கவிஞர் ஜீவன் பென்னியின் கவிதை தொகுப்பிற்கு நானெழுதிய முன்னுரை ( புதிய கோடாங்கியில் வெளியானது. )
மழையென உதிரும் சொற்களின் வழி காண முடிந்த இன்னுமொரு உலகின் அழகிய பதிவு….
தானெழுத
நினைக்கிறதொரு கவிதையை எவ்வளவு எழுதித் தீர்த்த பின்னும் தேடியபடியே இருக்கிறான்
கவிஞன். விருப்பமானதொரு வார்த்தையின் வழியாக எட்டிப்பிடித்து விடுகிற
நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளுக்கு முன்பாக, பின்பாக விரவியிருக்கும் ஸ்திரமான்
மெளங்களை நம்மில் பலர் சட்டை செய்வதில்லை. தன்னைச் சுற்றி இயங்கிக் கொண்டே
இருக்கும் இன்னுமொரு உலகின் ஒட்டுமொத்தமான அசைவுகளையும் நுட்பமாக கவனிப்பதோடு அதன்
சிறு, சிறு அழகினைக்கூட காதலுடன் பார்ப்பதிலிருந்து உருவாகியிருக்கின்றன
பென்னியின் கவிதைகள். அழகானதொரு மழை தினத்தில் சந்திக்க நேர்கிற எல்லாமும்
அழகானவையாகவே இருப்பதைப்போல் ஈரமும், மெல்லிய வன்மமும் ஏமாற்றங்களும் பூர்ணமாய்
கலந்து கிடக்கிற இத்தொகுப்பின் கவிதைகள் தோறும் எல்லாவற்றையும் மீறி வாசகனை தன்வசம்
இழுத்து வைத்துக்கொண்டிருப்பது கவிஞன் வாசகன் என்கிற சமநிலை நோக்குதலைத் தாண்டின
தோழமைதான்.
எல்லாப் பொய்களையும்
பொய்களாகவே ஏற்றுக்கொள்ள முடியாததைப் போலவே எல்லா உண்மைகளையும் உண்மைகளாகவே
நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லாம் பொய் என்பதிலிருந்து தன் சொற்களைத்
துவக்கும் இவன் சில சமயங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஓர்
உண்மைக்கிருக்கும் இடத்தினைத் தவிர்க்க முடியாதெனவும் உணர்த்திச் செல்கிறான்.
எல்லா விசயங்களையும் மறத்தலென்பது ஒருவிதமான வரமென சொல்லமுடிகிற அதே நேரத்தில்
மன்னிப்புகளற்ற தண்டனையும் கூட. அதிகம் பாதிக்கிற துக்கங்களுமே அடுத்ததாய்,
அதற்கடுத்ததாய் மறக்கப்பட்டுவிடுவதில் இருப்பது வெறுமனே யதார்த்தமென்கிற
பசப்பா?....அல்லது ஒவ்வொரு மனிதனும் சுமந்து திரியும் இயலாமையா? காலங்காலமாய்
வைக்கப்படும் விடையற்ற கேள்விகளிவை…
அலாங்காரமென்கிற பெயரில்
நாம் சிறைப்படுத்தும் உயிர்கள் பேசுகிறதொரு கவிதையில், ‘உங்களுடைய கட்டுப்பாடுகளை
மீறி யாராவது கையிலெடுத்து உடைக்கிற பொழுது/ கைதவறி உடைகிறதொரு பொருள்/
சந்தோசப்பட்டுக் கொள்ளும் அது / விழுவதற்காவது தனக்கு சுதந்திரமிருப்பதையெண்ணி…”
அடைத்து
வைக்கப்பட்டிருப்பதின் குரூர வலியினை அனுபவிப்பதில்தான் இது மாதிரியான வரிகள்
சாத்தியப்படும் போல். இப்படி அடைபட்டாலுமே கூட பிழக்கப்பட்ட நேர்மையில் அவர்கள்
எப்பொழுதுதாவ்து தொலைக்கப்பட நேரும் பொழுது தங்கள் எஜமானார்களைத் தேடுவதாய்
“அழைத்தபடியே தானிருக்கின்றன / அதனதன் உரிமையாளர்களை/
அதற்குத் தெரிந்த மொழியில்/ அதற்குத் தெரிந்த பாவனையில்..” என இன்னொரு கவிதையில்
முடிகிறது.
ஒவ்வொன்றைப் பற்றியும்
பிறிதொன்றின் அவதானிப்புகள், மற்றவற்றின் மீதான அக்கறைகளென விளங்கிக் கொள்ளவியலாத
முரண்களும் அனேகமாயிருக்கின்றன. தான் படைத்த உலகிற்கென கொடுப்பதற்கு
வரங்களெதுவுமற்ற நிராயுதபாணியாய் பெரும்பாலான கவிதைகளில் வருகிறார் கடவுகள்.
“பறவைகள் பறக்க முடியாத நிலத்தின்/ சுவரின் முளைத்து விட்டிருந்த/ சானக்கைகளுக்கு ரேகை
பிரித்து/ பிழைக்க ஆரம்பித்தார்/ வரங்கள் தீர்ந்த கடவுள்…” இப்படிக் கடவுள்களும்,
குழந்தைகளும் ஆங்காங்கே காதலர் காதலிகளும் இவர்களையெல்லாம் விட மிகுதியாய் தங்களை
அழகுற வெளிப்படுத்தபடியேயிருக்கும் புற உலகின் சிறு சிறு உயிர்கள் ஒவ்வொன்றும்
தத்தமது மொழியில் தங்களைப் பற்றி சொல்லியபடியேதான் இருக்கின்றன. பெரியவர்கள் நிறுவ
முயலும் எல்லாவிதமான சட்டங்களையும் தம் பிஞ்சுக் கரங்களால் குழந்தைகள்
பிய்த்தெரிந்துவிட்டுச் செல்லவே முயற்சிக்கின்றனர். இப்படித் தகர்த்தலுக்குப்
பின்னாலிருக்கும் சுதந்திரமான நேர்மையிலிருந்துதான் குழந்தைகளின் உலகம்
அர்த்தப்பூர்வமாய் துவங்குகிறது.
இரண்டு பெண்களுக்கிடையே
நிறைவேற்றிக் கொள்ளப்படுகிற எளிய ஆசைகளை “அவளுக்கில்லாத கருமுட்டைகளைத் தடவிப்
பார்த்து/ இறகினும் மென்மையான அதன் தோல்களை/ உரசிவிட்டுத் திரும்புகின்றன/ ஒரு
விதத்தில் ஆணுறுப்பு போன்றிருக்கும் / விரைப்பான அவளது விரல்கள்…” என எழுத
முடிகிறவனுக்கு அதனைப் பூர்ணமாக ஏற்றுக்கொள்கிற படைப்பு மனமும், வாசகனுக்கு
சொல்லியாக வேண்டுமென்கிற தீர்மானமும் வாய்த்திருப்பது அபூர்வம். எல்லாத்
தவறுகளையும் மன்னிப்பதற்கென்றும், எல்லாப் பிரார்த்தனைகளையும்
நிராகரிப்பதற்கென்றும் எப்போதும் விதிக்கப்பட்டிருப்பதில் குற்றங்களால் மட்டுமே இவ்வுலகம்
தன்னை அர்த்தப்படுத்திக் கொள்கிறதென்கிற புரிதலை ஏற்றுக்கொண்டுவிட முடிகிறது.
பழக்கப்பட்ட அல்லது நெருக்கமான தொன்றை பலசமயங்களில் மறந்து தொலைத்து விடுகிறபொழுது
அதனால் நேரும் சங்கடங்கள் நம்மைக் கூசச் செய்துவிடுவதோடு பிறழ்நிலை கொள்ளவும்
செய்கிறது. யாருமற்ற வீதியென்று அலட்சியமாய் நாம் சொல்வதை தீர்மானமாக மறுக்கச்
செய்பவன், சைக்கிளை உருட்டிச் செல்லும் வியாபாரி, பூ விற்கும் கிழவி,
தள்ளிவிடப்பட்டு விரையும் வாகனம், இவற்றோடு மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள்,
தெருவைக் கடக்கும் பூனையென இன்னும் ஏராளமானவர்கள் இருப்பதைச் சொல்லி, யார் சொன்னது
யாருமற்ற வீதியென முடிக்கிறான்”.
பறவைகளென பொத்தாம் பொதுவாய்
சொல்ல விருப்பமற்றவனாய் பறக்க விரும்புகிற, அல்லது பறத்தலின் கனங்கள்தோறும்
காகங்களை மட்டுமே அடையாளப்படுத்துகிறான். காகமென்பதை விருப்பத்திற்குரியதொரு
பறவையென்றோ, பெருங்குறியீடாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்தான்.
‘காகங்களெதும் கரைந்திடாத காலை/ பெரும் விபத்தைப் போல் விடிகிறது/ என
சொல்லியிருப்பதிலிருந்து. பொம்மைகளுக்கும் குழந்தைகளுக்குமான உறவுநிலை உயிரற்ற,
உயிருள்ளவர்களுக்கு இடையிலான உறவு நிலையின் உச்சபட்சமான அழகியல். இந்த நிலையில்
மட்டும்தான் உயிருள்ளவைகளால் உயிரற்றவைகளின் பதிலீடுகளை ஏற்றுக்கொள்ளவும்,
கொண்டாடவும் முடிகிறது.
ஆங்காங்கே விரிந்து கொள்கிற
சொல்வனங்களில் அதீத ஆச்சர்யங்கள், பிரம்மாண்டங்களையும் மீறி நாம் கவனிக்க மறந்து
போகிறதொரு உலகமே விரிந்து சென்று நம்மைக் கவனிக்க வைக்கிறது. யாரோவொருவரின் கனவை
அல்லது இசையை அபகரிப்பதற்கும், தனதாக்கிக் கொள்வதற்கும், உயிருள்ளவைகளைப் போலவே
உயிரற்றவைகளும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன என்பது நாம் அனுமானிக்க
முடியாததொரு விஷயம். கூழாங்கற்களென தெளிவாகப் புதைந்திருக்கும் இசைச் சொற்களை
திருடுமொருவனின் சூட்சுமங்கள். பின்னொரு நாள் கவிஞனின் இசையில்லாத இரவுகளில், ஒரு
கோடை மழையில் அவன் காணாமல் போகிற பொழுது தன் இசைக்குத் திரும்ப முடியுமென்பதை ”ஒரு
கோடையில் அவனுக்கு மழை கொடுக்கும்/ அம்மழையில் அவன் காணாமல் போவதிலிருந்து/
சிதைத்துக் கொண்டே / என் மதுவைக் குடிக்க எனக்குத் தெரியும்…” என்பதை
உணர்த்துகிறான்.
வெறுமைகளை மட்டுமே அதிகபட்ச
பதிலீடுகளாய் தந்தபடியிருக்கும் அறைகளின் நிர்வாணங்களுக்குள் அல்லது
பாதுகாக்கப்படும் ரகசியஙளுக்குள் ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கங்களும்
களவாடப்பட்டோ அல்லது கொலையாகும்படியோ செய்யப்படுகிறது. ஒரு அனியோடு இணங்கிப்போவதை
நாம் விரும்புவதைப் போலவே நம்மோடு அவற்றையும் இணங்கிப் போகக்கூடியதொரு சூழலே அதனை
அனுபவிப்பதற்கான படிநிலைகளாய் இருப்பதைப் போன்றே தாழிட மறந்துபோன, திறந்து
வைக்கப்பட்ட ஜன்னல்களின் வழியென எப்பொழுதும் யாரோ சிலரின் அந்தரங்கங்கள்
வெளிப்பட்டு விடுவதையும் தவிர்க்க முடியாதுதான். அன்புகளும் கொலைவெறி கொள்ளும்
வன்மமும் இன்னபிற உணர்வுகளும் வடிவமைக்கப்பட்ட ஏதாவதொரு சட்டகத்திற்குள்ளேயே
தங்களை அடைத்துக் கொள்ள மூயற்சிக்கும்போல். சதுரமாக்கப்பட்ட என் ரொட்டித் துண்டுப்
ப்ரியங்களை என்கிற வரிகளை அதனால்தான் ஓர் வடிவப்பூர்வமாக அணுக முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதன் மீதும் அடர்த்தியான தம் குரூர ரேகைகளை பதித்து விடுகிற முனைப்பு
நம்மையாளுகிற எல்லா அதிகார மையங்களுக்கும் இருப்பதைச் சொல்லும் கவிதைகளில் ‘நம்
மழை’ மிக முக்கியமானதொன்று. வடிவங்களை தகவமைத்துக் கொள்ளும் அரசின் கலாச்சாரமும்/
நம் கலாச்சார அரசியலும் மாற்றுக் கருத்தாளர்களை / சிறைகளின்
நிரப்பி
அம்மழைகளில் விழுகின்றன” என பேச முற்படுகிற அரசியலில் மாற்றுக் கருத்தாளர்களுக்கான
இடம் என்னவாயிருக்குமென்பதை பட்டவர்த்தமாக்குகின்றன இவ்வரிகள். இரவும், பகலும்
எவ்விதமான முன்னறிவிப்புகளோ, உத்தரவுகளோயின்றி தம் போக்கில் வந்துவிடுவதைப் போலவே
எதிர்பாராததொரு கனத்தில் மெல்லிய கீற்றாய் வலி தரக்கூடிய மெல்லிய வன்முறையினையோ
அல்லது இதழ்கள் மட்டும் பிரித்துச் சிரிக்கக் கூடிய அளவிலான சந்தோசமளிக்கும்படியோ
செய்துவிட்டுச் செல்கிறது.
விருப்பத்திற்குரியதொரு
பெண்ணின் புகைப்படமென சில கவிதைகளை முத்தமிட்டுக் கொள்ளலாம் என்பதைப்போலவே
மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்துக் கொள்ளவும் முடியும். ஒட்டுமொத்தமான
கவிதைகளுக்கு நிகரான அழகுணர்ச்சியுடன் விரிந்து சென்றிருக்கிறது இத்தொகுப்பின்
முன்னுரை. வாழ்தலின் பொருட்டு அனுபவிக்க நேர்ந்த வெறுமைகளை, சந்தோசங்களை சந்திக்க
நேர்கிற மனிதர்களையென யாவற்றையும் தம் போக்கில் கவனித்துக் கொள்வதோடு
நின்றுவிடாமல் நிலம், மொழி அவற்றைக் கடந்து வெளிப்பட்ட அன்பு என அனைத்தையும்
பூர்ணமாக நினைத்துப் பார்ப்பதுடன் அவற்றிற்கெல்லாம் எளியதொரு பரிசாக தன்
கவிதைகளில் சிலவற்றைத் தவிர தருவதற்கு ஒன்றுமில்லையென சொல்வதில் கவிஞனுக்கு
மட்டுமே இருக்கிற சந்தோசங்களையும் இயலாமைகளையும் ஒப்புக்கொள்கிறான்.
நல்ல புத்தகங்களை
வாசிப்பதென்பது பெரும் பசியையும் சில கனங்கள் மறக்கச் செய்வதைப் போன்ற
சந்தோசத்தையே கொடுக்கிறது. இத்தொகுப்பை மூன்றாவது முறையாக வாசித்து முடித்த
இரவிலும், அன்றைய பகலிலும் உணவு எதுவும் கிடைக்காமலிருந்ததிலிருந்த களைப்பு சில
தம்ளர்கள் தண்ணீருடன் ஒரு தேநீருடனும் இக்கவிதைகளுடனும் திருப்தியாய் உறங்கச்
செய்தது.
Comments
Post a Comment