நொண்டிக் கருப்பு

                                                                                                            உலகன் கருப்பசாமி 



“கருவாட்டுக் கொழம்பு ஊத்தி வச்சிருக்கேன். அதுல இந்த நாக்குருணைய பெணஞ்சு போட்டு வந்துரு. ராத்திரிக்கி வந்து மண்டைய சொரிஞ்சிட்டு நின்ன... அம்புட்டுத்தான்”

பொண்டாட்டி பொம்மக்கா சொன்னதை அசை போட்டவாறு ஆண்டி சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தார். “அவா சொல்லுததும் சரிதான். இந்த ஒத்த உசுருக்காக மிச்ச தொண்ணூறு உசுர பட்டினி போட முடியுமா? அதுவா செத்துட்டாக் கூட நிம்மதியா போயிரும். வளத்த கையால எப்பிடி துள்ள துடிக்க கொல்ல?...” ஆடி மாத காற்றைப் போல எண்ணங்கள் சுழன்றடித்தன.தீபாஞ்சு அம்மன் பீடத்தை கடக்கையில் எதிர்ப்பட்ட கிட்னா,

“மாமோவ்... ஆட்ட எப்போ மேலக் காட்டுக்கு பத்த போறய”

“பத்தணும்டே”

“ஆளு ஒரு வடியா இருக்கயளே, என்ன?”

“இந்த நொண்டிக் கருப்பதான் என்ன செய்யன்னு முழிச்சிக்கிட்டு வாரேன்”

“சரியாப் போச்சு. ஒரு நாய்க்குப் போய் இப்பிடி அல்லோலப் படுதயள”

இன்னும் என்னவெல்லாமோ சொன்னான். பேசாமல் வண்டியை விட்டார். நொண்டிக் கருப்பு வெறும் நாய் அல்ல. அது ஆண்டியின் காவல் வீரன். அவரது பிள்ளை, சேக்காளி எல்லாம். அது ஒரு ஆலி. “பொசகெட்ட பய கெட்டித் தூக்கிருங்கான். அடுத்தவன் பெழப்புல மண்ணள்ளிப் போட்டவனெல்லாம் நடமாடும் போது, இத எதுக்கு கொல்லணும். வாயில்லா சீவன்...” தொண்டைக்குள் திட்டிக் கொண்டே சைக்கிளை விட்டு இறங்கினார். தட்டிக்குள் கிடக்கும் ஆடுகள் கனைத்தன.  நொண்டிக் கருப்பு காலடியில் வந்து நின்று விம்மியது. அது “நான் இங்கதான் இருக்கேன். நீ இப்போ தான் வாரயா” என்பதான ஒரு விசாரிப்பு அல்லது மரபு.      வாய், மூக்கெல்லாம் புண்ணிலிருந்து சீல் வடிந்தது. நாற்றம் குடலை புரட்டியது. தூக்குச்சட்டியிலிருந்த சோற்றை கல்லில் கொட்டினார். மோந்து பார்த்தது. அணிலைப் போல கொறித்து கொறித்து தின்றது.

அன்னைக்கி வெள்ளிக்கிழமை. கூட்டுக்கு வெளியே ஒரு செம்மறி ஆடு கடிபட்டு செத்துக் கிடந்தது. நொண்டிக் கருப்புக்கும் கழுத்தில் காயம்.  வேற்று நாய் எதாவது வந்திருந்திருக்க வேண்டும். ஆண்டி கோபத்தில் கத்தினார், கருப்புவை நோக்கி கல்லெறிந்தார். அவ்வளவுதான். ரோசத்துக்கு பிறந்த கருப்பு ஓட்டம் பிடித்தது. மூன்று நாட்களாய் ஆள் அரவமில்லை. திரும்பி வந்த போது உடம்பு முழுக்க கடிபட்ட காயங்கள். அதை பிடித்து கட்டிப் போட்டு மிதமான சூட்டில் வெந்நீர் வைத்து புண்ணை கழுவிவிட்டார். மஞ்சளை அரைத்து போட்டுவிட்டார். புண் ஆறிய பாடில்லை. வாநீர் வழிந்து கொண்டே இருந்தது. கருப்பு தளர்ந்து போனது. இப்போதெல்லாம் படுத்தே கிடக்கிறது. சில நேரங்களில் ஓங்காரமெடுத்து வலியில் கத்தும். ஆண்டி அதன் தலையை நீவி விடுவார். சிநேகமாக அவரைப் பார்த்துக் குழையும். அடுத்தடுத்து இரண்டு கிடாக் குட்டிகள்  பாம்பு கடித்து செத்துப் போயின. பழைய கருப்புவாக இருந்திருந்தால் எந்தப் பூச்சியும் கிடையை அண்ட விடாது. போன வாரம் ஆட்டுக்கு ஊசி போட வந்த டாக்டர் மேல் பாய்ந்து கடித்தது கருப்பு. “இதுக்கு கோட்டி பிடிச்சிட்டு, கெட்டித் தூக்கிரும்யா” ஆளாளுக்கு கூர்பாடு சொன்னார்கள்.

ஐப்பசி மழை தொடங்கியதும் எல்லோரையும் போல ஆண்டியும் ஆட்டை ஊர்ப்பக்கம் பத்திக் கொண்டு வந்தார். தை முப்பது வரைக்கும் தாங்கும் இந்தக் காடு. ரெண்டுங்கெட்டான் காடு. கிழக்கே முழுவதும் கரிசல் பூமி. மேற்கே போனால் தாமிரபரணியின் மடி. நடுவில் மாட்டிக் கொண்ட செம்மண் புழுதி. வானம் பார்த்த பூமி. காடெல்லாம் காய்ந்து ஒரு மாதம் ஆயிற்று. குடி தண்ணீர்க்காக மக்கள் ஊர் அடி பம்பில் காத்துக் கிடக்கிறார்கள். ஆடு மாடுகளுக்கு தண்ணீர்க்கு வழியில்லை.எல்லா கிடை ஆடுகளும் போய் விட்டன. ஆண்டியின் கிடை மட்டும் தான் இருக்கிறது. கருகி கிடக்கும் புற்கள் ஆடுகளின் வாய்க்கு எட்டுவதில்லை. தினமும் அரை வயிற்றோடுதான் தான் அடைகின்றன. நொண்டிக் கருப்பால் தான் தாமதம். அதை கூட்டிக் கொண்டு போவது கடினம். வீட்டில் விட்டு போகலாம் என்றால், இளைய மகள் மூன்றாவது பிள்ளைக்கு மாசமாக இருக்கிறாள். இன்றைக்கோ நாளைக்கோ பெற்றுவிடுவாள். பொம்மக்கா பேறுகாலம் பார்க்க போவாள். அங்கே கொண்டு போக முடியாது. மருமகன் கத்துவான். நாயைப் பார்த்தாலே “ச்சீ” என்பான். கடைசியாக பொம்மக்கா இப்படிச் சொன்னாள் “நாயோட ஆயுசு பன்னெண்டு வருசந்தான். இதுக்கு பதினஞ்சு வயசு ஆச்சு. வேதனை தாங்க மாட்டாம கிடக்க ஆளுவளுக்கு எளனியும் நல்லெண்ணெயும் குடுத்து படுக்க வைப்பாவலே, அது கொல இல்ல. அது ஒரு விடுதல. அதுபோலத்தான் இதுவும். தொண்ணூறு ஆட்ட காப்பாத்த ஒத்த நாய கொல்லுதது ஒன்னும் தப்பில்லய்யா”

துவங்கியது கொல்லும் படலம். ஒருநாள் எலி மருந்து. ஒருநாள் தீப்பெட்டி ஒட்டும் பசை காய்ச்ச உதவும் மயில் துத்தம். ஒருநாள் பால்டாயில். ஒவ்வொரு நாளும் கொண்டு வருவார். மனம் மறுக்கும். போகிற வழியில் ஓடைக்குள் தூக்கி எறிந்து விட்டு போய் விடுவார். இன்று பொம்மக்கா தீர்மானமாக சொல்லி அனுப்பியிருக்கிறாள். இடுப்பு வேட்டியிலிருக்கும் நாக்குருணை பொட்டலத்தை தொட்டு பார்த்துக் கொண்டார்.

செம்மறிக் கூட்டத்தை எழுப்பினார். கொஞ்சம் பச்சை கிடக்கும் தைலக் காட்டிற்கு பத்தலாமென்று யோசித்தார். வேண்டாம். அதிகாரி வந்தால் வசவு மழை பொழிவான். அரசாங்க காடுதான். ஆனால் அவன் சாதிக்காரன் மாடுகளை மேய்க்க மட்டும் அனுமதிப்பான். பரும்புக்கு தெற்கே பத்திக் கொண்டு போனார். நீர்க் கருவை காட்டிற்குள் மேய விட்டார். சுமைதாங்கிக் கல்லில் ஏறி உட்கார்ந்தார். மன அலைகள் கருப்புவின் பால்யத்தை நோக்கி இழுத்துச் சென்றன.

வெள்ளாங்குடி பண்டாரமும் அவன் மகனும் நார்ப் பெட்டியில் கொண்டு வந்த கண் திறக்காத நாய்க் குட்டிகளை ஒவ்வொன்றாக தூக்கி கிணற்றுக்குள் போட்டார்கள். வெள்ளாட்டுக்கு ஆமணக்கு இலைகளை ஒடித்துக் கொண்டிருந்த ஆண்டி பார்த்தார். பதற்றத்தோடு ஓடி வந்தார். பாதரவாக கத்தினார். தாய் செத்துப் போச்சு அதனால்தான் தூக்கிப் போடுகிறோமென்று தகவல் சொன்னார்கள். மிச்சமிருந்த ஒற்றை குட்டியை பிடுங்கிக் கொண்டார். கீரை விதையைப் போல பளபளப்பாக இருந்த கருப்பு ஆண்டியின் புறங்கையை நக்கியது. குசு விடுவதைப் போல முனங்கியது.

அங்கனக் குழியில் பஞ்சாரத்தை போட்டு அடைத்து வைத்தாள் பொம்மக்கா. ஒத்த வீட்டுக்கார பாப்பக்காவிடம் சொல்லி வைத்து, ஒத்த பசுவின் பாலை வாங்கி காலையும் மாலையும் புகட்டினாள். கொஞ்சம் வளர்ந்ததும் உரலில் கட்டிப் போட்டாள். கயிறு கழுத்தை இறுக்காமலிருக்க திருகாணி ஒன்றை கோர்த்துவிட்டாள். தெற்கு வீட்டு கணேசன் மகன் தான் முதலில் “கருப்பூ...” என்று உதட்டை சுழித்து கூப்பிட்டான். அதுவே பெயராகிப் போனது. அவன் ஒற்றை காதை பிடித்து தூக்குவான். “வீர் வீர்”ன்று கத்தும். மடியில் கிடத்தி முத்தம் கொஞ்சுவான். பல் இருக்கிறதாவென வாயை பிளந்து பார்ப்பான். “ஏல் கீழ விடுல, பிடி குட்டியா பொயிரப் போவுது” பொம்மக்கா ஏசுவாள். ஆண்டி வைகாசி விசாகத்துக்கு திருச்செந்தூருக்கு போய் வருகையில் ஒரு மணி கொத்தை வாங்கி வந்தார். கருப்புவின் கழுத்தில் கட்டி விட்டார். புதுக் கொலுசை போட்ட பெண் பிள்ளை போல அங்குமிங்கும் நடந்தது. குதியாளம் போட்டது. அதை நினைத்து ஆண்டிக்கு இப்போதும் சிரிப்பு வந்தது.

செவிட்டு முத்தையா பேரன் ஆண்டியை நோக்கி பரும்புக்குள் ஓடி வந்தான். “ஏல் ஏ ஒப்பன ஓலி, செவிட்டு புண்ட மவனே... எடப்பயலே எங்குன வந்துல ஆட்ட வுட்டுக்கிட்டு நிக்க, அவுசாரி மகனே” அடிக்கப் பாய்ந்தான். பேசாமல் ஆட்டை பத்தினார். பத்து வருசத்துக்கு முன்ன இருந்த ஆண்டியாக இருந்தால், கை ஓங்கும் முன்னரே அவனை கீழே சாய்த்திருப்பார். வயசு கூட கூட பகையை விலக்கவே மனசு சொல்கிறது. பரும்பு எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை. அவன் தோட்டத்தை ஒட்டி இருப்பதால் துள்ளுகிறான். கேட்டால், என் ஆடு மாடுகளை எங்க போய் மேய்ப்பேன் என்பான். இது உன் காடென்றால் என்னைப் போன்ற நிலமில்லாதவன் எங்க போவான்? நிலம் கொண்டவன் ஆண்டை. மற்றவனெல்லாம் எழுதிக் கொடுக்காத அடிமைகள்.

வேதக் கோயில் மணி இரண்டு அடித்ததும் தூக்குச் சட்டியை எடுத்தார். சோறு இறங்கவில்லை. “சாமான்ல முடி மொளைக்காத பயலெல்லாம் அடிக்க வாரான்.  நமக்கு எதுக்கு பாவம் புண்ணியமெல்லாம். சாயங்காலம் நாக்குருணையை போட்டுரு. ரெண்டு நாள்ல ஆட்டை வேறு காட்டுக்கு பத்து” மூளை சொன்னதை கேட்டுக் கொண்டார்.

சாவை பார்ப்பது ஆண்டிக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வருடம் ஐப்பசி மழை நாள் கணக்கில் கொட்டித் தீர்த்தது. குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் தண்ணீர். பவர் ஆபீஸ் தாண்டி இதே இடத்தில் காற்றாலைகளுக்கு நடுவே கிடை கிடந்தது. விடாமல் மழை பெய்ததால் சூரியனை பார்த்தே பல நாள் ஆகியிருந்தது. வெட்ட வெளி தட்டிகளில் அடைக்கப்பட்டு பசியால் வாடிப் போன செம்மறியாட்டுக் கூட்டம் பேதியால் எருவ ஆரம்பித்தது. ஒட்டுவாரொட்டி நோய். ஆடுகள் செத்து மடிய ஆரம்பித்தன. பக்கத்து கிடை ஆட்கள் பயத்தில் வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டு போனார்கள். ஏழு நாட்களில் 83 உருப்படிகள் செத்து மடிந்தன. அழுது கொண்டே தூக்கிக் தூக்கி சக்கிலியன் பொத்தையில் எறிந்தார். இனிமே எப்படி பிழைப்பை ஒட்டப் போகிறோம் என்று நினைக்கையில் ஈரக் கொலை நடுங்கியது. என்ன செய்ய? இடையனாக பிறந்துவிட்டால் எக்காலத்துக்கும் இதுதான் கதி.

மிஞ்சிய 31உருப்படிகளை பெரும்பாடு பட்டு காப்பாற்ற வேண்டிய சூழலில், கருப்புவை கிடைக்கு கூட்டி வந்தார். முதலில் செம்மறிக் கூட்டத்தை கண்டு மிரண்டது. பின்னர் ஒட்டிக் கொண்டது. கருப்புவின் ராசியால் தான் ஆடுகள் பெருகின என்பது ஆண்டியின் அனுமானம்.

கரிசல் காட்டில் ஜமீன்க்கு கிடை கிடந்தது. ராசாவின் இளையமகன் வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் கிடைப் பக்கம் வந்தார். கருப்பு அவரை கண்டு விடாமல் குரைத்தது. மண் கட்டியை எடுத்து எறிந்தார். அவர்  மேல் பாய்ந்து வேட்டியை உருவியது. ஜமீன் ஜட்டியுடன் நின்றார். வேட்டியை கடித்துக் கொண்டு புழுதியில் விளையாடியது. ஆண்டிஓடிவந்து வேட்டியை பிடுங்கி கொடுத்து, மன்னிப்பு கேட்டார். வெட்கி தலை குனிந்த ஜமீன்தார் அசட்டுச் சிரிப்புடன் “வேற யார்கிட்டயும் சொல்லிராத” என்றார்.

வெள்ளைப் போர் வெள்ளாடு ரெண்டு கிடா குட்டிகளை ஈன்றது. ஒன்றை சாஸ்தா கோவிலுக்கு பொம்மக்கா நேர்ந்து விட்டாள். கருப்பு அக்குட்டிகளுடன் புரண்டு விளையாடும். பொம்மக்கா தலைக்கு குளிச்சிருக்கேன்னு சொன்ன அன்று ஆண்டி கிடையில் வந்து படுத்திருந்தார். சாமத்தில் இரண்டு களவாணிகள் வெள்ளாட்டங்குடியை தூக்க இருட்டுக்குள் பூனை நடை நடந்து வந்தார்கள். ஆண்டி குளிருக்கு சுருண்டு ஓலைப்பாயில் படுத்திருந்தார். கருப்பு மோப்பம் பிடித்தது. பாய்ந்து சென்று ஒருவனை தொடையில் கடித்தது. இன்னொருவன் கையிலிருந்த அரிவாளின் புறங்கையால் ஓங்கி அடிக்க, கருப்புவின் இடப்பக்க முன்னங்காலில் பட்டு எலும்பு நொறுங்கியது. அவன் குட்டியை தூக்கிக் கொண்டு ஓடினான். ஆண்டி விழித்து கத்தினார். முறிபட்ட காலை தூக்கியவாறு கருப்பு மூன்று காலில் பாய்ந்தது. இருளில் கவ்வும் சத்தம் கேட்டது. களவாணிகள் கதறும் சத்தம் கேட்டது. ஆண்டி பேட்டரி லைட்டை அடித்து நடந்தார். வாயில் வெள்ளாட்டங்குட்டியை பூப்போல கவ்விக் கொண்டு ஒரு சிங்கத்தை போல வந்தான் நொண்டிக் கருப்பு. ஆண்டி வாயைப் பிளந்து பார்த்தார். அன்று முதல் கருப்பு கிடையை தன் கோட்டையாக மாற்றிக் கொண்டது. ஆண்டியின் படைத் தளபதியாக பதவியேற்றுக் கொண்டது.

குளத்திலோ கல் குவாரியிலோ ஆடுகளை தண்ணீரில் அடிக்கையில் கருப்பு குதூகலமாக முதல் ஆளாக குதிக்கும். கடலில் முத்தெடுப்பவனை போல முங்கி முங்கி எழும். அங்குமிங்கும் நீந்தி அலைந்து செம்மறியாடுகளை பரிகாசம் செய்யும். தை முதல் நாள் கிடைப் பொங்கல் வைக்க வந்திருந்த பொம்மக்காவை அடையாளம் கண்டு கொண்டது. முன்னங்காலை அவள் தோளில் போட்டு வரவேற்றது. இரவு அவள் படுத்திருந்த ஓலைப் பாயில் அவளுடன் படுத்துக் கொண்டது.

நான்கு வருடங்களுக்கு முன்பு முக்கூடலில் த.பி.சொக்கலால் சேட்டுக்கு கிடை கிடந்தது.  இரவு கிடைச் சோறு தின்ன வந்த சேட் கருப்புவை கண்டார்,

“நாங்க எப்பாடு பட்டு நாய்கள வேட்டைக்கு தயார் பண்ணுதோம். உன் நாய்க்கு என்ன குடுக்க... தேக்குமாரி இருக்கு! ஒருநாள் என் கூட அனுப்பு. கொறஞ்சது பத்து முயல கொண்டாரேன்“

இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்லைக் கேட்ட ஆண்டி மீசையை முறுக்கிக் கொண்டார். நொண்டிக் கருப்பு அவருக்கு பக்கவாட்டில் வந்து நின்றது. சேட்டைப் பார்த்து “உன்னுடன் வரமாட்டேன். என் உடல் பொருள் ஆவியெல்லாம் இவருக்கு மட்டும் தான்“ என்பது போல் குரைத்தது.

கருப்புவை நினைக்க நினைக்க ஆண்டிக்கு மனம் கலங்கியது. சூரியன் மேற்கே சாய துவங்கியதும் ஆட்டுக் கூட்டத்தை கிடைக்கு திருப்பினார். நொச்சி ஓடையில் ஒரு வடலித் தூரில் கழுத்து மணி கயிற்றை தேய்த்து தேய்த்து இழுத்துக் கொண்டிருந்த கருப்புவை கண்டார். திடீரென இலந்தைச் செடிகளும் ஆவாரம் மூடுகளுமாய் கிடந்த புதருக்குள் பாய்ந்தது. ஆண்டி ஓடி வந்தார். புதர் அசைவது மட்டும் தெரிந்தது. சற்று நேரத்தில் வாயில் ஒரு முயலுடன் மாயான வேட்டைக்கு போய் திரும்பிய சுடலை மாடனை போல வந்தது கருப்பு.

துடிப்பு நின்று போன முயலை வாங்கியவர், ராத்திரிக்கு ரெண்டு பாக்கெட் சாராயம் வாங்கிட்டு போகணும் என்று நினைத்துக் கொண்டார். முயல் ரத்தத்தை வெள்ளை துணியில் வடித்து, காய வைத்து, தேங்காய் எண்ணெயில் அத்துணியை போட்டு தேய்த்து வந்தால் பொம்பளைகளுக்கு முடி குண்டிவரைக்கும் வளரும். வயசுக்கு  வந்த பேத்திக்கு கொடுக்கலாம். இந்த நடுக்காட்டில் வெள்ளைத் துணிக்கு எங்கே போவது?

குட்டிகளை தாய்களிடம் பால் குடிக்க விட்டு, கூட்டில் அடைக்கும் போது இருட்டி விட்டது. கருப்பு கழுத்து மணியை கவ்விக் கொண்டு வந்து அவர் முன்னால் போட்டு விட்டுப் போனது. புரியாமல் பார்த்தார். மணியை எடுத்து வேட்டியில் முடிந்து கொண்டார். மதிய மிச்சம் வைத்த பழைய சோற்றை கல்லில் கொட்டினார். கருப்பு தின்ன ஆரம்பித்தது. நாக்குருணையை எடுத்தார்.  ஏறிட்டு பார்த்தது. “என்னய கொல்லப் போறயா?” என்பது போல் இருந்தது அந்தப் பார்வை. ஓடிச் சென்று ஒடமரத்தடியில் படுத்துக் கொண்டது. நாக்குருணையை சோற்றில் பிசைந்தார். கருப்புவை பார்த்தார். தலை கவிழ்ந்து படுத்திருந்தது. 

அடுப்பில் முயல் கறி கொதித்துக் கொண்டிருந்தது. கருப்பு சோற்றை தின்றதாவென பொம்மக்கா கேட்டதற்கு தின்றுவிடும் என்றார். இரண்டு துண்டு கறியை தின்று பார்த்தார். கயிற்றுக் கட்டிலில் போய் படுத்துக் கொண்டார். மனம் அரித்தது. மூன்றாம் சாமம் வரை உறங்கவில்லை. தார்சாவில் படுத்திருந்த பொம்மக்கா கவனித்தாள். புருசனை அறியா பொண்டாட்டி இப்பூவுலகில் உண்டோ?!

ஆறு பச்சிளம் குட்டிகள் கூட்டிற்குள் கண் அயர்ந்து கிடந்தன. வெளியே கருப்பு காவலுக்கு கிடந்தது. குளிருக்கு இதமான இடம் தேடி நல்ல பாம்பொன்று கூட்டை நோக்கி வந்தது. கருப்பு கண்டு கொண்டது. துள்ளி எழுந்தது. இவன் தான் அக்கள்வன். பால் குடி மறவா ஆட்டுக் குட்டிகளை கொத்திக் கொன்றவன். கருப்பு குரைத்தது. வழி மறித்தது. பாம்பு தடுமாறியது. படம் எடுப்பதை போல் பாவனை காட்டியது. முகத்தில் சீல் வடிய நொண்டிக் காலுடன் கருப்பு நின்ற தோரணை பாம்பிற்கு கிலியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். திரும்பிச் செல்ல முற்பட்டது. கருப்பு விடவில்லை. முன்னே போய் நின்றது. பாம்பு கொத்த முற்பட, கருப்பு லேசாக தலையை சாய்த்து தப்பி, அதன் சங்கை கடித்து துப்பியது. ரெண்டு துண்டாய் கிடந்த பாம்பு ஆடி அடங்கியது.

விடியற்காலம் வந்த ஆட்டு வியாபாரி, ஆண்டியின் இளைய மகள் நேற்று இரவு பெண் பிள்ளை பெற்ற சேதியை சொன்னான். உடனே பொம்மக்கா, “எய்யா நீரு போய் கருப்புவ தூக்கியாரும். மக வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அங்குன எங்க பெரியாத்தா வீட்டு தொழுவுல போட்டு நான் பாத்துக்கிடுதேன். அதுவா சாவுத அன்னைக்கி சாவட்டும்”

ஆண்டியின் உள்ளத் துள்ளல் அவர் சைக்கிளை எடுப்பதில் தெரிந்தது.   ஏய் கருப்பா... என்று விசிலடித்தால், ஓடி வந்து தாவி சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொள்ளும். இப்போது தூக்கித்தான் உட்கார வைக்க வேண்டும். பிள்ளையை தூக்க அப்பனுக்கு கசக்குமா என்ன?... சிட்டாய் பறந்தார்.

பாம்புத் துண்டுகளை சுற்றி சுற்றி வந்தது நொண்டிக் கருப்பு. சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு ஓடிச் சென்று கூட்டின் மேல் ஏறி நோக்கியது. பீடியை இழுத்தவாறு ஆண்டி சைக்கிளில் வருவதை கண்டது. வேகமாக போய் நாக்குருணை சோற்றை லவக் லவக்கென விழுங்க ஆரம்பித்தது. 


உலகன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய திரைப்படங்களில் துணை இயக்குனராக வேலை செய்து இருக்கிறார். திரைக்கதை எழுதி, முதல் படம் இயக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 

இவர் கதைகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவரின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

                                                    


                                                  ulaganmech@gmail.com

                                                          

 

 

 

 

 

 


Comments

  1. அருமையான கதை,கதையின் ஊடாக ஒற்றை வரியில் சாதிய கொடுமையை உணர்த்தியது சிறப்பு

    ReplyDelete
  2. அருமையான கதை..கருப்பன் நொண்டிகருப்பன் ஆக மாறிய பிறகே அதாவது ஊளனம் ஆன பிறகே படைத்தளபதி ஆக மாறுகிறான் என்று எழதுவது எழத்தாளரின் சிறப்பு..இடையனுக்கே தெரியும் ஆடு மேய்ப்பவனின் வலி என்பது வலியை உணர்ந்தவனுக்கே தெரியும்..எழதிய வார்த்தைகள் யதார்த்தம்மானது..நொண்டியான நாய்யின் வீரக்கதை அருமை..

    ReplyDelete
  3. முதல்கதை சிறுகதை தொகுப்பில் எனக்குப்பிடித்த முதல்கதை. வாழ்த்துக்கள் தோழரே...💐💐💐

    ReplyDelete
  4. தோழர்..

    கதை சிறப்பாக இருக்கு..
    எழுத்து நடை எனை கை பிடித்து நடை பயில செய்தது..

    சிறப்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.