இனியொரு.காம் ல் முன்பு எழுதிய ஒரு கட்டுரை.
முடிந்து போனவற்றைப் பற்றின குறிப்புகளும்
எதிர்காலம்
பற்றின கேள்விகளும்.....
லக்ஷ்மி
சரவணக்குமார்.
”தங்களுடைய
வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன்
தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி என்கவுண்ட்டர் செய்து விடுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு ’யூஸ் அண்ட் த்ரோ’ பொருள்.”
இப்படியான வரிகளை
சமீபமாய் நான் படிக்க நேர்ந்தது முன்பு ரவுடியாக இருந்து சிறை சென்று திருந்தி
தற்சமயம் பத்திரிக்கையாளராகவும் மனித உரிமை ஆர்வலராகவும் இருக்கும் ஜோதி நரசிம்மனின்
புத்தகமான “அடியாளில்” இருந்துதான். எழுதப்போவது அவரைப் பற்றியோ அல்லது அந்தப்
புத்தகம் குறித்தோ அல்ல, சிறையிலிருக்கும் கைதிகள் பற்றியும் நன்னடத்தையின்
காரணமாக அல்லது தண்டனை முடிந்து வெளியேறுபவர்களைப் பற்றியும்தான். மோசமானதானதில்லை, இந்திய சிறைகளைப் பற்றின பிம்பங்கள் ஒன்றும் அவ்வளவு
துயரமானதில்லை உலகின் போர் மிகுந்த தேசங்களிலுள்ள சிறைகளுடன் ஒப்பிடுகையில்.
என்றாலும் இத்தேசத்தின் கேவலமான பொதுசனப் புத்தியிலிருந்து கவனிக்கையில் இவர்களின்
துயரக்கதைகள் அவ்வளவும் பொருளாதாரம் சார்ந்த சிக்கலற்ற மனநிலையினை ஒட்டியதாகவேதான்
இருக்கின்றன. பெருமளவில் கைதிகளுக்கு பாதுகாப்பான இங்கு பெரும்பாலான சிக்கல்கள்
கைதிகள் * கைதிகள் என்கிற அளவிலேயே இருக்கிறதேயொழிய கைதிகள் * அதிகாரிகள் என்கிற
அளவில் இருப்பதில்லை. நீதியமைப்பின்
எந்தவொரு அக்கரை ரேகைகளுக்கும் ஆட்பட்டதில்லை சிறைச்சாலைச் சுவர்கள், இருப்பினும்
அதன் முடிவுகளுக்கு ஆட்பட வேண்டிய துரதிர்ஸ்டவசமான எல்லையில்தான் இவ்வளவும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இப்படியாக நான்
பேசமுனைகிற அல்லது சந்தேகங்களின்பாற்பட்டு எழும் கேள்விகளைக் கொண்டு வெவ்வேறான
படிப்பினைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். அடிப்படையில் அவற்றைப் பற்றின
புரிதல்கள் என்னமாதிரியானவை என்கிற வகையில்தான் இவ்வளவையும் எளிதாக விளங்கிக்
கொள்ள வேண்டியிருக்கிறது. சிறைச்சாலைகள் பெரும் வணிக மையங்களாய்
மாறிவிட்டிருக்கும் இங்கு அதன் பொருளாதார சிக்கல்கள் பற்றின விரிவானதொரு உரையாடலை
இன்னும் உருவாக்கமலிருப்பது வியப்புக்குரியதுதான். இவ்விடத்தில் நான் பேச விழைவது
சிறையின் பராமரிப்புகள், வளர்ச்சிப் பணிகள் பற்றியதானதல்ல, மேலெழுந்த வாரியாக
அறியப்படாமல் விடப்பட்டிருக்கும் சிறு சிறு வர்த்தகம் ஒன்று மிகச்சிறப்பாகவும் அதே
சமயத்தில் கட்டுக்கோப்புனுடம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வியாபாரத்தின் காரணகர்த்தாக்கள்
பெரும்பாலும் காவலர்கள்தான் எனினும் அதன் முழுமையான பிரதிபலனையும் அனுபவிக்க
முடிவது வியாபாரத்தில் ஈடுபடும் கன்விக்ட் வார்டர்களும், ஆயுள்தண்டனைக்
கைதிகளும்தான். நவீனப்படுத்தப்பட்டிருக்கும் புழல் சிறையில் தொலைக்காட்சிகள்,
மின்வசிறிகள் வசதிகளுடன் வாரம் ஒருமுறை கோழிக்கறியும், முட்டையும் கொடுக்கிற
அளவிற்கு முன்னேறியிருக்கிறது சிறைத்துறை. வாஸ்தவத்தில், இவற்றையெல்லாம்விட
பெரும்பாலனவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் போதை வஸ்துக்கள்தான். இதனை வெளியிலேயே
அவ்வளவு எளிதில் பெற்று முடிவதில் சிக்கல்கள் இருப்பதால் சிறைச்சாலைகள் தனது
பெரும் விற்பனைப் பொருளாய் இதனைக் கொண்டிருக்கின்றன. மூன்று மாத காலங்களுக்கும்
மேலாக விசாரணைக் கைதியாக என் அம்மா திருச்சி சிறையிலும், தண்டனைக் கைதியாக அப்பா
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை சிறையிலும் இருந்திருப்பதால் மிக நெருக்கமாகவே
அவற்றைப் பற்றின பிம்பங்களை என்னால் உருவகித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. போதை
என்கிற அளவில் ஆண்களின் சிறைகளிலிருக்கும் நீண்ட சிக்கல்களான விசயங்களுக்கு
மத்தியில் பெண்களின் சிறைச்சாலைகளில் சாதாரணமாகவே உணவில் போதை மாத்திரைகள் கலந்து
கொடுக்கப் படுவதினை முக்கியமானதாகக் கொள்ள முடிகிறது. நேரடியாக தெரிந்து கொள்ள
முடிந்தும் முடியாமலும் இந்த உணவினை உண்ணும் பெண்கள் குடும்பத் துயர் மறக்க
வேண்டியே இப்படி செய்யப்படுவதாக மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் படிப்படியானதொரு போதை
நிலைக்குக் கொண்டு செல்கிற வேலைதான் இது.
அதிகம் நம்மால்
பேசப்படவும் கவனிக்கப்படாததாகவும் உள்ள
பெண்களின் சிறைச்சாலைகளில் பொருளாதாரம், உடல் சார்ந்த சிக்கல்கள்
பிரச்சனைகள் நிரம்பக் கிடக்கின்றன. விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் இவர்களின்
பெரும்பாலான கட்டுப்பாடுகளும் கன்விக்ட் வார்டர்களின் பார்வையில்தான் இருக்கின்றன.
பெண்கள் விசயங்களை இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமிருப்பதால்
பொறுத்துப் பிற்பாடு எழுதுவதே சரியானதாயிருக்கும். மாறாக ஆண் சிறைச்சாலைகளின்
பின்னாலிருக்கிற பிரச்சனைகளில் சிலவற்றை இங்கு பேசலாம் என்றுதான் தோன்றுகிறது.
முதலில் மேலெழுந்த வாரியாக இன்றும் ஊடகங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் கைதிகளை
அடிக்கும் அதிகாரிகளின் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம். கைதிகளை அடிக்கிற விசயம்
பொதுவாக பனிஷ்மெண்ட் காரணமாகவே நிகழ்கிறது. இப்பொழுது இதிலிருக்கிற முக்கியமான
சூட்சுமம் இப்படி அடிபடுகிறவன் பெரும்பாலும் தனியாளாக சிறைக்கு வந்தவராகவே
இருப்பாரேயொழிய டீமாக வந்தவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. காரணம் அரசியல்
கொலைக்காகவோ அல்லது அந்தந்தப் பகுதியின் லீடிங் தாதாக்களோ இந்த டீமோடு நெருக்கமான
தொடர்பிலிருப்பார்கள். இப்படி இருக்கிறவர்களை அடிக்கிற பட்சத்தில் அல்லது
இவர்களிடம் தொந்தரவு செய்கிற பட்சத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிற பெருந்தொகை
நின்றுபோக வாய்ப்பிருப்பதால் அவ்வளவு எளிதில் இது நடக்க வாய்ப்பில்லை. இன்னும்
தீவிரமாக இவ்விசயத்தினை அணுக வேண்டுமானால் மிக முக்கியமான அரசியல் கொலைகள் பலவும்
சிறைச்சாலைகளில்தான் திட்டமிடப் படுகின்றன. மிக முக்கியமான உதாரணமாக
தா.கிருட்டிணன் கொலையைச் சொல்லலாம். இச்சம்பவத்திற்கான முழுத்திட்டமும்
சிறைச்சாலையிலேயே முடிக்கப்பட்டு, பரோலில் வந்த தண்டனைக் கைதிகளின் மூலமாகவே
நிறைவேற்றப்பட்டதனை இவ்வழக்கு தொடர்பான அறிக்கைகள் நமக்குச் சொல்கின்றன. இதில்
நிச்சயமாக எங்களுக்கு எதுவும் தெரியாதென சிறைத்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள
முடிவதற்கில்லை. இதுமாதிரியான அசைமெண்ட்களுக்கு அனுபவம் வாய்ந்த கைதிகளை
பயன்படுத்துவதனை விடவும் முப்பது வயதைத் தாண்டாத இளைஞர்களையே தங்களுக்காக
பயன்படுத்துகிறார்கள். சிறைச்சாலைகளில் இதற்கான ஆட்களை கண்டுபிடிப்பது ஒன்றும்
சிரமமான காரியமில்லை.
விசாரணைக் கைதிகள் பற்றின விசயங்களை மறுத்து
தணடனைக் கைதிகளைப் பற்றி மட்டுமே தொடர்ந்து நான் பேசுவதன் அத்யாவசியத்தினை
நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. எனெனில்
படிப்படியாக இவர்கள் குற்றவாளியாய் மாறுகிறார்களா அல்லது திருந்தி வீடு
திரும்புகிறார்களா என்கிற சந்தேகம் எப்பொழுதுமே இருக்கிற ஒன்றென்பதால் தண்டனைக்
கைதிகள் பற்றியே நான் பேச வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பவசமாக தண்டனை பெறுகிறவர்களில்
எந்தவிதமான மாற்றமுமில்லாமல் வீடு திரும்புகிறவர்களைப் போலவே, பொருளாதாரம்
சார்ந்தும் சாதி, மத நிலைப்பாடுகள் சார்ந்தும் வேறுமாதியான நட்புகளுடன் புதிய
குற்றவாளிகளாய் திரும்புகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இப்படியாகப்பட்டவர்களின்
தனிப்பட்ட விருப்பமானது மெதுவாக குடும்பம் முழுமைக்குமான ஒன்றாய் நீட்சியடைகிற
பொழுது குற்றங்களின் எண்ணிக்கையானது வெவ்வேறான தொழில்களையும் உள்ளடக்கி வளர்கிறது.
இவர்களின் இலக்கு போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் சிறு அரசியல் வாதிகளின்
பாதுகாவல் சார்ந்ததாய் இருப்பதுடன் தங்களுக்கிருக்கும் அனுபவங்களின் உதவியுடன்
இவர்களைப் போன்ற சந்தர்ப்பவச குற்றவாளிகளை தன்வசப்படுத்துவதிலும் மையங்கொள்கிறது.
இப்படி சேர்கிற நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கேங் லீடர்களாகவும் தங்களுக்கான
பகுதிகளைப் பிரித்தெடுத்து அதிகாரம் கொள்ளும் புதிய குழுவாகவும் பத்தாண்டுகளுக்குள்ளாகவே
இவர்களின் முகம் மாறிப்போய் விடுகிறது. சாத்தியமற்றதாகத் தோன்றும் இதனை மிக
சாமர்த்யமாக செய்கிற வித்தையினை ஒவ்வொருவரும் தங்களிடம் இருப்பவர்களுக்கு அவ்வளவு
எளிதில் கற்றுக் கொடுத்து விடுவதில்லை.
இனி
சிறைச்சாலைகளில் நடக்கிற வியாபாரம். இதனை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று சிறைக்கு
உள்ளே நடப்பது மற்றொன்று வெளியில் நடப்பது. வெளியில் நடக்கிற வியாபாரத்துடன்
நேரடியான அனுபவம் அல்லது அதற்கு நானும் உட்பட்டிருக்கிறேன் என்பதால் அதனை முதலில்
சொவது சரியாயிருக்கும். மனு பார்க்கச் செல்கிற நாட்களில் சர்வ சாதாரணமாக யாராவது
நம்மிடம் மிக்சர் பொட்டலங்கள் சோப்புகள் போன்றவற்றைக் கொடுத்து குறிப்பிட்ட
ஆட்களின் பெயர்களைச் சொல்லி அடையாளங்களையும் சொல்லிவிடுவார்கள். இதற்கு சிறு
தொகையாக நமக்கும் கொஞ்சம் பணம் கிடைக்கும். இதற்கு பெரும்பாலும் அவர்கள்
பயன்படுத்துவது இளைஞர்கள் அல்லது பெண்கள். நீண்ட நாட்களாக நான் என்ன செய்து
கொண்டிருக்கிறேன் என்பது தெரியாமலேயேதான் இதனை செய்து கொண்டிருந்தேன். பிற்பாடு
பெரியவர் ஒருவர், மிக்சர் பொட்டலங்களில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதையும், சோப்
கவர்களுக்குள்ளாக பணம் மடிக்கப்பட்டு வைக்கப்படுவதையும் எடுத்துக் கூறினார்.
பெரும்பாலும் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. அப்படியே மாட்டினாலும் எடுத்துச்
செல்பவருக்குத்தான் பிரச்சனையே தவிர செய்யச் சொன்னவருக்கு அல்ல. இதனை பெருமளவிலும்
தொடர்ந்தும் செய்வதற்கென்றே சிறை வாசல்களில் எப்பொழுதும் சிறிய கூட்டம் ஒன்று
இருந்து கொண்டுதான் இருக்கும். இவர்களுக்கும் காவல்துறைக்கும் எந்த விதமான
தொடர்பும் இல்லையென நம்பினால் அதனை விடவும் அறியாமை வேறெதுவுமில்லை. ஆனால் இதில்
தொடர்பு கொள்வது சிறைத்துறையின் கடைநிலைக் காவலர்கள்தான். அவர்களின் வருமானம்
இதிலும் நுழைவாயிலில் வருகிறவர்களிடம் வாங்குகிற பத்து இருபதிலும்தான் இருக்கிறது.
எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் இவர்கள் பணம் வாங்கிக் கொள்கையில் உள்ளே கொண்டு
செல்லப்படுகிற பொருட்களிலும் சில தளர்வுகளை கொடுக்கிறார்கள். இதனோடு தொடர்புடைய
இன்னும் சில வியாபாரங்கள் இருந்தாலும் அவை பொருட்களைச் சார்ந்ததாக
இல்லாதிருப்பதால் அவற்றைப் பற்றின நீண்ட விவரங்கள் தற்காலிகமாக தேவையற்றதெனத்
தோன்றுகிறது.
அடுத்ததாக சிறைக்குள் நடக்கும் வியாபாரம்.
விஜய் தொலைக்காட்சியில் நான் கலந்து கொண்ட டாக்ஷோ நிகழ்ச்சி ஒன்றின்போது முன்னால்
கைதி ஒருவரிடம் ஜெயிலில் என்னவெல்லாம் கிடைக்குமென கேட்டபொழுது மிகச் சுருக்கமாக
பொண்டாட்டியைத் தவிர்த்து எல்லாமே கிடைக்குமென முடித்தார். உண்மையான விவரமும்
இதுதான். ஒரு பாக்கெட் கணேஷ் புகையிலை முப்பத்தைந்து ரூபாய் வரை விற்கக்கூடிய
சாத்தியமிருந்தால் அதனைக் கடத்துகிற தைர்யம் யாருக்குத்தான் வராது? பரோலுக்கு
வந்திருந்த என்னப்பா இந்த விசயத்தை சொன்னபோது பரிசோதனை முயற்சியாக நானும் செய்து
பார்க்க வேண்டுமென ஒரு முடிவுக்கு வந்தவனாய் கொஞ்சம் கணேஷ் புகையிலைப் பொட்டலங்களை
வாங்கி அவருடைய டிரவுசரின் உட்புறத்தில் வைத்து மேலே வெள்ளைத் துணியால் ஒட்டிவிட்டாகி விட்டது.
பரிசோதகருக்குத் தெரிந்தே கொண்டு போக முடியும்தான் என்றாலும் கணிசமான தொகை
அவருக்குப் பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதால் இந்தப் புதிய ஏற்பாடு. வழக்கமாக
மற்றவர்கள் கொண்டு செல்கிற வழிகள் அவ்வளவையும் கேட்டுக் கொண்ட பிற்பாடுதான் இதனை
நான் செய்தது. பெரிய டிரவுசராகவும் வெள்ளை டிரவுசராகவும் அணிய முடிந்ததால் இந்த
வசதி. இருது பாக்கெட்டுகள் ? இதற்கான லாபத்தில் கொஞ்ச நாட்களுக்குப் பொழுது
தாராளமாக ஓடும். நான் சொன்னது வெறும் சாம்பிள்தான், இதற்கும் மேலாக எவ்வளவோ
வழிகளில் எவ்வளவோ விசயங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பரோல் விடுப்புகள் இல்லாத
காலத்தில் இதற்கு பெரும் உதவி செய்வது காவலர்கள்தான். அதுவும் தண்டனைக்
கைதிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் வழங்கப்படுமே ஒழிய வி்சாரணைக் கைதிகளுக்கு
வழங்கப்படுவதில்லை. போலீஸ்காரர்களுடன் கொண்டிருக்கிற நட்பு, கொடுக்கப்படும் மாமூல்
இவற்றைப் பொறுத்துதான் செய்து முடிக்கப்படுகிற வேலைகளின் அளவும் இருக்கும். இதன்
உச்சமான வியாபார சாத்தியம் வெளியில் தீர்த்துக் கொள்ள முடியாத பகையினையும் அல்லது
வேலைகளையும் சிறையில் வைத்துத் தீர்த்துக் கொள்ள முடிவதுதான். மிக சமீபத்திய
உதாரணம் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையென பெருமையடித்துக் கொள்ளும் புழல்
சிறைக்குள் ரவுடி ஒருவர் கொள்ளப்பட்டிருப்பதுதான். சில சமயங்களில் நடக்கிற விசயமென
இதுகுறித்து அசட்டையாக நாம் இருந்து விட முடியாது, ஏனெனில் இதன் எண்ணிக்கை
வெவ்வேறான காரணங்களின் பின்னால் ஒளிந்து கொள்வதால் சரியான தகவல்களை நம்மால்
அறிந்து கொள்ள முடிவதில்லை. அவ்வப்பொழுது கைதிகள் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில்
மரணம் என்பதுமே திட்டமிடப்பட்ட விசயமாகத்தான் இருக்கக்கூடும்.
இவ்வளவு
சிக்கலான இவ்விசயத்தில் குடம்பத்தின் காரணமாக சிலர் திருந்தி வாழ விரும்புவதாக
நம்ப முடிந்தாலும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் பெரும்பாலனவர்களை
குற்றவாளிகளாக்கவே தயாராயிருக்கிறது. அடிப்படையான காரணம் இவையணைத்தும் பொருளாதாரம்
சார்ந்ததாக இருக்கிறதுதான். இன்னொரு வகையில் சிறைச்சாலைகளின் மூலமாய் பெரும்
பயனடைகிறவர்கள் என தொண்டு நிறுவணத்துக்காரர்களை சொல்லியாக வேண்டும். கைதிகளுக்கு
ஹெச் ஐ வி விழிப்புணர்வு என்கிற பெயரில் அவ்வப்போது உள்ளே போய் வருகிறவர்கள்
அதற்கான பெரும் நிதிகளை என்ன செய்கிறார்கள் என்பது மர்மமே. அதேபோல் ஆயுள்
கைதிகளின் மறுவாழ்வின் மீது அக்கறை கொள்வதாகவும் அவர்களுக்கு இருக்கிற சமுதாயச்
சிக்கல்களை தீர்க்கவும் தொண்டு செய்வதாய் சொல்லிக் கொண்டு சிலர் செய்யும் மோசடிகள்
ரொம்பவுமே கொடுமையானது. மதுரையில் இப்படி தொண்டு நிறுவணம் நடத்தி வரும் நபர் சொந்த
சாதி அடிப்படையிலும் பணம் கமிசனாக கொடுப்பவர்களுக்குமே தொடர்ந்து உதவிகள் செய்து
வருகிறாரென விமர்சனம் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் ஒவ்வொரு வருடமும் அவருக்கு
கிடைக்கிற நிதியின் அளவு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
இவ்வளவிற்கும்
மத்தியில் விடுதலை செய்யப்படுவதிலிருக்கிற விதிகளைப் பற்றியும் யோசிக்க
வேண்டியுள்ளது. எதனடிப்படையில் ஒரு குற்றவாளி திருந்தியுள்ளான் என்பதற்கான
வரையறையினை இவர்கள் உருவகித்துக் கொள்கிறார்கள். முதல் காரணம் நன்னடத்தை அதிகாரி
என்று சொல்லப்படுகிற ஒவ்வொரு பரோலுக்கும் அனுமதிக் கடிதம் வழங்குகிற ஆள்தான்
விடுதலையாகும் கைதியின் நடத்தைக் குறித்த அறிக்கைக் கொடுக்க வேண்டியவராயிருக்கிறார்.
எனவே துவக்கம் முதலே இவருடன் இணக்கமாயிருப்பவர்களுக்கும் அவர்களுக்குத்
தேவையானவற்றை செய்து கொடுப்பவர்களுக்கு மட்டுமே விடுதலைக்கான சாத்தியங்கள் செய்து
கொடுக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தினைக் கொண்டு இவர்கள் செய்கிற அயோக்கியத்தனம்
கொஞ்ச நஞ்சமானதில்லை. முதலில் இதுமாதிரியான நன்னடத்தை அதிகாரிகளின் பணியமர்த்தலில்
மிகுந்த கவனம் வேண்டுமென்பதுதான் முக்கியம். நேர்மையாக ஒரு விசயத்தை ஒப்புக்
கொள்ளவேண்டுமானால், பத்து வருடங்கள் தாண்டியும் விடுதலை பெறாத கைதிகளுக்கு
மத்தியில் எட்டு வருட காலத்திலேயே வெளியே வந்திருக்கிற என் அப்பாவிற்கு சத்தியமாக
விடுதலை செய்யப்படுவதற்கான எந்த அருகதையும் இல்லை. தவிர்க்கவே இயலாத
குடும்பச்சூழல்தான் அங்கங்கு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து கொடுக்க
வேண்டியதைக் கொடுத்து எல்லாம் சாத்தியமானது. இதற்கு பணம் கொடுத்தேன் என்பதைத்
தவிர்த்து இதற்காகவே பரோலில் வந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து காரியம்
முடித்த அப்பாவோடு வேறு எந்த விசயத்திலும் நான் கவனம் மேற்கொள்ள வில்லை. இப்படி
ஒருவர் இரண்டுபேர் மட்டுமே இருப்பதில்லை. இந்த அயோக்கியன்களின் செயலால் பல
சமயங்களில் நிஜமாகவே திருந்தியும் வாய்ப்புகளற்ற எவ்வளவோபேர் கைதிகளாகவே தொடர்ந்து
தண்டனை அணுபவிக்கிறார்கள். இவையணைத்தையும் தெளிவானதொரு ஆய்வுக்குப்பின் வெவ்வேறான
நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால் மட்டுமே சிறைச்சாலைகள் இருப்பதற்கான நிஜமான
சாத்தியங்களை அடைய முடியும். மற்றபடி திருந்தி வாழ்வதற்காக விடுதலை செய்யப்படுவதாக
சொல்லப்படுவதெல்லாம் ........... அபத்தங்கள்தான்.
Comments
Post a Comment