குழந்தைப் போராளி நூலுக்கு முன்பு எழுதிய மதிப்புரை
குழந்தைப் போராளி – சைனா கெய்றெசி…
”அவர்கள் என்னிடமிருந்து
அம்மாவைப் பறித்துக் கொண்டு
என் கைகளில் துப்பாக்கியைக்
கொடுத்தனர்….”
சில வருடங்களுக்கு முன்பு சேகுவராவின் ‘வாழ்வும்-மரணமும்’
புத்தகத்தினைப் படித்தபொழுது என்ன மாதிரியான உணர்வுகள் எழுந்ததோ அதே மாதிரியான உணவெர்ழுச்சிதான்
இப்புத்தகம் வாசித்த முடித்தபொழுதம் எழுந்தது, இன்றைக்கு உலகம் முழுவதிலுமிருக்கிற
குழந்தைகளுக்கும் இளைஞர்ர்களுக்கும் மிக எளிதாக கிடைத்துவிடுகிற விசயம் வன்முறையும்
ஆயுதங்களும்தான். வளரும் தலைமுறையினருக்கு இயல்பாகவே வீரம் என்கிற விசயமும் போராளியாக
இருப்பதும் ஒருவிதமான ‘proffisional fashion’ ஆகி விட்டிருக்கிறது. இதற்கான ஞாயயப்படுத்தல்களும்
தேவைகளும் ஒருபுறம் இருப்பது வாஸ்தவமே என்றாலும் களவாடப்படும் அக்குழந்தைகளின் கனவுகளும்
ஆசைகளும் என்னவாகிறது என்பதுதான் நம்முனிருக்கும் கேள்வி.
இரண்டு பகுதிகளாக இருக்கும் இப்புத்தகத்தகத்தில்
முதல் பகுதி முழுவதும் சைனாவின் பால்யம் பற்றியும் இரண்டாவது பகுதியில் போராளி வாழ்வினையும்
விரிவாகப் பேசுகிறது. இனப்போராட்டங்கள் இன்று உலகம் முழுவதிலும் தீவிரமாய் நிற்பது
யுத்தம் நடக்கிற இனங்களின் அடுத்த தலைமுறையினரின் எண்ணிக்கை அருகிக்கொண்டிருப்பதுதான்.
போர்க்களத்தில் பெரியவர்களை விடவும் சாதுர்யமாகவும், திறமையாகவும் திறமையாகவும் போரிட
இன்று ஏராளமான குழந்தைப் போராளிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். பெரியவர்களுக்கிருக்கிற
குடும்பம், கடமை என்ற எந்தவிதமான சிக்கல்களும் இல்லாதவர்களாய் இருப்பது குழந்தைகள்
மட்டும்தான். இன்று அதிகம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொசவா, பாலஸ்தீன, ஈழப்போராட்டங்களைப்
போலவே தொண்ணூறுகளின் மத்தியில் மத்திய ஆப்பிரிக்காவில் நடந்த இனப்போராட்டங்கள் மிக
முக்கியத்துவம் வாய்ந்தவை.
1976 ல் உகாண்டாவில் ‘தூற்சி’ இனக்குழுவில் பிறக்கும் கெய்றசி குடும்பச் சூழலாலும், பல்வேறு நிர்ப்பந்தங்களாலும்
எப்படி சிறு வயதிலேயே ஒரு போராளியாக மாற நேர்ந்தது என்றும், அவர்களின் போராட்டம் வென்ற
பிறகு என்ன மாதிரியான துரோகம் அவர்களுக்கு இழைக்கப்பட்டதென்றும் தீவிரமான விசாரணைகளோடு
முன்வைக்கிறார். கொஞ்சம் வசதியான தந்தைக்கு மகளாக பிறக்கிற பொழுதும் சிறு வயதிலேயே
பாட்டியின் கவனிப்பில்தான் வளர்க்கப்படுகிறாள். அம்மாவைப் பிரிந்துவிட்டத் தந்தை இன்னொரு
திருமணம் செய்துகொள்ள பாட்டியின் சித்ரவதைகளோடும் சகோதரனின் தோழமையோடும் கழிகிறது நாட்கள்.
பாட்டியின் தோற்றத்தையும் குணநலன்களையும் விவரிக்கிற இடங்களில் ஓர் புனைவிலிருக்கிற
வாசிப்பனுவத்திற்கு ஈடான அனுபவத்தினை உணர முடிகிறது. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம்
பாட்டியால் கடுமையாக தண்டிக்கப்பட, இந்தத் தண்டனைகள் மேலும் மேலும் அவளை குறும்பு செய்யவே
வைத்திருக்கிறது. குழந்தைகளுக்கிருக்கின்ற அடிப்படையான மனம் இதுதான். ஒரு தவறை சுட்டிக்காட்ட
முற்படும் பொழுது தண்டனையாக அதனை எதிர்கொள்கிற குழந்தைகள் மனதளவில் தங்களை மாற்றிக்
கொள்வதற்கு மாறாக மீண்டும் மீண்டும் அந்தத் தவறுகளை நோக்கியே தங்களின் மனதினைத் திருப்புகின்றனர்.
பாட்டியிடமிருந்து விடுபட்டுத் தன் தந்தையின்
இரண்டாவது மனைவியிடம் வரும் சைனாவிற்கு \அந்த வீட்டினைக் குறித்த எதிர்பார்ப்புகள்,
கனவுகள் எல்லாம் சொற்ப நாட்களிலேயே நீர்த்துப்போன ஒன்றாகிப் போகிறது. பாட்டிக்கு சற்றும்
குறையாதவளாகவே சிற்றன்னையும் இருக்கிறாள். குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லிக் கொடுப்பதும்,
அக்குழந்தை அழுகிற நேரங்களில் அதற்காக இவள் தண்டிக்கப்படுவதும் நாளடைவில் அக்குழந்தையின்
மீதான தீராத வெறுப்பினை இவளுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
தன்னைச் சுற்றியிருக்கிற உறவுகள், தன் பெண்ணுடல்
என எதனைப் பற்றிய அறிவார்த்தமான எண்ணங்களும் இல்லாத சிறு பெண்ணாகவே சைனா இருந்திருக்கிறாள்.
இயல்பாக ஆப்பிரிக்காவில் பொருளாதாரச் சூழலும் இனக்குழுக்களின் முரன்பாடுகளும் ஒவ்வொரு
குடும்பத்தினுள்ளும்கூட என்னமாதிரியான குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கிறது
என இந்தப்பகுதியில் தெரிந்து கொள்ள முடிகிறது. அம்மாவிற்காக ஏங்கியவளாகவும் எல்லோராலும்
புறக்கணிக்கப்பட்டவளாகவும் தானிருந்த வீட்டின அவஸ்தைகளை பொறுக்கமாட்டாமல் அம்மாவைத்
தேடி ஓடுகிறாள். அப்படி நெடுந்தூரப்பயணத்தின் ஓரிடத்தில் அம்மாவை சந்தித்த பொழுதும்கூட
தான் மனதில் நினைத்து வைத்திருந்த அம்மாவாக அந்த அம்மா இல்லாததால் அங்கிருந்து மீண்டும்
ஓடுகிறாள். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் போராளிக் குழுக்களுடன் அறிமுகம் கிடைக்கிறது.
அவ்வளவு பெரிய இனப்போராட்டத்தில் சைனாவின் மிகப்பெரிய எதிரியாக அவளுக்கு நின்றதெல்லாம்
அவளின் தந்தை மட்டும்தான். அவளைப் போன்றேதான் அங்கிருந்த அனேகக் குழந்தைகளும் இருந்திருக்கின்றனர்.
ஒரு போராளியாக சைனாவின் நாட்கள் முழுக்க புற உலக்கினைத்
தீவிரமாக கவனிப்பதிலேயே கழிந்திருக்கிறது. பருவமெய்தாத இளம் போராளிப் பெண்களின் மீது
முகாம்களில் நிகழ்த்தப்படுகிற பாலியல் அத்துமீறல்கள், சக தோழர்கள் பெறும் தண்டனைகளென
தன்னை சுற்றி நடக்கிர விசயங்களைத் தீவிரமாக கவனிப்பதோடு நில்லாமல் இதெல்லாம் எதற்காகவென்று
கேள்வியும் கேட்கிறாள். யுத்த களத்தில் எந்தவிதமான ஆபத்தென்றாலும் அதனை முன்னின்று
எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இக்குழந்தைகளுக்குத்தான் விதிக்கப்பட்டிருக்கிறது. உயிர்குறித்தான
அச்சங்கள் பெரியவர்களுக்குத்தான் எப்பொழுதுமே அதிகம் இருந்திருக்கிறது. முகாம்களில்
மிக வேகமாக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டும் சக தோழர்களுடன் பழகுவதில் எல்லோருக்கும்
அறிமுகமான ஒருத்தியாகிவிடுகிறாள். வெவ்வேறு நிலப்பகுதிகளில் நடைபெறும் யுத்தங்களில்
பங்கேற்கிற வாய்ப்பு ஏற்படுவதால் அந்தந்தப் பகுதிகளில் மிகுதியான இனக்குழுவினரின் மொழியையும்
பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்கிறாள்.
பல்வேறு படைப்பிரிவுகளில் பணியாற்றுகிற சந்தர்ப்பம்
மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறாள். என்னவெனில் அந்ததேசம்
முழுக்க இருந்த படவீரர்களைப் பற்றின எந்தத் தகவல்களையும் அரசாங்கம் சேகரித்து வைத்திருக்கவில்லை,
பல சமய்ங்களில் சைனாவிற்கு உதவிகரமாக இருந்ததும் இதுதான். முதல் தடவையாக அப்பாவைத்
தேடிப்போகிற பொழுது, அவரைத் தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் செல்கிறாள்.
பிற்பாடு அந்தக் குடும்பம் சிதைந்து கிடப்பதைக் கண்டு எதும் செய்யாமலேயே திரும்பி விடுகிறாள்.
அப்பாவிற்கும் அவளுக்குமான உறவு கடைசிவரையிலும் இணக்கமானதாக இருந்திருக்கவில்லை. சகோதரி
மார்ஜி மீதும் அம்மாவின் மீதும்தான் கடைசி வரையிலும் அன்பு மிகுந்த ஓர் உறவிருந்திருக்கிறது.
அத்தோடு தம்முடன் இருந்த தோழர்கள் சிலருடன் நெருக்கமான நட்பிருந்தது அவளுக்கு. அந்தத்
தோழமை பல பயன்களையும் சில இடர்களையும் சைனாவிற்கு கொடுத்திருக்கிறது.
மேலதிகாரிகள் எப்பொழுதும் தங்களுக்குக் கீழிருக்கும்
பெண் போராளிகள் மீது அதீதமான உரிமை எடுத்துக் கொள்வது எந்த விதத்திலும் கேள்வி கேட்கப்படாததாக
இருந்தது. அது மாதிரியான சமங்களில் என்னவிதமான உணர்வோடு அதை எதிர்கொள்ள முடிந்தது என்பதையும்
அப்பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் சாத்தியங்களையு யாரும் கற்றுக்கொடுக்காமலே
கற்றுக்கொண்டிருக்கிறாள். இதுதான் ஒருவிதமான முன்னெச்சரிக்கை உணர்வினையும், அசாத்தியமான
தைர்யத்தினையும் உள்ளுக்குள் ஏற்படுத்திவிட்டிருந்தது. எதிர்பாராதவிதமாய் சிறியதும்
பெரியதுமாய் ஏராளமான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரும் சைனா இறுதியில் நாட்டைவிட்ட்டு
வெளியேறி விடுவது என்கிற முடிவிற்கு வருகிர பொழுது அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது.
மிக இளம் வயதிலேயே ஏற்பட்ட காதலின் பரிசு. இந்தக் காதல்தான் சில சமயங்களில் அவளுக்குப்
பாதுகாப்பும்கூட.
வெவ்வேறான அதிகாரிகளின் அந்தரங்க பாதுகாப்பு அதிகாரியாக
பணி செய்ய நேர்கிற பொழுது பதவி உயர்வு காரணமாகவும், அதிகாரத்தின் காரணமாகவும் கிடைக்கிற
பணத்தினை சேர்த்து வைத்துக் கொள்ளாமல் அப்போதைக்கப்போதே செலவழித்து விடுகிறாள். ஓர் ஆணின் தோற்றத்திலேயே தெரியும் அவளை பல சமயங்களில்
பெண்களே விரும்ப நேர்ந்தது குறித்து சந்தோசத்துடனும் கர்வத்துடனும் கூறுகிறாள். தான்
சார்ந்த N R A ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின பிறகு அதில் போராளியாக இருந்த பலருக்கு
என்ன மாதிரியான பலன் கிடைக்க நேர்ந்தது என்பதும், அதற்கு அடிப்படையானக் காரணங்கள் என்னவென்பதும்
வேதனையான எதார்த்தங்கள். இதன் பிண்ணனியிலேயே சைனாவின் மேலதிகாரியான ஒருவருக்கு நேர்கிற
பிரச்சனையில் சைனாவிற்கும் சிக்கல் ஏற்பட, அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்கிற எண்ணம்
இப்பொழுது தீவிரமாக எழுகிறது. இதற்கிடையில் தன் வழியில் சந்திக்க நேர்கிற ஒரு அமெரிக்க
நண்பரின் மூலமாய் ஏற்படுகிற அமெரிக்க கனவும், அதற்காக செலவழிக்கிற பணமும் நிர்மூலமாகிப்
போகிறது. பிற்பாடு வெவ்வேறு இடங்களுக்குச் சுற்றி தென்னாப்பிரிக்காவிற்கு வருகிறாள்.
சில வருட காலம் அகதியாக சுற்றுகிற நாட்களில்தான் ஆப்பிரிக்காவைப் பற்றிய புரிதல் அவளுக்குள்
வளர்கிறது. சொந்த தேசம் துயர்மிக்க நிகழ்காலத்தின் கனவு என்பதை மிக உறுதியாக உணர்ந்திருந்தாள்.
இறுதியாக டென்மார்க்கிற்கு அகதியாக வந்து பிற்பாடு
உலகறிந்த மனுஷியாகிறாள். சைனாவைப் பற்றி எழுத முனைந்த பொழுது ‘அவள்’ என பன்மையில் நான்
குறிப்பிட்டதற்கு அவள் மீதிருக்கும் அபரிமிதமான அன்பும், காதலுமே காரணம். மிக நெருக்கமான
தோழமையையும் அதனைத் தாண்டிய காதலையும் என்னால் உணர முடிந்தது. புத்தகம் முழுக்க அற்புதமான
புனைவாய் விரிந்திருப்பதுதான் முதல் ஆச்சர்யம். ‘கேள்விகளை நித்திரையில் வெல்ல முடியும்’
என்பது மாதிரியான அனுபவமும், அழகுணர்வும் கலந்த ஏராளமான வாக்கியங்கள் சைனாவிற்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
இன்னொரு சிறப்பம்சம் டச்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கும் தேவாவின் சிறப்பான
மொழிபெயர்ப்பு. நிறைய இடங்களில் யாழ்ப்பாணத் தமிழ் தூக்கலாக நின்றாலும் அது பிரதியை
அழகாக்கி இருக்கிறதேயொழிய எந்த விதத்திலும் சிதைக்கவில்லை.
”அவர்கள் என்னிடமிருந்து அம்மாவைப் பறித்துக்
கொண்டு என் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்தனர்.” என்கிற அட்டை வாசகத்தினை வாசிக்கிற
பொழுதெல்லாம் உலகம் முழுக்க குரலறுக்கப்பட்டிருக்கிற ஏராளமான சைனாக்களின் வாழ்க்கைப்
பின்புலம் என்னவாயிருக்கும் என்கிற துயரம் மேலிடுகிறது.
Comments
Post a Comment