மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்... (ஆனந்த விகடனில் வெளியான கதை....)

         சுந்தரி ஷிப்ட்டு முடித்து கிளம்பும்போது மழை வேகமாக பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி மினி பஸ்ஸில் ஏறும் சுந்தரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்வில் இரண்டு சந்தோசங்கள் இருந்தன. ஒன்று சுந்தரி இன்னொன்று நைட் ஷிப்ட் வேலை. முகத்தில் படிந்திருந்த மழை நீரை தன் சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டே ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அவள் சிரித்த பின்புதான் கம்பெனிக்குள் நுழைந்தான். அவளின் சிரித்த முகம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்க மிகப் பரபரப்பான வேலைக்காரனைப்போல வேலையைத் தொடங்கினான். தறிச் சத்தத்தில் இடி விழுந்தாலும் கேட்காதுதான், அதற்காக இடிவிழவேண்டுமென்கிற வேண்டுதல்களோ விருப்பங்களோ எதுவும் அவனுக்கு இருந்திருக்கவில்லை. ரசனை ரசனையின்மை என்று பிரித்துப்பார்க்கத் தெரியாத அவனுக்கு சுந்தரியின் சிரிப்பினூடான அந்த மழைநாள் மனமெங்கும் பொங்கும் சந்தோசத்தால் நிறைந்திருந்தது.


கணபதி டெக்ச்டைல்ஸில் நைட் ஷிப்ஃட் வருவது குதுகலமான விசயமாக இருந்தது. வெயில் காலத்தில் மட்டும்தான் தறி வெக்கையில் கொஞ்சம் முதுகு எறியும்நீர்க்கடுப்பில் வயிறு வலிக்கவும், ஒன்னுக்குப் போகையில் எரிச்சலுமாக சேர்ந்துவிடும். ஆனாலும் அதையெல்லாம் பார்த்தால் வேலை செய்ய முடியுமா? இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த இத்தனை வருடத்தில் அவன் விடுமுறை எடுத்த நாட்களை எண்ணிவிடலாம். மற்றவர்களின் பேச்சு சப்தத்தைவிட இந்த தறிகளின் சத்தத்தைதான் இவன் அதிகம் கேட்டிருக்கிறான். தறிச் சத்தத்தில் இவன் பாடுவது வெளியே கேட்காது என்ற தைரியத்தில் இரவெல்லாம் பாடல்களை முணங்கியபடி மிக மெனக்கெட்டு வேலைகளைச் செய்வான். ஆனால் உண்மை என்னவோ வேறு மாதிரி இருந்தது. இவனுக்குப் பின்னால்  வேலைக்கு வந்த சிறுவர்கள் இப்பொழுது வீவர்களாகி, இவனை வாடா போடா என்கிறார்கள்.  இவன் இன்னும் பேட்டரி ஃபில்லராகவே இருக்கிறான். இவனோடு வேலைக்குச் சேர்ந்த பாண்டிக்கண்ணன் இப்பொழுது ஃபிட்டராகியிருந்தான். அவனைப் பார்க்கும் போது கொஞ்சம்கூட இவனுக்குப் பொறாமையாக இருப்பதில்லை. இந்த வருசமாவது வீவராகிடுடா.. 


 அவன் இவனிடம் சொல்வதில் கொஞ்சம் பாசமிருக்கும் எப்பொழுதும். இவனும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலில்லை, என்ன செய்தும் இவனுக்கு நூலில் மிகச்சிறியதாய் நாட் போடுகிற அந்த சூட்சுமம் வாய்த்திருக்கவில்லை.


     நாட் போடுவதற்கு முதன்முதலாக இவன் கற்றுக் கொண்டது எட்டு வருடங்களுக்கு முன்பு. முடிச்சு பெரிதாகி நாடா உட்கார்ந்துவிட, அந்த லைன் வீவர் ஓடி வந்து காதில் ஒரு அரை விட்டான். அவனுக்கு  நாடா உட்கார்ந்ததிலெல்லாம் வருத்தமில்லை, அப்படியொரு அரை விட்டபிறகும் இவன் லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கவும்தான் எரிச்சல் அதிகமானது. இன்னொரு அரை விட்டவனின் முன்னால் அப்பொழுதும் இவன் சிரித்தபடியே நிற்க,
இனிமே என் லைனுக்கு நீ கண்டு வைக்காதடா தாயலி 
துரத்தி விட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அந்த முடிச்சு சின்னதாகிறதே ஒழிய இன்னும் அது முடிச்சாகியிருக்கவில்லை. வந்து கொஞ்ச நாட்கள் நவநீதா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் நாளாக நாளாக அந்தப்பேரை மறந்து மாமா என்று கூப்பிடத் துவங்கியிருந்தார்கள்.இந்தப்பேர் எப்படி வந்ததென இவனுட்பட ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லைவேலைக்குச் சேர்கிற எல்லோருக்கும் அவன் அப்படித்தான அறிமுகப்படுத்தப்பட்டான். சொந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவனுக்கே மறந்து போகிற அளவிற்கு அந்த வார்த்தையை எல்லோரும் பயன்படுத்தியிருந்தார்கள். ’ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’  யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இவனுக்குப் பொருந்தும்


     எல்லோருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ சுந்தரிக்கு இவனைப் பிடிக்கும். ஆளாளுக்கு இவனை அழ வைக்கையில் ஊரே கேட்கும்படியாக கத்துகிற இவனை கட்டுப்படுத்தக்கூடியவள் அவள் ஒருத்தி மட்டும்தான். யார் சத்தத்திற்கும் கட்டுப்படாத அவன் அழுகை, இவள் பேசினால் மட்டும் நின்றுவிடும். கம்பெனியில் அவளுக்கு அடைப்புப் போட வேண்டுமென்கிற முயற்சியில் ஒருவர் விடாமல் இறங்கியிருந்தனர். அவளை வேலைக்கு இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது நவநீதன்தான்.


இவன் வசிக்கும் தெரு காலனி தெருவுக்கு பக்கத்தில் இருந்தது. அந்த தெரு ஆட்களோடு பழகுவதற்கு நவநீதனுக்கு எந்த தடையும் இல்லை. வெள்ளந்தியான இவனின் மனதை புரிந்து கொண்ட அந்த தெரு ஆட்களின் வீட்டுக்கு சென்று வந்துகொண்டிருந்தான். சுந்தரியை இவன் கவனித்தெல்லாம் பார்த்ததில்லை. ஒருநாள் அவளாகவே இவனிடம் வந்து ’உங்க கம்பெனியில வேலை இருந்தா என்னைச் சேத்துவிடு’ என்றால். இவனை ஒரு காரியக்காரனாக நினைத்து இப்படி ஒரு பொறுப்பை கொடுத்த முதல் மனுசி அவளாகத்தான் இருக்கும். அவன் தன்னை ஆணாக உணர்ந்த தருணம் அது. அவளிடம் சிரித்தபடியே தலையாட்டிப்போனவன் மேனேஜரிடம் பம்பி பயந்தே இந்த விசயத்தைச் சொன்னான். மேனேஜர் ’அந்த அளவுக்கு நீ பெரிய மனுசனாயிட்டியாடா’ என்ற தோரணையில் இவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ’போய் வேலயப் பாருடா ஒழுங்கா’ என்று முறைத்து அனுப்பினான். அன்று முழுவதும் இவன் மேனேஜர் கண்முன்னே கெஞ்சும் பாவனையில் சுற்றி சுற்றி வந்தான். இரண்டு நாள் கழித்து மேனேஜர் சுந்தரிக்கு வேலை தருவதாகச் சொல்ல இவனுக்கு தலைகால் புரியவில்லை. மிகப்பெரிய சாதனையைச் செய்தவனைப்போல சுந்தரியிடம் விசயத்தைச் சொன்னான். உண்மையிலேயே அந்தக் கம்பெனியில் இன்னும் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு இருந்தது.


சுந்தரி ஒருத்தனை நம்பி ஊர் உறவையெல்லாம்  விட்டுப்போனவள், போன மூணாம் மாசத்திலேயே அவன் நடுத்தெருவில் விட்டுவிட ஏமாந்து வீடுதிரும்பிய கதையை மினி பஸ்ஸில் போகும்போது அவனிடம் அழுதுபடி சொன்னாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சிரித்தான்.  அவன் சிரிப்பதைப் பார்த்து சுந்தரியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே சிரித்தாள்.  சுந்தரி ஒருவனோடு ஓடிப்போனவள் என்ற விசயம் நவநீதனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அவன் வாழ்வில் இத்தனை அன்போடு  ஒரு ஜீவனும் அவனை அரவணைத்தது இல்லை. அவன் இயல்பிலேயே அவனை ஏற்றுக்கொண்ட பெண். அவளை நினைத்தாலே பித்தாக இருந்தது.  இவன் ஒரு மார்க்கமாக இருப்பதும், இவனை யாராவது திட்டும்போதெல்லாம் சுந்தரி பரிந்து பேசுவதுமான இவர்களின் செயல்களை பார்த்து எல்லோரும் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள். சுந்தரி மீதான இவன் காதலையும் ஒரு கிண்டலாக பேசினார்களே தவிர யாரும் அதை அசைபோடுவதற்கான ஒரு முக்கியமான விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை.  சுந்தரியை படிய வைக்கும் திட்டத்தில் சிலர் இவனிடமே அவளைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.    


 என்னப் பத்தி யாரு என்ன கேட்டாலும் சொல்லிடாத..முன்பே காறாராக அவள் சொல்லியிருந்ததால் இவன் பையன்கள் என்ன கேட்டாலும் தெரியாதப்பா, ஊர்க்காரப் பிள்ள அவ்ளோதான்.. என்பதோடு முடித்துக் கொள்வான். பக்கத்து கம்பெனி ஆட்களும், மினி பஸ்ஸில் வருகிறவர்களும்கூட இப்பொழுது அவளைக் குறித்து அதிகமாக விசாரிப்பதால், அவர்களிடமிருந்து தப்பிக்கவேண்டியே  அதிகமாக ஓவர்டைம் பார்க்கத் துவங்கினான். யாரும் இவனை ஓவர் டைம் பார்க்கச் சொல்வதில்லை,. எத்தனை ஷிப்ஃட் பார்த்தாலும் இவன் பார்க்கிற வேலை அரைகுறையாகவே இருக்குமென்பதால் ஒரு ஷிப்ஃடே போதுமென்றுதான் சொல்வார்கள். சுந்தரி நினைப்பிலேயே உறங்காமல் வீட்டுத் தின்ணையில் உருண்டுகொண்டு இருப்பது வேதனையாக இருக்க நைட் ஷிப்ட் வேலையும் சேர்த்து பார்க்கத் தொடங்கினான்.  


இவனைத் திறமையானதொரு வீவராக்கிவிடுகிற முயற்சியில் நிறைய வீவர்கள் கற்றுக்கொடுத்து தோற்றுப்போக,  ஆகக்கடைசியாய் செல்வராசு வீவரிடம் வந்து பேட்டரிஃபில்லராக நின்றான். அவர் கொஞ்சம் ஈவுசோவான ஆளென்பதால் இவனுக்கு ஊடமாட உதவிசெய்வார் வேலையில். அதனாலயே நீண்ட நாட்களாக அவர் லைனில் பிரச்சனையில்லாமல் வேலை செய்ய முடிந்தது அவனால். அப்படியும் தறியைக் கையாள்கிற பக்குவம் வந்திருக்கவில்லை. செல்வராசு சுந்தரிக்காக அதிகம் இளகுகிறவனாக இருந்தான். சுந்தரி அவனுக்குப் பக்கத்து லைனில் கண்டு வைத்துக் கொண்டிருந்தாள். அவளைப்போலவே இன்னும் நிறைய பிள்ளைகள் இப்பொழுது கண்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பையன்களில் இன்னும் கண்டு வைத்துக் கொண்டிருப்பது நவநீதன் மட்டும்தான். இவனுக்கு பின்னால் வேலைக்குவந்த  சுந்தரி அவனுக்கு முடிச்சுப் போடவும், தறி ஓட்டவும் சொல்லிக் கொடுத்துப் பார்த்தாள். இவன் அவள் சொல்லிக் கொடுக்கிற நேரமெல்லாம் அவளைக் குனிந்து பார்ப்பதும், அவள் முடிச்சுப் போடும்போது இரண்டு உதடுகளையும் மடித்து ஒரு மாதிரியான முகபாவத்தோடு இருப்பதையும் பார்ப்பதில் தறி ஓட்டுவதைக் கவனிக்காமல் விட்டுவிட்டான். அதன்பிறகு முடிச்சுப்போடும் போது இவனுக்கும் உதடுகள் ஒருமாதிரியாய் கோணிக்கொண்டு போனது. முடிச்சு வந்திருக்கவில்லை.


 பொம்பளைகள் நிறையபேர் இப்பொழுதெல்லாம் மூன்று ஷிப்ஃடிற்கும் வருகிறார்கள். முன்பு டே ஷிப்ஃடில் மட்டும்தான் இருந்தார்கள். புதிது புதிதாக சின்னப் பிள்ளைகள் நிறையபேர் வேலைக்குவர போட்டிக்கு எந்த ஷிப்ஃடிற்கும் வரக் கிளம்பிவிட்டார்கள் வயசுப் பெண்களும். பையன்களுக்குத்தான் ஏக குஷி. ஷிஃப்டில் கரண்ட் கட்டாகி ஜென்ரேட்டர் மாற்றும் அந்த அஞ்சு நிமிடத்தில் இல்லாத அட்டூழியங்கள் நடக்கும். யார் எங்கிருப்பார்கள் என கண்டுபிடிக்க முடியாது. வைண்டிங் ஓட்டுவதற்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள். சின்னப் பிள்ளைகள் ஆம்பளை சட்டை போடுவதால் அவர்களுக்கு சொல்லித்தர யாருக்கும் விருப்பமிருக்காது. சேலையோ தாவணியோ கட்டுகிற பெண்களென்றால் அவர்கள் கையைத் தூக்குகிற பொழுது உடம்பின் ஒருபாதியைப் பார்க்க முடிகிற எதிர்பார்ப்பில் பையன்கள் ஆர்வமாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். வேலைக்குச் சேர்கிற கொஞ்ச நாட்களிலேயே விவரம் புரிந்து சில பெண்கள் சேலைக்குமேல் சட்டை போட்டுக்கொள்வதும், சட்டைப் போட்டு வரும் குமரிப்பிள்ளைகள் தாவணி போட்டுக்கொண்டு வருவதும் நடக்கும்.   மாமா இது எதற்கும் சம்பந்தமில்லாதவனைப்போல் இருப்பதால் எல்லா பெண்களுக்கும் விருப்பமானவனாய் அவனே இருந்தான். வீட்டுச்சோறு இவனுக்கு எப்பொழுதும் அப்படியொன்றும் சிறப்பானதாக இருப்பதில்லை என்பதால் சோறு கொண்டுவரும் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்குக் கொஞ்சமாய் கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்கள். சும்மா சாப்பிடுண்ணே...வேல பாக்க தெம்பு வேணாமா?


பழைய இரும்புத் தூக்குவாளியில்  இவன் கொண்டு வருகிற கொஞ்சம் பழைய சோறிலும் ஊறுகாயிலும் என்ன இருக்குமோ தெரியாது, கண்ணைமூடி ரசித்து அதனைச் சாப்பிடுவான். சர்‘சர்ரென அவன் கஞ்சியை உறிஞ்சும் சத்தம் நாராசமாய் இருக்கும்.
“மாடு கழனித் தண்ணி குடிக்கிற மாதிரி குடிக்காதண்ணே...கஞ்சிய மெல்லக் குடி...பிள்ளைகள் யாராவது சொல்லிவிட்டாள் அடுத்த நிமிடம் சுந்தரியிடமிருந்து கோபத்தோடு பதில் வரும் “அவன் கிட்ட வாயக்குடுக்காம பொத்திக்கிட்டுத் திண்ணுங்கடி...


    அந்த வருட ஆயுதபூசைக்கு முந்தினதினம் பாதி ஷிஃப்டில் தறிகளை நிறுத்திவிட்டு எப்பொழுதும் போல், கம்பெனியை சுத்தம் செய்ய ஆளுக்கொரு பக்கமாய் ஒதுங்கிவிட்டனர். தறிகளை துடைப்பதை விட்டு பாதிப்பையன்கள் பக்கத்து கம்பெனி இளவட்டப் பெண்களுக்கு உதவிசெய்யப் போக மிச்சம் மீதி இருக்கிற கொஞ்சபேரில் வேலை பார்த்தது ஒன்றிரண்டுபேர்தான். சுந்தரி எப்படியும் இன்று படிந்துவிடுவாள் என்கிற நம்பிக்கையோடு செல்வராசு விடாமல் அவளைச் சுற்றிக் கொண்டிருந்தான். பொறியும்,பழங்களும் வந்து தனித்தனி பைகளில் போட்டு அடைத்துக் கொண்டிருக்க, தேங்காய் உடைக்க ஆளில்லாமல்  மாமாவைத் தேடியபொழுதுதான் பாதி ராத்திரிக்குமேல் அவனை யாரும் பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. பையன்கள் சுந்தரியிடம் கேட்டார்கள்...எத்தா எங்க ஒன் ஆள ஆளக்காணோம்...
அவளுக்கு சட்டென கோவம் வந்தது, காட்டிக்கொள்ளாமல்
“அந்த லைன் வீவரப்போய் கேளுங்கடா...எங்கிட்ட கேக்குறய்ங்க...”  அவள் வார்த்தை வந்த வேகத்தில் பையன்கள் நகர்ந்து போய்விட்டார்கள்.
ஆளுக்கொரு பக்கமாய்  “டே மாமா...டே..வலைவீசி தேடிக்கொண்டிருக்க, சுந்தரி மட்டும் அவனை பேர் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  சுவற்றில் சந்தனத்தால் வன்னா போட்டுக் கொண்டிருந்த தங்கப்பாண்டி,  தறிக்குக் கீழ் ஏதோவொரு உயிர் அசைவதைப் பார்த்து எல்லோரையும் கூப்பிட்டான். யாரும் சத்தம் கொடுக்காமல் வந்து நிற்க, சலனமே இல்லாமல் தறிக்குள் பீம் இருக்கும் இடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். யாரும் நெருங்கிப் போகாமல் தறி மோட்டாரை ஆன் செய்ய,   தறி துடைக்கத் தந்த நூல் வேஸ்ட்டைத் தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்த மாமா , மலங்க மலங்க  எல்லோரையும் பார்த்து சிரித்தான். அவன் சிரித்த நிறுத்தின பிறகு எல்லோரும் சேர்ந்து சிரிக்க, எதற்கு சிரிக்கிறார்கள் எனத் தெரியாமல் இவனும் சிரித்தான்.


“எலே கூறுகெட்டவனே துணியுமில்லாம தூங்குறியே, எவ நெனப்புல இப்புடி கெடக்கற?....
அதுவரையிலும் தான் லுங்கியை அவிழ்த்து விரித்துப் படுத்த நினைவில்லாதவன் அவசரமாக லுங்கியைத் தேடி எடுத்து உடுத்தினான். சுந்தரி சுற்றி நின்றிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு அவனை இழுத்துக் கொண்டுபோய் முகத்தில் தண்ணீரை அடித்துவிட்டாள்.
“தூங்கறதுக்கு வேற எடம் கெடக்கலையா லூசுப்பயலே...
திட்டியபடியே முதுகைத் துடைத்து விட்டவளுக்கு தன் இளவயது அம்மாவின் சாயல் இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு. ரொம்ப நேரம் அவளையே பாத்துக் கொண்டிருந்தவனை மண்டையில் நறுக்கெனக் குட்டி
“உத்துப் பாக்காம போயி ஆகுற சோலியப்பாரு...சிரித்துக் கொண்டு போய்விட்டாள். எல்லோருக்கும் பொரி கொடுத்துக் கொண்டிருந்த முதலாளி இவனுக்குப் பொறியோடு சேர்த்து அன்னைக்கு 2 புது ஜட்டிகளும் தந்தார். “காலா காலத்துல கல்யாணத்தப் பண்ணுடா..முதலாளி சத்தமாகச் சொன்னதற்கு “பொண்ணெல்லாம் தயாரா இருக்கு சார்...மத்த ஆட்கள் எல்லாம் சத்தமாய்ச் சொன்னார்கள். இவன் யாரைப் பார்ப்பதெனத் தெரியாமல் சிரிக்க, சுந்தரி மட்டும் ஓரமாக தலையைக் குனிந்து நின்றுகொண்டிருந்தாள். வெறும் மாமாவை எல்லோரும் ஜட்டி மாமாவாக்கிவிட்டனர்.


ஆயுதபூசை லீவு முடிந்து எல்லோரும் கம்பெனிக்குவர, மாமா மட்டும் வந்திருக்கவில்லை. ஒரு நாள் விடுமுறை, இரண்டு, மூன்று எனக் கடந்து பதினைந்து நாட்களைத் தாண்டவும் பாதிப்பேர் அவன் இனி எப்பொழுதும் வரமாட்டான் என்றே பேசிக்கொண்டார்கள். சுந்தரியிடம் கேட்டதற்கு எந்த தகவலும் தெரியாதெனச் சொல்லிவிட்டாள். பதினாறாவது நாள் வேலைக்கு வந்தவனிடம் புது மாப்பிளைக் களை. புது வேட்டியும், கொஞ்சம் லூசான மோதிரமும் அவனுக்குப் பொருத்தமே இல்லாமல் இருந்தது, கல்யாணம் கட்டி வைத்திருக்கிறார்கள். சொந்தக்கார பெண், பக்கத்து ஊர்தான். கம்பெனியில் இவனையும் சுந்தரியையும் வைத்துப் பேசியதில் அரையும் குறையுமாய் வீட்டிற்குத் தெரிந்துவிட, “போயும் போயும் சாதி கெட்ட சாதியில இருக்குற சிரிக்கிகூதான சேத்து வெச்சுப் பேசனும்...ஆத்திரத்தில் சட்டென கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டனர். தனக்கு வாக்கப்படு வந்த பெண்ணை சுத்தமாய் இவனுக்குப் பிடிக்கவில்லைதான். எப்படி அந்த கல்யாணத்திலிருந்து தப்பிப்பது என்றுகூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சுந்தரி பார்த்ததிலிருந்து அவனுக்கிருந்த மயக்கம் முற்றாக வடிந்திருந்தது. ஒரு ஆணாக அவன் உணர்ந்த சந்தோசம் அது. வெறுங்கூடாக சிரிப்பை மறந்து எப்போதும்போல் தறிக்கு கண்டு வைத்துக்கொண்டிருந்தான். தறியின் சத்தம் அவன் மனதின் பேரோலத்தைப் போலவே கேட்டது. யார்யாரோ ஏசிய வார்த்தைகள் எல்லாம் அவனை இத்தனை வதைத்தது இல்லை.


தன் பக்கத்தில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரி தன்னிடம் பேசமாட்டாளா என்ற ஏக்கத்தோடு அவள் முகத்தை பார்த்தான்.  அவன் இன்னதென்று அறிய முடியாத அவனால் அர்த்தம் கொள்ளவே முடியாத சிரிப்பொன்றை உதிர்த்தவள் ’ஒரு வார்த்தை சொல்லாமகூட கல்யாணத்தை முடிச்சுபிட்ட’ என்றாள். பதில் சொல்லாமல் அவன் திணறிக்கொண்டிருந்தபோது  கம்பெனியில் எல்லோரும் மொய் செய்வதாக சொல்லி ஆளுக்கு கொஞ்சமாய் பணம் சேர்த்து அவனுக்குக் கொடுத்தனர்.  யாரிடமும் வாங்காமல் சுந்தரியை பார்த்துக்கொண்டிருக்க கலங்கமற்ற சிரிப்புடன் அவள்  “சும்மா வாங்கிக்க...அந்தப் புள்ளைக்கி ஏதாச்சும் நல்லது கெட்டத வாங்கிக் குடு...சொன்னதும் ஆட்டுக்குட்டியைப்போல் தலையாட்டி வாங்கிக் கொண்டான். முதலாளி இவனுக்கும் வீட்டுக்காரிக்குமாய்ச் சேர்த்து புதுத்துணி வாங்கிக் கொடுத்தார். செல்வராசு மட்டும் ரொம்ப அக்கறையாகப் பேசினான். கல்யாணத்திற்குக் கூப்பிடாத்தற்காக கோப்ப்பட்டவன், “புள்ளய உனக்குப் பிடிச்சிருக்காடா?...அந்தப் புள்ள வீட்ல எப்புடி இருக்க வீடா, இல்லாத வீடா?....


விவரமாக எல்லாத்தையும் கேட்க நினைத்தவனை சந்தோசமற்ற இவன் முகமும் குரலும் நிராகரித்தபடியே இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரே வார்த்தையில் பதில் சொன்னவனை “ஏண்டா ஒரு மாதிரி இருக்க, சந்தோசமா இருக்க வேண்டிதான?செல்வராசு சொன்னதற்கு நீண்ட நேரத்திற்குப் பின்பாக


எனக்கு இந்தப் புள்ளையதாண்ணே புடிச்சிருக்கு...”  சுந்தரியைக் காட்டினான். இத்தனை நாட்களும் விளையாட்டுக்கு இவர்களை சேர்த்து வைத்துப் பேசியது பொய்யாகிய வெறுமையில் செல்வராசு அமைதியாக அங்கிருந்து போய்விட்டான். அதன்பிறகு, செல்வராசு உட்பட யாரும் அவனை சுந்தரியோடு சேர்த்துப் பேசிக்கொள்ளவில்லை.

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு