைய இடங்களில் அவர்களின் சாயலுள்ள நிறையப்பேரைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது எனக்கு மிக அந்நியமாகத் தெரியும் இவ்வூர் நான் பார்த்து, நேசித்த ஊராக என் முன்னாலில்லை. மருத்துவக்கல்லூரித் தாண்டிப் போகும்போது முன்பொருமுறை குடித்துவிட்டு நண்பர்களுடன் லேடீஸ் ஹாஸ்டல் சுவர் ஏறிக் குதித்தது நினைவிற்கு வந்தது. நைட் ஷோ என்று கூட்டிப்போனவர்கள் கடைசி வரையிலும் பார்க்கப் போவது லைவ் ஷோ என்பதைச் சொல்லவே இல்லை. உண்மையில் எதிர்பார்த்த மாதிரியொன்றும் இல்லை அந்த தினம். இப்பொழுது அதனை பழைய நினைவாக நினைத்துப் பார்க்கையில் சில நொடிகள் என்னை வயதானவனாக எனக்கு உணர்த்தியது.
     வெயில் ஏறியடிக்க நீர்வரத்தற்ற காவிரியைப் பார்த்தபடி ரயிலடியிலிருந்து வரும் ஆற்றுப் பாலத்தில் நின்றிருந்தேன். உடல் முழுக்க சோர்வு. வங்கியில் சென்று பணம் போட வேண்டும். மதிய உணவிற்கு நண்பர்கள் யார் வீட்டிற்காவது செல்லலாமா என ஓர ஓரத்தில் விருப்பம். பழக்கப்பட்ட சுவை. திருவையாறு போகலாம். ஆற்றில் நீரில்லாவிட்டாலும் பிராமணாள் ஹோட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கும். அதற்கெல்லாம் வாய்ப்பில்லாதபடி என்னோடு வந்திருந்த நண்பரே தன் வீட்டில் சாப்பிட அழைத்துப் போனார். இப்போதைக்கு இதுதான் சிறந்த முடிவு. செலவில்லாத தீர்வாயிருக்கும் போது சுவையை எங்கிருந்து யோசிக்க?
     மிச்சமாக இருந்த இன்னும் சில வேலைகளை முடித்து நான் அறை திரும்ப பதினொரு மணியைத் தாண்டியிருந்தது. காலை வரையிலும் அறையிருப்பதால் இருந்து ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையில் போகலாமென நினைத்துக் கொண்டேன்.  ஓல்டுபாய் லாட்ஜில் இருக்கக் கூடாதென்கிற என் வேண்டுதல் பொய்யானது. பிரகதீஸ்வர்ர் வழக்கம்போல் என்னை ஏமாற்றியிருந்தார். என்னைப் பார்த்து உற்சாகமாக சிரித்தான். சரக்கடித்திருக்க வேண்டும், வாய் வடகிழக்காக கோணி வளைந்தது. ஸாப்டியா தல....இது புதுவிதமான மரியாதை, அல்லது தோழமை. நான் ஒரு முட்டாள்த்தனமான சிரிப்புடன் தலையாட்டியபடியே படியேறினேன். சரக்கு வாங்கியரவா?...நான் குடிப்பதில்லை என்றேன். ‘ரீல் வுடாத தல...அதான் உன் வயித்துல தெரியுதே நீ எம்புட்டுக் குடிப்பேன்னு?....இதெல்லாமா தெரியும்...இது குடித்து வளர்ந்த வயிறுதான். உடல் நார்மலாகவும் வயிறு மட்டும் அப்நார்மலாகவும் பார்க்க கொஞ்சம் புஷ்டியான தேவாங்கைப் போலிருப்பேன். ரம்யா இப்படித்தான் கூப்பிடுவாள். சமீபமாய் நான் குடிப்பதில்லையென சிரமத்துடன் ஒரு பொய் சொல்லித்தான் அவனைக் கடக்க வேண்டியிருந்தது. அறைக்குள் நல்ல வெக்கை, எல்லா ஜன்னல்களையும் திறந்து விட திமுதிமுவென அறைக்குள் காற்று வந்ததில் கொஞ்சம் ஆறுதல். நீண்ட நேரம் விழித்திருக்க விருப்பமில்லை, விளக்கை அணைத்துவிட்டு டி.வி.மட்டும் ஓட சத்த்த்தை குறைவாக வைத்துவிட்டுப் படுத்துவிட்டேன்.
     கொஞ்சநேரத்தில் அந்த தளத்தில் கொலுசு சப்த்ம் கேட்டது. முதலில் வேறு அறைக்கானதாயிருக்குமென நினைத்தேன். மற்ற அறைகளில் ஆட்கள் யாருமில்லை என்கிற நினைவு வர, அந்த சப்தம் என் அறைக்கு சமீபமாய் இருந்தது. குசுகுசுவென இரண்டு குரல்கள் பேசிக்கொண்டன. பேச்சு சப்தம் நின்றதும், கை வளையல்கள் ஆட கதவுத் தட்டப்படும் ஆசை. ஒரே நேரத்தில் திறந்துவிடுகிற ஆர்வமும், வேண்டாமென்கிற தயக்கமுமாய்க் கிடந்தேன். சில முறைத் தட்டி அந்தக் கொலுசு சப்தம் திரும்பி நடந்து போகும் சப்தம் கேட்க எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். “ஏதாவது வேணுமா?இதுமாதிரியான முட்டாள்த்தனமான கேள்வியை நள்ளிரவு சந்திக்கும் பெண்ணிடம் ஒரு பத்தாம் வகுப்புப் பையன்கூட கேட்டிருக்க மாட்டான். அவள் பதிலுக்கு சிரித்தாள். அறைக்குள் வந்தாள். எனக்கு அவள் உடல் விருப்பமாயிருந்தும் அவள் தோற்றம் பிடிக்கவில்லை. அதை அவளிடம் எப்படிச் சொல்வது. கையில் காசில்லை என்றேன். அவள் என் அனுமதி எதிர்பாராமலேயே ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த பேண்ட்டில் கைவிட்டு கொஞ்சம் பணம் எடுத்து எண்ணிப் பார்த்துவிட்டு நூறு ரூபாயை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ‘இது போதுமென்றாள்.
நான் இன்னொருமுறை முட்டாள்த்தனமாகச் சிரித்தேன். பேரைக் கேட்டேன். ஜம்னாபேர் சொல்வதில் அவளுக்கு விருப்பமிருந்தது. இது பரிச்சயமான பெயர்தான். ப்ரகாஷின் இன்னொரு பாத்திரம்தான் இந்த அறைக்குள் ஊடுருவியிருக்கிறது. நீ ராஜீவா? கள்ளம் நாவலின் நினைவில் கேட்க, ஏன் அவுகமேல மட்டுந்தேன் ஏறுவியளோ...? மத்த ஆளுகன்னா கசக்குமா?..’  ‘நான் அவள் தோள்களைத் தொட்டபடி பேர் அவுக பேரு மாதிரி இருந்துச்சு என்றேன். இந்தமுறை என்னைச் சிரிக்க அனுமதிக்கவில்லை அவளின் இறுக்கம். இப்படி வாடகை மனைவிகளுடன் நிகழும் வழக்கமானதொரு புணர்ச்சிதான் அவளுடனும் நிகழ்ந்தது. என்னுடலை இறுக்கி நான் இயந்திரமாக, அவள் எல்லோர் கிட்டயும் நீ இப்படித்தான? இல்ல எங்கிட்ட மட்டுமா என்றாள். என் இயந்திரம் தளர்ந்து பாதி உயிர் கொண்ட மனிதனாகியது. அப்படியொன்றும் மோசமான இரவாக இல்லை. பின்னிரவிற்கு முன்பாகவே கிளம்பிவிட்டாள். அலைச்சலில் நான் சோர்வாயிருப்பதாய்ச் சொல்ல, கை கால்களைப் பிடித்துவிட்டவள் போகும்போது என்னிடம் சொல்ல வேண்டுமென்கிற நோக்கமெதுவுமில்லாதவளாய் அப்படியே உறங்கச் செய்துவிட்டுப் போயிருந்தாள்.
     ஜன்னலுக்குள் கொஞ்சம் வெளிச்சமும் நிறைய காற்றும் கசிந்து சேர்ந்திருந்தது. திறந்து கிடந்த அறையில் நுழைந்து என்னை எழுப்பிய உருவம் அவளாகத்தான் இருக்குமென ‘எனக்குப் போதும் இனி முடியாதுகண் திறக்காம் சொன்னேன். ‘மிஷன்தெரு பொம்பளைனா மட்டும் வேணுமோ?...பேசியது சந்தேகமே இல்லாமல் ஆண்குரல். ஓல்டுபாயாக இருக்குமோ என கண்ணைத் திறந்தால், அவனுக்கு எப்படி மிஷன் மேட்டர் தெரியும் என்கிற குழப்பம். கட்டிலுக்கு மிக நெருக்கமாக நாற்காலி போட்டு அமர்ந்திருந்த உருவத்திற்கு முன் கழுத்து வரையிலும் தாடி மயிர். மலர்ச்சியான கண்கள். இந்த மனிதனை உனக்கு நன்றாய்த் தெரியுமென மனம் சொன்னது. சந்தேகமே இல்லை இது ப்ரகாஷ்தான். ஆனா அந்த ஆள் செத்து ரொம்ப வருஷமாச்சே...குழப்பத்தோடு உட்கார்ந்தவனை ‘வந்த வேல முடிஞ்சதாஆதரவாக கேட்டது ப்ரகாஷ்தான். ஆவியோ நிஜமோ ப்ரகாஷிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறதுதானே. ‘ம் முடிஞ்சதுங்க....அண்ணே, அப்பா,ஐயா,எப்படிக் கூப்பிட? இந்த பதில் எங்களிருவரையும் கொஞ்சம் மெளனமாக்கியது. நான் பேச விரும்பினேன். ஆனாலும் இப்பொழுது அவர் பேச விரும்பினார். ரம்யாவ பாக்கலையா?...நான் நிமிர்ந்து அவரைப் பார்த்துவிட்டு ‘உங்களுக்கு ரம்யாவத் தெரியுமா?’ மிஷன் தெருப் பெண்களை மற்ற எல்லோரையும் விட எனக்கு நல்லாத் தெரியும்...அவர் சிரித்த்து எனக்குப் பிடித்திருந்தது. களையான முகம். நான் சந்தோசப்பட்டேன். ரம்யா அதே வீதியிலிருப்பதாக அவர் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. அவள் மீதான நம்பிக்கையில், ‘ரகசியங்கள் ஒளிந்து கிடக்கும் இருளுக்கருகில் அதனை மறந்து வசிக்கும் பெண்ணில்லை அவள்’  நான் சொல்லவும் மெளனமாக சிரித்தவர் ‘பெண்கள் ரகசியங்களை செரிக்கவும் அதனோடு பிணைந்து கிடக்கவும் பெரு விருப்பம் கொண்டவர்களென்றார்.எனக்கு அந்த உரையாடல் கசந்த கனமது. என் மெளனத்தால் அவரைப் புறக்கணிக்க முடிவுசெய்தேன். சில தின்ங்களுக்கு முன் வெளியாகியிர்ந்த என் புத்தகத்தையும் என்னுடைய சில கதைகளின் கையெழுத்துப் படிகளையும் எடுத்து என்முன்னால் நீட்டியவர் இவையனைத்தும் குப்பைசிறிதும் தாமதமில்லாமல் கிழத்தார். அந்தக் காகிதம் ஒவ்வொன்றும் என்னுடலின் ஒரு அங்கம் கிழிவதைப் போல் வேதனையளிக்க, என்மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்றேன். அவர் சிரித்தார் காகிதங்கள் கிழிவது இன்னும் வேகமாகியது. ‘நீயும் நானும் வன்மங்களையும் அதற்குப் பின்னாலிருக்கும் அழகையும் தானே பேசியிருக்கிறோம்; அருவருப்பின் சுவை மறந்து போனதா?...எனக்கு மறக்கவில்லை. அதற்காக என்னுடல் கிழிவதை எப்படிப் பார்க்க முடியும்?...
     முகத்தை சுளித்து வேறுபக்கம் திரும்பியவனை சொத்தென ஒரு அறைவிட்டார். அதுவரையிலும் சந்தேத்துடனிருந்த அவரின் இருப்பு காட்டமாக அந்த நிமிடம் உறுதியானது. ‘மிஷன் தெருப் பெண்கள் அவ்வளவுபேரையும் மானசீகமாக புணர்ந்தவன் நீ...என் கதைகளை அதற்காகத்தானே காதலிப்பதாய்ச் சொன்னாய்...? நான் இல்லையென பொய் சொல்ல முடியுமா என்ன? அமைதியாயிருந்தேன். இன்னொரு அறை விழ, நான் எழுந்து நின்றுகொண்டேன் சிரமத்துடன் கோபமான ஒரு முகத்தை அவருக்குக் காட்டினேன். ‘பெண்கள் கோப்ப்படுவைத்ப் போலிருக்கிறது உன் முகம்...அவரின் குரல் எனக்கு ரம்யாவை நினைவுபடுத்தியது. அவளும் இதைத்தான் சொல்வாள். சோர்வோடு உட்கார்ந்தேன். ‘நீ என்மீதான வன்மத்தை ரங்கமணியின் மீதும், மிஷன் தெருப் பெண்களின் மீதும் காட்டினாய் நான் பதிலுக்கு உன் பிரதியின் மீது காட்டுகிறேன்.எழுத்தாளனுக்கு வன்ம்ம் அழகில்லை என்றேன்... உன்னைத் தவிர எல்லோருக்கும் நீ உபதேசம் சொல்வாய் என அவர் சொன்னது உண்மையென்ப் பட்டது. அவரிடம் அதிகம் பேச விரும்பவில்லை. அவரின் கதைகளை மட்டுமே நேசிப்பதாகவும் அவரை வெறுப்பதாகவும் சொல்லி அந்த அறையிலிருந்து வெளியேறப் போவதாக கத்தினேன். ‘இங்கிருந்து வெளியேற உனக்கு அனுமதியில்லை, ஆக்க் கடைசியாயிருந்த ஜ்ம்னாவையும் இன்று நீ விட்டு வைக்கவில்லைஅவர் சொன்னதும் சில மணிநேரங்களுக்கு முன் வந்தவள் யாரின் நிழலென குழப்பம் கொண்டேன். அவளுடலை உணரமுடிந்த்தும் நான் நெகிழ்வாய் அவளுக்குள் கிளர்ந்து எழுந்த்தும் உண்மைதான், ஆக அவள் இங்குதான் எங்கேயோ இவ்வளவு காலமும் இருந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணுடலை நான் அவமதித்துவிட்டு கோபம் அவரிடமிருந்தது. கடைசியாக மிச்சமிருந்த என் கைப்பிரதிகளைக் கிழித்தவர் விடிவதற்குள்ளாக நான் ஜம்னாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றார். நான் அவளைத் தேட எனக்கு அவகாசமில்லை எனவும் நான் உறங்கியாக வேண்டுமெனவும் சொல்ல, தனது கடைசி ஆயுதமாய் ரம்யாவிற்கு நான் எழுதிய கடிதங்களை எடுத்தார். ‘உன்னுடையதிலேயே கொஞ்சம் விருப்பமானது எனக்கு இதுதான், இதையும் வன்கொலைக்கு உட்படுத்தி விடாதேஎனக்கு ரம்யாவின் உடலும் என்னுடலும் ஒரே சமத்தில் கிழிபடுவதைத் தாங்க முடியாது. ஜம்னா எங்கு போயிருப்பாள். விடிவத்றகு முந்தைய ஏதாவதொரு இருளப்பிய தெருவில் நிச்சயம் அவளைப் பார்க்க முடியும். அவரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு மாடிப்படியிறங்கி ஓடினேன். என்னோடு விடிவதற்கு முந்தைய காற்று பெரும் விசையுடன் தொடர்ந்து வந்தது.
            பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரியகோவில் நோக்கிச் செல்லும் மூன்றாவது வளைவிலேயே ஜம்னாவைப் பார்த்துவிட்டேன். மன்னிப்புகள் அல்லது நேசங்கொண்ட முத்தமிடுதல் அல்லது எனது சில துளிக்கண்ணீர் எது அவளை சரிப்படுத்தும்?...யோசனைகளுடன் நெருங்கினேன், என்னை அருவருப்பாகப் பார்த்தவள் எதிர்த்திசையில் நடந்தாள். ஓடிப்போய் அவளை நெருங்கின வேகத்தில் முதுகிலும் கழுத்திலும் முத்தமிட்டேன். எனக்கு ரம்யாவின் நினைவு. சம்பந்தமேயில்லாமல் அவளது வாசனையை இவளுடலில் உணர்வதாக நினைத்துக் கொண்டேன். நீண்ட அந்த வீதியின் சுவரில் அவளை சாய்  த்து விருப்பத்துடன் அள்ளிகொள்ள அவள் என்னுடலை சிறிதும் பொருட்படுத்தியிருக்கவில்லை. விடிவதற்கு முந்தைய இந்த நேரத்தில் அவளுடல் தனித்துவமிக்கதொன்றாய்ப் பட்டது. மிக மோசமான அவளின் அங்க அளவுகளில்கூட ஆர்வங் காட்டியவனாய்த் தழுவிக்கொண்டிருந்தேன். அறைக்குக் கூட்டிவரும் உத்தேசமெதுவுமில்லை. அதுவரையிலுமான காத்திருப்பிற்கு நேரமிருந்திருக்கவில்லை. ஆளரவமற்ற இந்தச் சாலையின் இருளில் அவளுடலுக்குள் மூழ்கி எழுந்த பொழுது இதுவரையிலுமான மிஷன் தெரு பெண்கள் அவ்வளவுபேரின் சாயலையும் இவல் ஒருத்தியிடம் பார்த்துவிட்ட திருப்தி.
     ரம்யா அறையில் காத்திருப்பாள், ப்ரகாஷோடு. அவள் கொலை செய்யப்படுவதை நான் விரும்பியிருக்கவில்லை. ஜம்னாவின் உடலை நான் துன்புறுத்தியிருக்கவில்லை குறைந்தபட்சம் ஒரு தகவலாகவாவது அவரிடம் சொல்ல வேண்டி அறைக்கு ஓடிவந்தேன். வெளியிலிருந்த்தைவிட அறைக்குள் நல்ல வெளிச்சமிருந்தது. ஆளிருப்பதற்கான எந்த தடயங்களுமின்றி நிதானமாய்க் கிடந்தது அறை. நீலவெளிச்சம் கண்களுக்குள் நிரம்ப ரம்யாவிற்கு எதுவும் ஆகியிருக்கவில்லையென திடமாக நம்பினேன். காலை நான் விழித்தெழுந்திருக்கயில் சாலையில் வாகன்ங்கள் இறைச்சலோடு அலறும் சப்தத்தினைக் கேட்க முடிந்தது. உடலில் கடுமையான சோர்விருந்தும் அடுத்த வேலைகளில் கொண்டிருந்த கவனம் காரணமாய் சற்று வேகமாகவே கிளம்பினேன். சாவியை வாங்கிக் கொண்ட் லாட்ஜ் ஆள் ‘இரவு முழுக்க அறையில் பேச்சரவம் கேட்டதாய்க் கூறினார். உறங்கியபின் நிகழும் எதையும் நான் நினைவில் வைப்பதில்லை’  என்றதும் நல்லதுஎன சிரித்துக் கொண்டார். லாட்ஜிலிருந்து  கிளம்புகிற நேரம் வரையிலும் ஓல்டுபாய் திரும்பியிருக்கவில்லை. சாலையில் இறங்கி நடக்கையில் தற்செயலாக அறையைத் திரும்பி பார்த்தபொழுது தாடி வைத்த ஒரு ஆளும், ஒரு மத்திம வயதுப் பெண்ணும் அறைக்குள் சிரித்துப் பேசியபடி இருப்பது போலிருந்தது, பேருந்தை பிடிக்க வேண்டிய வேகத்தில் அங்கிருந்து வேகமாக வாகனச் சத்தத்திற்குள் ஓடி மறைந்தேன்.

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு