உப்பு நாய்கள் நாவலின் இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை.....
”தனக்கு
நிகழாதவரை எல்லாமே வேடிக்கை தான்…”
- கெளதம புத்தர்
அந்த அதிகாலையில்
எப்போதும் போல் இந்நகரத்திற்கு சிலர் வந்து
சேர்கிறார்கள். எல்லோரின் முகத்திலும் வாழ்வின் நம்பிக்கை வெளிச்சத்தைப் பார்த்துவிட்ட
உற்சாகம்… அதற்கு முந்தைய நாட்களிலும் அவர்களைப் போலவே நம்பிக்கை வெளிச்சத்தைப் பார்த்த
ஆயிரக்கணக்கான வந்தேறிகள் இருள் விலகாத இந்நகரின் வீதியோரங்களில் இப்போது நிம்மதியாக
உறங்குவதைப் போலவே நாளை இவர்களும் உறங்கக்
கூடும். எல்லாவற்றுக்கும் பின்னால் மனிதன் அயராது ஓடிக் கொண்டிருப்பது தனது வாழ்வைத்
தேடி தான். எதிர்கொள்ள சாத்தியமற்ற பல கனவுகளின் தொகுப்புகளாகத்தான் பெருநகரில் வசிப்பவர்களின்
வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது. எல்லா நகரங்களுமே மர்மமானவை, தன்னகத்தே ரகசியங்களை
பதுக்கி வைத்திருப்பவை. நகரங்களின் ரகசியங்களைப் புரிந்து கொள்ள ஒருவனுக்கு அதன் தடங்கள்
பிடிபட வேண்டும். இந்தப் பிடிபடல் கண்ணாடிக்குப் பின்னாலிருந்து பார்க்கும் பலருக்கும்
வாய்த்திருக்காமல் போவதால்தான் அவர்கள் தங்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதாமையில்
எல்லோரையும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் நான்
எழுத நினைத்த உப்புநாய்களை என்னால் எழுத முடியாமல் போனாலும் எழுதப்பட்ட வரையிலும் இந்த
நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்னை பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அப்பால் நான் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
என்கிற ரகசிய உண்மை இன்னும் சில நாவல்களை எழுத போதுமானதுதான். நாவல் இரண்டாவது பதிப்புக்குப்
போகும் இவ்வேளையில் இந்நாவலை எழுத மூலகாரணமாய் இருந்த அந்தக் குட்டி ஆதம்மாவுக்கு மானசீகமாக
நன்றி சொல்லிக் கொள்கிறேன். உண்மையில் அவள் எங்கு இருந்து வந்தாள் என்பது மட்டுமே தெரிந்த
எனக்கு இப்போது எங்கிருக்கிறாள் என்பது தெரியவில்லை. இன்னொரு காரணமாய் இருந்த செல்வி
அத்தையும், தவுடு மதினியும் இப்போதும் திருச்சி சிறைச்சாலையில் தான் இருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் ஊருக்குப் போகையில் போய் பார்த்து வரலாமென விசாரித்ததில் ஏமாற்றமே
மிச்சம். அவர்களைத்தான் கதையாய எழுதியிருக்கிறேன் என்று சொல்ல சின்ன தயக்கமிருந்தாலும்,
சொல்லாமல் இருப்பது என் நேர்மை மீது எனக்கே சந்தேகம் கொள்ளச் செய்ய வைப்பதாய் இருக்கிறது.
அவர்கள் இருவரையும் அறிமுகப் படுத்தி வைத்ததோடு
பெண்கள் சிறைச்சாலைகளைப் பற்றின அனேக விசயங்களைச் சொன்ன என் அம்மாவுக்கும் இந்த நாவலில்
பங்குண்டு. சமகாலத்தின் மீது நடந்து செல்லும் வினோத மிருகங்கள் கதைகள், பல சமயங்களில்
வரலாற்றின் கல்லறைகளிலிருந்து தூசு தட்டியப் பிணங்களின் கதைகளைச் சொல்வதுதான் நல்ல
நாவல் என்னும் தமிழ் எழுத்தாளனின் பிடிவாதத்தால் சமகாலத்தின் வாழ்வை நாவலில் எழுதுதலை
ஒருவிதமான சலிப்போடுதான் வாசகனும் பார்க்கிறான். பிழைப்புக்காக எந்த தேசத்தின் எல்லைகளையும்
தாண்டி வர எல்லா நூற்றாண்டுகளையும் போல் இன்னும் மக்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
முன்னைவிடவும் சிக்கலான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் வாழ்வாகியிருக்கிறது
சராசரி மனிதனின் வாழ்வு. குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் சமகாலப் பிரச்சனைகள் ஒரு எழுத்தாளன்
ஊடறுத்துச் செல்ல முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானதாய் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்க
அவகாசமில்லாது இன்னும் கல்லறைகளைத் தோண்டி கதை எழுத நினைப்பவர்களை என்ன சொல்ல?...
இந்நாவல் குறித்து
அல்லது பொதுவாக எனது கதைகள் குறித்து இரண்டு விதமான விமர்சனங்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறவனாய்
இருக்கிறேன். ஒன்று இக்கதைகளில் விரவிக்கிடக்கும் காமம், இன்னொன்று வன்முறை. உண்மையில்
இந்த இரண்டையும் ஒரு துளி அளவுகூட நான் எழுதியிருக்கவில்லை, தமிழின் நீண்ட காலப் புனைவெழுத்து
வரலாற்றில் இப்படியான பகுதிகள் பூசி மெழுகப்பட்டவைகளாகவே அதன் அசல் தன்மைக்குப் போகாமல்
போனதால் சராசரி வாசகனுக்கு இக்கதைகள் வன்மத்தைப் பேசுகிறவனாக இருக்கின்றன. ஜி.என்னும்,
தஞ்சை பிரகாஷூம் கொஞ்சம் எழுதியிருந்தாலும் அவர்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கவில்லை.
உப்பு நாய்கள் குறித்து எதிர்கொண்ட கருத்துக்கள்
பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட வாசகனின் மனநிலையிலிருந்தாலும் ஒருசில நண்பர்கள் இந்த
நாவலை எழுத உட்பட்டதற்கான அந்தரங்கமான நெருக்கடியைப் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுடனான
உரையாடல்கள் மகிழ்ச்சியான தருணங்கள். சம்பத், ஷிவானி, மகேஷ் இப்படி நாவலின் கதாப்பாத்திரங்கள்
எல்லோருமே இதே நகரில் தான் வசிக்கிறார்கள். அவர்களைக் கவனித்தபடியேதான் இருக்கிறேன்.
ஆனால் இப்பொழுது அவர்களும் நானும் வேறு வேறாக இல்லை. அவர்களுக்கே தெரியாமல் அவர்களோடு
நான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நான் அவ்வப்போது நண்பர்களிடம் சொல்வது போல் எனது வன்மத்திற்கான
வடிகால் தான் என் எழுத்து, ஆனாலும் நான் எழுதியடங்கா வன்மம் இன்னும் ஆயிரம் மடங்கு
பெரியது. எப்போதும் வஞ்சிக்கப்பட்ட, வஞ்சிக்கப்படும் தோல்வியுணர்வும், அவமானமும் கட்டற்ற
சமூகக் கோவத்தை நிரப்பியுள்ளது. ஒரு வகையில் வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் வன்மத்திற்கு
அப்பால் சக மனிதனிடமிருந்து எதிர்பார்ப்பது எளியதொரு புன்னகையைத்தான். ஆனால் அப்படி
ஒன்றும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனல்ல. பல சமயங்களில்
என் வன்மத்திற்கு ஆளாகிறவர்கள் எனது நெருங்கிய நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இதுமாதிரியான
சமயங்களில் நிறைய நண்பர்களை இழக்க நேர்ந்தாலும் வேறு வழியில்லை இந்தப் பிசிறுகளும்
கோவங்களும் தான் நான்… என்னால் காயப்பட்ட எனது அனேக நண்பர்களிடம் இந்த இடத்தில் மன்னிப்புக்
கேட்டுக் கொள்கிறேன்… இந்த மன்னிப்பு இன்னொரு முறை நான் சண்டைபோட மாட்டேன் என்பதற்கான
உத்திரவாதமல்ல.
இப்பொழுது தள்ளியிருந்து
இந்த நாவலை வாசித்த பொழுது கொஞ்சம் நிதானமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றினாலும் எழுதித் தூக்கி வைத்துவிட்டதன் மூலம் சில வருட அழுத்தங்களிலிருந்து
விடுபட்டது எனக்கு மட்டுமே தெரிந்த நிஜம். இது தோல்வியான நாவலா ? சிறந்த நாவலா ? எளிய
முயற்சியா என எந்த தீர்மானங்களும் எனது விருப்பமல்ல. இந்தக் கதைகளின் சம்பவங்கள் துண்டு
துண்டாய் மனம் முழுக்க அலைந்து கொண்டிருந்தன. எழுதித் தூக்கி வைத்து தள்ளி நின்று பார்க்கையில்
மனம் இலகுவாகியிருக்கிறது. விதைச்சலுக்கு காத்திருக்கும் விதைகளைப் போல் ஆயிரமாயிரமாய்
நான் பார்த்துப் பழகிய மனிதர்களின் கதைகள் இருக்கின்றன. இன்னும் சிலரின் கதைகளை மட்டுமேனும்
சொல்லிவிட வேண்டுமென்கிற தவிப்புதான் இத்தனை வேகமாய் எழுதச் செய்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் முதல் பதிப்பைக் கொண்டு வந்த சுதிர் செந்திலை மனப்பூர்வமாய் நினைத்துக்
கொள்கிறேன், தொடர்ந்து எனது புத்தகங்களை அக்கறையோடு கொண்டு வரும் அவருக்கு என்றென்றும்
எனது அன்பு. இரண்டாவது பதிப்பைக் கொண்டு வரும் விதை பதிப்பகத்தினருக்கும் எனது அன்பு.
லக்ஷ்மி சரவணகுமார்
சென்னை
2013 மார்ச் மாதத்தின்
ஒரு அதிகாலை.
9176891732
உப்பு நாய்கள் தான் படித்துகொண்டு இருக்கிறேன் மிக சுவாரசியமாக செல்கிறது,
ReplyDeleteஉங்கள் எழுத்து பணி தொடர என் வாழ்த்துக்கள் லக்ஷ்மி சரவணா குமார் !