உயிரோசையில் வெளியான ஒரு பழைய கட்டுரை...



          2000 ற்குப்  பிறகான தமிழ் சினிமா


                        (யாருடைய   காலகட்டம் ? ....)

         வன்முறை, சாதியம், கொஞ்சம் ஊறுகாய் அரசியல்



      எந்த அடிப்படையில் சினிமாவை வேறொன்றாக அது கொண்டிருக்கும் கோணல் மானலான விதிமுறைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டியுள்ளது? ஒரு சமூகத்தின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிற கலையாகவும் எல்லை தாண்டி எல்லோருடனும் அது கொண்டிருக்கும் உறவிலிருந்தும்தான் அதற்கான முக்கியத்துவத்தினை உணரமுடிகிறது..
      ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிகழும் மாற்றங்களை சற்று நிதானிதுக் கவனித்தால் அதன் பின்பாக வெவ்வேறான சமூக நிகழ்வுகளின் மாற்றங்களும் பிணைந்து போயிருப்பதை நாம் உணரமுடியும்? எழுச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி தொடரும் இங்கு பத்தாண்டுகளுக்கோ அல்லது சில ஆண்டுகளுக்காகவேனும் யாராவது சிலரின் காலகட்டமாகவே பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும். கடந்த பத்தாண்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சி, கூடுதலாக திரைப்படங்கள் சர்வதேச அளவில் சந்தைப்பட்டுப் போயிருக்கும் விஸ்தாரமென நிதானித்து யோசிக்கையில் மலைப்பான எவ்வளவோ விசயங்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரே சம்யத்தில் சராசரி ரசிக மனமாகவும், தொடர்ந்து திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பதும் அல்லது அத்துறையுடன் தொடர்புடையன் என்கிற முறையிலும்  மிக முக்கியமான இக்காலகட்டத்தினை பதிவு செய்ய வேண்டியதை அவசியமெனக் கருதுகிறேன்.
      தற்செலாகவோ, அல்லது துரதிர்ஸ்டவச்மாகவோ, புதிய இயக்குநர்கள் வந்து ஒட்டு மொத்தமாக சூழலை மாற்றுவது என்கிற விசயம் 2000 த்திற்கு முன்பு வரையிலும் அபூர்வமானதொன்றாகவே இருந்துள்ளது. குறிப்பாக தொண்ணூறுகள். அதன் இறுதி ஆண்டுகளில் சேதுவிலிருந்து துவங்கின இயக்குநர் பாலாவின் வருகைக்குப் பின்னால் அடுத்த தலைமுறை சிந்தனைகளுக்கான பெரும் வாசலொன்று திறந்து விடப்பட்டதைப் போலானது. விஜய், அஜித் இருவரும் வெற்றி தோல்வி என மாறி மாறி தந்து கொண்டிருக்க, இயக்குநர்களுக்கான இடமென்பது இரண்டாம்பட்சமாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் குஷியிலிருந்துதான் தன்னுடைய வலுவான இடத்தை விஜயால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இதேபோல் அஜித்துக்கு வாலி. இவ்வாண்டுகளின் துவக்கத்தில் சந்தேகமே இல்லாமல் விக்ரமன் மாதிரியான இயக்குநர்களின் செண்ட்டிமெண்ட் படங்களாலும் எஸ். ஏ. ராஜ்குமார் மாதிரியான இசையமைப்பாளர்களின் லாலலா விலும்தான் தமிழ் சினிமாவின் பெரும்பாலான ரசிர்கள்களும் கட்டுண்டு கிடந்தனர். இன்றுவரையிலும் வானத்தைப்போல படம் 200 நாட்களைத் தாண்டி ஓடினது நம்பவியலாத விசயம்தான். அதிர்ஸ்டவசமாக அதன் பிறகு விக்ரமனின் படங்களை பெரும்பாலான ரசிகர்கள் போஸ்டர் பார்த்தாலே ஜெர்க்காகி ஓடுகிற அளவிற்கு எச்சரிக்கையாகி விட்டார்கள். இருந்தும்  இந்த துவக்க ஆண்டுகளில் எஸ். ஏ. ராஜ்குமாரின் கோரசும் தேவாவின் டவுன்லோட் கம் கானா கீதங்களும்தான் எல்லா ஊர்களிலும் ராஜபவனி வந்து கொண்டிருந்தன.
            சேதுவிற்குப் பிறகு விக்ரம்
  பல வருடங்களாகக்  கண்டு கொள்ளப்படாமல் இருந்து மிகப் பெரிய வெளிச்சத்திற்கு வருவதுடன் தொடர்ந்து தில், தூள், காசி சாமி என ஒரு புறம் வெற்றிப் படங்களையும் இன்னொரு புறம் அதற்கு இணையாக சில தோலிவிப் படங்களையும் கொடுத்தபடியேதான் வந்துகொண்டிருக்கிறார். இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் அவரின் வெளிப்பாடுகளின் மூலமாய் தவிர்க்கவியலாத ஒரு இடட்த்திற்கு நகர்ந்து விடுகிறார். இதே காலகட்டத்தில் அலைபாயுதேவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகிற மாதவன் அடுத்த இளம் தலைமுறையினரின் வரவுகளுக்கு துவக்கமாக அமைய, தொடர்ந்து துள்ளுவதோ இளமையிலிருந்து தனுஷும், காதல் அழிவதில்லை படத்திலிருந்து சிம்புவும் வருகிறார்கள். இன்னொரு புறம் அற்புதமான ஒளிப்பாதிவாளராக அறியப்பட்டிருந்த இயக்குநர் ஜீவா 12 பியின் மூலமாய் இயக்குநராக, பெரும் நாயக எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்ட ஷாம் சத்தமே இல்லாமல் காணாமல் போய்விட்டார். இன்னொரு புறம் சிம்ரனும் ஜோதிகாவும் பல இளைஞர்களின் ஆதர்ஷமாக இருந்தனர். உடைகள் உணவு போன்றவற்றில் இருந்த நடிக நடிகையரின் பேஃஷன் அடையாளங்கள் ஹேர் கிளிப்பில் துவங்கி எல்லாவற்றிலும் ஊடுருவியிருந்தது இந்த காலகட்டம்தான். ஒருபுறம் இளம்பெண்கள் ஜோதிகா கிளிப், சிம்ரன் டாப்ஸ் என்று ரவுண்டு கட்ட இன்னொரு புறம் ஆண்கள் தில் கட்டிங் ஆளவந்தான் ஸ்டைல் உடற்கட்டு என பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளில் களமிறங்கினர். இங்கு பலருக்கும் ஆச்சர்யமான விசயமாய் இருந்தது மொத்தமாக நாற்பது கிலோ இருந்தாலும் ஆச்சர்யப்படவேண்டிய தனுஷ் அறிமுகமான புதிதிலேயே பட்டையைக் கிளப்ப, அந்த படத்திற்குப்பின் கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து படங்கள் அதே மாதிரியான முயற்சியில் இறங்கி பெருந்தோல்விகளையும், அதிர்ஸ்டவசமாக சுமாரான வெற்றிகளையும் பெற்றன.
        மின்னலே படத்தின் மூலமாக இயக்குநராகிய கெளதம் கம் கெளதம் மேனன் புதுவிதமான டோனோடு தன்னைத் தனித்துவப் படுத்துகிறார், கருத்தியல் ரீதியாக இவரின் படங்களில் கொள்ளும் விமர்சனங்களுக்கப்பால் புதுவிதமான முயற்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலமாய் அவருக்கான பிரத்யேகமான இடத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அற்புதமான மெல்லிசையோடு இசையமைப்பாளராகிய ஹாரிஸ் ஜெயராஜ் தனது பாடல்களை தனியாகத் தெரியம்படி தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த காலகட்டம் துவங்கி சமீபமான நாட்கள் வரையிலும் பெரும்பாலான நல்ல பாடல்களை அல்லது ரசிகர்களை முனுமுனுக்கச் செய்யும் பாடல்களை தந்து கொண்டிருக்கிறார். மின்னலே, காக்க காக்க, சாமி, என தொடரும் வரிசையில் சமீபத்திய வாரணம் ஆயிரம் அயன் வரை ஹாரிஸின் இடம் பிரமாதமானது. துள்ளுவதோ இளமையில் திரைக்கதையாளராகவும் பின்பு காதல் கொண்டேன் படத்தின் மூலமாய் இயக்குநராகவும் வந்த செல்வராகவன் நிச்சயமாக ஒரு புதிய திருப்பு முனையாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஏனெனில் உச்ச நட்சத்திரங்கள் அவ்வளவு பேரும் பரபரப்பில் இருக்க சிறிதும் எதிர்பாராமல் இந்தப்படம் கண்ட வெற்றி மலைப்பானது. யுவன் ஷ்ங்கர் ராஜாவின் அற்புதமான பாடல்கள், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு என இளைஞர்களாக சேர்ந்து மொத்த திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்தனர். தொடர்ந்து சரியான படங்களுக்கான போராட்டத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யா, பாலாவின் மூலமாய் நந்தாவிலும், கெளதம் மேனனின் மூலமாய் காக்க காக்கவிலும் ஆக்ரோஷமான நடிப்பாற்றலை வெளிப்படுத்த திறமையானவர்களென சொல்லிக் கொள்ளும் படியான நிறையபேர் வந்து விட்ட ஒரு பிம்பத்தினைக் கொடுத்தது.
            இவ்வளவு இளைஞர்களுக்கு மத்தியில் தொடர்ந்து தங்களின் இடத்தினை உறுதிப்படுத்த  மூத்த இயக்குநர்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பெருந்தோல்வியிலேயே முடிந்தது. பாலச்சந்தர் அவர்களின் பார்த்தாலே பரவசம், பொய். பாலு மகேந்திரா அவர்களின் அது ஒரு கனாக்காலம், பாரதிராஜாவின் ஈர நிலம், கடல்பூக்கள், பொம்மலாட்டம் போன்ற படங்கள். ஆனால் இவற்றுள் பாலுமகேந்திரா அவர்களின் அது ஒரு கனாக் காலமும் பாரதிராஜாவின் கடல்பூக்களும் அற்புதமான படங்களாக வந்திருக்கவேண்டியவை. வெளியாவதில் ஏற்பட்ட காலதாமதம் அப்படங்களின் மீதான நம்பிக்கைகளை குறைத்து விட்டிருந்தது. இது ஒருபுறமிருப்பினும் அத்தனைப் புது இளைஞர்களுக்கும் சவால் விடக்கூடியவராகத்தான் இசைஞானியின் பாடல்கள் இருந்தன. ஃபிரண்ட்ஸ், காசி பிதாமகன் என கிராமியத்தின் மிச்சங்களை தன்னுடைய பாடல்களாய்த் தந்து கடைக்கோடி ரசிக்கனுக்கானவராய் இருந்தார்.
        எப்பொழுதுமே பரபரப்பான விசயங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பெரும் வீச்சு ஒன்று வெளிப்பட்டு வெடிக்கும். குறிப்பிட்ட எந்த இஸ்ங்களுக்குள்ளும் தமிழ்ப் படங்களை நிறுத்திப் பார்த்துவிட முடியாதென்பதால், உதாரணங்கள் எதனையும் இதற்குக் கூறிவிட முடியாது. ஆனால் இப்படி வெடித்து வெளிப்படுவதற்குப் பின்னாலிருக்கும் வீர்யம் என்ன மாதிரியானதாய் இருக்குமெனக் கேட்டால்  யோசிக்காமல் சொல்வேன், ஏ. ஆர். முருகதாஸையும், அமீரையும் சற்று கவனியுங்கள் என்று. இரண்டு பேருக்குமே முதல் படங்கள் சுமாரான வெற்றியைத் தந்த படங்கள்தான். என்றாலும் அஜித்தைத் தலையாக்கியது முருகதாஸ்தான். ஆனால் அடுத்தடுத்த படைப்புகளிலேயே ஒட்டுமொத்தமான இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்ததிலதான் இன்று பாலிவுட் வரை, முருகதாஸின் இமாலய வெற்றி. தன்னுடைய படங்களுக்கென முருகதாஸ் எடுத்துக் கொள்ளும் கதைகள் மிகச் சுருக்கமாக சொல்ல முடிந்திடக் கூடியவை. ஆனால் ஒரு டெக்னீஷியனாக படத்தினை உருவாக்குகிற விதம் அற்புதமானது. அதேபோல் அமீர், முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் எப்படி சம்பந்தமில்லையோ அதேபோல்தான்  மூன்றாவது படமும். அதுவரையிலும் தமிழ் சினிமாவில் பார்த்த கிராமத்திலிருந்து விலகி மிக நெருக்கமான ஊரையும் ஊர்க்காரர்களையும் இப்படம் பதிவுசெய்ததில் இசைக்கும் பெரும் பங்குண்டு. அசலான கிராமத்து மேள தாளங்களோடு பட்டையைக் கிளப்பிய பாடல்கள்தான் இன்னும் நிறைய அலைவரிசைகளில் நேயர் விருப்பப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
        இது எதிலும் சேராமல் இயக்குநராக தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டிருந்த சேரன் அவர்கள் நாயகனாக அறிமுகமாக முதல் படம் கைகூடா விட்டாலும் அவரே இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. இன்னும் சொல்லப்போனால் மொத்த இண்டஸ்ட்ரியும் சற்று வலு குறைந்து போயிருந்த நேரத்தில் சேரனின் இந்த வெற்றியானது மிகுந்திருந்த டப்பிங் படங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கத் துவங்கியது. நம்பவே முடியாத ஆச்சர்யம், நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இணையாக டப்பிங் செய்யப்பட்ட பிற மொழிப்படங்களின் எண்ணிக்கையும் வெற்றியும் மிரட்சியூட்டுவதாக இருந்தது. ஜாக்கிச்சான் பேசுகிற ஜாலித்தழிலை ரசிப்பதற்கு பெருங்கூட்டம் திரண்டது. போதாக்குறைக்கு எம். ஜி. ஆர் அவர்களின் பழைய படங்கள்  மறுவெளியிடு செய்யப்பட நூறுநாட்கள் ஓடி அப்படங்கள் இன்னும் தங்களுக்குள்ள வீர்யத்தினை வெளிப்படுத்தின. இதே காலகட்டத்தில் அழகி படத்தின் மூலமாய் பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநர் தங்கர்பச்சன் அவரின் படங்களைக் காட்டிலும் அவருடைய பத்திரிக்கை பேட்டிகளுக்காவே கவனிக்கப் பட்டார். வார இதழ்க்காரர்கள் மிக அதிகமாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்திய கேலிசித்திரக் கதைகள் இவரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
       இதுபுறமிருக்க என்ன  நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதைப்பற்றி எந்தக் கவலைகளுமில்லாமல் படம் எடுத்துக் கொண்டிருந்த ஆட்களும் இந்த வரிசையில் இருக்கிறார்கள். எல்லா மொழியிலும் எப்படி சிறந்த பத்து இயக்குநர்கள் என ஒரு வரிசையை உருவாக்க முடியுமோ அப்படி இங்கு மிக கொடுமையான பத்துபேர் என வரிசைப்படுத்தும் அளவிற்கு உள்ளது நிலமை. வருடத்திற்கு இரண்டு படங்களென ஏ.வெங்கடேஷ், பேரரசு, ஷ்க்தி சிதம்பரம், கே.எஸ். ரவிக்குமார், ஹரி போன்ற ஆட்கள் விக்ரமன், வீ.சேகரின் மிச்சங்களாய் வலுவாகத் தங்களின் இருப்பை நிலைவைத்திருக்கிறார்கள். அதுசரி, சினிமாவென்றால் எல்லாவிதமான ஆட்களும் வேண்டும்தானே, அதற்காக எல்லா கொடுமைகளுக்கும் ஒரு அளவில்லாமலிருப்பதுதான் தாங்க முடியாததாக உள்ளது. அதிலும் பேரரசுவின் படங்கள் இங்கு படுத்திய பாடு கொஞ்ச நஞமில்லை. டி. ஆர்.ன் மிச்ச பஞ்ச் டயலாக்குகளுடனும் கொஞ்சம் டண்டனக்காவுடனும் களமிறங்கி இரண்டு ஹிட் கொடுத்துவிட்டு பிற்பாடு நடந்த காமெடிகளெல்லாம் என்னத்தை சொல்வது?  இவர்களில்லாமல் ஷங்கரிடமிருந்து வெளிவந்த பாலாஜி சக்திவேல் தன்னுடைய முதல் படமான சாமுராய் தோல்விக்குப் பின்பாக காதலையும், வசந்தபாலன் ஆல்பம் தோல்விக்குப் பின்பாக வெயிலையும் தந்து ஏராளமான கவனிப்பையும் விவாதங்களையும் துவக்கி வைத்தனர். இப்படி ஆச்சர்யப்படுத்திய இன்னொரு ஆள் சிம்புதேவன். தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த தன்னுடைய இம்சை அரசனையே கதைக் களமாக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்து பிரம்மிக்க வைத்தார்.
        படத்தயாரிப்புகள் ஒரு புறம் மிக அதிகமானதாகவும் இன்னொரு புறம் கடும் தோல்விகளின் காரணமாக சரிவுகளையும் ஒரே சமயத்தில் சந்தித்ததில் மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்து கொண்டிருந்த ஏ.எம் ரத்னம் மிக மெதுவாக காணாமல் போய்விட்டார். அதிலும் இந்தக் காலகட்டத்தில் அவர் படங்கள் கண்ட வெற்றிகள் கற்பனை செய்ய முடியாதது, தூள், கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி என இவ்வரிசை அதிகம். பிற்பாக பாய்ஸின் பிரம்மாண்டத்திலும், தன் மகனின் எனக்கு இருபது உனக்கு பதினெட்டின் சம்பந்தமில்லாத பிரம்மாண்டத்திலும் பெரும் வீழ்ச்சியை இவரால் சந்திக்க நேர்ந்தது. மாறாக, ஆளவந்தனின் இழப்பில் சுதாரித்துக் கொண்ட கலைப்புலி எஸ். தானு காக்க காக்க, தொட்டி ஜெயா, என தேர்ந்தெடுத்த படங்களின் மூலமாய் சரிவிலிருந்து மீண்டெழுந்தார்.
         நாயகர்களுக்காக படம் என்கிற பிம்பங்களையெல்லாம் சராசரி ரசிகன் பொய்யாக்கின காலகட்டம் இது. ரஜினி, கமல் அஜித், விஜய் என அத்தனை பெரிய நாயகர்களும் பெருந்தோல்வியை சந்திக்க நேர்ந்ததில் நம்பவியலாத அதிர்ச்சி இருந்தும் கூட, இவர்களுக்கான வருமானம் கோடிகளில் உயர்ந்ததே ஒழிய குறையவில்லை. இந்த காலகட்டத்தில் கமலின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பேசப்பட்ட படங்கள் தொடர்ந்து வணிகரீதியாக தோல்வியை மட்டுமே சந்தித்தன. ஹேராம், அன்பே சிவம், ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் என அடி வாங்கினாலும் மிக சாதாரணமாக கதைகளுடன் வந்த  தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் குறைந்த பட்ச வெற்றிகளுடன் காப்பாற்றி நின்றது. ஆனாலும் இவரின் ஹேராமும், விருமாண்டியும் மிக முக்கியமான முயற்சிகள். அதேபோல் அதிகம் பேசி காணாமல் போன ரஜினிகாந்த்தின் பாபாவிற்குப் பின்னால் சந்திரமுகியை ஆச்சர்யப்படும் விதமாக பெரும் வெற்றிப் படமாக்கினர். வெற்றிக்கான காரணம் ? ரஜினி? கதை ? ஜோதிகா ? ம்ஹூம்....தொடர்ந்து சிவாஜியில் எவ்விதமுமான தயக்கமுமின்றி ஸ்ரேயா மாதிரியான இருபது வயது பெண்ணுடன் டூயட் பாடியும், ஒரே சமயத்தில் இருபது ரவுடிகளைப் புரட்டி எடுத்தும் நானும் யூத்தான் என வரிந்து கட்டிக் கொண்டு வந்து நிற்க முடிந்ததுஅவரால்.
         மிக அதிகமாக ரீமேக் படங்கள் எடுக்கப்பட்ட அதே வேளையில் ரீமிக்ஸ் பாடல்களுக்கான ஒரு ட்ரெண்ட்டையும் உருவாக்கினார்கள். இதன் சிறப்பான துவக்கம் நிச்சயமாக யுவன் ஷங்கர் ராஜாதான். அதை சிறப்பாக செய்திருப்பவரும் அவரே. பிற மொழிப்படங்கள் நேரடியாக டப் செய்யப்பட்டது போதாதென பெரிய நாயகர்களின் படங்கள் பெரும்பாலும் பிற மொழி வெற்றிப் படங்களை வாங்கி எடுத்துதாகத்தான் இருந்தது. பெருமளவில் சொல்ல முடியாவிடினும் ரஹ்மானின் சில பாடல்களும் இக்காலகட்டத்தில் சிறப்பான கொண்டாட்டங்களைப் பெற்றது. குறிப்பாக, ரிதம் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். அதேபோல் பெரிய அளவில் இல்லாத போதும் குறிப்பிடத் தகுந்த அளவில் நல்ல படங்களில் சத்தமில்லாமல் ஜீவாவும், ஜெயம் ரவியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவை சந்தைப் படுத்தலில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியின் காரணமாய் இக்காலகட்டத்தில் ஏராளமான தமிழ்ப் படங்கள் வெளியில் பரவலாக்கப்படத் துவங்கியிருக்கின்றன.  இருந்தும் திரைப்படங்களுக்கான காப்பி ரைட் போன்ற விசயங்களில் பெரிய அளவில் இன்னும் மாற்றம் வந்திருக்கவில்லை. பாலிவுட்காரர்கள் இந்த விசயத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கி விட்டிருக்கின்றனர். இங்கே ஒரு சிலரின் படங்களைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் இந்த விசயங்களைக் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தமான விசயம். சமீபத்திய வருடங்களில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த கார்ப்ரேட் நிறுவணங்கள் ஒட்டுமொத்தமாக சினிமாவையே மாற்றி விடுகிற பில்டப் களுடன் நுழைய, நுழைந்த வேகத்திலேயே பெரிய படங்கள் கண்ட பெரிய தோல்விகளால் கடையை மூடிவிட்டுக் கிளம்பிவிட்டனர். கார்ப்ரேட் நிறுவணங்களின் தயாரிப்பு அதிகமாகும்போது அவற்றால் ஏற்படப்போகும் நன்மைகளும் தீமைகளும் சம அளவில் உள்ளன. இப்போதிருக்கும் குறைந்த பட்ச முயற்சிகள்கூட ரிமோட்டாக மாறி சிதைந்து போகக்கூடிய அபாயம் இருப்பதை மிக முக்கியமானதொரு விவதமாக கையிலெடுக்க வேண்டும். அதே சமயம் முன்பு சொன்ன காப்பிரைட் போன்ற விச்யங்களில் இவர்களுக்கு இருக்கும் பரிட்சயம் மிக  முக்கியமான அம்சமும் கூட.
        சமீபத்திய வருடங்கள் என்னவாயிருக்கிறதென கவனித்தால், நான்கு நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது. சசிகுமார், மிஷ்கின், வெங்கட் பிரபு, கற்றதுதமிழ் ராம். சென்னை 28 என சாதாரணமாக தெருவோர கிரிக்கெட்டை கையிலெடுத்து பிரமாதமான படத்தைக் கொடுத்த வெங்கட் செல்வராகவனுக்குப் பின் புதுவிதமான டோனை கொடுத்ததுடன் அடுத்த படமான சரோஜாவிலும் தன்னுடைய திறமையை பிரமாதமாக வெளிப்படுத்தினார். மாறாக, பாலா அமீரிடமிருந்து வெளிப்பட்ட சசிகுமார் ஒரே சமயத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என அவ்வளவிலும் மொத்தமாக களமிறங்கி சுப்ரமண்யபுரத்தின் மூலமாய் அவ்வளவு பேரையும் திரும்பிப்பார்க்க செய்தார். இதில் அவ்வளவையும் சிறப்பாக செய்திருந்ததுதான் இவரின் மீதான ஆச்சர்யங்களுக்குக் காரணம். தயாரிப்பாளராகத் தொடர்ந்து பசங்க படத்தினையும், நடிகனாக நாடோடிகளும் தொடர்ந்து மிகப் பெரிய வெற்றிகளாக, நிறைய புது இயக்குநர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இன்று ஆதர்ஷம் சசிகுமார்தான். வெறுமனே இதனை வார்த்தைக்காக சொல்லிவிட முடியாது. சுப்ரண்மன்யபுரம் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உருவாக்கத்திலும் கொள்ளப்பட்டிருந்த அக்கறை உழைப்பு அபரிமிதமானது. இவர்கள் அவ்வளவு பேரிலிருந்தும் மாறுபட்டு தனித்தக் கவனத்தினை ஏற்படுத்தியிருப்பது மிஷ்கின். சித்திரம் பேசுதடி கொஞ்சமாக கவனத்தைக் கொடுத்திருந்தாலும் அஞ்சாதேவில் திரைக்கதை மேற்கொள்ளப்பட்டிருந்த விதமும், மேக்கிங் என்று சொல்லப்படுகிற பட உருவாக்கமும் தனியானதொரு அடையாளத்துடன் இருந்தது. நந்தலாலா இன்னும் வெளியாகாத நிலையில் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அடுதடுத்த படங்களுக்கான மிஷ்கினின் காத்திருப்பும் அவரின் மீதான கவனிப்பை அதிகப்படுத்துகிறது. இதுவல்லாமல் ராமை நான் குறிப்பிடுவதற்கான காரணம், மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய கற்றது தமிழ் அப்படம் கொண்டிருந்த சிறு சிறு பிழைகளின் காரணமாய் வெற்றி பெறாவிடினும் உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் அது மிக முக்கியமான படம்தான்.
         இவற்றையெல்லாம் தாண்டி உள்ளடக்கமெனப் பார்த்தால் வன்முறை, மலிவான பாலியல் அல்லது மேலோட்டமான அரசியல் என ஒரு பக்கமாகவும் வழக்கமான ஸ்டேண்டப் காமெடி வகையறா படங்களும் இப்பத்தாண்டுகளில் பெரும் அளவில் வந்துள்ளன. குறிப்பாக, ரவுடியிசம். ஒரே கதையை எத்தனைபேர் எத்தனை விதமாக எடுத்துத் தீர்க்க முடியுமோ அப்படி எடுத்துத் தீர்த்திருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பருத்தி விரன், காதல், கல்லூரி, புதுப்பேட்டை, கற்றது தமிழ், சுப்ரமண்யபுரம் போன்ற படங்களும் இன்னும் சில படங்களும் மிக முக்கியமான விவாதங்களுக்குண்டான படங்கள்தான். மிகக்குறிப்பாக, புதுப்பேட்டையும், கற்றது தமிழும். முன்பே சொன்னபடி இப்படங்களின் திரைக்கதையில் குறைகள் உள்ளதனை மறக்கவே முடியாதுதான், ஆனால் லும்பன்களின் படமாக இந்தப் பத்தாண்டுகளில் இந்த இரண்டு படங்களைமட்டும்தான் சொல்ல முடியும். கொக்கி குமாரும் சரி, பிரபாகரும் சரி தீவிரமாக அவர்களின் பாத்திரங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டியவர்கள்.
        சமீபநாட்களில் அதிகரித்திருக்கிற வலைப்பூக்கள் எழுதும் நண்பர்களுக்கு மத்தியில் கடுமையான வியாதி பெருகியிருக்கிறது. உலகின் எல்லாப் படங்களும் இன்று காணக்கிடைக்கிற அளவிற்கு எளிமையாகி இருப்பதுடன் நம்மில் சில படங்கள் வெளிநாட்டுப் படங்களை தழுவியிருப்பதும் உணமைதான். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பாகவே அப்படம் இந்தப்படத்தின் தழுவல் அல்லது காப்பி என்று எழுதுவதெல்லாம் பெரிய அயோக்கியத்தனம். யாரும் யாரையும் விமர்சனம் செய்வதற்கு உரிமை உண்டுதான். ஆனால், வேறு எந்த வகையிலும் பேர் வாங்கமுடியாதெனத் தெரிந்து தொடர்ந்து சினிமாக்காரர்களை காயப்படுத்துவது அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. அதிலும் சிலர் முதல் ஷோ பார்த்தவுடனேயே வந்து அப்படம் எந்தப்படத்தின் தழுவல் என வலைதளத்தில் எழுதுகிறார்களாம். சரி, இதில் என்ன கிடைக்கிறது? தியேட்டர் போகிறவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதுடன் திருட்டு டி  வீ டிக்களை அதிகப்படுத்துகிற செயல்தான் இவையெல்லாம். நியாயமாக சொல்ல நினைப்பவர்கள் அல்லது எல்லா சினிமாவையும் கரைத்துக் குடித்திருப்பவர்கள் பெரிய அளவில் இல்லாவிடிலும் ஒரு குறும்படத்தையாவது எடுத்துக் காட்டட்டுமே, அதை விட்டுவிட்டு பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ச்சி செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
        சரி, இவ்வளவிற்கும் பின்னால் இந்தப் பத்தாண்டுகளின் தமிழ் சினிமா யாருடைய ஆளுமையில் கிடந்திருக்கிறது? இப்படி ஒரு கேள்வி எழுகையில் இதை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுக்குமே கூட அதற்கான பதிலிருக்குமா என சந்தேகம் வரும்தான். ஆனால், நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் காமெடியாகக்கூடப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தாலுமேகூட உண்மை அதுதான். இந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து தன்னை வெற்றியாளனாய் வைத்திருப்பது .......... வடிவேலு மட்டும் தான். சரியாக கவனித்தால் 2000 ஆம் ஆண்டு வெளியாகிற மாயி படத்திற்குப் பின்பாகத்தான் இவரின் உச்சம் துவங்குகிறது. அதிலிருந்து இப்பொழுதுவரை வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் தனியாக வடிவேலுவின் பெயரைச் சொல்லுமளவிற்கு இருக்கின்றன. இது சற்றுக் குழப்பமானதும் கூட, இவ்வளவு திறமையான புதிய இளைஞர்களின் காலகட்டத்திலும்கூட தன்னுடைய பேச்சு மொழிக்காகவும், உடலசைவுகளுக்காகவும் கொண்டாடப்படும் நடிகன். நாயகனாகவும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க முடிந்திருக்கிறதென்றால் ஆச்சர்யமான மாற்றம் என்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு வார்த்தைகளையும் எல்லா தரப்பிலும் வயது வித்யாசமில்லாமல் பலரும் பயன்படுத்திக் கொண்டிருப்பது வடிவேலுவிடமிருந்து பெற்றுக் கொண்டதுதான். சிறு பத்திரிக்கை நண்பர்களில் ஒரு பெரும் கூட்டமே வடிவேலுவைப் பற்றி எழுதுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நானுட்பட. இன்னொரு வகையில் மிக முக்கியமானதொரு சமூக நிகழ்வாகக்கூட இதனைக் கொள்ள முடியும்.
        சரி, இவற்றிற்கெல்லாம் அப்பாலும் மிக  முக்கியமான மாற்றங்களாக இளைஞர்களின் வரவு நிறைய நல்ல ஒளிப்பதிவாளர்களையும், திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களையும் நமக்குத் தந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் தியேட்டர் வந்து படம் பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிற வேளையில் புதிய சிந்தனைகளுடன் புறப்படுகிறவர்களால்  மட்டும்தான் பார்வையாளர்களை மீண்டும் தியேட்டர்களுக்குள் வரச் செய்ய முடியும். இன்னும் சில வருடங்களில் பெருகப்போகும் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சியினைப் புரிந்து கொள்வதோடு பட்ஜெட் என்கிற விசயத்திலிருந்து மிக எளிதில் விடுபட்டு நியூவேவ் திரைப்படங்களை உருவாக்க முடியும். ஆனால், வெறுமனே தொழில் நுட்பத்தினைத் தெரிந்து கொள்வதால் மட்டும் ஆரோக்கியமான திரைப்படங்களை உருவாக்கிவிட முடியாது. அதைத் தாண்டி, புதிய விசயங்களையும் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. பார்க்கலாம், இன்ன நடக்குமென.

          
         

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.