ஒரு பழைய கட்டுரை.



     நிலங்களைத் தின்னும் அதிகாரம் மற்றும் விற்பனைக்குக் காத்திருக்கும்
இந்தியப் பழங்குடிகளின் உயிர் – அல்லது
பன்னப் பழகடா பச்சைப் படுகொலைகள்...

                                -லக்‌ஷ்மிசரவணக்குமார்.
‘‘நாங்கள் காடுகளுக்குள் மரங்களுடன், விலங்குகளுடன் வாழும் பழங்குடிகள். எங்களுக்கு ஆயுதமும் தெரியாது. அரசாங்கமும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அரசாங்கம் என்பது போலீஸ், ராணுவம், காண்ட்ராக்டர், ரியல் எஸ்டேட், கம்பெனிகள் இவை மட்டும்தான். எந்தவித அரசுத் திட்டங்களும் எங்களை சீண்டியதே இல்லை. ஆனால் இப்போது நாங்கள் தெய்வமாக வழிபடும் மலையை கற்பழித்து முதலாளிகளுக்கு விற்கிறார்கள். அதை எதிர்த்தால் எங்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. நாங்கள் அமைதியின் பிள்ளைகள்தான். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் மனைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் நிலம், உங்கள் காடு, உங்கள் நீர் அனைத்தும் உங்களிடம் இருந்து வன்முறையாகப் பிடுங்கப்படும்போது என்ன செய்வீர்கள்?’’  மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடிகள் ஒவ்வொருவரின் வார்த்தைகளாகவும் இதுதான் இருக்கிறது.
முன்பாக, பொருத்தமற்றதொரு தலைப்பை இவ்விடத்தில் நான் தந்த்தற்காக உங்களோடு சேர்த்து சர்வ நிச்சயமாய் என்மீது எனக்கும் கோபமில்லாமலில்லை. துரதிர்ஸ்டவசமாய் சூழல் அதற்கானவனாகவே என்னை செய்திருப்பதால் ‘பச்சைப் படுகொலைகள் என்கிற வார்த்தைப் பிரயோகம் யார் மீது யார் நிகழ்த்துவது என்கிறதொரு நிஜத்தினை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. மைய, மாநில அரசுகளின் எல்லா நலன்களையும் பெற்று அதற்குப் பதிலீடாக தவறாது நானளிக்கும் வாக்கும், இவ்வரசாங்கத்தால் கருப்பு வெள்ளையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள ( நிச்சயமாய் என் அடையாளம் எதுவும் தெரியாத ) வாக்காள அடையாள அட்டையும் இதுமாதிரியானதொரு கட்டுரையை நானெழுதும் பொருட்டு என்னைத் தேசத்துரோகி என அடையாளபடுத்தப்படுவதோடு, நிபந்தனைகளற்று தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளின் பட்டியலில்  சேர்க்கவும்கூடும். என்றாலும்  மாவோயிஸ்டுகள் குறித்து நமக்கு சொல்லப்படுவதையும், அதனடிப்படையில் நாம் அவர்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது என்பதிலிருந்து எந்த வகையிலும் என்னால் பின்வாங்கிவிட முடியாது. உண்மையில்   மாவோயிஸ்டுகள் மீது தொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப் போரை அரசாங்கம் தவிர வேறு எவருமே விரும்பவில்லை, இதனாலயேதான் அரசாங்கம் பன்னப் பழகியிருக்கும் இந்த பச்சைப் படுகொலைக்குப் பின்னால்  யார் இருக்க முடியும் என்கிற பெரும் கேள்விகள் எழுகின்றன.
                ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  ஆட்சிக்கு வந்ததும் பன்னாட்டு நிறுவனங்களான வேதாந்தா, எஸ்ஸார் நிறுவனங்களுக்கு மாவோயிஸ்டுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற மிகப்பெரிய வாக்குறுதியொன்றை அளித்ததுடன் அதற்கு சத்தியம் தவறாதபடி, நாடு முழுக்க மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்கிற பெயரில் பழங்குடி மக்கள் மீதான வன்முறை முன்னெப்போதுமில்லாதபடி அவிழ்த்துவிடப்பட்டதுடன்   ஆந்திராவில் நக்சல்பாரிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள். பங்குச் சந்தையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததுடன் அவர்களின் கைகளில் அப்பாவி மக்களின் நிலங்கள் சென்றது, நிலங்களுக்குச் சொந்தமான மக்கள் சாவை நோக்கித் துரத்தப்பட்டனர். அல்லது மறைமுகமான தாக்குதல்களால் கொலைசெய்யப்பட்டனர். சுமார் 550 கிராமங்களில் இருந்து மக்களைத் துரத்திவிட்டு அந்த நிலங்களை அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டார்கள். இச்சூழல் அம் மக்களின் அமைதியைக் குலைத்ததுடன் தங்களின் பூர்வீக நிலங்களுக்காக அவர்களைப் போராடவும் தூண்டியிருக்கிறது. சொந்த நிலம் பறிக்கப்படுதலில் கொள்ளும் துயரமும் இழப்பும் முழுக்க வணிகமயமாகியிருக்கிற இன்றையை நகர பெருநகர தனிமனிதனுக்கு புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்பதுடன் இப்படியானதொரு துயரம் இருக்கிறதென்பதை ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்வதற்கான அவகாசமும் ஒருவருக்குமில்லை. நுட்பமாக கவனிக்கையில் மாவோயிஸ்ட்களை வேரோடு அழிக்கும் (battle to the finish) பச்சை வேட்டை நடவடிக்கை (Operation Green Hunt) என்னும் பெயரில் ஒரு மாபெரும் உள்நாட்டுப் போரை இந்துய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு நட்த்தி வருகிறது. இந்திய அரசின் இந்த தாக்குதல் திட்டம் என்பது திட்டமிடப்பட்டு அப்பாவி பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் உள்நாட்டு யுத்தமின்றி வேறில்லை. வெறும் வில்லும் அம்புகளையும் மட்டுமே போராடும் இம்மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கனரக ஆயுதங்களையும் ராணுவத்தளவாடங்களையும் பயன்படுத்துபவர்களுக்கு அரசியல் ரீதியாக எந்தவொரு விசயத்தையும் அனுகவதற்கு (இங்கு ஆளும் அத்தனை தேசிய, மாநில கட்சிகளுக்கும்) பெருந் தயக்கமும் அச்சமும் இருப்பது புரியும். உண்மையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அரசியல் தத்துவங்களின் தெளிவு கொண்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் அல்ல, (நாம் என்பது ஒரு தனித்த தேசத்தினையல்ல, பெரும் வல்லரசுகள் உட்பட அத்தனை தேசங்களையும் சேர்த்துதான்.) எல்லா சிறிய பெரிய தேசங்களின் அரசாங்கங்களையும் இயக்கிக் கொண்டிருப்பது அந்நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் இருக்கிற பெரும் பணக்காரர்கள்தான். அப்படிப் பார்க்கையில் இந்திய அரசாங்கம் டாடா, ரிலைன்ஸ்,எஸ்ஸார், வேதாந்தா என இப்படியான சில பெருவணிக நிறிவணங்களின் ஆளுகைக்குட்பட்ட்தாக இருப்பதுடன் பெரும்பாலான அரசு மையக் கட்டிடங்களும் கூட ஒரு வகையில் இந்த நிறுவணங்களுக்கான அங்கீகரிக்கப்படாத அலுவலகங்களாகத்தான் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு தனிமனிதனும் இந்நிறுவணங்களுக்கு விசுவாசமிக்கவனாக இருக்க கடமை பட்டவனாக இருக்கிறான், இதை எழுதுகிற நானும், வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் கூடத்தான்.
      2008 ஆம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக் குழுவினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று தனது அறிக்கையில், “மாவோயிஸ்ட் இயக்கம் என்பது நிலமற்ற, ஏழை விவசாயிகள், பழங்குடியினரிடையே, உறுதியான அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் என அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் தோற்றமும் வளர்ச்சியும் அதன் உறுப்பாய் உள்ள மக்களின் சமூக வாழ்நிலையோடும், அனுபவங்களின் பின்புலத்தோடும் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். அரசின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளி என்பது மேற்கூறிய நிலைமைக்கான காரணக் கூறுகளில் ஒன்றாக இருக்கின்றது. வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது இவ்வியக்கத்தின் அறிவிக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையாக இருந்த போதிலும், அதன் அன்றாட நடைமுறைகளின் வெளிப்பாடுகளில், இது சமூகநீதி, சமத்துவம், பாதுகாப்பு இவற்றோடு தளமட்ட முன்னேற்றத்திற்கான போராட்டம் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்என்று கூறுகிறது.
மைய இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படை என்பது அநேகமாக, பரம ஏழைகளின், பட்டினியின் கோரப்பிடியில் தவித்துக் கொண்டிருப்பவர்களுமான பழங்குடி மக்களால் ஆன படையாகும்”. என்று அருந்ததிராய் தனதுஇந்தியாவின் இதயத்தின் மீதான போர்என்ற கட்டுரையில் கூறியுள்ளது கவனிக்கதக்கது. மேலும் பச்சை வேட்டை நடவடிக்கையின் நோக்கம் என்ன? என்பதை சி.என்.என்.ஐ.பி.என்னுக்கு அளித்த நேர்காணலில்  பின்வருமாறு கூறுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் நக்சலைட்டுகள் இருந்து வந்துள்ளனர். இன்று ஏதோ ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது போன்ற கூக்குரல் எழுப்பபடுவது ஏன்? அதாவது அரசு இப்போது காட்டுப்பகுதி முழுவதையும் முற்றிலும் எவரும் இன்றி அப்புறப்படுத்தித் தாரை வார்க்க விரும்புகிறது. ஜார்க்கண்டிலும், சட்டீஸ்கரிலும் பெருமளவிலான புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகி செயல்படுத்த முடியாமல் தேங்கி நிற்கின்றன. சிவப்பு வளாகத்தில் (மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்) விரவியுள்ள கனிமப் பொருட்களின் புதையலைக் கண்டால், அது உண்மையெனத் தெரியவரும். ஜிண்டால், டாடா, எஸ்ஸார் என முதலில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்ட ஆண்டுதான் சல்வாஜூடும் என்ற கொலைப் படை துவக்கப்பட்டது
மேலும், “ஒரிசாவில் உள்ள பாக்சைட், இரும்பின் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் புதைந்திருக்கும் பலகோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும், யுரேனியம்,சுண்ணாம்புக்கல்,டாலமைட்,நிலக்கரி,வெள்ளியம், மார்பிள், செம்பு, வைரம்,அதங்கம், குவார்ட்சைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்ட்ரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்ல்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். அவற்றோடு கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) இணைந்த பகுதியாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் ஆகியவற்றோடு பிற உள்கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இப்பச்சை வேட்டையின் பிரம்மாணடத்தையும், முதலீடு செய்திருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கோட்டுச் சித்திரத்தை வழங்கும்
இவ்விட்த்தில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது, இந்த அளவிற்கு புரளும் பணத்தின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் போது, இதில் ஆதாயம் பெறும் பங்காளர்களை அடையாளம் காண்பது அத்துணை எளிதல்ல. சொந்த ஜெட் வானூர்தியில் மிதக்கும் சுரங்க நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளில் தொடங்கி, மாதம் இரண்டாயிரம் ரூபாய் காசு வாங்கிக் கொண்டு தம் சொந்த மக்களையே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, மக்களைக் கொலைசெய்து, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தை காலி செய்து கொடுக்கின்ற சல்வாஜூடுமின் பழங்குடி இன சிறப்புக் காவல் அதிகாரிகள் வரை முதல், இடை, கடைநிலை என பரந்து விரிந்து கிடக்கின்றது. இந்த பங்காளர்களின் உலகம், பதவியையும் அதிகாரத்தையும் பய்ன்படுத்திக் கொண்டு தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவரும் தாராளமாக அனுமதிக்கவே செய்வார்கள்.
     
ஆக, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கான கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் திட்டங்களைவளர்ச்சித் திட்டங்கள்என்ற பெயரில் இங்கிருக்கும் தேசிய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இம்மோசடித் திட்டங்களுக்க்கு எதிராகவும் தங்களுடைய காட்டின் மீதான உரிமைக்காகவும் பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் ஏழை விவசாயிகள் விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றனர். போராடும் மக்களுக்கு மாவோஸ்டுகள் துணை நிற்கின்றனர் என்பதும், பழங்குடி மக்களின் காட்டின் மீதான உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்கி, அவர்களைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்தி கனிமவளங்கள் நிறைந்துள்ள காடுகளையும் மலைகளையும் பெரும் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கத்தோடுதான் மாவோயிஸ்ட்டுகளின் மீதான பச்சை வேட்டை என்ற போர் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் எளிதில் விளக்கிக் கொள்ள முடியும்.
இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் என்பது கடந்த காலத்தில் சல்வாஜூடும், ஹர்மத் வாஹினி, சாந்தி சேனா, வேட்டை நாய்கள், கோப்ரா இப்படி பல பெயர்களின் செயல்படும் சிறப்புக் காவல் படைகள், சட்டவிரோத கூலிப்படைகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப்., பி.எஸ்.பி., நாகா பட்டாலியன் போன்றவற்றின் மூலம் நடத்தப்பட்டுவரும் தாக்குதலின் உயர்ந்த. ஒருங்கிணைந்த வடிவம் என்று சொன்னால் மிகையன்று. இந்தத் தாக்குதல் என்பதன் பொருள் பழங்குடிப் பெண்களைக் கும்பலாக வன்புணர்ச்சி செய்தல், மக்களைக் கொலை செய்தல், கிராமங்களைத் தீக்கிரையாக்குதல் என்பதைத் தவிர வேறோன்றுமில்லை.
 தனது அனைத்து செயல்பாடுகளையும் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தி மக்களை முட்டாளாக்க நினைக்கிறது இவ்வரசு. 1947 இன் அதிகார மாற்றத்துக்குப் பின்னர், ஏகாதிபத்திய மூலதனத்தைச் சார்ந்திருக்கும் தன்மையை நிலைநிறுத்துவதையும், வாரிசுடைமையாகப் பெற்ற குடியேற்ற (காலனிய) ஆட்சியை நல்ல நிலையில் கட்டிக் காப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்கள்தான் அன்றிலிருந்து இன்றுவரை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1990 களிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகமயம், தாரளமயம், தனியார்மய கொள்கைகளும் இந்தியாவை முழுமையாகப் பன்னாட்டுக் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காகத் திறந்து விடுவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இவற்றினுடைய தொடர்ச்சியாகத்தான் மக்களின் வாழ்வாதாரங்களாக எஞ்சியிருக்கக்கூடிய விளைநிலங்களையும், காடுகளையும்சிறப்புப் பொருளாதார மணடலங்கள்என்ற பெயரில், பெரு நிறுவணங்களின் இலாபத்திற்காக  மக்களிடமிருந்து பறித்து  தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ நாடுமுழுவதும் 660 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (தமிழ்நாட்டில் மட்டும் 95) அனுமதி வழங்கப்பட்டுள்ளன. பசுமைப் புரட்சி என்ற பெயரில் விதை, உரம், பூச்சிமருந்து என்று அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது இதில் கூடுதல் தகவல். நகர்ப்புற ஏழை மக்கள் நகரங்களை விட்டு விரட்டியடிக்கப்படிகின்றனர். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் 1950-1990க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு கோடியே 85 இலட்சம் மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏகாதிபத்தியங்களின் இத்தகைய தாக்குக்தலுக்கு எதிராக  தங்களுடைய வாழ்வாதாரங்களை மீட்டமைக்க இம்மக்களின் கடுமையான போராட்டங்கள்  சிங்கூர், நந்திகிராம், கலிங்காநகர், லால்கர் என்று  பேருருவம் எடுத்து வருகின்றன. இவை மட்டுமின்றி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான மக்களின் போராட்டங்களும், சாதி ஆதிக்கத்திற்கு எதிரான தலித் மக்களின் போராட்டங்களும், இந்து மதவெறிக்கு எதிரான சிறுபான்மையினரின் போராட்டங்களும் நாடு முழுவதும் பெருகி வருகின்றன. போராடுகிற மக்களுக்கு எதிராக காவல்துறை, நீதித்துறை, இராணுவம், சட்டமன்றம், பாராளுமன்றம் என்று அரசின் அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டிருப்பட்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் வர்க்க அரசியல் கட்சிகளும், டாடா, பிர்லா, அம்பானி, கோயங்கோ போன்ற உள்நாட்டு பெரும் முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களின் சிறந்த முகவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக தங்களிடையே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 ஈழ இன அழிப்புப் போரை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு பெரும் போரை இந்திய அரசு மைய இந்தியப் பழங்குடி மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் உளவு நிறுவனமும் (மொசாட்), அமெரிக்க இராணுவ அதிகாரிகளும், புதியவகை போர்க்கருவிகளும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. மக்கள் மீதான சுரண்டலை, மக்கள் மீதான போரைமாவோயிஸ்ட் பயங்கரவாதம்என்று பூச்சாண்டி காட்டி மறைக்க முயல்கின்றனர். முள்ளிவாய்க்கால் காடுகளுக்குள்ளே இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது போல், மைய இந்தியாவின் அடர்ந்த காடுகளுக்குள்ளே பல இலட்சம் பழங்குடி மக்களை தங்களுடைய எசமான கடவுளர்களுக்கு பலி கொடுக்கும் திருப்பணியை ஆட்சியாளர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளுக்குள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேடி 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் அலைந்து திரிகின்றனர். காடுகளை அழித்து விமானத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேட்டுக் கேள்வியில்லாத கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள்இவை அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் ஆபரேஷன் பசுமை வேட்டை’. சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத உள்நாட்டு யுத்தத்தின் கொடூர முகம் இதுதான். என்னதான் நடக்கிறது மத்திய இந்தியாவில்? ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது? ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரன்யா காட்டுப் பகுதிதான் பிரச்னையின் மையம்.  வேதாந்தாஎன்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு, 40 கி.மீ. நீளமுள்ள ஒரு மலையை குத்தகைக்கு விட்டிருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இதற்காக இந்திய அரசு பெற்றுக் கொள்ளவிருக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம். உலகச் சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் விலை போகும் ஒரு டன் இரும்புத் தாதுவை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 27 ரூபாய்க்குத் தருகிறது அரசு. இப்படி தண்டகாரன்யா வனப் பகுதியின் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக சுமார் 200 ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய மாநிலமான ஜார்கண்ட்டில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே அந்த மண்ணின் பூர்வீக குடிகளான பழங்குடி மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது வளங்கள் கொள்ளையிடப் படுகின்றன.
இவை அனைத்தையும் எதிர்த்துக் கேட்காமல்சரிங்க எஜமான்என அடிபணிந்துப் போயிருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால் அந்த பழங்குடி மக்கள் வீரத்தோடு எதிர்த்துப் போரிடத் தொடங்கவே பிரச்னை பெரிதாகியது. மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகளும் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். உடனே அரசு பழங்குடியினர், மாவோயிஸ்ட்டுகள் இரு தரப்பையும் ஒரே தராசில் நிறுத்தியது. இருவரையும்உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள்என்று வரையறுத்தது. அதன் பொருட்டே இப்போது தண்டகாரன்யாவின் காடுகளுக்குள் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.ஆப்கன் போரின்போது கூட 50 ஆயிரம் படையினரைதான் ஆப்கானிஸ்தானில் இறக்கியது அமெரிக்கா. ஆனால் இந்திய அரசு இப்போது மத்திய இந்திய மாநிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினரை இறக்கிவிட்டிருக்கிறது. சொந்த மக்களின் மீது நடத்தப்படும் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கு இந்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை 7,300 கோடி ரூபாய்.
உள்நாட்டுப் பாதுகாப்புஎன்ற பெயரில் இந்தப் போர் நடத்தப்பட்டாலும் உண்மையாக இந்த யுத்தம் யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், அவரது வாயாலேயே நாடாளுமன்றத்தில் சொன்னார். நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது என்பது முதலீட்டுச் சூழலை பாதிக்கும்என்றார் பிரதமர். ஆக, மக்களின் எதிர்ப்பற்ற ஒரு முதலீட்டுச் சூழலை உருவாக்கித் தருவதறாக ராணுவத்தைக் கொண்டு அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது. 2004-ல் சட்டிஸ்கரில் சல்வா ஜூடும் உருவாக்கப்பட்டது. மலையின் நுணுக்கங்களும், மக்களின் பழக்கங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இவர்களை வைத்தே பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டுகிறது ராணுவம். சல்வா ஜூடும் என்ற இந்த அரசக் கூலிப்படை நடத்தியத் தாக்குதலால் கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் மக்கள் பூர்வீக கிராமங்களில் இருந்து காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கின்றனர். வீடுகளும், வயல்களும் எரிக்கப்படுகின்றன. 3 வயது பிஞ்சுக் குழந்தையின் ஐந்து விரல்களையும் வெட்டியுள்ளனர். 70 வயது மூதாட்டி, மார்பகங்கள் அறுக்கப்பட்டு தெருவோரம் பிணமாகக் கிடந்திருக்கிறார். தந்தேவாடா மாவட்டத்தில் மட்டும் மூன்று பெரிய முகாம்கள் இயங்குகின்றன. இவற்றை சல்வா ஜூடும் கண்காணிக்கிறது.  எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் ஆயுதங்களின் முனையில் அடியோடு நசுக்குவது என்ற இலங்கை போர் வெற்றியின் ஃபார்முலாவை இங்கேயும் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையும், நாட்டின் இயற்கை வளமும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னைப்பற்றி பிரதான அரசியல் கட்சிகள் எவையும் வாய் திறக்கவில்லை. இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
மற்றும் வட கிழக்கு மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக அச்ச உளவியல் விதைக்கப்பட்டிருகிறது. அங்கு எப்போதும் பதற்றம் குடி கொண்டிருக்கிறது. அவற்றில் இருந்து எந்தவித பாடத்தையும் கற்றுக் கொள்ளாத இந்தியா இப்போது மறுபடியும் மத்திய இந்தியாவை பதற்றப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பிராந்தியத்தில் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் புகுத்தப்பட்டால் அதை எளிதில் நீக்கிக்கொள்ள முடியாது. நமது முந்தைய வரலாறுகள் இதையே நமக்குக் காட்டுகின்றன. ஆனாலும் அரசு அமைதியான முதலீட்டுச் சூழலைஉருவாக்கித் தருவதற்காக தம் சொந்த மக்களுக்கு எதிராகவே இந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.அரசு, மாவோயிஸ்ட் தாக்கம் உள்ளப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தவே விரும்புகிறது. ஆனால் ஒரு சாலை அமைத்தால் உடனே அவற்றை குண்டு வைத்துத் தகர்த்துவிடுகிறார்கள். இப்படி செய்தால் எப்படி வளர்ச்சித் திட்டங்களை அமுல் படுத்த முடியும்?’ என்று கேட்கிறார் ப.சிதம்பரம். ஆனால், ‘அந்த சாலை மக்களுக்காக அல்லாமல் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டால் அதை அழிப்பதில் என்ன தவறு?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.அதேநேரம் மாவோயிஸ்ட்டுகளின் மனித உரிமை மீறல்களை நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களே கடுமையாக எதிர்க்கிறார்கள். லால்கர் பகுதியில் சுமார் 1000 சதுர கி.மீ. நிலப் பகுதியைக் கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள் அதை விடுவிக்கப்பட்டப் பகுதிஎன்று அறிவித்த பிறகு மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்தது.
‘‘இது தவறு. அந்த மக்களின் குரலாக மாவோயிஸ்ட்டுகள் இருக்க விரும்பினால் முதலில் அவர்களின் அரசியல் அஜண்டா என்ன என்பதை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை அறிவித்துக்கொள்வதால் அரசப் படைகளின் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் சந்திக்கப்போவது சாதாரண மக்கள்தான். மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் வளம் மிக்க கற்பனையான எதிர்காலத்துக்காக சட்டீஸ்கரின் சாதாரண பழங்குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க முடியாது’’ என்று அப்போது கருத்துச் சொன்னார் மறைந்த மனித உரிமைப் போராளி பாலகோபால்.சரி, தவறுகளைத் தாண்டி தங்களுடன் களத்தில் நின்பவர்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான பிடிப்பு அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பசுமை வேட்டை தொடங்கும்போது மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரம் பேர்தான். ஆனால் இப்போது காடுகளுக்குள் மறைந்து வாழும் மக்கள் தாங்களாகவே முன்வந்து மக்கள் போர்ப்படைஎன்றும், ‘மாவோயிஸ்ட்டுகள்என்றும் தங்களை அறிவித்துக்கொள்வதால் போராளிகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நடப்பவை தனிநாடு கேட்கும் போராட்டங்கள். ஆனால் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் தங்களின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள்.
இந்த நூற்றாண்டு வெவ்வேறான யுத்தங்களுக்கு விருப்பமே இல்லாத போதும் நம்மை தயார்ப்படுத்திக் கொண்டபடியேதான் இருக்கிறது. இவ்வளவுக்கு மத்தியிலும் நாம் ஐ.பி.எல் லுக்காக தவங்கிடப்பவர்களாகவும், அடுத்த தேர்தல்களின் வெற்றி தோல்வி பற்றின கனிப்புகளில் அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கிறோம். நம் மனைவியர்களின் நட்த்தைகள் மீதான சந்தேகங்களும், நாளிதழின் எல்லாப் பக்கங்களையும் நிறைக்கும் வெவ்வேறான கள்ளக்காதல் ஜோடிகளின் சோக முகம் கண்டு கிலேசமடைகிறோம். நமக்கு இழப்புகள் பழகியிருக்கவில்லை என்பதுடன் அப்படி இழந்தவர்களைப் பற்றின அக்கறைகளும் இல்லாத அறிவுமிக்கதொரு சமூகமாய் இருக்கிற பட்சத்தில் இதைப் பற்றி யோசிக்கிற, கேள்வி கேட்கிற நான் தயக்கமில்லாமல்  இவ்வரசாங்கத்தால்  சந்தேகிக்கப்பட வேண்டியவனே. இப்படி சந்தேகிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் தினம் பெருமளவில் உயர்கிறதென்கிற அச்சம் பழங்குடி மக்களுக்கான எதிரான இப்போரை துரிதப்படுத்துமெனில் அதற்கான எல்லா இழப்புகளையும் சந்திக்கப்போவது உண்மையில் மேன்மை மிக்க இவ்வரசைத் தவிர யாருமில்லை.

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.