நீலநதியில் மிதக்கும் யாக்கை..;

         நகரத்தின் தனிமையின் பிரமாண்டமான கதவுகள் ஒரே நேரத்தில் சாத்தவும்படுகின்றன திறந்துவிடவும்படுகின்றன.அடைபடுவதும் வெளியேறுவதுமாய் இருக்கிறார்கள் மனிதர்கள். நகரத்தின் வாழ்வு ஒரு சிலருக்கு கொண்டாட்டத்தையும் பலருக்கு தீராத சலிப்பையும்  சுகபோக வாழ்வை சதா எட்ட ஏங்கித் திரியும் அலைகழியும் வாழ்வையே கொடுக்கிறது. இன்னொரு பக்கம் நாம் அறியாத சகித்துக்கொள்ளவே முடியாத விளிம்புநிலை வாழ்வை கொண்டவர்களின் நரகக் கூடாரகமாகவும் இருக்கிறது வெளிக்கண்களுக்கு பகட்டாகவே தெரியும் நகரம். நகரத்திலிருந்து விடுபட முடியாத கனவை கொண்டிருக்கும் நான் அதன் இரக்கமற்ற ஒதுக்கலை பல நேரங்களில் நேரடியாக அனுபவித்திருப்பதால் இக்கதைகளில் விளிம்புநிலை வாழ்வை நெருக்கமாக உணர முடிகிறது. குற்றங்களும் அதன் பின்னணிகளும் அதனால் உருவாக்கப்படும் குற்றத்தின் மீதான வசீகரமும் தீராத வாசிப்பதை முதல் கணத்திலேயே கொடுத்துவிடுகின்றன.

உடல் இவ்வெளியில் மாபெரும் கடலைப் போன்று திறந்தே கிடக்கிறது. அவைகள் ஒளிந்து கொண்டிருக்கும் பின்னணிகளே இக்கதைகள். மனிதநேயம் காணாமல்போய் சூன்யவெளி ஒன்று நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கிறது.அந்த சூன்யவெளிக்குள் நம்பங்குக்கு கற்களை  எறிகிறோம். அவ்வெளியில் இருக்கும் மக்களின் முகங்களில் குற்றங்களை மேலும் மேலும் அப்பிக்கொண்டே போகிறோம் எந்த குற்ற உணர்வின்றியும். திணிக்கப்படும் குற்றங்களுக்கு பின்னால் செல்லும் மனிதன் புரிந்து கொள்ளவே முடியாத நிம்மதியையோ அல்லது குற்ற உணர்வைத் தாண்டிச் செல்லும் மனநிலையையோ அடைகிறான். பிரதியை வாசிக்கும் நாமும் அதையே அடைவதும் சாத்தியமாகிறது.

குற்றங்கள் சில கணங்களில் புனிதம் என்று சொல்லிக் கொள்கின்ற எல்லாவற்றின் மீதும் காறி உமிழந்துவிட்டு அன்பின் எல்லைக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறது. மேல்த்தட்டுப் பார்வையில் ஆன்மா புனிதமானது,பரிசுத்தமானது என்று கட்டமைக்கப்படுகிறது என்றால் விளிம்பு நிலையிலுள்ள மக்கள்களால் கட்டமைக்கப்படும் ஆன்மா புனிதம், பரிசுத்தம் இவற்றை முழுமையாக அழித்து குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான அன்பை குற்றங்களுக்குள்ளாகவே தேடி அடைகிறது.

பிரம்மாண்டமான புராதானங்களைக் கொண்ட, உலகமயமாக்களின் மாய உலகம் நிறைந்த நகரங்களுக்குள் இயங்கும் குறுகிய வீதிகள்,மூத்திர சந்துகள், ஆள்நடமாட்டம் இல்லாத ரயில் நிலையத்தின் பாலங்கள் பெரும்பாலும் இக்கதைகளின் நிலக்காட்சிகளாக இருந்தாலும் அவற்றுக்குள் இயங்கும் மனித மனங்களின் பித்தலாட்டங்களும் உண்மைகளும் குற்றங்களும் வன்மமும் பால்பேதமற்ற அன்புமே இந்நிலக்காட்சியை முழுமையாக்குகிறது.மனதில் நோய்மை பற்றித் திரியும் மனிதர்கள் சதா குற்றத்தின் பின்னணியில் சுழல்கிறார்களோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது

நேரடியான வன்முறையை எதிர்கொள்ளும் மனிதர்கள் ஒரு கட்டத்தில் உடல், மன வாதைகளை போதைகளைப்போல பழகிக்கொள்கிறார்கள். மலையளவுவாதை வெளிச்சொல்ல முடியாதபடி உடலை நிறைக்கிறது. உடல் அப்போது தீராத சுதந்திரத்தை அடைகிறது. அப்போது  மனநிலையை சீர்படுத்துவதற்கு உடலைத் தவிர எதுவும் இல்லை என்ற நிலையில் உடல் பற்றிய பிரக்ஞையை அழிக்கிறார்கள்.

கடவுளும் இவர்களிடம் மெய்முகம் மறைத்து துரோகத்தால் பிணைக்கப்பட்ட கோரமுகத்தை காட்டாமல் ஓடிவிடுகிறான். கடவுள்கூட இம்மனிதர்களின் குறைந்தபட்ச ஆசாபாசாங்களின் மீதேறிச் செல்கிறான். வெளிச்சமும்(கடவுள்) இருட்டின் குணத்தையே கொண்டிருக்கிறது. ஆனால் தான் இருட்டு என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தி நேர்மையோடு அன்பு கொள்கிறது. துயரம் மனதிலும் உடலிலும் வீங்கிப் பெருத்துக் கொண்டே போகும் இம்மக்களின் வாழ்வை யார் கவனிக்கிறார்கள். குற்றம் பெருகப் பெருக குற்றத்தின் மீதான வசீகரமும் கூடுகிறது. அதனால் அன்பும் வாஞ்சையும் வேண்டும் மனம்கூட எப்போதும் தனித்து திரியும் குணத்தையே கொண்டிருக்கிறது.

வாழ்வின் சூட்சமத்தையும் கதையின் அழகியலையும் ஆள்நடமாட்டமுள்ள தெருக்களில் தனிமை நிறைந்த நகரம் துப்பும் மனிதர்களோடு பயணித்துக்கொண்டே இருக்கிறார் லஷ்மி சரவணகுமார். எதனாலும் ஆறுதல் அடைய முடியாத தனிமையும் துயரமும் வெளிப்படையாகவே உடலுறவைத் தேடி அலைகிறது தன்னிலை அடைவதற்காகவும் தொழிலுக்காகவும்.  கைவிடப்பட்ட கடுமையேறி வெயில் குடித்து ஏக்கத்தோடு இருக்கும் முகங்களின் வெக்கைகளின் ரேகைகள் குற்றவுணர்வில்லாத சலனமற்று தன்னளவில் சந்தோசத்தையே கொண்டிருக்கிறது. எல்லா குற்றங்களுக்கு பின்னாடியும் ஒரு அன்புணர்ச்சியைத் தேடி கண்டுபிடித்துவிடும் தவிப்பும் இருக்கிறது.


2

மதினிமார்களையும்,அக்காக்களையும், அம்மாக்களையும் அன்பின் அடிநாதங்களோடு தேடித் தேடி தொலைந்த கதையுலகம  இந்தக் கதைகளின் பெண்களைக்கண்டு அதிர்ச்சியடையும். சமூக வாழ்க்கையில் ஆண்கள் அன்பு, அதிகாரம்,அந்தஸ்து இப்படி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நியமங்களின்படி பெண்களை அம்மாவாக, மகளாக, மனைவியாக,அதிகாரியாக இன்னும் அவர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்துக்கொள்கிறார்கள். எல்லா இடங்களிலும் பெண்களின் மீது நீளும் அதிகாரத்தின் போக்கும் வன்முறையும் கொஞ்சம் கூடும் குறையுமே தவிர எல்லாப் பெண்களும் அச்சட்டகத்திற்குள் இருப்பது தவிர்க்க முடியாதது. வன்முறைக்கு பயந்து பூனைகளாகவும்,சர்ப்பங்களாகவும் மாறமுடியாத பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்கள்.வன்முறைக்கும் அன்பிற்கும் மாற்றாக அவர்கள் உடலை முன்வைக்கும்போது உறவுகள் பேதமின்றி எல்லோருக்குமானதாக உடலை மாற்றுகிறார்கள் . பிச்சைக்காரனுக்கும்,ரோகிக்கும்,கள்ள அதிகாரிக்கும், கடவுளுக்கும்,சாத்தானுக்கும்,கொலைகாரனுக்கும் உடலைத் திறப்பவளை நீங்கள் என்ன சொல்வீர்கள்? பரத்தை என்றுதானே..அவளுக்கு நான் தேவதை என்று பெயரிட்டாலும் பரத்தை என்ற பெயரே இன்னும் அழகாக இருக்கிறது.

சாதாரண மனிதர்களை அதிர்ச்சியடையச் செய்யும் இடங்களை வெற்றிடங்களாக விடுகிறேன். அதை எதனாலும் இட்டு நிரப்பிக்கொள்ளும் பொறுப்பு உங்களுடையது அல்லது நிராகரித்துச் சென்றாலும்கூட இவை விளிம்புநிலையின் உண்மைகள். இப்பெண்களின் தடித்து வீங்கிய உதடுகளின் புண்கள், பற்களில் நிரம்பி இருக்கும் கறைகள்,கிழித்து வீசியெறியப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள்,வீச்சமெடுத்த யோனிகளின் கதைகளை கேட்கவே விரும்புகிறேன் அனுதாபத்தோடு அல்ல இப்படிப்பட்ட உலகில்தான் நானும் ஒரு பங்குதாரியாக இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ள. ஆண்குறிகளின் வன்மம்,அன்பு,விடுதலை, வக்கிரம், அலட்சியம் ஆகியவற்றின் விந்துக்களை ஒரு பரத்தையால் மட்டுமே கள்ள ஒழுக்கங்களின் மீது வீசி எறிய முடிகிறது. அதுகொண்டு பெருமை கொள்கிறேன். ஒரு பரத்தையின் யோனிக்குள் எத்தனை கோடி விந்துக்கள் நுழைந்தாலும் அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள் அவள் உடலின் ஆளுமையை.

இக்கதைகளின் மனிதர்களுக்குள் இயங்கும் உளவியலின் அடிப்படையிலேயே இப்பிரதியை வாசிக்க வேண்டியிருக்கிறது. சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் பெண்களை மனதளவில் புணர்வதும் அல்லது அவர்களை நினைத்து சுயமைதுனம் செய்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இதனை வெளிப்படையாக பேசுகின்றன் லஷ்மி சரவணக்குமாரின் கதைகள்.

அவர் சொல்வதுபோல் வாசித்த வாசிக்கின்ற எவ்வளவோ பிரதிகளை விடவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது வாழ்வு(நீலநதி). பிரதியைத் தாண்டி எழுதுவதுதான் ஒவ்வொரு எழுத்தாளனின் விருப்பமாக இருக்கிறது. பிரதி ஒரு திறவுகோளாக இருக்க வேண்டுமே தவிர அதைத் தாண்டி கதை வாசகனின் மன உலகில் ஒரு புதுப்பிரதியை உருவாக்க வேண்டும். அப்படித்தான் தோன்றுகின்றன இக்கதைகள்.

விளிம்புநிலை உலகத்திற்க்கான கதைமொழி என்றில்லாமல் செறிவான மொழியே இக்கதைகளின் சிறப்பு. அதுவே ஆழமான வாசிப்பைத் தூண்டுகிறது. ’நீலநதி’ சிறுகதைத் தொகுப்பில் பூனைகளின் வீடு, காற்றை மொழிபெயர்த்தல்,இருள் மூத்திரம் மற்றும் கடவுளின்  பட்டுக் கௌபீகத்துணி, இருளின் தொலைந்து போனவன்,ரவிக்கைக்குள் மறையும் வனம் ஆகிய கதைகள் மிக நெருக்கமாக எனக்குள் இயங்கின.

பூனைகளின் வீடு கதையில் பூனை பெண்களின் அந்தரங்க ஆசைகளின் பிம்பமாக செயல்படுகிறது. தனிமை நிறைந்த உரையாடல் குறைந்த ஒரு வீட்டில் பூனை அவ்வீட்டில் உள்ளவர்களுடன் அந்தரங்கமாக உறவாடுகிறது. அவற்றின் கண்களில் தெரியும் அன்பினை,வெறுமையை, ஆக்ரோசத்தை பூனையாக மாறி உலகை நேர்கொண்டு பார்க்கிறார்கள் பெண்கள்.      

காற்றை மொழிபெயர்த்தல் கதையில் எந்த காரணமின்றியும் ஒரு நடுவயதுகாரனை காதலிக்கும் கல்லூரி பெண்ணின் மனஉலகம் விசித்திரமானது.

இருளில் தொலைந்து போனவனின் கதையில் வருபவனை ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் அனுசரணையோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.உடல் மீதான வெறுப்பும்,வேட்கையும் மனதளவில் இருபாலினருக்கும் சிறு ஒற்றுமை இருக்கலாம்.   வாடிக்கையாளர்கள்  விருப்பப்படி தங்கள் உடலை பயன்படுத்துவது அல்லது அவர்களின் விருப்பப்படி இயங்குவது போன்ற சில விசயங்களில் ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்கள் ஒன்றிப்போகலாம். மற்றபடி ஆணுக்கான ஊதியம் இவையெல்லாம் பெண் பாலியல் தொழிலாளி நினைத்து பார்க்க முடியாதவையே. அதேபோல் சட்டம், சமூகம், அவைகள் செலுத்தும் வன்முறைகளை சந்திக்க வேண்டியதில்லை ஆண் பாலியல் தொழிலாளர்கள். ஆனால் யாக்கை தொகுப்பில் யாக்கை’ கதையில் வரும் விளிம்பு நிலை பாலியல் தொழிலாளியான டயானா பத்துரூபாய்க்கு தொழில் செய்வதன் இதனை விளங்கிக் கொள்ள முடியும். இருள், மூத்திரம், மற்றும் கடவுளின் கௌபீகத்துணி நகைச்சுவையோடு எழுத்தப்பட்டிருக்கிறது. தொழில் செய்வதற்கு சரியான இடம்கூட இல்லாத சூழ்நிலையில் ஈ மொய்க்கும் நாத்தம் பிடித்த கருவேலங்காட்டில் தொழில் செய்யும் பெண்ணிடம் வரும் கடவுள் காசு கூட தரமறுக்கிறார். தெருவில் படுத்துறங்கும் பெண்ணின் உடலை ஆள பணம் என்ன? எந்த அனுமதியும்கூடத் தேவையில்லை என்ற கடவுளின் எண்ணமே சமூக நினைப்பும். கடவுளுக்கும் அந்த பெண்ணுக்குமான உரையாடல் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.

யாக்கை தொகுப்பில் வரும் யாக்கை மற்றும் ஒரு செம்டம்பர் மாத்த்தின் ஸ்பானியத் தோழியும் விசுவாசமிக்க நல்மேய்ப்பர்களும் ஆகச் சிறந்த கதைகள். இந்த இரண்டு கதைகளும் நான் நோக்கியிருக்கும் பார்வையின் அத்தனை உளவியல் தன்மைகளையும் கொண்டிருக்கிறது. அந்தக் கதைகளை முழுமையாக உள்நோக்கி விமர்சிக்க இன்னும் இரண்டு பக்கங்களை ஒதுக்க வேண்டி வரும்.. 

தறிநெசவுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது  ஒவ்வொரு நெசவாளனின் நூற்கும் கைவிரல்களும் அதனுள் மடிந்து கிடக்கும் காய்ந்த காயங்களுக்குள் ஆயிரம் கதைகள் மடிந்து கிடக்கின்றன என்று ஒரு முறை சொன்னார் லஷ்மி சரவணகுமார். உடல்சார்ந்த அவரது படைப்புகளைத் தாண்டி இன்னும் சொல்லப்படாத அவருள் மடிந்து கிடக்கும் யாத்ரீகனின் பற்றற்ற பயணத்தைப் பற்றியும், மடிந்த காயங்களையும், வாழ்வின் தொன்ம கொண்டாட்டங்களையும் வாசிக்க விரும்புகிறேன்.

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.