எங்களது சிறிய நகரில் இப்பொழுது கடவுளர்கள் இல்லை



    

 தமிழ் சினிமா ரசிகமனோபாவத்தில் நுழையும் சாதி அரசியல்.




                உலகின் வேறெங்கும் இல்லாத எவ்வளவோ அம்சங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே பிரத்யேகமாக இருக்கும். நாயகியுடன் பாடும் முதலிரவு பாடல் காட்சியில் ஐம்பது பெண்கள் உடன் ஆடுவார்கள், ஏன் எதற்கென்று நாம் ஒருபோதும் கேட்க முடியாது. நாயகன் சோற்றுக்கு இல்லாத பரதேசியாய்க் காட்டப் படுவான், ஆனால் டூயட் பாடுவது மட்டும் நிச்சயம் ஏதாவது வெளிநாட்டு லொக்கேஷனாகத்தான் இருக்கும். இப்படித் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செய்கிற எவ்வளவோ விசயங்களை நாம் இன்னும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போதைக்கு இவற்றையெல்லாம் மன்னித்து விட்டாலும் ஒரு விசயத்தில் மிக அவசரமாக அல்லது அத்யாவசியமாக நாம் இவர்களை மாற்றச் செய்ய வேண்டும். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு தூரத்திற்கு நாயகர்களின் வழிபாடு இருக்குமா என்பது சந்தேகம். முன்னூறு அடிக்கு கட் அவுட்கள், பாலபிசேகம், இன்னும் பார்த்தாலே பதைபதைக்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. சரி ஏன் இவ்வளவையும் ஒரு சராசரி ரசிகன் செய்து கொண்டிருக்கிறான்? இதற்குப் பின்னாலிருப்பது வெறுமனே அந்நாயகர்களின் படங்களின் மீதான ஈர்ப்பு மட்டும்தானா?
                எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் ஏதாவதொரு விசயத்தினை நபரை பின்பற்றுவதுதான் பொதுவான மனித இயல்பாக இருக்கிறது. உடை அலங்காரம் இவற்றில் மேற்கொள்ளப்படும் விசயங்களை மிக சாதாரணமாக ஃபேஷன் என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் திரைப்படத்தில் மிகப் பெரிய பிம்பமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரெதிராக இரண்டு நாயகர்களை வைக்கிறோம். இது இன்று நேற்றல்ல, தியாகராஜ பாகவதர் காலத்தில் அவருக்கு போட்டியாக பி யூ சின்னப்பாவையும், எம் ஜி ஆர் காலத்தில் சிவாஜியையும், ரஜினிக்கு கமலென்றும் தொடர்ந்து சமீபத்திய வருடங்களில் அஜித் விஜய், சிம்பு தனுஸ் என நீண்டிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டுபேர் மட்டும் இவ்வளவு தீவிரமாக முன்னிறுத்தப் படுவதின் பிண்ணனி என்னவாயிருக்கிறது? திரைப்படங்களில் சாடைமாடையாக எதிர் நடிகரைப் பற்றி இவர்கள் பேசிக் கொள்கிற வசனங்கள் பெரும்பாலும் தத்தம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் எழுதப்படுகின்றன. திரை மறைவிலும் இவர்கள் இதே பகமையோடுதான் இருக்கிறார்களா?
                பெரும் அரசியல் நிகழ்வுகளுக்கு பின்புலமாக அனேக சமயங்களில் இங்கு திரைநட்சத்திரங்களால் எப்படி இருக்க முடிகிறது? எம் ஜி ஆர் அரசியலில் நுழைந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு இன்று நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தினை அவரால் சம்பாதிக்க முடிந்ததற்கு அவருடைய படங்கள் மட்டுமே காரணமில்லை. ரசிகர்களோடு அவர் கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் சதாவும் அவர்களை இவர் குறித்து நினைக்க வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் மிக புத்திசாலி என்றே அவரை சொல்ல வேண்டும். திரைமறைவில் அவர் மீதுள்ள எவ்வளவோ விசயங்களை மறக்கச் செய்து தன்னைப் பற்றின நல்ல விசயங்களை மட்டுமே பொதுரசிகன் பார்த்துக் கொள்வதில் சாமர்த்யமாக ஈடுபடுத்திக் கொண்டார். வேறு எந்த நடிகனுக்கும் இல்லாத மரியாதைகள் இன்று அவருக்கு இருப்பதுடன் மிகப் பெரிய அரசியல் கட்சியையும் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. அவருடைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்து தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பழைய கூட்டமும் ஆராவாரமும் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தென் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இவரின் நினைவு நாளில் ஏராளமானோர் மொட்டையடித்து இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மனிதராக இருந்து கடவுளாக்கப்படும் சமகால உதாரணம் இவர்தான். மரணத்திற்குப் பின்னால் இப்படியெல்லாம் நடக்குமென நிச்சயமாக அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இன்றளவும் பலபகுதிகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் என்ன செய்தாலும் எம் ஜி ஆருக்காகவே அவர் உருவாக்கித் தந்த கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியைத் தாண்டி பெரும் வாக்கு சதவிகிதம் அக்கட்சிக்குத் தொடர்ந்து கொண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் தனிப்பெரும்பான்மை வாக்கு சதவிகிதம் இக்கட்சியினுடையதுதான். அவ்வளவு தூரத்திற்கு இருக்கிறது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான பிணைப்பு.
                அரசியலைத் தாண்டி சராசரி மனிதர்களின் கலாச்சார ரீதியான மாற்றங்களில் அடுத்த தலைமுறையினரான ரஜினி கமலின் பங்கினை கவனிக்க வேண்டியுள்ளது. மிக வேக பெருகிய மின்சார வசதியின் காரணமாய் அதிகரித்த திரையரங்கங்கள் தொடர்ந்து இந்த இரண்டு பேரின் படங்களும் சரியான இடைவெளியில் வெளிவருவதும் கொண்டாடப் படுவதுமாய் இருக்கையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் அடையாளங்களெதுவுமற்ற போட்டியாகத்தான் ரசிகர்களின் மத்தியில் இருந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தேவர்மகன் படம் வெளியாவதற்கு முன்பு வரையிலும் பெருமளவு ரசிகர்கள் ரஜினி ரசிகர்களாகவே இருந்தனர். மிக சாமர்த்தியமாக சாதிய அடையாளத்துடனேயே வெளிவந்த இப்படம் முழுக்க முழுக்க குறிப்பிட்ட அச்சாதியை தூக்கிப் பிடிக்கிற படமாகவே வந்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்தமான மக்கள் தொகையில் பெரும்பகுதியாய் இருப்பவர்கள் முக்குலத்தோர் என்பதால் அவர்களின் பெருவாரியான ஆதரவினையும் ஒரே படத்தின் மூலமாய் கமல் பெறமுடிந்தது. அதுவரையிலும் சொந்த சாதி காரணமாய் கொண்டாடப்பட்டு வந்த கார்த்திக்கை மறந்துவிட்டு மொத்தமாக அவ்வளவு பேரும் மாறியிருந்தனர். தேவர் சமுதாயத்தின் மிகப்பெரிய அடையாளமாக இன்றளவும் கமல் பார்க்கப்படுகிறார். இதுமாதிரியான தனிப்பட்ட சாதி அரசியல் எதற்குள்ளும் மாட்டிக் கொள்ளாத ரஜினிக்கு எதார்த்தமாகவே பாட்ஷா படத்தின் மூலமாய் பெருவாரியானதொரு ஆதரவு கிடைத்து விட்டிருந்ததுடன் பொதுநிகழ்ச்சிகளில் பேசுகையில் தொடர்ந்து வெளிப்படுத்திய கடவுள் சார்ந்த கருத்துக்களிலும் அரசியல் நண்பர்களின் பிண்னனியிலிருந்து அவ்வப்பொழுது குறிப்பாக தேர்தல் சமயங்களில் வெளியாகும் இவரின் திரைப்படங்களின் விளம்பரங்களுடன் எப்பொழுதும் இவர் அரசியலுக்கு வருவது குறித்த ஆருடங்கள் இருக்கும். நிச்சயமாக இவரின் கருத்துக்கள் எந்தளவிற்கு தேர்தல்களில் பங்கு வகித்திருக்கிறது என்று பார்த்தால் சிரிப்பதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.
                கமல் தொடர்ந்து தன்னுடைய விருமாண்டி படத்தின் மூலமாய் இன்னும் நான் தேவர்மகனாகத்தான் இருக்கிறேன் என்பதை உறுதிபடுத்த, இன்னொரு புறம் ரஜினி சலைக்காமல் அரசியலுக்கு வருவது குறித்து பேசியபடியேதான் இருந்திருக்கிறார். அரசியல்ரீதியாக இவர்கள் அடியெடுத்து வைக்கும் முன்பாகவே இவர்களைப் போன்ற பெரும் ரசிக ஆதரவு இல்லாத பொழுதும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காவல்துறை அதிகாரியான விஜயகாந்த் அவர்கள் போலீஸ்காரனாய் இருந்தது போதுமென அரசியல்வாதியாகி விட்டார். விமர்சனங்களைத் தாண்டி சட்டமன்ற உறுப்பினராகியபின் இவருடைய செயல்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஷோபாசக்தி ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல் கேப்டன் பிரபாகாரன் என இவருடைய ஒரு படத்தின் தலைப்பிற்காகவே அந்தப்படம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மத்தியில் சக்கைபோடு போட்டிருக்கிறது. சலிக்காமல் கேமராவைப் பார்த்து இவர் பேசுகிற அரசியல் வசனங்கள் நல்லபடியாகவே இவருக்குக் கை கொடுத்துள்ளன. தன்னை எம் ஜி ஆரினுடைய அடையாளமாய் காட்டிக் கொள்ள வேண்டி இவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் பெரிய அளவில் பயன்படவில்லை. கருப்பு எம் ஜி ஆர் என பெயர் வைத்துக் கொண்டதைத் தவிர்த்து. ஆனால் இன்னொரு விசயம் பயன்பட்டது. அது இவர் சார்ந்திருக்கும் சாதி மற்றும் தாய்மொழி. என்னதான் தமிழ் தமிழ் என்று தலைவர் முழங்கினாலும் பிராச்சாரத்திற்கு வருகையில் தெலுங்கர்கள் அதிகமாயிருக்கும் பட்சத்தில் கூச்சமின்றி தெலுங்கில்தான் பேசுவார். இதை இல்லையென்றும் ஒருவௌம் மறுத்துவிடமுடியாது, கடந்த தேர்தலில் நிழ்ந்ததை அருகிலிருந்து நானே பார்த்திருக்கிறேன். சாதிகள் மட்டும்தான் இன்னும் பெருவாரியான வெற்றி தோல்விகளை உறுதிபடுத்துகின்றன இங்கு. எல்லா ஊர்களிலும் எல்லா சாதிகளுக்கும் சங்கங்கள் இருக்கின்றன. இதில் மிகத் தீவிரமாக சில சாதியினர் தொடர்ந்து தங்களின் செயல்பாடுகளை சமூக ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் செய்தபடியேதான் இருக்கின்றனர். தேர்தல்களுக்கு முன்பாக கூடும் சங்கத்தில் யாருக்கு வாக்களிப்பது என தெளிவாக பேசி முடித்தபின்பாகவே செயல்படுகின்றனர். சமீபத்திய வருடங்களில் மொழி காரனமாக வைகோவிற்கு இருந்த பெருவாரியான ஆதரவினை அரசியலுக்கு வந்த சில நாட்களிலேயே விஜயகாந்த்தால் பெற்றுவிட முடிந்திருக்கிறது. இதைத் தவிர்த்து பொதுவாகவே தனது ரசிகர் மன்றங்களின் மீது பெரும் அக்கறைகளையும் கவனிப்பையும் தொடர்ந்து செலுத்துகிறதால் ரசிகனென்கிற பொது ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. இதை சமீபத்திய தேர்தல்களில் இவர் பெற்றிருக்கும் வாக்கு விகிதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
                இவர்கள் தலைமுறைக்குப் பின்பாக வரும் நாயகர்களில் விஜயும் அஜித்தும் ஒரே நேரத்தில் வெவ்வேறான் அடையாளங்களின் பிண்ணனியில் முன்னிறுத்தப்படுகிறார்கள். கமலுக்குத் தரப்பட்ட தேவர்மகன் பதவி அவருக்குப்பின் அஜித்துக்குத் தாரைவார்க்கப் பட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் மிகுந்திருக்கும் அஜித்திக்கான ரசிகர் மன்றங்களின் பிண்ணனியிலிருந்தே கவனித்தோமானால் சில விசயங்களை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளமுடியும். குறிப்பிட்ட சில நடிகர்களைத் தவிர்த்து பிற நடிகர்களுக்கு ரசிகர்மன்றங்களை நீங்கள் பார்ப்பதென்பது அபூர்வமாயிருக்கும். சாதாரணமாக திருமணங்களுக்கு அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் ஃபிளக்ஸ் போர்டுகளில் கவனித்தோமானால் முதலில் குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாய் அந்த சாதியின் இந்நாள் அல்லது முன்னால் தலைவர்களின் படம், அதன்பிறகு எந்த ரசிகர்மன்றம் எனபது சொல்லப்பட்டிருக்கும். மற்ற விசயங்களெல்லாம் பிற்பாடுதான். இதில் ரசிக மன்றங்களுக்கு இடையே நிகழும் போட்டிகளை கவனித்தால் அச்சமாக இருக்கும். இவர்கள் மன்றம் இருக்கும் பகுதியில் அவர்கள் ரகசியமாக வந்து சம்மந்தப்பட்ட நடிகரைக் குறித்து ஆபாசமாக எழுதுவதும் இவர்கள் எதிர்புறத்தில் எழுதுவதும் பிற்பாடு சண்டையில் போய்தான் முடியும். இப்படி வெவேறு பகுதிகளில் மிகுதியாக இருக்கும் சாதியினரின் அடையாளங்களோடு யாராவது ஒரு  நடிகர் முன்னிறுத்தப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
                மேலோட்டமாக இதிலென்ன பெரிய ஆபத்து இருந்துவிடப் போகிறது என நாம் நினைக்கலாம். நிதானித்து யோசிக்கையில் ரசிக அன்பர்களில் பெரும்பாலனவர்களுக்குள் இருக்கும் ரகசிய  ஆசைகளை அறிய முடியும். ரெண்டு படம் நடித்த உடனேயே நாளைய முதல்வர் என பட்டம் கொடுக்கப் படுவதற்கு நடிகனின் மீதுள்ள மிகுதியான அன்பு மடுமே காரணமல்ல, இப்படி நீளும் தூண்டலுக்குப் பின்னால் அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்களைத் தொடர்ந்து வட்டம் மாவட்டமென முன்பே வகுத்து வைத்துள்ள பதவிகளின் படி இவர்களும் சாமர்த்தியமாக அரசியல் சாயம் பூசிக்க்கொள்ளவே விரும்புகிறார்கள். இன்னொரு வகையில் இதுமாதிரி ரசிக மன்றங்களுக்கு செலவு செய்யப்படும் எந்தத் தொகைக்கும் கணக்குக் காட்டப்படுகிறதாவெனக் கேட்டால் நிச்சயமாக இல்லை. நடிகர்கள் சத்தமில்லாமல் தொண்டு நிறுவணம் துவங்குவதற்குப் பின்னால் நிரைய காரணங்களிருக்கின்றன. தொண்டு நிறுவணங்களின் கணக்கில் செலவு செய்யப்படும் எந்தத் தொகைக்கும் வரி கட்டத் தேவையில்லை என்கிற சலுகை இருப்பதால் பெரும்பாலான செலவுகளும் இப்ப்டி அனாமத்தான செலவுகளாகத்தான் இருக்கின்றன. இவற்ரையெல்லாம் தாண்டியும் இன்னும் எவ்வளவோ காரணங்கள் இருக்கவே செய்கின்றன வெளியில் தெரிந்தும் தெரியாமலும். நிச்சயமாய் இவைகளின் எண்ணிக்கையும் போக்குகளும் அதிகரிக்குமே ஒழியே குறையப்போவதில்லை. ஏனெனில் தமிழன் சுயமாக ஏதொன்றையும் செய்வதற்குத் தயுக்கம் கொள்பவன். இதை யார் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சினிமா நடிகர்கள் மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.



                        லக்‌ஷ்மி சரவணக்குமார்.- 9790577460
                saran .images@gmail.com 

Comments

Post a Comment

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.